திருவெளிப்பாடு

அதிகாரம் 01

1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு: விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் அடியார்களுக்கு வெளிப்படுத்துமாறு கடவுள் அதை அவருக்கு அருளினார்.

2 கிறிஸ்துவோ தம் தூதரை அனுப்பித் தம் அடியானாகிய அருளப்பனுக்கு அவற்றைத் தெரிவித்தார். அருளப்பன் தான் கண்டதனைத்தையும் அறிவித்து, கடவுளின் வார்த்தைக்கும், இயேசு கிறிஸ்து அளித்த சாட்சியத்துக்கும் சான்று கூறினான்.

3 இவ்விறைவாக்குகளை வாசிப்பவனும், அவற்றிற்குச் செவிசாய்த்து இந்நூலில் எழுதியுள்ளதின்படி நடப்பவர்களும் பேறுபெற்றவர்களே: இதோ! குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.

4 ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் அருளப்பன் எழுதுவது: 'இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர்' எனும் இறைவனிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும், உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக.

5 இவரே நம்பிக்கைக்குரிய சாட்சி, இறந்தோரிலிருந்து எழுந்தவருள் தலைப்பேறானவர், மண்ணுலக அரசர்களுக்குத் தலைமையானவர். இவர் நமக்கு அன்புசெய்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களினின்று நம்மை விடுவித்தார்.

6 மேலும் தம் தந்தையும் கடவுளுமானவருக்கு ஊழியம் செய்ய நம்மை அரசகுல குருக்களாக்கினார். இவருக்கே மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக. ஆமென்.

7 இதோ அவர் மேகங்கள் சூழ வருகிறார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தினவர்களும் காண்பார்கள். அவருக்குச் செய்ததை நினைத்து மண்ணுலகின் குலத்தார் அனைவரும் புலம்பி அழுவர். ஆம், இது உண்மை. ஆமென்.

8 "அரகமும் னகமும் நானே" என்கிறார் எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள். இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர் அவரே.

9 இயேசுவுக்குள் உங்களோடு வேதனையிலும் அரசுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்ளும் உங்கள் சகோதரனாகிய அருளப்பன் யான், கடவுளின் வார்த்தையை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகப் பத்மு என்ற தீவுக்கு அனுப்பப்பட்டேன்.

10 அன்று ஞாயிற்றுக்கிழமை; தேவ ஆவி என்னை ஆட்கொண்டது. எனக்குப் பின்னால் பெருங் குரல் ஒன்று கேட்டது. அது எக்காளம்போல் ஒலித்தது.

11 'காட்சியில் காண்பவற்றை ஏட்டில் எழுதி எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தைரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய ஏழு சபைகளுக்கு அனுப்பு' என்று அக்குரல் சொன்னது.

12 என்னோடு பேசியவர் யார் என்று அறியத் திரும்பிப் பார்த்தேன். அப்படிப் பார்த்தபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளைக் கண்டேன்.

13 அவற்றின் நடுவில் மனுமகனைப்போன்ற ஒருவரைப் பார்த்தேன்; அவர் நீண்ட அங்கி அணிந்திருந்தார். மார்பில் பொற்கச்சை கட்டியிருந்தார்.

14 அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும், உறைபனிபோலும் இருந்தது. அவருடைய கண்கள் எரிதழல்போல் சுடர்விட்டன.

15 அவருடைய பாதங்கள் உலையிலிட்ட வெண்கலம்போல் இருந்தன. அவரது குரல் கடல் அலைகளின் இரைச்சலை ஒத்திருந்தது.

16 தம் வலக்கையில் ஏழு விண்மீன்களை ஏந்திக்கொண்டிருந்தார். இரு புறமும் கூர்மையான வாள் அவரது வாயினின்று வெளிப்பட்டது. அவரது முகம் நண்பகல் கதிரவன் ஒளி என ஒளிர்ந்தது.

17 நான் அவரைக் கண்டதும் செத்தவனைப் போல் அவருடைய அடிகளில் விழுந்தேன். அவர் என்னை வலக் கையால் தொட்டு, சொன்னதாவது: "அஞ்சாதே, முதலும் இறுதியும் நானே. வாழ்பவரும் நானே.

18 சாவுக்குட்பட்டேனாயினும் இதோ, நான் என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் எனக்கு உண்டு.

19 ஆகையால் நீ கண்டதையும் இப்போது நிகழ்கின்றதையும் இனி நிகழப்போவதையும் எழுது.

20 எனது வலக் கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் குத்துவிளக்குகள் இவற்றின் உட்பொருள் இதுவே; ஏழு விண்மீன்கள் ஏழு சபைகளின் தூதர்களையும், ஏழு குத்து விளக்குகள் ஏழு சபைகளையும் குறிக்கின்றன.

அதிகாரம் 02

1 எபேசு சபையின் தூதருக்கு இதை எழுது! 'தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை ஏந்திக்கொண்டு, எழு பொன் குத்து விளக்குகளின் நடுவில் நடப்பவர் உரைப்பதாவது: உன் செயல்களை நான் அறிவேன்;

2 நீ எவ்வளவு உழைத்திருக்கிறாய், எவ்வளவு மனவுறுதி காட்டியிருக்கிறாய் என்பதை அறிவேன். தீயவர்களின் போக்கை நீ சகிக்கிறதில்லை என்பதும் எனக்குத் தெரியும், அப்போஸ்தலர்களாய் இல்லாதிருந்தும் சிலர் தங்களை அப்போஸ்தலர்கள் ஆக்கிக்கொண்டார்கள்.

3 அவர்களைப் பரிசோதித்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் மனவுறுதியோடும் நீ விளங்குகிறாய். என் பெயரின் பொருட்டு எவ்வளவோ தாங்கிக் கொண்டாய். ஆயினும் தளர்ச்சியுறவில்லை

4 ஆனால் உன்மேல் நான் சொல்லவேண்டிய குறையொன்று உண்டு: தொடக்கத்தில் உனக்கு இருந்த அன்பு இப்போதில்லை.

5 உயர்ந்த நிலையினின்று நீ தவறிவிட்டாய். இதை நினைத்து மனந்திரும்பி, தொடக்கத்தில் நீ செய்துவந்த செயல்களைச் செய்க. இல்லையேல் நான் உன்னிடம் வந்து உன் விளக்கை அது இருக்குமிடத்திலிருந்து அகற்றி விடுவேன்; நீ மனந்திரும்பாவிட்டால் அப்படிச் செய்வேன்.

6 இருப்பினும் உன் நடத்தையில் நல்லது ஒன்று உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய்.

7 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்; கடவுளுடைய இன்ப வனத்தில் உள்ளதும் வாழ்வு தருவதுமான மரத்தின் கனியை உண்ணும் பேற்றை வெற்றி கொள்பவனுக்கு அருள்வேன்.

8 'சிமிர்னாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'முதலும் இறுதியுமானவர், சாவுக்குட்பட்டும் உயிர் வாழ்கின்றவர் உரைப்பதாவது:

9 நீ படும் வேதனையும் உற்ற வறுமையும் நான் அறிவேன்- எனினும் நீ செல்வமிக்கவனே- தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் உங்களைப் பழித்துப் பேசுவதை எல்லாம் நான் அறிவேன். அவர்கள் யூதர்களே அல்லர்; சாத்தானின் கூட்டமே.

10 உனக்கு வரப்போகும் துன்பங்களுக்கு அஞ்ச வேண்டாம். இதோ, அலகை உங்களுள் சிலரைச் சிறையில் தள்ளிச் சோதனைக்கு உட்படுத்தப்போகிறது. பத்து நாள் வேதனையுறுவீர்கள். சாவதாயினும் விசுவாசத்தில் நிலைத்திரு. வாழ்வை உனக்கு நான் வெற்றிவாகையாய்ச் சூட்டுவேன்.

11 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும். வெற்றி கொள்பவனை இரண்டாவது சாவு தீண்டாது.'

12 "பெர்கமுவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'இருபுறமும் கூர்மையான வாளை உடையவர் உரைப்பதாவது:

13 நீ குடியிருப்பது எத்தகைய இடம் என்று நான் அறிவேன்; சாத்தானின் அரியணை அங்கே தான் உள்ளது. என் பெயரை உறுதியுடன் பற்றிக்கொண்டுள்ளாய். சாத்தான் குடியிருக்கிற உங்கள் நகரத்திலே என் உண்மைச் சாட்சியான, அந்திப்பாஸ் கொலையுண்ட நாளில்கூட, நீ என்மேல் வைத்த விசுவாசத்தை மறுக்கவில்லை.

14 ஆனால் உம்மேல் நான் சொல்லவேண்டிய குறைகள் சில உள்ளன: பாலாமின் போக்குக்கேற்ற கொள்கையைப் பின்பற்றும் சிலர் உங்களிடையே உளர். இந்தப் பாலாம்தான் இஸ்ராயேல் மக்கள் பாவத்தின் விழும்படி செய்யப் பாலாக்குக்குச் சொல்லிக் கொடுத்தவன். ஆனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டார்கள்; விபசாரம் செய்தார்கள்.

15 இது போலத்தான் நிக்கொலாயரின் கொள்கைகளைப் பின்பற்றும் சிலர் உங்களிடையே உள்ளனர்.

16 ஆகவே மனத்திரும்பு. இல்லையேல் விரைவில் நான் உன்னிடம் வந்து, என் வாயினின்று வெளிப்படும் வாள்கொண்டு அவர்களுக்கெதிராகப் போர் தொடுப்பேன்.

17 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும். வெற்றி கொள்பவனுக்கு மறைந்துள்ள மன்னாவை அருளுவேன். மேலும் அவனுக்கு வெள்ளைக் கல் ஒன்றையும் அளிப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். பெறுபவனன்றி வேறு எவனும் அதை அறியான்.'

