மத்தேயு

அதிகாரம் 01

1 தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது:

2 ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுக்கு யூதாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள்.

3 யூதாவுக்குப் பாரேசும் சாராவும் தாமாரிடம் பிறந்தார்கள். பாரேசுக்கு எஸ்ரோம் பிறந்தார். எஸ்ரோமுக்கு ஆராம் பிறந்தார்.

4 ஆராமுக்கு அம்மினதாப் பிறந்தார். அம்மினதாபுக்கு நசசோன் பிறந்தார். நகசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.

5 சல்மோனுக்கு ராகாபிடம் போவாஸ் பிறந்தார். போவாசுக்கு ரூத்திடம் ஓபேத் பிறந்தார். ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.

6 ஈசாயுக்குத் தாவீது அரசர் பிறந்தார். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலொமோன் பிறந்தார்.

7 சாலொமோனுக்கு ரெகொபெயாம் பிறந்தார். ரெகொபெயாமுக்கு அபியா பிறந்தார் அபியாவுக்கு ஆசா பிறந்தார்.

8 ஆசாவுக்கு யோசபாத் பிறந்தார். யோசபாத்துக்கு யோராம் பிறந்தார். யோராமுக்கு உசியா பிறந்தார்.

9 உசியாவுக்கு யோதாம் பிறந்தார். யோதாமுக்கு ஆகாஸ் பிறந்தார். ஆகாசுக்கு எசேக்கியா பிறந்தார்.

10 எசேக்கியாவுக்கு மனாசே பிறந்தார். மனாசேயுக்கு ஆமோன் பிறந்தார். ஆமோனுக்கு யோசியா பிறந்தார்.

11 யோசியாவுக்கு எகொனியாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள். பாபிலோனுக்கு யூதர்கள் நாடுகடத்தப்பட்டது இக்காலத்தில்தான்.

12 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் எகொனியாவுக்கு சலாத்தியேல் பிறந்தார். சலாத்தியேலுக்கு சொரொபாபேல் பிறந்தார்.

13 சொரொபாபேலுக்கு அபியூத் பிறந்தார். அபியூத்துக்கு எலியாக்கீம் பிறந்தார். எலியாக்கீமுக்கு ஆசோர் பிறந்தார்.

14 ஆசோருக்கு சாதோக்கு பிறந்தார். சாதோக்குக்கு ஆகீம் பிறந்தார். ஆகீமுக்கு எலியூத் பிறந்தார்.

15 எலியூதுக்கு எலெயாசார் பிறந்தார். எலெயாசாருக்கு மாத்தான் பிறந்தார். மாத்தானுக்கு யாக்கோபு பிறந்தார்.

16 யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார். இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்.

17 ஆகமொத்தம்: ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறை பதினான்கு; தாவீதுமுதல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுவரை தலைமுறை பதினான்கு; பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுமுதல் கிறிஸ்துவரை தலைமுறை பதினான்கு.

18 இயேசு கிறிஸ்து தோன்றியது பின்வருமாறு: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசைக்கும் மண ஒப்பந்தம் ஆயிருக்க, அவர்கள் கூடிவாழுமுன் பரிசுத்த ஆவியினால் அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்தது.

19 அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

20 இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

22 ' இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் ' என்று ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகக் கூறியது நிறைவேறும்படியே இவையனைத்தும் நிகழ்ந்தன.

23 இம்மானுவேல் என்றால், ' நம்மோடு கடவுள் ' என்பது பொருள்.

24 சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

25 அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார். அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்.

அதிகாரம் 02

1 ஏரோது அரசன்காலத்தில், யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் இயேசு பிறந்திருக்க, இதோ! ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து யெருசலேமுக்கு வந்து,

2 "யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே, அவர் எங்கே ? அவருடைய விண்மீன் எழுதலைக் கண்டு, அவரை வணங்க வந்தோம்" என்றார்கள்.

3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவ்வாறே யெருசலேம் முழுவதும் கலங்கிற்று.

4 அப்பொழுது அவன், தலைமைக் குருக்கள், மக்களுள் மறைநூல் அறிஞர் அனைவரையும் கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான்.

5 அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்;

6 ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லெகேமே, யூதாவின் நகரங்களிலே நீ சிறியதே அல்லை. ஏனெனில், என் மக்கள் இஸ்ராயேலை மேய்க்கவேண்டிய தலைவர் உன்னிடமிருந்தே தோன்றுவார் ' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.

7 அப்போது, ஏரோது அந்த ஞானிகளை மறைவாக அழைத்து, அவர்களுக்கு விண்மீன் தோன்றியது எப்பொழுது என்று அவர்களிடம் கருத்தாய்க் கேட்டு அறிந்துகொண்டான்.

8 பின்பு அவர்களைப் பெத்லெகேமுக்குப் போகச் சொல்லி, "நீங்கள் சென்று குழந்தையைப்பற்றிக் கருத்தாய் ஆராய்ந்து பாருங்கள்; அவரைக் கண்டபின் எனக்குத் தெரிவியுங்கள். நானும் போய் அவரை வணங்கவேண்டும்" என்றான்.

9 அவர்கள் அரசன் கூறியதைக் கேட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழக்கண்ட அந்த விண்மீன், குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை, அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.

10 விண்மீனைக் கண்டதும் அவர்கள் அளவில்லா மகிழ்ச்சியுற்றனர்.

11 வீட்டிற்குள் போய், பிள்ளையை அதன் தாய் மரியாளுடன் கண்டு, தெண்டனிட்டு வணங்கினர். தம் பேழைகளைத் திறந்து பொன்னும் தூபமும் வெள்ளைப்போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்.

12 ' ஏரோதிடம் மீண்டும் செல்லவேண்டாம் ' என்று கனவில் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினர்.

13 அவர்கள் சென்றபின், இதோ! ஆண்டவரின் தூதர் சூசைக்குக் கனவில் தோன்றி, "எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். நான் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையைத் தொலைக்க ஏரோது தேடப்போகிறான்" என்றார்.

14 அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் இரவிலேயே கூட்டிக்கொண்டு, எகிப்துக்குச் சென்றார்.

15 ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ' எகிப்திலிருந்து என் மகனை அழைத்தேன் ' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.

16 பின்னர் ஏரோது, ஞானிகள் தன்னை ஏமாற்றியதைக் கண்டு, கடுங்கோபமுற்று, ஆட்களை அனுப்பி, ஞானிகளிடம் கருத்தாய்க் கேட்டறிந்த காலத்தின்படி பெத்லெகேமிலும், அதன் சுற்றுப்புறமெங்கும் இரண்டு வயதும் அதற்கு உட்பட்டதுமான ஆண்குழந்தைகளையெல்லாம் கொன்றான்.

17 ' ராமாவிலே கூக்குரல் கேட்டது. பேரழுகையும் ஒப்பாரியுமாக இருந்தது.

18 ராக்கேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டு, அவை இல்லாமையால் ஆறுதல் பெறவிரும்பவில்லை ' என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறிற்று.

19 ஏரோது இறந்ததும், இதோ! ஆண்டவரின் தூதர் எகிப்தில் சூசைக்குக் கனவில் தோன்றி,

20 "எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில், குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடினவர்கள் இறந்துவிட்டனர்" என்றார்.

21 அவர் எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ராயேல் நாட்டுக்கு வந்தார்.

22 ஆனால் யூதேயாவிலே, அர்கெலாவு தன் தந்தை ஏரோதிற்குப் பதிலாக அரசாள்வதாகக் கேள்வியுற்று அங்குச் செல்ல அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டு கலிலேயா நாட்டுக்குச் சென்றார்.

23 சென்று, நாசரேத்து என்னும் ஊரில் குடியிருந்தார். இவ்வாறு, ' நாசரேயன் எனப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் கூறியது நிறைவேற வேண்டியிருந்தது.

அதிகாரம் 03

1 அக்காலத்திலே, ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி,

2 மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார்.

3 இவரைப்பற்றியே, ' ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள், எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளார்.

4 இந்த அருளப்பர் உடுத்தியது, ஒட்டக மயிராடை; இடையில் கட்டியது, வார்க்கச்சை; உண்டது, வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும்.

5 யெருசலேமிலும் யூதேயா முழுவதிலும், யோர்தானை அடுத்த நாடெங்கும் வாழ்ந்தோர் அவரிடம் போய்,

6 தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றுவந்தனர்.

7 பரிசேயர், சதுசேயருள் பலர் நம்மிடம் ஞானஸ்நானம் பெற வருவதைக் கண்டு, அவர்களைப் பார்த்து, "விரியன்பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள, உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் யார் ?

8 எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள்.

9 ' ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை ' என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம். இக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.

10 ஏற்கனவே அடி மரத்தில் கோடரி வைத்தாயிற்று. நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, தீயில் போடப்படும்.

11 நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

12 அவர், சுளகைக் கையில் கொண்டு, தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார்" என்றார்.

13 பின்னர், இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.

14 அருளப்பரோ, "நானே உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க, நீரா என்னிடம் வருவது ?" என்று சொல்லி அவரைத் தடுக்கப்பார்த்தார்.

15 அதற்கு இயேசு, "இப்போதைக்கு விட்டுவிடும். ஏனெனில், இவ்வாறு நாம் நியமங்களெல்லாம் நிறைவேற்றுவது தகுதியே" என்று பதில் உரைக்க, அவரைத் தடைசெய்யாமல் விட்டுவிட்டார்.

16 ஞானஸ்நானம் பெற்றவுடன் இயேசு தண்ணீரை விட்டு வெளியேறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் ஆவியானவர் புறாவைப்போலத் தம்மீது இறங்கிவருவதைக் கண்டார்.

17 அப்போது வானிலிருந்து, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று ஒரு குரலொலி கேட்டது.

அதிகாரம் 04

1 பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுமாறு பாலைவனத்திற்கு ஆவியானவரால் அழைத்துச் செல்லப்பெற்றார்.

2 அங்கு நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பிருந்தபின் பசியுற்றார்.

3 சோதிப்பவன் அவரை அணுகி, "நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்" என்றான்.

4 அவரோ மறுமொழியாக: " ' மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் ' என எழுதியிருக்கின்றதே" என்றார்.

5 பின்னர் அலகை, அவரைத் திருநகரத்திற்குக் கொண்டுபோய்க் கோவில் முகட்டில் நிறுத்தி,

6 "நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்; ஏனெனில், ' தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார், உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் ' என எழுதியுள்ளது" என்று சொல்ல,

7 இயேசு அதனிடம், " ' உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே ' எனவும் எழுதியிருக்கின்றது" என்றார்.

8 மீண்டும் அலகை அவரை மிக உயர்ந்த மலைக்குக் கொண்டுபோய் உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி, ஃ

9 "நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது.

10 அப்பொழுது இயேசு அதனை நோக்கி, "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றது" என்றார்.

11 பின்னர் அலகை அவரை விட்டகன்றது. அப்போது வானதூதர் அணுகி, அவருக்குப் பணிவிடை புரிந்தனர்.

12 அருளப்பர் சிறைப்பட்டதைக் கேள்வியுற்று இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார்.

13 அவர் நாசரேத்தூரை விட்டு, செபுலோன், நப்தலி நாட்டில் கடலோரமாயுள்ள கப்பர்நகூமுக்கு வந்து குடியிருந்தார்.

14 இசையாஸ் இறைவாக்கினர் பின்வருமாறு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது:

15 ' செபுலோன் நாடே! நப்தலி நாடே! கடல் நோக்கும் வழியே! யோர்தான் அக்கரைப் பகுதியே! புறவினத்தார் வாழும் கலிலேயாவே! 16 இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்தது. '

17 அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

18 கலிலேயாக் கடலோரமாய் இயேசு நடந்து செல்லுகையில், இராயப்பர் என்னும் சீமோனும், அவர் சகோதரர் பெலவேந்திரருமாகிய இரு சகோதரரைக் கண்டார். அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தனர். ஏனெனில், அவர்கள் மீன் பிடிப்போர்.

19 அவர்களைப் பார்த்து, "என் பின்னே வாருங்கள்; உங்களை, மனிதரைப் பிடிப்போராக்குவேன்" என்றார்.

20 உடனே அவர்களும் வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

21 அங்கிருந்து அப்பால் சென்று, செபெதேயுவின் மகன் யாகப்பரும், அவர் சகோதரர் அருளப்பருமாகிய வேறு இரு சகோதரர், தம் தந்தை செபெதேயுவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களை அழைத்தார்.

22 உடனே அவர்கள் தம் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு, அவரைப் பின்சென்றனர்.

23 அவர் கலிலேயா எங்கும் சுற்றி, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, மக்களிடையே எல்லா நோயையும் பிணியையும் குணமாக்கிவந்தார்.

24 அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது. பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும், பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.

25 கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

அதிகாரம் 05

1 இயேசு திரளான கூட்டத்தைக் கண்டு, மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரை அணுகினர்.

2 அவர் திருவாய் மலர்ந்து போதிக்கலானார்:

3 "எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

4 துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர்.

5 சாந்தமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், மண்ணுலகு அவர்களது உரிமையாகும்.

6 நீதியின்பால் பசிதாகமுள்ளோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்.

7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்.

8 தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்.

9 சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்.

10 நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே.

11 என்பொருட்டுப் பிறர் உங்களை வசைகூறித் துன்புறுத்தி, உங்கள்மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது, நீங்கள் பேறுபெற்றோர்.

12 அகமகிழ்ந்து களிகூருங்கள். ஏனெனில், வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் இவ்வாறே துன்புறுத்தினர்.

13 "உலகிற்கு உப்பு நீங்கள். உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் பெறும் ? இனி, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடுமேயொழிய, ஒன்றுக்கும் உதவாது.

14 "உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.

15 மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்; மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.

16 அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.

17 "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ அழிக்க வந்தேனென்று நினைக்க வேண்டாம். அழிப்பதற்கன்று, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

18 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகுமுன் திருச்சட்டத்தின் ஒரு சிற்றெழுத்தோ புள்ளியோ ஒழிந்துபோகாது; எல்லாம் நிறைவேறும்.

19 ஆகையால்,இச்சின்னஞ் சிறு கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அப்படியே மனிதர்க்கும் போதிப்பவன், விண்ணரசில் மிகச் சிறியவன் எனப்படுவான். அவற்றைக் கடைப்பிடித்துப் போதிப்பவனோ, விண்ணரசில் பெரியவன் எனப்படுவான்.

20 உங்களுக்குச் சொல்லுகிறேன்: மறைநூல் அறிஞர், பரிசேயர் இவர்களின் ஒழுக்கத்தைவிட உங்கள் ஒழுக்கம் சிறந்திராவிட்டால், விண்ணரசு சேரமாட்டீர்கள்.

21 'கொலை செய்யாதே, கொலை செய்வோன் தீர்ப்புக்குள்ளாவான்' என்று முன்னோர்க்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

22 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தன் சகோதரனிடம் சினம் கொள்வோன் தீர்ப்புக்குள்ளாவான். தன் சகோதரனை 'முட்டாள்' என்பவன், தலைமைச் சங்கத் தீர்ப்புக்குள்ளாவான். அவனை 'மதிகெட்டவனே' என்பவனோ எரிநரகத்திற்குள்ளாவான்.

23 நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து.

25 "நீ உன் எதிரியோடு போகும்போது, வழியிலேயே அவனுடன் விரைவாகச் சமரசம் செய்துகொள். இல்லையேல், உன் எதிரி உன்னை நீதிபதியிடம் கையளிக்க, நீதிபதி உன்னைக் காவலனிடம் கையளிக்கக்கூடும்; நீ சிறையில் அடைபட நேரிடும்.

26 உறுதியாகவே உனக்குச் சொல்லுகிறேன்: கடைசிக் காசை நீ கொடுத்துத் தீர்க்கும்வரை, அங்கிருந்து வெளியேறமட்டாய்.

27 " ' விபசாரம் செய்யாதே ' என்று முன்னோர்களுக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

28 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்குபவன் எவனும், ஏற்கெனவே தன்னுள்ளத்தில் அவளோடு விபசாரம் செய்தாயிற்று.

29 "உன் வலக்கண் உனக்கு இடறலாயிருந்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.

30 உன் வலக்கை உனக்கு இடறலாயிருந்தால், அதை வெட்டி எறிந்துவிடு. உன் உடல் முழுவதும் நரகத்துக்குச் செல்வதை விட, உன் உறுப்புகளுள் ஒன்று அழிந்துபோவது உனக்கு நலம்.

31 தன் மனைவியை விலக்கிவிடுகிறவன் எவனும் அவளுக்கு முறிவுச்சீட்டு கொடுக்கட்டும்' என்று கூறியுள்ளது. நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்:

32 கெட்ட நடத்தைக்காக அன்றி எவெனாருவன் தன் மனைவியை விலக்கிவிடுகிறானோ, அவன் அவளை விபசாரியாகும்படி செய்கிறான். விலக்கப்பட்டவளை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.

33 "மேலும், 'பொய்யாணை இடாதே, ஆணையிட்டு நேர்ந்துகொண்டதை ஆண்டவருக்குச் செலுத்து' என்று முன்னோருக்குச் சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

34 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது கடவுளின் அரியணை.

35 மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது கடவுளின் கால்மணை. யெருசலேமின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம்.

36 உன் தலையின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உன் தலைமயிர் ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ, கறுப்பாக்கவோ உன்னால் இயலாது.

37 உங்கள் பேச்சு, 'ஆம் என்றால், ஆம்; இல்லை என்றால், இல்லை' என்று இருக்கட்டும். இதற்கு மிஞ்சினதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.

38 "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

39 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: தீயோனை எதிர்க்கவேண்டாம். ஆனால் யாராவது உன் வலக்கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு.

40 யாராவது வழக்காடி, உன் உள்ளாடையை எடுத்துக்கொள்ள விரும்பினால், அவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.

41 யாராவது உன்னை ஒரு கல் தொலைவு வரக் கட்டாயப்படுத்தினால், இரு கல் தொலைவு அவனோடு செல்.

42 கேட்கிறவனுக்குக் கொடு; உன்னிடம் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதே.

43 அயலானுக்கு அன்பு; பகைவனுக்கு வெறுப்பு' என்று சொல்லியுள்ளதைக் கேட்டிருக்கிறீர்கள்.

44 நானோ உங்களுக்குச் சொல்லுகின்றேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்.

45 அப்பொழுது வானகத்திலுள்ள உங்கள் தந்தையின் மக்களாயிருப்பீர்கள். அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரோனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளோர் மேலும் நீதியற்றோர் மேலும் மழை பொழியச் செய்கிறார்.

46 உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? ஆயக்காரரும் இவ்வாறே செய்வதில்லையா?

47 உங்கள் சகோதரருக்கு மட்டும் வணக்கம் செய்வீர்களாகில், நீங்கள் என்ன பெரிய காரியம் செய்கிறீர்கள்? புறவினத்தாரும் இவ்வாறே செய்வதில்லையா?

