யோசுவா ஆகமம்

அதிகாரம் 01

1 ஆண்டவருடைய அடியானான மோயீசன் இறந்த பின்பு, ஆண்டவர் மோயீசனின் ஊழியனும் நூனின் மகனுமான யோசுவாவை நோக்கி,

2 நம் அடியானாகிய மோயீசன் இறந்தான். நீயும் எல்லா மக்களும் எழுந்து, யோர்தானைக் கடந்து இஸ்ராயேல் மக்களுக்கு நாம் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குப் போங்கள்.

3 நாம் மோயீசனுக்குச் சொன்னது போல், உங்கள் காலடிபட்ட இடத்தையெல்லாம் உங்களுக்குக் கொடுப்போம்.

4 பாலைவனமும் லீபானும் தொடங்கி இயூப்ரடிஸ் மாநதி வரையிலும், மேற்கே பெருங்கடல் வரையிலும் அடங்கிய ஏத்தையருடைய நாடெல்லாம் உங்களுக்கு எல்லையாயிருக்கும்.

5 உன் வாழ்நாள் முமுவதும் ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. நாம் மோயீசனோடு இருந்தது போல, உன்னோடும் இருப்போம். நாம் உன்னை விலக்கி விடவுமாட்டோம், கை விடவுமாட்டோம்.

6 நீ உறுதியும் மனத்திடனும் கொண்டிரு. ஏனெனில், இம்மக்களின் முன்னோர்களுக்கு நாம் வாக்களித்துள்ள நாட்டை நீயே திருவுளச் சீட்டுப்போட்டு இவர்களுக்குப் பகுத்துக் கொடுப்பாய்.

7 நம் அடியானான மோயீசன் உனக்குக் கொடுத்த சட்டங்களை எல்லாம் பேணிக்காத்து அவற்றின்படி ஒழுகுமாறு நீ உறுதியும் மனத்திடனும் கொண்டிரு. நீ எது செய்தாலும் அதைத் தெளிந்து செய்யும் படி அவற்றினின்று சிறிதேனும் வழுவாதே.

8 இச்சட்ட நூல் உன் கையை விட்டுப் பிரியாதிருப்பாதாக. அதில் எழுதியுள்ளவற்றைப் பேணிக் காத்து அவற்றின்படி ஒழுகுமாறு, அவற்றை இரவு பகலாய்த் தியானிப்பாயாக. அப்படிச் செய்தால்தான், நீ உன் வழியைச் செவ்வையாக்கி அறிவுடன் நடந்து கொள்வாய்.

9 உறுதியும் மனத்திடனும் கொண்டிரு என்று இதோ நாம் உனக்குக் கட்டளையிடுகிறோம். திகைக்கவோ மதிகலங்கவோ வேண்டாம். ஏனென்றால், நீ போகும் இடமெல்லாம் உன் ஆண்டவாகிய கடவுள் உன்னோடு இருப்பார்" என்றருளினார்.

10 அப்போது யோசுவா மக்கட் தலைவர்களை நோக்கி, "நீங்கள் பாளையத்தின் நடுவே சென்று மக்களைப் பார்த்து,

11 'பயணத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தயார் செய்யுங்கள். ஏனெனில், மூன்று நாட்களுக்குப் பின் நீங்கள் யோர்தானைக் கடந்து சென்று உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளப்போகிறீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றார்.

12 பின்பு யோசுவா ரூபானியரையும், காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி,

13 ஆண்டவருடைய அடியானான மோயீசன் உங்களுக்குக் கற்பித்தவற்றை நினைவில் கொள்ளுங்கள். அதாவது உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு இந்த நாடு முழுவதையும் தந்து அமைதி அளித்துள்ளார்.

14 உங்கள் மனைவியரும் பிள்ளைகளும் விலங்குகளும் யோர்தானுக்கு இப்புறத்தில் மோயீசன் உங்களுக்குக் கொடுத்த நாட்டிலேயே தங்கி இருக்கட்டும். ஆனால் நீங்கள் யாவரும் ஆயுதம் தாங்கியவர்களாய் உங்கள் சகோதரர்களுக்கு முன்பாகச் செல்லுங்கள்.

15 ஆண்டவர் உங்களைப் போல் உங்கள் சகோதரர்களுக்கும் அமைதி அளித்து, உங்கள் ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டை அவர்கள் உரிமையாக்கிக் கொள்ளும் வரை அவர்களுக்கு உதவியாகப் போர்புரியுங்கள். பிறகு யோர்தானுக்கு அக்கைரையில் கிழக்கே ஆண்டவருடைய அடியானான மோயீசன் உஙகளுக்குக் கொடுத்த உங்கள் சொந்த நாட்டுக்கு நீங்கள் திரும்பிவந்து அங்கு வாழ்ந்து வருவீர்கள்" என்றார்.

16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்கு மறு மொழியாகச் சொன்னதாவது: "நீர் கட்டளையிட்டவற்றை எல்லாம் நாங்கள் செய்வோம். எங்கெங்கு நீர் அனுப்புகிறீரோ அங்கெல்லாம் நாங்கள் செல்வோம்.

17 நாங்கள் மோயீசனுக்குக் கீழ்ப்படிந்து வந்தது போல் உமக்கும் கீழ்ப்படிவோம். உம்முடைய ஆண்டவராகிய கடவுள் மட்டும் மோயீசனுடன் இருந்தது போல் உம்மோடும் இருப்பாராக! உமது சொல்லை மீறி,

18 நீர் இடும் கட்டளைக்குக் கீழ்ப்படியாது நடப்பவன் கொல்லப்படட்டும். நீர் மட்டும் உறுதியும் மனத்திடனும் கொண்டிரும்."

அதிகாரம் 02

1 இதன் பிறகு நூனின் மகனான யோசுவா ஒற்றர் இருவரை அழைத்து, "நீங்கள் சேத்தீமிலிருந்து மறைவாய்ப் போய் நாட்டையும் எரிக்கோ நகரையும் வேவு பார்த்து வாருங்கள்" என்று அனுப்பினார். இவர்கள் புறப்பட்டுப் போய் இராக்காப் என்ற விலைமாதின் வீட்டில் தங்கினார்கள்.

2 அப்போது எரிக்கோவின் அரசனுக்கு, "இதோ இஸ்ராயேல் மக்களுள் சிலர் நாட்டை உளவுபார்க்க இவ்விரவு இங்கு வந்தனர்" என்ற செய்தி அறிவிக்கப்பட்டது.

3 அதைக் கேட்டு எரிக்கோவின் அரசன் இராக்காபிடம் ஆள் அனுப்பி, "உன்னிடம் வந்து உன் வீட்டில் நூழைந்த ஆட்களை வெளியே வரச் செய்; உண்மையில் அவர்கள் நாடு முழுவதையும் உளவு பார்க்க வந்த ஒற்றரே" என்று சொல்லச் சொன்னான்.

4 அவளோ அவர்களை ஒளித்து வைத்து விட்டு, "அவர்கள் என்னிடம் வந்தது உண்மைதான்: ஆனால் அவர்கள் எந்த ஊரார் என்று எனக்குத் தெரியாது.

5 மேலும் இரவில் நகர வாயில் அடைக்கப்படும் வேளையில் அவர்கள் வெளியேறிவிட்டனர். அவர்கள் போன இடம் எனக்குத் தெரியாது. விரைவில் சென்று தேடுங்கள். அவர்களைப் பிடித்து விடலாம்" என்று சொன்னாள்.

6 பிறகு அவள் அவர்களை வீட்டு மாடியில் ஏற்றி, அங்கிருந்த சணல் தட்டைகளுக்குள் அவர்களை மறைத்து வைத்தாள்.

7 அனுப்பப்பட்ட ஆட்களோ, யோர்தான் துறைக்குப் போகும் வழியே சென்று அவர்களைப் பின்தொடரப் புறப்பட்டனர். உடனே கதவு அடைக்கப்பட்டது.

8 ஒளிந்திருந்த ஒற்றர்கள் தூங்குமுன் இராக்காப் மாடிக்குச் சென்று அவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்கள் கையில் இந்நாட்டை ஒப்படைத்து விட்டார் என்று நான் அறிவேன்; ஏனெனில், உங்கள் பெயரைக் கேட்டு நாங்கள் பீதி அடைந்துள்ளோம்.

9 இந்நாட்டுக்குடிகள் எல்லாரும் பலம் குன்றிப் போய் விட்டனர்.

10 நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறிய போது நீங்கள் கடந்து செல்லும் பொருட்டுச் செங்கடலின் தண்ணீரை ஆண்டவர் வற்றச் செய்ததையும், நீங்கள் யோர்தானுக்கு அக்கரையில் கொன்று ஒழித்த அமோறையரின் இரு அரசர்களாகிய செகோனுக்கும் ஓகுக்கும் நிகழ்ந்ததையும் நாங்கள் அறிவோம்.

11 இவற்றைப்பற்றிக் கேள்வியுற்ற போது நாங்கள் அச்சமுற்றோம்; எங்கள் நெஞ்சம் தளர்ச்சியுற்றது; உங்கள் வருகை கண்டு நாங்கள் அனைவரும் துணிவு இழந்தோம். ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் கடவுளாய் இருக்கிறார்.

12 அப்படியிருக்க, நான் உங்களுக்கு இரக்கம் காட்டியது போல், நீங்களும் என் தந்தை வீட்டிற்கு இரக்கம் காட்டுவீர்கள் என்றும்,

13 நீங்கள் என் தாய் தந்தை, சகோதர சகோதரிகளையும் அவர்களின் உடைமைகளையும் காப்பாற்றுவதோடு எங்கள் உயிரையும் சாவினின்று காப்பாற்றுவீர்கள் என்பதற்கு உறுதி தருவீர்கள் என்றும் இப்பொழுதே ஆண்டவர் மேல் ஆணையிட்டுச் சொல்லுங்கள்" என்றாள்.

14 அதற்கு அவர்கள், "நீ எங்களைக் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் நாங்கள் உயிர் கொடுத்தும் உங்களைக் காப்பாற்றுவோம். ஆண்டவர் எங்களுக்கு இந்நாட்டைக் கொடுக்கும் போது நாங்கள் உண்மையாகவே உனக்கு இரக்கம் காட்டுவோம்" என்று மறுமொழி கூறினார்கள்.

15 அப்பொழுது அவள் ஒரு கயிற்றின் மூலமாக அவர்களைச் சன்னல் வழியே இறக்கி விட்டாள். அவளுடைய வீடோ நகர மதிலோடு ஒட்டியிருந்தது.

16 மேலும், அவள் அவர்களை நோக்கி, "உங்களைத் தேடுகிறவர்கள் திரும்பி வரும் வழியில் உங்களைக் கண்டு கொள்ளாதபடி நீங்கள் மலைக்குச் சென்று, அவர்கள் திரும்பி வரும் வரை அங்கே மூன்று நாள் ஒளிந்திருங்கள். பின்பு உங்கள் வழியே போகலாம்" என்றாள்,.

17 அதற்கு அவர்கள், "நாங்கள் இந்நாட்டைப் பிடிக்க வருவோம். அப்போது இந்தச் சிவப்பு நூற்கயிற்றை எங்களை இறக்கி விட்ட சன்னலிலே நீ அடையாளமாகக் கட்டி வைத்திருக்க வேண்டும்; அத்தோடு உன் தாய் தந்தையாரையும் சகோதரரையும், உன் குடும்பத்தார் அனைவரையும் உன் வீட்டில் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

18 அப்படியானால், நாங்கள் உனக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியின் படி நடப்பது எங்கள் கடமை.

19 அவர்களில் யாரேனும் உன் வீட்டுக்கு வெளியே கொலை செய்யப்பட்டால், அந்த இரத்தப்பழி எங்களை அன்று அவனையே சாரும். ஆனால் உன் வீட்டினுள் இருப்பவர்களில் யாரேனும் கொலை செய்யப்பட்டால், அந்த இரத்தப்பழி எங்களைச் சாரும்.

20 நீ எங்களுக்கு எதிராகச் சதிசெய்து, நாங்கள் சொன்னவற்றை வெளியிட்டால், நாங்கள் உனக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி நடக்க மாட்டோம்" என்றனர். அதற்கு அவள், "நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்" என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டாள்.

21 அவர்கள் சென்ற பின் அவள் அந்தச் சிவப்புக் கயிற்றைச் சன்னலில் கட்டி வைத்தாள்.

22 ஒற்றர்கள் நடந்து மலையை அடைந்து. தங்களைத் தேடுகிறவர்கள் திரும்பி வரும் வரை மூன்று நாள் அங்கே இருந்தனர். அவர்களைப் பிடிக்க அனுப்பப்பட்ட ஆட்கள் வழியெல்லாம் தேடியும் அவர்களைக் காணவில்லை.

23 எனவே, நகருக்குத் திரும்பி வந்தனர். பின்பு, ஒற்றர்கள் மலையிலிருந்து இறங்கித் தங்கள் ஊரை நாடி யோர்தான் நதியைக் கடந்து நூனின் மகன் யோசுவாவிடம் வந்து, தங்களுக்கு நேரிட்டதை எல்லாம் விரிவாக எடுத்துரைத்தனர்.

24 பின்னர் "ஆண்டவர் நாடு முழுவதையும் நம் கையில் ஒப்படைத்துள்ளார்; அந்நாட்டுக் குடிகள் அனைவரும் நம்மைப்பற்றி அஞ்சிச் சாகிறார்கள்" என்றனர்.

அதிகாரம் 03

1 யோசுவா இரவில் எழுந்து பாளையத்தை அகற்றினார். பின் அவரும் இஸ்ராயேல் மக்களும் சேத்திமிலிருந்து யோர்தானுக்கு வந்து அக்கரையில் மூன்று நாள் தங்கினார்கள்.

2 மூன்று நாள் சென்ற பிறகு பறையறிவிப்போர் பாளையத்தின் நடுவே சென்று, மக்களை நோக்கி,

3 நீங்கள் உங்கள் ஆண்டவராகிய கடவுளுடைய உடன்படிக்கைப் பெட்டியும், அதைத் தூக்கிச்செல்லும் லேவியராகிய குருக்களும் புறப்படக் கண்டவுடன் நீங்களும் எழுந்து அவர்களைப் பின்செல்லுங்கள்.

4 உங்களுக்கும் உடன் படிக்கைப் பெட்டிக்கும் இடையிலே ஈராயிர முழ தூரம் இருக்கட்டும். அப்பொழுது தான், நீங்கள் அதிக தூரம் பார்க்கவும், நீங்கள் செல்லவேண்டிய வழியைக் கண்டறியவும் முடியும். எனெனில், இதற்கு முன் நீங்கள் இவ்வழியே சென்றது கிடையாது. மேலும், நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை நெருங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்" என்றார்கள்.

5 யோசுவாவும் மக்களை நோக்கி, "உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாளை ஆண்டவர் உங்கள் நடுவில் அரியன புரிவார்" எனறார்.

6 பின்னர் குருக்களைப் பார்த்து, "நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன் செல்லுங்கள் என்றார். அவர்கள் அவ்விதமே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு மக்களுக்கு முன் சென்றனர்.

7 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நாம் மோயீசனோடு இருந்தது போல் உன்னோடும் இருக்கிறோம் என்று இஸ்ராயேலர் எல்லாரும் அறியும்படி, இன்று அவர்கள் முன்னிலையில் உன்னை மேன்மைப்படுத்தத் தொடங்குவோம்.

8 நீ உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்செல்லும் குருக்களைக் கண்டு பேசி, 'நீங்கள் யோர்தான் தண்ணீரில் சிறிது தூரம் சென்றதும், அங்கே நில்லுங்கள்' என்று அவர்களுக்குக் கட்டளையிடு" என்றார்.

9 அப்போது யோசுவா இஸ்ராயேல் மக்களைப் பார்த்து, "நீங்கள் அருகில் வந்து உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருவாக்கைக் கேளுங்கள்" என்றார்.

10 மறுபடியும் அவர்களை நோக்கி, "உயிருள்ள ஆண்டவராகிய கடவுள் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானையரையும் ஏத்தையரையும் ஏவையரையும் பெரேசையரையும் கெர்சேயரையும் செபுசேயரையும் அமோறையரையும் உங்கள் முன்னிலையில் அழித்துவிடப் போகிறார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

11 அதற்கு அடையாளமாக, இதோ, அனைத்துலக ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன் யோர்தானைக் கடந்து செல்லும்.

12 எனவே, இஸ்ராயேல் கோத்திரங்களிலே, கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுங்கள்.

13 பிறகு அனைத்துலகின் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் குருக்கள் யோர்தானின் தண்ணீரிலே உள்ளங்கால் வைத்து நடப்பர். உடனே நதியின் அடித்தண்ணீர் மறைந்தோட, மேல் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும்" என்றார்.

14 அதன்படியே மக்கள் யோர்தானைக் கடக்கத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள். குருக்களோ உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அவர்களுக்குமுன் நடந்து சென்றனர்.

15 யோர்தான் நதியில் கால் வைத்தார்கள். (அது அறுவடைக்காலம்; ஆகவே தண்ணீர் கரைபுரண்டு ஒடிக் கொண்டிருந்தது.) அவர்களின் கால்கள் தண்ணீரில் நனையத் தொடங்கின உடனே,

16 மேலேயிருந்து ஓடிவந்த தண்ணீர் ஒன்றாய் கூடி அதோம் நகர் முதல் சற்தான் என்ற இடம் வரை மலை போல் குவிந்து நிற்பதாகக் காணப்பட்டது. கீழேயுள்ள தண்ணீர் முமுவதும் சாக்கடல் என இப்போது அழைக்கப்படும் பாலைவனக் கடலுக்குள் வடிந்தோடிப் போயிற்று.

17 அதற்குள் மக்கள் நதியைக் கடந்து எரிக்கோவுக்கு நேரே செல்லத் தொடங்கினர். ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்த குருக்களோ, தயாராக ஆற்றின் நடுவே உலர்ந்த தரையில் காலுன்றி நின்றனர். மக்கள் அனைவரும் வறண்டு போயிருந்த ஆற்றின் வழியே நடந்து சென்றனர்.

அதிகாரம் 04

1 மக்கள் கடந்து சென்ற பிறகு ஆண்டவர் யோசுவாவை நோக்கி,

2 நீ கோத்திரத்திற்கு ஒருவராகப் பன்னிருவரைத் தேர்ந்தெடு.

3 யோர்தானின் நடுவிலே குருக்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலிருந்து பன்னிரு உறுதியான கற்களை எடுத்து வருமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, நீங்கள் இன்றிரவு தங்கியிருக்கும் இடத்திலே அவற்றை நாட்டி வையுங்கள்" என்றார்.

4 அதன்படி யோசுவா, இஸ்ராயேல் மக்களிலே கோத்திரத்திற்கு ஒருவராகத் தாம் தேர்ந்து கொண்ட பன்னிருவரையும் அழைத்தார்.

5 நீங்கள் யோர்தானின் நடுவில் உங்கள் ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் சென்று இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கைக்குச் சரியாக உங்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு கல்லைத் தன் தோள் மேல் தூக்கிக் கொண்டு வரக்கடவான். அது உங்களுக்குள் நினைவுச் சின்னமாக விளங்கும்.

6 'இந்தக் கற்களின் பொருள் என்ன?' என்று நாளை உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, நீங்கள் 'யோர்தான் நதியைக் கடந்து சென்ற நாளில் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகத் தண்ணீர் வற்றிப் போயிற்று.

7 ஆதலால் இஸ்ராயேல் மக்களுக்கு அதை என்றென்றும் மனத்தில் இருத்தும் நினைவுச் சின்னமாக இக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன' என்று மறுமொழி சொல்வீர்கள்" என்றார்.

8 யோசுவா சொன்னபடி இஸ்ராயேல் மக்கள் செய்தார்கள்; அவருக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி யோர்தான் நதியின் அடிநடுவிலிருந்து இஸ்ராயேல் மக்களுடைய எண்ணிக்கைக்குச் சரியாகப் பன்னிரு கற்களை எடுத்து வந்தார்கள்; தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்குக் கொண்டு வந்து அங்கு அவற்றை வைத்தார்கள்.

9 மேலும் யோர்தானின் நடுவில் உடன் படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் சென்ற குருக்கள் நின்று கொண்டிருந்த இடத்திலும் யோசுவா வேறு பன்னிரு கற்களை நாட்டி வைத்தார். அவை இன்று வரை அங்கேயே இருக்கின்றன.

10 நிற்க, யோசுவாவிடம் மோயிசன் கூறியிருந்ததும், ஆண்டவர் மக்களுக்குச் சொல்லக் கட்டளையிட்டிருந்ததுமான எல்லாம் நிறைவேறும் வரை உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி வந்த குருக்கள் யோர்தானின் நடுவே நின்று கொண்டிருந்தனர். மக்கள் விரைவாய் நதியைக் கடந்தனர்.

11 மக்கள் எல்லாரும் அக்கரைக்குச் சென்றபின், ஆண்டவருடைய உடன் படிக்கைப் பெட்டியும் கடந்து சென்றது. குருக்களோ மக்களுக்கு முன் சென்றனர்.

12 மேலும், ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோயீசன் தங்களுக்குக் கட்டளையிட்டிருந்த படி ஆயுதம் தாங்கியவராய் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகவே சென்றனர்.

13 நாற்பதினாயிரம் வீரர் கூட்டம் கூட்டமாயும் அணி அணியாகவும் எரிக்கோவின் சமவெளிகளிலும் நாட்டுப் புறங்களிலும் நடந்து சென்றனர்.

14 அன்று இஸ்ராயேலர் அனைவரின் முன்னிலையில் ஆண்டவர் யோசுவாவை மேன்மைப்படுத்தினார். அதாவது அவர்கள் மோயீசனுக்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பதே.

15 ஆண்டவர் அவரை நோக்கி,

16 உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச் செல்லும் ஊருக்குள் யோர்தானிலிருந்து கரை ஏறக் கட்டளையிடு" என்றார்.

17 அதன்படி அவரும், "யோர்தானிலிருந்து கரை ஏறுங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

18 அவர்கள் அதன் படி ஆண்டவரின் உடன்படிக்கைப பெட்டியைத் தூக்கிக்கொண்டு கரை ஏரிக் காய்ந்த தரையில் மிதித்தனர். உடனே யோர்தானின் தண்ணீர் தன் இடத்திருக்குத் திரும்பி வந்து முன் போல் ஓடத் தொடங்கினது.

19 இவ்வாறு, முதல் மாதம் பத்தாம் நாளன்று மக்கள் யோர்தான் நதியைக் கடந்து எரிக்கோவுக்குக் கிழக்கே கல்கலாவில் பாளையம் இறங்கினார்கள்.

20 அவர்கள் யோர்தானிலிருந்து கொணர்ந்திருந்த பன்னிரு கற்களையும் யோசுவா கல்கலாவில் நாட்டினார்.