18 'தியத்தைராவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது; 'எரிதழல்போலச் சுடர்விடும் கண்களும் வெண்கலம்போன்ற பாதங்களும் உடைய இறைமகன் உரைப்பதாவது:

19 உன் செயல்களை நான் அறிவேன். உன் அன்பு, விசுவாசம், பணி செய்யும் ஆர்வம், மனவுறுதி இவை எனக்குத் தெரியும். நீ இன்று செய்துவருவது முன்பு செய்ததைவிட மிகுந்தது என்றறிவேன்.

20 ஆனால் உன்மேல் நான் சொல்ல வேண்டிய குறையொன்று உண்டு: யேசபேல் போன்ற ஒருத்தியை நீ விட்டுவைத்திருக்கிறாய். இறைவாக்குரைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அவள், என் ஊழியர்களை ஏமாற்றி அவர்கள் விபசாரம் செய்யவும், சிலைகளுக்குப் படைத்ததை உண்ணவும் போதித்து வருகிறாள்.

21 அவள் மனந்திரும்புவாள் என நெடு நாள் காத்திருந்தேன். ஆனால் அவள் தன் விபாசரத்தைவிட்டு மனந்திரும்ப மாட்டேன் என்கிறாள்.

22 இதோ, அவளை நான் படுகிடையாய்க் கிடத்திவிடுவேன். அவளோடு விபசாரம் செய்பவர்கள் அவளுடைய செயல்களைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் கொடிய வேதனைக் குள்ளாக்குவேன்.

23 அவளுடைய பிள்ளைகளையும் கொன்று தீர்ப்பேன். மனித உள்ளங்களையும் இதயங்களையும் ஊடுருவிக் காண்பவர் நான் என்பதை எல்லாச் சபைகளும் அப்போது அறிந்து கொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் செயல்களுக்குத் தக்கபடி கூலி கொடுப்பேன்.

24 தியத்தைராவில் வாழும் ஏனையோரே, நீங்கள் இந்தக் கொள்கைகளை ஏற்கவில்லை; சாத்தானின் ஆழ்ந்த ஞானம் என்று பிறர் கூறுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. ஆகையால் நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள் மீது வேறு எச்சுமையும் சுமத்த மாட்டேன்;

25 நான் வருமளவும் நீங்கள் பெற்றுக் கொண்ட போதனையில் நிலைத்திருங்கள்.

26 என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றிகொள்பவனுக்கும் நான் விரும்பிய வழியில் இறுதிவரை நிலைத்திருப்பவனுக்கும்' "புறவினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன்.

27 அவன் அவர்களை இருப்புக்கோல் கொண்டு நடத்துவான்; மட்பாண்டங்களைப் போல் நொறுக்கிவிடுவான்."

28 விடிவெள்ளியையும் அவனுக்கு அளிப்பேன்.

29 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'

அதிகாரம் 03

1 "சர்தை சபையின் தூதருக்கு இதை எழுது: 'கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் உடையவர் உரைப்பதாவது: நீ செய்வதெல்லாம் எனக்குத் தெரியும். நீ உயிருள்ளவன் என்பது பெயரளவில் தான்; உண்மையில் நீ செத்துக்கிடக்கிறாய்.

2 விழிப்புள்ளவனாகி, உன்னுள் எஞ்சி நிற்பதையாவது திடப்படுத்து; அதுவும் சாகுந்தருவாயில் உள்ளது. உன் செயல்கள், என் கடவுள் முன்னிலையில் நிறைவற்ற செயல்களாய் இருக்கக் கண்டேன்.

3 தேவ வார்த்தையைக் கேட்டபோது நீ எவ்வளவு ஆர்வத்துடன் அதை ஏற்றுக்கொண்டாய் என்பதை நினைத்துக்கொள். அதைக் கடைப்பிடித்து மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் கள்ளனைப்போல் வருவேன். அப்படி வந்து உன்னைத் தாக்கும் நேரத்தை நீ அறியாய்.

4 உன் நிலை இப்படி இருப்பினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்தாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து, என்னைப் புடைசூழ்ந்து செல்வர்; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களே.

5 வெற்றி கொள்பவன் அவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்படுவான். வாழ்வின் நூலிலிருந்து அவனது பெயரை நான் நீக்கமாட்டேன். என் தந்தை முன்னிலையிலும், அவருடைய தூதர்கள் முன்னிலையிலும் அவனது பெயரை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வேன்.

6 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'

7 பிலதெல்பியாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'பரிசுத்தர், உண்மையானவர், தாவீதின் திறவுகோலை உடையவர், எவனும் பூட்ட முடியாதபடி திறந்து விடுபவர், எவனும் திறக்க முடியாதபடி பூட்டி விடுபவர் உரைப்பதாவது:

8 எவனும் பூட்ட இயலாத கதவை நான் உனக்கு முன்பாகத் திறந்து வைத்திருக்கிறேன். உன் செயல்களை அறிவேன். உன் ஆற்றல் சிறிதே எனினும் நீ என்னுடைய வார்த்தையைக் கடைப்பிடித்தான்;

9 என் பெயரை மறுக்கவில்லை; இதோ, சாத்தானின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். சிலர் தங்களை யூதர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள், யூதர்களே அல்லர். அவர்கள் வந்து உன் காலடிகளை வணங்கச் செய்வேன்; நான் உனக்கு அன்பு செய்கிறேன் என்பதை அவர்கள் அறியச் செய்வேன்.

10 மன உறுதி தரும் என் வார்த்தையை நீ கடைப்பிடித்தால், மண்ணுலகில் வாழும் அனைவரையும் பரிசோதிக்க மாநிலத்தின் மீது பெருந்துன்பம் வந்து விழும் நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.

11 விரைவாகவே வருகிறேன். உனக்குரிய வெற்றி வாகையை வேறு எவனும் பறித்துக்கொள்ளாபடி, நீ பெற்றுக்கொண்ட போதகத்தில் நிலைத்திரு.

12 வெற்றி கொள்பவனை என் கடவுளது ஆலயத்தில் ஒரு தூணாக ஏற்படுத்துவேன். அவன் அவ்வாலயத்திற்கு ஒருபோதும் புறம்பாக மாட்டான். என் கடவுளின் பெயரையும், என் புதிய பெயரையும் அவன்மீது பொறிப்பேன். என் கடவுளது நகரத்தின் பெயரையும் எழுதுவேன்; அந்த நகரம் என் கடவுளிடமிருந்து, விண்ணகத்தினின்று இறங்கி வருகிற புதிய பெருசலேம்.

13 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'

14 லவோதிக்கேயாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது; 'ஆமென்' எனும் பெயருள்ளவர், உண்மையான சாட்சியானவர், நம்பத்தக்க சாட்சியானவர், கடவுள் படைத்த படைப்பின் ஆதியாய் உள்ளவர் உரைப்பதாவது: உன் செயல்களை நான் அறிவேன்.

15 நீ இருப்பது தட்ப நிலையுமன்று. வெப்ப நிலையுமன்று; தட்ப நிலையிலோ, வெப்ப நிலையிலோ இருந்தால் நலம்.

16 நீயோ வெப்ப நிலையிலுமில்லை, தட்ப நிலையிலுமில்லை; வெதுவெதுப்பான நிலையில் இருக்கிறபடியால், உன்னை என் வாயினின்று கக்கிவிடுவேன்.

17 'நான் செல்வமுள்ளவன், வளமிக்கவன் ஆகிவிட்டேன். எனக்குக் குறை ஒன்றுமில்லை, என்று நீ சொல்கிறாய். உன் நிலையோ இழிவானது, இரங்கத்தக்கது; நீ வறியவன், குருடன், ஆடையற்றவன்.

18 இதை நீ உணர்வதில்லை. ஆகவே நீ செல்வமுள்ளவனாகும் பொருட்டு, புடம்போட்ட பொன்னை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள். ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி வெண்ணாடை வாங்கி அணிந்துகொள். நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் மருந்து வாங்கித் தடவு.

19 நான் யார் மேல் அன்புகூருகிறேனோ அவர்களைக் கண்டித்துத் தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ மனந்திரும்பி ஆர்வமுள்ள வாழ்க்கை நடத்து.

20 இதோ, 'நான் கதவண்டை நின்று தட்டுகிறேன். ஒருவன் எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனது இல்லத்தில் நுழைந்து, அவனோடு விருந்துண்பேன். நானும் அவனும் ஒன்றாய் விருந்துண்போம்.

21 நான் வெற்றிகொண்டு என் தந்தையின் அரியணையில் அமர்ந்ததுபோல, வெற்றிகொள்பவனுக்கு என் அரியணையில் அமரும் உரிமை அளிப்பேன்.

22 தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்."

அதிகாரம் 04

1 இதன்பின் நான் கண்ட காட்சியாவது: விண்ணகத்தில் கதவு ஒன்று திறந்திருக்கக் கண்டேன். எக்காளத்தின் ஒலியைப்போல் என்னோடு முதலில் பேசிய குரல்: "மேலே வா, இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்" என்றது.

2 உடனே தேவ ஆவி என்னை ஆட்கொண்டது. அரியணை ஒன்று விண்ணகத்தில் இருக்கக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருக்கிறார்.

3 பார்வைக்கு அவர் மணிக்கல் போலும், கோமேதகம் போலும் காணப்படுகின்றார். மரகதம்போன்ற வானவில் அரியணையைச் சூழ்ந்திருக்கிறது.

4 அவ்வரியணையைச் சுற்றி இருபத்து நான்கு இருக்கைகள் இருக்கின்றன. அவ்விருக்கைகளில் இருபத்து நான்கு மூப்பர் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து தலையில் பொன் முடி சூடியிருக்கின்றனர்.

5 அரியணையினின்று மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்புகின்றன.

6 அரியணை முன் ஏழு தீப் பந்தங்கள் எரிகின்றன. அவை கடவுளுடைய ஏழு ஆவிகளே. அரியணை முன்னே பளிங்கெனத் தெளிந்த கடல்போன்றதொன்று தென்படுகிறது. நடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் இருக்கின்றன. அவற்றிற்கு முன்புறமும் பின்புறமும் கண்கள் பல இருக்கின்றன.