48 ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

அதிகாரம் 06

1 "மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள். இல்லையேல், வானகத்திலுள்ள உங்கள் தந்தையிடம் உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

2 எனவே, நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே. அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3 நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். அப்பொழுது,

4 நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்; மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

5 "நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்; ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர். அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

7 செபம் செய்யும்பொழுது, புறவினத்தாரைப்போல நீங்கள் பிதற்றவேண்டாம். அதிகம் பேசுவதால், தங்கள் செபம் கேட்கப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

8 நீங்கள் அவர்களைப் போல் இருக்கவேண்டாம். நீங்கள் கேட்பதற்கு முன்னமே உங்களுக்குத் தேவையானது இன்னது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.

9 "ஆதலால், நீங்கள் இவ்வாறு செபியுங்கள்: வானகத்திலுள்ள எங்கள் தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக,

10 உமது அரசு வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக.

11 எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.

12 எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.

13 எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.

14 "மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில், உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.

15 மனிதரை நீங்கள் மன்னியாவிடில், உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்கமாட்டார்.

16 "நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்கவேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டுத் தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

17 நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு.

18 அப்பொழுது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல், மறைவாயுள்ள உன் தந்தைக்குமட்டும் தெரியும். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

19 "மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.

20 ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

21 உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

22 "உன் கண்தான் உன் உடலுக்கு விளக்கு; உன் கண் தெளிவாயிருந்தால் உன் உடல் முழுதும் ஒளியுள்ளதாய் இருக்கும்.

23 உன் கண் கெட்டிருந்தால் உன் உடல் முழுவதும் இருண்டிருக்கும். ஆகவே உன்னுள் இருக்கும் ஒளியே இருளாயிருந்தால், இருள் என்னவாயிருக்கும்!

24 "எவனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்யமுடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனுக்கு அன்பு செய்வான். அல்லது, ஒருவனைச் சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது.

25 "ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர்வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலை மூட எதை உடுப்பது என்றோ கவலைப்பட வேண்டாம். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவையல்லவா ?

26 வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றிலும் மிக மேலானவர்களன்றோ ?

27 கவலைப்படுவதனால் உங்களில் எவன் தன் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்டமுடியும் ?

28 உங்கள் உடையைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள் ? வயல்வெளி மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை.

29 ஆயினும் சாலொமோன்கூடத் தன் மாட்சியிலெல்லாம் இவற்றில் ஒன்றைப்போலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

30 குறைவான விசுவாசம் உள்ளவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் வயல்வெளிப் புல்லைக் கடவுள் இவ்வாறு உடுத்துவாரானால் உங்களுக்கு எவ்வளவுதான் செய்யமாட்டார்!

31 ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.

32 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர். உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.

33 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்; இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

34 நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். நாளைய தினம் தன்னைப்பற்றிக் கவலைகொள்ளும். அன்றன்றைய தொல்லை அன்றன்றைக்குப் போதும்.

அதிகாரம் 07

1 "நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்.

2 எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.

3 உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?

4 உன் சகோதரனை நோக்கி, ' உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க விடு ' என்று நீ எப்படிச் சொல்லலாம் ? இதோ! உன் கண்ணிலே விட்டம் இருக்கிறதே.

5 வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி; பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும்.

6 பரிசுத்தமானதை நாய்களுக்குப் போடவேண்டாம். உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் எறியவும் வேண்டாம்; எறிந்தால், அவை அவற்றைக் காலால் மிதித்து உங்களை எதிர்த்துப் பீறிவிடலாம்.

7 "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

8 ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

9 தன் மகன் அப்பம் கேட்டால் ஒருவன் கல்லைக் கொடுப்பானா ? உங்களில் யாராவது அப்படிச் செய்வானா ?

10 அல்லது அவன் மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பானா ?

11 ஆகவே தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்! 12 "ஆகையால் உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் இதுவே.

13 "இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழி பரந்தது; அதன் வழியே நுழைபவரும் பலர்.

14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் எவ்வளவோ ஒடுக்கமானது; வழி எவ்வளவோ இடுக்கானது. இதைக் கண்டுபிடிப்பவரும் சிலரே.

15 "போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்; உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள்.

16 அவர்கள் கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்புதர்களில் அத்திப் பழங்களையோ பறிப்பாருண்டோ ?

17 அவ்வண்ணமே, நல்ல மரமெல்லாம் நல்ல பழம் கொடுக்கும்; தீய மரமோ தீய பழம் கொடுக்கும்;

18 நல்ல மரம் தீய பழம் கொடாது. தீய மரமும் நல்ல பழம் கொடாது.

19 நல்ல பழம் கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்.

20 ஆதலால் அவர்கள் கனிகளைக்கொண்டே அவர்களை அறிந்துகொள்வீர்கள்.

21 "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான். அந்நாளில் பலர் என்னை நோக்கி,

22 'ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் தீர்க்கதரிசனம் கூறவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் புதுமை பல செய்யவில்லையா?' என்பர்.

23 அதற்கு, 'உங்களை நான் அறிந்ததேயில்லை. நெறிகெட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று அவர்களுக்கு நான் வெளிப்படையாகச் சொல்லுவேன்.

24 "ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்.

25 மழை பெய்தது, வெள்ளம் வந்தது, புயலடித்து அவ்வீட்டின்மேல் மோதியது. ஆனால், அது விழவில்லை. ஏனென்றால், கற்பாறையின்மேல் ஊன்றியிருந்தது.

26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடக்காதவன் எவனும் மணல்மீது தன் வீட்டைக் கட்டிய மூடனுக்கு ஒப்பாவான்.

27 மழை பெய்தது, வெள்ளம் வந்தது, புயலடித்து அவ்வீட்டின்மேல் மோதியது. அது விழுந்தது. பெரிது அதன் அழிவு! "

28 இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்ததும் மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு மலைத்துப்போயினர்.

29 ஏனெனில், அவர் மறைநூல் அறிஞர்போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்.

அதிகாரம் 08

1 அவர் மலையினின்று இறங்கியபின் பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.

2 இதோ! தொழுநோயாளி ஒருவன் வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்றான்.

3 இயேசு கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் குணமாயிற்று.

4 இயேசு அவனை நோக்கி, "பார்! ஒருவருக்கும் சொல்லாதே. ஆனால், போய் உன்னைக் குருவிடம் காட்டி, மோயீசன் கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார்.

5 அவர் கப்பர்நகூம் ஊருக்குள் போனபோது, நூற்றுவர்தலைவன் ஒருவன் அவரிடம் வந்து அவரை வேண்டி,

6 "ஆண்டவரே, என் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான்" என்றான்.

7 இயேசு அவனை நோக்கி, "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" என்றார்.

8 நூற்றுவர்தலைவன் மறுமொழியாகக் கூறியதாவது: "ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்; என் ஊழியன் குணமடைவான்.

9 ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும், எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால் போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால் வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, 'இதைச் செய்' என்றால் செய்கிறான்."

10 இதைக் கேட்டு இயேசு வியந்து தம்மைப் பின்தொடர்ந்தவர்களை நோக்கி, "இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11 கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து விண்ணரசில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுடன் பந்தி அமர்வார்கள்.

12 அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

13 பின்னர் இயேசு நூற்றுவர்தலைவனை நோக்கி, "நீ போகலாம், விசுவசித்தபடியே உனக்கு ஆகட்டும்" என்று சொன்னார். அந்நேரமே ஊழியன் குணமடைந்தான்.

14 இயேசு இராயப்பரின் வீட்டுக்கு வந்து, அவருடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடப்பதைக் கண்டார்.

15 அவர் அவளுடைய கையைத் தொடவே, காய்ச்சல் அவளை விட்டு நீங்கியது. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை புரிந்தாள்.

16 மாலையானதும் பேய்பிடித்த பலரை அவரிடம் கொண்டுவந்தனர். அவர் பேய்களை ஒரு வார்த்தையால் ஓட்டினார்; நோயுற்ற அனைவரையும் குணமாக்கினார். இவ்வாறு,

17 ' அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் நோய்களைச் சுமந்துகொண்டார் ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது நிறைவேற வேண்டியிருந்தது.

18 பெருங்கூட்டம் தம்மைச் சூழ்ந்திருப்பதை இயேசு கண்டு அக்கரைக்குச் செல்லக் கட்டளையிட்டார்.

19 மறைநூல் அறிஞன் ஒருவன் வந்து, "போதகரே, நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்லுவேன்" என்று அவரிடம் சொன்னான்.

20 இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு; வானத்துப் பறவைகளுக்குக் கூடுகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.

21 அவருடைய சீடர்களுள் இன்னொருவன் அவரை நோக்கி, "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர விடை கொடும்" என்றான்.

22 இயேசு அவனைப் பார்த்து, "என்னைப் பின்செல். இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும்" என்றார்.

23 அவர் படகில் ஏறவே, அவருடைய சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர்.

24 இதோ! கடலில் மாபெரும் கொந்தளிப்பு ஏற்பட, படகுக்குமேல் அலைகள் எழுந்தன. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.

25 சீடர் அவரிடம் வந்து அவரை எழுப்பி, "ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்; மடிந்துபோகிறோம்" என்றனர்.

26 இயேசு அவர்களை நோக்கி, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, ஏன் இவ்வளவு பயம் ?" என்று கூறி, எழுந்து காற்றையும் கடலையும் கடியவே, பேரமைதி உண்டாயிற்று.

27 அங்கிருந்தவர்கள் வியந்து, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யார் ?" என்றனர்.

28 அவர் அக்கரை சேர்ந்து, கதரேனர் நாட்டிற்கு வந்தபோது, பேய்பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, அவருக்கு எதிரே வந்தனர். அவர்கள் எவ்வளவு கொடியவர்கள் என்றால், அவ்வழியே யாரும் போகமுடியாது.

29 இதோ! அவர்கள், "கடவுளின் மகனே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர்? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்க இங்கே வந்தீரோ?" என்று கத்தினர்.

30 அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் பன்றிகள் பல கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.

31 அப்போது பேய்கள் அவரை நோக்கி, "நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்பும்" என்று வேண்டின.

32 அவர், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே, கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் மடிந்தது.

33 பன்றிகளை மேய்த்தவர்களோ ஓடிப்போய் நகருக்குச் சென்று எல்லாவற்றையும், பேய்பிடித்தவர்களைப்பற்றிய செய்தியையும் அறிவித்தார்கள்.

34 இதோ! நகரினர் அனைவரும் இயேசுவை எதிர்கொண்டு போய் அவரைக் கண்டு, தம் நாட்டை விட்டு அகலுமாறு அவரை வேண்டினர்.

அதிகாரம் 09

1 அவர் படகேறி அக்கரை சென்று தம் சொந்த ஊரையடைந்தார்.

2 இதோ! திமிர்வாதக்காரன் ஒருவனைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டுவந்தனர். இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

3 அப்போது மறைநூல் அறிஞர் சிலர், "இவர் கடவுளைத் தூஷிக்கிறார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டனர்.

4 இயேசு, அவர்கள் சிந்தனைகளை அறிந்து கூறியதாவது:

5 "உங்கள் உள்ளங்களில் தீயன சிந்திப்பானேன் ? எது எளிது ? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா ?

6 எழுந்து நட என்பதா? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு" - திமிர்வாதக்காரனை நோக்கி - "எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.

7 அவன் எழுந்து தன் வீடு சென்றான்.

8 இதைக் கண்ட மக்கட்கூட்டம் அஞ்சி, இத்தகைய வல்லமையை மனிதருக்கு அளித்த கடவுளை மகிமைப்படுத்திற்று.

9 இயேசு அங்கிருந்து போகையில், மத்தேயு என்ற ஒருவர் சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி, "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.

10 பின், அவர் வீட்டில் இயேசு பந்தியமர்ந்திருக்கையில் இதோ! ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.

11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

12 இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

13 ' பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

14 அப்பொழுது அருளப்பருடைய சீடர்கள் அவரிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.

15 இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும், அவன் தோழர்கள் துக்கம் கொண்டாடலாமா ? மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்; அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

16 பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும்; கிழியலும் பெரிதாகும்.

17 புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ்சித்தைகளில் ஊற்றி வைப்பதில்லை. வைத்தால் சித்தைகள் வெடிக்கும்; இரசம் சிந்திப்போகும்; சித்தைகளும் பாழாகும். ஆனால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் கெடாமலிருக்கும்" என்றார்.

18 அவர்களுடன் இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, தலைவன் ஒருவன் அவரை அணுகிப் பணிந்து, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்; ஆயினும் நீர் வந்து அவள்மீது உமது கையை வையும்; அவள் உயிர் பெறுவாள்" என்றான்.

19 இயேசு எழுந்து தம் சீடர்களோடு அவன் பின்னே சென்றார்.

20 இதோ! பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி பின்புறமாக வந்து, அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.

21 "நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து, "மகளே, தைரியமாயிரு; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரமுதல் அவள் குணமாயிருந்தாள்.

23 இயேசு, தலைவன் வீட்டுக்கு வந்தபோது, தாரை ஊதுவோரையும், சந்தடி செய்யும் கூட்டத்தையும் கண்டு,

24 "விலகிப்போங்கள்; சிறுமி சாகவில்லை; தூங்குகிறாள்" என்றார்.

25 அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். கும்பலை வெளியேற்றிவிட்டு, அவர் உள்ளே சென்று, அவள் கையைப் பிடிக்கவே, சிறுமி எழுந்தாள்.

26 இச்செய்தி அந்நாடெங்கும் பரவிற்று.

27 இயேசு அங்கிருந்து போகையில், இரு குருடர் அவரைப் பின்தொடர்ந்து, "தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்" என்று கூவினர்.

28 அவர் வீடு வந்து சேர்ந்ததும், குருடர் அவரிடம் வர, இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு நான் இதைச் செய்ய முடியும் என விசுவசிக்கிறீர்களா ?" என்றார்.

29 "ஆம், ஆண்டவரே" என்றனர். பின் அவர் அவர்களுடைய கண்களைத் தொட்டு "உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகட்டும்" என்றார்.

30 அவர்களுடைய கண்கள் திறந்தன. "இது யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

31 அவர்களோ வெளியே போய் அவரைப்பற்றி நாடெங்கும் பேசலாயினர்.

32 அவர்கள் சென்றபின், இதோ! பேய்பிடித்த ஊமையன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தனர்.

33 அவர் பேயை ஓட்ட, ஊமையன் பேசினான். மக்கட்கூட்டம் வியப்புற்று, "இப்படி ஒருகாலும் இஸ்ராயேலில் கண்டதில்லை" என்றது.

34 பரிசேயரோ, "இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.

35 இயேசு, நகரங்கள், ஊர்கள் எல்லாம் சுற்றி வந்து, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, நோய் பிணியெல்லாம் குணமாக்கி வந்தார்.

36 அவர் மக்கட்கூட்டத்தைக் கண்டு, அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், அவர்கள்மேல் மனமிரங்கினார்.

37 அப்பொழுது அவர் தம் சீடர்களை நோக்கி, "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு.

38 ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்றார்.

அதிகாரம் 10

1 அவர் தம் சீடர் பன்னிருவரையும் அழைத்து நோய் பிணியெல்லாம் குணப்படுத்தவும், அசுத்த ஆவிகளை ஓட்டவும் அவற்றின்மேல் அதிகாரம் அவர்களுக்கு அளித்தார்.

2 பன்னிரு அப்போஸ்தலர்களின் பெயர்கள் பின்வருமாறு: முதல்வர் இராயப்பர் என்னும் சீமோன், அவர் சகோதரர் பெலவேந்திரர், செபெதேயுவின் மகன் யாகப்பர், அவர் சகோதரர் அருளப்பர்,

3 பிலிப்பு, பார்த்தொலொமேயு, தோமையார், ஆயக்கார மத்தேயு, அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு,

4 கனானேய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.

5 இப்பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில் கற்பித்ததாவது: "புறவினத்தாருடைய நாட்டுக்குச் செல்லவேண்டாம். சமாரியருடைய ஊரில் நுழைய வேண்டாம்.

6 சிதறிப்போன இஸ்ராயேல் குலத்து ஆடுகளிடமே செல்லுங்கள்.

7 சென்று, விண்ணரசு நெருங்கியுள்ளது என்று அறிவியுங்கள்.

8 நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தோரை உயிர்ப்பியுங்கள், தொழுநோயுற்றோரைச் சுகமாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்; இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

9 பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் மடியில் வைத்துக்கொள்ள வேண்டாம்.

10 பயணத்திற்குப் பையோ இரண்டு உள்ளாடையோ மிதியடிகளோ கோலோ எதுவும் வேண்டாம்; ஏனெனில், வேலையாள் தன் உணவிற்கு உரிமை உடையவன்.

11 "நீங்கள் எந்த நகருக்கு, எந்த ஊருக்குப் போனாலும், அங்கே தகுதியுள்ளவன் யார் என்று கேட்டறிந்து அங்கிருந்து போகும்வரை அவனிடம் தங்கியிருங்கள்.

12 நீங்கள் வீட்டுக்குள் போகும்போது, ' உங்களுக்குச் சமாதானம் ' என்று வாழ்த்துங்கள்.

13 அவ்வீடு தகுதியுள்ளதாயின், நீங்கள் கூறும் சமாதானம் அவ்வீட்டின்மேல் இறங்கும். தகுதியற்றதாயின் உங்கள் சமாதானம் உங்களிடமே திரும்பி வரும்.

14 யார் உங்களை ஏற்றுக்கொள்ளாது உங்கள் வார்த்தைகளுக்குச் செவிமடுப்பதில்லையோ, அவர்களுடைய வீட்டில் இருந்தோ, நகரத்தில் இருந்தோ வெளியே போகும்போது காலிலிருந்து தூசியைத் தட்டிவிடுங்கள்.

15 தீர்வைநாளில் சோதோம், கொமோரா நாட்டிற்கு நேரிடுவது அந்த நகரத்திற்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

16 "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளைப்போல் உங்களை நான் அனுப்புகிறேன். ஆகவே, பாம்புகளைப்போல விவேகம் உள்ளவர்களாயும், புறாக்களைப்போலக் கபடற்றவர்களாயும் இருங்கள்.

17 "எச்சரிக்கையாயிருங்கள்! மனிதர் உங்களை நீதிமன்றங்களுக்குச் கையளிப்பார்கள். தங்கள் செபக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.

18 என்பொருட்டு உங்களை ஆளுநரிடமும் அரசர்களிடமும் இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு, அவர்கள்முன்னும் புறவினத்தார்முன்னும் சாட்சியாய் இருப்பீர்கள்.

19 உங்களை இப்படிக் கையளிக்கும்போது என்ன சொல்லுவது, எப்படிச் சொல்லுவது என்று கவலைப்படவேண்டாம். என்ன சொல்லவேண்டுமென்பது அவ்வேளையில் உங்களுக்கு அருளப்படும்.