21 பின்னார் இஸ்ராயேல் மக்களை நோக்கி, "நாளை உங்கள் பிள்ளைகள் 'இந்தக் கற்கள் எதற்கு?' என்று தங்கள் தந்தையரைக் கேட்கும் போது,

22 நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டியதாவது: 'இஸ்ராயேலர் காய்ந்த தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்து வந்தார்கள்.

23 ஏனென்றால், ஆண்டவரின் கை எல்லாவற்றினும் வலுத்தது என்று உலக மக்கள் அனைவரும் அறியும் பொருட்டும், நீங்கள் எப்பொழுதுமே உங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு அஞ்சி நடக்கும் பொருட்டும்,

24 உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு செங்கடலின் நீரை நாங்கள் கடக்கும் வரை எங்களுக்கு முன்பாக வற்றச் செய்தது போல்,

25 யோர்தானின் நீரையும் நீங்கள் அதைக் கடக்கும் வரை உங்களுக்கு முன்பாக வற்றச் செய்தார்" என்றார்.

அதிகாரம் 05

1 இஸ்ராயேல் மக்கள் நதியைக் கடக்கும் வரை ஆண்டவர் யோர்தானின் நீரை அவர்களுக்கு முன்பாக வற்றச் செய்தார் என்ற செய்தியைக் கேட்ட போது, யோர்தானுக்கு இப்பாலுள்ள மேற்கரையில் குடியிருந்த அமோறையரின் அரசர்கள் அனைவரும், பெரிய கடலுக்குச் சமீபமான நாடுகளைக் கைப்பற்றியிருந்த கானான் அரசர்கள் எல்லாரும் இஸ்ராயேல் மக்களின் வருகையைப் பற்றி அஞ்சிப் பயந்து கதிகலங்கித் திடமற்று சோர்ந்து போனார்கள்.

2 அக்காலத்தில் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ கற் கத்திகளைச் செய்து இன்னொரு முறை இஸ்ராயேல் மக்களுக்கு விருத்தசேதனம் செய்" என்று சொன்னார்.

3 ஆண்டவரின் கட்டளைப்படி அவர் செய்து சுன்னத்துக் குன்றில் இஸ்ராயேல் மக்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.

4 இவ்விரண்டாம் விருத்த சேதனத்தின் காரணமாவது: எகிப்திலிருந்து வெளியேறிய ஆண்மக்களாகிய போர்வீரர் அனைவரும் பாலைவனத்தில் நெடுநாளாய் அலைந்து திரிந்த பின் அவ்விடத்திலேயே மாண்டு போயினர்.

5 இவர்கள் அனைவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டவரே.

6 ஆனால் மக்கள் ஆண்டவருடைய பேச்சைக் கேளாததால், ஏற்கெனவே ஆண்டவர் அவர்களை நோக்கி, "பாலும் தேனும் பொழியும் நாட்டை நாம் உங்களுக்குக் கொடுக்கமாட்டோம்" என்று ஆணையிட்டிருந்தார். இம்மக்கள் எல்லாரும் சாகும்வரை, நாற்பது வருட யாத்திரையின் போது பரந்த பாலை வனத்தில் பிறந்தவர்கள், விருத்தசேதனம் செய்யப்படாமல் இருந்தார்கள்.

7 இவர்கள் தங்கள் முன்னோர்களின் வழித்தோன்றல்கள். யோசுவா அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார். ஏனெனில் வழியிலே எவரும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யாததால், அவர்கள் பிறந்த கோலத்தில் நுனித்தோலை வைத்துக் கொண்டு இருந்தனர்

8 மக்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்பட்ட பின்பு அவர்கள் நலம் பெறும் வரை பாளையத்தின் அதே இடத்திலே தங்கியிருந்தனர்.

9 அப்போது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "உங்கள் மேல் இருந்த எகிப்தின் பழியை இன்று நாம் நீக்கி விட்டோம்" என்றார். எனவே, அந்த இடம் இன்று வரை கல்கலா என அழைக்கப்பட்டு வருகிறது.

10 இஸ்ராயேல் மக்கள் கல்கலாவில் இருந்து கொண்டு மாதத்தின் பதினான்காம் நாள் மாலை வேளையில் எரிக்கோவின் சமவெளியிலேயே பாஸ்காவைக் கொண்டாடினர்.

11 மறுநாளில் அவர்கள் நிலத்தின் விளைச்சல்களையும் புளியாத அப்பங்களையும் அவ்வாண்டின் மாவையும் உண்டனர்.

12 அவர்கள் நாட்டின் விளைச்சல்களை உண்ட பிறகு மன்னா பொழிவது நின்றது. இஸ்ராயேல் மக்களும் உண்ண முடியாது போயிற்று. ஆதலால், அது முதல் கானான் நாட்டில் அவ்வாண்டு விளைந்தவற்றை அவர்கள் உண்டு வந்தனர்.

13 மேலும் யோசுவா எரிக்கோவுக்கு வெளியே இருந்த போது ஒருநாள் தன் கண்களை ஏறெடுத்து பார்க்க, இதோ ஒருவர் உருவிய "வாளை கையில் ஏந்தியவராய்த் தனக்கு முன் நிற்கக் கண்டார். யோசுவா அருகில் சென்று, "நீர் யார்? எம்மவரைச் சார்ந்தவரா? என் எதிரிகளைச் சார்ந்தவரா? என்று கேட்டார்.

14 அதற்கு அவர், "அல்ல; நாம் ஆண்டவருடைய படைத்தலைவராய் இப்பொழுது வந்துள்ளோம்" என்றார்.

15 அதைக் கேட்டு யோசுவா தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, அவரைப் பார்த்து, "என் ஆண்டவர் தம் ஊழியனுக்குச் சொல்லுகிறது என்ன?" என்று கோட்டார். அதற்கு அவர், "உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு, ஏனெனில் நீ நிற்கிற இடம் மிகவும் புனிதமானது" என்று கூறினார். யோசுவா அக்கட்டளைப்படியே நடந்தார்.

அதிகாரம் 06

1 இஸ்ராயேல் மக்களுக்கு அஞ்சி எரிக்கோ நகர் அடைபட்டுக் கிடந்தது; சுற்றிலும் அரணும் எழுப்பப்பட்டிருந்தது. வெளியே போகவும், உள்ளே வரவும் யாரும் துணியவில்லை.

2 ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "இதோ நாம் எரிக்கோவையும் அதன் அரசனையும் போர்வீரரையும் உன் கையில் ஒப்படைத்தோம்.

3 போர் வீரராகிய நீங்கள் எல்லாரும் நாளுக்கு ஒருமுறை நகரைச் சுற்றி வாருங்கள். இப்படியே ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.

4 ஏழாம் நாளிலோ, ஏழு குருக்கள் ஜூபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களை எடுத்துக்கொண்டு உடன் படிக்கைப் பெட்டிக்கு முன் போக வேண்டும். அன்று நீங்கள் ஏழு முறை நகரைச் சுற்றி வருவீர்கள். அப்போது குருக்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.

5 அவர்கள் எக்காளத்தில் நீண்டதும் முறிபட்டதுமான தொனிகளை வாசிப்பதை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் எல்லோரும் கூடிச் சத்தமாய் ஆரவாரம் செய்யக்கடவீர்கள். அப்பொழுது நகர மதில் அடியோடு இடிந்துவிழும். உடனே மக்கள் தத்தமக்கு நேராக உள்ளே போகக்கடவார்கள்" என்றார்.

6 அதன்படி நூனின் மகனான யோசுவா குருக்களை அழைத்து, "உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போங்கள். ஜூபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களைப் பிடித்து வேறேழு குருக்கள் ஆண்டவருடைய பெட்டிக்கு முன்பாக நடக்ககடவார்கள்" என்று சொன்னார்.

7 பிறகு அவர் மக்களை நோக்கி, "நீங்கள் ஆயுதம் தாங்கியவராய் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடந்து நகரைச் சுற்றிவாருங்கள்" எனக் கட்டளையிட்டார்.

8 இப்படி யோசுவா மக்களிடம் சொன்னவுடனே, குருக்கள் தங்கள் எக்காளங்களை ஊதி ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடக்கத் தொடங்கினர்.

9 ஆயுதம் தாங்கிய வீரர்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டிக்கு மூன்னும், சாதாரண மக்கள் அதற்குப் பின்னும் நடந்து செல்ல எக்காளங்கள் முழங்கின. ஆனால் யோசுவா,

10 ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுங்கள்' என்று நான் உங்களுக்குச் சொல்லும் நாள் வரை நீங்கள் கூக்குரலிட வேண்டாம்; உங்கள் குரல் கேட்கப்படாதிருக்கட்டும்; உங்கள் வாயினின்று ஒரு சொல்லும் வெளிவராதிருப்பதாக" என்று மக்களுக்குச் சொல்லியிருந்தார்.

11 அவ்வாறே அவர்கள் நாளொருமுறை ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கி கொண்டு நகரைச் சுற்றிவருவார்கள். பிறகு திரும்பிப் பாளையத்தில் தங்குவார்கள்.

12 அதிகாலையில் யோசுவா எழுந்திருக்கும் போது, குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.

13 ஜுபிலி காலத்துக்குரிய ஏழு எக்காளங்களை கொண்டிருந்த ஏழு குருக்களும் ஊதிக்கொண்டு ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் நடந்து போவார்கள். ஆயுதம் தாங்கிய போர் வீரர்கள் அவர்களுக்கு முன் செல்ல, சாதாரண மக்கள் உடன்படிக்கைப் பெட்டிக்குப் பின் கொம்புகளை ஊதிக்கொண்டு நடந்து வருவார்கள்.

14 இரண்டாம் நாளும் அவர்கள் நகரை ஒரு முறை சுற்றிவந்து, பின் பாளையத்திற்குத் திரும்பினார்கள். இப்படி ஆறு நாளும் செய்து வந்தார்கள்.

15 ஏழாவது நாளிலோ, அதிகாலையில் எழுந்திருந்து முன்பு கட்டளையிடப்பட்டிருந்த படியே அவர்கள் ஏழு முறை நகரைச் சுற்றி வந்தார்கள்.

16 ஏழாம் முறை குருக்கள் எக்காளங்களை ஊதுகையில் யோசுவா மக்களை நோக்கி, "ஆர்ப்பரித்துக் கூக்குரலிடுஙகள். ஏனெனில் ஆண்டவர் உங்களுக்கு நகரை ஒப்படைத்துள்ளார்.

17 ஆனால் இந்நகரும் இதிலுள்ள யாவும் ஆண்டவரின் சாபத்துக்கு உள்ளாகக்கடவன. நாம் முன்பு அனுப்பின தூதர்களை இராக்காப் என்ற விலைமாது மறைத்து வைத்தபடியால், அவளையும் அவள் வீட்டார் அனைவரையும் மட்டுமே உயிரோடு விட்டு வையுங்கள்.

18 நீங்கள் குற்றத்திற்கு ஆளாகாதபடிக்கும், இஸ்ராயேலின் பாளையம் சாபத்துக்கு உள்ளாகி அலங்கோலையாய்ப் போகாதபடிக்கும், விலக்கப்பட்டவற்றில் ஒன்றையும் நீங்கள் தொடவேண்டாம். எச்சரிக்கை!

19 பொன்னும் வெள்ளியும், பித்தளை இரும்பால் செய்யப்பட்ட பாத்திரங்களும் ஆணடவருக்குக் காணிக்கையாக்கப்பட்டு ஆண்டவருடைய கருவூலத்தோடு சேர்க்கப்பட வேண்டும்" என்றார்.

20 உடனே, இஸ்ராயேலர் ஆரவாரமாய் ஆர்ப்பரித்துக் கூவ, எக்காளங்கள் முழங்க, அச்சத்தம் மக்களின் செவிகளில் விழுமுன்னே, அதோ! மதில்கள் கடகடவென்று இடிந்து விழுந்தன. உடனே மக்கள் தத்தமக்கு நேராக நகரில் நுழைந்து அதைப் பிடித்தனர்.

21 அதிலிருந்த ஆண் பெண்களையும், சிறியோர் பெரியோரையும் கொன்று குவித்தனர்; ஆடுமாடுகளையும் கழுதையையும் வாளால் வெட்டி வீழ்த்தினர்.

22 உளவு பார்க்கும்படி முன்பு அனுப்பப்பட்டிருந்த இரு மனிதரையும் நோக்கி, யோசுவா, "அவ்விலைமாதின் வீட்டிற்குப் போய், நீங்கள் அவளுக்கு உறுதியளித்துள்ள படி அவளையும் அவளுக்குள்ள யாவற்றையும் அங்கிருந்து வெளியே கொண்டு வாருங்கள்" என்றார்.

23 அந்த இளைஞர் அதன்படி போய் இராக்காபையும், அவள் தாய் தந்தயரையும், சகோதரர் சுற்றத்தாரையும், அவள் பொருட்கள் முதலியவற்றுடன் வெளியே அழைத்துக் கொண்டு வந்து, இஸ்ராயேலரின் பாளையத்துக்கு வெளியே இருக்கும்படி செய்தனர்.

24 நகரையும் அதிலுள்ள யாவற்றையும் தீயால் சுட்டெரித்தனர். பொன்னும் வெள்ளியும், பித்தளை இரும்பால் செய்யப்பட்ட பாத்திரங்களும் மட்டும் பாதுகாக்கப் பெற்றன. அவற்றைக் காணிக்கையாக்கி, ஆண்டவரின் கருவூலத்தோடு சேர்த்தனர்.

25 எரிக்கோவை உளவு பார்த்து வருவதற்காகத் தாம் முன்பு அனுப்பியிருந்த தூதர்களை இராக்காப் என்ற விலைமாது மறைத்து வைத்திருந்தினால், யோசுவா அவளுக்கும், அவளுடைய தந்தை வீட்டாருக்கும் உயிர்ப்பிச்சை கொடுத்தார்; அத்தோடு அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் காப்பாற்றினார். அவர்கள் இன்று வரை இஸ்ராயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள்.

26 அப்பொழுது யோசுவா சாபமிட்டு, "இந்த எரிக்கோ நகரை மறுபடியும் கட்டி எழுப்பத்துணிபவன் ஆண்டவர் திருமுன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவான்! அவன் அதற்கு அடிக்கல் நாட்டும்போது தன் தலை மகனையும், அதன் நிலைகளை நிறுத்தும்போது தன் இளைய மகனையும் சாகக் கொடுப்பான்" என்று கடுமொழி கூறினார்.

27 இவ்விதமாய் ஆண்டவர் யோசுவாவோடு இருந்தார். அவருடைய புகழ் நாடு முழுவதும் பரவிற்று.

அதிகாரம் 07

1 இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட சில பொருட்களைக் கவர்ந்து சென்றனர். எப்படியெனில், யூதா கோத்திரத்து ஜாரேயுடைய புதல்வன் ஜப்தியின் மகனாகிய கர்மீக்குப் பிறந்த ஆக்கான் விலக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டான். எனவே, இஸ்ராயேல் மக்கள்மேல் ஆண்டவர் கோபம் கொண்டார்.

2 யோசுவா எரிக்கோவிலிருந்து பேத்தலுக்குக் கிழக்கேயுள்ள ஆயி நகருக்கு ஆட்களை அனுப்பி, "நீங்கள் போய் அந்நாட்டை உளவு பார்த்து வாருங்கள்." என்றார். அதன்படி அவர்கள் ஆயி நாட்டை உளவு பார்க்கச் சென்றனர்.

3 அவர்கள் திரும்பி வந்தபோது, யோசுவாவை நோக்கி, "அங்குப் பகைவர் வெகு சிலரே இருக்கிறார்கள். எனவே நகரைப் பிடித்து அழிக்க இரண்டு அல்லது மூவாயிரம் வீரர்கள் போதும்; சேனை முழுவதும் போக வேண்டிய தேவையில்லை" என்றனர்.

4 எனவே, மூவாயிரம் போர்வீரர் அங்குச் சென்றனர்; ஆனால் அவர்கள் போனவுடன் புறமுதுகு காட்டி ஒடினர்.

5 ஆயி நகர வீரர்கள் அவர்களை வென்று அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றனர்; அத்தோடு நகர வாயில் துவக்கிச் சாபரீம் வரை அவர்களைத் துரத்தி வந்தனர். அப்போது, சிலர் மலைச்சரிவில் விழுந்து மாண்டனர். இதைக் கேட்ட மக்களின் இதயம் கலங்கி வலிமை குன்றிப் போயிற்று.

6 அப்போது யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தாமும் இஸ்ராயேலின் பெரியோர்களும் மாலை வரை தங்கள் தலையின் மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தனர்.

7 அப்பொழுது யோசுவா, "ஆ! ஆண்டவராகிய கடவுளே, இம்மக்களை அமோறையர் கையில் ஒப்படைத்து எம்மைக் கொன்று குவிக்கவா நீர் எங்களை யோர்தானைக் கடக்கச் செய்தீர்? நாங்கள் முன்போல் நதியின் அக்கரையிலேயே தங்கியிருந்திருந்தோம்! ஆ!

8 ஆண்டவரே, இஸ்ராயேலர் தங்கள் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஒடக் கண்ட நான் என்ன சொல்வேன்?

9 இதைக் கேட்டுக் கானானையரும், நாட்டு மக்கள் யாவரும் ஒன்றாகக்கூடி எங்களை வளைத்து எங்கள் பெயரே பூமியில் இல்லாத படி ஒழித்து விடுவார்களே. அப்போது உமது மகத்தான பெயருக்கு நீர் என்ன செய்வீர்?" எனறு வேண்டினார்.

10 அப்போது ஆண்டவர் யோசுவாவை நோக்கிக் கூறியதாவது: "எழுந்திரு, ஏன் குப்புற விழுந்து கிடக்கிறாய்?

11 இஸ்ராயேலர் பாவம் செய்தனர்; எமது உடன்படிக்கையை அவர்கள் மீறி, விலக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டனர். திருடியதோடு, பொய்யும் சொல்லி, அவர்கள் தங்கள் பொருட்களோடு அவற்றை ஒளித்து வைத்துள்ளனர்.

12 இஸ்ராயேலர் சாபக் கேட்டுக்கு ஆளானதால் தங்கள் பகைவரை எதிர்த்து நிற்க முடியாது, புறமுதுகு காட்டி ஒடினர். நீங்கள் அத்தீச்செயல் புரிந்தவனைத் தண்டிக்கும் வரை நாம் உங்களோடு இருக்க மாட்டோம், எனவே, நீ எழுந்து மக்களைப் புனிதப்படுத்து.

13 அவர்களுக்கு நீ சொல்ல வேண்டியதாவது: 'நாளைக்கு உங்களைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் உங்களைப் பார்த்து: இஸ்ராயேலே, சாபக்கேடு உன் மேல் இருக்கிறதால், இப்பாவம் எவனால் வந்ததோ அவன் உன்னிடமிருந்து மடியும் வரை, நீ உன் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.

14 நாளைக் காலையில் நீங்கள் ஒவ்வொரு கோத்திரமாக வரவேண்டும். அப்பொழுது எக்கோத்திரத்தின் மேல் சீட்டு விழுமோ, அக்கோத்திரத்தின் ஒவ்வொரு வம்சமும், வம்சத்தின் ஒவ்வொரு குடும்பமும், குடும்பத்தின் ஒவ்வொரு மனிதனும் வரவேண்டும்.

15 பிறகு குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்படுவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ராயேலில் மதிகேடான செயலைச் செய்ததால், அவனுடைய உடைமைகள் அனைவற்றோடும் சுட்டெரிக்கப்படுவான் என்று திருவுளம்பற்றினார்' என்பாய்."

16 அதன்படி யோசுவா அதிகாலையில் எழுந்து இஸ்ராயேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்து திருவுளச் சீட்டுப் போட்டார். (விலக்கப்பட்ட பொருட்களைக் கவர்ந்தது) யூதா கோத்திரமே என்று கண்டுபிடிக்கப் பட்டது.

17 பிறகு யூதா கோத்திரத்தின் ஒவ்வொரு வம்சமும் வந்தபோது, அவற்றினுன் ஜாரே வம்சம் கண்டுபிடிக்கப்பட்டது. மறுபடியும் குடும்பங்களை விசாரிக்கையில் ஜப்தி குடும்பம் குறிக்கப்பட்டது.

18 இவனது வீட்டு மனிதர் ஒவ்வொருவரையும் தனியே அழைத்துச் சோதித்த போதோ, யூதா கோத்திரத்து ஜாரேயின் புதல்வன் ஜப்திக்கு மகனாயிருந்த கர்மீக்குப் பிறந்த ஆக்கான் குற்றவாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டான்.

19 அப்போது யோசுவா ஆக்கானை நோக்கி, "மகனே, நீ இப்போது இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை மாட்சிப்படுத்து. அவருக்கு முன்பாக ஒன்றும் ஒளியாமல் நீ செய்த பாவத்தை எனக்குச் சொல்" என்றார்.

20 அப்போது ஆக்கான் யோசுவாவுக்கு மறு மொழியாக, "உண்மையில் நான் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தேன்.

21 அதாவது, கொள்ளைப் பொருட்களில் மிக அழகிய சிவப்புச் சால்வையையும், இருநூறு வெள்ளிச் சீக்கலையும், ஜம்பது சீக்கல் நிறையுள்ள ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டபோது அவற்றின் மேல் ஆசை வைத்தேன். எனவே, அவற்றை எடுத்துச் சென்று என் கூடாரத்தின் நடுவே மண்ணுக்குள் மறைத்து வைத்தேன்; வெள்ளியையும் குழி தோண்டிப் புதைத்து வைத்தேன்" என்றான்.

22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்கு ஒடிச் சென்று சோதித்துப் பார்த்தபோது, எல்லாவற்றையும் அதே இடத்தில் கண்டு பிடித்தனர்; வெள்ளியும் அஙகே தான் இருந்தது.

23 அவற்றைக் கூடாரத்திலிருந்து எடுத்து வந்து யோசுவாவிடமும், எல்லா இஸ்ராயேல் மக்களிடமும் காட்டினர்; பின்னர் ஆண்டவர் திருமுன் அவற்றை வைத்தனர்.

24 அப்போது யோசுவாவும் இஸ்ராயேலர் எல்லாரும் ஜாரே புதல்வனான ஆக்கானையும், வெள்ளி, சால்வை, பொன்பாளம் முதலியவற்றையும், அவனுடைய புதல்வர் புதல்விகளையும், ஆடு மாடு கழுதைகளையும், உடைமைகளையும் கைப்பற்றி ஆக்கோர் என்னும் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு போனார்கள்.

25 அஙகே யோசுவா, "நீ எங்களைத் துன்புறச் செய்ததால் இன்று கடவுள் உன்னைத் தன்டிப்பாராக" என்றார். எனவே இஸ்ராயேலர் அனைவரும் அவன்மேல் கல்லை எறிந்து, அவன் உடைமைகளை எல்லாம் தீயிலிட்டு எரித்தார்கள்.

