உன்னத சங்கீதம்

அதிகாரம் 01

1 தலைமகள்: தம் வாயின் முத்தங்களால் அவர் என்னை முத்தமிடுவாராக! ஏனெனில் உம்முடைய காதல் திராட்சை இரசத்திலும் இனிமை மிக்கது

2 உம்முடைய பரிமளத்தின் மணம் இனிமையானது; உமது பெயர் ஊற்றப்பெற்ற தைலம்; ஆதலால் கன்னிப் பெண்கள் உம் மேல் அன்புகூர்கின்றனர்.

3 என்னை உம் பின்னால் கவர்ந்திழும், ஓடிடுவோம்; அரசர் என்னைத் தம் அறைகளுக்குள் கூட்டிச் சென்றார்; உம்மில் நாங்கள் களிகூர்ந்து அக்களிப்போம்; திராட்சை இரசத்தினும் மேலாய் உம் காதலைப் பாடிடுவோம்; உம்மேல் பலர் அன்பு கொள்வது சரியே.

4 முதற் கவிதை: தலைமகள்: யெருசலேமின் மங்கையரே, கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலமோனின் எழினிகளைப் போலவும் நான் கறுப்பாயினும் கட்டழகியே.

5 நான் கறுப்பாயிருக்கிறே னென்பதைக் கவனிக்காதீர்கள்; வெயிலால் தான் என் முகம் கன்றிப் போனது; என் தாயின் புதல்வர்கள் என் மேல் சினங் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்; ஆனால் என் சொந்தத் தோட்டத்தை நான் காக்கவில்லை!

6 என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே, உமது மந்தையை நீர் எங்கே மேய்க்கிறீர்? நண்பகலில் எங்கே அடையப் போடுகிறீர்? உம்முடைய தோழர்களின் மந்தைகளைப் பின்தொடர்ந்து நான் அலைந்து திரியாதபடி எனக்குத் தெரியப்படுத்தும்.

7 பாடகர்க்குழு: பெண்களுள் பேரழகியே, உனக்குத் தெரியாதாயின், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்து போய் இடையர்களின் கூடாரங்களுக்கு அருகிலே உன் ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடுக!

8 தலைமகன்: என் அன்பே, பாரவோன் தேர்களில் பூட்டிய புரவிக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.

9 உன்னுடைய கன்னங்கள் அணிகலன்களாலும், உன் கழுத்து ஆரங்களாலும் அழகு கொழிக்கின்றன.

10 வெள்ளி பதிக்கப்பட்ட பொன்னணிகளை நாங்கள் உனக்குச் செய்திடுவோம்.

11 அரசர் தம் மஞ்சத்தில் அமர்ந்திருக்கையில், என் பரிமளத் தைலம் நறுமணம் பரப்புகிறது;

12 என் காதலர் எனக்கு என் கொங்கைகளுக்கிடையில் தங்கும் வெள்ளைப்போள முடிப்பாவார்;

13 என் காதலர் எனக்கு எங்காதி திராட்சைத் தோட்டங்களில் மலர்ந்த மருதோன்றி மலர்க்கொத் தாவார்.

14 என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன்னுடைய கண்களோ வெண் புறாக்கள்.

15 என் காதலரே, நீர் எத்துணை அழகுள்ளவர்! எத்துணை இனிமை வாய்ந்தவர்! நமது படுக்கை மலர்ப் படுக்கை.

16 நமது வீட்டின் விட்டங்கள் கேதுரு மரங்களே, நம்முடைய மச்சுகள் தேவதாரு மரங்களாம்.

அதிகாரம் 02

1 சாரோனில் பூத்த மலர் நான், பள்ளத்தாக்குகளில் தோன்றிய லீலிமலர்.

2 முட்களின் நடுவில் முளைத்த லீலியைப் போலவே இளங் கன்னியர் நடுவில் விளங்குகிறாள் என் அன்புடையாள்.

3 காட்டு மரங்களிடை ஓங்கி நிற்கும் கிச்சிலி மரம் போல இளங்காளையர் நடுவில் விளங்குகிறார் என் காதலரே! மிகுந்த இன்பத்துடன் அவர் நிழலில் அமர்ந்தேன், அவரது பழம் என் நாவுக்கு இனிப்பாய் இருந்தது.