20 ஏனெனில், பேசுவது நீங்கள் அல்லீர்; உங்களில் இருந்து பேசுவது உங்கள் தந்தையின் ஆவியே.

21 "சகோதரன் சகோதரனையும், தந்தை மகனையும் சாவுக்குக் கையளிப்பர். மக்கள் பெற்றோருக்கு எதிராக எழுந்து அவர்களைக் கொலைசெய்வார்கள்.

22 என் பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பார்கள். இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்.

23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மனுமகன் வருவதற்குள் நீங்கள் இஸ்ராயேல் நாட்டு ஊர்களையெல்லாம் சுற்றிமுடிக்கமாட்டீர்கள் என்று உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

24 "சீடன் குருவுக்கு மேற்பட்டவன் அல்லன். ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன்.

25 குருவைப்போல் இருப்பது சீடனுக்குப் போதும்; தலைவனைப்போல் இருப்பது ஊழியனுக்குப் போதும். வீட்டுத் தலைவனையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், வீட்டாரை எவ்வளவு அதிகமாகச் சொல்லமாட்டார்கள்! 26 "எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், வெளிப்படாதபடி மறைந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாதபடி ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

27 நான் உங்களுக்கு இருளில் கூறுவதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். நீங்கள் காதோடு காதாய்க் கேட்பதைக் கூரைமீதிருந்து அறிவியுங்கள்.

28 "ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்லுவோருக்கு அஞ்சாதீர்கள். உடலையும் ஆன்மாவையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

29 காசுக்கு இரண்டு குருவி விற்பதில்லையா ? எனினும், அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையால் அன்றி, நிலத்தில் விழாது.

30 உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது.

31 எனவே, அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்.

32 "மனிதர்முன்னிலையில் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை நானும் வானகத்திலுள்ள என் தந்தையின் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வேன்.

33 மனிதர்முன்னிலையில் என்னை மறுதலிப்பவன் எவனோ, அவனை நானும் வானகத்திலுள்ள என் தந்தையின் முன்னிலையில் மறுதலிப்பேன்.

34 "உலகிற்குச் சமாதானம் கொணர வந்தேன் என்று நினைக்கவேண்டாம். சமாதானத்தை அன்று, வாளையே கொணர வந்தேன்.

35 தந்தைக்கு எதிராக மகனையும், தாய்க்கு எதிராக மகளையும், மாமிக்கு எதிராக மருமகளையும் பிரிக்க வந்தேன்.

36 தன் வீட்டாரே தனக்குப் பகைவர்.

37 "என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்.

38 தன் சிலுவையை ஏற்றுக்கொண்டு, என்னைப் பின்செல்லாதவன் எனக்கு ஏற்றவன் அல்லன்.

39 தன் உயிரைக் கண்டடைந்தவன் அதை இழந்துவிடுவான். எனக்காகத் தன் உயிரை இழந்தவனோ அதைக் கண்டடைவான்.

40 "உங்களை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்.

41 இறைவாக்கினரை இறைவாக்கினராக ஏற்றுக்கொள்பவன் இறைவாக்கினரின் கைம்மாறு பெறுவான். நீதிமானை நீதிமானாக ஏற்றுக்கொள்பவன் நீதிமானுடைய கைம்மாறு பெறுவான்.

42 "என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."

அதிகாரம் 11

1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் கட்டளை கொடுத்து முடிந்ததும், பக்கத்து ஊர்களில் போதிக்கவும் தூது உரைக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

2 அருளப்பரோ கிறிஸ்துவின் செயல்களைச் சிறையில் கேள்வியுற்று,

3 "வரப்போகிறவர் நீர்தாமோ? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று தம் சீடர்வழியாகக் கேட்டு அனுப்பினார்.

4 இயேசு மறுமொழியாக: "நீங்கள் கண்டதையும் கேட்டதையும் அருளப்பரிடம் போய் அறிவியுங்கள்.

5 குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவர்க்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.

6 என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்.

7 அவர்கள் போகும்போது இயேசு அருளப்பரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்குச் சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?

8 பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த மனிதனையோ? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசர் மாளிகையில் இருக்கின்றனர்.

9 பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10 இவரைப்பற்றித்தான்: 'இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று எழுதியுள்ளது.

11 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: "பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.

12 ஸ்நாபக அருளப்பர் நாள்முதல் இதுவரை, விண்ணரசு பலவந்தத்திற்கு உள்ளாகிவருகிறது; பலவந்தம் செய்வோர் அதைக் கைப்பற்றுகின்றனர்.

13 ஏனெனில், திருச்சட்டமும் இறைவாக்கினர் அனைவரும் அருளப்பர்வரை இறைவாக்கு உரைத்தனர்.

14 நீங்கள் ஏற்றுக்கொள்ள விரும்பினால், வர இருக்கும் எலியாஸ் இவரே.

15 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

16 "இத்தலைமுறையை யாருக்கு ஒப்பிடுவேன்? பொது இடத்தில் உட்கார்ந்து தம் தோழரைக் கூவியழைத்து:

17 'நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம் நீங்கள் மாரடிக்கவில்லை' என்று கூறும் சிறுவரைப்போன்றது.

18 ஏனெனில், அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பேய்பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள்.

19 மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்; அவரை ' இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்', என்கிறார்கள். ஆனால், தேவஞானம் சரியென்று அதன் செயலால் விளங்கிற்று."

20 அவர் புதுமை பல செய்த நகரங்கள் மனந்திரும்பாமையால் அவற்றைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்:

21 "கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.

22 எனினும், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

23 கப்பர் நகூமே, வானளாவ உயர்வாயோ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய். ஏனெனில், உன்னிடம் செய்த புதுமைகள் சோதோமில் செய்யப்பட்டிருப்பின், இந்நாள்வரை அது நிலைத்திருக்குமே.

24 எனினும், தீர்வைநாளில் சோதோம் நாட்டுக்கு நேரிடுவது உனக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

25 அவ்வேளையில் இயேசு கூறியதாவது: "தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன்.

26 ஆம், தந்தாய், இதுவே உமது திருவுளம்.

27 என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று, தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்.

28 "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். உங்களை நான் இளைப்பாற்றுவேன்.

29 உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.

30 ஆம், என் நுகம் இனிது, என் சுமை எளிது."

அதிகாரம் 12

1 அக்காலத்தில் இயேசு ஓய்வுநாளில் விளைச்சல்வழியே சென்றார். அவருடைய சீடர்களுக்குப் பசியெடுக்க, அவர்கள் கதிர்களைக் கொய்து தின்னத்தொடங்கினர்.

2 இதைக் கண்ட பரிசேயர் அவரை நோக்கி, "இதோ! உம் சீடர் ஓய்வுநாளில் செய்யத் தகாததைச் செய்கிறார்களே" என்றனர்.

3 அவரோ அவர்களிடம், "தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசித்ததில்லையோ ?

4 அவர் கடவுளின் ஆலயத்தில் நுழைந்து காணிக்கை அப்பங்களை உண்டார். அவரோடு இருந்தவர்களும் உண்டனர். அவற்றை அவரோ அவரோடு இருந்தவர்களோ உண்ணலாகாதன்றோ ? குருக்கள்மட்டுமே உண்ணலாம்.

5 ஓய்வுநாளில் குருக்கள் கோயிலில் ஓய்வை மீறினாலும் அது குற்றமாகாது என்று திருச்சட்டத்தில் நீங்கள் வாசித்ததில்லையோ ?

6 ஆனால் கோயிலைவிடப் பெரியது இங்கே இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

7 'பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருப்பின், குற்றமற்றோரைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள்.

8 ஏனெனில், மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.

9 அவர் அங்கிருந்து புறப்பட்டு அவர்களின் செபக்கூடத்திற்கு வந்தார்.

10 அங்கே சூம்பின கையன் ஒருவன் இருந்தான். அவர்மேல் குற்றம் சாட்டும்படி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா?" என்று கேட்டனர்.

11 அதற்கு அவர், "தனக்கு இருக்கும் ஒரே ஓர் ஆடும் ஓய்வுநாளில் குழியில் விழுந்துவிட்டால் உங்களில் எவனாவது அதைத் தூக்கிவிடாமல் இருப்பானா ?

12 ஆட்டைக்காட்டிலும் மனிதன் எவ்வளவோ மேலானவன்! ஆதலால், ஓய்வுநாளில் நன்மை செய்வது முறையே" என்றார்.

13 பின் அவனை நோக்கி, "உன் கையை நீட்டு" என்றார். நீட்டினான். அது மற்றக்கைபோலக் குணம் ஆயிற்று.

14 பரிசேயரோ வெளியே போய், அவரை எப்படித் தொலைக்கலாம் என்று அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.

15 இதை அறிந்து, இயேசு அங்கிருந்து விலகினார். அவரைப் பலர் பின்தொடர அவர்கள் அனைவரையும் குணமாக்கினார்.

16 தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொன்னார்.

17 இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது:

18 'இதோ நான் தேர்ந்தெடுத்த ஊழியன், இவரே என் அன்பர். இவரிடம் என் ஆன்மா பூரிப்படைகிறது, இவர்மேல் எனது ஆவியைத் தங்கச்செய்வேன்; புறவினத்தாருக்கு இவர் அறத்தை அறிவிப்பார்.

19 சச்சரவு செய்யமாட்டார், கூக்குரலிடவும் மாட்டார்; இவர் குரல் தெருவிலே கேட்காது.

20 அறம் வெற்றிபெறச் செய்யும்வரை இவர் நெரிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார்.

21 புறவினத்தார் இவர் பெயரில் நம்பிக்கை வைப்பர். '

22 அப்பொழுது பேய்பிடித்த ஒருவனை அவரிடம் கொண்டுவந்தனர். அவன் குருடும் ஊமையுமாய் இருந்தான். அவர் அவனைக் குணப்படுத்தினார். அவன் பேச்சும் பார்வையும் பெற்றான்.

23 கூட்டமெல்லாம் திகைத்துப்போய், "தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டது.

24 இதைக் கேட்ட பரிசேயரோ, "இவன் பேய் ஓட்டுவது, பேய்கள் தலைவனான பெயல்செபூலைக்கொண்டே" என்றனர்.

25 இயேசு அவர்கள் சிந்தனையை அறிந்து அவர்களை நோக்கிக் கூறியது: "தனக்கு எதிராகப் பிரியும் எந்த அரசும் பாழாய்ப்போம். தனக்கு எதிராகப் பிரியும் எந்த நகரும் வீடும் நிலைக்காது.

26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால் அவன் தனக்கு எதிராகத் தானே பிரிந்திருக்கிறான். பின் அவன் அரசு எப்படி நிலைக்கும் ?

27 நான் பேய்களை ஓட்டுவது பெயல்செபூலைக்கொண்டு என்றால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு ஓட்டுகிறார்கள்? எனவே, அவர்களே உங்களுக்குத் தீர்ப்பிடுவார்கள்.

28 ஆனால் நான் பேய்களை ஓட்டுவது கடவுளின் ஆவியைக்கொண்டு என்றால், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது.

29 "ஒருவன் முதலில் வலியவனைக் கட்டினால் அன்றி, எப்படி அவ்வலியவன் வீட்டில் நுழைந்து அவன் பொருட்களைக் கொள்ளையிட முடியும்? கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.

30 "என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.

31 எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் தேவதூஷணமும் மனிதருக்கு மன்னிக்கப்படும்.

32 ஆனால், ஆவியானவரைத் தூஷிப்பது மன்னிக்கப்பெறாது. மனுமகனுக்கு எதிராகப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான். ஆனால், பரிசுத்த ஆவிக்கு எதிராகப் பேசுகிறவன் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெறான்.

33 "மரமும் நல்லது, கனியும் நல்லது என்று சொல்லுங்கள்; அல்லது மரமும் தீயது, கனியும் தீயது என்று சொல்லுங்கள்.

34 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவராயிருக்க எவ்வாறு நல்லவை பேசமுடியும்? ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.

35 நல்லவன் நல்ல கருவூலத்தினின்று நல்லவற்றை எடுக்கிறான். தீயவனோ தீய கருவூலத்தினின்று தீயவற்றை எடுக்கிறான்.

36 மனிதர் பேசும் பயனற்ற சொல் ஒவ்வொன்றுக்கும் தீர்வை நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

37 ஏனெனில், உன் வார்த்தைகளைக்கொண்டே குற்றமற்றவன் எனப்படுவாய்; உன் வார்த்தைகளைக்கொண்டே குற்றவாளி எனப்படுவாய்."

38 அப்பொழுது மறைநூல் அறிஞர், பரிசேயருள் சிலர் அவருக்கு மறுமொழியாக: "போதகரே, நீர் அருங்குறி ஒன்று செய்வதைக் காண விரும்புகிறோம்" என்றனர்.

39 அதற்கு அவர் கூறியது: "கெட்டுப்போன விபசாரத் தலைமுறை அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாஸ் இறைவாக்கினரின் அருங்குறியேயன்றி வேறு எந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது.

40 எவ்வாறு யோனாஸ் மூன்று பகலும் மூன்று இரவும் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்தாரோ, அவ்வாறே மனுமகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

41 தீர்வையின்போது நினிவே மக்கள் இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனஞ்செய்வார்கள். ஏனெனில், அவர்கள் யோனாஸ் உரைத்த தூதைக் கேட்டு மனந்திரும்பினார்கள். யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது.

42 தீர்வையின்போது தென்னாட்டு அரசி இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனஞ்செய்வாள். ஏனெனில், சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க உலகின் எல்லையிலிருந்து வந்தாள். சாலொமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது.

43 "அசுத்த ஆவி ஒருவனை விட்டு வெளியேறியபின் வறண்ட இடங்களில் சுற்றி அலைந்து இளைப்பாற இடம் தேடிக் கண்டடையாமல், ஃ

44 'நான் விட்டுவந்த என் வீட்டிற்கே திரும்புவேன்' என்று சொல்லுகிறது. திரும்பி வந்து அவ்வீடு வெறுமையாயும், கூட்டி அழகுபடுத்தியும் இருப்பதைக் காண்கிறது.

45 மீண்டும் சென்று தன்னிலும் பொல்லாத வேறு ஏழு பேய்களைத் தன்னோடு அழைத்து வர, அவை அதனுள் நுழைந்து குடியிருக்கின்றன. அம் மனிதனின் பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமாயிற்று. இப்பொல்லாத தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்."

46 அவர் கூட்டத்தை நோக்கி இன்னும் பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ! அவருடைய தாயும் சகோதரரும் அவருடன் பேச வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.

47 ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.

48 இதைத் தம்மிடம் கூறியவனுக்கு அவர் மறுமொழியாக: "யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,

49 தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

50 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.

அதிகாரம் 13

1 அந்நாளில் இயேசு வீட்டை விட்டு வெளியே போய்க் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தார்.

2 பெருங்கூட்டம் அவரை நெருக்கவே, அவர் படகிலேறி அமர வேண்டியிருந்தது.

3 கூட்டம் அனைத்தும் கரையில் இருந்தது. அவர், அவர்களுக்கு உவமைகளால் பற்பல எடுத்துரைத்தார். "இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.

4 விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன. வானத்துப் பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டன.

5 சில அதிக மண்ணில்லாத பாறைநிலத்தில் விழுந்தன. அடிமண் இல்லாததால் விரைவில் முளைத்தன.

6 வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்துபோயின.

7 சில முட்செடிகள் நடுவில் விழுந்தன. முட்செடிகள் அவற்றை நெரித்துவிட்டன.

8 சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.

9 கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.

10 சீடர் அவரை அணுகி, "அவர்களிடம் நீர் உவமைகளில் பேசுவதேன்?" என்றனர்.

11 அவர் அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்துவைக்கவில்லை.

12 ஏனெனில், உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

13 ஏன் அவர்களிடம் உவமைகளில் பேசுகிறேனெனில், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; உணர்வதுமில்லை.

14 இசையாஸ் கூறியுள்ள இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணர்வதில்லை, பார்த்துப் பார்த்தும் நீங்கள் காண்பதில்லை.

15 அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பாமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளம் மழுங்கிவிட்டது; இவர்கள் காது மந்தமாகிவிட்டது; கண்ணை மூடிக்கொண்டனர். '

16 உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.

17 நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், நீதிமான்கள் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை.

18 "எனவே, விதைப்பவன் உவமையின் பொருள் என்னவென்று கேளுங்கள்:

19 விண்ணரசைப்பற்றிய வார்த்தையை ஒருவன் கேட்டும் உணராவிட்டால், அவன் உள்ளத்தில் விதைத்ததைத் தீயவன் வந்து பறித்துக்கொள்வான். வழியோரம் விதைக்கப்பட்டவன் இவனே.

20 பாறைநிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உடனே மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறவனே.

21 ஆனால், அவன் தன்னில் வேரற்றவன்; நிலையற்றவன். வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றதும் அல்லது துன்புறுத்தப்பட்டதும் இடறல்படுவான்.

22 முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே.

23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உணர்ந்துகொள்ளுகிறவனே. இவன் நூறு மடங்கோ அறுபது மடங்கோ முப்பது மடங்கோ பலன் கொடுப்பான்."

24 இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, தன் வயலில் நல்ல விதை விதைத்தவனுக்கு ஒப்பாகும்.

25 ஆட்கள் தூங்கும்போது அவனுடைய பகைவன் வந்து கோதுமையிடையே களைகளை விதைத்துவிட்டுப் போனான்.

26 பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் தோன்றின.

27 வீட்டுத்தலைவனிடம் ஊழியர் வந்து, 'ஐயா, உம் வயலில் நல்ல விதையல்லவா விதைத்தீர்? பின் அதில் களைகள் வந்தது எப்படி?' என்று கேட்டனர்.

28 அதற்கு அவன், ' இது பகைவன் செய்த வேலை ' என்றான். ஊழியரோ, 'நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிச் சேர்க்க வேண்டுமா ? ' என்றனர்.

29 அவன், 'வேண்டாம்; களைகளைச் சேர்க்கும்போது ஒருவேளை கோதுமைப் பயிரையும் அவற்றுடன் பிடுங்கிவிடக்கூடும்.

30 அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடைக்காலத்தில் அறுப்போரிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, எரிப்பதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று சொல்வேன் ' என்றான்."

31 இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, கடுகு மணிக்கு ஒப்பாகும். அதை ஒருவன் எடுத்துத் தன் வயலில் விதைக்கிறான்.

32 அது விதைகளிலெல்லாம் மிகச் சிறியதாயினும், வளர்ந்ததும் செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகி வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கக்கூடிய மரமாகும்."

33 இன்னுமோர் உவமையும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கிறாள். மாவு முழுதும் புளிப்பேறுகிறது."

34 இவையெல்லாம் இயேசு மக்கட்கூட்டத்திற்கு உவமைகளால் சொன்னார். உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் ஒன்றும் பேசியதில்லை.