7 அவ்வுயிர்களுள் முதலாவது, சிங்கத்தைப்போல் உள்ளது; இரண்டாவது இளங்காளைபோல் உள்ளது; மூன்றாவதற்கு மனித முகம் இருக்கிறது; நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருக்கிறது.

8 இந்நான்கு உயிர்கள் ஒவ்வொன்றிற்கும் ஆறு சிறகுகள் உள்ளன. உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருக்கின்றன. "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், எல்லாம் வல்ல ஆண்டவராகிய கடவுள்! இருந்தவரும் இருக்கிறவரும் இனி வருபவரும் இவரே" என்று அவை இரவும் பகலும் ஓய்வின்றிப் பாடுகின்றன.

9 என்றென்றும் வாழ்பவர்க்கு, அரியணையில் வீற்றிருப்பவர்க்கு அவ்வுயிர்கள் மகிமையும் மாட்சியும் நன்றியும் செலுத்தும்போதெல்லாம்,

10 இருபத்து நான்கு மூப்பர்களும் அரியணையில் வீற்றிருப்பவர் முன், அடிபணிந்து என்றென்றும் வாழ்கின்ற அவரைத் தொழுகின்றனர்.

11 அவர்கள் தங்கள் பொன் முடிகளை எடுத்து அரியணை முன் வைத்து, "எங்கள் ஆண்டவரே! எங்கள் இறைவனே! மகிமையும் மாட்சியும் வல்லமையும் பெறத்தக்கவர் நீரே; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே! அனைத்தும் உண்டானது உம் விருப்பத்தாலே, உம் விருப்பத்தாலே எல்லாம் படைக்கப்பட்டன" என்று பாடுகின்றனர்.

அதிகாரம் 05

1 அரியணையில் வீற்றிருப்பவரின் வலப்புறத்தில் ஓர் ஏட்டுச் சுருளைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது. அது ஏழு முத்திரை பொறித்து மூடப்பட்டிருந்தது.

2 "முத்திரைகளை உடைத்து, சுருளைப் பிரிக்கத் தகுதியுள்ளவன் யார்?" என்று வலிமை மிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் பறைசாற்றக் கண்டேன்.

3 அதை பிரிக்கவும் படிக்கவும் மேலுலகிலோ பூவுலகிலோ கீழுலகிலோ உள்ள எவராலும் இயலவில்லை.

4 அதைப் பிரிக்கவும் படிக்கவும் தகுதியுள்ளவர்கள் யாரும் காணோமே என நான் தேம்பி அழுதேன்.

5 அப்போது மூப்பருள் ஒருவர் என்னைப் பார்த்து, "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றார். ஆகவே அவர் அந்த ஏழு முத்திரைகளை உடைத்து, சுருளையும் பிரித்துவிடுவார்" என்றார்.

6 அந்நான்கு உயிர்களும் மூப்பர்களும் சூழ, அரியணை நடுவில் செம்மறி ஒன்று நிற்கக் கண்டேன். அது பலியிடப்பட்டதுபோல் காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. மண்ணுலகெங்கும் அனுப்பப்பட்ட கடவுளின் ஏழு ஆவிகளே அக்கண்கள்.

7 செம்மறியானவர் சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்தச் சுருளை எடுத்தார்.

8 அவர் அதை எடுத்தபோது நான்கு உயிர்களும், இருபத்து நான்கு மூப்பரும் செம்மறியின்முன் அடி பணிந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கலசங்களும் இருந்தன. இறை மக்களின் செபங்களே அக்கலசங்கள்.

9 அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: "சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே; ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர்.

10 அவர்களை எம் கடவுளுக்கு அரசகுலக் குருக்களாக்கினீர்; அவர்களும் மண்மீது அரசாள்வார்கள்."

11 மேலும் நான் கண்ட காட்சியில், அரியணையையும் உயிர்களையும் மூப்பரையும் சுற்றி நின்ற வானதூதர் பலரின் குரலையும் கேட்டேன். அவர்களின் எண்ணிக்கையோ கோடானுகோடி, ஆயிரமாயிரம்.

12 இவர்கள் உரத்த குரலில் பாடியது: "பலியான செம்மறி வல்லமையும் செல்வமும் ஞானமும் பலமும் மாட்சியும் மகிமையும் போற்றியும் பெறத் தகுதியுள்ளவர்."

13 பின்பு மேலுலகம், பூவுலகம், கீழுலகம், ஆழ்கடல் எங்குமுள்ள படைப்புகள் அனைத்தும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் செம்மறியானவர்க்கும். போற்றியும் மாட்சியும் மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக" என்று பாடக் கேட்டேன்.

14 நான்கு உயிர்களும் அதற்கு ' ஆமேன் ' என்று சொல்ல, மூப்பர்கள் அடி பணிந்து தொழுதனர்.

அதிகாரம் 06

1 பின்னர், செம்மறியானவர் ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்போது நான்கு உயிர்களுள் ஒன்று, 'வா' என இடிமுழக்கம்போன்ற குரலில் சொன்னதைக் கேட்டேன்.

2 என் கண்முன் ஒரு வெள்ளைக் குதிரை தோன்றிற்று. அதன்மேல் ஏறியிருந்தவனுடைய கையில் வில் ஒன்று இருந்தது. அவனுக்கு வெற்றிவாகை சூட்டப்பட்டது. வெற்றி வீரனான அவன் வெற்றிமேல் வெற்றி கொள்ளச் சென்றான்.

3 செம்மறியானவர் இரண்டாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் இரண்டாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன்.

4 அப்போது செந்நிறமான மற்றொரு குதிரை வெளிவந்தது. அதன்மேல் ஏறியிருந்தவனுக்கு, உலகில் அமைதியைக் குலைக்கவும், மனிதர் ஒருவரை ஒருவர் கொல்லும்படி செய்யவும் அலுவல் அளிக்கப்பட்டது. பெரியதொரு வாளும் அவனிடம் கொடுக்கப்பட்டது.

5 அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் மூன்றாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். என் கண்முன் கருநிறக் குதிரை ஒன்று தோன்றிற்று. அதன்மீது ஏறியிருந்தவனுடைய கையில் துலாக்கோல் ஒன்று இருந்தது.

6 "ஒருநாள் கூலிக்குக் கோதுமை அரைப்படி, வாற்கோதுமை ஒன்றரைப்படி என்றாகட்டும். ஆனால் எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்த வேண்டாம்" என்ற குரல் நான்கு உயிர்களின் நடுவினின்று எழக்கேட்டேன்.

7 நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.

8 அதன்மீது ஏறியிருந்தவன் பெயர் சாவு. பாதாளம் அவனைப் பின் தொடர்ந்தது. வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மண்மீதுள்ள விலங்குகளாலும் மண்ணுலகில் கால் பாகத்தை வதைத்தொழிக்க அவர்களுக்கு வல்லமை அளிக்கப்பட்டது.

9 ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, கடவுளுடைய வார்த்தையை அறிவித்துத் தாங்கள் கொடுத்த சாட்சியத்திற்காகக் கொலையுண்டவர்களின் ஆன்மாக்களைப் பீடத்தின் கீழே கண்டேன்.

10 அவர்கள் உரத்த குரலில் பரிசுத்தரும் உண்மையுமான ஆண்டவரே, எவ்வளவு காலம் நீதி வழங்காமல் இருப்பீர்? எங்கள் இரத்தத்தைச் சிந்திய மண்ணுலகத்தாரை எவ்வளவு காலம் பழிவாங்காமல் இருப்பீர்?" என்று கத்தினர்.

11 பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்ணாடை அளிக்கப்பட்டது. "இன்னும் சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களைப்போலவே கொல்லப்பட வேண்டிய உங்கள் உடன் ஊழியரான சகோதரர்களின் தொகை நிறைவு பெற வேண்டும்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

12 ஆறாவது முத்திரையை உடைத்தபோது, நான் கண்ட காட்சியில் பெரியதொரு நிலநடுக்கம் உண்டாயிற்று. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணிபோல் கறுத்தது. நிலவு இரத்தமயமாயிற்று.

13 பெருங் காற்றால் அசைக்கப்படும் அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல விண்மீன்கள் மண்மீது விழுந்தன.

14 சுருட்டப்படும் சுருள்போல வானம் மறைந்துவிட்டது. மலைகள் தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.

15 மண்ணுலகின் அரசர்கள், பெருங்குடி மக்கள், படைத் தலைவர்கள் செல்வர்கள், வலியோர் அனைவரும், அடிமைகள், குடிமக்கள் யாவருமே குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டனர்.

16 அந்த மலைகளையும் பாறைகளையும் நோக்கி அவர்கள், "எங்கள்மேல் விழுந்து, அரியணையின்மேல் வீற்றிருப்பவரின் முகத்தினின்றும், செம்மறியின் சினத்தினின்றும் எங்களை மறைந்துக் கொள்ளுங்கள்.

17 ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் பெருநாள் வந்துவிட்டது, அதை எதிர்த்து நிற்பவன் யார் ?" என்று சொன்னார்கள்.

அதிகாரம் 07

1 இதற்குப்பின் மண்ணுலகின் நான்கு மூலைகளிலும் வானதூதர் நால்வர் நிற்கக் கண்டேன். மண்மீது வீசும் நான்கு காற்றுகள் நிலத்தின் மீதோ, நீரின் மீதோ, எந்த மரத்தின் மீதோ வீசாதவாறு அவர்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள்.

2 கதிரோன் எழும் திசையிலிருந்து இன்னொரு வானதூதர் எழுந்து வருவதைக் கண்டேன். உயிருள்ள கடவுளின் முத்திரை அவர் கையில் இருந்தது. அவர் நிலத்திற்கும் நீருக்கும் தீங்கு விளைவிக்க அதிகாரம் பெற்றிருந்த வானதூதர் நால்வரையும் உரத்த குரலில் அழைத்து,

3 "எங்கள் கடவுளுடைய ஊழியர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடுமளவும் நிலத்திற்கோ நீருக்கோ மரத்திற்கோ தீங்கு யாதும் விளைவிக்கவேண்டாம்" என்றார்.