4 திராட்சை இரசம் வைக்கும் அறைக்குள் என்னைக் கூட்டிச் சென்றார்; அன்பு என்னும் கொடியை என் மேல் பறக்க விட்டார்.

5 திராட்சை அடைகள் தந்தென்னை உறுதிப்படுத்துங்கள், கிச்சிலிப் பழங்களால் என்னை ஊக்குவியுங்கள், காதல் நோய் மிகுதியால் சோர்ந்து போனேன்.

6 அவரது இடக்கையால் என் தலையை அணைத்துக் கொண்டு, வலக்கையால் அவர் என்னைத் தழுவிடுவார்.

7 யெருசலேமின் மங்கையரே, அன்புடையாளை எழுப்பாதீர், தானே விழிக்கும் வரை தட்டி எழுப்பாதீர். வெளிமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள்மேல் ஆணை!

8 இரண்டாம் கவிதை: தலைமகள்: என் காதலர் குரல் கேட்கிறது! மலைகள் மேல் தாவிக்கொண்டு குன்றுகளைக் குதித்துத் தாண்டி அதோ, அவர் வந்துவிட்டார்.

9 என் காதலர் வெளிமானுக்கும் கலைமானுக்கும் ஒப்பானவர். இதோ, எங்கள் மதிற்புறத்தே அவர்தான் வந்து நின்றுகொண்டு பலகணி வழியாய்ப் பார்க்கின்றார், பலகணிக் கம்பிகள்வழி நோக்குகிறார்.

10 இதோ, என் காதலர் என்னை நோக்கி, உரையாடி என்னிடம் சொல்லுகிறார்: "எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா.

11 இதோ, குளிர் காலம் கடந்து விட்டது, மழையும் பெய்து ஓய்ந்து விட்டது,

12 தரையில் மலர்கள் தோன்றுகின்றன, பாடி மகிழும் காலம் வந்துவிட்டது; காட்டுப் புறாவின் கூவுதலும், நம் நாட்டில் எங்கும் கேட்கின்றது.

13 அத்தி மரம் புதிதாய்க் காய்க்கிறது, திராட்சைக் கொடிகள் மலர்கின்றன; எங்கும் நறுமணம் வீசுகிறது. எழுந்திரு, என் அன்பே! என் அழகுருவே! எழுந்து வா.

14 பாறைப் பிளவுகளிலும் கன்மலை வெடிப்புகளிலும், தங்கியிருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு உன் முகத்தை, உயர்த்திடு உன் குரலை. உன் குரல் இனிமை, உன் முகம் அழகே!"

15 நரிகளை, சிறிய நரிகளை எமக்காகப் பிடியுங்கள். திராட்சைத் தோட்டங்களை அவை பாழாக்குகின்றன, நம் திராட்சைத் தோட்டங்களோ பூத்துள்ளன.

16 என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் (மேய்க்கிறார்.)

17 வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், என் காதலரே திரும்பி வருக! பிளந்த மலைகளில் உள்ள வெளிமானுக்கும் இளங்கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!

அதிகாரம் 03

1 இராவேளையில் என் படுக்கையில் என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரைத் தேடினேன்; தேடியும் அவரை நான் காணவில்லை.

2 நான் எழுந்து நகரத்தில் சுற்றிவந்து தெருக்களிலும் நாற் சந்திகளிலும் என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரைத் தேடுவேன்." தேடியும் அவரை நான் காணவில்லை.

3 நகரத்தைச் சுற்றிக் காவல் வந்த சாமக் காவலர் என்னைக் கண்டார்கள். "என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரை நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன்.

4 அவர்களை விட்டுச் சற்றப்பால் சென்றதுமே என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரைக் கண்டு கொண்டேன்; அவரைப் பற்றிக் கொண்டேன், விடவே இல்லை; என் தாய்வீட்டுக்கு- என்னைக் கருத்தாங்கிப் பெற்றவளின் அறைக்குள் அவரைக் கொண்டு வந்தேன்.

5 தலைமகன்: யெருசலேமின் மங்கையரே, அன்புடையாளை எழுப்பாதீர், தானே விழிக்கும் வரை தட்டி எழுப்பாதீர், வெளிமான்கள் மேல் ஆணை! வயல்வெளி மரைகள் மேல் ஆணை!

6 மூன்றாம் கவிதை: பாலை வெளியிலிருந்து எழுந்து வரும் அது என்ன? புகைத் தூண் போல் தோன்றுகிறதே! வெள்ளைப் போளமும் சாம்பிராணியும் பல்வகை நறுமணப் பொடிகளும் கலந்து நறுமணம் கமழ வருவது யாதோ?

7 அதோ, அது தான் சாலமோனின் பல்லக்கு, இஸ்ராயேலின் வலிமையுள்ள வீரர்களுள் அறுபது வீரர்கள் அதைச் சுழ்ந்து காக்கின்றனர்.

8 அவர்கள் அனைவரும் வாளோடு நிற்கின்றனர், போர் செய்வதில் அவர்கள் வல்லவர்கள்; இரவு நேரத்தின் திடீர்த் தாக்கல்களை எதிர்க்கவே தத்தம் இடையில் வாள் அணிந்திருக்கின்றனர்.

9 லீபான் மலையின் மரத்தைக் கொண்டு மன்னர் சாலமோன் சிவிகையொன்று செய்தார்.

10 அதன் தூண்கள் வெள்ளியால் ஆனவை: மேற்கவிகை பொன்; இருக்கை மேல் செம் பஞ்சு மெத்தை. யெருசலேம் நகரின் பெண்மக்கள் அன்போடு அதன் உட்புறத்தை அழகு செய்தார்கள்.

11 சீயோனின் மங்கையரே, வெளியில் வந்து சாலமோன் அரசரைப் பாருங்கள்: அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளாகிய அவருடைய திருமணத்தின் நாளினிலே, அவர் அன்னை அவருக்குச் சூட்டிய மணி முடியோடு வீற்றிருக்கிறார்.

அதிகாரம் 04

1 தலைமகன்: என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன் முகத்திரைக்குப் பின்னால் இருக்கின்ற உன்னுடைய கண்கள் வெண்புறாக்கள். உனது கருங் கூந்தல் கலாத் மலைச் சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது.

2 மயிர்கத்தரித்த பின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லம் இரட்டைக் குட்டி போட்டன; அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.

3 உன்னுடைய இதழ்கள் செம்பட்டு நூலிழைகள், உன்னுடைய சொற்கள் இனிமையானவை; உன் முகத்திரைக்குப் பின் இருக்கும் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழத்தையொக்கும்.

4 உன் கழுத்து அரண்கள் இடப்பட்ட தாவீதின் கோபுரத்துக்கு நிகரானது. அங்கே வீரர்களின் கேடயங்களான ஆயிரம் பரிசைகள் தொங்குகின்றன

5 உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், லீலிகள் நடுவில் மேயும் இரட்டை வெளிமான் கன்றுகள்

6 வைகல் விடிவதற்குள், நிழல்கள் மறைவதற்குள், வெள்ளைப்போள மலையதற்கும் சாம்பிராணிக் குன்றுக்கும் போய் விடுவேன்.

7 என் அன்பே, நீ அழகே உருவானவள், உன்னில் மாசு மறுவே கிடையாது.

8 லீபானிலிருந்து வா, என் மணமகளே, லீபானிலிருந்து வந்திடுவாய். அமனா மலையுச்சி, சானீர், ஏர்மோன் முதலிய மலைகளின் கொடுமுடியிலிருந்தும் சிங்கக் குகைகள், சிவிங்கி மறைவிடங்கள் ஆகியவற்றினின்றும் இறங்கிவா.

9 என் தங்காய்! என் மணமகளே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே! உன் கண்களின் நோக்கு ஒன்றினாலும் உன் கழுத்து ஆரத்தின் ஒரு முத்தினாலும் உன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாயே!