26 பிறகு ஏராளமான கற்களை அவன்மேல் போட்டு மூடினார்கள். அக் கற்குவியல் இன்று வரை உள்ளது. அதனால் ஆண்டவருடைய கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. இதன் பொருட்டு அவ்விடம் இன்று வரை ஆக்கோர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.

அதிகாரம் 08

1 பிறகு ஆண்டவர் யோசுவாவைப் பார்த்து, "நீ அஞ்சாது தைரியமாய் இரு. போர்வீரர் எல்லோரையும் ஒன்று திரட்டி ஆயி நகருக்குப்போ. இதோ அதன் அரசனையும் குடிகளையும் நகரையும் நாட்டையும் நாம் உன் கையில் ஒப்படைத்தோம்.

2 நீ எரிக்கோவிற்கும் அதன் அரசனுக்கும் செய்தது போல் ஆயி நகருக்கும் அதன் அரசனுக்கும் செய். அதில் கொள்ளையிடப்படும் பொருட்களையும் எல்லா உயிரினங்களையும் உங்கள் உடைமையாகக் கொள்ளலாம். நகருக்குப் பின் புறம் பதிவிடை வைப்பாய்" என்றார்.

3 அப்போது ஆயி நகருள் போக, யோசுவாவும் அவரோடு போர்வீரர் எல்லாரும் புறப்பட்டனர். முப்பதாயிரம் திறமை மிக்க போர் வீரரை யோசுவா தேர்நதெடுத்து அன்று இராவிலேயே அவர்களை அனுப்பி வைத்தார்.

4 அவர் அவர்களுக்கு இட்டிருந்த கட்டளையாவது: "நீங்கள் நகருக்குப் பின்புறமாகச் சென்று பதுங்கியிருக்க வேண்டும். வெகுதூரம் போக வேண்டாம். அங்கு நீங்கள் அனைவரும்

5 எச்சரிக்கையாய் இருங்கள். நானும் என்னுடன் உள்ள மீதிச் சேனையும் நேராய்ச் சென்று நகருக்கு அருகே போவோம். பிறகு அவர்கள் எங்களை எதிர்க்கப் புறப்பட்டு வரும் போது, நாங்கள் முன் செய்தது போல் புறமுதுகு காட்டி ஒடுவோம்.

6 நாங்கள் முன் போலத் தங்களுக்கு அஞ்சி ஒடுவதாக எண்ணி அவர்கள் எங்களைத் துரத்த முற்படுவார்கள். அப்பொழுது அவர்கள் நகரிலிருந்து சற்றுத் தூரம் வரும்வரை ஒடி வருவோம்.

7 இவ்வாறு நாங்கள் ஒடி வர, அவர்கள் எங்களைத் துரத்தும்போது, நீங்கள் பதிவிடையிலிருந்து எழுந்து நகரைப் பாழாக்க வேண்டும். ஏனெனில் உங்கள் ஆண்டவராகிய கடவுள் அதை உங்கள் கைகளில் ஒப்படைப்பார்.

8 நீங்கள் நகரைப் பிடித்தவுடன் அதைத் தீக்கிரையாக்கி, நான் கட்டளையிட்ட படி செய்வீர்கள்."

9 பின் அவர் அவர்களை அனுப்பிவைத்தார். அவர்கள் புறப்பட்டுப் பேத்தலுக்கும் ஆயியிக்கும் நடுவில் ஆயி நகருக்கு மேற்கே பதுங்கியிருக்கப் போனார்கள். யோசுவாவோ அன்று இரவு மற்ற மக்களுடன் தங்கியிருந்தார்.

10 அதிகாலையில் அவர் எழுந்து தம் சேனையை அணிவகுத்து மூப்பர்கள் சூழப் படைக்குமுன் நடந்து போக போர்வீரர்கள் அவருக்குத் துணையாகப் பின்தொடர்ந்தார்கள்.

11 இவர்கள் நகருக்கு அருகே வந்தபோது ஆயியிக்கும் வடக்கே, நகருக்கும் தாம் இருந்த இடத்திற்கும் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கைக் கண்டு அங்குத் தங்கிக் கொண்டார்கள்.

12 யோசுவா ஐயாயிரம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து பேத்தலுக்கும் ஆயியிக்கும் நடுவில் நகருக்கு மேற்கே அவர்களைப் பதுங்கியிருக்கச் சொன்னார்.

13 மற்றப் படைவீரர் அனைவரையும் நகரின் வடக்கு நோக்கி அணி அணியாக நிறுத்தி, இவர்களுடைய கடைசிப் படைகள் நகரின் மேற்புறம் வரை பரவியிருக்கும்படி செய்தார். யோசுவாவோ அன்றிரவே புறப்பட்டுப் பள்ளத்தாக்கில் தங்கினார்.

14 ஆயியின் அரசன் அதைக் கண்டு, காலையில் நகரிலுள்ள தன் எல்லாப் போர் வீரர்களோடும் விரைவாய் வெளியே வந்து பாலைவனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினான். தனக்குப் பின் பதிவிடை வைக்கப்பட்டிருந்ததை அவன் அறியாதிருந்தான்.

15 உடனே யோசுவாவும் அவரோடு இருந்த இஸ்ராயேலர் எல்லாரும் அவர்களுக்கு அஞ்சியது போல் நடித்து அவர்களுக்கு முன்பாக நிலை குலைந்து பாலைவனத்துக்குப் போகும் வழியே ஒட்டம் பிடித்தனர்.

16 அப்போது எதிரிகள் பெரும் கூச்சலிட்டு, ஒருவரை ஒருவர் தூண்டி ஏவி, இஸ்ராயேலரைத் துரத்திப் பின் தொடரத் தொடங்கினர்.

17 இப்படி அவர்கள் நகருக்குச் சற்றுத்தூரம் போனார்கள். (நகர வாயில்கள் இன்னும் திறந்திருக்க) ஆயி நகரிலும் பேத்தல் ஊரிலும் ஒருவர் கூட மீதியிராது அனைவருமே இஸ்ராயேலரைப் பின் தொடர்ந்திருந்தனர்.

18 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவைப் பார்தது, "நீ உன் கையிலிருக்கிற கேடயத்தை ஆயியிக்கு நேராகத் தூக்கிக்காட்டு, அதை நாம் உன் கையில் ஒப்படைப்போம்" என்றார்.

19 அதன்படி அவர் தம் கேடயத்தைத் தூக்கி நகரைச் சுட்டிக் காட்டினார். உடனே பதுங்கியிருந்த அவருடைய வீரர் விரைந்து எழுந்து நகரில் புகுந்து அதைப் பிடித்துத் தீக்கிரையாக்கினர்.

20 யோசுவாவைத் தூரத்திச் சென்ற நகர மனிதர் திரும்பிப் பார்த்தபோது, அதோ! நகரிலிருந்து புகை வான்மட்டும் எழும்பக் கண்டு, பாசாங்கு காட்டிப் பாலைவனத்தை நோக்கி ஒடின இஸ்ராயேலர்கள் இப்போது திரும்பி வந்து மிகுந்த துணிவுடன் போருக்கு நிற்கக் கண்டு ஏங்கினர்.

21 யோசுவாவும் இஸ்ராயேலரும் நகர் பிடிபட்டதையும், புகை எழும்புவதையும் கண்டபோது திரும்பி வந்து ஆயியின் மனிதரை முறியடிக்கத் தொடங்கினர்.

22 அப்போது நகரைப் பிடித்துச் சுட்டெரித்த யோசுவாவின் வீரர் ஊரிலிருந்து வெளியேறித் தங்கள் சகோதரர்களுக்கு எதிராக வந்தனர். அப்போது நடுவே அகப்பட்டுக் கொண்ட எதிரிகளை ஒழித்துக்கட்டத் தொடங்கினர். இவர்கள் இருமருங்கினின்றும் தாக்குண்டபடியால் ஒருவர் முதலாய்த் தப்பமுடியாமல் எல்லாருமே மாண்டுபோயினர்.

23 ஆயி நகர் அரசன் உயிரோடு பிடிபட்டு யோசுவாவிடம் கொண்டு வரப்பட்டான்.

24 பாலைவனத்தை நோக்கி ஒடிய இஸ்ராயேலரைத் துரத்திச் சென்றவர் அனைவரும் அவ்விதமே வெட்டுண்டு ஒரே இடத்தில் வாளினால் மடிந்தனர். பிறகு இஸ்ராயேலர் ஒன்று கூடி நகர் மக்களையும் கொன்று குவிக்கத் திரும்பினார்கள்.

25 அன்று இறந்தவர்கள் ஆணும் பெண்ணுமாகப் பன்னீராயிரம் பேர் அவர்கள் எல்லாரும் ஆயி நகர்க் குடிகளாவர்.

26 ஆயிநகர் மக்கள் எல்லாரும் மடியும் வரை யோசுவா கையை மடக்காமல் தம் கேடயத்தை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார்.

27 யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தபடி உயிரினங்களையும் நகரில் அகப்பட்ட கொள்ளைப் பொருட்களையும் இஸ்ராயேல் மக்கள் எடுத்துக் கொண்டு தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

28 யோசுவா நகர் முழூவதையும் சுட்டெரித்து என்றென்றும் அது பாழாய்க கிடக்கும்படி செய்தார்.

29 அந்நகர் அரசனையும் தூக்குமரத்தில் ஏற்றி மாலையில் கதிரவன் மறையும் வரை அதில் தொங்கவிட்டார். பிறகு யோசுவாவின் கட்டளைப்படி இஸ்ராயேலர் அவ்வரசனுடைய உடலை மரத்திலிருந்து இறக்கி நகர வாயிலில் போட்டு, இன்று வரை கிடக்கும் பெரிய கற்குவியலால் அதை மூடினார்கள்.

30 அப்பொழுது யோசுவா கேபால் என்ற மலையில் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பீடம் எழுப்பினார்.

31 ஆண்டவரின் அடியானான மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுத் தம் திருச்சட்ட நூலில் எழுதிவைத்தபடி, அப்பீடம் இரும்புக்கருவி படாத கற்களாலே கட்டப்பட்டது. அதன்மேல் யோசுவா ஆண்டவருக்குத் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார்.

32 பிறகு இஸ்ராயேல் மக்கள் முன்பாக மோயீசன் எழுதியிருந்த உப ஆகமம் எனும் சட்டத்தை அக்கற்களில் பொறித்தார்.

33 மேலும் மூப்பரும் தளபதிகளும் நீதிபதிகளும் மக்கள் அனைவரும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிச்செல்லும் குருக்களுக்கு முன்பாக உடன்படிக்கைப் பெட்டியின் இருபுறத்திலும் நிற்க, ஆண்டவரின் அடியானான மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி, கால்ஜீம் மலையருகில் பாதிப்பேரும், கேபாரி மலையருகில் பாதிப்பேருமாகப் பிரிந்து போனார்கள். அப்போது யோசுவா இஸ்ராயேல் சபையை முதன் முறையாக ஆசீர்வதித்தார்.

34 பிறகு அவர் நூலில் எழுதியிருந்த ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் எல்லாவற்றையுமே வாசித்தார்.

35 மோயீசன் கட்டளையிட்டிருந்தவற்றில் ஒன்றும் விடப்படவில்லை; மாறாக எல்லாவற்றையும், இஸ்ராயேலின் முழுச் சபைக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் அவர்கள் நடுவில் வாழ்ந்து வந்த பிறருக்குங்கூட வாசித்தார்.

அதிகாரம் 09

1 இதைக் கேட்டு, யோர்தானுக்கு இப்பக்கம் மலைகளிலும் சமவெளிலும், பெரிய கடலின் ஒரத்திலும், லீபான் குன்று அருகேயும் குடியிருந்தவர்களும், ஏத்தையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசையர் ஆகியோரின் அரசர்களும்,

2 தங்களுக்குள் பேசி, ஒருமனப்பட்டு யோசுவாவோடும் இஸ்ராயேலரோடும் உறுதியாய்ப் போர்புரியக் கூடி வந்தனர்.

3 ஆனால், எரிக்கோவுக்கும் ஆயியிக்கும் யோசுவா செய்திருந்ததைக் கபயோனின் குடிகள் கேள்விப்பட்டு, ஒரு சூழ்ச்சி செய்தனர்.

4 எப்படியெனில், அவர்கள் தங்கள் வழிக்கு உணவாகத் தின்பண்டங்களையும் பழைய கோணிப்பைகளையும் கிழித்து தைக்கப்பட்ட திராட்சை இரசச் சித்தைகளையும் கழுதைகளின்மேல் ஏற்றி, பழுது பார்க்கப்பட்ட பழைய மிதியடிகளைக் கால்களில் போட்டு, பலநிறமுள்ள ஒட்டுப்போட்ட ஆடைகளை உடுத்திக் கொண்டனர்.

5 வழி உணவுக் கென்று அவர்கள் கொண்டு சென்றிருந்த அப்பங்கள் உலர்ந்து துண்டு துண்டாகப் போயின.

6 அவர்கள் கல்கலாவில் பாளையத்திலிருந்த யோசுவாவிடம் போய் அவரையும் இஸ்ராயேலின் முழுச்சபையையும் நோக்கி, "நாங்கள் அதிக தூரமான நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்களோடு சமாதான உடன் படிக்கை செய்துகொள்ள விரும்புகிறோம்" என்றனர். இஸ்ராயேலின் பெரியோர்கள் அவர்களுக்கு மறுமொழியாக,

7 நீங்கள் எங்களுக்குச் சொந்தமாய்க் கொடுக்கப்படும் நாட்டில் குடியிருக்கிறீர்கள் போலும். நாங்கள் எப்படி உங்களோடு உடன்படிக்கை செய்யலாம்?" என்றனர்.

8 அவர்கள் யோசுவாவை நோக்கி, "நாங்கள் உமக்கு அடிமைகள்" என்று சொன்னார்கள். அதற்கு யோசுவா, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றார்.

9 அவர்கள், "உம் அடியார்களாகிய நாங்கள் உம் ஆண்டவராகிய கடவுளின் பெயரைச் சொல்லி, வெகு தூரமான நாட்டிலிருந்து வந்துள்ளோம். ஏனெனில், நாங்கள் அவருடைய வலிமையையும் புகழையும், அவர் எகிப்தில் செய்த யாவற்றையும்,

10 யோர்தானின் அக்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வந்த அமோறையரின் இரு அரசர்களுக்கும், அதாவது எசெபோனின் அரசனாய் இருந்த செகோனுக்கும், அஸ்தரேத்திலிருந்த பாசானின் அரசனான ஒகுக்கும் அவர் செய்த யாவற்றையும் கேள்வியுற்றோம்.

11 ஆகையால் எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டுக் குடிகள் அனைவரும் எங்களைப் பார்த்து, தூரப்பயணத்துக்கு வேண்டிய உணவை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இஸ்ராயேலரிடம் போய், 'நாங்கள் உங்கள் அடிமைகள். எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்' என்று உங்களுக்குச் சொல்லச் சொன்னார்கள்.

12 உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட அன்று தான் இந்த அப்பங்களைச் சுடச்சுட எடுத்துக்கொண்டு வந்தோம். இப்பொழுது அவை நெடுநாள் பயணத்தில் உலர்ந்து பழையனவாகித் துண்டு துண்டாய்ப் பிய்ந்து போயின.

13 நாங்கள் இத்திராட்சை இரசச் சித்தைகளை நிரப்பின போது அவைகள் புதியனவாயிருந்தன. இப்பொழுது இதோ, கிழிந்து போயின. நாங்கள் உடுத்திக்கொண்ட ஆடைகளும், போட்டுக் கொண்ட மிதியடிகளும் நெடுந்தூரப் பயண நாட்களில் எவ்வளவு பழையனவாய்த் தேய்ந்து போயின, பாருங்கள்" என்றனர்.

14 இதைக் கேட்ட இஸ்ராயேலர் ஆண்டவருடைய ஆலோசனையைக் கேட்டு அறியாமலேயே அவர்களுடைய உணவுப் பொருட்களில் சிறிது வாங்கிக் கொண்டனர்.

15 யோசுவா அவர்களுடன் சமாதானம் செய்து தாம் அவர்களை உயிரோடு காப்பாற்றுவதாக ஆணையிட்டு, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார், ஏனைய மக்கட் தலைவர்களும் அவ்வாறே அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறினர்.

16 இவ்வுடன்படிக்கை செய்த மூன்று நாட்களுக்குப் பின், இவர்கள் அருகிலேயே குடியிருக்கிறார்கள் என்றும், தங்கள் மத்தியிலே வாழப்போகிறார்கள் என்றும் அவர்கள் கேள்விப்பட்டனர்.

17 உண்மையில் இஸ்ராயேல் மக்கள் பாளையம் விட்டுப் புறப்பட்டு மூன்றாம் நாளில் அவர்களுடைய நகரங்களுக்கு வந்து சேர்ந்தனர். கபயோன், கபீரா, பேரோத், கரியாத்தியாரீம் என்பனவே அந்நகர்களாம்.

18 மக்கட் தலைவர்கள் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளின் பெயரால் ஆனையிட்டு அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்திருந்த படியால் இஸ்ராயேலர் அவர்களைக் கொன்று போடவில்லை. ஆதலால், சாதாரண மக்கள் எல்லாரும் தலைவர்களுக்கு எதிராக முறு முறுத்துப் பேசினர்.

19 மக்கட் தலைவர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளின் பெயரால் அவர்களுக்கு வாக்களித்துள்ளோம். ஆதலால் நாம் அவர்களைத் தொடக் கூடாது.

20 ஆனால் நாம் செய்யப் போகிறதைக் கேளுங்கள். ஆண்டவருடைய கோபம் நம்மேல் வராமலிருக்க, நாம் கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களை உயிரோடு காப்பாற்றுவோம்.

21 ஆயினும், அவர்கள் இஸ்ராயேல் மக்கள் எல்லாருக்கும் விறகு வெட்டியும், தண்ணீர் கொணர்ந்தும் வாழ்ந்து வருவார்" என்று மறுமொழி சொன்னார்கள்.

22 இப்படிச் சொன்னதைக் கேட்டு, யோசுவா கபயோனியரை அழைத்து, "எங்கள் நடுவே குடியிருக்க, நீங்கள் பொய்சொல்லி: 'நாங்கள் உங்களுக்கு வெகு தூரமாயிருக்கிறவர்கள்' என்று எங்களை ஏமாற்றி வஞ்சிக்கத் தேடினது ஏன்?

23 ஆகவே, நீங்கள் சாபத்துக்கு உள்ளானீர்கள். என் ஆண்டவருடைய ஆலயத்துக்கு விறகு வெட்டவும், தண்ணீர் கொண்டு வரவும் கடவீர்கள். இவ்வூழியம் தலைமுறை தலைமுறையாய் உங்களை விட்டு நீங்கமாட்டாது" என்றார்.

24 அதற்கு அவர்கள், "நாட்டை எல்லாம் உங்களிடம் ஒப்படைக்கவும், நாட்டின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போடவும், உம் ஆண்டவராகிய கடவுள் தம் அடியானான மோயீசனுக்கு வாக்களித்திருந்தார் என்ற செய்தி உம் அடியார்களுக்கு அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் மிகவும் அஞ்சி எஙகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இவ்வாறு செய்தோம். உங்களுக்கு அஞ்சியே நாங்கள் இச்சதியாலோசனை செய்தோம்., இப்போதும் நாங்கள் உங்கள் கையில் இருக்கின்றோம்.

25 எது நன்மையும் நீதியுமாகத் தோன்றுகிறதோ அதை நீர் எங்களுக்குச் செய்யும்" என்றனர்.

26 யோசுவா அப்படியே செய்தார். இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் கொன்று போடக் கூடாது என்று அவர் கட்டளையிட்டு அவர்களைக் காப்பாற்றினார்.

27 ஆனால் அவர்கள் எல்லா மக்களுக்கும், ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திலுள்ள ஆண்டவருடைய பலிபீடத்துக்கும் பணிவிடையாளராகி, விறகு வெட்டுவது, தண்ணீர் கொண்டுவருவது போன்ற பொதுவேலை செய்வார்கள் என்று யோசுவா அன்றே கட்டளையிட்டார். அப்படியே அவர்கள் இன்று வரை அப்பணிவிடையைச் செய்து வருகிறார்கள்.

அதிகாரம் 10

1 எரிக்கோவுக்கும் அதன் அரசனுக்கும் செய்திருந்தது போல், யோசுவா ஆயியிக்கும் அதன் அரசனுக்கும் செய்து அதைப் பிடித்துப் பாழாக்கினதையும், கபயோனியரும் இஸ்ராயேலரோடு உடன்படிக்கை செய்து கொண்டு அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டதையும், யெருசலேமின் அரசன் அதோனிசெதேக் கேள்விப்பட்டான்.

2 அப்போது அவன் மிகவும் ஆட்டமுற்றான். ஏனெனில் கபயோன் பெரிய நகர். அது தலை நகராகிய ஆயியைவிட மிகப் பெரியதாயிருந்தது. மேலும், அதன் படைவீரர்கள் எல்லாரும் மிக்க ஆற்றல் வாய்ந்தவர்களாய் இருந்தனர்.

3 ஆகையால் யெருசலேம் அரசன் அதோனிசெதேக், எபிரோன் ஊருக்கு அரசனான ஓகாமுக்கும், ஜெரிமோத்தின் அரசனான பாரிக்கும், லாக்கீசு நகர அரசனான ஜாப்பியாவுக்கும், எகிலோனின் அரசனான தாமீருக்கும் ஆள் அனுப்பினான்.

4 துணையோடு நம்மிடம் வந்து சேருங்கள். கபயோன் நம்முடைய பக்கத்தை விட்டு, யோசுவாவோடும் இஸ்ராயேல் மக்களோடும் சேர்ந்து கொண்டபடியால் அதைப் பிடிக்கப் போவோம்" என்று அவர்களுக்குச் சொல்லச் சொன்னான்.

5 அப்படியே யெருசலேமின் அரசன், எ+தி20514பிரோனின் அரசன், ஜெரிமோத்தின் அரசன் ஆகிய அமோறைய ஐந்து அரசர்களும் ஒன்று சேர்ந்து, தங்கள் படைகள் அனைத்தோடும் புறப்பட்டு, கபயோனைச் சுற்றிப் பாளையம் இறங்கி அதை முற்றுகையிட்டனர்.

6 அப்பொழுது முற்றுகையிடப்பட்ட கபயோனின் குடிகள் கல்கலாவிலிருந்த பாளையத்துக்கு யோசுவாவிடம் ஆள் அனுப்பி, "உம் அடியாரைக் கைவிட்டு விடாமல் விரைவாய் இவ்விடம் வந்து எங்களுக்குத் துணை செய்து காப்பாற்ற வேண்டும். குன்றுகளில் குடியிருக்கிற அமோறையரின் அரசர்கள் எல்லாரும் எங்களுக்கு எதிராய் ஒன்று திரண்டுள்ளனர்" என்று சொல்லச் சொன்னார்கள்.

