''உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்'' என்றார்.
–ஆதி 3:15
–ஆதி 3:15
மாதாவை எப்படி கடவுள் ஜென்மப்பாவம் இல்லாமல் படைத்தாரே, அதே போல் ஜென்மப்பாவம் இல்லாமல் படைக்கப்பட்டவர்கள்தான் ஆதாமும்-ஏவாளும். ஆதிப்பெற்றோர்களாக கடவுளால் நமக்கு தரப்பட்டவர்கள்.
ஆனால் இவர்களால் வெகுகாலம் கடவுளுக்கு பிரமாணிக்கமாய் இருக்கமுடியவில்லை. இவர்கள் உலகத்தையும் அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் ஆண்டாலும் இவர்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் படைத்தவரையே சந்தேகித்தார்கள். தினமும் கடவுளோடு பேசி அவரோடு வாழ்ந்த அவர்களுக்கு கடவுள் மேல் விசுவாசம் இல்லாமல் போனது..
சாத்தான் வஞ்சித்தாலும் என்னதான் கடவுளைப் பற்றி இல்லாதது பொல்லாததெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும், எங்களைப் படைத்து பரமாரித்து எங்கள் தேவைகளையெல்லாம் தரும் கடவுள் நல்லவர், நேர்மையுள்ளவர்; தூயவர் அவர் பேச்சை நாங்கள் தட்ட மாட்டோம் " போ அப்பாலே சாத்தானே " என்று இவர்களால் சொல்ல முடியவில்லை.
கடவுளுக்கு கீழ்படியாமை என்ற பாவத்தை செய்து, பேராசை பட்டு பெருத்த நஷ்ட்டத்தை மனுக்குலத்திற்கு தேடித்தந்தார்கள்.
''அலகையின் பொறாமையால் பாவம் நுழைந்தது''
ஆதிப்பெற்றோர் கடவுளின் பரிசுத்தம் என்ற பொக்கிஷத்தை இழந்தார்கள் ; நம்மையும் பாவிகளாக பெற்றுப்போட்டார்கள்..
ஆனாலும் உலகில் எப்போது பாவம் நுழைந்ததோ அப்போதே கடவுளின் சிந்தனையில் உதித்த பெண் மாதா.
“அடேய் சாத்தானே, ஒரு பெண்ணை வைத்து பாவத்தை வர வைத்தாயே.. நான் இன்னொரு பெண்ணை வைத்து உன்னை அழிக்கப்போகிறேன். அவள் பெறப்போகும் வித்து உன்னையும், பாவத்தையும் ஒழிக்கும். அவள் மகனை வைத்து மனுமக்களை மீட்டு மீண்டும் என்னோடு சேர்த்துக்கொள்ளப்போகிறேன். எனக்கும் என் மக்களுக்கும் தொடர்பை துண்டிப்பது பாவமே.. அந்த பாவத்தை அவர்களிடமிருந்து நீக்கி விட்டால் அவர்கள் என்னோடு வந்து விடுவார்கள்.
அவர்களை மீட்க மீட்பரை பெற நான் கருவியாக பயன்படுத்தப்போகும் பெண் என் மகள் மரியாள்..
இப்போது ஏவாளைப் பார்த்து, அவள் உன்னைப்போல் திமிர் பிடித்தவள் இல்லை.. ஆழ்ந்த தாழ்ச்சி நிறைந்தவள்; என் மீது முழு நம்பிக்கையும், உயிருள்ள விசுவாசமும் நிறைந்தவள், உன்னைப்போல் கீழ்ப்படியாத பெண் அவள் இல்லை.. கேள்வியற்ற கீழ்ப்படிதல் உள்ளவள்..
1. கடவுளைப் பெற்றெடுக்க மாட்டுத்தொழுவமா ? – கேள்வி கேட்க மாட்டாள்.
2. கடவுளையே காப்பாற்ற எகிப்துக்கு ஓடிப்போகச் சொன்னாலும் கேள்வி கேட்க மாட்டாள்.
3. “ அம்மா ஏன் என்னைத் தேடினீர்கள்: கடவுளின் இல்லத்தில் நான் இருக்கவேண்டும் என்று உங்களுக்கு தெறியாதா? “ என்று மூன்று நாட்கள் தவிக்க விட்ட ஆண்டவர் கேட்டாலும் பொறுமையோடு இருப்பார்.
4. “ யார் என் தாய் ? யார் என் சகோதரர்கள் “ என்று அவர் குமாரன் கேட்டாலும் பதில் பேசமாட்டாள்.
5. “ அம்மா ! என் நேரம் இன்னும் வரவில்லை “ என்று ஆண்டவர் கேட்டாலும், மகனே உன் நேரம் வந்து விட்டது என்று பணிவோடும், என் மகன் சொல்வதை செய்யுங்கள் என்று அந்த நேரத்திலும் அவள் நற்செய்தி அறிவிப்பாள்..