10 உன் காதலின்பம் எவ்வளவு இனிமை! என் தங்காய்! என் மணமகளே! உன் காதலின்பம் திராட்சை இரசத்தைக் காட்டிலும், உன் தைலங்களின் மணம் பரிமளத்தைக் காட்டிலும், எவ்வளவோ மிகுந்த சிறப்புள்ளவை.

11 என் மணமகளே! உன் இதழ்கள் தேறலைச் சிந்துகின்றன; உன் நாவின் அடியில் தேனும் பாலும் இருக்கின்றன; உன் ஆடைகள் பரப்பும் நறுமணமோ லீபானின் நறுமணம் போல் கமழ்கின்றதே.

12 பூட்டப்பட்ட தோட்டம் நீ, என் தங்காய்! என் மணமகளே! பூட்டப்பட்ட தோட்டம் நீ, முத்திரையிடப்பட்ட நீரூற்று நீ.

13 மாதுளைப் பழத்தோட்டமாய் நீ தளிர்த்தாய், அங்கே மணங்கமழ் மரஞ்செடிகொடிகள் எல்லாம் உள்ளன;

14 நளத்தம், குங்குமம், வசம்பு, லவங்கம், சாம்பிராணி மரங்கள் அனைத்தும், வெள்ளைப் போளமும் கரிய போளமும், இன்னும் எல்லாச் சிறந்த நறுமணப் பொருட்களும் உள்ளன.

15 தோட்டத்தைச் செழிப்பிக்கும் நீருற்று, உயிருள்ள நீர் சுரக்கும் கிணறு; லீபானிலிருந்து வழிந்தோடும் நீரோடைகளுமுள்ன.

16 தலைமகள்: வாடையே, எழுந்திடுக; தென்றலே, வந்திடுக; என் தோட்டத்தின் மேல் வீசிடுக; அதன் நறுமணம் எங்கும் பரவட்டும்.

அதிகாரம் 05

1 என் காதலர் தம் தோட்டத்திற்கு வந்து அதன் சிறந்த கனிகளை உண்பாராக! தலைமகன்: எனது தோட்டத்திற்கு நான் வருகிறேன், என் தங்காய்! என் மணமகளே! என் வாசனைப் பொருளுடன் என் வெள்ளைப் போளத்தைச் சேமிக்கிறேன்; என் தேனையும் என் தேனடைகளையும் உண்கிறேன், என் இரசத்தையும் என் பாலையும் குடிக்கிறேன். நண்பர்களே, சாப்பிடுங்கள்; குடியுங்கள்; அன்பர்களே, நன்றாகக் குடியுங்கள். நான்காம் கவிதை

2 தலைமகள்: நான் உறளங்கினேன், ஆயினும் என் இதயம் விழித்திருந்தது. இதோ, என் காதலர் கதவைத் தட்டுகிறார். "கதவைத் திறந்திடுக, என் தங்காய்! என் அன்பே! என் வெண்புறாவே! என் நிறையழகியே! என் தலை பனியால் நனைந்துள்ளது, என் தலைமயிர் இரவின் தூறலால் ஈரமாயுள்ளது" என்கிறார்.

3 என் ஆடையைக் களைந்து விட்டேன், மறுபடியும் அதை நான் உடுத்த வேண்டுமா? என் பாதங்களைக் கழுவிச் சுத்தம் செய்தேன், மறுபடியும் அவற்றை நான் அழுக்குப் படுத்தவோ?" என்கிறேன்.

4 என் காதலர் கதவின் துவாரத்தின் வழியாய்க் கை நீட்டவே என் உள்ளம் எனக்குள் துள்ளி மகிழ்ந்தது.

5 என் காதலர்க்குக் கதவைத் திறக்க எழுந்திருந்தேன், என் கைகளிலிருந்து வெள்ளைப் போளமும், கை விரல்களினின்று நீர்த்த வெள்ளைப் போளமும் தாழ்ப்பாள் பிடிகள்மேல் துளிதுளியாய் வடிந்தது.

6 என் காதலர்க்கு நான் கதவைத் திறந்தேன், ஆனால் என் காதலர் திரும்பிப் போய் விட்டிருந்தார். அவர் பேசியபோது என் உயிரே உருகிற்று; அவரைத் தேடினேன், ஆனால் அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டுப் பார்த்தேன், ஆனால் பதிலே இல்லை.

