எச்சரிப்பு வரும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

நியூயார்க் செய்தியில் (5 பெப்ருவரி 1994) சுத்திகரிப்புத் தண்டனையின் காரணம், மனுக்குலம் நித்தியரான இறைவனை, பரம பிதாவை மறந்து விட்டதுதான் என்று சொல்லப்படுகிறது: 

''ஜனங்கள் நித்திய பிதா இருக்கிறார் என்று அங்கீகரிக்க வேண்டும், அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவரிடம் மன்றாட வேண்டும், அவருடன் பேச வேண்டும், அவரை மறக்கக் கூடாது.''

கடவுளை மறக்கிற மனிதன் எளிதாக சாத்தானுக்கு அடிமையாகிறான். பாவங்களைக் கட்டிக் கொள்கிறான். அதனால் தண்டனைக்குரியவனாகிறான். 

உலகம் இன்று பெரும்பாலும் கடவுளை மறந்துவிட்டு, அவரை விட்டு அகன்று பாவத்தால் அவரைப் பகைக்கவும் எதிர்க்கவும் வந்து விட்டது.

இதே நிலையில் நினிவே என்ற பட்டணம் யோனாஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் இருந்தது. ஆண்டவர் யோனாஸிடம் நினிவே பட்டணத்தாருக்கு அவர்களது பாவங்களை எடுத்துக் கூறிப் போதிக்கும்படி அனுப்ப விரும்பினார். 

யோனாஸின் எச்சரிப்பைக் கேட்ட நினிவே மக்கள் அனைவரும் சாக்கு உடுத்தி, சாம்பலில் அமர்ந்து தவம் செய்து, கடவுளை இரந்து மன்றாடினார்கள். அவர்கள் மனம் திரும்பி, தம்மிடம் வந்ததைக் கண்ட ஆண்டவர் நினிவே பட்டணத்திற்கு யோனாஸினால் அறிவிக்கப் பட்டிருந்த தண்டனையை ரத்துச் செய்து விட்டார்.

இதையறிந்த யோனாஸ் மனம் உடைந்து தளர்ந்து உட்கார்ந்து விட்டார். அவர் இப்படிச் சொன்னார்:

"(இப்படித்தான் நடக்கும் என்று நான் இதை) முன்கூட்டியே சொன்னேனே! ஏனெனில் நீர் தயையுள்ளவராகவும், பொறுமையுள்ளவராகவும், மிகுந்த இரக்கமுள்ளவராகவும், பாவங்களை மன்னிக்கிறவராகவும் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும்” (யோனாஸ். 4:2).

யோனாஸின் இவ்வார்த்தைகளிலிருந்து கடவுளின் இரக்க தயாளத்தை நாம் நன்கு அறிகிறோம். நாம் மனந்திரும்பினால் போதும், அவர் மன்னித்து விடுவார். 

மேலும் பலபேர் மனந்திரும்பாவிட்டாலும் அவர்களுக்காகப் பரிகாரம் செய்வதற்கு வேறு சிலர் இருந்தாலும் போதும், தேவன் அந்தப் பலருடைய பாவங்களைப் பாராட்டாமல், இந்தச் சிலரின் பரிகாரங்களை ஏற்று மன்னிப்பார். இதை சோதோம் கொமோறா நிகழ்ச்சியில் நாம் காண்கிறோம். 

20 இலட்சம் ஜனங்களுக்குப் பதிலாகப் பத்தே பத்துப் பேர் நல்லவர்களாயிருந்து தங்கள் பரிகாரப் புண்ணியங்களை ஒப்புக்கொடுப்பார்களானால் அப்பட்டணங்களைக் காப் பாற்றுவீரா என்று ஆபிரகாம் ஆண்டவரிடம் கேட்டபோது ஆண்டவர் அதற்கு இசைந்தார்.

ஏறக்குறைய இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான் இவ்வுலகம் இன்று இருக்கிறது. 

அது பரிகாரம் செய்ய விரும்புவோரின் கையில் இருக்கின்றது. சேசு மரிய இருதயங்களுக்குப் பாவ நிந்தைப்பரிகாரம் செய்ய முன்வருகிறவர்கள் கொஞ்சப் பேராயிருந்தாலும், அவர்கள் முழு அன்புடனும், முழு கையளித்தலுடனும் தங்களை அர்ப்பணித்து, தங்களின் பாவங்களுக்காகவும், பாவ உலகத்திற்காகவும் பரிகாரங்கள் செய்ய முன்வருவார்களேயானால், இந்த சுத்திகரிக்கும் தண்டனையும் வேண்டியதில்லை, அதன் எச்சரிப்பும் தேவையில்லை.

ஆகவே, தண்டனையின் எச்சரிப்புக்குக் காத்திராமல் உடனடியாக நாம் பரிகாரம் செய்வதில் ஈடுபடுவோம். 

சேசு மிகவும் விரும்பி அழுத்திக் கேட்கிற மாதாவின் மாசற்ற இருதய பரிகார பக்தியை நாம் கைக்கொள்வோம். இன்று நாளை என்று காத்திராமல் இன்றே இப்பொழுதே பரிகார பக்தியில் நம்மை ஈடுபடுத்துவோம். 

இந்நேர முதல் நம் நினைவு, வாக்கு, செயல், துன்பம், நோவு அனைத்தையும் பரிகார காணிக்கையாக மாதாவிடம் கொடுப்போம். 

அன்புடனும், அளவில்லா சிநேகத்துடனும் சேசுவையும் மாதாவையும் நேசிப்போம். ஏனென்றால் அன்பே சிறந்த பரிகாரம்.