7 உடனே யோசுவாவும் அவரோடு மிக்க ஆற்றல் வாய்ந்த போர்வீரர் அனைவரும் கல்கலாவிலிருந்து புறப்பட்டனர்.

8 ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்சாதே. அவர்களை உன் கையில் ஒப்படைத்தோம். அவர்களில் ஒருவனும் உன்னை எதிர்த்து நிற்க முடியாது" என்று அருளினார்.

9 யோசுவா கல்கலாவிலிருந்து இரவு முழுவதும் நடந்து திடீரென்று அவர்கள் மேல் பாய்ந்தார்.

10 ஆண்டவரோ அவர்களை இஸ்ராயேலருக்கு, அவர்கள் கபயோனிலே அவர்களை முறியடித்துப் பெத்தொரோனுக்குப் போகும் வழியில் அவர்களைப் பின்தொடர்ந்து, அசெக்கா, மசேதா வரை தூரத்திக் கொன்று குவித்தனர்.

11 இப்படி அவர்கள் இஸ்ராயேல் மக்களுக்குத் தப்பும்படி பெத்தொரோனிலிருந்து இறங்கி ஒடிப்போகையில் அவர்கள் அசெக்கா செல்லும்வரை ஆண்டவர் வானத்திலிருந்து பெரிய கற்கள் விழச்செய்தார். இஸ்ராயேல் மக்களின் வாளால் வெட்டுண்டு மடிந்தவர்களை விட அக்கல் மழையால் அடிபட்டுச் செத்தவர்களே அதிகம்.

12 இப்படி இஸ்ராயேல் மக்கள் கையில் ஆண்டவர் அமோறையரை ஒப்படைத்த அந்நாளிலே, யோசுவா அவர்களுக்கு முன்பாக ஆண்டரை நோக்கி வேண்டிக்கொண்டு, "சூரியனே, நீ கபயோனின் முகமாய்ச் செல்லாதே. சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கு முகமாய்ப் போகாதே" என்றார்.

13 எனவே, நீதிபதிகள் ஆகமத்தில் எழுதப் பட்டிருக்கிறதுபோல, சூரியனும் சந்திரனும் நிலைகுலையாமல் இஸ்ராயேலர் தங்கள் எதிரிகளின் மேல் பழிவாங்கித் தீருமட்டும் அசையாது நின்றன. இப்படி ஒருநாள் அளவாகச் சாயத் தாமதித்து, சூரியன் நடுவானிலே நின்றுவிட்டது.

14 இவ்வாறு ஆண்டவர் ஒரு மனிதனின் சொல்லுக்கு அடங்கி இஸ்ராயேலருக்காகப் போர்புரிந்தார். அந்நாளைப்போல் நெடிய நாள் இதற்கு முன் இருந்ததுமில்லை; இனி இருக்கப்போவதுமில்லை.

15 பிறகு யோசுவா இஸ்ராயேலர் அனைவரையும் அழைத்துக் கொண்டு கல்கலாவிலுள்ள பாளையத்துக்குத் திரும்பினார்.

16 அந்த ஐந்து அரசர்களும் தப்பியோடி மசேதா நகரில் உள்ள ஒரு குகையில் ஒளிந்து கொண்டனர்.

17 மசேதா ஊரிலுள்ள ஒரு குகையில் ஒளித்திருந்த ஐவரும் கண்டு பிடிக்கப்பட்டனர் என யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.

18 உடனே அவர் தம் தோழர்களை நோக்கி, "நீங்கள் போய்ப் பெரிய கற்களைப் புரட்டிக் குகையின் வாயிலில் வைத்து அடைத்து, இப்படிச் சிறைப்பட்டவர்களுக்குக் காவல் புரியும்படி தக்க ஆட்களை வையுங்கள்.

19 நீங்களோ அங்கே நில்லாது எதிரிகளைத் தொடர்ந்து துரத்துங்கள். பின்னணியில் ஓடுவோரையெல்லாம் வெட்டி வீழ்த்துங்கள். அவர்கள் கோட்டைகளினுள் நூழையாத படி தடை செய்யுங்கள். ஏனெனில் ஆண்டவராகிய கடவுள் அவற்றை உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார்" என்று கட்டளையிட்டார்.

20 எனவே, பகைவர் பெரும் தோல்வியுற்றுப் பெரும்பாலோர் வெட்டுண்டு விழுந்தனர். எல்லாருமே அழிந்தொழிந்தனர் அவர்களில் வெகுசிலரே உயிர் தப்பி அரண் சூழ்ந்த நகர்களுக்குள் புகுந்தனர்.

21 பின்பு சேனை எல்லாம் மசேதாவின் கண் பாளையத்தில் தங்கியிருந்து யோசுவாவிடம் திரும்பி வந்தது. வீரர்களில் காயப்பட்டவர்களும் இல்லை. உயிரிழந்தவர்களும் இல்லை என்று கண்டு, இஸ்ராயேல் மக்களுக்கு எதிராய் வாயைத்திறந்து பேச ஒருவனும் துணியவில்லை.

22 அப்பொழுது யோசுவா, "குகையின் வாயைத்திறந்து அதில் ஒளிந்து கொண்டிருக்கும் ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.

23 அவருடைய பணியாளர் அப்படியே செய்து, யெருசலேமின் அரசன், எபிரோனின் அரசன், ஜெரிமோத்தின் அரசன், லாக்கீசின் அரசன், எகிலோனின் அரசன் ஆகிய அந்த ஐந்து அரசர்களையும் குகையிலிருந்து அவரிடம் கொண்டுவந்தனர்.

24 அவர்கள் கொண்டுவரப்பட்டபோது, யோசுவா இஸ்ராயேலின் மனிதர்களை எல்லாம் அழைப்பித்துத் தம்முடன் இருந்த படைத்தலைவர்களை நோக்கி, "நீங்கள் அருகில் சென்று இவ்வரசர்களுடைய கழுத்துகளின்மேல் காலை வையுங்கள்" என்றார். அவர்கள் அவ்விதமே போய், தரையில் விழுந்து கிடந்தவர்களின் கழுத்துகளின் மேல் தங்கள் காலை வைத்து மிதிக்கத் தொடங்கினர்.

25 மறுபடியும் யோசுவா அவர்களை நோக்கி, "உங்களுக்கு அச்சமும் நடுக்கமும் வேண்டாம். திடமாயும் உறுதியாயும் இருங்கள். நீங்கள் எவரெவரோடு போர்புரிய வேண்டுமோ அவர்களை எல்லாம் ஆண்டவர் இப்படியே செய்வார்" என்றார்.

26 அதன்பின் யோசுவா அவர்களைக் குத்திக்கொன்று ஐந்து மரங்களில் தொங்கவிட்டார். மாலை வரை அவர்களின் உடல்கள் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன.

27 சூரியன் மறையும் வேளையில் யோசுவா மரங்களிலிருந்து உடல்களை இறக்கத் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் முன்பு ஒளிந்து கொண்டிருந்த அக்குகையிலேயே அவர்களைப் போட்டுப் பெரும் கற்களால் குகையின் வாயை அடைத்தனர். அந்தப் பாறைகள் இன்றுவரை அங்கே இருக்கின்றன.

28 அன்று யோசுவா தம் ஆற்றலால் மசேதா நகரைப் பிடித்து அதன் அரசனையும் எல்லாக் குடிகளையும் தன் வாளுக்கு இரையாக்கினார். அதன் உடைமைகள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் அழித்து விட்டார். முன்பு எரிக்கோவின் அரசனுக்கு அவர் செய்ததுபோல் மசேதாவின் அரசனுக்கும் செய்தார்.

29 பிறகு மசேதாவிலிருந்து யோசுவா இஸ்ராயேலர் அனைவரோடும் லெப்னாவுக்குப் போய்ப் போர் புரிந்தார்.

30 ஆண்டவர் அதையும் அதன் அரசனையும் இஸ்ராயேலர் கையில் ஒப்படைத்தார். இவர்கள் தங்கள் வீரத்தினால் அதைப் பிடித்து அதிலிருந்த குடிகளை எல்லாம் வெட்டி வீழ்த்தினர். ஊரை முழுவதும் அழித்துவிட்டு எரிக்கோ அரசனுக்குச் செய்திருந்தபடியே லெப்னா அரசனுக்கும் செய்தனர்.

31 லெப்னாவிலிருந்து யோசுவா இஸ்ராயேலர் அனைவரோடும் லாக்கீசுக்குப் புறப்பட்டுப்போனார். நகரைச் சூழும்படி சேனைக்குக் கட்டளையிட்டு முற்றுகையிட்டார்.

32 ஆண்டவர் லாக்கீசை இஸ்ராயேலர் கையில் ஒப்படைத்தார். அவர்கள் போர்புரிந்து இரண்டாம் நாளில் அதைப்பிடித்து, லெப்னாவுக்குச் செய்தது போல் குடிகளையும் எல்லா உயிர்களையும் வாளினால் அழித்தார்கள்.

33 அக்காலத்தில் காஜேர் அரசனாகிய கொராம், லாக்கீசுக்குத் துணைசெய்ய வந்திருந்தான். யோசுவா அவனையும் அவனுடைய எல்லா மக்களையும் ஒருவனையும் மீதியாக வைக்காதபடி, வெட்டி வீழ்த்தினார்.

34 லாக்கீசிலிருந்து யோசுவா எகிலோனுக்குப் புறப்பட்டு அந்நகரையும் முற்றுகையிட்டார்.

35 போர் புரிந்து அதை அன்றே பிடித்து, லாக்கீசில் செய்தது போல் அதிலுள்ள எல்லா உயிர்களையும் வாளால் வெட்டி அழித்தார்.

36 அதன் பின்பு யோசுவா எகிலோனிலிருந்து எல்லா இஸ்ராயேலருடனும் புறப்பட்டு எபிரோனை எதிர்த்துப் போர் புரிந்தார்.

37 அதையும் பிடித்து, அதன் அரசனையும் அதற்கடுத்த எல்லாக் கோட்டைகளையும் கைப்பற்றி, அதில் குடியிருந்த எல்லா உயிர்களையும், ஒன்றும் தப்ப விடாமல் வாளுக்கு இரையாக்கினார். எகிலோனுக்குச் செய்ததுபோல் எபிரோனுக்கும் செய்து, அங்குக் கண்ட எல்லா உயிர்களையும் கொன்று குவித்தார்.

38 பிறகு அவர் தாபீருக்குத் திரும்பி வந்தார்.

39 கையில் வாள் ஏந்தியவராய் அதைப் பிடித்துப் பாழாக்கினார்; அதையும் அதன் அரசனையும், சுற்றிலுமிருந்த அரண்களையும் கைப்பற்றி, எல்லா உயிர்களையும் வாளுக்கு இரையாக்கி ஊர் முழுவதையும் அழித்தொழித்தார். எபிரோனுக்கும் லேப்னாவுக்கும் அவற்றின் அரசர்களுக்கும் செய்திருந்தது போல் தாபீருக்கும் அதன் அரசனுக்கும் செய்தார்.

40 இப்படியே யோசுவா மலைநாடு அனைத்தையும் தென்நாட்டையும் சமவெளியையும் அசெதோத்தையும் அதன் அரசர்களையும் அழித்துப் பாழாக்கினார். ஒருவனையும் தப்பவிடாமல் அவற்றில் வாழ்ந்து வந்த உயிர்கள் அனைத்தையும் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் கட்டளையிட்டிருந்தபடி கொன்று குவித்தார்.

41 காதேஸ்பர்னே துவக்கிக் காசா வரை, கபயோன் முதல் கோசன் நாடு அனைத்தையும்,

42 அங்கிருந்த அரசர்கள் அனைவரையும் அவர்களுக்குக் கீழிருந்த நாடுகளையும் ஒரே எடுப்பிலே பிடித்துப் பாழாக்கினார். ஏனென்றால், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் அவர் சார்பில் போர் புரிந்தார்.

43 பின்பு அவர் எல்லா இஸ்ராயேலரோடும் கல்கலாவிலிருந்த பாளையத்துக்குத் திரும்பினார்.

அதிகாரம் 11

1 ஆசோரிலிருந்த அரசன் யாபின் அவற்றையெல்லாம் கேள்விப்பட்ட போது, மாதோனின் அரசன் ஜொபாவுக்கும் செமேரோனின் அரசனுக்கும் அக்சாபின் அரசனுக்கும்,

2 வடக்கேயிருந்த மலைகளிலும் கெனெரோத்துக்குத் தென்புறத்துச் சமவெளியிலும் கடற்புறத்துத் தோர் நாட்டிலுமிருந்த அரசர்களுக்கும்,

3 கிழக்கேயும் மேற்கேயும் குடியிருந்த கனானையருக்கும் மலைநாட்டிலிருந்த அமோறையர், ஏத்தையர், பெரேசையர், எபுசேயருக்கும், மாஸ்பா நாட்டிலுள்ள எர்மோன் மலையின் அடியிலே குடியிருந்த ஏவையருக்கும் ஆட்களை அனுப்பினான்.

4 அவர்கள் எல்லாரும் தங்கள் நாட்டை விட்டுக் கடற்கரை மணலைப்போன்று கணக்கற்றவரைக் கொண்ட சேனைகளோடும் குதிரைகளோடும் தேர்களோடும் புறப்பட்டனர்.

5 இவ்வரசர்கள் எல்லாரும் இஸ்ராயேலருடன் போர்புரிய மேரோம் என்ற ஏரிக்கு அருகே ஒன்று கூடினர்.

6 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நாளை இந்நேரத்திலே நாம் அவர்களை எல்லாம் இஸ்ராயேலர் முன்பாக வெட்டுண்டு போகும் படி கையளிப்போம். நீ அவர்களுடைய குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைச் சுட்டெரிக்கக்கடவாய்" என்றார்.

7 யோசுவாவும் அவரோடு எல்லாப் போர் வீரர்களும் மேரோம் என்ற ஏரிக்கு அருகில் திடீரென வந்து அவர்கள்மேல் பாய்ந்தனர்.

8 ஆண்டவர் இஸ்ராயேலின் கையில் அவர்களை ஒப்படைத்தார். இஸ்ராயேலர் அவர்களை முறியடித்துப் பெரிய சீதோன் வரையும், இதன் கீழ்ப்புறத்திலிருந்த மஸ்பே சமவெளி வரையும் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தனர். யோசுவா அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி எல்லாரையுமே வெட்டி வீழ்த்தினார்.

9 அவர் ஆண்டவரின் கட்டளைப்படி செய்து குதிரைகளின் குதிங்கால் நரம்புகளை அறுத்து அவர்களுடைய தேர்களைத் தீயில் சுட்டெரித்தார்.

10 பிறகு திடீரெனத் திரும்பி, ஆசோர் நகரைப் பிடித்த அதன் அரசனை வாளால் வெட்டினார். ஆசோர் பண்டுதொட்டே அந்த அரசர்களுக்கெல்லாம் தலைநகராக விளங்கி வந்ததது.

11 அதில் இருந்த எல்லா உயிர்களையும் அவர் வாளினால் வெட்டி வீழ்த்தினார். மீதியானது ஒன்றுமில்லை என்று கண்டோர் சொல்லும்படி, ஒருவரையும் உயிரோடிருக்க விடாது யாவற்றையும் அழித்துக் கொன்று குவித்து நகரையும் நெருப்பால் அழித்தார்.

12 சுற்றுப்புறத்திலுமுள்ள எல்லா நகர்களையும் அவற்றின் அரசர்களையும் பிடித்து, ஆண்டவருடைய அடியானான மோயீசன் தமக்குக் கட்டளையிட்டிருந்தபடியே கொன்று குவித்தார்.

13 இப்படியெல்லாம் பாழாக்கினாலும், குன்றுகளிலும் மேடுகளிலும் இருந்த நகர்களை இஸ்ராயேலர் சுட்டெரிக்காமல் காப்பாற்றினர். மிக்க உறுதியாய் அரணிக்கப்பட்டிருந்த ஆசோர் நகருக்கு மட்டும் தீ வைத்து அழித்து விட்டனர்.

14 அந்நகர்களிலுள்ள எல்லா மனிதர்களையும் கொன்றபின் கொள்ளைப் பொருட்களையும் விலங்கினங்களையும் இஸ்ராயேல் மக்கள் தங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொண்டார்கள்.

15 ஆண்டவர் தம் அடியானான மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, மோயீசனும் யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தார். யோசுவா அவற்றையெல்லாம் நிறைவேற்றி வந்தார். ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்தவற்றிலும் கட்டளையிட்டிருந்தவற்றிலும் யோசுவா ஒன்றையும் செய்யாமல் விட்டு விடவில்லை.

16 அதன்படியே அவர் நடந்து மலைநாட்டையும் தென்நாட்டையும் கோசன் என்ற நாட்டையும் சமவெளிகளையும் மேனாட்டையும் இஸ்ராயேல் மலையையும் அதன் வெளிநிலங்களையும்,

17 லீபான் சமவெளியாகச் செயீர் துவக்கி எர்மோன் மலையடியில் இருந்த பாகால்காத் வரையுள்ள மலைகள் செறிந்த நாட்டின் ஒரு பகுதியையும் பிடித்துப் பாழாக்கினார்.

18 யோசுவா நெடுநாளாய் இவ்வரசர்களோடு போர்புரிந்து வந்தார்.

19 கபாவோனில் குடியிருந்த ஏவையரைத் தவிர வேறெந்த நகரும் வலிய இஸ்ராயேலர் கையில் தன்னை ஒப்படைக்கவில்லை. மற்ற எல்லா நகர்களையும் அவர்கள் போர் புரிந்து தான் பிடித்தார்கள்.

20 ஏனெனில் அவ்வூரார் கடின மனதுள்ளவர்களாகி இஸ்ராயேலுக்கு எதிராகப் போர் புரிந்து மடியவேண்டும் என்பதும், இரக்கத்துக்குத் தகுதியற்றவர்களாய் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அழிந்தொழிய வேண்டும் என்பதும் ஆண்டவருடைய திருவுளம்.

21 அக்காலத்தில் யோசுவா வந்து, ஏனாக் புதல்வரைக் கொன்று குவித்தார். அவர்கள் எபிரோனின் மலைகளிலும் தாபீரின் மலைகளிலும் ஆனாபின் மலைகளிலும் யூதாவின் மலைகளிலும் இஸ்ராயேலின் மலைகளிலும் குடியிருந்தார்கள். அவர் அவர்களுடைய நகர்களை அழித்து,

22 இஸ்ராயேல் மக்களின் நாட்டில் ஏனாக்கியரில் ஒருவரை முதலாய் உயிரோடு விட்டு வைக்கவில்லை. ஆயினும், காஜா, கேத், அஜோத் என்ற நகர் மக்களை உயிரோடு விட்டு வைத்தார்.

23 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டருந்தபடியே யோசுவா நாடு அனைத்தையும் பிடித்து அதை அந்தந்தக் கோத்திரத்திற்கு அமைந்த மக்களின்படியே இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்தார். போரின்றி நாடு அமைதியாய் இருந்தது.

அதிகாரம் 12

1 யோர்தானின் அக்கரைப் பகுதிக்குக் கிழக்கே ஆர்னோன் ஆறு துவக்கி ஏர்மோன் மலைநாடு வரையிலும், கிழக்கே பாலைவனத்தை நோக்கியிருக்கும் எல்லா நாட்டையும், அதுவரை உள்ள எல்லைக்குள் இருந்த அரசர்களையும் இஸ்ராயேல் மக்கள் முறியடித்து அவர்களுடைய நாடுகளையும் உரிமையாக்கிக் கொண்டார்கள். அவ்வரசர்கள் விவரம் பின்வருமாறு:

2 அமோறையரின் அரசனான செகோன் எசெபோனில் வாழ்ந்து வந்தான். இவனுடைய அரசு ஆர்னோன் ஆற்றங்கரையிலிருந்த ஆரோயேர் நகர் துவக்கி ஆற்றங்கரை நடுவிலுள்ள பள்ளத்தாக்கிலும், பாதிக் கலயாத்திலும், அம்மோன் மக்களுடைய எல்லையாகிய ஜாபோக் என்ற ஆறுவரையும் பரவியிருந்தது.

3 (மற்றொரு பக்கம்) பாலைவனம் முதல் கிழக்கேயுள்ள கெனரோத் கடல் வரையும், பெத்சிமோத்துக்குப் போகும் வழியாய்க் கீழ்த்திசையிலிருக்கிற பாலைவனக் கடலாகிய உப்புக் கடல் வரையும், தென்புறத்தில் அசெரோத் பஸ்காவுக்குத் தணிவாக உள்ள நாடு வரையும் பரவியிருந்தது.

4 பாசானின் அரசன் ஓகு. இவன் இராபாயீம் இனத்தவன். அஸ்தரோத்திலும் எதிராயிலும் வாழ்ந்து வந்தான். இவன் எர்மோன் மலையிலும் சலோக்காவிலும்,

5 ஜெசூரி, மாக்காத்தி, ஏசேபோனின் அரசனான செகோனுடைய எல்லையாகிய பாதிக் கலயாத் வரை ஆண்டு வந்தான்.

6 இவ்விரு அரசர்களை ஆண்டவரின் அடியானான மோயீசனும் இஸ்ராயேல் மக்களும் அவர்கள் நாட்டை ரூபானியருக்கும், காதியருக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.

7 யோர்தானுக்கு இப்புறத்தில் மேற்றிசையிலுள்ள லிபானின் நாட்டிலிருக்கும் பால்காத் முதல் செயீருக்குப்போகும் வழியாகிய மலைப்பகுதி வரையுள்ள நாட்டை யோசுவாவும் இஸ்ராயேல் மக்களும் கைப்பற்றிய பின், யோசுவா கோத்திரங்களின் படி அதைப் பங்குப் பங்காய்ப் பிரித்து இஸ்ராயேலருக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டார்.

8 அந்த நாட்டிலும், அதன் மலைகளிலும் சமவெளிகளிலும் வெளிநிலங்களிலும் அசெரோத்திலும் பாலைவனத்திலும், தென்புறத்திலும் ஏத்தையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஏபுசேயர் குடியிருந்த நாட்டிலும், யோசுவாவால் தோற்கடிக்கப்பட்ட அரசர்கள் விவரம் பின்வருமாறு:

9 எரிக்கோவின் அரசன் ஒருவன்; பேத்தலுக்குச் சமீபமான ஆயியின் அரசன் ஒருவன்.

10 யெருசலேமின் அரசன் ஒருவன்; எபிரோனின் அரசன் ஒருவன்.

11 யெரிமோத்தின் அரசன் ஒருவன்; லாக்கீசின் அரசன் ஒருவன்.

12 ஏகிலோனின் அரசன் ஒருவன்; காஜேரின் அரசன் ஒருவன்.

13 தாபீரின் அரசன் ஒருவன்; காதேரின் அரசன் ஒருவன்.

14 ஏர்மாவின் அரசன் ஒருவன்; ஏரோத் அரசன் ஒருவன்.

15 லெப்னாவின் அரசன் ஒருவன்; ஓதுலாமின் அரசன் ஒருவன்.