7 நகரத்தைச் சுற்றிக் காவல் வந்த சாமக் காவலர் என்னைக் கண்டார்கள்; என்னை அடித்துக் காயப்படுத்தினார்கள், அலங்கத்தின் காவலர் என் போர்வையை எடுத்துக் கொண்டனர்.

8 யெருசலேமின் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் கண்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள்? நான் காதல் நோயுற்றதாகச் சொல்லுங்கள்.

9 பாடகர்க்குழு: பெண்களிலெல்லாம் பேரழகியே, மற்றக் காதலர்களினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு நீ எங்களிடன் ஆணையிட்டுச் சொன்னாயே, மற்றக் காதலர்களினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்?

10 தலைமகள்: என் காதலர் மிக வெண்மையானவர், சிவந்தவர்; பத்தாயிரம் பேர்களில் தலை சிறந்தவர்.

11 அவரது தலை பத்தரை மாற்றுத் தங்கம், அவர் தலை மயிர் பனங்குருத்துப் போல் தொங்குகிறது, காகத்தைப் போல் அது கருமையானது.

12 அவர் கண்களோ பாலில் கழுவப்பட்டுப் போராறுகளின் ஓரத்தில் வாழ்ந்திருந்து மலையருவி அருகிலே தங்குகின்ற வெண்புறாக்களைப் போலுள்ளன.

13 அவர் கன்னங்கள், நறுமணம் கொழிக்கும் வாசனைச் செடிகள் முளைக்கும் பாத்திகள்; அவர் இதழ்கள் நீர்த்த வெள்ளைப்போளஞ் சொட்டுகின்ற லீலிமலர்கள்.

14 அவர் கைகள் மாணிக்கப் பரல்கள் பதிக்கப்பட்ட தங்க உருளைகள்; அவர் வயிறு நீல மணிகள் பதித்த யானைத் தந்தத்தின் வேலைப்பாடு.

15 அவர் கால்கள் பொற்பாதங்களின் மேல் நிற்கும் பளிங்குத் தூண்களுக்கு ஒப்பானவை; அவர் தோற்றம் லீபானைப் போன்றது, கேதுரு மரங்களைப் போல் சிறப்பு மிக்கது.

16 அவர் பேச்சு இணையிலா இனிமையுள்ளது, அவர் முழுவதுமே கவர்ச்சிமிக்கவர். யெருசலேமின் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் துணைவர்.

17 பாடகர்க்குழு: பெண்களிலெல்லாம் பேரழகியே, உன் காதலர் உங்கே போய்விட்டார்? நாங்களும் உன்னோடு சேர்ந்து அவரைத் தேடுவோம், உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்? சொல்.

அதிகாரம் 06

1 தலைமகள்: என் காதலர் தோட்டத்தில் தம்முடைய மந்தையை மேய்க்கவும் லீலிகளைக் கொய்யவும் நறுமணச் செடிகளின் பாத்திகளுக்குத் தம் தோட்டத்திற்குள் ஏகினார்.

2 என் காதலர் எனக்குரியர், நான் அவருக்குரியவள்; அவர் தம் மந்தையை லீலிகள் நடுவில் மேய்க்கிறார்.

3 ஐந்தாம் கவிதை: தலைமகன்: என் அன்பே, நீ திர்சாவைப்போல் அழகுள்ளவள், யெருசலேமைப் போல் வனப்பு மிக்கவள்; அணிவகுத்த படை போல் அச்சந் தருபவள்.

4 என்னிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள், உன் பார்வை என்னை மயக்குகிறது. உனது கருங் கூந்தல் கலாத் மலைச்சரிவில் செல்லும் வெள்ளாட்டு மந்தையை ஒத்துள்ளது.

5 மயிர் கத்திரித்தபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறும் ஆட்டு மந்தை போன்றவை உன் பற்கள்; அவ்வாடுகள் எல்லாம் இரட்டைக்குட்டி போட்டன, அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.

6 உன் முகத்திரைக்குப் பின் இருக்கும் கன்னங்கள் வெடித்த மாதுளம் பழத்தையொக்கும்.