35 'உவமைகளில் பேசுவேன்; உலகம் தோன்றியதுமுதல் மறைந்துள்ளதை வெளியாக்குவேன்' என்று இறைவாக்கினர் கூறியது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.

36 பின்பு அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது அவருடைய சீடர் அவரை அணுகி, "வயலில் விதைத்த களைகளின் உவமையை எங்களுக்கு விளக்கிக்கூறும்" என்றனர்.

37 அதற்கு அவர், "நல்ல விதை விதைக்கிறவன் மனுமகன்.

38 வயல், இவ்வுலகம்; நல்ல விதை, அரசின் மக்கள்; களைகளோ தீயோனுடைய மக்கள்.

39 அவற்றை விதைத்த பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுப்போர், வானதூதர்.

40 எவ்வாறு களைகள் ஒன்றுசேர்த்துத் தீயில் எரிக்கப்படுமோ, அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும்.

41 மனுமகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய அரசில் இடறலாய் உள்ள யாவற்றையும் நெறிகெட்டவர்களையும் ஒன்று சேர்த்து, ஃ தீச்சூளையில் தள்ளுவார்கள்.

42 அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.

43 அப்பொழுது நீதிமான்கள் தம் தந்தையின் அரசில் கதிரோனைப்போல் ஒளிர்வர். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

44 "விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்.

45 பின்னும் விண்ணரசு நல்ல முத்துகளைத் தேடும் வணிகனுக்கு ஒப்பாகும்.

46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டதும், போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அதை வாங்கிக்கொள்கிறான்.

47 "மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்.

48 வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.

49 இவ்வாறே உலகமுடிவிலும் நடக்கும். வானதூதர் சென்று தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,

50 தீச்சூளையில் தள்ளுவர். அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்.

51 "இவையெல்லாம் கண்டுணர்ந்தீர்களா ?" என்று இயேசு கேட்க, அவர்கள், "ஆம்" என்றனர்.

52 அவர், "ஆகையால், விண்ணரசில் சீடனான மறைநூல் அறிஞன் எவனும், தன் கருவூலத்தினின்று புதியனவும் பழையனவும் எடுக்கிற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாவான்" என்றார்.

53 இந்த உவமைகளை முடித்ததும் இயேசு அவ்விடம் விட்டுச் சென்றார்.

54 தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய், "இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?

55 இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?

56 இவருடைய சகோதரிகள் யாவரும் நம்மிடையே இல்லையா ? பின் இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது ?" என்று சொல்லி, அவரைப்பற்றி இடறல்பட்டனர்.

57 இயேசு அவர்களை நோக்கி, "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.

58 அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

அதிகாரம் 14

1 அப்பொழுது இயேசுவைப்பற்றிய பேச்சு சிற்றரசன் ஏரோதின் காதுக்கு எட்டியது.

2 அவன் தன் ஊழியரிடம், "இவர் ஸ்நாபக அருளப்பர். இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால்தான் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது" என்று சொன்னான்.

3 அந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள்பொருட்டு அருளப்பரைப் பிடித்து விலங்கிட்டுச் சிறையிலடைத்திருந்தான்.

4 ஏனெனில், அருளப்பர் அவனை நோக்கி, "நீ அவளை வைத்திருக்கலாகாது" என்று சொல்லியிருந்தார்.

5 அவனோ அவரைக் கொன்றுவிட நினைத்தான். ஆனால், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.

6 ஏரோதின் பிறப்பு விழாவில் ஏரோதியாளின் மகள் எல்லார்முன்னும் நடனம் ஆடி ஏரோதை மகிழ்வித்தாள்.

7 அதனால் அவள் தன்னிடம் எதைக் கேட்டாலும் கொடுப்பதாக அவன் ஆணையிட்டு உறுதிமொழி கூறினான்.

8 அவளோ தன் தாய் தூண்டிவிட்டபடி, "ஸ்நாபக அருளப்பரின் தலையை ஒரு தட்டில் இப்போதே எனக்குக் கொடும்" என்றாள்.

9 அரசன் வருந்தினான். ஆனால் தன் ஆணையின் பொருட்டும், விருந்தினர்பொருட்டும் அதைக் கொடுக்கக் கட்டளையிட்டான்.

10 ஆள் அனுப்பிச் சிறையில் அருளப்பரது தலையை வெட்டுவித்தான்.

11 அவருடைய தலையைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொண்டுபோனாள்.

12 அவருடைய சீடர் வந்து அவருடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்துவிட்டு இயேசுவிடம் வந்து அறிவித்தனர்.

13 இதைக் கேட்டதும் இயேசு அங்கிருந்து படகேறித் தனிமையாகப் பாழ்வெளி சென்றார். இதைக் கேட்டு மக்கட்கூட்டம் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தது.

14 அவர் கரையில் இறங்கியபோது பெரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள்மீது மனமிரங்கி அவர்களுள் பிணியாளிகளைக் குணமாக்கினார்.

15 மாலையானதும் அவருடைய சீடர் அவரிடம் வந்து, "இது பாழ்வெளி ஆயிற்றே; நேரமும் ஆகிவிட்டது; ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கிக்கொள்ளும்படி கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.

16 இயேசுவோ அவர்களிடம், "அவர்கள் போக வேண்டியதில்லை. நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார்.

17 அதற்கு அவர்கள், "இங்கே ஐந்து அப்பமும் இரண்டு மீனும் தவிர வேறொன்றும் எங்களிடமில்லை" என்றனர்.

18 அவர், "அவற்றை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்றார்.

19 கூட்டம் பசும்புல் தரையில் அமரும்படி கட்டளையிட்டு, ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பத்தைப் பிட்டுச் சீடருக்கு அளித்தார்; சீடர் கூட்டத்திற்கு அளித்தனர்.

20 அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தனர்.

21 பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை ஐயாயிரம்.

22 தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகிலேறிக் கடலைக் கடந்து தமக்குமுன் அக்கரைக்குப்போகும்படி இயேசு வற்புறுத்தினார்.

23 கூட்டத்தை அனுப்பியதும் செபிக்க தனியாக மலைமீது ஏறினார். இரவாயிற்று; அங்குத் தனித்திருந்தார்.

24 படகோ, எதிர்காற்றடித்தபடியால் அலைகளால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

25 நான்காம் சாமத்தில் அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்.

26 சீடரோ, அவர் கடல்மேல் நடப்பதைக் கண்டு கலங்கி, "ஐயா! பூதம்" என்று அச்சத்தால் அலறினர்.

27 உடனே இயேசு, "தைரியமாயிருங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.

28 அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, நீர்தாம் என்றால், நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்" என்றார்.

29 அவர், "வா" என்றார். இராயப்பரும் படகினின்று இறங்கிக் கடல்மீது நடந்து இயேசுவை நோக்கி வந்தார்.

30 காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.

31 உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.

32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று ஓய்ந்தது.

33 படகில் இருந்தவர்கள் வந்து அவரைப் பணிந்து, "உண்மையாகவே நீர் கடவுள்மகன்" என்றனர்.

34 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தில் கரை சேர்ந்தனர்.

35 அவ்விடத்து மக்கள் அவரை அறிந்துகொண்டதும், சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி நோயாளிகள் அனைவரையும் அவரிடம் கொண்டுவந்து,

36 அவருடைய போர்வை விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டினர். தொட்டவர் அனைவரும் குணமாயினர்.

அதிகாரம் 15

1 அப்பொழுது பரிசேயரும் மறைநூல் அறிஞரும் யெருசலேமிலிருந்து அவரிடம் வந்து,

2 "உம் சீடர், முன்னோர் பரம்பரையை மீறுவது ஏன் ? அவர்கள் உண்ணும்பொழுது கை கழுவுவதில்லையே" என்றனர்.

3 அவர் மறுமொழியாக அவர்களுக்குக் கூறியது: "நீங்களும் உங்கள் பரம்பரையின் பொருட்டுக் கடவுள் கட்டளையை மீறுவது ஏன் ?

4 ' உன் தாய் தந்தையரைப் போற்று ' என்றும், ' தாய் தந்தையரைத் தூற்றுகிறவன் செத்தொழியட்டும் ' என்றும் கடவுள் கூறியுள்ளார்.

5 நீங்களோ, ' ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி, நான் உமக்கு உதவியாகக் கொடுக்கக்கூடியதெல்லாம் நேர்த்திக்கடனாயிற்று ' என்பானாகில்,

6 தன் தாய் தந்தையரைப் போற்றவேண்டியதில்லை என்று கூறிகிறீர்கள். இவ்வாறு உங்கள் பரம்பரையின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையை வீணாக்கிவிட்டீர்கள்.

7 வெளிவேடக்காரரே, உங்களைப்பற்றி இசையாஸ் சரியாய் இறைவாக்கு உரைத்திருக்கிறார்:

8 ' இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர். அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கின்றது.

9 அவர்கள் என்னை வழிபடுவது வீண், ஏனெனில், அவர்கள் போதிப்பது மனிதர் கற்பனை. ' "

10 பின்பு கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து, "நான் சொல்லுவதைக் கேட்டு உணர்ந்து கொள்ளுங்கள்.

11 வாய்க்குள் நுழைவது மனிதனை மாசுபடுத்துவதில்லை. வாயிலிருந்து வெளிவருவதே மனிதனை மாசுபடுத்தும்" என்றார்.

12 அப்போது, சீடர் அவரை அணுகி, "பரிசேயர் இவ்வார்த்தையைக் கேட்டு இடறல்பட்டது உமக்குத் தெரியுமா ?" என்றனர்.

13 அவரோ மறுமொழியாக, "என் வானகத்தந்தை நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.

14 அவர்கள் இருக்கட்டும்; அவர்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர். குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால், இருவரும் குழியில் வீழ்வர்" என்றார்.

15 அதற்கு இராயப்பர், "இந்த உவமையை எங்களுக்கு விளக்கும்" என்றார்.

16 அவர் கூறியது: "உங்களுக்கு இன்னுமா உணர்வில்லை ?

17 வாயினுள் செல்வது எதுவும் வயிற்றிலே போய் ஒதுக்கிடமாய்க் கழிக்கப்படுகின்றது என்று நீங்கள் உணரவில்லையா ?

18 வாயினின்று வருபவை உள்ளத்தினின்று வருகின்றன, அவையே மனிதனை மாசுபடுத்துகின்றன.

19 ஏனெனில், உள்ளத்தினின்றே தீய எண்ணங்கள், கொலை, விபசாரம், மோகம், களவு, பொய்ச்சான்று, பழிச்சொல் ஆகியவை வெளிவரும்.

20 இவையே மனிதனை மாசுபடுத்துகின்றன. கை கழுவாது உண்ணுவதோ மனிதனை மாசுபடுத்துவதில்லை."

21 இயேசு அங்கிருந்து விலகி, தீர், சீதோன் நகரங்களின் பக்கம் சென்றார்.

22 இதோ! அங்கே வாழ்ந்த கனானேயப் பெண் ஒருத்தி அவரிடம் வந்து, "ஆண்டவரே, தாவீதின் மகனே! என்மேல் இரக்கம்வையும். என் மகள் பேய்பிடித்துப் பெரிதும் துன்புறுகிறாள்" என்று கூவினாள்.

23 அவர் ஒரு வார்த்தைகூடப் பதில்சொல்லவில்லை. சீடர் அவரை அணுகி, "இவள் நமக்குப்பின் கத்திக் கொண்டு வருகிறாளே, இவளை அனுப்பிவிடும்" என்று வேண்டினர்.

24 அதற்கு அவர், "இஸ்ராயேல் குலத்தில் சிதறிப்போன ஆடுகளிடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்" என்றார்.

25 அவளோ வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, எனக்கு உதவிபுரியும்" என்றாள்.

26 அவர் மறுமொழியாக, "பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குப் போடுதல் நல்லதன்று" என்றார்.

27 அவளோ, "ஆமாம், ஆண்டவரே, நாய்க்குட்டிகளும் உரிமையாளரின் மேசையினின்று கீழே விழும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்றாள்.

28 அப்போது இயேசு அவளுக்கு மறுமொழியாக, "அம்மா, உன் விசுவாசம் பெரிது. உன் விருப்பப்படியே ஆகட்டும்" என்றார். அந்நேரமுதல் அவள்மகள் குணமாயிருந்தாள்.

29 இயேசு அங்கிருந்து சென்று, கலிலேயாக் கடற்கரைக்கு வந்து மலையில் ஏறி அங்கு அமர்ந்தார்.

30 மக்கள் திரள்திரளாக அணுகி, ஊமை, குருடர், முடவர், ஊனர் இன்னும் பலரையும் கொண்டுவந்து, அவரது காலடியில் வைக்க, அவர் அவர்களைக் குணமாக்கினார்.

31 எனவே, ஊமைகள் பேசுவதையும், ஊனமுடையோர் குணமடைவதையும், முடவர் நடப்பதையும், குருடர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியந்து இஸ்ராயேலின் கடவுளை மகிமைப்படுத்தினர்.

32 இயேசு தம் சீடரை அழைத்து, "இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே. இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு விருப்பமில்லை. அனுப்பினால், வழியில் சோர்ந்து விழக்கூடும்" என்றார்.

33 சீடரோ, "இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு வயிறார உணவளிக்க இப்பாழ்வெளியில் அப்பங்கள் நமக்கு எங்கிருந்து கிடைக்கும் ?" என்றனர்.

34 இயேசு, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன ?" என்று அவர்களைக் கேட்க, அவர்கள், "ஏழு இருக்கின்றன. சில சிறு மீன்களும் உள்ளன" என்றனர்.

35 அப்போது அவர் தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டு,

36 ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டுத் தம் சீடரிடம் கொடுத்தார்; அவர்கள் மக்களுக்குக் கொடுத்தனர்.

37 எல்லாரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளை ஏழு கூடை நிறைய எடுத்தனர்.

38 பெண்களும் சிறுவர்களும் நீங்கலாக, உணவு அருந்திய ஆண்கள் தொகை நாலாயிரம்.

39 அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டுப் படகேறி மகதா நாட்டுக்கு வந்தார்.

அதிகாரம் 16

1 பரிசேயரும் சதுசேயரும் அவரிடம் வந்து வானிலிருந்து அருங்குறி ஒன்றைக்காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.

2 அதற்கு அவர், "மாலையில் வானம் சிவந்திருக்கிறது; அதனால் அமைதியாய் இருக்கும் என்பீர்கள்.

3 காலையில் வானம் சிவந்து மந்தாரமாய் இருக்கிறது; அதனால் இன்று காற்றும் மழையுமாயிருக்கும் என்பீர்கள். வானத்தின் தோற்றத்தைப் பகுத்தறிய உங்களுக்குத் தெரியும். காலத்தின் குறிகளை அறிய உங்களால் முடியாதா ?

4 கெட்டுப்போன விபசாரத் தலைமுறை அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாசின் அருங்குறியேயன்றி வேறு எந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது" என்றார். பின் அவர்களை விட்டு நீங்கினார்.

5 அவருடைய சீடர் கடலைக் கடந்து வந்தபோது அப்பம் கொண்டுவர மறந்து போயினர்.

6 இயேசு அவர்களை நோக்கி, "பரிசேயர், சதுசேயருடைய புளிப்பு மாவைக்குறித்துக் கவனமாயிருங்கள், எச்சரிக்கை" என்று சொன்னார்.

7 அவர்களோ, "நாம் அப்பம் கொண்டுவரவில்லையே" என்று தங்களுக்குள் எண்ணிக்கொண்டனர்.

8 இதையறிந்த இயேசு, "குறைவான விசுவாசம் உள்ளவர்களே, உங்களிடம் அப்பமில்லை என்று உங்களுக்குள் சிந்திப்பானேன்?

9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது எத்தனை கூடை மீதி எடுத்தீர்கள்?

10 ஏழு அப்பங்களை நாலாயிரம் போருக்குக் கொடுத்தபோது எத்தனை கூடை மீதிஎடுத்தீர்கள்? நினைவில்லையா?

11 நான் சொன்னது அப்பத்தைப் பற்றியன்று என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளாதது எப்படி? ஆகவே, பரிசேயர், சதுசேயருடைய புளிப்புமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்" என்றார்.

12 கவனமாயிருக்கக் கூறியது, புளிப்புமாவைப் பற்றியன்று; பரிசேயர், சதுசேயருடைய போதனையைப் பற்றியே என்பதை அவர்கள் அப்பொழுதான் உணர்ந்து கொண்டனர்.

13 இயேசு பிலிப்புச் செசரியா நகர்ப்புறம் வந்து தம் சீடரைப் பார்த்து, 'மனுமகன் யார் என்று மக்கள் சொல்லுகிறார்கள்?" என்று கேட்டார்.

14 அவர்களோ, "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் எரேமியாஸ் அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்" என்றனர்.

15 "நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று இயேசு அவர்களைக் கேட்டார்.

16 சீமோன் இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார்.

17 அதற்கு இயேசு, "யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று, வானகத்திலுள்ள என் தந்தையே.

18 மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். உன் பெயர் 'பாறை.' இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

19 வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன். எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார்.

20 பின்னர், தாம் மெசியா என்பதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று தம் சீடருக்குக் கட்டளையிட்டார்.

21 அதுமுதல் இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும், கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்கு விளக்கத் தொடங்கினார்.

22 இராயப்பர் அவரைத் தனியாக அழைத்து, "ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்.

23 அவர் திரும்பி இராயப்பரிடம், "போ பின்னாலே, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய். ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்றார்.

24 பின் இயேசு தம் சீடரை நோக்கி, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.

25 ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் கண்டடைவான்.

26 ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன? ஒருவன் தன் ஆன்மாவிற்கு ஈடாக எதைக் கொடுப்பான்?

27 "மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் தம் வானதூதரோடு வரப்போகிறார். அப்பொழுது ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார்.

28 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகன் தம் அரசில் வருவதைக் காணும்வரை இங்கு இருப்பவர்களுள் சிலர் சாவுக்கு உள்ளாக மாட்டார்கள்" என்று சொன்னார்.

அதிகாரம் 17

1 ஆறு நாட்களுக்குப்பின் இயேசு இராயப்பரையும் யாகப்பரையும், அவர் சகோதரர் அருளப்பரையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு ஒதுக்கமாய்க் கூட்டிக்கொண்டு போய், அவர்கள்முன் உருமாறினார்.

2 அவரது முகம் கதிரவனைப்போல் ஒளி வீசியது. அவர் ஆடைகள் ஒளியைப்போல வெண்மையாயின.

3 இதோ! மோயீசனும் எலியாசும் அவர்களுக்குத் தோன்றி அவரோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

4 இராயப்பர் இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! நீர் விரும்பினால் உமக்கு ஒன்றும், மோயீசனுக்கு ஒன்றும், எலியாசுக்கு ஒன்றுமாக இங்குக் கூடாரம் மூன்று அமைப்பேன்" என்று சொன்னார்.

5 அவர் பேசிக் கொண்டிருக்கையிலே, இதோ! ஒளிரும் மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. "இவரே என் அன்பார்ந்த மகன்! இவரிடம் நான் பூரிப்படைகிறேன்; இவருக்குச் செவி சாயுங்கள்" என்ற குரலொலி, இதோ! மேகத்திலிருந்து கேட்டது.

6 இதைக் கேட்ட சீடர் குப்புற விழுந்து பெரிதும் அஞ்சினர்.

7 இயேசு அணுகிவந்து அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள், அஞ்சவேண்டாம்" என்றார்.

8 அவர்கள் ஏறெடுத்துப் பார்த்தபோது இயேசுவையன்றி வேறு எவரையும் காணவில்லை.

9 அவர்கள் மலையினின்று இறங்கும்பொழுது "மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்க்கும்வரை இக்காட்சியை எவருக்கும் சொல்ல வேண்டாம்" என்று இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

10 "முதலில் எலியாஸ் வர வேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?" எனச் சீடர் அவரைக் கேட்டனர்.

11 அதற்கு அவர், "எலியாஸ் வந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தத்தான் போகிறார்.

12 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாஸ் ஏற்கனவே வந்துவிட்டார். அவர்கள் அவரை அறிந்துகொள்ளாமல் தாம் விரும்பியதெல்லாம் அவருக்குச் செய்தார்கள். இவ்வாறே மனுமகனும் அவர்கள் கையால் பாடுபடப்போகிறார்" என்றார்.

13 அவர் சொன்னது ஸ்நாபக அருளப்பரைப்பற்றித்தான் என்பதை அப்போது சீடர் உணர்ந்தனர்.

14 அவர்கள் கூட்டத்திடம் வந்ததும், ஒருவன் அவரை அணுகி அவர்முன் முழந்தாளிட்டு,

15 "ஆண்டவரே, என் மகன்மேல் இரக்கம் வையும். ஏனெனில், அவன் வலிப்பினால் துன்பப்படுகிறான். அடிக்கடி நெருப்பிலும் நீரிலும் விழுகிறான்.

16 அவனை உம் சீடரிடம் கொண்டு வந்தேன். அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" என்றான்.

17 அதற்கு இயேசு, "விசுவாசம் இல்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருப்பேன்? எதுவரை உங்களைப் பொறுத்துக்கொண்டிருப்பேன்? அவனை என்னிடம் இங்குக்கொண்டு வாருங்கள்" என்றார்.

18 இயேசு அவனைக் கடிய, பேய் அவனை விட்டு நீங்கியது. அந்நேரமுதல் பையன் குணமாயிருந்தான்.

19 பின், சீடர் தனிமையாக இயேசுவை அணுகி, "அதை ஓட்ட ஏன் எங்களால் முடியவில்லை?" என்று வினவினர்.

20 அதற்கு இயேசு கூறியது: "உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

21 கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இம்மலையை நோக்கி, 'இவ்விடம் விட்டு அவ்விடம் செல்' என்றால் அது பெயர்ந்து செல்லும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது."

22 அவர்கள் கலிலேயாவில் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி, "மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப்போகிறார்.

23 அவர்கள் அவரைக் கொல்லுவார்கள். அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொல்ல, அவர்கள் மிகவும் வருந்தினர்.

24 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்தபோது வரிப்பணம் வாங்குவோர் இராயப்பரிடம் வந்து, "உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துவதில்லையா?" என்றனர்.

25 "ஆம் செலுத்துகிறார்" என்றார். வீட்டுக்குள் வந்து அவர் இதைச் சொல்லுவதற்கு முன்னமே, இயேசு, "சீமோன், இதைப்பற்றி உன் கருத்து என்ன? மண்ணக அரசர்கள், தீர்வையோ வரியோ யாரிடம் வாங்குகின்றனர்? நம் மக்களிடமா? அன்னியரிடமா?" என்று கேட்டார்.

26 "அன்னியரிடந்தான்" என்று அவர் சொல்ல, இயேசு, "இப்படியானால் மக்களுக்குக் கடமையில்லை அன்றோ?

27 ஆயினும் நாம் அவர்களுக்கு இடறலாகாதபடி நீ கடலுக்குச் சென்று, தூண்டில் போட்டு, முதலில் படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் 'ஸ்நாத்தேர்' என்னும் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களுக்குச் செலுத்து" என்றார்.

அதிகாரம் 18

1 அந்நேரத்தில் சீடர் இயேசுவை அணுகி, "விண்ணரசில் யார் பெரியவன்?" என்று கேட்டனர்.

2 இயேசு ஒரு குழந்தையை அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தி,

3 கூறியதாவது: "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்.

4 எனவே, இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்.

5 "மேலும் இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன் எவனும், என்னையே ஏற்றுக்கொள்கிறான்.

6 ஆனால் என்மீது விசுவாசம்கொள்ளும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ, அவன் கழுத்தில் பெரிய எந்திரக் கல்லைத் தொங்கவிட்டு நடுக்கடலில் அவனை ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம்.

7 இடறல் நிமித்தம் உலகிற்கு ஐயோ கேடு! ஏனெனில், இடறல் வந்தே தீரும். ஆனால், யாரால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ கேடு! 8 "உன் கையாவது காலாவது உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டி எறிந்துவிடு. இரண்டு கைகளோடு அல்லது இரண்டு கால்களோடு முடிவில்லா நெருப்பில் தள்ளப்படுவதைவிட, கை ஊனனாய் அல்லது கால் முடவனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.

9 உன் கண் உனக்கு இடறலாய் இருந்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடு. இரண்டு கண்களோடு எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்.

10 "இச்சிறுவருள் ஒருவனையும் புறக்கணியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11 அவர்களுடைய விண்ணுலகத் தூதர் வானகத்திலுள்ள என் தந்தையின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

12 "இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றுள் ஒன்று வழி தவறிப்போனால் தொண்ணுற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டுத் தவறிப்போனதைத் தேடிச்செல்வான். அன்றோ?

13 அதைக் கண்டுபிடிக்க நேர்ந்தால், தவறிப்போகாத தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சியைவிட, அவ்வொன்றைப்பற்றி அவன் கொள்ளும் மகிழ்ச்சி பெரிதாம் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14 அவ்விதமே, இச்சிறுவருள் ஒருவன்கூட அழிவுறுவது வானகத்தில் உள்ள உங்கள் தந்தையின் விருப்பமன்று.

15 "உன் சகோதரன் உனக்கு எதிராகக் குற்றஞ்செய்திருந்தால் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவனைக் கண்டித்துப்பார். அவன் உனக்குச் செவிசாய்த்தால் உன் சகோதரனை உன்வச மாக்கிக்கொள்வாய்.

16 அவன் உனக்குச் செவிசாய்க்காவிட்டால், உன்னுடன் ஒருவர் அல்லது இருவரைச் சேர்த்துக்கொள். 'இவ்வாறு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள் சொற்படி காரியம் எல்லாம் தீரும்.'

17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம், சொல். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில், அவன் உனக்குப் புற இனத்தான் போலவும் ஆயக்காரன்போலவும் இருக்கட்டும்.

18 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் கட்டுவீர்களோ, அதெல்லாம் விண்ணுலகிலும் கட்டப்பட்டதாகவே இருக்கும். மண்ணுலகில் நீங்கள் எதெல்லாம் அவிழ்ப்பீர்களோ, அதெல்லாம் விண்ணுலகிலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்.

19 "மீண்டும் உங்களுக்குக் கூறுகிறேன்: மண்ணுலகில் உங்களில் இருவர் தாங்கள் கேட்கும் எதைக்குறித்தும் மனமொத்திருந்தால் அது விண்ணுலகிலுள்ள என் தந்தையால் அவர்களுக்கு அருளப்படும்.

20 இரண்டு, மூன்று பேர்என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

21 பின்னர், இராயப்பர் அவரை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.

22 அதற்கு இயேசு கூறியதாவது: "ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்.

23 "ஆகவே விண்ணரசு, தன் ஊழியரிடம் கணக்குக் கேட்க விரும்பிய ஓர் அரசனுக்கு ஒப்பாகும்.

24 கணக்குக் கேட்கத் தொடங்கிய பொழுது, அவனிடம் பத்தாயிரம் 'தாலாந்து' கடன்பட்ட ஒருவனைக் கொண்டுவந்தனர்.

25 அவன் கடன் தீர்க்க வகையற்றிருந்ததால், அவனையும் அவன் மனைவி மக்களையும் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் விற்றுக் கடனைத் தீர்க்குமாறு தலைவன் கட்டளையிட்டான்.

26 அவ்வூழியனோ அவன் காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; கடன் எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று வேண்டினான்.

27 அவ்வூழியனுடைய தலைவன் மனமிரங்கி அவன் கடனை மன்னித்து அவனை விட்டுவிட்டான்.

28 அவ்வூழியன் வெளியே சென்றதும், தன் உடனூழியரில் தன்னிடம் நூறு வெள்ளிக்காசு கடன்பட்ட ஒருவனைக் கண்டான். அவனைப் பிடித்துக் கழுத்தை நெரித்து, 'நீ பட்ட கடனைத் தீர்த்துவிடு' என்று கேட்டான்.

29 அந்த உடனூழியன், காலில் விழுந்து, 'பொறுத்துக்கொள்ளும்; எல்லாம் தீர்த்துவிடுகிறேன்' என்று அவனை வேண்டினான்.

30 அவனோ இணங்கவில்லை. ஆனால், கடனைத் தீர்க்குமட்டும் அவனைச் சிறையில் அடைத்தான்.

31 அவனுடைய உடனூழியர் நடந்ததைக் கண்டு மிகவும் வருந்தித் தலைவனிடம் சென்று நடந்ததை யெல்லாம் அறிவித்தனர்.

32 அப்போது, அவனுடைய தலைவன் அவனை அழைத்து, 'கெட்ட ஊழியனே, நீ என்னை வேண்டிக்கொண்டதால் உன் கடனையெல்லாம் மன்னித்தேன்.

33 ஆகவே, நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல, நீயும் உன்னுடைய உடனூழியனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டாமா?' என்று கேட்டு,

34 சினந்து, கடன் முழுவதும் தீர்க்கும்வரை வதைப்போரிடம் அவனைக் கையளித்தான்.

35 உங்களுள் ஒவ்வொருவனும் தன் சகோதரனை முழு உள்ளத்தோடு மன்னிக்காவிட்டால், என் வானகத் தந்தையும் அவ்வாறே உங்களுக்குச் செய்வார்."

அதிகாரம் 19

1 இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்லி முடித்தபின் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அப்பாலுள்ள யூதேயா பகுதிக்கு வந்தார்.

2 பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது. அவர்களை அங்கே குணமாக்கினார்.

3 பரிசேயர் அவரிடம் வந்து, "எக்காரணத்திற்காவது ஒருவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டனர்.

4 அதற்கு அவர், "படைத்தவர் தொடக்கத்திலிருந்தே 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்றும்,

5 'ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் எனக் கூறினார்' என்றும் நீங்கள் படித்ததில்லையா?

6 இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

7 அவர்கள், "அப்படியானால் முறிவுச்சீட்டுக் கொடுத்து, மனைவியை விலக்கிவிடும்படி மோயீசன் கட்டளையிட்டது ஏன்?" என்று கேட்டனர்.

8 அவரோ, "உங்கள் முரட்டுத்தனத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோயீசன் அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கத்திலோ அப்படி இல்லை.

9 நானோ உங்களுக்குச் சொல்லுகிறேன்: கெட்ட நடத்தைக்காக அன்றி, எவனொருவன் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொருத்தியை மணந்துகொள்கின்றானோ, அவன் விபசாரம் செய்கிறான்" என்று அவர்களுக்குச் சொன்னார்.

10 சீடர்கள் அவரை நோக்கி, "கணவன் மனைவியின் நிலை இப்படியென்றால், மணந்து கொள்ளாதிருப்பதே நலம்" என்று சொன்னார்கள்.

11 அவரோ, "அருள் பெற்றவரன்றி வேறு எவரும் இதை உணர்ந்துகொள்வதில்லை.

12 ஏனெனில், தாய் வயிற்றினின்று அண்ணகராய்ப் பிறந்தவரும் உளர்; மனிதரால் அண்ணகரானவரும் உளர்; விண்ணரசை முன்னிட்டுத் தம்மைத்தாமே அண்ணகராக்கிக் கொண்டவரும் உளர். உணர்ந்துகொள்ள கூடியவன் உணர்ந்துகொள்ளட்டும்" என்றார்.

13 பின்னர், அவர் குழந்தைகள்மேல் தம் கைகளை வைத்துச் செபிக்குமாறு அவர்களை அவரிடம் கொண்டுவந்தனர்.

14 சீடர் அவர்களை அதட்டினர். இயேசுவோ அவர்களிடம், "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே" என்றார்.

15 அவர்கள்மீது கைகளை வைத்தபின் அங்கிருந்து சென்றார்.

16 இதோ, ஒருவன் அவரிடம் வந்து, "போதகரே, முடிவில்லா வாழ்வு பெற நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

17 அவர் அவனை நோக்கி, "நன்மையைப்பற்றி என்னைக் கேட்பதேன்? நல்லவர் ஒருவரே. வாழ்வு பெற விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி" என்றார்.

18 அவன், "எவற்றை?" என்றான். இயேசு, "கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே.

19 தாய் தந்தையரைப் போற்று. மேலும், உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று கூறினார்.

20 வாலிபன் அவரிடம், "இவை எல்லாம் கடைப்பிடித்து வருகிறேன், என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?" என்று கேட்டான்.

21 அதற்கு இயேசு, "நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.

22 இவ்வார்த்தையைக் கேட்டு அவ்வாலிபன் வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.

23 இயேசு தம் சீடரிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பணக்காரன் விண்ணரசில் நுழைவது அரிது.

24 மீண்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

25 இவற்றைக் கேட்டு அவருடைய சீடர் மிகவும் மலைத்துப் போய், "அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?" என்று கேட்டனர்.

26 இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.

27 அப்போது இராயப்பர், "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று அவரைக் கேட்டார்.

28 இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலகம் புத்துயிர் பெறும் நாளில் மனுமகன் தமது மாட்சி அரியணையில் வீற்றிருக்கும்போது என்னைப் பின்சென்ற நீங்களும் இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராகப் பன்னிரு அரியணையில் வீற்றிருப்பீர்கள்.

29 மேலும் வீட்டையோ சகோதரர் சகோதரியையோ தாய் தந்தையையோ மக்களையோ நிலபுலங்களையோ என் பெயரின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும் பன்மடங்கு பெறுவான்; முடிவில்லாத வாழ்வும் பெற்றுக்கொள்வான்.

30 "முதலானோர் பலர் கடைசியாவர்; கடைசியானோர் பலர் முதலாவர்.

அதிகாரம் 20

1 "விண்ணரசு, தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாகும்.

2 நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்று வேலையாட்களுடன் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினான்.

3 ஏறக்குறைய ஒன்பது மணிக்கு வெளியே சென்று பொதுவிடத்தில் சிலர் வேலையற்று நிற்பதைக் கண்டான்.

4 அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள். நியாயமானதை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றான்.

5 அவர்கள் போனார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் அப்படியே செய்தான்.

6 ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டான். அவர்களிடம், 'நாள் முழுவதும் நீங்கள் ஏன் இங்கு வாளாவிருக்கிறீர்கள்?' என்றான்.

7 அவர்களோ, 'எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றனர். அவனோ, 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள்' என்று அவர்களுக்குச் சொன்னான்.

8 மாலையானதும் திராட்சைத் தோட்டத் தலைவன் தன் காரியத்தலைவனிடம், 'வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு' என்றான்.

9 எனவே, ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்து தலைக்கு ஒரு வெள்ளிக்காசு பெற்றுக்கொண்டார்கள்.

10 முதலில் அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது தங்களுக்குக் கூடுதலாய்க் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால், அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது.

11 அதை வாங்கும்போது, 'கடைசியில் வந்த இவர்கள் ஒருமணி நேரமே உழைத்தனர்.

12 பகலின் உழைப்பையும் வெயிலின் கொடுமையையும் தாங்கிய எங்களோடு இவர்களைச் சமமாக்கினீரே' என்று வீட்டுத்தலைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர்.

13 அவனோ மறுமொழியாக அவர்களுள் ஒருவனிடம், 'நண்பா, உனக்கு நான் அநீதி செய்யவில்லையே; ஒரு வெள்ளிக்காசு என்று என்னிடம் நீ கூலி பேசவில்லையா?

14 உனக்குரியதை வாங்கிக்கொண்டு போ. உனக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவனுக்கும் கொடுப்பது என் விருப்பம்.

15 என் விருப்பம்போலச் செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் நல்லவனாய் இருக்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையோ?' என்றான்.

16 இவ்வாறே கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்"

17 இயேசு யெருசலேமை நோக்கிப் போகையில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து அவர்களிடம்,

18 "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு,

19 அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொன்னார்.

20 பின்னர், செபெதேயுவின் மக்களுடைய தாய், தன் மக்களுடன் இயேசுவைப் பணிந்து எதையோ கேட்க வந்தாள்.

21 "என்ன வேண்டும்" என்று அவர் அவளைக் கேட்டார். "என் மக்கள் இவ்விருவரும் உம் அரசில், ஒருவன் உமது வலப்பக்கமும், மற்றவன் உமது இடப்பக்கமும் அமரச் செய்வீர் என வாக்களியும்" என்றாள்.

22 அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்கமுடியுமா ?" என்று கேட்டார். அவர்களோ, "முடியும்" என்றனர்.

23 அதற்கு அவர், "ஆம், நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்கள்; ஆனால் என் வலப்பக்கமோ, என் இடப்பக்கமோ அமர அருளுவது என்னுடையதன்று. யாருக்கு என் தந்தை ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார்.

24 அதைக் கேட்ட பதின்மரும் அவ்விரு சகோதரர்மேல் சினங்கொண்டனர்.

25 இயேசு அவர்களைத் தம்மிடம் அழைத்துக் கூறியது: "புறவினத்தாரின் தலைவர்கள் அவர்களை அடக்கி ஆளுகின்றனர்; பெரியவர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்; இஃது உங்களுக்குத் தெரியும்.

26 உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

27 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்.

28 இவ்வாறே, மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

29 எரிக்கோவிலிருந்து அவர்கள் புறப்படும்பொழுது பெருங்கூட்டம் ஒன்று அவரைப் பின்தொடர்ந்தது.

30 இதோ! வழியோரத்தில் உட்கார்ந்திருந்த குருடர் இருவர், இயேசு அவ்வழியே செல்லுகிறார் என்பதைக் கேள்வியுற்று, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மீது இரக்கம்வையும்" என்று கூவினர்.

31 கூட்டமோ அவர்களைப் பேசாதிருக்கும்படி அதட்டிற்று. ஆனால் அவர்கள், "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாகக் கூவினர்.

32 இயேகூ நின்று, அவர்களை அழைத்து, "உங்களுக்கு நான் என்ன செய்யவேண்டும் ?" என்று கேட்க,

33 "ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும்" என்றனர்.

34 இயேசு மனமிரங்கி அவர்கள் விழிகளைத் தொட்டார். உடனே பார்வை பெற்று அவரைப் பின்தொடர்ந்தனர்.

அதிகாரம் 21

1 அவர்கள் யெருசலேமை நெருங்கி ஒலிவ மலையருகில் இருந்த பெத்பகேக்கு வந்தபொழுது இயேசு சீடர் இருவரை அழைத்து, ஃ

2 "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குச் செல்லுங்கள். சென்றதும் அங்கே ஒரு கழுதை கட்டியிருப்பதையும், அதனுடன் குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள்.

3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், அவை ஆண்டவருக்குத் தேவை. விரைவில் அவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவார் எனக் கூறுங்கள்" என்று சொல்லியனுப்பினார்.

4 'இதோ, உன்னுடைய அரசர் கழுதையின்மேலும் பொதிமிருகக் குட்டியின்மேலும் அமர்ந்து சாந்தமாக உன்னிடம் வருகிறார்

5 எனச் சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள் ' என்று இறைவாக்கினர் கூறியது நிறைவேறுவதற்கே இதெல்லாம் நிகழ்ந்தது.

6 சீடர் சென்று இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தனர்.

7 கழுதையையும் குட்டியையும் ஓட்டிவந்து தம் போர்வைகளை அவற்றின்மேல் விரித்து, அவரை மேலே அமரச் செய்தனர்.

8 பெருங்கூட்டமான மக்கள் தங்கள் போர்வைகளை வழியில் விரித்தனர். சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.

9 கூட்டமாக முன்னே சென்றவர்களும், பின்னே வந்தவர்களும், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! உன்னதங்களில் ஓசான்னா! " என்று ஆர்ப்பரித்தனர்.

10 யெருசலேமுக்குள் வந்தபொழுது நகர் முழுவதும் பரபரப்புற்று, "இவர் யார் ?" என்று கேட்டது.

11 மக்களோ, "இவர்தாம் கலிலேயாவின் நாசரேத்தூரிலிருந்து வந்த இயேசு என்னும் இறைவாக்கினர்" என்றனர்.

12 இயேசு கோயிலுக்குள் சென்று, அங்கே விற்பவர்களையும் வாங்குபவர்களையும் துரத்தி, நாணயம் மாற்றுபவர்களின் பலகைகளையும், புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துவிட்டார்.

13 அவர்களிடம், " 'என்வீடு செப வீடு எனப்படும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர்குகையாக்கிவிட்டீர்கள்" என்று சொன்னார்.

14 கோயிலில் குருடரும் முடவரும் அவரிடம் வந்தனர். அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.

15 தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் அவர் செய்த வியத்தகு செயல்களையும், சிறுவர்கள் கோயிலில், "தாவீதின் மகனுக்கு ஓசான்னா" என்று செய்த ஆரவாரத்தையும் கண்டுச் சினங்கொண்டனர்.

16 அவர்கள் அவரிடம், "இவர்கள் சொல்லுவது கேட்கிறதா ?" என, இயேசு, "ஆம், " ' சிறுவர்கள், குழந்தைகளின் வாயும் உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்தீர் ' என்று நீங்கள் படித்ததே இல்லையா ?" என்றார்.

17 பின், அவர்களை விட்டு நகருக்கு வெளியே பெத்தானியாவுக்குச் சென்று அங்கே தங்கினார்.

18 அவர் காலையில் நகருக்குத் திரும்புகையில் பசியுற்றார்.

19 வழியோரத்தில் ஓர் அத்திமரத்தைக் கண்டு அதை அணுகி, அதில் இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல், "இனி ஒருகாலும் காய்க்கவேமாட்டாய்" என்று கூறினார். உடனே அத்திமரம் பட்டுப் போயிற்று.

20 இதைக் கண்ட சீடர் வியந்து, "இவ்வளவு விரைவில் பட்டுப்போயிற்றே, எப்படி?" என்றனர்.

21 அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: தயங்கா விசுவாசம் உங்களிடம் இருந்தால், அத்திமரத்திற்கு நேர்ந்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இம்மலையைப் பார்த்து, ' நீ பெயர்ந்து கடலில் விழு ' என்று கூறினாலும் அது நடைபெறும்.

22 செபத்தில் நீங்கள் விசுவாசத்துடன் கேட்பதையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்" என்றார்.

23 அவர் கோயிலுக்கு வந்து போதித்துக்கொண்டிருக்கையில் தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அவரிடம் வந்து, "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர் ? உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் ? என்றார்கள்.

24 அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன்; அதற்கு நீங்கள் பதில் சொன்னால், நானும் எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குக் கூறுவேன்.

25 அருளப்பருடைய ஞானஸ்நானம் எங்கிருந்து வந்தது ? வானகத்திலிருந்தா ? மனிதரிடமிருந்தா ?" என்று கேட்டார். அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்ததாவது: " ' வானகத்திலிருந்து வந்தது ' என்போமாயின், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ? ' என்று நம்மைக் கேட்பார்.

26 ' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமாயின், பொது மக்களுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில், எல்லாரும் அருளப்பரை இறைவாக்கினர் என்று கருதுகின்றனர்."

27 எனவே, அவர்கள் இயேசுவுக்கு மறுமொழியாக: "எங்களுக்குத் தெரியாது" என்றார்கள். அதற்கு அவர், "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.

28 "இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? ஒருவனுக்கு மக்கள் இருவர் இருந்தனர். அவன் ஒருவனிடம் போய், ' மகனே, இன்று என் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலைசெய் ' என்றான்.

29 அதற்கு அவன், ' போகமாட்டேன் ' என்றான். பின்னர் வருந்தி மனமாறிச் சென்றான்.

30 மற்றவனிடமும் வந்து அவ்வாறே சொன்னான். அதற்கு அவன், ' இதோ! போகிறேன், ஐயா ' என்றான். ஆனால் போகவில்லை.

31 இருவருள் எவன் தந்தையின் விருப்பப்படி நடந்தவன் ?" என்று கேட்டார். அவர்கள், "முந்தியவனே" என்றனர். இயேசு அவர்களை நோக்கி, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆயக்காரரும் விலைமாதரும் உங்களுக்குமுன் கடவுள் அரசில் செல்வார்கள்.

32 ஏனெனில், அருளப்பர் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார்; நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், ஆயக்காரரும் விலைமாதரும் அவரை நம்பினர்; நீங்களோ அதைப் பார்த்த பின்னும் வருந்தி மனமாறி அவரை நம்பவில்லை.

33 "மற்றும் ஓர் உவமையைக் கேளுங்கள்: வீட்டுத்தலைவன் ஒருவன் இருந்தான். அவன் திராட்சைத் தோட்டம் வைத்துச் சுற்றிலும் வேலி அடைத்து, அதில் ஆலைக்குழி தோண்டி, கோபுரமும் கட்டி, அதைக் குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டு வெளியூர் சென்றான்.

34 காய்க்குங் காலம் நெருங்கியபொழுது தனக்கு வரவேண்டிய பலனை வாங்கிவரும்படி தன் ஊழியரைக் குடியானவர்களிடம் அனுப்பினான்.

35 குடியானவர்களோ அவனுடைய ஊழியரைப் பிடித்து, ஒருவனை அடித்தனர், ஒருவனைக் கொன்றனர், வேறொருவனைக் கல்லால் எறிந்தனர்.

36 முந்தினோரைவிட மிகுதியான ஊழியரை மீண்டும் அனுப்பினான். அவர்களுக்கும் அவ்வாறே செய்தனர்.

37 இறுதியாக, ' என் மகனை மதிப்பர் ' என்று, தன் மகனை அவர்களிடம் அனுப்பினான்.

38 குடியானவர்களோ மகனைக் கண்டு, ' இவனே சொத்துக்குரியவன், வாருங்கள் இவனைக் கொன்றுபோடுவோம்; இவன் சொத்து நமக்குக் கிடைக்கும் ' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர்.

39 அவ்வாறே அவனைப் பிடித்துத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றனர்.

40 எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளன் வரும்பொழுது அக்குடியானவரை என்ன செய்வான் ?" என்று கேட்டார்.

41 அவர்களோ, "கொடியோரைக் கொடுமையாய்த் தண்டித்து ஒழித்துவிடுவான்; உரிய காலத்தில் பலனைக் கொடுக்கும் வேறு குடியானவரிடம் திராட்சைத் தோட்டத்தை விடுவான்" என்றனர்.

42 இயேசுவோ அவர்களுக்குக் கூறியது: " ' கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக் கல்லாய் அமைந்தது; ஆண்டவர் செயல் இது, நம் கண்ணுக்கு வியப்பே ? ' என்று நீங்கள் மறைநூலில் படித்ததே இல்லையா ?

43 எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு உங்களிடமிருந்து எடுபட்டு ஏற்ற பலனைத்தரும் இனத்தாருக்கு அளிக்கப்படும்.

44 அக்கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான். எவன் மேல் அது விழுமோ அவன் தவிடுபொடியாவான்."

45 அவர் உரைத்த உவமைகளைக் கேட்ட தலைமைக்குருக்களும் பரிசேயரும் தங்களைப்பற்றியே கூறினார் என்று உணர்ந்து,

46 அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால், கூட்டத்திற்கு அஞ்சினர். ஏனெனில், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதினர்.

அதிகாரம் 22

1 இயேசு மீண்டும் அவர்களிடம் உவமைகளில் உரைத்ததாவது:

2 "விண்ணரசு, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பாகும்.

3 அவன் ஊழியரை அனுப்பித் திருமணத்திற்கு அழைக்கப்பெற்றவர்களை வரச்சொன்னான். அவர்களோ வர விரும்பவில்லை.

4 மீண்டும் வேறு ஊழியரை அனுப்பி, ' இதோ! விருந்து ஏற்பாடு செய்துள்ளேன்; காளைகளும் கொழுத்த மிருகங்களும் அடித்து எல்லாம் ஏற்பாடாயிற்று. திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பெற்றவருக்குச் சொல்லுங்கள் ' என்றான்.

5 அழைக்கப்பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை; ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.

6 மற்றவர்களோ அவன் ஊழியரைப் பிடித்து அவமானப்படுத்திக் கொன்றனர்.

7 அதைக் கேட்ட அரசன் சினந்து, தன் படையை அனுப்பிக் கொலைகாரர்களைத் தொலைத்து அவர்கள் நகரையும் தீக்கிரையாக்கினான்.

8 பின்னர், தன் ஊழியரிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகிவிட்டது. அழைக்கப்பெற்றவர்களோ தகுதியற்றவர்களாயினர்.

9 எனவே, வீதிகளுக்குச் சென்று நீங்கள் காணும் எல்லாரையும் மணவிருந்துக்கு அழையுங்கள் ' என்றான்.

10 அவன் ஊழியரும் வீதிகளுக்குச் சென்று தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்த்தனர். மன்றம் நிரம்ப அவர்கள் பந்தி அமர்ந்தனர்.

11 அமர்ந்தோரைப் பார்க்க அரசன் உள்ளே வந்தான். அங்கே திருமண உடையணியாத ஒருவனைக் கண்டான்.

12 அவனை நோக்கி, 'நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?' என்று கேட்க, அவன் பேசாதிருந்தான்.

13 பின்னர் அரசன் பணியாளரை நோக்கி, ' கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் ' என்று சொன்னான்.

14 ஏனெனில், அழைக்கப்பெற்றவர்களோ பலர்; தேர்ந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்."

15 பின்னர், பரிசேயர் போய் அவரைப் பேச்சில் அகப்படுத்த ஆலோசனை செய்தனர்.

16 தங்கள் சீடரை ஏரோதியரோடு அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மை உள்ளவர்; கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர். நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.

17 எனவே, எங்களுக்குச் சொல்லும்: செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?" என்றனர்.

18 இயேசு அவர்களது கெடுமதியை அறிந்து, "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் ?

19 வரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்" என்றார். ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தனர்.

20 இயேசு, "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை ?" என்றார்.

21 "செசாருடையவை" என்றனர். அப்பொழுது அவர்களை நோக்கி, "ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்றார்.

22 இதைக் கேட்டு அவர்கள் வியப்புற்று அவரை விட்டுப்போயினர்.

23 உயிர்த்தெழுதல் இல்லையென்று கூறும் சதுசேயர் அவரை அன்று அணுகி,

24 "போதகரே, ' ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவன் சகோதரன் அவனுடைய மனைவியை மணந்து, தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் ' என்று மோயீசன் சொல்லியிருக்கிறார்.

25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் மணம்முடித்து மகப்பேறின்றித் தன் மனைவியைச் சகோதரனுக்கு விட்டு இறந்தான்.

26 அப்படியே இராண்டாம், மூன்றாம், ஏழாம் சகோதரன்வரைக்கும் நடந்தது.

27 எல்லாருக்கும் கடையில் அப்பெண்ணும் இறந்தாள்.

28 ஆகவே, உயிர்த்தெழும்போது அவள் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாக இருப்பாள் ? எல்லாரும் அவளை மணம்செய்திருந்தனரே" என்று கேட்டனர்.

29 அதற்கு இயேசு, "மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் தவறாக நினைக்கிறீர்கள்.

30 ஏனெனில், உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானகத்தில் கடவுளின் தூதரைப்போல் இருப்பார்கள்.

31 இறந்தோர் உயிர்த்தெழுவதுபற்றிக் கடவுள், ' நாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று உங்களுக்குக் கூறினதை நீங்கள் படித்ததில்லையா ?

32 அவர், வாழ்வோரின் கடவுளேயன்றி இறந்தோரின் கடவுள் அல்லர்" என்றார்.

33 இதைக் கேட்ட மக்கட்கூட்டம் அவர் போதனையைப்பற்றி மலைத்துப்போயிற்று.

34 அவர் சதுசேயரை வாயடக்கியது கேள்வியுற்ற பரிசேயர் ஒன்றுகூடினர்.

35 அவர்களுள் சட்டவல்லுநனாகிய ஒருவன்,

36 "போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்.

37 இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக.

38 இதுவே எல்லாவற்றிலும் பெரிய முதன்மையான கட்டளை.

39 இரண்டாவது இதை யொத்ததே; உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக.

40 திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" என்றார்.

41 பரிசேயர் திரண்டு கூடியிருக்கையில் இயேசு,

42 "மெசியாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அவர் யாருடைய மகன் ?" என்று வினவினார். "தாவீதின் மகன்" என்றார்கள்.

43 அதற்கு அவர், "அப்படியானால் தாவீது, தேவ ஆவியால் ஏவப்பட்டு,

44 அவரை ஆண்டவர் என்று அழைப்பது எப்படி ? ஏனெனில், ' ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும் ' எனச் சொல்லியிருக்கிறாரே.

45 ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாக மட்டும் இருப்பது எப்படி ?" என்றார்.

46 அதற்கு ஒருவனும் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்ல முடியவில்லை. அன்றுமுதல் அவரிடம் மேலும் கேள்வி கேட்க ஒருவனும் துணியவில்லை.

அதிகாரம் 23

1 பின்னர், இயேசு தம் சீடரையும் மக்கட்கூட்டத்தையும் நோக்கிக் கூறியதாவது:

2 "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோயீசனுடைய இருக்கையில் அமர்ந்துள்ளனர்.

3 அவர்கள் உங்களுக்குச் சொல்லுவதெல்லாம் கடைப்பிடித்து நடங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோலச் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள்; செய்வதில்லை.

4 பளுவான சுமையைக் கட்டி மக்களுடைய தோள்மேல் வைக்கிறார்கள்; தாங்களோ அதை ஒரு விரலாலும் அசைக்கமாட்டார்கள்.

5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டுமென்றே செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தம் சீட்டுப்பட்டங்களை அகலமாக்கிக் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.

6 விருந்துகளில் முதலிடங்களையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும் விரும்புகின்றனர்.

7 பொது இடங்களில் வணக்கம் பெறவும், மக்களால் 'ராபி' எனப்படவும் ஆசிக்கின்றனர்.

8 நீங்களோ 'ராபி' என்று அழைக்கப்படவேண்டாம். ஏனெனில், உங்கள் போதகர் ஒருவரே; நீங்கள் அனைவரும் சகோதரர்.

9 மண்ணுலகில் ஒருவரையும் தந்தையென்று கூறவேண்டாம். ஏனெனில், விண்ணுலகிலுள்ளவர் ஒருவரே உங்கள் தந்தை.

10 குரு என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில், மெசியா ஒருவரே உங்கள் குரு.

11 உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்.

13 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!

14 ஏனெனில், மனிதர் விண்ணரசில் நுழைகையில் வாயிலை அடைத்துவிடுகிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.

15 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஒருவனை மதத்தில் சேர்க்க நாடும் கடலும் சுற்றி அலைகிறீர்கள். அவன் சேர்ந்தபின் உங்களைவிட இரு மடங்கு அவனை நரகத்துக்கு உரியவனாக்குகிறீர்கள்.

16 குருட்டு வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆலயத்தின்மீது ஒருவன் ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், ஆலயத்தின் பொன்மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்களே.

17 மூடரே, குருடரே, எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?

18 மேலும் ஒருவன் பீடத்தின்மீது ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், பீடத்தின் மேலுள்ள காணிக்கையின் மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்கள்.

19 குருடரே, எது பெரிது? காணிக்கையா? காணிக்கையைப் பரிசுத்தமாக்கும் பீடமா?

20 எனவே, பீடத்தின் மீது ஆணையிடுவோன் அதன் பெயராலும், அதன் மேலுள்ள அனைத்தின் பெயராலும் ஆணையிடுகிறான்.

21 ஆலயத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் அதன் பெயராலும், அதில் குடிகொண்டிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.

22 வானகத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் கடவுளுடைய அரியணையின் பெயராலும், அதன்மேல் வீற்றிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.

23 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள். இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.

24 குருட்டு வழிகாட்டிகளே, கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறீர்கள்.

25 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன.

26 குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு; அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்.

27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன. உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும், எவ்வகை அசுத்தமும் நிறைந்துள்ளன.

28 அவ்வாறே நீங்களும் வெளியே மனிதருக்கு நீதிமான்களாகத் தோன்றுகிறீர்கள். உள்ளேயோ கள்ளத்தனத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

29 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.

30 எங்கள் முன்னோர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், அவர்கள் இறைவாக்கினர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு உடந்தையாய் இருந்திருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

31 இவ்வாறு, இறைவாக்கினர்களைக் கொன்றவர்களுடைய மக்கள் நீங்கள் என்பதற்கு, நீங்களே உங்களுக்கு எதிர்சாட்சிகள்.

32 எனவே, உங்கள் முன்னோர் தொடங்கியதை நீங்கள் முடித்துவிடுங்கள்.