16 மசேதாவின் அரசன் ஒருவன்; பேத்தலின் அரசன் ஒருவன்.

17 தாபுவாவின் அரசன் ஒருவன்; ஓபேரின் அரசன் ஒருவன்.

18 ஆப்போக்கின் அரசன் ஒருவன்; சாரோனின் அரசன் ஒருவன்.

19 மாதொனின் அரசன் ஒருவன்; ஆஜோரின் அரசன் ஒருவன்.

20 செமேரோனின் அரசன் ஒருவன்; ஆக்சாபின் அரசன் ஒருவன்.

21 தேனாக்கின் அரசன் ஒருவன்; மகெதோவின் அரசன் ஒருவன்.

22 காதேசின் அரசன் ஒருவன்; கர்மேலுக்கடுத்த யக்கனானின் அரசன் ஒருவன்.

23 தோர் நகரிலும், தோர் என்னும் நாட்டிலும் ஆண்ட அரசன் ஒருவன்; கல்காவின் இனத்தாருடைய அரசன் ஒருவன்.

24 தேர்சாவின் அரசன் ஒருவன். ஆக இவர்கள் எல்லாரும் முப்பத்தொரு அரசர்களாம்.

அதிகாரம் 13

1 யோசுவா வயது முதிர்ந்த கிழவரான போது, ஆண்டவர் அவரை நோக்கி, "நீ வயது முதிர்ந்த கிழவனாயிருக்கின்றாய். பங்கிடப்படாமல் கிடக்கிற நாடோ மிகப் பரந்த நாடாகும்.

2 அந்நாடாவது: ஒரு புறத்தில் எகிப்தில் ஓடும் சேறான நதி துவக்கி வடக்கிலிருக்கும் அக்கரோனின் எல்லை வரையும்;

3 மறுபுறத்தில் காசையர், அசோத்தியர், அஸ்கலோனித்தர், கேத்தையர், அக்கரோனித்தர் எனப்பட்ட பிலிஸ்தியரின் ஐந்து அரசர்களின் நாடுகளாகிய கானான் நாட்டில் அடங்கிய கலிலேயாவும், பிலிஸ்தீமும், கெசுரீம் முழுவதும்;

4 தெற்கே ஏவையர் நாடும், கானான் நாடனைத்தும், சீதோனியருக்கடுத்த மாயாரா நாடும், அப்பேக்காவும், அமோறையரின் எல்லை வரையும் பரவியுள்ள நாடனைத்தும்;

5 அதற்கடுத்த எல்லை நாடும், ஏர்மோன் என்ற மலைக்குத் தாழ்வாயுள்ள பவால்காத் துவக்கி ஏமாத் வரையும் கீழ்த்திசையிலிருக்கும் லீபானின் நாடும்;

6 லீபான் முதல் மசெரேப்பொத் ஏரி வரை மலை வாழ்வோர் நாடும், சீதோனியருடைய நாடனைத்துமேயாம். இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாக அவ்விடங்களில் வாழ்வோர் அனைவரையும் நாமே அழித்தொழிப்போம். எனவே நாம் உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி அவர்களுடைய நாடெல்லாம் இஸ்ராயேலருக்குச் சொந்தமாகும்.

7 அப்படியிருக்க, அந்நாட்டைப் பிரித்து ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்குச் சொந்தமாய்ப் பங்கிட்டுக் கொடு.

8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தோடு ரூபன் கோத்திரமும் காத் கோத்திரமும் தங்களுக்கு உரிய நாட்டை அடைந்து விட்டனர். அதை ஆண்டவரின் அடியானான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கில் அவர்களுக்குக் கொடுத்தார்.

9 அந்நாடு ஆர்னோன் என்ற ஆற்றங்கரையிலிருக்கும் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்திருக்கும் ஆரோயேரும், தீபோன் வரையுள்ள மேதபா என்றும் அழைக்கப்படும் எல்லா வயல் வெளிகளும்,

10 எசெபோனிலிருந்து அம்மோன் புதல்வருடைய எல்லை வரை ஆண்டுவந்த செகோன் என்ற அமோறைய அரசனின் எல்லா நகரங்களும், கலாத் நாடும்,

11 ஜெசுரி மாக்காத்தி நாடுகளும், எர்மோன் மலை நாடு முழுவதும், சாலோக்கா வரையுள்ள பாசான் நாடு முழுவதும்,

12 பாசான் நாட்டிலிருக்கும் ஓக் என்ற அரசனின் நாடுமே. ஓக் என்பவன் மட்டுமே இராபாயிம் இனத்தில் எஞ்சி இருந்தவன்; இவன் அஸ்தரோத்திலும் எதிராயிலும் ஆட்சி புரிந்தவன். மோயீசன் அந்த இராபாயித்தரைக் கொன்று அழித்திருந்தார்.

13 அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் ஜெசூரியர்களையும் மாக்காத்தியரையும் துரத்தி விடவில்லை. எனவே இவர்கள் இன்று வரை இஸ்ராயேலின் நடுவே குடியிருக்கின்றனர்.

14 லேவியின் கோத்திரத்துக்கோ உடைமையாக மோயீசன் ஒன்றுமே கொடுக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் அவனுக்குச் சொல்லியிருந்தபடியே இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளும் பலிப்பொருட்களுமே லேவியருக்குச் சொந்தமாகும்.

15 எனவே மோயீசன் ரூபனின் கோத்திரத்தாருக்கு அவர்களுடைய வம்ச முறைப்படி நாட்டைச் சொந்தமாகக் கொடுத்தார். அவர்களுடைய எல்லைகளாவன:

16 ஆர்னோன் ஆற்றங்கரையிலும், ஆர்னோன் பள்ளத்தாக்குக்கு நடுவிலும் இருந்த ஆரோவர் நகர் துவக்கி மேதபாவுக்குப் போகும் வழியாகிய அந்தச் சமவெளி முழுவதும்;

17 ஏசெபோனும், அதன் வெளி நிலங்களிலுள்ள எல்லா ஊர்களும்; தீபோனும் பாமொத்பாவாலும் பெத்பாவால்மோன் நகரும்;

18 யாஜா, கெதிமோத், மேப்பாத்;

19 காரீயாத்தாயின், சபமா,

20 பள்ளத்தாக்கின் மலை மேல் கட்டப்பட்ட சரத்சார், பெத்பொகார், அசெதொர், பஸ்கா,

21 பெத்ஜெசிமோத், வயல் வெளியிலுள்ள எல்லா நகரங்களும், ஏசெபோனில் ஆண்டு வந்த செகோன் என்ற அமோறைய அரசனின் நாடுகளுமாம். அந்தச் செகோனையும் மாதியானிலிருந்த சேகோனின் மக்கட் தலைவர்களையும், நாட்டிலே குடியிருந்த ஏவே, ரேக்கே, சூர், ஊர், ரேபே என்ற செகோனின் படைத்தலைவர்களையும் மோயீசன் தோற்கடித்திருந்தார்.

22 அப்போது இஸ்ராயேல் மக்கள் மற்றவர்களோடு பேயோரின் மகனாகிய பாலாம் என்ற குறிச்சொல்லுகிறவனையும் வாளுக்கு இரையாக்கியிருந்தனர்.

23 எனவே ரூபனின் கோத்திரத்தாருக்கு யோர்தான் நதியே எல்லையாயிற்று; அந்நாடும், அதிலடங்கிய நகர்களும் ஊர்களும் வம்ச வரிசைப் படி ரூபனியருக்குச் சொந்தமாயின.

24 காதின் கோத்திரத்தாருக்கு மோயீசன் அவர்களின் வம்ச வரிசைப்படியே சொந்தமாகக் கொடுத்திருந்த நாட்டின் பங்கீடு வருமாறு:

25 யாஜோரின் எல்லையும், காலாத் நாட்டின் எல்லா நகர்களும் அம்மோன் சந்ததியார்களுடைய பாதி நாடும், இரபாவுக்கு எதிரேயுள்ள ஆரோயேர் வரையும், ஏசெபோன் துவக்கி இராமேத், மஸ்பே, பேத்தனிம் மட்டும்:

26 மானாயிம் துவக்கித் தாபீரின் எல்லை வரைக்குமுள்ள நாடெல்லாம் அதில் அடங்கியிருந்தது.

27 மேலும் அது ஏசெபோனில் அரசனாயிருந்த செகோனுடைய அரசன் மற்றப் பங்குகளாகிய பெத்தரான், பெத்னெம்ரா, சோகொத், சாபோன் என்ற பள்ளத்தாக்குகளிலேயும் விரியும்; கடைசியில் கீழ்த்திசை முகமாய் யோர்தானுக்கு அப்புறத்தில் பரவியிருந்த கெனேரேத் கடலோரம் வரை யோர்தான் அதற்கு எல்லையாய் இருக்கின்றது.

28 இந்நகர்களும், இவற்றைச் சார்ந்த ஊர்களும் காத் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படி சொந்தமாயின.

29 மனாசே புதல்வரின் பாதிக் கோத்திரத்துக்கும், அவர்களுடைய சந்ததியாருக்கும், அவரவர் வம்சங்களின்படி மோயீசனால் கொடுக்கப்பட்ட உடைமையாவது:

30 மானாயீம் துவக்கிப் பாசான் முழுவதும்; பாசானின் அரசனான ஓக் என்பவனுடைய எல்லா நாடுகளும்; பாசானிலுள்ள ஜயீரின் எல்லா ஊர்களுமான அறுபது நகர்களேயாம்.

31 மேலும், பாதிக் காலாதையும், பாசானிலே அஸ்தரோத், எதிராய் என்ற ஓக் அரசனுடைய நகர்களையும், மனாசேயின் மகனாகிய மாக்கீரின் புதல்வர் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்ச முறைப்படி கொடுத்தார்.

32 கீழ்த்திசை முகமாய் எரிக்கோவுக்கு எதிராக, யோர்தானுக்கு அக்கரையிலிருக்கும் மோவாபின் வயல்வெளிகளில் மோயீசன் ஒரு பாகம் பிரித்து அவர்களுக்குச் சொந்தமாய்க் கொடுத்திருந்தார்.

33 லேவி கோத்திரத்திற்கு மோயீசன் சொந்தமாக எதையும் கொடுக்கவில்லை; ஏனெனில், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் அவனுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே மேற்சொன்ன கோத்திரத்தின் உடைமை.

அதிகாரம் 14

1 கானான் நாட்டில் இஸ்ராயேல் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தவர் யாரெனில்; குருவான எலெயசாரும், நூனின் மகன் யோசுவாவும், இஸ்ராயேலின் கோத்திரங்களிலுள்ள குடும்பத் தலைவருமேயாம்.

2 மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி அவர்கள் திருவுளச்சீட்டுப் போட்டு ஒன்பது கோத்திரத்தாருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

3 ஏனெனில், மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கு மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்தைச் சொந்தமாகக் கொடுத்திருந்தார். லேவியருக்கோ அவர்கள் சகோதரர்களின் நடுவே சொந்தமாகப் பூமி ஒன்றும் கொடுக்கப்படவில்லை.

4 ஆனால் மனாசே, எபிராயீம் என்ற சூசையின் புதல்வர் இருகோத்திரங்களாய்ப் பிரிக்கப்பட்டு அந்த லேவியருக்குப் பதிலாகச் சொந்தப் பூமியைப் பெற்றனர். லேவியர்கள் பூமி யாதொன்றையும் பெறவில்லை என்றாலும், குடியிருக்க நகர்களையும், ஆடு மாடு முதலியவற்றை வளர்க்க நகருக்கு அருகில் பேட்டைகளையும் பெற்றனர்.

5 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள் செய்து நாட்டைப் பங்கிட்டுக் கொண்டனர்.

6 அக்காலத்தில் யூதாவின் மக்கள் கல்கலாவிலிருந்த யோசுவாவிடம் வந்தனர். கெனேசையனான எப்போனேயின் மகன் காலேப் அவரை நோக்கி, "காதேஸ்பார்னே என்ற இடத்தில் ஆண்டவர் என்னைக் குறித்தும் கடவுளின் மனிதன் மோயீசனுக்குச் சொன்னதை நீர் அறிவீர்.

7 நாட்டை உளவு பார்க்க ஆண்டவருடைய அடியான் மோயீசன் காதேஸ்பார்னேயிலிருந்து என்னை அனுப்பின போது எனக்கு வயது நாற்பது. எனக்கு உண்மையாகப் பட்டதை அவரிடம் தெரிவித்தேன்.

8 ஆனால் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களை மனம் கலங்கச் செய்தார்கள். நானோ என் ஆண்டவராகிய கடவுளைப் பின்பற்றி நடந்தேன்.

9 அந்நாளில் மோயீசன், 'நீ என் ஆண்டவராகிய கடவுளைப் பின்பற்றினதால், உன் கால்பட்ட நாடு உனக்கும் உன் புதல்வர்களுக்கும் என்றென்றும் சொந்தமாயிருக்கும்' என்று ஆணையிட்டுக் கூறினார்.

10 அப்போது அவர் சொன்னபடி இதோ ஆண்டவர் இன்று வரை என்னை உயிரோடு வைத்துக் காத்து வந்துள்ளார். இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்து திரிகையில், ஆண்டவர் அவ்வார்த்தையை மோயீசனிடம் சொல்லியிருந்தார். அது நடந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று எனக்கு வயது எண்பத்தைந்து.

11 மோயீசன் என்னை உளவு பார்க்க அனுப்பின நாளில், எனக்கிருந்த ஆற்றல் இன்று வரை இருக்கிறது. நடக்கவும் போர் புரியவும் எனக்கு முன்பு இருந்த சக்தி இன்றும் இருக்கிறது.

12 ஆதலால், ஆண்டவர் எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன இந்த மலை நாட்டை நீர் எனக்குத் தர வேண்டும். அவர் அவ்விதம் வாக்குறுதி கொடுத்ததற்கு நீரே சாட்சி. அம்மலை நாட்டில் ஏனாக்கியர் வாழ்த்து வருகின்றனர். அவர்களுடைய அரண் சூழ்ந்த பெரிய நகர்கள் பல உண்டு. ஆண்டவர் என்னோடு இருப்பாரேயானால் அவர் எனக்கு வாக்களித்திருக்கிறபடி அவர்களை அழிக்க என்னால் முடியும் " என்றான்.

13 அதைக்கேட்டு யோசுவா அவனை ஆசீர்வதித்து எபிரோனை அவனுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்.

14 இவ்வாறு கெனெசையனான ஜெப்போனேயின் மகன் காலேப் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் பின்பற்றியதால் இன்று வரை எபிரோனைச் சொந்தமாகக் கொண்டுள்ளான்.

15 முன்பு எபிரோனுக்குக் கரியாத் அர்பே என்ற பெயர் வழங்கிற்று. ஏனாக்கியருக்குள் மிகப் பெரியவனாய் மதிக்கப்பட்டு வந்த அர்பே அங்கே புதைக்கப்பட்டிருந்தால் அம்மலைக்கு அப்பெயர் வழங்கிற்று. அப்பொழுது நாட்டில் போர்கள் ஓய்ந்து போயின.

அதிகாரம் 15

1 யூதாவின் புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த பங்கு வீதமாவது: ஏதோமுக்குத் தெற்கேயுள்ள சீன் என்ற பாலைவனம் துவக்கித் தென்புறத்துக் கடைசி எல்லை வரையாகும்.

2 அது உப்புக்கடலின் கடைகோடியாகிய தென்புறத்திலுள்ள முனையில் துவக்கும்.

3 அங்கிருந்து விருச்சிக மலைக்கும், அங்கிருந்து சீனுக்கும் போய், காதேஸ்பார்னேய்க்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து ஆதாருக்கு எழும்பிக் கல்காவைச் சுற்றிப்போன பின்பு,

4 அஸ்மோனாவை அடைந்து எகிப்தின் ஆற்றுக்குச் சென்று பெரிய கடலில் போய் முடியும். இது தென் எல்லையாகும்.

5 கீழ்ப்புற எல்லையாவது: உப்புக்கடல் துவக்கி, யோர்தானின் முகத்துவாரம் வரை, வட எல்லை கடலின் முனை துவக்கி மேற்சொல்லப்பட்ட யோர்தான் நதி வரை.

6 அவ்வெல்லை பெத்- அகிலாவுக்கு ஏறி வடக்கேயுள்ள பெத்- ஆராபாவைக் கடந்து ரூபனின் மகன் போயேனின் கல்லுக்கு ஏறிப்போகும்.

7 பின்னர் ஆக்கோர்ப் பள்ளத்தாக்கிலிருக்கிற தெபறு எல்லைகளை அடைந்து வடக்கேயுள்ள கல்காவுக்கு நேராய்ப் போகும்: கல்கா, அதொம்மிம் மலைக்கு எதிரே ஆற்றின் தென்புறத்தில் இருக்கிறது. பிறகு சூரியன் ஊற்று என்று அழைக்கப்பட்ட நீர்த்திடலைக் கடந்து ரோகல் என்ற கிணற்றுக்குச் சென்று,

8 அங்கிருந்து என்னொமின் மகனுடைய பள்ளத்தாக்கு வழியே போய், எபுசேயர் நாட்டிற்குத் தெற்கே சென்று யெருசலேம் நகரை அடைந்தபின், மேற்கிலிருக்கிற கெனோக்கு எதிரே இருக்கிற மலை மேல் ஏறி வடக்கிலுள்ள ராபாயிம் பள்ளத்தாக்கைத் தாண்டி,

9 அம்மலையின் உச்சியிலிருந்து நெப்தோவா எனப்படும் நீருற்றுக்குப் போய் எபிரோன் மலையின் ஊர்களுக்குச் சென்று பாலாவாகிய காரியத்தியாரீம், அதாவது, காடுகளின் நகரை அடையும்.

10 பாலாவை விட்டு மேற்கே செயீர் மலை வரை சுற்றிப் போய், பிறகு, வடக்கே கெஸ்லோன் முகமாயுள்ள யாரீம் மலைப்பக்கத்தில் சென்று பெத்சதமேசில் இறங்கித் தம்மனாவுக்குப் போய்,

11 வடக்கே சென்று அக்கரோனின் பக்கத்திலே திரும்பிச் சேக்கிரோனானை நோக்கி இறங்கி, அங்கிருந்து பாலா மலையைத் தாண்டி ஜெப்னெல் போய் மேற்கேயுள்ள பெரிய கடலோரத்தில் முடியும்.

12 யூதா புதல்வருக்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி சுற்றிலும் அவர்களுடைய வம்ச வரிசைப்படி சுற்றிலும் நியமிக்கப்பட்ட எல்லைகள் அவையே.

13 ஆண்டவருடைய கட்டளையின்படியே ஜெப்போனேயின் மகன் காலேபுக்கு, யூதாவின் புதல்வருடைய பூமியின் நடுவே ஏனாக்கின் தந்தையினுடைய காணியாட்சியாகிய காரியாத்அர்பே என்ற எபிரோனை யோசுவா கொடுத்தார்.

14 காலேபோ அங்கே ஏனாக்கின் வம்சத்தாரான சேசாய், அகிமான், தோல்மாய் என்ற ஏனாக்கின் மூன்று புதல்வரையும் கொன்று போட்டான்.

15 அங்கிருந்து தாபீரின் குடிகளிடம் இறங்கிப் போனான். முதன் முதல் அந்தத் தாபீருக்குப் பெயர் கரியாத்- செப்பேர், அதாவது கல்விமாநகர் என்பது.

16 பொழுது காலேப், "கரியாத்- செப்பேரைப் பிடிப்பவனுக்கு என் மகள் அக்சாமை மணமுடித்துக் கொடுப்பேன்" என்றான்.

17 அதன்படி காலேபின் தம்பி கெனேசினி மகன் ஒத்தோனியேல் நகரைப் பிடித்தான். ஆகையால் தன் மகள் அக்சாமை அவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.

18 அவர்கள் ஒன்றாய்ப் புறப்பட்டுச் செல்லும் வழியில், " உன் தந்தையிடம் ஒரு வயலைக் கேள்" என்று அவள் கணவன் அக்சாமைத் தூண்டினான். எனவே அவள் கழுதையின் மேல் சவாரி போகையில் பெருமூச்சு விடத் தொடங்கினாள். அதைக்கேட்டுக் காலேப் அவளை நோக்கி," ஏன்?" என்று வினவினான்.

19 அதற்கு அவள், "எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும். அதாவது, தென்புறத்திலிருக்கும் வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர் அன்றே ? அத்தோடு நீர்வளமுள்ள ஒரு நிலத்தையும் எனக்குத் தரவேண்டும்" என்றாள். அப்பொழுது காலேப் அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்வளமுள்ள மற்றொரு நிலத்தைக் கொடுத்தான்.

20 யூதா புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த சொத்து அதுவே.

21 தென்கோடியில் இருக்கும் ஏதோமின் எல்லை ஓரமாக யூதா புதல்வரின் கோத்திரத்துக்குக் கிடைத்த நகர்களாவன: கப்சையேல்,

22 ஏதேர், ஜாகூர், கீனா, திமோனா, அததா,

23 காதேஸ், ஆசோர்,

24 ஜெத்னம், சிவ்,

25 தெலேம், பாலோத், புது ஆசோர்,

26 ஆசோர் எனும் கரியொதெஸ்னோன், ஆமம், சாமா,

27 மொலாதா, ஆசேர்கதா, அசெமொன்,

28 பெத்பெலத், ஆசேர்சுவல், பெர்சபே, பசியொத்தியா,

29 பாஆலா, ஜிம்,

30 ஏசேம், எல்தொலாத்,

31 செசில், அர்மா, சிசெலக், மெதேமெனா,

32 சென்சென்னா, லெபாவொத், சேலிம், ஆயென், ரெம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.

33 சமவெளியில் எஸ்தாவோல், சாரேயா,

34 ஆசேனா, சானோயே, என்கன்னிம், தப்பவா,

35 ஏனாயிம், ஜெரிமோத், அதுல்லம், சொக்கோ,

36 அஜேக்கா, சராயீம், அதித்தாயீம், கெதெரா, கெதெரோத்தாயிம் ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

37 சானான், அதசா,

38 மக்தல்கத், தெலெயான், மசேப்பா, ஜெக்தல்,

39 லாக்கிசு, பாஸ்காத்,

40 ஏகிலோன், கெப்போன்,

41 லெகெமன், கெத்லீஸ், கிதெரொத், பெத்தாகன், நா ஆமா, மகேதா

42 ஆகிய பதினாறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

43 லபனா, ஏத்தேர், ஆகான், ஜெப்தா, எஸ்னா, நெசீப்,

44 கைலா, அக்சீப், மரேசா ஆகிய ஒன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.

45 அக்கரோனும் அதன் ஊர்களும் சிற்றூர்களும்.

46 அக்கரோன் துவக்கி கடல் வரை அசோத்தின் வழியிலுள்ள எல்லா ஊர்களும் சிற்றூர்களும்.

