ஜெபமாலை' மூலம் தேவமாதாவை வாழ்த்துவது கடவுளுக்கு ஏற்புடையதா?

"அருள் நிறைந்த மரியாயே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!" என்று ஜெபமாலையில் நாம் மூவொரு இறைவனோடு இனைத்து நாமும் தேவமாதாவை  வாழ்த்துகிறோம். எந்த ஒரு தனிமனிதரோ, திருச்சபையோ இந்த வாழ்த்தை உருவாக்கவில்லை. இது, கடவுளால் உருவாக்கப்பட்ட வாழ்த்து. பிதாவாகிய சர்வேசுரனே  கபிரியேல் அதி  தூதர் வழியாக, "அருள் நிறைந்த மரியாயே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்ற வார்த்தைகளால் தேவமாதாவை  வாழ்த்தினார்.

கடவுளின் மீட்புத் திட்டத்தை தேவமாதாவுக்கு  அறிமுகம் செய்த வார்த்தைகள் இவை. "இஸ்பிரீத்து சாந்துவானவர்  உம்மீது வருவார் உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை பரிசுத்தமானது.  அக்குழந்தை இறைமகன் எனப்படுவார்" (லூக்கா 1:35) என்ற வானதூதரின் வார்த்தைகளுக்கு, "இதோ  ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்கா 1:38) என்று பதிலளித்ததால்  தேவமாதா  இயேசுவின் தாயானார்கள்

இறைமகனை கருத்தாங்கிய தேவமாதா  புனித செக்கரியாவின் வீட்டை அடைந்து புனித எலிசபெத்தை வாழ்த்தியதும், அவர்  இஸ்பிரீத்து சாந்துவானவரால்  ஆட்கொள்ளப்பட்டார். அப்போது புனித எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக்கா 1:42) என்று வாழ்த்தினார். இந்த வார்த்தைகள் இஸ்பிரீத்து சாந்துவானவரின்  தூண்டுதலால் புனித எலிசபெத்து கூறியவை. இறைமகனை கருவில் சுமந்து மீட்புத் திட்டம் நிறைவேற ஒத்துழைத்த தேவமாதாவை  பிதாவாகிய சர்வேசுரனும் , இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனும்  போற்றிப் புகழ்வதைக் காண்கிறோம்.

"கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாய்" (மாற்கு 4:35) என்று இயேசு சுவாமியும்  தேவமாதாவை  பாராட்டுவதைக் காண்கிறோம். இவ்வாறு மூவொரு கடவுளால் வாழ்த்தப்பெற்ற தேவமாதாவை  ஆண்டவருக்கு விருப்பமான வார்த்தைகளில் புகழ்ந்து உதவி வேண்டுவதே ஜெபமாலையின் பக்தி முயற்சியாகும்.

கடவுளின் மீட்புத் திட்டத்தில் மறைபொருளின் ரோஜா  மலராகத் திகழும் தேவமாதா  'இறைவனின் தாய்' என்ற மேலான பெருமையைப் பெற்றிருக்கிறார்கள். இதன் காரணமாகவே கிறிஸ்து இயேசுவைப் போன்று, தேவமாதாவும்  உடலோடும் ஆன்மாவோடும் பரலோகத்தில்  மாட்சியோடு திகழ்கிறார்கள்.

எனவே, "திருச்சபை தேவமாதாவை  தனிப்பட்டதொரு வணக்கத்தால் தக்க காரணத்துடன் பெருமைப்படுத்துகிறது. திருச்சபையில் என்றும் இருந்து வரும் இவ்வணக்கம், மனிதரான வாக்குமானவரான இயேசு சுவாமிக்கும் , பிதாவாகிய சர்வேசுரனுக்கும் , இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கும்  நாம் அளிக்கும் ஆராதனையிலிருந்து உள்ளியல்பிலேயே வேறுபட்டது." (திருச்சபை எண். 66) இந்த வணக்கத்தின் ஒரு பகுதியாகவே ஜெபமாலைப்  பக்தியும் அமைந்துள்ளது.

பிதாவாகிய சர்வேசுரன்  மற்றும் இஸ்பிரீத்து சாந்துவானவரின்  வார்த்தைகள் மூலம் தேவமாதாவை  வாழ்த்தி, அவரது பரிந்துரையை வேண்டுவது கடவுளுக்கு ஏற்புடைய செயலே.  அதனால் ஜெபமாலை நமக்கு இரட்சணய பலமாக இருக்கிறது என்று அரசியஷ்ட மான்போர்ட் சொல்கிறார் , மரியாயே வாழ்க என்று சொன்னால் சாத்தான் நடுநடுங்கி ஓடுவான் என்று  அர்சியஷ்ட சாமிநாதர் சொல்கிறார் அப்படி என்றால் நாம் ஒரு 53 மணி ஜெபமாலையில் 53 முறை மரியாயே வாழ்க என்று தியானிக்கும் போது சாத்தானால் நம்மை நெருங்க முடியுமா

தினமும் குடும்ப ஜெபமாலை மிகவும் அவசியமாகும் நமக்கு வரும் அத்தனை தடைகளையும் உடைத்தெரிவது ஜெயம் தரும் ஜெபமாலை நம்மை பரலோக வாழ்வுக்கு வழிநடத்துவது ஜெபமாலை , நமது வாழ்வை வளமாக்குவதும் ஜெபமாலை, நம்மை பரிசுத்தமாக வாழ வைப்பது ஜெபமாலை,   மூவொரு இறைவனை தேவமாதாவோடு நாம் மகிமை படுத்துவதும் ஜெபமாலை!