33 பாம்புகளே, விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் நரகத் தீர்வைக்கு எப்படித் தப்பமுடியும்?

34 எனவே, இதோ! நான் இறைவாக்கினர்களையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரைக் கொல்வீர்கள், சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் செபக்கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; ஊர் ஊராய் விரட்டியடிப்பீர்கள்.

35 இவ்வாறு குற்றமற்ற ஆபேலுடைய இரத்தம்முதல், ஆலயத்திற்கும் பீடத்திற்கும் இடையே நீங்கள் கொன்றவரும், பரக்கியாவின் மகனுமான சக்கரியாசின் இரத்தம்வரை சிந்திய மாசற்ற இரத்தத்தின் பழி எல்லாம் உங்கள்மேல் வந்துவிழும்.

36 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இவையனைத்தும் இத்தலைமுறைமேல் வந்துவிழும்.

37 "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன். நீயோ உடன்படவில்லை.

38 இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும்.

39 ஏனெனில், ' ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி ' என்று நீங்கள் கூறும்வரை இனி என்னைக் காணமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

அதிகாரம் 24

1 இயேசு கோயிலை விட்டுப் போய்க்கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து கோயில் கட்டடங்களை அவருக்குக் காட்டினார்கள்.

2 அவர் அவர்களுக்கு, "இவையெல்லாம் பார்க்கிறீர்களே, உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இங்கே கல்லின்மேல் கல் இராதபடி எல்லாம் இடிபடும்" என்று மறுமொழி கூறினார்.

3 அவர் ஒலிவமலைமீது அமர்ந்தபின் அவருடைய சீடர் அவரை அணுகி, "இவை எப்பொழுது நிகழும் ? உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.

4 இயேசு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "உங்களை யாரும் ஏமாற்றாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

5 ஏனெனில், பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, ' நான்தான் மெசியா ' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.

6 போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுகளையும் கேட்கப்போகிறீர்கள். எச்சரிக்கையாயிருங்கள்; கலங்கவேண்டாம். ஏனெனில், இவை எல்லாம் நிகழத்தான் வேண்டும்.

7 ஆனால், இன்னும் இது முடிவன்று. நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் கொள்ளைநோய்களும் பஞ்சமும் நிலநடுக்கமும் உண்டாகும்.

8 இவை அனைத்தும் வேதனைகளின் தொடக்கமே.

9 அப்பொழுது உங்களை வேதனைக்குக் கையளிப்பார்கள்; கொலைசெய்வார்கள்; என் பெயருக்காக எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்.

10 அப்பொழுது பலர் இடறல்படுவார்கள்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பார்கள்; ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.

11 போலித் தீர்க்கதரிசிகள் பலர் தோன்றிப் பலரை ஏமாற்றுவார்கள்.

12 அக்கிரமம் அதிகரிப்பதனால் பலரிடம் அன்பு தணிந்துபோகும்.

13 இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்.

14 இறையரசைப்பற்றிய இந்நற்செய்தி எல்லா இனங்களுக்கும் சான்றாக உலக முழுவதும் அறிவிக்கப்படும். பின்னர்தான் முடிவு வரும்.

15 "தானியேல் இறைவாக்கினர் குறிப்பிட்ட ' பாழாக்கும் அருவருப்பு ' பரிசுத்த இடத்தில் நிற்கக் காணும்பொழுது - இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -

16 அப்போது யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும்.

17 கூரைமேல் இருப்பவன் இறங்கி வீட்டில் எதையும் எடுக்காமலே ஓடட்டும்.

18 வயலில் இருப்பவன் தன் போர்வையை எடுக்கவும் திரும்பி வரவேண்டாம்.

19 அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்! 20 நீங்கள் ஓடிப்போவது குளிர் காலத்திலாவது ஓய்வுநாளிலாவது நிகழாதபடி மன்றாடுங்கள்.

21 அப்பொழுது பெரிய வேதனை உண்டாகும். இத்தகைய வேதனை உலகத் தொடக்கமுதல் இதுவரை இருந்ததுமில்லை; இனி இருக்கப்போவதுமில்லை.

22 அந்நாட்கள் குறைக்கப்படாவிடில் எவ்வுயிரும் தப்பித்துக்கொள்ளாது. தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டு அந்நாட்கள் குறைக்கப்படும்.

23 அப்போது எவனாவது உங்களிடம், ' இதோ! மெசியா இங்கே இருக்கிறார் அல்லது அங்கே இருக்கிறார் ' என்று சொன்னால் நம்பாதீர்கள்.

24 போலி மெசியாக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக்கூடிய பெரும் அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.

25 இதோ! உங்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டேன்.

26 "எனவே, யாராவது உங்களிடம் ' இதோ! அவர் பாலைவனத்தில் இருக்கிறார் ' என்று கூறினால், அங்கே சொல்லாதீர்கள். ' இதோ! உள்ளறையில் இருக்கிறார் ' என்றால், நம்பாதீர்கள்.

27 ஏனெனில், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை தெரிவதுபோலவே மனுமகன் வருகையும் இருக்கும்.

28 பிணம் எங்கேயோ அங்கேயே கழுகுகள் கூடும்.

29 "அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டுவிடுவான்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.

30 அப்போது வானத்தில் மனுமகனின் அறிகுறி தோன்றும்; மண்ணுலகின் குலத்தார் எல்லாரும் புலம்பி அழுவர். மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் வானமேகங்களின்மீது வருவதைக் காண்பார்கள்.

31 எக்காளம் முழங்க அவர் தம் தூதரை அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை நாற்றிசையிலுமிருந்து அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைத் திரட்டுவார்கள்.

32 "அத்தி மரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.

33 அவ்வாறே, நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது அவர் அண்மையில் இருக்கிறார், வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.

34 இவையாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.

35 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.

36 அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது.

37 "நோவாவின் காலத்தில் இருந்ததுபோல மனுமகன் வருகையும் இருக்கும்.

38 பெரும் வெள்ளத்திற்கு முந்தின காலத்தில் நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை அவர்கள் உண்டும் குடித்தும், பெண் கொண்டும் கொடுத்தும் வந்தனர்.

39 பெரும் வெள்ளம் வந்து அனைவரையும் வாரிச்செல்லும்வரை அவர்கள் ஒன்றையும் உணரவில்லை. அப்படியே மனுமகன் வருகையும் இருக்கும்.

40 அப்போது வயலில் இருவர் இருப்பர். ஒருவன் எடுக்கப்படுவான்; மற்றவன் விடப்படுவான்.

41 திரிகையில் இரு பெண்கள் மாவரைப்பர். ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்.

42 "விழிப்பாயிருங்கள்; ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது.

43 திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ ?

44 இதை உணர்ந்து நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்.

45 "தக்க காலத்தில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்படி தலைவன் ஏற்படுத்திய, நம்பிக்கையும் விவேகமும் உள்ள ஊழியன் யார் ?

46 எந்த ஊழியன் அவ்வாறு செய்துகொண்டிருப்பதைத் தலைவன் வந்து காண்பானோ, அவன் பேறுபெற்றவன்.

47 அவனைத் தன் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக ஏற்படுத்துவான் என உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.

48 ஆனால், அவ்வூழியன் தீயவனாய் இருந்து, ' என் தலைவர் காலம் தாழ்த்துகிறார் ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு

49 உடன்ஊழியரை அடிக்கவும், குடிகாரருடன் கூடி உண்ணவும் குடிக்கவும் தொடங்கினால்,

50 அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து,

51 அவனை நீக்கி, வெளி வேடக்காரர் கதிக்கு உள்ளாக்குவான். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்.

அதிகாரம் 25

1 "அந்நாளில் விண்ணரசு, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பாயிருக்கும். அவர்கள் கையில் விளக்கு எடுத்துப் போனார்கள்.

2 அவர்களுள் ஐவர் அறிவிலிகள், ஐவர் விவேகிகள்.

3 அறிவிலிகள் ஐவரும் விளக்கு எடுத்துக்கொண்டார்கள்; ஆனால், எண்ணெய் எடுத்துக்கொள்ளவில்லை.

4 விவேகிகளோ விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டார்கள்.

5 மணமகன் வரக் காலம் தாழ்த்தவே, எல்லாரும் தூங்கிவிழுந்து, உறங்கிவிட்டார்கள்.

6 நள்ளிரவில், ' இதோ! மணவாளன் வருகிறார்; அவரை எதிர்கொள்ளச் செல்லுங்கள் ' என்ற கூக்குரல் கேட்டது.

7 அப்பொழுது அக்கன்னியர் எல்லாரும் எழுந்து தம் விளக்குகளைச் சரிப்படுத்தினார்கள்.

8 அறிவிலிகளோ, ' எங்கள் விளக்குகள் அணைந்துபோகின்றன, உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள் ' என்று விவேகிகளிடம் கேட்டார்கள்.

9 அதற்கு விவேகிகள், ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் பற்றாமல் போகலாம், ஆகவே கடைக்காரரிடம் சென்று நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் ' என்றனர்.

10 அவர்கள் வாங்கச் செல்லும்போது மணமகன் வந்தார். தயாராயிருந்தோர் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். கதவு அடைக்கப்பட்டது.

11 இறுதியாக மற்றக் கன்னியரும் வந்து, ' ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றனர்.

12 அவரோ மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களை அறியேன் ' என்றார்.

13 எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.

14 "மேலும் பயணம் செல்ல இருந்த ஒருவன் தன் ஊழியரை அழைத்துத் தன்னுடைமையெல்லாம் அவர்களிடம் ஒப்படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.

15 அவனவன் திறமைக்குத் தக்கவாறு ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், வேறொருவனுக்கு இரண்டும், இன்னொருவனுக்கு ஒன்றுமாகக் கொடுத்துப் பயணம்சென்றான்.

16 ஐந்து தாலந்து பெற்றவன் உடனே சென்று அவற்றைப் பயன்படுத்தி இன்னும் ஐந்து சம்பாதித்தான்.

17 அப்படியே, இரண்டு பெற்றவனும் மேலும் இரண்டு சம்பாதித்தான்.

18 ஒன்று பெற்றவனோ சென்று மண்ணைத் தோண்டித் தலைவனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.

19 நெடுங் காலத்திற்குப் பின்னர், அவ்வூழியரின் தலைவன் திரும்பிவந்து அவர்களிடம் கணக்குக்கேட்டான்.

20 ஐந்து தாலந்து பெற்றவன் அணுகி, மேலும் ஐந்து தாலந்து கொண்டுவந்து, 'ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான்.

21 அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே, சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.

22 இரண்டு தாலந்து பெற்றவனும் வந்து, ' ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ! மேலும் இரண்டு தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான்.

23 அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே. சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.

24 ஒரு தாலந்து பெற்றவனோ வந்து, ' ஐயா, உம்மை எனக்குத் தெரியும். நீர் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர்; தூவாத இடத்தில் சேர்ப்பவர்.

25 ஆகவே, உமக்கு அஞ்சி, உம் தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ! உம்முடையது' என்று கொடுத்தான்.

26 அதற்குத் தலைவன், ' கெட்ட ஊழியனே, சோம்பேறியே, நான் விதைக்காத இடத்தில் அறுப்பவன், தூவாத இடத்தில் சேர்ப்பவன் என்று உனக்குத் தெரியுமே.

27 என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருக்கவேண்டும். நான் வந்து என்னுடையதை வட்டியோடு பெற்றிருப்பேன்.

28 எனவே, இவனிடமிருந்து தாலந்தைப் பிடுங்கி, பத்துத் தாலந்து உடையவனுக்குக் கொடுங்கள்.

29 ஏனெனில், உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.

30 பயனற்ற ஊழியனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்' என்றான்.

31 "வானதூதர் அனைவரும் புடைசூழ மனுமகன் தம் மாட்சிமையில் வரும்போது மாட்சி அரியணையில் வீற்றிருப்பார்.

32 அவர் முன்னிலையில் எல்லா இனத்தாரும் ஒன்று சேர்க்கப்படுவர். இடையன் செம்மறிகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோல், அவர்களை வெவ்வேறாகப் பிரிப்பார்.

33 செம்மறிகளைத் தம் வலப்பக்கமும் வெள்ளாடுகளை இடப்பக்கமும் நிறுத்துவார்.

34 பின்னர், அரசர் தம் வலப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.

35 ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

36 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் ' என்பார்.

37 அப்போது நீதிமான்கள் அவரிடம், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாய் இருக்கக் கண்டு உணவு கொடுத்தோம்? தாகமாயிருக்கக் கண்டு குடிக்கக் கொடுத்தோம்?

38 எப்பொழுது நீர் அன்னியனாய் இருக்கக் கண்டு வரவேற்றோம்? ஆடையின்றியிருக்கக் கண்டு உடுத்தினோம்?

39 எப்பொழுது நீர் நோயுற்றோ சிறையிலோ இருக்கக் கண்டு, உம்மைப் பார்க்க வந்தோம்?' என்பார்கள்.

40 அதற்கு அரசர் அவர்களிடம் கூறுவார்: 'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்.'

41 பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்.

42 ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை.

43 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தவில்லை. நோயுற்றும் சிறையிலும் இருந்தேன், என்னைப் பார்க்க வரவில்லை ' என்பார்.

44 அப்பொழுது அவர்களும் அவரிடம், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ தாகமாகவோ அன்னியனாகவோ, ஆடையின்றியோ நோயுற்றோ சிறையிலோ இருப்பதைக் கண்டு உமக்குப் பணிவிடை செய்யாதிருந்தோம் ?' என்பர்.

45 அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறியவர் இவர்களுள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்யாதபோதெல்லாம் எனக்கே செய்யவில்லை ' என்பார்.

46 எனவே, இவர்கள் முடிவில்லாத் தண்டனைக்கும், நீதிமான்கள் முடிவில்லா வாழ்வுக்கும் போவார்கள்."

அதிகாரம் 26

1 இயேசு இவ்வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தபின் தம் சீடரை நோக்கி,

2 "இரண்டு நாள் கழித்துப் பாஸ்கா விழா வரும் என்று உங்களுக்குத் தெரியும். அப்போது மனுமகன் சிலுவையில் அறையப்படக் கையளிக்கப்படுவார்" என்று சொன்னார்.

3 அப்பொழுது தலைமைக்குருக்களும், மக்களுள் மூப்பரும் கைப்பாஸ் என்னும் தலைமைக்குருவின் மாளிகையில் கூடினர்.

4 இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலைசெய்ய ஆலோசனை செய்தனர்.

5 ஆனால், "மக்களிடையே கலகம் உண்டாகாதிருக்கத் திருவிழாவிலே வேண்டாம்" என்றனர்.

6 பெத்தானியாவில் தொழுநோய்ச் சீமோன் வீட்டில் இயேசு இருக்கையில்,

7 பெண் ஒருத்தி விலையுயர்ந்த பரிமளத்தைலம் உள்ள படிகச் சிமிழுடன் அவரை அணுகினாள். பந்தியிருக்கையில் அவர்தலையில் அதை ஊற்றினாள்.

8 இதைப் பார்த்த சீடர்கள் சினங்கொண்டு,

9 "இதை வீணாக்குவானேன் ? இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்றனர்.

10 இதையறிந்த இயேசு, "ஏன் இப்பெண்ணைத் தொந்தரை செய்கிறீர்கள் ? இவள் எனக்குச் செய்தது நேர்த்தியான செயல்தான்.

11 ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை.

12 இவள் பரிமளத்தைலத்தை என் உடல்மீது ஊற்றுகையில் என் அடக்கத்தைக்குறித்தே செய்தாள்.

13 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உலக முழுவதிலும் எங்கெங்கு இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ, அங்கெல்லாம் இவள் செய்ததும் இவள்நினைவாகக் கூறப்படும்" என்றார்.

14 அப்பொழுது பன்னிருவருள் ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து என்பவன் தலைமைக்குருக்களிடம் சென்று அவர்களிடம், "எனக்கு என்ன தருவீர்கள் ?

15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுப்பேன்" என்று கூறினான். அவர்களோ முப்பது வெள்ளிக்காசு அவனுக்குக் கொடுத்தனர்.

16 அதுமுதல் அவரைக் காட்டிக்கொடுக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

17 புளியாத அப்பத் திருவிழாவின் முதல்நாள் சீடர் இயேசுவை அணுகி, "நீர் பாஸ்கா உணவை உண்ண உமக்கு நாங்கள் எங்கே ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர் ?" எனக் கேட்டனர்.

18 இயேசு கூறியது: "நகரத்தில் இன்னாரிடம் போய், ' என் நேரம் அருகிலுள்ளது; என் சீடருடன் உன் வீட்டில் பாஸ்கா கொண்டாடுவேன் ' எனப் போதகர் கூறுகிறார் என்று சொல்லுங்கள்."

19 சீடரும் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்து பாஸ்கா உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.

20 மாலையானதும், தம் பன்னிரு சீடருடன் பந்தி அமர்ந்தார்.

21 அவர்கள் உண்ணும்பொழுது, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்றார்.

22 அவர்கள் மிகவும் வருந்தி, "நானோ ஆண்டவரே ?" என்று ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினர்.

23 அதற்கு அவர், "என்னுடன் பாத்திரத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.

24 மனுமகன் தம்மைப்பற்றி எழுதியிருக்கிறபடியே போகிறார். மனுமகனைக் காட்டிக்கொடுப்பவனுக்கோ ஐயோ கேடு! அவன் பிறவாது இருந்திருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்" என்றார்.

25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், "நானோ, ராபி ?" என்று கேட்க, அவரும், "நீயே சொல்லிவிட்டாய்" என்றார்.

26 அவர்கள் உண்ணும்பொழுது, இயேசு அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி, பிட்டு, தம் சீடருக்கு அளித்து, "இதை வாங்கி உண்ணுங்கள், இஃது என் உடல்" என்றார்.

27 பின்னர், கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, அவர்களுக்கு அளித்து, "இதிலே அனைவரும் பருகுங்கள்.

28 ஏனெனில், உடன்படிக்கைக்கான என் இரத்தம் இது; பாவமன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்.

29 உங்களுக்குச் சொல்லுகிறேன்: இதுமுதல் என் தந்தையின் அரசில் புதிய இரசம் உங்களோடு பருகும் நாள்வரை இந்தத் திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன்" என்றார்.

30 புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றனர்.

31 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, "இன்றிரவே என்னைக்குறித்து நீங்கள் அனைவரும் இடறல்படுவீர்கள். ஏனெனில், ' மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறிப்போம் ' என எழுதியிருக்கிறது.

32 ஆனால், நான் உயிர்த்தபின் கலிலேயாவிற்கு உங்களுக்குமுன் போவேன்" என்று சொன்னார்.

33 அதற்கு இராயப்பர், "எல்லாரும் உம்மைக் குறித்து இடறல்பட்டாலும், நான் ஒருபோதும் இடறல்படேன்" என்றார்.