6. என் மகனுடைய துன்ப நேரத்தில் அவனுடைய சீடர்கள் எல்லோரும் தனியே தவிக்கவிட்டு ஓடினாலும் தனியே அவனோடு நின்று துணை நிற்பாள்.
7. மகனின் துன்பக்கலம் தனக்கு எல்லையில்லாத வியாகுலத்தைக் கொடுத்தாலும் சிலுவைப்பாதையில் அவனுக்கு எதிரே சென்று ஆறுதல் மொழி சொல்லி கடவுளின் திட்டம் நிறைவேற அவனை ஊக்கப்படுத்துவாள்..
8. அவளை இந்த உலகத்திற்கே தாயாக்கினாலும், பரலோக பூலோக அரசியாக நான் முடிசூட்டினாலும் அப்போதும் தாழ்ச்சியோடு மக்களைத் தேடி அவர்களை மீட்க நரகத்திலிருந்து காப்பாற்ற என்ன வழி என்று தேடிக்கொண்டிருப்பாள்.. என்னிடம் வந்து ஜெபமாலை, உத்தரியம் போன்ற சலுகைகளை பெற்று எப்படியாவது அவர்களை காப்பாற்றி விட வேண்டும் என்று முயற்சி செய்வாள்.
எப்படி என் கபரியேன் தூதன் “ நீ ஆண்டவருக்குத் தாயாகப் போகிறாய் “ என்று சொன்னாலும் உடனே எனக்கு அடுத்த வேலை என்ன ? எலிசபெத்துக்கு உதவி செய்வது” என்று அடுத்த கணமே ஓடினாளே அதைப்போல..
இப்படி கேள்வியற்ற கீழ்ப்படிதலிலும், உயிருள்ள விசுவாசம், நம்பிக்கையிலும், ஆழ்ந்த தாழ்ச்சிலும், யாவற்றிலும் பரித்தியாகத்திலும், இடைவிடா ஜெபத்திலும், இறுதிவரைஹ செல்லும் பொறுமையிலும், இன்னும் இன்னும் என் மகளின் பிரமானிக்கத்தை சொல்லிக்கொண்டே இருக்கலாம்..
நான் உனக்கு கொடுத்த தகுதியை நீ இழந்ததால்…இனி அவள்தான் புதிய ஏவாள்.. அவள்தான் மனுக்குலத்திற்கு தாய்.. மீண்டும் மனுக்குலத்திற்கு பரிசுத்த பிள்ளைகளை அவள்தான் ஈன்றெடுப்பாள்..
நீ அல்ல.. ஏனென்றால் நீ சாத்தானோடு உறவு வைத்தாய்.. அவள் சாத்தானோடு பகை வைப்பாள்.. அவள்தான் என் சார்பாக இருந்து சாத்தானை ஒழிப்பாள் “
இப்படி அவர்கள் இருவரிடமும் கடவுள் பேசினாலும் நம்மிடமும் பேசுகிறார்.. நீ ஆதாம்-ஏவாளைப்போல இருக்க விரும்புகிறாயா அல்லது என் மகன் சேசு மகள், என் மகள் மரியாயைப்போல் இருக்க விரும்புகிறாயா?
சிந்தனை:
மேலே உள்ள அனைத்தையும் பார்த்தால் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாகழ இருந்தாலும் நாம் யாரைப்போல் நடந்து கொள்கிறோம்.. 95 சதவீதம் ஏவாளைப்போல் தான் நடக்கிறோம்.. கடவுள் மேல் நம்பிக்கை, விசுவாசமின்றி தவிக்கிறோம்.. அதுவும் நம் சோதனை நேரங்களில் அவரை விட்டு வெகு தூரம் சென்று விடுகிறோம்; பாவ சந்தர்ப்பத்தில் அவரோடு உள்ள பிரமானிக்கத்தை இழந்து விடுகிறோம்…
நாம் மாதாவாக ஐந்து சதவீதம் நடந்து கொள்ள முயற்சித்தாலும் நாம் ஏவாள் போல்தான் 95 சதவீதம் நடக்கிறோம்.. நம் பாலன் இயேசு நமக்காக பிறக்க இருக்கும் இந்த நேரத்தில் நாம் சேசுவைப்போலவும், மாதாவைப் போலவும் மாற முயற்சி செய்யவோம்.
ஜெபம் :
திவ்ய பாலன் இயேசுவே! எங்களிடம் இருக்கும் ஏவாள்-ஆதாமின் தன்மைகளை அகற்றிவிடும் சுவாமி! எதெற்கெடுத்தாலும், சந்தேகம், குழப்பம், விசுவாசமின்மை, பயம் இவற்றிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் ஆண்டவரே... நம் பரிசுத்த அன்னையைப் பின்பற்றி அவரின் ஆழ்ந்த தாழ்ச்சி, உயிருள்ள விசுவாசம், கேள்வியற்ற கீழ்படிதலை பின்பற்றி ஒரு நல்ல கிறிஸ்தவனாக, கிறிஸ்தவளாக வாழ வரம் தாரும் சுவாமி-ஆமென்.
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !