கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - பாயிரம்

அர்ச். சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதின முதல் நிருபத்திலே கண்டித்த குறைகளையெல்லாம் அவர்கள் மிகுந்த பயத்தோடும் ஜாக்கிரதையோடும் நீக்கிப் பரிகரித்து, அதிக நல்லவர்களானார்கள். 

ஆகையால் இந்த இரண்டாம் நிருபத்தில் அவர்களைக் கொண்டாடுகிறாரொழிய, அவர்களை நோக்கி அதிகக் கண்டிப்புள்ள வார்த்தைகளை இதிலே பிரயோகிக்கக் காணோம். 

ஆனால் முதல் நிருபத்திலே கண்டபடியே அந்தச் சபையோருக்குள் உண்டான பிரிவினைகளுக்கும் வாக்குவாதங்களுக்குங் காரணமாயிருந்த போதகர்களுக்குள்ளே சிலர் அந்த நிருபத்தினாலே மனக்குரோதங்கொண்டு, அர்ச். சின்னப்பர்பேரில் பொறாமையடைந்து அவரை நிந்திக்கவும், அவர் அப்போஸ்தலர் அல்லவென்றும், தூரத்திலே தைரியங் காண்பித்தாலும், சமீபத்தில் வரும்போது கோழைத்தன முள்ளவரென்றும், இவைமுதலான குறைகளை அவர்பேரில் சொல்லவும் ஏற்பட்டிருந்தார்கள். 

ஆகையால் இந்த நிருபத்திலே அர்ச். சின்னப்பர் அப்படிப்பட்டவர்களுடைய ஆங்காரத்தைத் தணித்து, தம்முடைய அப்போஸ்தலத்துவத்தை மேன்மைப்படுத்துகிறார். 

மக்கேதோனியா நாட்டின் தலைமைப்பட்டணமாகிய பிலிப்பி நகரிலிருந்து கர்த்தர் மனுஷாவதாரமான 57-ம் ஆண்டில் இதை எழுதினார்.