4 முத்திரையிடப்பட்டவர்களின் தொகை என்னவென்று சொல்லக் கேட்டேன். இஸ்ராயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஒரு இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்.

5 யூதா குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

6 ஆசேர் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

7 சிமியோன் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

8 இசக்கார் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமின் குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

9 இதற்குப்பின் யாராலும் எண்ண இயலாத பெருந்திரளான மக்களைக் கண்டேன். இவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் இனத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள். இவர்கள் அரியணைக்கும் செம்மறிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தனர்; வெண்ணாடை அணிந்திருந்தனர்; கையில் குருத்தோலைகளை ஏந்தியிருந்தனர்.

10 உரத்த குரலில், "அரியணைமீது வீற்றிருக்கும் எங்கள் கடவுளுக்கும் செம்மறிக்குமே மீட்பு உரியது" என்று பாடினர்.

11 அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்ற வானதூதர்கள் அனைவரும் அரியணைமுன் முகம்குப்புற விழுந்து கடவுளைத் தொழுது,

12 "ஆமென், போற்றியும் மகிமையும் ஞானமும் நன்றியும் மாட்சியும் வல்லமையும் பலமும் நம் கடவுளுக்கு என்றென்றும் உரியனவாகுக, ஆமென்" என்றனர்.

13 மூப்பர்களுள் ஒருவர் என்னை நோக்கி, "வெண்ணாடை அணிந்த, இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தெரியுமா?" என்று கேட்க, நான் "ஐயா, நீர்தான் சொல்ல வேண்டும்" என்றேன்.

14 அதற்கு அவர் சொன்னது: "இவர்கள் பெரும் வேதனையினின்று மீண்டவர்கள். தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்த்து வெண்மையாக்கிக் கொண்டார்கள்.

15 ஆகவேதான் இவர்கள் கடவுளது அரியணை முன் நின்று அவரது ஆலயத்தில் இரவும் பகலும் அவருக்கு வழிபாடு செலுத்துகிறார்கள். அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களைத் தம் நிழலில் வாழச் செய்வார்.

16 இனி அவர்களுக்குப் பசிதாகம் இராது. வெயிலோ வெப்பமோ அவர்களைத் தாக்காது.

17 ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் செம்மறியானவர் அவர்களை மேய்த்து, வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு அவர்களை நடத்திச் செல்வார். கடவுள் அவர்களது கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்."

அதிகாரம் 08

1 ஏழாவது முத்திரையை உடைத்தபோது, விண்ணகத்தில் அரை மணியளவு மௌனம் நிலவியது.

2 பின்பு கடவுள் முன் நிற்கும் ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்கள் கையில் ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.

3 வேறொரு வானதூதர் பொன் தூபக்கால் ஒன்றை ஏந்திக்கொண்டு பீடத்தின்முன் வந்து நின்றார். அரியணை முன் நிற்கும் பொற்பீடத்தின்மேல், இறைமக்கள் அனைவருடைய செபக் காணிக்கைக்குத் தூபமிடுமாறு, அவருக்கு ஏராளமான சாம்பிராணி அளிக்கப்பட்டது.

4 அச்சாம்பிராணிப் புகை இறைமக்கள் செபங்களோடு சேர்ந்து வானதூதர் கையினின்று கடவுள் முன்பாக எழுந்தது.

5 பின்பு வானதூதர் தூபக்காலை எடுத்து, பீடத்திலிருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகில் கொட்டினார். கொட்டவே, இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.

6 அப்போது ஏழு எக்காளங்களை ஏந்தியிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை ஊதத் தயாராயினர்.

7 முதல் வானதூதர் ஊதினார். இரத்தம் கலந்த கல் மழையும் நெருப்பும் உண்டாகி, மண்மீது பெய்தது. மண்ணில் மூன்றிலொரு பாகம் எரிந்துபோயிற்று; மரங்களில் மூன்றிலொரு பாகம் தீய்ந்துபோயிற்று; பசும் புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

8 இரண்டாவது வானதூதர் எக்காளம் ஊதினார். திப்பற்றி எரிந்த பெரிய மலைபோன்றதொன்று கடலில் ஏறியப்பட்டது. அப்போது கடலில் மூன்றிலொரு பாகம் இரத்த மயமாயிற்று.

9 கடலில் வாழும் உயிர்களுள் மூன்றிலொரு பாகம் மடிந்தது. கப்பல்களில் மூன்றிலொரு பாகம் அழிந்தது.

10 மூன்றாவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். பெரியதொரு விண்மீன் தீப்பந்தம் போல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே வானினின்று பாய்ந்து, ஆறுகளில் மூன்றிலொரு பாகத்திலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.

11 அந்த விண்மீனின் பெயர் 'எட்டி' என்பது. ஆகவே தண்ணீரில் மூன்றிலொரு பாகம் எட்டிபோல் கசப்பாயிற்று. கைப்புற்ற அந்நீரால் மனிதர் பலர் இறந்தனர்.

12 நான்காவது வானதூதர் எக்காளத்தை ஊதினார். கதிரோனில் மூன்றிலொரு பாகமும், நிலாவில் மூன்றிலொரு பாகமும், விண்மீன்களுள் மூன்றிலொரு பாகமும் தாக்குண்டன. அதனால் அவற்றில் மூன்றிலொரு பாகம் இருளடைந்தது. பகலொளி மூன்றிலொரு பாகம் குறைந்தது; இரவுக்கும் அப்படியே ஆயிற்று.

13 பின்பு நான் கண்ட காட்சியில், வானத்தில் உயரப் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகு உரத்த குரலில், "இன்னும் மூன்று வானதூதர்கள் எக்காளம் ஊதப்போகிறார்கள். அதனால், மண்ணுலகில் வாழ்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ கேடு" என்று கத்தியது.

அதிகாரம் 09

1 பின்பு ஐந்தாம் வானதூதர் எக்காளத்தை ஊதினார். அப்போது வானத்திலிருந்து மண்ணில் விழுந்த ஒரு விண்மீனைக் கண்டேன். பாதாளக் குழியின் திறவுகோல் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் பாதாளக் குழியைத் திறந்தார்.

2 குழியிலிருந்து பெருஞ் சூளையைப்போல் புகை எழுப்ப, கதிரவனும் வான்வெளியும் அப்புகையால் இருளடைந்தன.

3 புகையினின்று வெட்டுக்கிளிகள் கிளம்பி மண்ணின்மீது படையெடுத்து வந்தன. தரையிலூரும் தேள்களுக்குள்ள கொடுமை அவற்றிற்கு அளிக்கப்பட்டது.

4 மண்மீதுள்ள புல்லுக்கோ, பசும்பூண்டுக்கோ, மரங்களுக்கோ தீங்கிழைக்காமல், கடவுளின் முத்திரை நெற்றியில் இல்லாதவர்களை மட்டும் தாக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

5 ஆனால் அவர்களைக் கொல்லக் கூடாது; ஐந்து மாத அளவு வேதனைக்குள்ளாக்க வேண்டும் என்பது அவற்றிற்குக் கொடுத்த கட்டளை. அந்த வேதனையோ தேள் கொட்டும்போது ஏற்படும் வேதனைபோல் இருந்தது.

6 அந்நாட்களில் மனிதர் சாவைத் தேடுவர்; ஆனால் சாவதற்கு வழி இராது. அவர்கள் செத்துவிட விரும்புவர்; ஆனால் சாவும் கிட்டவராது.

7 அந்த வெட்டுக்கிளிகள் போருக்குத் தயாரான குதிரைகளைப்போல் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் இருந்ததுபோல் தென்பட்டது. அவற்றின் முகங்கள் மனிதரின் முகங்களை ஒத்திருந்தன.

8 அவற்றின் பிடரிமயிர் பெண்களின் கூந்தலையும், அவற்றின் பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன.

9 மார்பில் இருப்புக் கவசங்கள் அணிந்திருந்ததுபோல் தோன்றிற்று. அவற்றின் சிறகுகளின் இரைச்சல் போர் முனைக்கு விரையும் பெரியதொரு தேர்ப்படையின் இரைச்சல் போன்றிருந்தது.

10 தேள்களைப் போல் அவை வால்களும் கொடுக்குகளும் கொண்டிருந்தன. ஐந்து மாத அளவு மனிதருக்குத் தீங்கு செய்யும் வல்லமை அவற்றின் வாலிலிருந்தது.

11 பாதாளக் குழியின் தூதனே அவற்றின் அரசன். அவன் பெயர் எபிரேய மொழியில் 'அப்த்தோன்', கிரேக்க மொழியில் 'அப்பொல்லியோன்.'

12 இவ்வாறு முதலாவது பெருந்துன்பம் கடந்துவிட்டது. இதோ, இன்னும் இரண்டு பெருந்துன்பங்கள் வரப்போகின்றன.

13 பின்னர் ஆறாம் வானதூதர் எக்காளத்தை ஊதினார். கடவுள் முன் உள்ள பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்து குரலொலி ஒன்று கேட்டேன்.

14 அக்குரல், எக்காளம் வைத்திருந்த ஆறாம் வான தூதரிடம், 'யூப்ரட்டீஸ் என்னும் பேராற்றினருகே கட்டுண்டிருந்த தூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு" என்றது.

15 அவர்கள் அவிழ்த்து விடப்பட்டார்கள். மனிதருள் மூன்றிலொரு பாகத்தை அழித்துவிடும்படி, இவ்வாண்டு, இம்மாதம், இந்நாள், இந்நேரம் வருமளவும் அவர்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தனர்.

16 குதிரைப் படையின் தொகையைச் சொல்லக் கேட்டேன்;

17 அது இருபது கோடி. குதிரைகளையும் குதிரைமேல் ஏறியிருந்தவர்களையும் நான் காட்சியில் கண்டது இவ்வாறு: அவர்கள் நெருப்பு, நீல, கந்தக நிற மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்றிருந்தன. நெருப்பும் புகையும் கந்தகமும் அவற்றின் வாயினின்று வெளிவந்தன.

18 அவற்றின் வாயிலிருந்து வெளிவரும் நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய மூன்று வாதைகளால் மனிதருள் மூன்றிலொரு பாகம் கொல்லப்பட்டது.

19 ஏனெனில், குதிரைகளின் கொடுமை அவற்றின் வாய்களிலும், வால்களிலும் உள்ளது. அவற்றின் வால்கள் பாம்புகள் போலிருந்தன.

20 அவற்றிற்குள்ள தலைகளைக் கொண்டு அவை தீங்கு செய்யும். அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சியவர்கள், தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை. பொன், வெள்ளி, செம்பு, கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டு, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும், பேய்களையும் வணங்குவதை விட்டுவிடவில்லை.

21 தாங்கள் செய்துவந்த கொலைகள், சூனியங்கள், விபசாரம், களவுகள் இவற்றை விட்டு மனந்திரும்பவில்லை.

அதிகாரம் 10

1 பின் வல்லமைமிக்க இன்னொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர் மேகத்தை ஆடையென அணிந்திருத்தார். அவர் தலைமேல் ஒரு வானவில் இருந்தது. முகம் கதிரவனைப்போலவும், கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன.

2 அவர் கையில் சிறியதோர் ஏட்டுச் சுருள் பிரித்திருந்தது. வலக்காலைக் கடலின்மீதும், இடக்காலைத் தரையின் மீதும் வைத்து கர்ச்சிக்கும் சிங்கம்போல முழக்கம் செய்தார்.

3 அப்படி முழக்கம் செய்தபோது ஏழு இடிகள் எதிரொலித்துப் பேசின.

4 ஏழு இடிகளும் அப்படிப் பேசியபோது நான் எழுதப்போனேன். ஆனால் விண்ணிலிருந்து வெளிவந்த ஒரு குரல், "ஏழு இடிகளும் பேசியதை மறைத்து வை, எழுதாதே" என்று சொல்லக் கேட்டேன்.

5 கடலிலும் தரையிலும் நிற்கிறதாக நான் கண்ட வானதூதர் தம் வலக்கையை விண்ணோக்கி உயர்த்தினார்.

6 விண்ணையும் அதில் உள்ளதையும், மண்ணையும் அதில் உள்ளதையும், கடலையும் அதில் உள்ளதையும், படைத்தவரும் என்றென்றும் வாழ்பவருமானவரின் பெயரால் ஆணையிட்டு, "இனித்தாமதம் இராது.

7 ஏழாவது வானதூதர் எக்காளம் ஊதும் நாளில் கடவுளின் மறைவான திட்டம் நிறைவேறியிருக்கும். இறைவாக்கினரான தம் ஊழியர்களுக்குக் கடவுள் அறிவித்த நற்செய்தியின்படியே அவை நிறைவேறும்" என்றர்.

8 விண்ணினின்று நான் கேட்ட குரல் என்னிடம் திரும்பவும் பேசி, "கடல்மீதும் தரைமீதும் நிற்கிற வானதூதரின் கையிலுள்ள பிரித்த ஏட்டுச் சுருளை நீ போய் வாங்கிக்கொள்" என்றது.

9 நானும் அந்த வானதூதரிடம் போய், அந்த ஏட்டுச் சுருளை எனக்குத் தரும்படி கேட்டேன். அவரோ, "இதை எடுத்துத் தின்றுவிடு. இது உன் வயிற்றில் கசக்கும். ஆனால் வாயிலே தேனைப்போல் இனிக்கும்" என்று என்னிடம் சொன்னார்.

10 அப்போது வானதூதரின் கையிலிருந்த அச்சுருளை வாங்கித் தின்றேன். அதுவாயில் தேனைப்போல இனித்தது. ஆனால் தின்றதும் வயிற்றில் கசந்தது.

11 "பல மக்களினம், பல நாடுகள், மொழியினர் பலர், அரசர் பலர் இவர்களைக் குறித்து நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்" என்று எனக்குச் சொல்லப்பட்டது.

அதிகாரம் 11

1 பின்பு பிரம்புபோன்றதோர் அளவுகோலை என் கையில் கொடுத்துச் சொன்னதாவது; "எழுந்து, கடவுளின் ஆலயத்தையும் அதன் பீடத்தையும் அளவிடு; அங்கே வழிபடுவோரையும் கணக்கிடு.

2 ஆலயத்திற்கு வெளியே உள்ள முற்றத்தையோ அளக்காமல் விட்டுவிடு. ஏனெனில், அது புறவினத்தார் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகர் அவர்களால் நாற்பத்திரண்டு மாதம் மிதிபடும்.

3 என் சாட்சிகள் இருவரை அனுப்புவேன். அவர்கள் கோணித் துணி உடுத்தி, அந்த ஆயிரத்து இருநூற்று அறுபது நாளளவு இறைவாக்கு உரைப்பர்.

4 மண்ணுலகை ஆளும் ஆண்டவர் முன் நிற்கும் இரண்டு ஒலிவ மரங்களும், இரண்டு விளக்குத் தண்டுகளும் அவர்களே.

5 அவர்களுக்குத் தீங்கு செய்ய யாராவது முற்பட்டால் அவர்கள் வாயினின்று தீ வெளிப்பட்டு எதிரிகளை விழுங்கி விடும். ஆம், அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுபவனுக்கு இவ்வாறு அழிவு வந்தே தீரும்.

6 தாங்கள் இறைவாக்குரைக்கும் நாளில் மழை பொழியாதபடி வானத்தை அடைத்துவிட அவர்களுக்கு வல்லமை இருக்கும். விரும்பும் போதெல்லாம் அவர்கள் தண்ணீரை இரத்தமாக்கவும், மண்ணுலகை வாதைகள் பலவற்றால் வாட்டவும் அவர்களுக்கு வல்லமை இருக்கும்.

7 அவர்கள் சான்று பகரும் பணியை முடித்தபின், பாதாளக் குழியினின்று வெளியே கிளம்பும் கொடிய விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, வென்று அவர்களைக் கொன்றுவிடும்.

8 அவர்களுடைய பிணங்கள் அந்த மாநகரத்தின் பெரு வீதியில் கிடக்கும். அந்நகரைச் சோதோம் என்றும், எகிப்து என்றும் உருவகப்படுத்துவர். அவர்களுடைய ஆண்டவர் அறையுண்டது அந்நகரிலேதான்.

9 பல இனங்கள், குலங்கள், மொழிகள் நாடுகளைச் சார்ந்த மனிதர் மூன்றரை நாளளவு அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடைப்பதைப் பார்ப்பார்கள். அவற்றைக் கல்லறையில் அடக்கஞ் செய்யவிடமாட்டார்கள்.

10 மண்ணில் வாழ்வோர் இதைப் பார்த்து, மகிழ்ச்சி கொண்டாடுவர். அந்த மகிழ்ச்சியில் ஒருவர்க்கொருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர். ஏனெனில், இவ்விரு இறைவாக்கினரும் மண்ணில் வாழ்ந்தவர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தார்கள்.

11 மூன்றரை நாளுக்குப்பின் உயிரளிக்கும் ஆவி கடவுளிடமிருந்து வந்து அவர்களுக்குள் நுழைந்தது; நுழையவே, அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.

12 அப்போது விண்ணகத்தில் உண்டான பெரியதொரு குரல், "இங்கே வாருங்கள்" என்று தங்களுக்குச் சொல்வதை அந்த இறைவாக்கினர் கேட்டனர். உடனே பகைவர் கண்ணுக்கெதிரிலேயே அவர்கள் மேகத்தின் மீது விண்ணகத்திற்குச் சென்றார்கள்.

13 அதே நேரத்தில் ஒரு பெரும் நில நடுக்கம் உண்டாயிற்று. நகரத்தின் பத்திலொரு பாகம் இடிந்து விழுந்தது. அந்த நில நடுக்கத்தில் ஏழாயிரம் பேர் மடிந்தனர். எஞ்சியிருந்தோர் அச்சமேலிட்டு விண்ணகக் கடவுளுக்கு மகிமை அளித்தனர்.

14 இங்ஙனம் இரண்டாவது வாதை கடந்துவிட்டது. இதோ, மூன்றாவது வாதை விரைவிலே வரப்போகிறது.

15 பின் ஏழாவது வானதூதர் எக்காளம் ஊதினார். விண்ணகத்தில் பேரொலிகள் உண்டாகி, "இவ்வுலகை ஆளும் உரிமை நம் ஆண்டவருக்கும் அவரின் மெசியாவுக்கும் உரியதாயிற்று; அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துவார்" என்று முழங்கின.

16 கடவுள் முன்னிலையில் தம் இருக்கைகளில் அமர்ந்திருந்த இருபத்து நான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கிச் சொன்னதாவது:

17 ஆண்டவராகிய கடவுளே, எல்லாம் வல்லவரே. இருப்பவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

18 ஏனெனில், உம் பெரும் வல்லமையைக் காட்டி ஆட்சி செலுத்தலானீர். புறவினத்தார் சினந்தெழுந்தனர்; உம் சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பிடவும், உம் அடியார்கள், இறைவாக்கினர், பரிசுத்தர்கள் உம் பெயருக்கு அஞ்சுவோர், சிறியோர், பெரியோர் அனைவர்க்கும் கைம்மாறு அளிக்கவும், மண்ணுலகை அழிப்பவர்களை அழித்து விடவும் நேரம் வந்துவிட்டது.

19 பின்பு விண்ணகத்தில் கடவுளின் ஆலயம் திறக்கப் பட்டது. உடன்படிக்கையின் பேழை அவரது ஆலயத்தினுள் காணப்பட்டது. மின்னல்களும் பேரிரைச்சலும் இடிமுழுக்கமும் நில நடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.

அதிகாரம் 12

1 விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.

2 அவள் கருவுற்றிருந்தாள்; பேறுகால வேதனைப் பட்டுக் கடுந்துயருடன் கதறினாள்.

3 வேறொரு அறிகுறியும் விண்ணகத்தில் தோன்றியது. இதோ நெருப்பு மயமான ஒரு பெரிய பறவைநாகம் காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. தலைகளிலே ஏழு முடிகள் இருந்தன.

4 தன் வாலால் விண்மீன்களில் மூன்றிலொரு பகுதியை மண்மீது இழுத்துப்போட்டது. பேறு காலமான அப்பெண்முன் பறவைநாகம் நின்றது; அவள் பிள்ளையைப் பெற்றவுடன்.

5 அதனை விழுங்கிவிடக்காத்திருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஓர் ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணையுள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பெண் பாலைவனத்திற்கு ஓடிப்போனாள்.

6 அங்கே ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் அவளைப் பேணும்படி கடவுள் ஓரிடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

7 பின் விண்ணகத்தில் ஒரு போர் உண்டாயிற்று. மிக்கேலும் அவருடைய தூதர்களும் பறவைநாகத்தோடு போர் தொடுத்தனர். பறவைநாகமும் அதன் தூதர்களும் போரிட்டனர்.

8 பறவைநாகமும் தோல்வியுற்றது. விண்ணகத்தில் அவர்களுக்கு இடமேயில்லாமல் போயிற்று. அப்பெரிய பறவைநாகம் வெளியே தள்ளப்பட்டது.

9 அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அதுவே ஆதியில் தோன்றிய பாம்பு; உலகனைத்தையும் வஞ்சிப்பதும் அதுவே. அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் அதன் தூதர்களும் தள்ளப்பட்டனர்.

10 பின்பு விண்ணகத்தில் நான் பெரும் குரல் ஒன்று கேட்டேன்; அது சொன்னதாவது: "இதோ, வந்துவிட்டது, நம் கடவுள் தரும் மீட்பு. இதோ, அவரது வல்லமையும் அரசும் வெளியாயிற்று; இப்போது அவருடைய மெசியாவின் அதிகாரம் விளங்குகிறது; நம் சகோதரர்களைக் குற்றம் சாட்டியவன் வீழ்த்தப்பட்டான்; நம் கடவுளின் முன்னிலையில் இரவும் பகலும் அவர்களைக் குற்றம் சாட்டியவன் ஒழிந்தான்.

11 அவர்கள் செம்மறியின் இரத்தத்தினாலும், தாங்கள் சான்று பகர்ந்த வார்த்தையினாலும் அவனை வென்றனர். அவர்கள் சாவதற்கும் தயங்கவில்லை; தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை.

12 ஆகவே, வானமே அங்கு வாழ்வோரே, அகமகிழுங்கள். ஆனால், வையகமே, பெருங்கடலே உங்களுக்கு ஐயோ கேடு! அலகை கடுங் கோபத்துடன் உங்களிடம் வந்துள்ளது. தனக்கு எஞ்சியிருப்பது சிறிது காலமே" என்று அதற்குத் தெரியும்.

13 தான் மண்மீது வீழ்த்தப்பட்டதைக் கண்டதும் பறவை நாகம் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது.

14 ஆனால் பாலைவனத்தில் குறிக்கப்பட்ட இடத்திற்குப் பறந்து செல்லும்படி பெருங் கழுதின் சிறகுகள் அப்பெண்ணுக்கு அளிக்கப்பட்டன. அங்கே அப்பாம்பின் கையில் பிடிபடாமல் மூன்றரை ஆண்டுக்காலம் பேணப்படுவாள்.

15 அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது.

16 ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. பறவைநாகத்தின் வாயினின்று பாய்ந்த பெருவெள்ளத்தை அது தன் வாயைத் திறந்து உறிஞ்சிவிட்டது.

17 ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.

அதிகாரம் 13

1 நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது கொடியதொரு விலங்கு கடலிலிருந்து வெளிவரக்கண்டேன். அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து முடிகளும், அதன் தலைகளில் தூஷணப் பெயர்களும் இருந்தன.

2 நான் கண்ட விலங்கு சிறுத்தை போல இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போலும், வாய் சிங்கத்தின் வாய்போலும் இருந்தன. அதற்கு அந்தப் பறவைநாகம் தன் வல்லமையைவும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அளித்தது.

3 அதன் தலைகளுள் ஒன்று படுகாயப்பட்டிருந்ததாகக் காணப்பட்டது. ஆனால் அப்படுகாயம் குணமாய்விட்டது. அவ்விலங்கைப் பார்த்து, மண்ணில் வாழ்வோர் அனைவரும் வியந்து அதன் பின் சென்றனர்.

4 பறவைநாகம் அவ்விலங்குக்கு அதிகாரம் அளித்ததால், மக்கள் நாகத்தை வணங்கி, "விலங்குக்கு ஒப்பானவன் யார்?" என்று அவ்விலங்கையும் தொழுதார்கள்.

5 அவ்விலங்கு ஆணவச் சொற்களையும் தூஷணங்களையும் பேசுவதற்கு விடப்பட்டது. நாற்பத்திரண்டு மாதமளவு அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

6 கடவுளுக்கு எதிராகத் தூஷணம் பேச வாய் திறந்து, அவரது பெயரையும் உறை விடத்தையும், அதாவது விண்ணில் உறைபவர்களையும் தூஷிக்கலாயிற்று.

7 இறைமக்களோடு போர் தொடுக்கவும், அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி கிடைத்தது. குலம், இனம், மொழி, நாடு ஆகிய ஒவ்வொன்றின் மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

8 மண்ணில் வாழ்வோர் அனைவரும், அதாவது பலியிடப்பட்ட செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் உலகத் தொடக்க முதல் பெயரெழுதப்படாதவர் அனைவரும், அதைத் தொழுவர்.

9 செவியுள்ளவன் இதைக் கேட்கட்டும்.

10 சிறைக்குக் குறிக்கப்பட்டவன் சிறைக்குச் செல்லத்தான் வேண்டும்; வாளால் கொல்லப்பட வேண்டியவன் வாளால் கொல்லப்படத்தான் வேண்டும். ஆகவே இறைமக்கள் மனவுறுதியும் விசுவாசமும் கொண்டு விளங்க வேண்டும்.

11 அப்போது மண்ணிலிருந்து வேறொரு விலங்கு வெளிவரக் கண்டேன். செம்மறியின் கொம்புகள்போன்ற இரு கொம்புகள் அதற்கு இருந்தன; ஆனால் அது பறவை நாகத்தைப் போல் பேசியது;

12 முதல் விலங்கு காட்டிய அதிகாரத்தை யெல்லாம் அதன் சார்பாக இரண்டாம் விலங்கு காட்டியது. படுகாயத்திலிருந்து குணமாக்கப்பட்ட அம்முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் தொழும்படி செய்தது. அது பெரிய அருங்குறிகள் புரிந்தது.

13 எல்லாரும் பார்க்க விண்ணினின்று நெருப்பு விழும்படிகூடச் செய்தது.

14 தனக்குக் கிடைத்த வல்லமையால், அம்முதல் விலங்கின் சார்பாகச் செய்த அருங்குறிகளில் வாயிலாக, மண்ணில் வாழ்பவர்களை அது வஞ்சித்தது. வாளால் காயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்கிற்குச் சிலை அமைக்க வேண்டுமென்று அவர்களிடம் சொன்னது.

15 அச்சிலைக்கு உயிரளித்துப் பேசச் செய்யவும், அதைத் தொழாதவர்களைக் கொன்று விடவும், இரண்டாவது விலங்குக்கு வல்லமை கிடைத்தது.

16 சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் தம் வலக்கையிலோ நெற்றியிலோ அடையாளம் போட்டுக்கொள்ளும்படி செய்தது.

17 அந்த விலங்கின் பெயரையோ அதன் பெயரின் எண்ணையோ அடையாளமாய்க் கொண்டிராதவர்கள், வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தார்கள்.

18 இங்கே அறிவுக் கூர்மை தேவைப்படுகிறது. அறிவுள்ளவன் விலங்கின் எண்ணைக் கணிக்கட்டும். அது ஒரு மனிதனைக் குறிக்கும் எண். அவ்வெண் அறுநூற்று அறுபத்தாறு.

அதிகாரம் 14

1 பின்பு இதோ, சீயோன் மலைமீது செம்மறியானவர் நிற்கக்கண்டேன். அவரது பெயரையும் அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியிலே பொறித்திருந்த நூற்று நாற்பத்து நாலாயிரம் பேர் அவரோடு இருந்தனர்.

2 பின் விண்ணினின்று ஒரு குரல் கேட்டது. அது பெருவெள்ளம் போலும், பேரிடி முழக்கம் போலும் ஒலித்தது. நான் கேட்ட குரல் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் இருந்தது.

3 அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாக அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினார்கள். மண்ணுலகினின்று மீட்கப்பட்ட நூற்று நாற்பத்து நாலாயிரம் பேரைத் தவிர மற்றெவரும் அந்தப் பாடலைக் கற்க இயலவில்லை.

4 இவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களை மாசுபடுத்தாதவர்கள்; கன்னிமை காத்தவர்கள். இவர்கள் செம்மறி செல்லுமிடமெல்லாம் அவரைத் தொடர்ந்து செல்பவர்கள். கடவுளுக்கும் செம்மறிக்கும் அர்ச்சிக்கப்பட்ட முதற்கனிகளாக மனித குலத்தினின்று மீட்கப்பட்டவர்கள்.

5 இவர்கள் வாயினின்று பொய் வெளிப்பட்டதில்லை. இவர்கள் மாசற்றவர்கள்.

6 பின் இன்னொரு வானதூதர் வானத்தில் உயரப் பறக்கக் கண்டேன். மண்ணில் வாழ்வோர்க்கும், இனம், குலம், மொழி, நாடு ஒவ்வொன்றிற்கும் அறிவிப்பதற்கு நித்திய நற்செய்தியை அவர் தாங்கிச் சென்றார்.

7 கடவுளுக்கு அஞ்சுங்கள், அவரை மகிமைப்படுத்துங்கள். அவர் தீர்ப்பிடும் நேரம் வந்துவிட்டது. விண்ணும் மண்ணும் தொழுங்கள்" என்று அவர் உரத்த குரலில் கூறினார்.

8 அவரைப் பின்தொடர்ந்த இன்னொரு வானதூதர், "வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர்; காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்த பாபிலோன் வீழ்ச்சியுற்றது" என்றார்.

9 மூன்றாவது தூதர் ஒருவர் அவரைப் பின் தொடர்ந்து உரத்த குரலில் சொன்னதாவது: "விலங்கையும் அதன் சிலையையும் தொழுது, நெற்றியிலோ கையிலோ அடையாளம் பெற்றிருப்பவன்

10 எவனும் கடவுளுடைய கோபம் என்னும் மதுவைக் குடிக்கத்தான் வேண்டும். அது இறைவனது சினம்; அவர் தம் கிண்ணத்தில் கலப்பில்லாமல் வார்த்த மதுவே அது. அவன் பரிசுத்த வானதூதர் முன்னிலையிலும் செம்மறியின் முன்னிலையிலும் தீயாலும் கந்தகத்தாலும் வேதனைக்குள்ளாவான்.

11 அந்த வேதனையில் உண்டாகும் புகை என்றென்றும் மேலே எழுகிறது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் தொழுவோருக்கும், அதன் அடையாளத்தைப் பெறுவோருக்கும், இரவும் பகலும் ஓய்வு இராது.

12 ஆகவே, கடவுளுடைய கட்டளைகளையும், இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காக்கிற இறை மக்களிடம் மனவுறுதி இருக்கவேண்டும்.

13 பின்பு விண்ணினின்று ஒரு குரலைக் கேட்டேன். அக்குரல், "ஆண்டவருக்குள் இறப்பவர் பேறுபெற்றோர்; ஆம், அவர்கள் இனித் தங்கள் உழைப்பினின்று இளைப்பாறுவார்கள். ஏனெனில், அவர்கள் செய்த நன்மையே அவர்களோடு கூட வரும் என, தேவ ஆவி கூறுகிறது. இதை எழுதி வை' என்ற சொன்னது.

14 பின்னர் இதோ ஒரு வெண் மேகத்தையும், அதன் மேல் மனுமகனைப்போன்ற ஒருவர் வீற்றிருப்பதையும் கண்டேன். அவர் தலையில் ஒரு பொன் முடியும், கையில் கூரிய அரிவாளும் இருந்தன.

15 மற்றொரு வானதூதர் ஆலயத்தினின்று வெளி வந்து, மேகத்தின்மீது வீற்றிருப்பவரை நோக்கி, உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும். அறவடைக் காலம் வந்துவிட்டது; மாநிலப் பயிர் முற்றிவிட்டது' என்று உரக்கக் கத்தினார்.

16 மேகத்தின்மீது வீற்றிருந்தவர் தமது அரிவாளை மாநிலத்தின்மீது வீசினார். மாநிலமும் அறுவடையாயிற்று.

17 வேறொரு வானதூதர் விண்ணிலுள்ள ஆலயத்திலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூரிய அரிவாள் இருந்தது.

18 இன்னுமொரு வானதூதர் பீடத்தினின்று வெளிவந்தார். அவர் நெருப்பின் மேல் அதிகாரம் உள்ளவர். கூரிய அரிவாள் ஏந்தியவரைப் பார்த்து 'உம் கூரிய அரிவாளை எடுத்து மாநிலத்தின் திராட்சைக் குலைகளைக் கொய்துவிடும்; கனிகள் பழுத்துவிட்டன' என்று உரக்கக் கத்தினார்.

19 ஆகவே, வானதூதர் மாநிலத்தின் மீது தம் அரிவாளை வீசி, மாநிலத்திராட்சைக் கொடியின் குலைகளைக் கொய்தார். கடவுளது கோபம் என்னும் பெரிய ஆலையில் அவற்றைப் போட்டார்.

20 நகருக்கு வெளியே உள்ள ஆலையிலே அவை மிதிக்கப்பட்டன. அந்த ஆலையினின்று பாய்ந்த இரத்தம் குதிரைகளின் கடிவாள உயரமளவு இருநூறு கல் தொலைவுக்குப் பாவியது.

அதிகாரம் 15

1 பின்பு அரிய பெரிய அறிகுறி இன்னொன்று விண்ணில் கண்டேன். ஏழு வானதூதர் ஏழு வாதைகளை வைத்திருந்தனர். இறுதியான வாதைகள் அவையே. அவற்றோடு கடவுளின் கோபம் நிறைவுறும்.

2 நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு காட்சியைக் கண்டேன். விலங்கின் மீதும் அதன் சிலையின் மீதும் எண்களால் குறிக்கப் பட்ட ஆள் மீதும் வெற்றி கொண்டவர்களையும் நான் கண்டேன். அவர்கள் கடவுள் தந்த யாழ்களைக் கையில் கொண்டு கண்ணாடிக் கடலருகே நின்றனர்.

3 கடவுளுடைய ஊழியனாகிய மோயீசனின் பாடலையும் இவ்வாறு பாடினர்: எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. நாடுகளுக்கெல்லாம் அரசரே, உம் வழிகள் நேர்மையானவை, உண்மையானவை.

4 ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் எவர்? உமது பெயரை மகிமைப்படுத்தாதவர் எவர்? நீர் ஒருவரே புனிதர். எல்லா இனத்தவரும் வந்து உம் திருவடி பணிவர். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.

5 அதற்குப்பின், நான் கண்ட காட்சியில் விண்ணகத்திலுள்ள சாட்சியக் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது.

6 ஏழு வாதைகளை வைத்திருந்த ஏழு வானதூதர்கள் அவ்வாலயத்திலிருந்து வெளிவந்தனர். அவர்கள் ஒளிமிக்க தூய ஆடை அணிந்து, மார்பிலே பொற்கச்சைகள் கட்டியிருந்தனர்.

7 நான்கு உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழ்கிற கடவுளின் கோபத்தால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை ஏழு வானதூதர்களுக்கும் அளித்தது.

8 கடவுளின் மாட்சிமையும் வல்லமையும் அவ்வாலயத்தைப் புகையினால் நிரப்பின. ஏழு வானதூதர் கொணர்ந்த ஏழு வாதைகள் முற்றுப் பெறும்வரை, ஒருவரும் அவ்வாலயத்தினுள் நுழைய இயலவில்லை.

அதிகாரம் 16

1 பின், ஆலயத்தினின்று உரத்த குரல் ஒன்றைக் கேட்டேன்: "நீங்கள் போய், கடவுளின் கோபம் நிறைந்த ஏழு கலசங்களையும் மண்ணுலகின்மீது ஊற்றுங்கள்" என்று அக்குரல் ஏழு வானதூதர்களிடமும் கூறியது.

2 முதல் வானதூதர் போய், தம் கலசத்தை மண்ணுலகின்மீது ஊற்றவே, கொடிய விலங்கின் அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள், அதன் சிலையைத் தொழுதவர்கள் உடம்பெல்லாம் மிகக் கொடிய புண் உண்டாயிற்று.

3 இரண்டாவது வானதூதர் தம் கலசத்தைக் கடலில் ஊற்றவே, அது பிணத்தின் இரத்தம் போல் மாறியது. கடலில் வாழும் உயிர்கள் அனைத்தும் மடிந்தன.

4 மூன்றாவது வானதூதர் தம் கலசத்தை ஆறுகள்மீதும், நீரூற்றுக்கள்மீதும் ஊற்றவே, அவையும் இரத்தமாயின.

5 நீர்த்திரளைப் பார்வையிடும் வானதூதர் இவ்வாறு சொல்லக் கேட்டேன்: "இருக்கிறவரும் இருந்தவருமான புனிதரே! இங்ஙனம் தீர்ப்பிடும் நீர் நீதியுள்ளவர்.

6 ஏனெனில், பரிசுத்தருடைய இரத்தத்தையும், இறைவாக்கினருடைய இரத்தத்தையும் மக்கள் சிந்தியதால், நீர் அவர்களுக்கு இரத்தத்தையே குடிக்கக் கொடுத்தீர். இது அவர்களுக்குத் தகுந்த தண்டனையே."

7 பீடத்தினின்று எழுந்த குரலும், "ஆம், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவையே" என்றது.

8 நான்காவது வானதூதர் தம் கலசத்தைக் கதிரவன் மீது ஊற்றவே, அது மனிதரை நெருப்பாய் எரிக்கும் வன்மை பெற்றது.

9 கடும் வெப்பத்தால் மனிதர் எரிக்கப்பட்டவர்களாய், இவ்வாதைகளின் மீது வன்மை கொண்டிருந்த கடவுளின் பெயரை அவர்கள் தூஷித்தார்களேயொழிய, மனந்திரும்பி அவரை மகிமைப்படுத்த விரும்பவில்லை.

10 ஐந்தாவது வானதூதர் தமது கலசத்தை விலங்கின் அரியணை மீது ஊற்றவே, அதன் அரசை இருள் கவ்வியது. பட்டபாட்டைத் தாங்க முடியாமல் மக்கள் தங்கள் நாவைக் கடித்துக்கொண்டனர்.

11 தங்கள் பாடுகளையும், புண்களையும் முன்னிட்டு, விண்ணகக் கடவுளைத் தூஷித்தார்களேயொழிய, தங்கள் செயல்களை விட்டுவிட்டு மனந்திரும்பவில்லை.

