பாத்திமா காட்சிகள் - பாத்திமா செய்தியின் உட்பொருள்

பாத்திமா செய்திகள் பரலோகத்திலிருந்து வந்தவை.  அவற்றில் பரலோகத்துக்குரிய பரம அம்சங்களைக் காணலாம்.

“ஒளியாயிருக்கும்” சர்வேசுரனின் திருச்சுதனின் இருதயத்தில் மறைந்திருந்த செய்திகளைத்தான் அவருடைய திரு அன்னை மாமரி பாத்திமாவில் தோன்றி நமக்கு வெளிப்படுத்தினார்கள்.  எனவே இது பரம பிதாவின் செய்தி என நாம் நிச்சயிக்க முடியும்.

கனவுகளையும், வீணான நம்பிக்கைளையும் நம்பிக் கொண்டிருக்கச் செய்பவை அல்ல அவை.  அழிவு வரும், அற்புதம் தோன்றும் என்று கூறி, யாரையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கச் சொல்பவை அவை அல்ல.  

கொடிய யுத்தங்கள் வரும் என்றும், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ, நிலப்பகுதிக்கோ சேதம் வரும் என்றும் தீர்க்க தரிசனம் சொல்வதற்காக பாத்திமா செய்திகள் வெளியிடப்பட வில்லை. உலக அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்ட உந்நத பீடங்களிலிருந்து ஒலிக்கும் சமாதான நம்பிக்கையூட்டும் நற்செய்தியே பாத்திமாவின் செய்தியாகும். 

பாத்திமா காட்சிகளை ஆரம்பித்து வைத்த தூதர் தம்மை “சமாதானத்தின் தூதர்” என்றே அறிமுகம் செய்தார்.

பாத்திமா செய்திகள் திருச்சபைக்கு என விடுக்கப்பட்டவை. சத்திய கத்தோலிக்க திருச்சபை சேசுக்கிறீஸ்துவின் இரண்டாம் வருகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பயணக் கப்பல் இக்கப்பலின் எதிர்காலம் பத்திரமாகக் கடவுளின் கரத்தில் இருக் கின்றது. இடைக்கால இன்னல்களால் தாக்கப்படும் நிலையிலும் இக்கப்பல் இருக்கின்றது.  இவ்வின்னல்கள் எத்தகையனவாக இருக்கும், எவ்வகையால் இவற்றை நாம் தடுக்கலாம், வெல்லலாம் என்ற தாய்க்குரிய பாசத்துடன் நம் தேவ மாமரி அன்னை நமக்குச் சொல்பவைதான் பாத்திமா செய்திகள்.

சேசுக்கிறீஸ்துவின் அளவற்ற பேறுபலன்களின் நிறைவு, மாமரி என்னும் வாய்க்கால் வழியாக நம்மை வந்து அடையும்.  அழுத பிள்ளை அமுதுண்பது போல எப்போதும் ஜெபிப்பதன் மூலமாக, சிறப்பாக ஜெபமாலை வழியாக நாம் அப்பேறுபலன்களை நம்முடையதாக்கிக் கொள்ள முடியும். 

இடைக்கால இன்னல்களில் நம் தப்பாத பாதுகாப்பாக இருப்பது நம் தாய் மாமரி.  இப்பாதுகாப்பை அடைய நாம் ஒவ்வொருவரும் பிள்ளைக்குரிய அன்புடன் நம் ஆன்ம சரீரம்  யாவற்றையும்  மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அன்புடன் அர்ப்பணித்து, அதனால் சேசுக்கிறீஸ்துவுக்கு நம்மை முழுவதும் உரிமையாக்கிக்கொள்ள வேண்டும்.  

இந்த அர்ப்பணத்தின் ஒரு நிச்சயமான அடையாளமே மாதாவின் கார்மெல் உத்தரியம். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பாவத்தால் வந்த இன்னல் இடையூறுகள் உள்ளன.  தனக்கு நேரிடும் யாவற்றையும் சர்வேசுரன் அனுப்புவதாக ஏற்றுக் கொள்வதாலும், நமதாண்டவர் அனுப்பச் சித்தங்கொள்ளும் துன்பங்களை அமைந்த மனதுடன் ஏற்று அவருக்கே அவற்றை ஒப்புக்கொடுப்பதாலும் தெய்வ சித்தத்துடன் நம் சித்தத்தையும் ஒன்றாக்கிக் கொண்டு, அதனால் நாம் நித்திய பேறு அடைய வேண்டும் என்னும் உண்மைகளின் விளக்கமே பாத்திமா செய்தியாகும்.

உலகம் உழலும் இவ்விடைக்காலத் துன்பங்களையும், இன்னல் கொடுமைகளையும் மேற்கூறிய முறையால் நாம் நிறுத்தவோ குறைக்கவோ கூடும் என்ற நம்பிக்கையும் நமக்கு ஊட்டப்படுகிறது பாத்திமா செய்திகளால்.  சர்வேசுரனை மிஞ்சி எதுவும் நடந்து விடாது.  அன்புள்ள தந்தையாகிய கடவுளின் பராமரிப்பில் யாவும் இனிதே முடிவடையும். 

மானிடர் பாத்திமா செய்திகளை முழு இருதயத்துடன் ஏற்று, கடவுளின் பக்கம் திரும்பி வருவார்களானால், உலகம் இரத்தம் சிந்துதல் இல்லாமல், போரும், பஞ்சமும், வேத கலாபனைகளும் இல்லாமலே மாமரி வாக்களிக்கும் சமாதான காலத்தைக் காண முடியும்.  

மாறாக தீமை மேலிட்டு அன்னையின் குரல் புறக்கணிக்கப்பட்டால், தப்பறைகளால் உலகம் தாக்கப் பட்டு, அல்லலாலும், அழிவாலும் துப்புரவாக்கப்பட்ட பின் இறுதியில் மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றிக்கே வந்து சேரும்.  

“முடிவில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்” என்ற நம்பிக்கையூட்டும் குரலை தேவதாய் பாத்திமாவின் உச்சகட்ட உயரிய நற்செய்தியாக வழங்கியுள்ளார்கள்.  இடைக்காலத்தில் நிகழக்கூடிய எந்தத் தீமையையும் வராமல் தடுப்பது, பாத்திமா செய்திகளை நாம் கடைப்பிடிப்பதில் தான் உள்ளது. அவ்வாறு தீமைகள் நேரிடாமலே, “அன்னையின் யுகம்” உலகில் வர வேண்டும் என்பதே நம் அன்புத் தாயின் விருப்பமாகும்.

விடியற்காலத்தின் நட்சத்திரமே,  எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.