47 அசோத்தும் அதைச் சார்ந்த ஊர்களும் சிற்றூர்களும், காஜாவும், எகிப்தின் நதிவரை பரந்து கிடக்கும் ஊர்களும் சிற்றூர்களும். பிறகு பெரிய கடலே எல்லை.

48 மலையில்: சாமீர் ஜெத்தர், சொக்கொத்,

49 தன்னா, கரியத்சென்னா எனப்படும் தாபீர்.

50 அனப், இஸ்தேமோ, ஆனீம்,

51 கோசன், ஓலன், கிலோ ஆகிய பதினொரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

52 அராப், ரூமா, ஏசான்,

53 ஜானும், பெத்தாப்புவா, அப்பேக்கா,

54 அத்மாத்தா, கரியத் அர்பே அதாவது எபிரோன், சியோர் ஆகிய ஒன்பது நகர்களும் அவற்றின் ஊர்களும்.

55 மாயோன், கார்மேல், சீப்,

56 ஜோத்தா, ஜெஸ்ராயேல், ஜீக்கதம்,

57 சனோவே, அக்காயின் கபவா, தம்னா ஆகிய பத்து நகர்களும் அவற்றின் ஊர்களும்.

58 ஆலும், பேசூர், கெதோர்,

59 மரேத், பெத்தனோத், எல்தேக்கோன் ஆகிய ஆறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

60 கரியத்பவால் அதாவது கரியத்தியரிம் ஆகிய காடுகளின் நகர், அரேபா ஆகிய இரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

61 பாலைவனத்தில் பெத்தரபா, மெத்தின்,

62 சக்கக்கா, நெப்சன், உப்புநகர், என்காதி ஆகிய ஆறு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

63 யெருசலேமில் குடியிருந்த ஜெபுசையரை யூதா புதல்வர் அழித்தொழிக்க முடியாது போயிற்று. ஆகையால் இன்று வரை ஜெபுசையர் யூதா புதல்வரோடு யெருசலேமில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகாரம் 16

1 சூசையின் புதல்வருக்குத் திருவுளச் சீட்டுப் படி கிடைத்த வீதமாவது: எரிக்கோவுக்கு எதிரேயிருக்கிற யோர்தானிலிருந்து யோர்தானுக்குக் கிழக்கேயுள்ள நீர்த்திடலுக்குச் சென்று, எரிக்கோ துவக்கிப் பேத்தல் மலை வரை பரவியிருந்த பாலைவனம் வழியாய்ப் போய்,

2 பேத்திலிருந்து லுசா நோக்கிச் சென்று, அதரோத்திலுள்ள அர்க்கி என்ற எல்லையைக் கடந்து,

3 மேற்கே எப்லேத்தின் எல்லைக்கும் பெத்தரோன் என்ற தாழ்வான நாட்டின் எல்லைக்கும் காஜேருக்கும் இறங்கிப் பெரிய கடல்வரை போய் முடியும்.

4 இதை சூசையின் புதல்வராகிய மனாசேயும் எபிராயீமும் சொந்தமாகக் கொண்டிருந்தனர்.

5 எபிராயீம் புதல்வருக்கு, அவர்களின் வம்ச வரிசைப்படி கிடைத்த உடைமையின் எல்லையாவது: கீழ்ப்புறத்தில் அதரோத்- ஆதார் துவக்கி மேல் பெத்தரோன் வரை போய், கடல்வரை செல்கின்றது;

6 மக்மேத்தாத் வடக்கு நோக்கிக் கீழ்த்திசையிலுள்ள தானாச்சேலோ என்ற இடத்தில் எல்லைகளைச் சுற்றிப்போய்க் கீழ்ப்புறத்திலிருந்து ஜனோவேயுக்குப் போய்,

7 அங்கிருந்து அதரோத்துக்கும் நவரத்தாவுக்கும் சென்று எரிக்கோவை அடைந்து யோர்தான் வரை போகின்றது;

8 பிறகு தப்புவாவை விட்டுக் கடலோரமாய் நாணல் என்ற பள்ளத்தாக்குச் சென்று உப்புக் கடலில் முடியும். எபிராயீம் புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்ச வரிசைப்படி கிடைத்த சொத்து அதுவே.

9 ஆனால், மனாசேயின் புதல்வர்களது காணியாட்சியிலிருந்த நகர்களும் அவற்றின் ஊர்களும் அவர்கள் கையிலிருந்து எடுக்கப்பட்டு எபிராயீமின் புதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டன.

10 எபிராயீமின் சந்ததியார் காசேரில் குடியிருந்த கானானையர்களை கானானையர் எபிராயீம் சந்ததியார் மத்தியில் இன்று வரை குடியிருந்து கப்பம் கட்டி வருகிறார்கள்.

அதிகாரம் 17

1 மனாசே கோத்திரத்துக்கும் ஒரு பங்கு கிடைத்தது. ஏனெனில், அவன் சூசைக்குத் தலைப்பிள்ளை. மனாசேயின் மூத்த மகனும் கலாத்தின் தந்தையுமான மாக்கீருக்குக் காலாத்தும் பாசானும் உடைமையாய் இருந்தான். அவன் ஒரு படைவீரன்.

2 மனாசேயின் மற்றப் புதல்வர்களாகிய அபியேசரின் புதல்வர்களுக்கும் எலேக்கின் புதல்வர்களுக்கும் எஸ்ரியேலின் புதல்வர்களுக்கும் செக்கேமின் புதல்வர்களுக்கும் ஏப்பரின் புதல்வர்களுக்கும் சேமிதாவின் புதல்வர்களுக்கும் அவரவருடைய வம்ச முறைப்படி பங்கு கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே இவர்களே சூசையின் மகனான மனாசேயின் ஆண் மக்களாவர்.

3 ஆனால் மனாசேயின் மகன் மாக்கிருக்குப் பிறந்த காலாதின் புதல்வனான எப்பரின் மகன் சல்பாத்துக்குப் புதல்வர்களே இல்லை. புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாலா, நோவா, ஏகிலா, மெல்கா, தெர்சா, என்பன அவர்களின் பெயர்களாம்.

4 அவர்கள் குருவாகிய எலெயசாருக்கும் நூனின் மகன் யோசுவாவுக்கும் மக்கட் தலைவர்களுக்கும் முன்பாக வந்து, "எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்கும் சொத்துக் கொடுக்கவேண்டும் என்று மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருக்கிறார்" என்றனர். (யோசுவா) ஆண்டவருடைய கட்டளைக்கிணங்க அவர்களுக்குச் சொத்து கொடுத்தார்.

5 ஆகையால், யோர்தானுக்கு அப்புறத்திலிருக்கும் காலாத் பாசான் என்ற நாடுகளைத் தவிர மனாசேய்க்குத் திருவுளச் சீட்டு விழுந்த படி பத்துப் பங்குகள் கிடைத்தன.

6 ஏனெனில், மனாசேயின் புதல்வியர் அவனுடைய புதல்வர்களுக்குள் சொத்து பெற்றனர். ஆனால், காலாத் நாடு மனாசேயின் மற்றப் புதல்வர்களுக்கு விழுந்த திருவுளச் சீட்டின்படி கிடைத்தது.

7 ஆகையால் மனாசேயின் எல்லை ஆசேர் துவக்கிச் சிக்கேமுக்கு எதிரிலிருக்கிற மக்மேத்தாத் வரை சென்று அங்கிருந்து வடக்கே திரும்பித் தப்புவா ஊற்று என்ற ஊருக்குச் செல்கின்றது.

8 உண்மையில் தப்புவாவின் நாடு மனாசேய்க்குக் கிடைத்தது. தப்புவா என்கிற ஊரோ எபிராயீம் புதல்வரின் கைவசமாயிருந்தது.

9 பிறகு நாணல் பள்ளத்தாக்கின் எல்லை மனாசேயின் நகர்களின் நடுவேயுள்ள எபிராயீம் நகர்களுக்கு அடுத்த ஆற்றுக்குத் தென்திசையில் இறங்கிப் போகின்றது. மனாசேயின் எல்லையோ ஆற்றுக்கு வடக்கேயிருந்து கடல் வரைச் செல்லும்.

10 இவ்வாறு தென்னாடு எபிராயீமுக்குச் சொந்தம், வடநாடு மனாசேய்க்குச் சொந்தம். இரண்டுக்கும் கடலே இறுதி எல்லை. அவ்விரண்டும் கிழக்கே போனால் இசாக்காரின் கோத்திரத்தாரோடும், வடக்கே போனால் ஆசேர் கோத்திரத்தாரோடும் கூடிச் சேரும்.

11 இசாக்காரிலும் ஆசேரிலும் இருந்த மனாசேயின் உடைமையாவது: பெத்சானும் அதைச் சார்ந்த ஊர்களும், ஜெபிலாமும் அதன் ஊர்களும், தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அவர்களின் ஊர்களும், மகெத்தோவின் குடிகளும் அவர்களின் சிற்றூர்களும், நோப்பேத் நகரின் மூன்றில் ஒரு பகுதியும் ஆகும்.

12 மனாசேயின் புதல்வர் அந்நகர்களை அழிக்க முடியவில்லை. கானானையரோ அவர்களுடைய நாட்டில் குடியேறத் தொடங்கினர்.

13 இஸ்ராயேல் மக்கள் வலிமை பெற்ற பின்னரும் கானானையரைத் தங்களுக்குக் கப்பம் கட்டும் படி செய்தார்களேயொழிய அவர்களைக் கொன்றொழித்து விடவேயில்லை.

14 சூசையின், புதல்வர் யோசுவாவை நோக்கி, "நாங்கள் பலுகிப் பெருகி ஆண்டவரால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களாய் இருக்க, நீர் எங்களுக்குச் சொந்தமாக ஒரே ஒரு பங்கையும் ஒரே வீதத்தையும் கொடுத்துள்ளது. ஏன்?" என்றனர்.

15 அதற்கு யோசுவா "நீங்கள் பலுகிப் பெருகியிருப்பதாலும், உங்களுக்குரிய எபிராயீம் மலைநாட்டில் நீங்கள் நெருங்கி வாழ்ந்து வருவதாலும், பெரேசையர், இரபாயீமர் வாழும் காட்டுப் பகுதியில் மரங்களை வெட்டி விட்டு உங்களுக்கு இடம் தேடிக்கொள்ளுங்கள்" என்றார்.

16 அதற்கு சூசையின் புதல்வர், "மலைகளுக்கு எப்படிப் போகக்கூடும்? சமவெளியிலிருக்கிற பெத்தாசினிலும் அதன் ஊர்களிலும் பள்ளத்தாக்கின் நடுவே இருக்கிற ஜெஸ்ராயேலிலும் குடியிருக்கும் கானானையர் இருப்பாயுதங்களுடன் தேர்களைப் பயன்படுத்தி வருகிறார்களே" என்றனர்.

17 யோசுவா சூசையுடைய வம்சத்தாராகிய எபிராயீரையும் மனாசேயரையும் நோக்கி, "நீங்கள் பலுகிப் பெருகிவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க வலிமையும் உண்டு. ஒரு பங்கு உங்களுக்குப் போதாதாதலால், நீங்கள் மலை நாட்டுக்குப் போய் மரங்களை வெட்டி நீங்கள் தங்குவதற்கு இடம் தேடிக் கொள்ள வேண்டும். கானானையர் வலிமையுள்ளவர்களாய் இருக்கிறார்கள்; அவர்களுக்கு இருப்பாயுதம் பொருத்தப்பட்ட தேர்களும் உண்டு என்று சொல்லுகிறீர்களே; இருந்த போதிலும் நீங்கள் அவர்களை அங்கிருந்து துரத்தி விட்டால், அவர்கள் நாட்டையும், அதன் அண்டை நாடுகளையும் நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளலாம்" என்று மறுமொழி சொன்னார்.

அதிகாரம் 18

1 இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் சீலோவில் ஒன்று கூடி, அங்கே சாட்சியக் கூடாரத்தை நிறுவினார்கள். நாடு அவர்கள் கைவசமாயிற்று.

2 இஸ்ராயேல் மக்களுள் தங்கள் பங்கை இன்னும் பெறாத ஏழு கோத்திரங்கள் இருந்தன.

3 யோசுவா அவர்களை நோக்கி, "உங்கள் முன்னோரின் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்கு அளித்துள்ள நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளாது இன்னும் எவ்வளவு காலம் தான் வீணில் கழிப்பீர்கள்?

4 உங்கள் ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மும்மூன்று மனிதரைத் தேர்ந்து கொள்ளுங்கள். நான் அவர்களை அனுப்புவேன். அவர்கள் புறப்பட்டுப்போய் அந்நாட்டைச் சுற்றிப்பார்த்த பின் அதை ஒவ்வொரு கோத்திரத்து மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பகிர்ந்து எழுதி, கண்டதையும் கேட்டதையும் என்னிடம் விவரமாய் எடுத்துச் சொல்வார்கள்.

5 நாட்டை ஏழு பாகமாக உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ளுங்கள். யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், சூசை வம்சத்தார் வடக்கே இருக்கிற தங்கள் எல்லையிலும் இருக்க,

6 அவர்களின் நடுவே இருக்கிற நாட்டை ஏழு பங்காக்கிய பின்பு நீங்கள் இங்கே என்னிடம் வாருங்கள். அப்பொழுது நான் உங்கள் ஆண்டவராகிய கடவுள் திருமுன் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன்.

7 லேவியருக்கு உங்கள் நடுவே பங்கு கிடையாது. ஏனெனில் ஆண்டவருடைய குருக்களாய் இருப்பதே அவர்களுடைய சொத்து. காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக்கோத்திரமும் யோர்தானுக்கு அப்பக்கத்திலுள்ள கீழ்ப்புறத்திலே ஆண்டவருடைய அடியானான மோயீசன் தங்களுக்குக் கொடுத்திருந்த தங்கள் பங்கைப் பெற்றாயிற்று" என்றார்.

8 அப்பொழுது அம்மனிதர் எழுந்து புறப்படத் தயாராயிருக்கையில், யோசுவா அவர்களை நோக்கி, "நீங்கள் போய் நாட்டைச் சுற்றிப் பார்த்து அதன் விவரத்தை எழுதிக் கொண்டு என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் சீலோவில் ஆண்டவர் திருமுன் உங்களுக்காகத் திருவுளச் சீட்டுப் போடுவேன்" என்று சொல்லி அனுப்பினார்.

9 அம்மனிதர் போய் அந்நாட்டைக் கவனமாய்ச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர், அதனை ஏழு பங்காக்கி ஒரு நூலில் எழுதிக்கொண்டு சீலோவிலுள்ள பாளையத்தில் இருந்த யோசுவாவிடம் திரும்பி வந்தனர்.

10 அப்பொழுது யோசுவா சீலோவிலேயே ஆண்டவர் திருமுன் திருவுளச்சீட்டுப் போட்டு, இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டை ஏழு பங்காகப் பிரித்துக் கொடுத்தார்.

11 பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படியே முதல் சீட்டு விழுந்தது. அவர்கள் சொந்தமாக்கிக் கொண்ட நாடு, யூதா புதல்வருக்கும் சூசையின் புதல்வருக்கும் நடுவில் இருந்தது.

12 அவர்களுடைய வட எல்லை யோர்தானிலிருந்து புறப்பட்டு எரிக்கோவுக்குச் சமீபமாக வடபக்கமாய்ச் சென்று பிறகு மேற்கே மலையேறிப் பேத்தாவென் பாலைவனத்தை அடைந்து,

13 அங்கிருந்து பேத்தல் எனும் லூசாவுக்கு வந்து கீழே பெத்தானுக்குத் தெற்கே இருக்கிற மலையில் அமைந்திருக்கும் அதரோத் ஆதாருக்கு இறங்கிப் போகிறது.

14 அவ்விடமிருந்து எல்லை பெத்தரோனை நோக்கும் ஆபிரிக்குசுக்கு எதிரே இருக்கிற மலைக்குத் தென்புறத்திலே கடலை நோக்கித் திரும்பும்; பிறகு கரியத்பால் என்ற கரியாத்தியாரீமாகிய யூதா புதல்வரின் நகர் அருகே போய் முடியும். இது மேற்கு நோக்கிக் கடல் ஓரமாக அமைந்துள்ளது.

15 தென் எல்லை கரியாத்தியாரீம் அருகிலுலிருந்து கடலை நோக்கிப் போகும். அங்கிருந்து நெப்துவா என்ற நீரூற்றுக்குச் செல்லும்.

16 அங்கிருந்து என்னோம் புதல்வரின் பள்ளத்தாக்கை நோக்கும் மலைப்பாகத்திற்கு இறங்கும். அது வட திசையில் இராபாயீம் பள்ளத்தாக்கின் கடைசியில் இருக்கும். அங்கிருந்து மேற்கே திரும்பி தெற்கே ஜெபுசையருக்குப் பக்கமான கேயென்னம் என்ற என்னோம் பள்ளத்தாக்கிலே போய் ரோகேல் என்ற நீரூற்றிற்கு வந்து சேரும்.

17 அங்கிருந்து வடக்கே போய்ச் சூரிய நீரூற்று எனப்படும் என்செமஸ் ஊருக்குச் சென்று,

18 அதொமிம் ஏற்றத்துக்கு எதிரே இருக்கும் மேடுகளுக்குப் போய் அபன்போவன் என்ற ரூபனின் மகன் போவனின் பாறைக்கு வந்து வடபக்கமாய் நாட்டுப்புறமாகிய சமவெளிகளிலே வந்து சேரும்.

19 பிறகு எல்லை பெத்தாகிலாவுக்கு வடக்கே சென்று யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கேயுள்ள உப்புக் கடலின் வடமுனையோடு முடியும்.

20 கிழக்கு எல்லை யோர்தானேயாம். இது பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான காணியாட்சி

21 பெஞ்சமினுடைய நகர்கள் வருமாறு எரிக்கோ, பெத்தாகிலா, காசீஸ் பள்ளத்தாக்கு,

22 பெத்தராபா, சமராயீன், பேத்தல்,

23 ஆவிம், ஆப்பரா, ஒப்பேரா,

24 வில்லா எமனா, ஓப்னி, காபே என்ற பன்னிரு நகர்களும் அவற்றின் ஊர்களும்.

25 காபாவோன், இரமா,

26 பேரோத், மெஸ்பே, கபாரா,

27 அமோசா, ரேக்கம், ஜாரெபல், தாரேலா,

28 சேலா, எலேப், ஜெபுஸ், அதாவது யெருசலேம், கபாத், கரியாத் என்ற பதினான்கு நகர்களும் அவற்றின் ஊர்களுமாம். பெஞ்சமின் புதல்வருக்கு அவர்களின் வம்சங்களின்படி கிடைத்த பங்கு இதுவே.

அதிகாரம் 19

1 இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது. அவனுடைய கோத்திரத்திற்கு அதன் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாவது

2 யூதா புதல்வரது காணியாட்சியின் நடுவே அமைந்திருக்கும் பெற்சபே, சபே, மேலதா,

3 ஆஸர்சுவல், பாலா, ஆசம்

4 எல்தொலாத், பேத்துல், அற்மா, சிலெக்,

5 பெத்மார்க்சாபத், ஆஸர் சூசா,

6 பெத்லேபாவோத், சரோகன் என்ற பதின்மூன்று நகர்களும் அவற்றைச் சார்ந்த ஊர்களும்

7 ஆயின், ரெம்மோன், ஆத்தார், ஆசான் என்ற நான்கு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும்

8 மேற்சொன்ன நகர்களைச் சுற்றிலும் தெற்கே இருக்கிற பாலாவாத்- பேவர்- இராமாத் வரையுள்ள எல்லாச் சிற்றூர்களும். இவை சிமியோன் புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.

9 யூதா புதல்வரின் பங்கு வீதம் அவர்களுக்கு மிகப் பெரியதாயிருந்ததால், மேற்சொன்ன நகர்களும் ஊர்களும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப் பெற்றன. எனவே, சிமியோன் புதல்வர் யூதா புதல்வர் நடுவே காணியாட்சி பெற்றனர்.

10 மூன்றாம் சீட்டு சபுலோன் புதல்வருக்கு விழுந்தது. அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு வீதத்தின் எல்லை சரீத் வரை நீண்டிருந்தது.

11 அது கடலும் மேரலாவும் தொடங்கித் தெபசேத்துக்குப் போய் ஜெக்கொனாவுக்கு எதிரே ஓடும் ஆறு வரை போகும்.

12 சாபேதிலிருந்து கிழக்கே கெசலேத்தாபோரின் எல்லை வரை திரும்பி, தாபரத்துக்குப் போய், ஜப்பேவுக்கு ஏறி,

13 அங்கிருந்து கெத்தப்பருக்கும் தக்கசீனுக்கும் கீழ்ப்புறத்தைக் கடந்து, ரெம்மோன், அம்தார், நோவா என்ற ஊர்களுக்குப் போய், அனத்தோனின் வடபக்கத்தைச் சுற்றிவந்து,

14 ஜெப்தாயேல் பள்ளத்தாக்கிலும்,

15 காத்தேதிலும் நவாலோலிலும் செமெரோனிலும் ஜெரலாவிலும் பெத்லேகேமிலும் முடியும். அப்பன்னிரு நகர்களும் அவற்றை அடுத்த ஊர்களும், சிற்றூர்களும்,

16 சபுலோன் புதல்வருக்கு அவர்கள் வம்சங்களின்படி சொந்தமாயின.

17 நான்காம் சீட்டு இசாக்காருக்கு அவன் வம்சங்களின்படி விழுந்தது.

18 அவர்களின் காணியாட்சியாவது: ஜெஸ்ராயேல்,

19 கசலோத், சூனம், அப்பராயீம், சேகோன்,

20 அனகரத், இராபோத், கேசியோன், ஆபேஸ்

21 இராமத், எங்கன்னிம், எங்கதா, பெத்பெசேஸ் முதலியன.

22 பிறகு, அவ்வெல்லை தாபோருக்கும் செகேசிமாவுக்கும் பெத்சமேசுக்கும் வந்து யோர்தானில் முடியும். அதற்குள் பதினாறு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும் உண்டு.

23 இந்நகர்களும் இவற்றை அடுத்த சிற்றூர்களும் இசாக்கார் புதல்வருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.

24 ஐந்தாம் சீட்டு ஆசேர் புதல்வரின் கோத்திரத்திற்கு அவரவர் வம்சங்களின்படி விழுந்தது.

25 அவர்களுக்குக் கிடைத்த எல்லையாவது:

26 அல்காத், காலீ, பேதன், அக்சப், எல்மலக், அமாத், மெசால் இவைகளே. பின்பு கடலருகே உள்ள கார்மேலுக்கும் சீகோருக்கும் லபனாத்துக்கும் சென்றது.

