பக்தி முயற்சிகள்.

நோன்பு என்பது உன்னதமான ஒன்று. கடவுளோடு இணைந்திருக்க நம்மையே அடக்கி ஆள்வதற்கு உந்துசக்தியாக இருக்கிறது. நோன்பு என்பது பக்தியின் அடையாளம். அது வெளிவேடமாக, பக்தியின் பெயரால் நடத்தப்படும் நாடகமாக்கப்படுவதை இன்றைய நற்செய்தியில் இயேசு கண்டிக்கிறார். ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று, அனைத்து யூதர்களும் நோன்பிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இது தவிர, சில பாரம்பரிய யூதர்கள் வாரத்திற்கு இரண்டுமுறை, திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் சந்தை கூடும் நாள். எனவே, கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் யெருசலேமுக்கு மக்கள் அனைவரும் கூடும் நாட்கள், இந்த இரண்டு நாட்களாகும்.

பக்தியின் பெயரால் பகல் வேடம் போடும், ஒரு சில யூதர்கள் இந்த நாட்களை தங்களின் பக்தியை தம்பட்டம் அடிப்பதற்கு இந்த நாட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். மற்றவர்கள் முன்னிலையில் தாங்கள் நோன்பிருக்கக்கூடியவர்கள் என்பதையும், அதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் பெருமைப்பாராட்டிக்கொண்டனர்.

தாங்கள் நோன்பிருப்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, தங்களது தலைமுடியை சீவாமல் வாட்டமாக முகத்தை வைத்துக்கொண்டனர். அழுக்கடைந்த ஆடைகளை உடுத்தினர். தாங்கள் சோகமாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ள முகத்தில் வெள்ளை வண்ணம் பூசிக்கொண்டனர்.

இது அப்பட்டமான பக்தியின் வெளிவேடம். நோன்பு என்பது ஒறுத்தல் முயற்சி. தற்பெருமைக்காக அல்ல, மாறாக, உணர்வுகளை அடக்கி ஆளவும், அதன் வழியாக கடவுளோடு நெருங்கி வரவும்தான். தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தங்களை முன்னிறுத்தவும், தங்களை பெருமைப்பாராட்டிக்கொள்ளவும் செய்கின்ற அனைத்துமே, அது வெளிப்புறத்தில் மக்களால் பாராட்டப்பட்டாலும், கடவுள் முன்னிலையில் அருவருக்கத்தக்கவை.

இன்றைய நவீன உலகில், ஒவ்வொருவருமே தங்களது பெருமைபாராட்டுகின்ற செயல்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆண்டவரின் மகிமையைப் பறைசாற்றவும், கடவுளோடு நெருங்கி வரவும் நாம் எடுக்கும் முயற்சிகள் மிகவும் சொற்பமாக இருக்கின்றன. கடவுளைப் புகழ்ந்தேத்துவதும், அவரோடு நெருங்கிவரவும், நமது பக்தி முயற்சிகள் உதவியாக இருக்கட்டும்.