34 இயேசு அவரிடம், "உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்: இன்றிரவே கோழி கூவுமுன் என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்றார்.

35 இராயப்பர், "உம்மோடு இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை மறுதலியேன்" என்றார். அப்படியே சீடர் அனைவரும் கூறினர்.

36 பின்னர், இயேசு அவர்களுடன் கெத்சேமனி என்னும் தோட்டத்திற்கு வந்தார். வந்து சீடர்களிடம், "நான் அங்கே சென்று செபிக்குமளவும் இங்கே இருங்கள்" என்று சொல்லி, ஃ

37 இராயப்பரையும் செபெதேயுவின் மக்கள் இருவரையும் தம்மோடு அழைத்துச்சென்றார். அப்போது வருத்தமும் மனக்கலக்கமும் அவரை ஆட்கொள்ளவே,

38 அவர் அவர்களை நோக்கி, "என் ஆன்மா சாவுக்கு ஏதுவான வருத்தமுற்றிருக்கிறது. இங்கே தங்கி என்னுடன் விழித்திருங்கள்" என்றார்.

39 சற்று அப்பால்போய், குப்புறவிழுந்து, "என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும். எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்" என்று செபித்தார்.

40 தம் சீடரிடம் வந்து அவர்கள் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு இராயப்பரை நோக்கி, "என்ன, ஒரு மணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா ?

41 சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள். ஆவி ஊக்கமுள்ளதுதான், ஊன் உடலோ வலுவற்றது" என்றார்.

42 இரண்டாம் முறையும் சென்று, "என் தந்தையே, நான் குடித்தாலொழிய இத்துன்பக் கலம் அகல முடியாதெனில் உமது விருப்பப்படியே ஆகட்டும்" என்று செபித்தார்.

43 மீண்டும் வந்து அவர்கள் தூங்குவதைக் கண்டார். ஏனெனில், அவர்கள் கண்கள் தூக்க மயக்கமுற்றிருந்தன.

44 அவர்களை விட்டு மீண்டும் சென்று மூன்றாம் முறையாக அவ்வார்த்தைகளையே சொல்லிச் செபித்தார்.

45 பின் தம் சீடரிடம் வந்து, "இன்னும் தூங்கி இளைப்பாறுகிறீர்களா ? இதோ! நேரம் நெருங்கிவிட்டது. மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்படப் போகிறார்.

46 எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கிவிட்டான்" என்றார்.

47 அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே இதோ! பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். தலைமைக்குருக்களும் மக்களின் மூப்பரும் அனுப்பிய பெருங்கூட்டம் ஒன்று வாள்களோடும் தடிகளோடும் அவனுடன் வந்தது.

48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன், "எவரை நான் முத்தமிடுவேனோ அவர்தாம்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

49 உடனே இயேசுவை அணுகி, "ராபி, வாழ்க! " என்று அவரை முத்தமிட்டான்.

50 இயேசுவோ, "நண்பா! எதற்காக வந்தாய் ?" என்று அவனைக் கேட்டார். அப்பொழுது அவர்கள் நெருங்கி வந்து இயேசுவின்மேல் கைபோட்டுப் பிடித்தனர்.

51 இதோ! இயேசுவோடு இருந்தவருள் ஒருவன் கையை நீட்டி வாளை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவன் காதைத் துண்டித்தான்.

52 இயேசுவோ அவனிடம், "உன் வாளை உறையில் போடு. ஏனெனில், வாள் எடுப்போர் எல்லாரும் வாளால் மடிவர்.

53 நான் என் தந்தையைக் கேட்டால் பன்னிரு படைகளுக்கு மிகுதியான தூதரை அவர் இப்பொழுது எனக்கு அளிக்கமாட்டார் என்று நினைக்கிறாயா ?

54 அப்படிச் செய்தால் இவ்வாறு நடைபெற வேண்டும் என்னும் மறைநூல் வாக்கு எவ்வாறு நினைவேறும் ?" என்றார்.

55 அவ்வேளையில் இயேசு, மக்கள்திரளை நோக்கி, "நீங்கள் கள்ளனைப் பிடிக்க வருவதுபோல வாளோடும் தடியோடும் என்னைப் பிடிக்க வந்தீர்களோ ? நாள்தோறும் கோவிலில் அமர்ந்து போதித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை" என்று சொன்னார்.

56 இறைவாக்கினர்கள் எழுதியது நிறைவேறும் பொருட்டே இவையனைத்தும் நடைபெற்றன. அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்.

57 இயேசுவைப் பிடித்தவர்களோ கைப்பாஸ் என்ற தலைமைக்குருவிடம் அவரைக் கூட்டிச் சென்றார்கள்.

58 இராயப்பரோ தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக்குருவின் வீட்டுமுற்றம்வரை வந்து, உள்ளே நுழைந்து முடிவைக் காணும்படி காவலருடன் உட்கார்ந்திருந்தார்.

59 தலைமைக்குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவைச் சாவுக்குக் கையளிக்கும்படி அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று தேடலாயினர்.

60 பல பொய்ச்சாட்சிகள் முன்வந்தும் அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. இறுதியாக இரண்டு பொய்ச் சாட்சிகள் வந்து,

61 "இவன் ' கடவுளுடைய ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட என்னால் முடியும் ' என்றான்" எனக் கூறினர்.

62 தலைமைக்குரு எழுந்து, "உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்லுகின்றனரே. மறுமொழியாக ஒன்றும் சொல்வதற்கில்லையா ?" என்று கேட்டார்.

63 இயேசுவோ பேசாதிருந்தார். தலைமைக் குரு அவரை நோக்கி, உயிர் உள்ள கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னைக் கேட்கிறேன்: "நீ கடவுளின் மகனான மெசியாவோ ?" என்றார்.

64 இயேசு, "நீரே சொன்னீர். மேலும் மனுமகன் வல்லமையுள்ள இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வான மேகங்கள்மீது வருவதை நீங்கள் இனிக் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

65 அப்போது தலைமைக்குரு தம்முடைய ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, "இவன் தேவ தூஷணம் சொன்னான். நமக்கு இன்னும் சாட்சிகள் எதற்கு ? இதோ! இப்பொழுது தேவ தூஷணம் கேட்டீர்களே.

66 உங்கள் கருத்து என்ன ?" என்று கேட்டார். அவர்களோ மறுமொழியாக, "இவன் சாவுக்குரியவன்" என்றார்கள்.

67 அப்பொழுது அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி அவரை அடித்தார்கள். சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,

68 "மெசியாவே, உன்னை அறைந்தவன் யாரென்று எங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்" என்று கேட்டனர்.

69 இராயப்பர் வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். ஓர் ஊழியக்காரி அவரிடம் வந்து, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தாய்" என்றாள்.

70 அவரோ எல்லார் முன்னிலையிலும், "நீ சொல்வது எனக்குத் தெரியாது" என்று மறுத்தார்.

71 அவர் அங்கிருந்து வாயிலருகே வந்தபொழுது வேறோர் ஊழியக்காரி அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்களிடம், "இவனும் நாசரேத்தூர் இயேசுவோடு இருந்தான்" என்று கூறினாள்.

72 அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியாது" என்று ஆணையிட்டு மீண்டும் மறுத்தார்.

73 சிறிது நேரத்திற்குப் பின்பு, அங்கிருந்தவர்கள் அணுகி, "உண்மையாகவே நீயும் அவர்களுள் ஒருவன்தான்; ஏனெனில், உன் பேச்சே உன்னைக் காட்டிவிடுகிறது" என்று இராயப்பரிடம் கூறினார்கள்.

74 அப்பொழுது அவர், "அந்த ஆளை எனக்குத் தெரியவே தெரியாது" என்று சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே கோழி கூவிற்று.

75 இராயப்பரோ, "கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு சொன்னதை நினைவுகூர்ந்தார். வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.

அதிகாரம் 27

1 காலையானதும் தலைமைக்குருக்கள், மக்களின் மூப்பர் எல்லாரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.

2 அவரைக் கட்டி நடத்திச் சென்று ஆளுநர் பிலாத்திடம் கையளித்தனர்.

3 அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,

4 "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அவர்களோ, "எங்களுக்கென்ன ? அஃது உன் பாடு" என்றனர்.

5 அவனோ வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான்றுகொண்டான்.

6 தலைமைக்குருக்கள் வெள்ளிக்காசுகளை எடுத்து, "காணிக்கைப் பெட்டியில் இவற்றைப் போடக்கூடாது; ஏனெனில், இவை இரத்தத்தின் விலை" என்றனர்.

7 ஆலோசனை செய்து, அன்னியரை அடக்கம்செய்ய அவற்றைக்கொண்டு 'குயவன் நிலத்தை' வாங்கினர்.

8 அதனால்தான் அந்நிலம் இன்றுவரை ' இரத்த நிலம் ' எனப்படுகிறது.

9 "இஸ்ராயேல் மக்களால் விலைமதிக்கப் பெற்றவருடைய விலையாகிய முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து,

10 ஆண்டவர் எனக்குக் குறித்தபடியே குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறியது.

11 இயேசு ஆளுநர்முன் நின்றார். ஆளுநர் அவரை: "நீ யூதரின் அரசனோ ?" என்று வினவ, இயேசு, "நீர்தாம் சொல்கிறீர்" என்றார்.

12 தலைமைக்குருக்களும் மூப்பரும் சாட்டிய குற்றங்களுக்கு அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

13 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, "உனக்கு எதிராக இத்தனைச் சான்றுகள் கூறுகிறார்களே; உன் காதில் விழவில்லையா ?" என்று கேட்டார்.

14 அவரோ ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை. அதைக் கண்டு ஆளுநர் மிகவும் வியப்புற்றான்.

15 திருவிழாதோறும் மக்கள் விரும்பும் ஒரு குற்றவாளியை ஆளுநர் விடுதலைசெய்வது வழக்கம்.

16 பரபாஸ் என்ற பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.

17 எனவே, மக்கள் ஒன்றுகூடினபோது, பிலாத்து, "நான் யாரை விடுதலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள் ? பரபாசையா, மெசியா என்னும் இயேசுவையா ?" என்று கேட்டார்.

18 ஏனெனில், அவர்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்று அறிந்திருந்தார்.

19 அவர் நீதியிருக்கைமீது வீற்றிருந்தபொழுது அவர் மனைவி அவரிடம் ஆளனுப்பி, "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள்.

20 தலைமைக்குருக்களும் மூப்பரும் பரபாசை விடுவிக்கவும், இயேசுவைத் தொலைக்கவும் கேட்கும்படி மக்களை ஏவிவிட்டனர்.

21 ஆளுநர், "இவ்விருவரில் யாரை உங்களுக்கு நான் விடுதலையாக்க வேண்டும் என்கிறீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "பரபாசை" என்றனர்.

22 பிலாத்து, "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்யட்டும் ?" என்றார். எல்லாரும், "அவன் சிலுவையில் அறையப்படட்டும்" என்றனர்.

23 ஆளுநர், "இவன் செய்த தீங்கு என்ன ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "சிலுவையில் அறையப்படட்டும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டனர்.

24 பிலாத்து தம்மால் ஒன்றும் ஆகவில்லை என்றும், அதற்கு மாறாகக் கலகமே ஏற்படுகிறதென்றும் கண்டு, தண்ணீர் எடுத்து மக்கள்முன்னிலையில், "இவனுடைய இரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு" எனக் கூறிக் கைகழுவினார்.

25 அதற்கு மக்கள் அனைவரும், "இவன் இரத்தம் எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருக்கட்டும்" என்றனர்.

26 பின்னர், அவர்களுக்கு இசைந்து பரபாசை விடுதலைசெய்தார். இயேசுவையோ சாட்டையால் அடித்துச் சிலுவையில் அறையும்படி கையளித்தார்.

27 ஆளுநருடைய படைவீரர் இயேசுவை அரண்மனைக்கு நடத்திச் சென்று அங்கே இருந்த பட்டாளத்தினர் எல்லாரையும் அவர்முன் ஒன்றுசேர்த்தனர்.

28 அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர்;

29 முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர்முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி" என்று எள்ளி நகையாடினர்.

30 அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர்.

31 அவரை எள்ளி நகையாடியபின் அப்போர்வையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர்.

32 வெளியே செல்லுகையில் சீரேனே ஊரானாகிய சீமோன் என்ற ஒருவனைக் கண்டனர். அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினர்.

33 மண்டை ஓடு எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்துக்கு வந்தனர்.

34 கசப்புக் கலந்த திராட்சை இரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்தபின் குடிக்க விரும்பவில்லை.

35 அவரைச் சிலுவையில் அறைந்த பின்னர், சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.

36 பின்னர், உட்கார்ந்து காவல்காத்தனர்.

37 அவருடைய தலைக்கு மேல் அவரைப் பற்றிய குற்ற அறிக்கையை வைத்தனர். அதில், "இவன் யூதரின் அரசன் இயேசு" என்று எழுதியிருந்தது.

38 அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தார்கள்.

39 அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி,

40 "ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் கட்டுவோனே, உன்னையே காப்பாற்றிக்கொள். நீ கடவுள்மகனாய் இருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்தனர்.

41 அவ்வாறே தலைமைக்குருக்கள் மறைநூல் அறிஞரோடும் மூப்பரோடும் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி,

42 பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவன் இஸ்ராயேலின் அரசனாம்! இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும், இவனை நம்புவோம்.

43 கடவுளை நம்பியிருந்தான்; அவருக்கு இவன்மேல் பிரியமிருந்தால் இப்பொழுது விடுவிக்கட்டும். 'நான் கடவுள்மகன்' என்றானே" எனக் கூறினர்.

44 அவ்வாறே அவருடன் அறையுண்ட கள்வரும் அவர் மேல் வசை கூறினர்.

45 நண்பகல் தொடங்கி மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.

46 ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு, "ஏலி, ஏலி, லெமா சபக்தானி" - அதாவது "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.

47 அங்கே நின்றவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.

48 உடனே அவர்களுள் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்துக் காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.

49 மற்றவர்களோ, "பொறு, எலியாஸ் இவனைக் காப்பாற்ற வருவாரா, பார்ப்போம்" என்றனர்.

50 இயேசு மறுபடியும் உரக்கக் கத்தி ஆவி துறந்தார்.

51 இதோ! ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. நிலம் நடுங்கியது. பாறைகள் வெடித்தன.

52 கல்லறைகள் திறக்கவே, துஞ்சிய பரிசுத்தர்களின் உடல்கள் பல எழுந்தன.

53 அவர் உயிர்த்தெழுந்தபின் இவர்கள் கல்லறையை விட்டுத் திரு நகருக்கு வந்து பலருக்குத் தோன்றினார்கள்.

54 நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.

55 கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

56 அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்.

57 மாலையானதும் அரிமத்தியா ஊராரான சூசை என்னும் செல்வர் ஒருவர் வந்தார். அவரும் இயேசுவின் சீடர்.

58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதை அவருக்கு அளித்துவிடக் கட்டளையிட்டார்.

59 சூசை உடலை எடுத்துத் தூயகோடித் துணியில் சுற்றி,

60 தமக்கெனப் பாறையில் குடைந்திருந்த ஒரு புதுக் கல்லறையில் வைத்தார்; ஒரு பெரிய கல்லைப் புரட்டி, கல்லறையின் வாயிலில் வைத்துவிட்டுப் போனார்.

61 அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்.

62 மறுநாள், அதாவது, ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்குருக்களும் பரிசேயரும் பிலாத்திடம் கூடிவந்து,

63 "ஐயா, அந்த வஞ்சகன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.

64 ஒருவேளை அவனுடைய சீடர் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டு, ' இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் ' என்று மக்களிடம் சொல்லக்கூடும். அப்பொழுது முந்தின வஞ்சனையைவிடப் பிந்தினது மோசமாயிருக்கும். இது நிகழாதபடி கல்லறையை மூன்றாம் நாள்வரை பத்திரப்படுத்தக் கட்டளையிடும்" என்றனர்.

65 பிலாத்தோ அவர்களை நோக்கி, "உங்களிடம் காவல்காரர் உண்டே, போய் உங்களுக்குத் தெரிந்தபடி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

66 அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரையிட்டுக் காவலரை வைத்துக் கல்லறையைப் பத்திரப்படுத்தினர்.

அதிகாரம் 28

1 ஓய்வுநாளுக்குப்பின், வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தனர்.

2 இதோ! பெரிய நிலநடுக்கம் உண்டாயிற்று. ஆண்டவரின் தூதர் வானினின்று இறங்கி வந்து, கல்லைப் புரட்டி, அதன்மேல் அமர்ந்தார்.

3 அவருடைய தோற்றம் மின்னல் போன்றும், உடை உறைபனிபோல வெண்மையாயும் இருந்தன.

4 காவலர் அவரைக் கண்டு அஞ்சி நடுங்கிச் செத்தவர்போல் ஆயினர்.

5 வானதூதர் பெண்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையுண்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

6 அவர் இங்கே இல்லை; தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார். வாருங்கள், ஆண்டவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.

7 விரைந்து செல்லுங்கள். அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்துவிட்டார் என்று அவர் சீடருக்குச் சொல்லுங்கள். இதோ! உங்களுக்குமுன் அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள். இதோ! உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்று சொன்னார்.

8 அவர்களும் அச்சத்துடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் விரைவாகக் கல்லறையை விட்டு அகன்று, அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

9 இதோ! இயேசு, அவர்களுக்கு எதிர்ப்பட்டு, "வாழ்க" என்றார். அவர்கள் அணுகி, அவர் பாதங்களைத் தழுவிக்கொண்டு அவரைப் பணிந்தனர்.

10 இயேசு அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், நீங்கள் என் சகோதரரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்று சொன்னார்.

11 அவர்கள் சென்றபின், இதோ! காவலருள் சிலர் நகருக்குள் வந்து நிகழ்ந்தவை அனைத்தையும் தலைமைக்குருக்களிடம் அறிவித்தனர்.

12 அவர்கள் மூப்பருடன் கூடி ஆலோசனை செய்து, படைவீரருக்கு நிரம்பப் பணம் கொடுத்து,

13 நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவில் அவருடைய சீடர் வந்து அவரைத் திருடிச் சென்றனர்' என மக்களுக்குச் சொல்லுங்கள்.

14 ஆளுநரின் காதுக்கு இது எட்டுமாயின் அவரிடம் சொல்லி உங்களுக்கு ஒரு தொந்தரவும் வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றனர்.

15 அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு தங்களுக்குச் சொல்லிக்கொடுத்தபடி செய்தார்கள்; இந்நாள்வரை யூதரிடையே இக்கதை பரவியிருக்கிறது.

16 பதினொரு சீடரும் தங்களுக்கு இயேசு குறிப்பிட்டிருந்த கலிலேயாவின் மலைக்குச் சென்றனர்.

17 அவரைக் கண்டு பணிந்தனர். சிலரோ ஐயமுற்றனர்.

18 இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

19 நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."