27 கிழக்கே பேத்தாகோனுக்குத் திரும்பி, வடக்கே சபுலோனுக்கும் ஜெப்தாயேலின் பள்ளத்தாக்குக்கும் போய், பெத்தெமெக்குக்கும், நேகியலுக்கும் வந்து,

28 காபுலின் இடப்புறத்திலேயும், அபிரானிலும் ரொகொபிலும் அமோனிலும் கானாவிலும் பெரிய சீதோனிலும் தொடங்கும்.

29 பிறகு அந்த எல்லை ஓர்மாவுக்குத் திரும்பி வந்து, அரண் சூழ்ந்த தீர்நகர், ஓசாநகர் வரையும் போகும். கடைசியில் அக்சிபா நாட்டில் அது கடலை அடையும்.

30 அதற்குள் அம்மா, ஆப்பேக், ரொகோப் முதலிய இருபத்திரண்டு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும் அடங்கியிருந்தன.

31 இந்நகர்களும் இவற்றை அடுத்த ஊர்களும் ஆசேர் புதல்வரின் கோத்திரத்திற்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.

32 ஆறாம் சீட்டு நெப்தலி புதல்வருக்கு விழுந்தது.

33 அவரவர் வம்சங்களின்படி, கிடைத்த எல்லைகளாவன: எலேப், சானானீமிலுள்ள எலோன், ஆதமி என்ற நேக்கேப், ஜெப்னாயேல் ஊர்கள் தொடங்கி லேக்கு வரை போய், யோர்தானில் வந்து முடியும்.

34 மேலும் அவ்வெல்லை ஆசனேத்தாபோர் நோக்கி மேற்கே திரும்பி, அங்கிருந்து உக்குக்காவுக்குச் சென்று, தெற்கே சபுலோனைக் கடந்து, மேற்கே ஆசேர் நடுவிலும், சூரியன் உதிக்கும் திசையில் யோர்தானின் பக்கத்தில் யூதா நடுவிலும் போகிறது.

35 அவர்களின் சிறந்த அரணுள்ள நகர்களாவன: அசேதிம், சேர்,

36 ஏமாத், ரெக்காத், கேனெரேத், எதெமா,

37 அரமா, அசோர், கேதெஸ், எதிராய், எனாசோர்,

38 ஜேரோன், மக்தலேல், ஓரேம், பெத்தனாத், பேத்சாமேஸ் என்ற பத்தொன்பது நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும்

39 மேற்சொன்ன நகர்களும் அவற்றையடுத்த சிற்றூர்களும் நெப்தலி கோத்திரத்துப் புதல்வர்களுக்கு அவரவர் வம்சங்களின்படி சொந்தமாகும்.

40 ஏழாம் சீட்டு தான் கோத்திரத்துப் புதல்வர்களுக்கு விழுந்தது. அவரவர் வம்சங்களின்படி,

41 கிடைத்த காணியாட்சியின் எல்லையாவது:

42 சாரா, எஸ்தாவோல், ஈர்சேமேஸ், அதாவது சூரியனின் நகர், செலபீன், ஐயலோன், ஜெத்தலா, ஏலோன், தெம்னா,

43 ஆக்கினேன், எல்தெக்கே, கெபெத்தோன்,

44 பலாத், யூத், பானே, பாரக்,

45 தெக்ரேமோன், மெஜார்க்கோன், அரேக்கோன்,

46 ஜொப்பனுக்கு எதிரான எல்லையுமே.

47 இந்த எல்லையோடு முடிந்தது. தானின் புதல்வர் எழுந்து புறப்பட்டுப் போய் லெசேம் நகருடன் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாளினால் கொன்று குவித்து அதைச் சொந்தமாக்கி அதில் குடியேறினர். லெசேமுக்குத் தங்கள் மூதாதையின் பெயரைச் சேர்த்து லெசேம்தான் என்று பெயரிட்டு அழைத்தனர்.

48 இந்நகர்களும் இவற்றைச் சேர்ந்த சிற்றூர்களும் தான் புதல்வர் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.

49 திருவுளச் சீட்டின் மூலம் வம்ச வரிசைப்படி ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நாட்டை பங்கிட்டு கொடுத்த பின்பு, இஸ்ராயேல் மக்கள் நூனின் மகன் யோசுவாவுக்குத் தம் நடுவில் ஒரு சொந்தக் காணியைக் கொடுத்தனர்.

50 எபிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த தம்னாத் சாரா என்ற இடமே அவர் பெற்றது. யோசுவா அதைக் கேட்டிருந்தார். ஆண்டவருடைய கட்டளைப்படி மக்களும் அதை அவருக்குக் கொடுத்தனர். அவர் அங்கு ஒரு நகரைக்கட்டி அதில் குடியேறினார்.

51 குருவான எலெயசாரும் நூனின் மகன் யோசுவாவும் இஸ்ராயேல் மக்களின் வம்சத் தலைவர்களும் கோத்திரப் பெருமக்களும், சீலோவிலிருந்து சாட்சிப் பேழை வாயிலிலே ஆண்டவர் திருமுன் திருவுளச் சீட்டின் மூலம் இஸ்ராயேல் மக்களின் கோத்திரங்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்த காணியாட்சிகள் இவைகளே.

அதிகாரம் 20

1 அக்காலத்தில் ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "நீ இஸ்ராயேல் மக்களிடம் சொல்ல வேண்டியதாவது:

2 நாம் மோயீசன் மூலம் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ள அடைக்கல நகர்களை நீங்கள் ஏற்படுத்த வேண்டும்.

3 ஏனெனில் யாரேனும் அறியாமல் மற்றொருவனைக் கொலை செய்திருந்தால், அவன் இரத்தப்பழி வாங்குபவனின் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ளுமாறு அவற்றில் அடைக்கலம் புகும்படியாகவே.

4 அந்நகர்களுள் ஒன்றில் தஞ்சம் அடைந்த ஒருவன் அந்நகர வாயிலில் நின்று கொண்டு அவ்வூர்ப் பெரியோர்களைப் பார்த்துத் தன் பேரில் குற்றம் இல்லை என்று எண்பிக்கக் கூடியவற்றையெல்லாம் சொன்ன பிறகு, அவர்கள் அவனை ஏற்றுக்கொண்டு நகரில் குடியிருக்க அவனுக்கு இடம் கொடுப்பார்கள்.

5 பிறகு இரத்தப் பழிவாங்குபவன் அவனைப் பின்தொடர்ந்து வந்தாலும், அவன் முன்பகை ஒன்றுமின்றி அறியாமல் அவனைக் கொன்றிருப்பதனால் அவனை இவன் கையில் ஒப்படைக்கக் கூடாது.

6 நீதிமன்றத்திற்கு முன் அவன் நின்று தனது செயலைத் தெளிவாய் விளக்கிச் சொல்லும் வரையும், அக்காலத்தின் பெரிய குரு இறக்கும் வரையும் அவன் அந்நகரிலே குடியிருக்கக்கடவான். பின்பு கொலை செய்தவன் தான் விட்டு வந்த தன் நகரில் நுழைந்து தன் வீட்டிற்குத் திரும்பி வரலாம்" என்று சொன்னார்.

7 அதன்படி அவர்கள் நெப்தலியின் மலைநாடான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எபிராயீம் மலை நாட்டிலுள்ள சிக்கேமையும், யூதாமலை நாட்டிலுள்ள எபிரோனாகிய கரியத்தர்பேயையும்;

8 யோர்தானுக்கு அக்கரையில் எரிக்கோவிற்குக் கிழக்கே ரூபன் கோத்திரத்திற்குச் சொந்தமானதும், பாலை வெளியிலுள்ளதுமான போசோரையும், காத் கோத்திரத்திற்குச் சொந்தமான கலவாத் நாட்டிலிருக்கும் இராமோத்தையும், மனாசேயிக்குச் சொந்தமான பாசான் நாட்டில் உள்ள கௌலோனையும் ஏற்படுத்தினார்கள்.

9 அறியாமல் ஒருவனைக் கொன்றவன் தன் நியாயங்களைப் பத்து பேர் முன்னிலையில் சொல்லும் வரை, இரத்தப்பழி வாங்கத் தேடுகிறவன் கையினாலே அவன் சாகாதபடி இஸ்ராயேல் மக்கள் யாவரும் அல்லது அவர்களின் நடுவே வாழும் அந்நியரும் ஓடித் தஞ்சமடைவதற்காகவே இந்நகர்கள் நியமிக்கப்பட்டன,

அதிகாரம் 21

1 அக்காலத்தில் லேவி கோத்திரத்து வம்சத் தலைவர்கள் குருவாகிய எலெயசாரிடமும் நூனின் மகன் யோசுவாவிடமும் இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு கோத்திரத்து வம்சத் தலைவர்களிடமும் சென்று,

2 கானான் நாட்டிலுள்ள சீலோவில் அவர்களை நோக்கி, "நாங்கள் வாழத் தகுந்த நகர்களையும், எங்கள் கால்நடைகளை வளர்க்கத் தகுந்த பேட்டைகளையும் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருக்கிறார்" என்றனர்.

3 ஆண்டவரின் கட்டளைக்கு இணங்க இஸ்ராயேல் மக்கள் தம் காணியாட்சியிலுள்ள நகர்களையும் அவற்றையடுத்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தனர்.

4 குருவாயிருந்த ஆரோனின் மக்களான காவாத் வம்சத்திற்குச் சீட்டு விழுந்தது. யூதா, சிமியோன், பெஞ்சமின் என்ற கோத்திரங்களிடமிருந்து பதின்மூன்று நகர்களும்,

5 காவாத்தின் ஏனைய புதல்வருக்கு எபிராயீம், தான் என்ற கோத்திரங்களிடமிருந்தும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திடமிருந்தும், பத்து நகர்களும் கொடுக்கப்பட்டன,

6 பின்பு கெற்சோன் புதல்வருக்குச் சீட்டு விழுந்தது. அதனால் இசாக்கார், ஆசேர், நெப்தலி மனாசேயின் பாதிக்கோத்திரமாகிய இவர்களின் காணியாட்சியிலிருந்து பதின்மூன்று நகர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டன.

7 மேராரி புதல்வருக்கு, அவரவர் வம்சங்களின்படியே ரூபன், காத், சபுலோன் முதலியவர்களின் காணியாட்சியிலிருந்து பன்னிரு நகர்கள் அளிக்கப்பட்டன,

8 இந்நகர்களையும் இவற்றை அடுத்த பேட்டைகளையும் இஸ்ராயேல் மக்கள், ஆண்டவர் மோயீசன் மூலம் கட்டளையிட்டிருந்த படியே. திருவுளச்சீட்டுப் போட்டு லேவியருக்குக் கொடுத்தனர்,

9 கீழ்வரும் நகர்களை யோசுவா அவர்களுக்கு அளித்தார், இவை யூதா, சிமியோன் என்ற கோத்திரத்துப் புதல்வருக்குச் சொந்தமாயிருந்தன,

10 அதாவது, முதல் சீட்டைப் பெற்றிருந்த காத் வம்சத்தாரும் லேவியின் வழி வந்தோருமான ஆரோன் புதல்வருக்கு:

11 யூதாவின் மலைநாட்டில் ஏனாக்கின் தந்தையுடைய கரியத்தர்பே என்ற நகரையும், அதன் பேட்டைகளையும் கொடுத்தார். இன்று அந்நகரின் பெயர் எபிரோன்.

12 ஆனால், நகரைச் சேர்ந்த நிலங்களையும் சிற்றூர்களையும் ஜெப்போனேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்.

13 ஆதலால் அடைக்கல நகராய் இருந்த எபிரோன் நகரையும், அதை அடுத்த பேட்டைகளையும் பெரிய குருவான ஆரோனின் புதல்வருக்குக் கொடுத்தார். லொப்னாம் நகர், அதை அடுத்த பேட்டைகள்,

14 ஜேத்தர், எஸ்தேமோ,

15 ஓலோன்,

16 தாபீர், ஐயின், ஜேத்தா, பெத்சமேஸ், அவற்றை அடுத்த பேட்டைகள் முதலியவற்றையும், மேற்சொன்ன இரு கோத்திரங்களின் நகர்கள் ஒன்பதையும் கொடுத்தார்,

17 பெஞ்சமின் கோத்திரத்தாருடைய காபாவோன், காபாயே, அனத்தோத்,

18 ஆல்மோன் ஆகிய நகர்கள் நான்கையும் அவற்றைச் சார்ந்த பேட்டைகளையும்,

19 மொத்தம் பதின்மூன்று நகர்களையும், அவற்றைச் சேர்ந்த பேட்டைகளையும் குருவாயிருந்த ஆரோனின் புதல்வருக்குக் கொடுத்தார்,

20 லேவி கோத்திரத்துக்குக் காத் புதல்வரைச் சேர்ந்த மீதியான வம்சங்களுக்குப் பங்காகத் தரப்பட்ட நகர்களாவன:

21 எபிராயீம் கோத்திரத்திலுள்ள அடைக்கல நகரங்களாவன: எபிராயீம் மலைநாட்டிலுள்ள சிக்கேம் நகரும் அதைச் சேர்ந்த பேட்டைகளும்,

22 காஜேர், கிப்சாயீம், பேத்தரோன் என்ற நகர்களும் அவற்றை அடுத்த பேட்டைகளுமாக நான்கு நகர்களாம்.

23 தான் கோத்திரத்து வீதத்திலே, ஏல்தேக்கோ, கபத்தோன்,

24 அயலோன் கெத்ரேம்மோன் என்ற நான்கு நகர்களும், அவற்றை அடுத்த பேட்டைகளுமாம்.

25 மனாசேயின் கோத்திரத்துக் காணியாட்சியில் பேட்டைகள் உட்படத் தானாக், கெத்ரேம்மோன் ஆகிய இரு நகர்களுமாம்.

26 மொத்தம் பேட்டைகளுடன் பத்து நகர்களே தாழ்ந்த நிலையிலிருந்த காத் புதல்வர்களுக்கு அளிக்கப்பட்டன.

27 லேவி கோத்திரத்துக் கெற்சோன் புதல்வர்களுக்கு மனாசேயின் பாதிக்கோத்திரத்தின் பங்கிலே பாசானிலுள்ள அடைக்கல நகரான கௌலோனும் பொஸ்ராமுமாகிய நகர்கள் இரண்டும், அவற்றைச் சேர்ந்த பேட்டைகளும்,

28 இசாக்காரின் வீதத்திலே கேசியோன், தாபேரேத், ஜாரமொத்,

29 எங்கனிம் ஆகிய நகர்கள் நான்கும் அவற்றின் பேட்டைகளும்,

30 ஆசேரின் காணியாட்சியிலே மசால், அப்தோன், எல்காத்,

31 ரோகோப் ஆகிய நான்கு நகர்களும் அவற்றின் பேட்டைகளும்,

32 நெப்தலியின் சொந்த நாட்டிலே கலிலேயாவிலுள்ள கேதேஸ் என்ற அடைக்கல நகர், ஆமோத்தோர், கர்த்தான் ஆகிய நான்கு நகர்களும் அவற்றின் பேட்டைகளும் கொடுக்கப்பட்டன,

33 மொத்தம், பேட்டைகள் கொண்ட பதின்மூன்று நகர்கள் கேற்சோனின் வம்சங்களுக்குக் கொடுக்கப்பட்டன.

34 மேலும், யோசுவா தாழ்நிலையிலிருந்த லேவியராகிய மேராரி புதல்வரின் வம்சங்களுக்கு அவரவர் குடும்ப வரிசைப்படி சபுலோனின் வீதத்திலுள்ள நான்கு நகர்களைக் கொடுத்தார். அதாவது: ஜெக்னாம்,

35 கர்த்தா, தம்னா, நாவாலோன் என்பனவும், அவற்றை அடுத்த பேட்டைகளுமாம்.

36 மேலும் ரூபன் கோத்திரத்துக்குக் காணியாட்சியைச் சேர்ந்ததும் யோர்தானுக்கு அப்புறத்தில் எரிக்கோவுக்கு எதிரில் உள்ள பாலைவனத்திலிருந்த அடைக்கல நகருமான பொசோருடன். மீசோர். யாசேர். எத்சன். மேபாத் என்ற நான்கு நகர்களையும். அவற்றை அடுத்த பேட்டைகளையும்.

37 காத்கோத்திரத்து வீதத்திலே காலாதிலுள்ள அடைக்கல நகர்களாகிய இராமோத், மனாயீம், ஏசெபோன், யாசர் என்ற நான்கு நகர்களையும் அவற்றை அடுத்த பேட்டைகளையும் கொடுத்தார்,

38 மேராரியின் புதல்வர்கள் தம் குடும்பப்படியும், தம் வீட்டு வரிசைப்படியும் மொத்தம் பதின்மூன்று நகர்களைப் பெற்றனர்,

39 இவ்வாறு லேவியர்கள் இஸ்ராயேல் மக்களுடைய காணியாட்சியின் நடுவிலே பெற்றுக் கொண்ட நகர்களின் மொத்த எண்ணிக்கை நாற்பத்தெட்டு.

40 இவற்றைச் சேர்ந்த ஊர்களும்கூட அவர்களுக்குக் கிடைத்தன.

41 இவ்விதமாய் ஆண்டவர் 'இஸ்ராயேலுக்குக் கொடுப்போம்' என்று அவர்களுடைய முன்னோருக்கு வாக்களித்திருந்த நாட்டையெல்லாம் கொடுத்தார். அவர்கள் அதைச் சொந்தமாக்கிக் கொண்டு அவற்றில் வாழ்ந்தனர்.

42 மேலும். ஆண்டவரின் இரக்கப் பெருக்கால் அவர்களைச் சுற்றிலுமுள்ள நாடுகளோடு போரின்றி அமைதியாய் வாழ்ந்து வந்தனர். அவர்களின் எதிரிகளிலே எவனும் அவர்களை எதிர்த்து நிற்கத் துணியவில்லை. அவர்கள் எலலாரும் இஸ்ராயேலின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழ்ந்தனர்.

43 'இஸ்ராயேலுக்குக் கொடுப்போம்' என்று ஆண்டவர் கொடுத்திருந்த வாக்குகளில் ஒன்றும் தவறாது நிறைவேறிற்று.

அதிகாரம் 22

1 அப்பொழுது யோசுவா ரூபானியர்களையும் காதியர்களையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் அழைத்து, அவர்களை நோக்கி,

2 ஆண்டவருடைய அடியாரான மோயீசன் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றையெல்லாம் நீங்கள் செய்து வந்துள்ளீர்கள். எனக்கும் எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து வந்துள்ளீர்கள்.

3 நீங்கள் இதுவரை வெகுநாளாய் உங்கள் சகோதரரைக் கைவிடாமல் எல்லாவற்றிலும் உங்கள் ஆண்டவராகிய கடவுளுடைய கட்டளைகளின்படி நடந்து வந்துள்ளீர்கள்.

4 இப்பொழுதோ உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு சொல்லியிருந்தபடி உங்கள் சகோதரருக்கு அமைதியையும் சமாதானத்தையும் ஈந்துள்ளார். ஆகையால், ஆண்டவருடைய அடியாரான மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குச் சொந்தமாகக் கொடுத்துள்ள நாட்டிலிருக்கும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள்.

5 ஆயினும், ஆண்டவராகிய கடவுளின் அடியாரான மோயீசன் உங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளைகளையும் சட்டங்களையும் உறுதியாய்க் கைக்கொண்டு நுணுக்கமாய் நிறைவேற்றுவதில் கவனமாயிருங்கள். அதாவது. நீங்கள் ஆண்டவர் பால் அன்புகூர்ந்து, அனைத்திலும் அவர் வழி நின்று. அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவரைச் சார்ந்து நின்று, உங்கள் முழு இதயத்தோடும், முழு மனத்தோடும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும்" என்றார்.

6 மேலும், யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார். அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போயினர்.

7 மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கு மோயீசன் பாசானில் காணியாட்சி கொடுத்திருந்தார்; மற்றப் பாதிக் கோத்திரத்தாருக்கு யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மேற்றிசை முகமாய், அவர்கள் சகோதரரின் நடுவில் காணியாட்சி கொடுத்திருந்தார். ஆசி கூறி அவர்களைக் கூடாரங்களுக்கு அனுப்பியபொழுது, யோசுவா அவர்களை நோக்கி,

8 நீங்கள் மிகுந்த செல்வத்தோடும் சொத்தோடும், வெள்ளி, பொன், செம்பு, இரும்பு, இன்னும் பற்பல ஆடைகளோடும் ஊருக்குத் திரும்பிப் போகிறீர்களே. எதிரிகளிடமிருந்து நீங்கள் கொள்ளையிட்ட பொருட்களை உங்கள் சகோதரரோடு நீங்கள் பங்கிட்டுக் கொள்ளுங்கள்" என்றார்.

9 அப்பொழுது ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டில் சீலோவிலிருந்த இஸ்ராயேல் மக்களை விட்டு ஆண்டவருடைய கட்டளைப்படி மோயீசன் மூலம் பெற்றிருந்த தம் சொந்த நாடான காலாத்துக்குப் போகப் புறப்பட்டனர்.

10 கானான் நாட்டிலிருக்கிற யோர்தானின் அணைக்கட்டுகளுக்கு வந்த போது அவர்கள் யோர்தானின் கரையிலே ஒரு மாபெரும் பீடத்தைக் கட்டி எழுப்பினார்கள்.

11 ரூபன் புதல்வர்களும் காத் புதல்வர்களும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் நாட்டிலிருக்கிற யோர்தானின் அணைக்கட்டுகளிலே இஸ்ராயேல் மக்களுக்கு எதிராக ஒரு பீடத்தைக் கட்டியிருந்ததைப் பற்றி உறுதியாக அறிந்தவுடன் இஸ்ராயேல் மக்கள்,

12 அவர்களை எதிர்த்துப் போர்புரியும்படி சீலோவில் ஒன்று கூடினர்.

13 ஆயினும் முதன் முதலில் தலைமைக் குருவான எலெயசாரின் மகன் பினேயெசையும்.

14 அவரோடு கோத்திரத்திற்கு ஒருவராகப் பத்துக் கோத்திரத் தலைவர்களையும் காலாத் நாட்டிலிருந்து அவர்களிடம் தூது அனுப்பினர்.

15 இவர்கள் கலாத் நாட்டிற்கு வந்து ரூபன் புதல்வர். காத் புதல்வர். மனாசேயின் பாதிக்கோத்திரத்தாராகிய அனைவரையும் நோக்கி,

16 ஆண்டவரின் மக்கள் உங்களுக்குச் சொல்லச் சொன்னதாவது: 'நீங்கள் சட்டத்தை இப்படி மீறி நடந்தது ஏன்? இறைவனுக்கு எதிராகப் பீடம் எழுப்பி இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் புறக்கணித்து அவரது வழிபாட்டினின்று தவறியது ஏன்?

17 நீங்கள் பெல்பேகோரில் புரிந்த தீச்செயல் போதாதா? மக்களில் பலர் மாண்ட பின்னும் அத்துரோகத்தின் மாசு இன்று வரை நம்மாட்டுளது. அது என்ன அற்பக் காரியமா?

