பாத்திமா காட்சிகள் - சொந்த தபசு

ஒரு நாள் அல்யுஸ்திரலில் ஒரு சிறிய தெருவில் லூஸியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவரும் அன்னையின் தரிசனங்களைப் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொண்டு நின்றபோது, கீழே கிடந்த ஒரு முரட்டுக் கயிறு லூஸியாவின் கண்ணில் பட்டது.  குனிந்து அதை எடுத்தாள் லூஸியா.  எடுக்கும்போதே அந்தக் கயிறு அவள் கையில் உராய்ந்து சிறு காந்தல் ஏற்பட்டது.

“அடே! இந்தக் கயிறு பட்டால் வலிக்கிறது!  இதை நாம் இடையில் கட்டிக்கொண்டு, அந்தத் துன்பத்தை ஆண்டவருக்குப் பரித்தியாகமாகக் கொடுக்கலாம்” என்று லூஸியா கூறவும், மூவரும் ஆளுக்கொரு துண்டாக அதை அறுத்து, தங்கள் உடலோடு ஒட்டும்படி இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டனர். 

அந்நேர முதல் அந்தக் கயிறு அவர்களுக்கு இடைவிடாத வேதனையைக் கொடுத்தது.  மெல்லிய தோலின்மீது கட்டியிருந்த அந்த முரட்டுக் கயிறு ஓயாமல் குத்திக் கொண்டேயிருந்தது;  கடித்தது; எரிந்தது; எரிச்சல் உண்டுபண்ணியது.  இடையைச் சுற்றிப் பதிந்து ஒரே வலியாக வலித்துக் கொண்டிருந்தது.

நரகத்தையும் அதன் நெருப்பையும் அதில் பாவிகள் படும் பாட்டையும் கண்ணால் கண்டபிறகு, இந்த எரிவும், இடைவிடாத குத்தலும் பெரிதாகப் படவில்லை அவர்களுக்கு.  பாவிகள் மனந் திரும்பும்படி இத்தபசை அதிக அன்போடு ஒப்புக்கொடுக்கவே அவை உதவின. 

வலி தாங்க முடியாமல் சில சமயம் அவர்கள் நின்று விடுவார்கள். ஆயினும் அந்தக் கயிற்றைத் தளர்த்தக் கூட மாட்டார்கள். வெளியில் யாருக்கும் தெரியாமல் மறைவில் அவஸ்தைப்பட்டார்கள். இரவு வேளைகளில் இடுப்பைச் சுற்றி இறுக்கிக் கொண்டிருக்கும் இந்த வலியால் உறங்க முடியாமல் புரளுவார்கள். புரண்டு புரண்டு மேலும் வேதனைப்படுவார்கள். 

என்ன வேதனைப்பட்டாலும் கயிற்றை அகற்ற வேண்டும் என்று மட்டும் அவர்கள் நினைத்ததில்லை.  

முந்திய காட்சியில் “தங்களுக்காக ஜெபித்து ஒறுத்தல் செய்ய ஒருவரும் இல்லாததால் அநேக ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்லுகிறார்கள்” என்று தேவ அன்னை கூறிய வார்த்தைகளே இக்குழந்தைகள் கண்முன் எப்போதும் நின்றன;  எவ்வகைத் தவ முயற்சிக்கும் அவர்களை ஊக்கப்படுத்தின.

சர்வேசுரனுக்கெதிரான எந்த ஒரு சிறு காரியத்தைக் கண்டாலும் இக்குழந்தைகள் வேதனைப்பட்டுத் தளர்ந்து போவார்கள். அவர்கள் தேவ அன்னையையும் அவர்கள் வழியாக சேசுவையும் எவ்வளவு ஆழ்ந்த அன்போடு நேசித்தார்களென்றால், ஒரு சிறு தவறான சொல் அவர்களைத் துன்புறுத்தப் போதுமாயிருந்தது.  

யாராவது கெட்ட வார்த்தைகள் பேசுவதையோ, சாபமிடுவதையோ கேட்டு விட்டால், அப்படியே சுருண்டு விழுவது போல் உணர்வார்கள். ஒரு நாள் மோசமான வார்த்தைகள் சில ஜஸிந்தாவின் காதில் விழுந்ததும், அவள் கையால் முகத்தை மூடிக்கொண்டு, “ஆண்டவரே! இந்த ஆட்கள் இப்படிப் பேசுவதற்காக நரகத்திற்குப் போகக் கூடும் என்பதை அறியாமலிருக்கிறார்களே!  சேசுவே, இவர்களை மன்னித்து, மனந் திருப்புங்கள்” என்று கூறிவிட்டு, பின் அவர்களுக்காக ஜெபமாலை சொல்லி, அன்னை கற்றுக் கொடுத்த ஜெபத்தையும் சொன்னாள்.

மூவருக்கும் இவ்வி­யத்தில் மிகுந்த ஒருமைப்பாடு காணப்பட்டது. லூஸியா காட்டுப் பக்கம் சென்று முள்போன்று குத்தும் இலைகளுள்ள செடிகளின் கிளைகளை ஒடித்து அவற்றால் முழங் காலுக்குக் கீழ் இரத்தம் தெரியுமட்டும் அடித்துக் கொள்வாள்.  

சேசுவே, இதெல்லாம் பாவிகள் மனந்திரும்பும்படி உங்களுக்குத் தருகிறேன் என்று நினைத்துக் கொண்டே அவ்வாறு செய்வாள்.  பிரான்சிஸ் தன் முந்திய விளையாட்டுப் புத்தியை எல்லாம் விட்டு விட்டு, மறைவில் சென்று முழங்காலில் நெடுநேரம் நின்று நற்கருணையில் “மறைந்த சேசுவை” நினைத்து உருகி பாவிகளுக்காக மன்றாடிக் கொண்டிருப்பான்.

உணவிலும், உடையிலும், உறக்கத்திலும் கூட, இரவு பகல் வேறு பாடின்றி இச்சிறுவர் மூவரும் மேற்கொண்ட சிறு சிறு ஒறுத்தல்கள் கடவுளின் திருமுன் மிகவும் விலையேறப்பெற்ற மீட்பின் கருவிகளாக மாறின. கடவுளின் அன்பும் அவர்கள்மீது இருந்தது. குறிப்பாக ஜஸிந்தா புனிதப் பாதையில் வேகமாய் முன் வந்து கொண்டிருந்தாள். மூவருமே முன்னைவிட அதிகப் பொறுமை, அதிக சகிப்புத்தன்மை, அதிக அன்புள்ளம் கொண்டிருந்தனர். 

லூஸியா கருதுவதன்படி, அப்போதே ஜஸிந்தா தேவ உணர்த்துதல் ஞானத்தைப் பெற்றுக்கொண்டிருந்திருக்க வேண்டும். வரவிருந்த பல காரியங்களை அவள் முன்னுணர்ந்ததாகத் தெரிகிறது. ஒரு நாள் கடும் நோயால் அவதிப்பட்ட ஒரு பெண்ணுக் காக ஜஸிந்தா மூன்று அருள் நிறை மந்திரங்கள் சொல்லி அன்னையிடம் வேண்டியவுடன் அப்பெண்ணின் நோய் முற்றும் நீங்கியது.