மூன்றாம் வாரம்.

(27 முதல் 33-ம் நாள் முடிய).

நோக்கம் : சேசு கிறிஸ்துவை அறிதல்.

"என் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துவை அறிகிற உந்நதமான அறிவைப் பற்றி நான் மற்ற எல்லாவற்றையும் நஷ்டமென்று மதிக்கிறேன். அவருக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டு அவைகளைக் குப்பையென்றும் எண்ணுகிறேன்" (பிலிப். 3:8) என்று உரைத்தார் அர்ச். சின்னப்பர். ஏனென்றால் நமதாண்டவரே அனைத்திலும் அனைத்திற்கும் அனைத்துமாயிருக்கிறார்.

சேசு கிறிஸ்துவே ஆல்பாவும் ஒமேகாவுமாக, எல்லாவற்றின் துவக்கமும் முடிவுமாக இருக்கிறார். அவரிலேயே நாம் ஒவ்வொரு ஞான ஆசீர்வாதத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். நம் ஆசிரியர் அவரே. நம் ஆண்டவர் அவரே, நம் சிரசு அவரே. நம் மாதிரி அவரே, நம் ஆயன் அவரே. நம் வழியும் உண்மையும் ஜீவனும் அவரே... என்று அடுக்கடுக்காகக் கூறிக் கொண்டு போகிறார் அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட் (மரி. மீ. உ. பக்தி 62).

நாம் பசாசையும், அவன் கிரியைகளையும், அவனுடைய ஆரவாரங்களையும் விட்டு விட்டதால் நமதாண்டவருக்கே முழுச் சொந்தமாயிருக்கிறோம். அவர் நம் கடவுளும் நம் மூத்த சகோதரருமாயிருக்கிறார். நம் இரட்சகரும் நம் நித்திய வெகுமானமுமாயிருக்கிறார்.

இவைகளையெல்லாம் நாம் சிந்தித்து உணர்வதோடு சேசு கிறிஸ்துவும் கன்னி மாமரி அன்னையும் எப்படி அன்பினால் ஒரே பந்தனமாக இருக்கிறார்கள் என்னும் பரம இரகசியத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும். சேசுநாதர் மாதாவுடன் கொண்டுள்ள இணைபிரியாத தொடர்பு - அவருடைய மனிதாவதாரத்திலும், பாலத்துவத்திலும், நவரத்தின மறைந்த வாழ்விலும், பகிரங்க வாழ்விலும், இறுதியாய் கல்வாரிப் பலியிலும் இருவருக்கும் இருந்த ஏக பந்தனமான உறவைச் சிந்தித்து வியந்து உணர்ந்து கொள்ள முயல வேண்டும்.