18 நீங்கள் இன்று ஆண்டவரைப் புறக்கணித்துவிட்டதினால், அவர் நாளை இஸ்ராயேலின் சபையனைத்தின் மேலும் கடும் கோபம் கொள்வாரே!

19 உங்கள் காணியாட்சியான நாடு தீட்டுப்பட்ட நாடு என்று நீங்கள் எண்ணம் கொண்டிருந்தால், ஆண்டவருடைய பேழையுள்ள எங்கள் நாட்டிற்குத் திரும்பி வந்து எங்கள் நடுவே புதுக் காணியாட்சியைப் பெற்றுக் கொள்ளலாமே. நீங்கள் ஆண்டவரையும் எங்கள் தோழமையையும் விட்டு அகன்று போகாமல் நம் ஆண்டவராகிய கடவுளின் பலிபீடத்தையல்லாது நீங்கள் வேறொரு பீடத்தைக் கட்டவேண்டாம் என்று மட்டும் நாங்கள் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

20 ஜாரேயின் மகன் ஆக்கான் ஆண்டவருடைய கட்டளையை மீறினதினாலே இஸ்ராயேல் மக்கள் அனைவர்மேலும் ஆண்டவரின் கோபம் வரவில்லையா? அவன் ஒருவன் மட்டுமே தீச்செயல் புரிந்திருக்க, அவன் மட்டுமே மடிந்து போயிருந்தால் நலமாயிருந்திருக்குமே'" என்று சொன்னார்கள். அதைக் கேட்டு,

21 ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் இஸ்ராயேலின் தலைவர்களாகிய தூதுவர்களை நோக்கி,

22 மிக்க ஆற்றல் படைத்த ஆண்டவரான கடவுளுக்குத் தெரியும். தேவாதி தேவனாகிய அவர் அதை அறிந்திருக்கிறது போல் இஸ்ராயேலரும் அறிந்து கொள்ளட்டும். நாங்கள் கலகப் புத்தியினால் அப்பீடத்தைக் கட்டியிருந்தோமாகில் ஆண்டவர் எங்களைப் பாதுகாக்காமல் இவ்வேளையிலேயே தண்டிக்கக் கடவாராக.

23 நாங்கள் அந்தப் பீடத்தின்மேல் தகனப் பலிகளையாவது போசனப் பலிகளையாவது சமாதானப் பலிகளையாவது செலுத்துவதற்கு அதைக் கட்டியிருக்கிறோமேயானால் ஆண்டவர் எங்களைக் கணக்குக் கேட்கவும் தீர்ப்பிடவும் கடவாராக.

24 அப்படிப்பட்ட கருத்து எங்களுக்குத் துளியும் இல்லை. ஆனால், பிறகு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி, 'உங்களுக்கும் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கும் என்ன உறவு?

25 ரூபனின் புதல்வரே, காத் சந்ததியாரே, உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே, ஆண்டவர் யோர்தான் நதியை எல்லையாக வைத்திருக்கிறார். ஆதலால் ஆண்டவரிடத்தில் உங்களுக்குப் பங்கு இல்லை' என்று சொல்லி, எங்கள் பிள்ளைகள் ஆண்டவருக்கு அஞ்சி நடவாதபடி உங்கள் பிள்ளைகள் செய்தாலும் செய்வார்கள் என்று அஞ்சி, அதை நாங்கள் மனத்தில் கொண்டு,

26 எங்களுக்குள்ளே கலந்துபேசி, தகனப்பலி முதலிய பலிகளைக் செலுத்துவதற்கு அன்று;

27 ஆனால் ஆண்டவரிடத்தில் உங்களுக்குப் பங்கு இல்லை என்று உங்கள் சந்ததியார் பிறகு எங்கள் சந்ததியாருக்குச் சொல்லாதபடி நாங்கள் ஆண்டவரின் மேல் அன்புள்ளவர்களாய் இருக்கிறோம் என்றும் அவருக்குத் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தும் உரிமை எங்களுக்கு உண்டு என்றும், எங்களுக்கும் உங்களுக்கும் சாட்சியாய் இருக்க வேண்டும் என்றே நாங்கள் அப்பீடத்தைக் கட்டினோம்.

28 எப்போதாவது அவர்கள் அவ்விதமாகப் பேச நேரிட்டால், எங்கள் பிள்ளைகள் அவர்களை நோக்கி, 'இப்பீடம் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துவதற்கு அன்று; உங்களுக்கும் எங்களுக்கும் சாட்சியாய் இருப்பதற்காகவே, எங்கள் முன்னோரால் கட்டப்பட்டது' என்பார்கள்.

29 ஆண்டவருடைய பேழைக்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத் தவிர நாங்கள் தகனப் பலிகளையாவது போசனப்பலி முதலியவற்றையாவது ஒப்புக் கொடுக்க வேறொரு பீடத்தைக் கட்டுகிறதாயிருந்தால், அது ஆண்டவரைப் புறக்கணிப்பதும் அவர் அடிகளைப் பின்பற்றாமல் இருப்பதும் ஆகும். இப்படிப்பட்ட அக்கிரமம் எங்களைவிட்டு அகன்றிருப்பதாக; கடவுள் எங்களைக் காப்பாராக" என்று மறுமொழி சொன்னார்கள்.

30 ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் முன்சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது. குருவாயிருந்த பினேயெசும் அவரோடு தூது சென்றிருந்த கோத்திரத் தலைவர்களும் கோபம் தணிந்து மிகுந்த திருப்தியடைந்தனர்.

31 அப்பொழுது எலெயசாரின் மகனாகிய குரு பினேயெசு அவர்களை நோக்கி. "நீங்கள் இப்படிப்பட்ட கலகம் உண்டு பண்ணாது இஸ்ராயேல் மக்களை ஆண்டவரின் கோபத்திற்குத் தப்புவித்தபடியால் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறோம்" என்றார்.

32 பிறகு பினேயெசு ரூபன் புதல்வரையும் காத் புதல்வரையும் விட்டுத் தம்மோடு வந்திருந்த கோத்திரத் தலைவரோடு காலாத் நாட்டிலிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டிற்குத் திரும்பி வந்தார். பின்னர் இஸ்ராயேல் மக்களிடம் நடந்தவற்றைச் சொன்னார்.

33 அச்செய்தியைக் கேட்டவர் யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ராயேல் மக்கள் கடவுளை வாழ்த்தி. 'தங்கள் சகோதரரோடு போருக்குப் போவோம், அவர்கள் நாட்டை அழித்துப் போடுவோம்' என்ற பேச்சை விட்டு விட்டனர்.

34 மேலும், "ஆண்டவரே உண்மைக் கடவுள் என்பதற்கு அப்பீடம் எங்களுக்குச் சாட்சியாய் இருக்கும்" என்று சொல்லி ரூபன் புதல்வரும் காத் புதல்வரும் தாங்கள் கட்டியிருந்த பீடத்திற்கு 'எங்கள் சாட்சி' என்று பெயர் இட்டனர்.

அதிகாரம் 23

1 இஸ்ராயேலைச் சுற்றிலும் இருந்த நாடுகள் அனைத்தும் இஸ்ராயேலுக்கு அடிமைப்பட்டிருந்தமையால் ஆண்டவருடைய அருளால் நாட்டில் நெடுநாளாக அமைதி நிலவியது. அக்காலத்தில் முதிர்ந்த வயதினரான யோசுவா,

2 இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் பெரியோரையும் மக்கட் தலைவர்களையும் படைத் தலைவர்களையும் போதகர்களையும் அழைத்து அவர்களை நோக்கி, "நான் வயது முதிர்ந்த கிழவனாகிவிட்டேன்.

3 உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களைச் சுற்றிலுமுள்ள எல்லா நாடுகளுக்கும் செய்த யாவற்றையும் நீங்கள் கண்டீர்கள். அவரே உங்களுக்காகப் போரிட்டார்.

4 யோர்தானின் கீழ்ப்புறம் துவக்கிப் பெரிய கடல் வரை இருந்த பரந்த நாட்டையெல்லாம் அவர் சீட்டுப் போட்டு உங்களுக்குப் பங்கிட்டு கொடுத்தார். நீங்கள் இன்னும் வெல்ல வேண்டிய நாடுகள் பல உள.

5 ஆண்டவர் உங்கள் பார்வையிலிருந்து அவற்றை நீக்கிச் சிதறடிப்பார். ஆதலால் அவர் முன்பு உங்களுக்குச் சொன்னபடியே நீங்கள் அந்நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்கள்.

6 அதற்குள் பலமடையுங்கள். மோயீசனின் சட்ட நூலில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நீங்கள் கைக்கொண்டு. அவற்றினின்று சிறிதும் வழுவாது அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதில் உறுதியாயும் கவனமாயும் இருங்கள்.

7 உங்கள் நடுவில் வாழும் புறவினத்தார் மத்தியில் நீங்கள் புகுந்தபின், அவர்களுடைய தேவர்கள் மேல் ஆணையிடவும் அவர்களுக்குப் பணிபுரியவும், வழிபாடு செய்யவும் ஒருவேளை உங்களுக்குக் கெடுமதி வரும், எச்சரிக்கை!

8 இன்று வரை நீங்கள் செய்தது போல் உங்கள் ஆண்டவராகிய கடவுளை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள்.

9 அப்படிச் செய்தாலன்றோ ஆண்டவராகிய கடவுள் உங்கள் முன்னிலையில் மாபெரும் வலிமை படைத்த இப்புறவினத்தாரை அழித்தொழிப்பார். ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது.

10 உங்களில் ஒருவன் ஆயிரம் பேரைத் துரத்துவான். ஏனெனில், உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுக்குச் சொன்னபடி அவரே உங்களுக்காகப் போரிடுவார்.

11 எல்லாவற்றையும் விட உங்கள் ஆண்டவராகிய கடவுள்மேல் அன்பு கொள்வதில் மிகவும் கவனமாய் இருங்கள்.

12 ஒருவேளை நீங்கள் உங்கள் நடுவே வாழ்ந்து வரும் இப்புறவினத்தாரின் தப்பறைகளைப் பின்பற்றி அவர்களோடு மணவுறவோ நட்போ கொள்ளத் துணிந்தால்,

13 உங்கள் ஆண்டவராகிய கடவுள் இனி அப்புறவினத்தாரை உங்கள் முன்னிலையில் அழித்தொழிக்கமாட்டார் என்றும். அவரது பேரிரக்கத்தால் பெற்றுக் கொண்ட இச்சீரிய நாட்டிலிருந்து கடைசியில் நீங்கள் துரத்தப்பட்டுச் சிதறடிக்கப்படுவீர்கள் என்றும், அதற்கிடையில் அதே புறவினத்தார் உங்களுக்குக் கண்ணியாகவும் வலையாகவும், உங்கள் விலாக்களுக்கு ஆணியாகவும், கண்களில் பட்ட முட்களாகவும் இருப்பார்கள் என்றும் இப்பொழுதே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.

14 இதோ மனிதர் எல்லாரும் போகிற வழியே நான் இன்று போகிறேன். ஆண்டவர் உங்களுக்குத் தருவோம் என்று அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாவது நிறைவேறாமல் போகவில்லை என்பதை நீங்கள் முழுமனத்தோடு அறிந்துகொள்வீர்கள்.

15 எனவே, ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிகள் எல்லாம் தவறாது நிறைவேறி நல்லசெல்வம் எல்லாம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தனவோ, அப்படியே உங்கள் ஆண்டவராகிய கடவுள் உங்களுடன் செய்த உடன்படிக்கையை நீங்கள் மீறி அந்நிய தேவர்களுக்குப் பணிபுரிந்து தொழுது வருவீர்களேயாகில்.

16 உங்கள் மேல் அவரது கோபம் திடீரென வரும், அப்பொழுது உங்களுக்கு அவர் அளித்துள்ள இச்சீரிய நாட்டிலிருந்து நீங்கள் வெளியேற்றப்படும் வரை, முன்பு அவர் அச்சுறுத்தின தீச்செயல்கள் எல்லாம் உங்கள் மேல் வரச் செய்வார். இறுதியிலே அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள இச்சீரிய நாட்டிலிருந்து உங்களைத் துரத்திச் சிதறடிப்பார்" என்றார்.

அதிகாரம் 24

1 பின்பு யோசுவா இஸ்ராயேல் கோத்திரங்களை எல்லாம் சிக்கேமில் ஒன்றுகூட்டி, பொரியோர்களையும் மக்கட்தலைவர்களையும் நீதிபதிகளையும் போதகர்களையும் தம்பால் வரவழைத்தார்.

2 அவர்கள் ஆண்டவர் திருமுன் வந்து நின்றனர். அப்பொழுது அவர் எல்லா மக்களையும் நோக்கி "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் திருவாய் மலர்ந்து அருள்வதாவது: 'முன்னாளில் உங்கள் முன்னோராகிய ஆபிரகாமுக்கும் நாக்கோருக்கும் தந்தையான தாரே நதிக்கப்புறத்தில் குடியிருந்த போது அவர்கள் அந்நிய தேவர்களை வழிபட்டு வந்தனர்.

3 அப்படியிருக்கையில் நாம் மெசொப்பொத்தேமியாவின் எல்லைகளிலிருந்து உங்கள் தந்தையாகிய ஆபிரகாமை அழைத்து வந்தோம்; அவனைக் கானான் நாட்டில் கொண்டு சேர்த்து அவன் சந்ததியைப் பெருகச் செய்தோம்.

4 அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தோம். ஈசாக்குக்கு யாக்கோப்பையும் எசாவுவையும் அளித்தோம். இவர்களுள் எசாவுக்குச் செயீர் என்ற மலைநாட்டைச் சொந்தமாகக் கொடுத்தோம். யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.

5 பிறகு மோயீசனையும் ஆரோனையும் அனுப்பிப் பற்பல அடையாளங்களாலும் அதிசயங்களாலும் எகிப்தியரை வதைத்தோம்.

6 மறுபடியும் உங்களையும் உங்கள் முன்னோரையும் எகிப்திலிருந்து வெளியேற்றினோம். நீங்கள் கடற்கரைக்கு வந்த போது எகிப்தியர் தேர்களோடும் குதிரை வீரரோடும் உங்கள் முன்னோரைச் செங்கடல் வரை பின்தொடர்ந்தனர்.

7 அப்பொழுது இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட, அவர் கடலை எகிப்தியர் மேல் புரளச் செய்து தண்ணீரில் அவர்களை மூழ்கடித்தார். நாம் எகிப்தில் செய்தவற்றையெல்லாம் நீங்கள் கண்ணால் கண்டீர்கள்.

8 பின்பு வெகு நாள் பாலைவனத்தில் வாழ்ந்தீர்கள். அதன் பின் உங்களை யோர்தானுக்கு அப்புறத்தில் குடியிருந்த அமோறையரின் நாட்டிற்குக் கொண்டு வந்தோம். அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிடும் போதோ, நாம் அவர்களை உங்கள் கையில் ஒப்படைத்தோம். அவர்கள் நாட்டையும் நீங்கள் கைப்பற்றினீர்கள்: அவர்களையும் கொன்று குவித்தீர்கள்.

9 மோவாப் நாட்டு அரசனான செப்போரின் மகன் பாலாக் எழுந்து இஸ்ராயேலை எதிர்த்துப் போரிட்டு, உங்கள்மேல் சாபம் போட பெயோரின் மகன் பாலாமை அழைத்து அனுப்பி வைத்தான்.

10 ஆனால் நாம் அவனுக்குச் செவி கொடாது அவன் மூலமாய் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களை அவன் கைகளினின்று விடுவித்தோம்.

11 பின்பு நீங்கள் யோர்தானைக் கடந்து எரிக்கோவுக்கு வந்து சேர்ந்தீர்கள். எரிக்கோ நகரின் வீரர்களும் அமோறையர்களும் பெரேசையர்களும் கானானையர்களும் ஏத்தையர்களும் கெர்கேசையர்களும் ஏவையர்களும் ஜெபுசேயர்களும் உங்களுடன் போரிடத் தொடங்கினர். நாம் அவர்களை உங்கள் கையில் அகப்படச் செய்தோம்.

12 மேலும். நாம் உங்களுக்கு முன்பாகச் செல்லும்படி குளவிகளுக்கும் கட்டளையிட்டு. உங்கள் வாளாலும் அம்புகளாலுமன்றி. அவற்றைக் கொண்டே அவர்களையும் அமோறைய அரசர் இருவரையும் அவர் தம் இடத்தினின்று நாம் துரத்தி விட்டோம்.

13 அப்படியே நீங்கள் குடியிருப்பதற்கு நீங்கள் பண்படுத்தாத நாட்டையும் நீங்கள் கட்டாத நகர்களையும். நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் உங்களுக்குத் தந்தோம்.

14 ஆகையால் நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி உண்மையுடனும் முழு இதயத்துடனும் அவருக்குப் பணிபுரிந்து. உங்கள் முன்னோர் மெசோப்பொத்தேமியாவிலும் எகிப்திலும் தொழுது வந்த தேவர்களை அகற்றி விடுங்கள்.

15 ஆண்டவரைத் தொழுவது தீமையானது எனத் தென்பட்டால் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். மெசோப்பொத்தேமியாவில் உங்கள் முன்னோர் தொழுது வந்த தேவர்களை வழிபடுவதா அல்லது நீங்கள் வாழுகின்ற அமொறையர் நாட்டுத் தேவர்களை வழிபடுவதா என்பதில் எது உங்களுக்கு விருப்பமோ அதை இன்றே தீர்மானித்து விடுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றார்.

16 அப்போது மக்கள் மறுமொழியாக. "நாங்கள் ஆண்டவரை விட்டு விலகி அந்நிய தேவர்களைத் தொழுவது எங்களுக்குத் தூரமாய் இருப்பதாக.

17 நம்மையும் நம் முன்னோரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து கொணர்ந்தவரும், நம்முடைய கண்களுக்கு முன்பாக அத்தனை அதிசயங்களைச் செய்தவரும், நாம் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நம்மைப் பாதுகாத்தவரும். நாம் கடந்து போன எல்லா மக்களிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றினவரும் நம் ஆண்டவராகிய கடவுளேயன்றி வேறல்லர்.

18 இந்நாட்டில் குடியிருந்த அமோறையர் முதலான புறவினத்தார் அனைவரையும் நமக்கு முன்பாகத் துரத்திவிட்டவர் அவரன்றோ! அவரே நம் கடவுளாய் இருப்பதால் அவரையே வழிபடுவோம்" என்றனர்.

19 இதற்கு யோசுவா மக்களை நோக்கி. "ஆனால் நம் கடவுள் தூயவரும் வல்லவரும் தனியுரிமை பாராட்டுகிறவரும், உங்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் அறிந்திருக்கிறவருமாய் இருப்பதால் அவருக்கு நீங்கள் ஊழியம் செய்ய முடியாது.

20 முன்பு அவர் எத்தனையோ நன்மைகளை உங்களுக்குச் செய்திருந்தாலும் நீங்கள் அவரை கைவிட்டு அந்நிய தேவர்களைத் தொழுவீர்களேயாகில், அவர் மனம் மாறி உங்களைத் துன்புறுத்தி அடிமைப் படுத்துவார்" என்றார்.

21 மக்கள் யோசுவாவை நோக்கி, நீர் சொல்லுவது போல் ஒருபோதும் நிகழாதிருப்பதாக, ஏனெனில், நாங்கள் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றனர். யோசுவா மக்களைப் பார்த்து,

22 அவரைத் தொழும்படி நீங்கள் அவரை உங்கள் ஆண்டவராகத் தேர்ந்துகொண்டதற்கு நீஙகள் சாட்சி" என்றார். அதற்கு மக்கள், "ஆம், நாங்கள் சாட்சி" என்று சொன்னார்கள்.

23 அப்பொழுது யோசுவா, "அப்படியானால், உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களைக் கொண்டு வாருங்கள். இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் பால் உங்கள் இதயத்தைத் திருப்புங்கள்" என்றார்.

24 மக்கள் இதைக் கேட்டு, "நம் ஆண்டவராகிய கடவுளையே வழிபடுவோம்; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்" என்று கூறினர்.

25 அதன்படி யோசுவா அன்றே சிக்கேமில் மக்களுடன் உடன்படிக்கை செய்து அவர்களுக்கு ஆண்டவருடைய சட்டங்களையும் நீதிநெறிகளையும் எடுத்துக் கூறினர்.

26 மேலும் இவ்வார்த்தைகளை எல்லாம் கடவுளின் சட்ட நூலில் எழுதி வைத்தார் .பிறகு ஒரு பெரிய கல்லை எடுப்பித்துப் புனித இடத்திற்கு அருகிலிருந்த தெரெபிந்த் என்ற ஒரு மரத்தின் கீழே அதை நாட்டினார்.

27 பின்னர் எல்லா மக்களையும் பார்த்து, "இதோ இக்கல் ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியிருக்கிற எல்லா வார்த்தைகளையும் கேட்டிருக்கின்றது. நீங்கள் எப்போதாவது அவற்றை மறுத்து உங்கள் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகப் பொய் சொல்லத் துணிவீர்களேயானால், இக்கல் உங்கள் நடுவில் உண்மைக்குச் சான்றாக விளங்கும்" என்றார்.

28 பிறகு யோசுவா மக்களுக்கு விடைகொடுத்து அவர்களைத் தத்தம் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

29 இறுதியில் நூனின் மகனும் ஆண்டவரின் அடியானுமான யோசுவா தம் நூற்றிப்பத்தாவது வயதில் உயிர் நீத்தார்.

30 இஸ்ராயேலர் தாம்னாத்சாரேயில் அவருக்குச் சொந்தமான ஒரு நிலத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அது எபிராயீமின் மலைநாட்டில் காவாசு மலைக்கு வடக்கே உள்ளது.

31 யோசுவாவின் வாழ்நாள் முழுவதும். அவருக்குப்பின் நெடுநாள் வாழ்ந்து வந்தவர்களும் ஆண்டவர் இஸ்ராயேலுக்குச் செய்து வந்த அனைத்தையும் அறிந்திருந்தவர்களுமான மூப்பர்களின் வாழ்நாள் முழுவதும் இஸ்ராயேலர் ஆண்டவரை வழிபட்டு வந்தனர்.

32 இஸ்ராயேல் மக்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்த சூசையின் எலும்புகளைச் சிக்கேமிலே. யாக்கோபு சிக்கேமின் தந்தையாகிய கோமோருடைய புதல்வரின் கையில் நூறு ஆட்டுக் குட்டிகளைக் கொடுத்து வாங்கியிருந்த நிலத்தின் ஒரு பகுதியிலேயே புதைத்தனர். அந்நிலம் சூசையின் புதல்வருக்குச் சொந்தமாயிற்று.

33 ஆரோனின் மகன் எலெயசாரும் இறந்தார். அவரைக் கபாவாத்தில் அடக்கம் செய்தார்கள். அந்தக் கபாவாத் எலெயசாரின் மகன் பினேயெசுக்கு எபிராயீமின் மலையிலே கொடுக்கப்பட்டதாகும்.