யோனாஸ் ஆகமம்

அதிகாரம் 01

1 அமாத்தி என்பவரின் மகனான யோனாஸ் என்பவருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:

2 நீ புறப்பட்டு நினிவே என்னும் மாநகருக்குப் போய், அவர்கள் செய்யும் தீமை நம் திருமுன் எட்டிற்று என்று அவர்களுக்கு அறிவி" என்றார்.

3 யோனாசோ ஆண்டவரின் திருமுன்னிருந்து தார்சீசுக்குத் தப்பியோடிப் போக எண்ணிப் புறப்பட்டார்; ஆகவே யோப்பா பட்டினத்திற்குப் போய், தார்சீசுக்குப் போகத் தயாராய் இருந்த ஒரு கப்பலைக் கண்டு, கட்டணத்தைக் கொடுத்து ஆண்டவருடைய திருமுன்னிருந்து தப்பி அவர்களோடு தார்சீசுக்குப் போகக் கப்பலேறினார்.

4 ஆனால் ஆண்டவர் கடலின் மேல் பெருங்காற்றை அனுப்பினார்; கடலில் பெரும் புயல் உண்டாயிற்று; கப்பலோ உடைந்து போகும் நிலையில் தத்தளித்தது.

5 அப்போது கப்பலில் இருந்தவர்கள் திகில் கொண்டவர்களாய்த் தத்தம் கடவுளைக் கூவி மன்றாடினர்; கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அதிலிருந்த சரக்குகளை வாரிக் கடலில் எறிந்தார்கள்; யோனாசோ கப்பலின் அடித்தளத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தார்.

6 கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது, நீ உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாயே? எழுந்திரு, உன் கடவுளைக் கூவி மன்றாடு; ஒருவேளை நாம் அழிந்து போகாதபடி அந்தக் கடவுள் நம்மை நினைத்தருள்வார்" என்றான்.

7 கப்பலில் இருந்தவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்து, "எவனை முன்னிட்டு நமக்கு இந்தத் தீங்கு வந்தது என்றறியத் திருவுளச் சீட்டுப் போடுவோம், வாருங்கள்" என்றனர்; அவ்வாறு அவர்கள் போட்ட சீட்டு யோனாசின் பேரில் விழுந்தது.

8 அப்போது அவர்கள் அவரைப் பார்த்து, "இந்த ஆபத்து எங்களுக்கு வரக் காரணம் என்ன? உன் தொழிலென்ன? நீ எந்த ஊர்? எங்கே போகிறாய் ? உன் இனத்தார் யார்? சொல்" என்றார்கள்.

9 அதற்கு அவர் அவர்களை நோக்கி, "நான் ஓர் எபிரேயன்; கடலையும் நிலத்தையும் படைத்தவரான விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரின் அடியான்" என்று விடையளித்தார்.

10 அப்போது அவர்கள் மிகவும் அஞ்சி, "நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார்கள்; அவர்களோ அவர் ஆண்டவரின் திருமுன்னிருந்து தப்பியோடுகிறார் என்பதை அவரிடமிருந்தே கேட்டறிந்தனர்.

11 கடல் அலைகள் பொங்கியெழுந்தமையால், அவர்கள், "கடல் எங்கள் மட்டில் அமைதியடையும் படிக்கு உனக்கு நாங்கள் செய்ய வேண்டிதென்ன?" என்று அவரிடம் கேட்டார்கள்.

12 அதற்கு அவர், "என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்; அப்போது உங்கள் மேல் கடல் அமைதி கொள்ளும்; ஏனெனில் என்னை முன்னிட்டுத் தான் இந்தக் கடும் புயல் உங்கள் மேல் வந்தது என்பதை நான் அறிவேன்" என்றார்.

13 ஆயினும், கப்பலைக் கரைக்குக் கொண்டு வர முனைந்து தண்டு வலித்தனர்; ஆனால் இயலவில்லை. ஏனெனில் கடல் அலைகள் மேலும் மேலும் பொங்கிக் கொந்தளித்தன.

14 ஆகவே, அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டு, "ஆண்டவரே, இந்த மனிதனின் உயிரை முன்னிட்டு எங்களை அழிய விடாதேயும்; மாசற்ற இரத்தப் பழியை எங்கள் மேல் சுமத்தாதேயும்; ஏனெனில், ஆண்டவரே, உமக்கு விருப்பமானதை நீர் தான் செய்கிறீர்" என்று மன்றாடினர்.

15 பிறகு அவர்கள் யோனாசைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கொந்தளிப்பும் ஓய்ந்தது.

16 அந்த மனிதர்கள் ஆண்டவர் மட்டில் பெரிதும் அச்சங் கொண்டு ஆண்டவருக்குப் பலியிட்டு நேர்ச்சைகளும் செய்து கொண்டார்கள்.

அதிகாரம் 02

1 யோனாசை விழுங்கும்படி ஆண்டவர் ஒரு பெரிய மீனுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்; யோனாசோ அந்த மீன் வயிற்றிலே மூன்று பகலும் மூன்று இரவும் இருந்தார்.

2 யோனாஸ் அந்த மீன் வயிற்றிலிருந்து கொண்டு தம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டிக் கொண்டார்:

3 என் வேதனையின் போது என் ஆண்டவரிடம் கூக்குரலிட்டேன், அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினார்; பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூவினேன், நீர் என் குரலைக் கேட்டருளினீர்.

4 நடுக்கடலின் ஆழத்தில் நீர் என்னைத் தள்ளினீர், வெள்ளம் என்னைச் சூழ்ந்து கொண்டது; உம்முடைய அலைகள், திரைகள் அனைத்தும் என் மேல் புரண்டு கடந்து போயின.

5 அப்பொழுது நான், ' உமது திருமுன்னிருந்து புறம்பே எறியப்பட்டேன்; இனி எவ்வாறு உம் பரிசுத்த கோயிலை மறுபடியும் பார்ப்பேன்?' என்று முறையிட்டேன்.

6 மூச்சுத் திணறும்படி தண்ணீர் என்னை நெருக்கிற்று, கடலாழத்தில் நீர் சூழ, நான் இருந்தேன். கடற்பாசி என் தலையைச் சுற்றிக் கொண்டது.

7 மலைகளின் அடிவாரம் செல்லும் ஆழம் வரை, நிலத்தின் அடிக்குள் நான் இறங்கி விட்டேன், பாதாளத்தின் தாழ்ப்பாள் என்றென்றைக்கும் என்னை அடைத்தது; ஆயினும் என் கடவுளாகிய ஆண்டவரே, பாதாளப் படுகுழியிலிருந்து நீர் என்னுயிரை மீட்டு வந்தீர்.

8 என் ஆன்மா எனக்குள் சோர்ந்து போகும் போது ஆண்டவரை நான் நினைவுகூர்ந்தேன்; என் மன்றாட்டு உம் வரைக்கும் உம்முடைய பரிசுத்த கோயிலுக்குள் வந்தது.

9 ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.

10 நானோ புகழ்ப்பாடலுடன் உமக்குப் பலியிடுவேன், நான் நேர்ந்து கொண்டதை உமக்குச் செலுத்துவேன்; மீட்பு ஆண்டவரிடமிருந்தே வருகிறது!"

11 ஆண்டவர் அந்த மீனுக்குக்குக் கட்டளையிட, அது யோனாசைக் கடற்கரையில் கக்கி விட்டது.

அதிகாரம் 03

1 ஆண்டவர் இரண்டாம் முறையாக யோனாசுக்குக் கூறினார்:

2 நீ புறப்பட்டு நினிவே என்னும் மாநகருக்குப் போய் நாம் உனக்குச் சொல்லும் தூதுரையை அவர்களுக்கு அறிவி" என்றார்.

3 யோனாஸ் உடனே புறப்பட்டு ஆண்டவருடைய வார்த்தையின் படியே நினிவே நகருக்குப் போனார்; நினிவே ஒரு மாபெரும் நகரம்; அதன் ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்குச் செல்ல மூன்று நாளாகும்.

4 யோனாஸ் நகருக்குள் நுழைந்து, ஒருநாள் பயணம் செய்து, உரத்த குரலில், "இன்னும் நாற்பது நாட்களில் நினிவே வீழ்த்தப்படும்" என்று அறிவித்தார்.

5 நினிவே மக்கள் கடவுளை விசுவசித்தனர்; உடனே, உண்ணா நோன்பு இருக்கும்படி அறிக்கையிட்டனர்; பெரியோர் முதல் சிறியோர் ஈறாக அனைவரும் கோணியுடுத்திக் கொண்டனர்.

6 இந்தச் செய்தி நினிவே மன்னனுக்கு எட்டிற்று; அவனும் தன் அரியணையை விட்டிறங்கி, அரச ஆடையை அகற்றி விட்டு கோணியுடுத்திச் சாம்பலில் அமர்ந்தான்.

7 மேலும் அறிக்கையொன்று தயாரித்து நினிவே முழுவதும் விளம்பரப்படுத்தச் சொன்னான்: "அரசர், அவர் அமைச்சர்கள் ஆகியோரின் ஆணையாவது: மனிதனோ மிருகமோ ஆடு மாடுகளோ எதையும் சுவைத்தலாகாது; உண்ணவோ நீர் பருகவோ கூடாது.

8 மனிதன், மிருகம் எல்லாருமே கோணியாடை உடுத்திக் கொண்டு, கடவுளை நோக்கி உரத்த குரலில் கூவியழைக்கட்டும்; ஒவ்வொருவனும் தன் தீய வழியை விட்டுத் திரும்பட்டும்; தன் கைகளைக் கறைப்படுத்தும் வன்முறைச் செயல்களை விட்டொழிக்கட்டும்.

9 அப்போது ஒரு வேளை ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, தம் கடுஞ்சினத்தை அமர்த்தக் கூடும்; நாமும் அழியாமல் தப்புவோம்."

10 அவர்கள் செய்ததைக் கடவுள் கண்டு, அவர்கள் தங்கள் தீநெறியை விட்டுத் திரும்பியதை அறிந்தார்; தாம் அவர்களுக்குச் செய்யப் போவதாகச் சொல்லியிருந்த தீங்கைக் குறித்துக் கடவுள் தம் மனத்தை மாற்றிக் கொண்டு, அதைச் செய்யாமல் விட்டார்.

அதிகாரம் 04

1 ஆனால் யோனாசுக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை; அவர் மிகுந்த சினங்கொண்டார்.

2 அவர் ஆண்டவரை நோக்கி முறையிட்டு: "ஆண்டவரே, என் நாட்டில் இருக்கும் போதே நான் இதைத் தானே சொன்னேன்! இதை முன்னிட்டுத் தான் நான் தார்சீசுக்கு ஓடிப்போக முயற்சி செய்தேன்; ஏனெனில், நீர் பரிவும் இரக்கமும் உள்ள கடவுள் என்றும், நீடிய பொறுமையும் நிறைந்த அன்பும் கொண்டவர் என்றும், செய்யவிருக்கும் தீங்கைக் குறித்த மனம் மாறுகிறவர் என்றும் எனக்கு அப்பொழுதே தெரியுமே!

3 ஆகையால், ஆண்டவரே, உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்: என் உயிரை எடுத்து விடும்; நான் வாழ்வதினும் சாவது நன்று" என்று வேண்டிக் கொண்டார்.

4 அதற்கு ஆண்டவர், "நீ சினங்கொள்வது சரியா?" என்றார்.

5 பின்பு யோனாஸ் நகரத்தினின்று வெளியேறி, நகரத்திற்குக் கிழக்கே போய்த் தங்கினார்; அங்கே தமக்கு ஒரு பந்தற் போட்டு, நகரத்திற்கு நிகழப் போவதைக் காணும் வரையில் பந்தலின் நிழலில் காத்திருந்தார்.

6 கடவுளாகிய ஆண்டவர் ஆமணக்குச் செடியொன்றை முளைக்கச் செய்து, அது யோனாசின் தலைக்கு மேல் படர்ந்து நிழல் தந்து அவருடைய சோர்வைப் போக்கும்படி செய்தார்; யோனாசும் அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு மிக மகிழ்ந்தார்.

7 ஆனால் மறு நாள் வைகறையில் ஆண்டவர் ஒரு புழுவை அனுப்பினார்; அது ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.

8 பொழுது எழுந்ததும், கிழக்கிலிருந்து வெப்பக் காற்று வரும்படி கடவுள் கட்டளையிட்டார்; உச்சி வெயில் யோனாசின் தலை மேல் தாக்க, அவர் சோர்ந்து போனார்; அவர் சாக விரும்பி, "நான் வாழ்வதினும் சாவது நன்று" என்று சொன்னார்.

9 அப்போது ஆண்டவர் யோனாசைப் பார்த்து, "நீ அந்த ஆமணக்குச் செடியைக் குறித்துச் சினங்கொள்வது சரியா?" என்று கேட்டார்; அதற்கு அவர், "நான் சாவை விரும்பும் அளவுக்குச் சினங்கொள்வது சரியே" என்று மறுமொழி சொன்னார்.

10 ஆண்டவர் அவரைப் பார்த்து, " நீ நட்டு வளர்க்காமலே, தானாக ஒரே இரவில் முளைத்தெழுந்து, ஒரே இரவில் உலர்ந்து போன அந்த ஆமணக்குச் செடிக்காக நீ இவ்வளவு வருந்துகிறாயே!

11 வலக்கை எது, இடக்கை எது என்ற வேறுபாடு கூடத் தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனிதர்களும், பெருந்தொகையான மிருகங்களும் இருக்கிற இந்த நினிவே மாநகரத்தின் மேல் நாம் இரங்காதிருப்போமோ?" என்றார்.