7 அரசியர்கள் அறுபது பேர், வைப்பாட்டிகள் எண்பது பேர்; கன்னிப் பெண்களுக்குக் கணக்கில்லை.

8 எண் வெண்புறா, என் நிறையழகி ஒருத்தியே. தாய்க்கு ஒரே மகள், பெற்றவளுக்குச் செல்லப் பிள்ளை. கன்னிப் பெண்கள் அவளைக் கண்டு பேறு பெற்றவள் என்று வாழ்த்தினர்; அரசியர்களும் வைப்பாட்டிகளுங் கூட அவளைப் பார்த்துப் புகழ்ந்தனர்.

9 விடிவேளை வானம் போல் எட்டிப்பார்க்கும் இவள் யார்? நிலாவைப் போல் அழகுள்ளவள், கதிரவனைப் போல் ஒளிமிக்கவள், அணிவகுத்த படை போல் அச்சம் தருகிறாளே!"

10 பள்ளத்தாக்கில் தளிர்த்தவற்றைப் பார்க்கவும், திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்று காணவும், மாதுள மரங்கள் பூ வைத்தனவா என்றறியவும், வாதுமை மரச் சோலைக்குள் சென்றேன்.

11 நான் உணருமுன்பே என் ஆவல் என் இனத்தாரின் தலைவனாய் என்னைத் தேர் மேல் ஏற்றிற்று.

12 பாடகர்க்குழு: திரும்பு, சூலமித்தியே, இப்படித் திரும்பு, உன் அழகை நாங்கள் பார்க்கும்படி திரும்பு, பெண்ணே, திரும்பு.

அதிகாரம் 07

1 தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது.

2 உன் கொப்பூழ் கலப்பு இரசம் குறையாதிருக்கும் கடைந்தெடுத்த கலசம் போன்றது; உன் வயிறு லீலிகள் சூழ்ந்திருக்கும் கோதுமை மணியின் குவியலை ஒக்கும்.

3 உன் கொங்கைகள் இரண்டும் இரண்டு இளமான்கள், வெளிமான் ஈன்ற இரட்டைக் கன்றுகள்.

4 உன் கழுத்து யானைத் தந்தத்தாலான கோபுரம், பாத்- ராபிம் வாயிலின் அருகே எசெபோனிலிருக்கும் குளங்களையொக்கும் உன் கண்கள். உன் மூக்கு தமஸ்கு நகரை நோக்கியிருக்கும் லீபானின் கோபுரத்துக்கு நிகரானது.

5 உன் தலை கர்மேல் மலை போல் நிமிர்ந்துள்ளது, உன் கூந்தல் செம்பட்டாடையொக்கும், அந்தப் புரிகுழலில் அரசன் ஒருவன் சிறைப்பட்டான்.

6 உள்ளத்திற்கு இன்பந் தரும் அன்பே, நீ எத்துணை அழகும் இனிமையும் வாய்ந்தவள்!

7 உனது வளர்த்தி ஓங்கிய பனையாம், உன் முலைகள் இரண்டும் அதன் குலைகளாம்.

8 பனை மரமேறி நான் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; உன் முலைகள் திராட்சைக் குலைகள் போன்றவை, உன் மூச்சு கிக்சிலிப் பழங்கள் போல் இனிய மணமுள்ளது,

9 உன் பேச்சு சுவை மிகுந்த திராட்சை ரசம். தலைமகள்: அந்த இரசம் என் காதலர் குடிப்பதற்குத் தகுதியானது; உதடுகளுக்கும் பற்களுக்கும் நடுவில் நின்று சுவை தருகிறது.

10 நான் என் காதலர்க்குரியவள், அவர் ஆர்வமெல்லாம் என் மேலே.

11 என் காதலரே, வாரும், வயல்களுக்குப் போவோம்; சிற்றூர்களில் இராத் தங்குவோம்.

