தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிற ஓர் ஆத்துமத்தின் ஜெபம்

ஓ என் சர்வேசுரா, உமது திருப்பாதங்களண்டையில் விழுந்து கிடக்கிற அடியேனைக் கண்ணோக்கியருளும். உமது இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள நான் தகுதியற்றவன். ஆயினும், என் இரட்சகரே, எனக்காகத் தேவரீர் சிந்திய திரு இரத்தம் என்னை ஊக்குவித்து, அதன் மீது நான் நம்பிக்கை கொண்டிருக்க என்னைத் தூண்டுகிறது. எவ்வளவு அடிக்கடி உமக்கெதிராக நான் குற்றம் செய்திருக்கிறேன்! ஆயினும் இப்போது திரும்பவும் அதே பாவத்திற்குள் நான் விழுந்திருக்கிறேன்.

ஓ என் சர்வேசுரா, நான் திருந்த விரும்புகிறேன். உமக்குப் பிரமாணிக்கமாக இருக்கும்படியாக, என் நம்பிக்கை எல்லாம் உம்பேரில் வைக்கிறேன். நான் சோதிக்கப்படும் போதெல்லாம், உடனடியாக உமது அடைக்கலத்தைத் தேடுவேன். இது வரையிலும் அடியேன் என் சொந்த வாக்குத்தத்தங்களையும், பிரதிக்கினைகளையும் நம்பியவனாக, என் சோதனைகளில் உமது அடைக்கலத்தில் என்னை ஒப்புவிப்பதை அசட்டை செய்து வந்தேன். திரும்பத் திரும்ப என் தோல்விகளுக்கு இதுவே காரணமாக இருந்திருக்கிறது. இந்த நாள் முதல், ஓ என் ஆண்டவரே, நீர்தாமே என் பலமாயிருப்பீராக. இவ்வாறு எல்லாக் காரியங்களையும் செய்வது என்னால் கூடுமாயிருக்கும். ஏனெனில், என்னைத் திடப் படுத்துகிறவரைக் கொண்டு சகலத்தையும் செய்ய என்னால் கூடும்.