12 வைகறையில் துயிலெழுந்து நாம் திராட்சைத் தோட்டத்திற்குப் போவோம்; திராட்சைக் கொடிகள் பூத்தனவா என்றும், திராட்சைப் பூக்கள் மலர்ந்தனவா என்றும், மாதுளஞ் செடிகள் பூ விட்டனவா என்றும் பார்ப்போம்; அங்கே உம் மேல் என் காதலைப் பொழிவேன்.

13 காதற் பழங்களின் மணம் கமழுகின்றது, புதியனவும் பழையனவுமான சிறந்த கணிகள் நம் வீட்டு வாயிலண்டையில் இருக்கின்றன; என் காதலரே, உமக்கென்றே அவற்றைச் சேர்த்து வைத்தேன்.

அதிகாரம் 08

1 நீர்மட்டும் என் உடன் பிறந்தவனாய் இருந்தால்! என் அன்னையிடம் பால்குடித்த அண்ணனாயிருந்தால்! வெளியிலே நான் உம்மைக் கண்டால் முத்தமிடுவேன், என்னை எவரும் இகழ மாட்டார்கள்.

2 உம்மை என் தாய்வீட்டுக்கு- என்னைக் கருத்தாங்கிப் பெற்றவளின் அறைக்குள் கூட்டிக் கொண்டு வருவேன். வாசனை கலந்த இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன், என் மாதுளம் பழச் சாற்றைப் பருகத் தருவேன்.

3 அவரது இடக்கையால் என் தலையை அணைத்துக் கொண்டு, வலக்கையால் அவர் என்னைத் தழுவிடுவார்.

4 தலைமகன்: யெருசலேமின் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: அன்புடையாளை எழுப்பாதீர்; தானே விழிக்கும் வரை தட்டியெழுப்பாதீர்.

5 முடிவுரை: பாடகர்க்குழு: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு பாலைவெளியிலிருந்து எழுந்து வரும் அவள் யார்? தலைமகன்: கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன், அங்கே தான் உன் தாய் நோயுற்று உன்னைப் பெற்றாள், உன்னைப் பெற்றவள் உன்னைப் பெற வேதனையுற்றாள்.

6 நீ என்னை உன் இதயத்தின் மேல் முத்திரையாகவும், கையிலே இலச்சினையாகவும் பொறித்து வை. ஏனெனில் காதல் சாவைப் போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது; அதன் சுடர்கள் நெரூப்புச் சுடர்கள் போலும்! அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும்!

7 பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. பிற்சேர்க்கைகள்: அறிஞன் ஒருவனின் முதுமொழி: அன்பைப் பெறுவதற்காக ஒருவன் தன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் வாரி வழங்கினாலும், இகழ்ச்சியையே பெற்றுக் கொள்வான்.

8 விடுகதைகள் இரண்டு: நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு இன்னும் கொங்கைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச வரும் நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்வோம்?

9 அவள் ஒரு மதிலானால், அதன் மேல் வெள்ளி அரண்களைக் கட்டுவோம். அவள் கதவு நிலையானால், கேதுரு பலகைகள் வைத்து அடைப்போம்.

10 நான் மதில்தான்; என் கொங்கைகள் அதன் கோபுரங்கள்; அவர் கண்களின் பார்வையில் நான் அமைதி கண்டவளைப் போல் ஆனேன்.

11 பாகாலம்மோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் அந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தம் காவலர்களிடம் ஒப்புவித்து அதன் பலனுக்காக ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்கும்படி சொன்னார்.

12 எனது திராட்சைத் தோட்டம் என் கண் முன் இருக்கிறது: சாலமோனே, ஆயிரம் வெள்ளிக்காசு உமக்கிருக்கட்டும்; உம் காவலர்களுக்கும் இருநூறு காசுகள் இருக்கட்டும்.

13 இறுதிப் பிற்சேர்க்கைகள்: தோட்டங்களில் வாழ்கிறவளே! என் தோழர்கள் உன் குரலொலிக்குச் செவி மடுத்துக் கவனமாய்க் கேட்கிறார்கள்: நானும் அதைக் கேட்கக் கூடாதோ?

14 என் காதலரே! விரைந்து ஓடிவிடுக! வாசனைச் செடிகளுள்ள மலைகளில் இருக்கும் வெளிமானுக்கும் இளங் கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!