12 ஆறாவது வானதூதர் தமது கலசத்தைப் பெரிய யூப்ரடீஸ் ஆற்றில் ஊற்றவே, தண்ணீர் வற்றிப்போக, கீழ்த்திசை மன்னர்களுக்கு வழியுண்டாயிற்று.

13 பறவைநாகத்தின் வாயினின்றும் விலங்கின் வாயினின்றும் போலித் தீர்க்கதரிசிகளின் வாயினின்றும் தவளை வடிவில் மூன்று அசுத்த ஆவிகள் வெளிவரக் கண்டேன்.

14 அவை அருங்குறிகளைப் புரியும் பேய்களின் ஆவிகள். எல்லாம் வல்ல கடவுளின் பெருநாளிலே போர் செய்யுமாறு உலகனைத்திலுமுள்ள அரசர்களை ஒன்றுசேர்க்க அவை செல்லுகின்றன. இதோ நான் திருடனைப்போல் வருகின்றேன்.

15 ஆடையின்றி எல்லார் முன்னிலும் வெட்கி நிற்க நேராதவாறு ஆடைகளைக் களையாமல் விழித்திருப்பவன் பேறுபெற்றவன்.

16 எபிரேய மொழியில் அர்மகெதோன் எனப்படும் இடத்தில் அரசர்களை அவை ஒன்று சேர்த்தன.

17 ஏழாவது வானதூதர் தம் கலசத்தை வான் வெளியில் ஊற்றவே, ஆலயத்தின் அரியணையினின்று. 'முடிந்துவிட்டது' என்றொரு பெருங்குரல் ஒலித்தது.

18 மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் உண்டாயின. பெரியதொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. மனிதன் மண்ணில் தோன்றிய நாள்முதல், இதுவரை இத்தகைய நிலநடுக்கம் உண்டானதேயில்லை. அது அவ்வளவு கொடியதாய் இருந்தது.

19 அந்தப் பெருநகரம் மூன்று பாகங்களாகப் பிரிந்து போயிற்று; மாநிலத்தின் நகரங்கள் இடிந்து விழுந்தன. பாபிலோன் மாநகரையும் பழிவாங்கக் கடவுள் மறக்கவில்லை;

20 தம் கடுங்கோபம் என்னும் மதுக் கிண்ணத்தைக் குடிக்கச் செய்தார். எல்லாம் மறைந்து போயின. மலைகளும் இருந்த இடம் தெரியாமல் போயின.

21 அம்மிக் கல் போலக் கல்மழை விண்ணின்று மக்கள் மீது பெய்தது. கல்மழையால் ஏற்பட்ட இவ்வாதை மிகக் கொடியதாய் இருந்ததால், மக்கள் கடவுளைத் தூஷித்தனர்.

அதிகாரம் 17

1 ஏழு கலசங்களையுடைய ஏழு வானதூதர்களுள் ஒருவர் என்னைப் பார்த்து, 'வா, நீர்த்திரள் மேல் அமர்ந்திருக்கும் பேர்போன வேசி தண்டனைத் தீர்ப்புக்குள்ளாவதை உனக்குக் காட்டுவேன்.

2 மண்ணக அரசர்கள் எல்லாரும் அவளோடு விபசாரம் செய்தார்கள். மண்ணில் வாழும் மக்கள் எல்லாரும் அவளுடைய விபசார மதுவினால் வெறிகொண்டார்கள்" என்று சொன்னார்.

3 தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர் என்னைப் பாலைவனத்திற்குக் கொண்டு சென்றார். அங்கே செந்நிற விலங்கின்மேல் அமர்ந்திருந்த பெண் ஒருத்தியைக் கண்டேன். அந்த விலங்கின் உடலெல்லாம் தூஷணப்பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.

4 அப்பெண் இரத்தாம்பரமும் செந்நிற ஆடையும் அணிந்து பொன்னாலும் இரத்தினங்களாலும் முத்துகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். கையில் அவளது விபசாரத்தின் அருவருப்பும் அசுத்தமும் நிறைந்த பொற்கிண்ணம் இருந்தது.

5 மறைவான பொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதியிருந்தது. பாபிலோன் மாநகர் வேசிகளுக்கும், மண்ணகத்தில் அருவருப்பான யாவற்றிற்கும் தாய் என்பதே அப்பெயர்.

6 அப்பெண், பரிசுத்தர்களின் இரத்தத்தையும், இயேசுவின் சாட்சிகளது இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருப்பதைக் கண்டேன்; அவளைக் கண்டபோது மிகவும் வியப்படைந்தேன்.

7 வானதூதர் என்னை நோக்கிக் கூறியதாவது; "நீ வியப்படைவதேன்? அந்தப் பெண்ணைப் பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைத் தூக்கிச் செல்லும் விலங்கின் மறை பொருளையும் உனக்குச் சொல்லுகிறேன்.

8 நீ கண்ட விலங்கு முன்பு இருந்தது; தற்போது உயிரோடு இல்லை. பாதாளக் குழியிலிருந்து எழப்போகிறது; ஆனால் அழிந்துபோகும். வாழ்வு நூலில் உலகத் தொடக்கமுதல் பெயர் எழுதப்படாத மண்ணுலகினர், அந்த விலங்கைக் காணும்போது வியப்படைவார்கள். ஏனெனில் முன்பு உயிரோடு இருந்து தற்போது இல்லாத அந்த விலங்கு திரும்பவும் உயிர்பெற்று வருவதைக் காண்பார்கள்.

9 இங்கே நுண்மதியும் அறிவுக் கூர்மையும் தேவை: ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்; ஏழு அரசர்களையும் குறிக்கும்.

10 அவர்களுள் ஐவர் ஒழிந்தனர். இப்போதுள்ளவன் ஒருவன்; ஒருவன் இன்னும் தோன்றவில்லை. அவன் தோன்றியபின் சிறிது காலமே இருப்பான்.

11 முன்பு இருந்து, தற்போது உயிரோடில்லாத விலங்கே எட்டாவது அரசனைக் குறிக்கும். அவன் ஏழு அரசர்களுள் ஒருவன். அவனும் அழிந்துபோவான்.

12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆனால் அவர்கள் விலங்கோடு ஒரு மணியளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.

13 அவர்கள் ஒரு மனத்தவராய், தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கினிடம் ஒப்படைப்பார்கள்.

14 செம்மறிக்கு எதிராக அவர்கள் போரிடுவார்கள். செம்மறியோ அவர்களை வெல்வார். ஏனெனில் அவரே ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர், அரசர்க்கெல்லாம் அரசர். அழைக்கப்பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் அவரோடு இருக்கும் உண்மை ஊழியர்களும் அவரோடு வெற்றி கொள்வர்."

15 மேலும் அவர் எனக்குச் சொன்னதாவது: "அந்த வேசி, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கக் கண்டாயே, அந்த நீர்த்திரள் பல இனங்கள், பல நாடுகள், பல மொழிகளைச் சார்ந்த மக்கள் திரளைக் குறிக்கும்.

16 நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் வேசியின்மேல் வெறுப்புக்கொண்டு, அவள் ஆடைகளைப் பறித்து. அவளைப் பாழாக்கிவிடும். அவளது தசையைத் தின்னும்; அவளை நெருப்பினால் சுட்டெரித்துவிடும்.

17 கடவுள் தமது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டே இங்ஙனம் அந்நாட்டினரின் உள்ளங்களை ஏவிவிட்டார். கடவுள் கூறியது நிறைவேறுமட்டும், அவர்கள் ஒரு மனத்தவராய்த் தங்கள் ஆட்சியை விலங்கினிடம் ஒப்படைத்தது அதே ஏவுதலால்தான்.

18 நீ காட்சியில் கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மேல் ஆட்சி செலுத்தும் பெரிய நகரம்.

அதிகாரம் 18

1 இதற்குப்பின் பெரும் வல்லமையுள்ள இன்னொரு வானதூதர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மண்ணுலகு அவரது மாட்சியால் மிகுந்த ஒளி பெற்றது.

2 அவர் உரத்த குரலில் கூறினதாவது; 'வீழ்ந்தது, வீழ்ந்தது, பாபிலோன் மாநகர், அது பேய்களின் உறைவிடமாயிற்று, அசுத்த ஆவியெல்லாம் நடமாடும் கூடமாயிற்று, அசுத்தமும் அருவருப்பும் மிக்க பறவைகள் எல்லாம் வாழும் கூடம் ஆதுவே.

3 அவ்வேசி காமவெறி என்னும் தன் மதுவை நாடுகள் எல்லாம் குடிக்கச் செய்தாள். மண்ணக அரசர்கள் அவளோடு விபசாரம் செய்தனர். அவளது செல்வச் செருக்கினால் மண்ணக வணிகர்கள் செல்வம் திரட்டினர்.'

4 பின்னர் விண்ணினின்று இன்னொரு குரலைக் கேட்டேன். அது சொன்னதாவது "என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும், அவளுக்கு நேரும் வாதைகளில் அகப்படாதிருக்கவும், அவளைவிட்டுப் போய்விடுங்கள்.

5 அவளுடைய பாவங்கள் வானளாவக் குவிந்துவிட்டன; அவளுடைய அநீதச் செயல்களைக் கடவுள் நினைவில் வைத்துள்ளார்.

6 அவள் கொடுத்ததற்கேற்றபடி திருப்பிக் கொடுங்கள்; அவள் செயல்களுக்கேற்றவாறு இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்; அவள் கலந்து கொடுத்த கிண்ணத்தில் இரு மடங்காகக் கலந்து கொடுங்கள்.

7 அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச் செருக்குடன் வாழ்ந்த அளவுக்கு வேதனையும் துயரமும் அவளுக்குக் கொடுத்துவிடுங்கள். 'நான் அரசியாக வீற்றிருக்கிறேன், நான் கைம்பெண் அல்லேன், ஒருநாளும் துயருறேன்' என்று தன் இதயத்தில் கூறினாளன்றோ?

8 ஆகவே, சாவு, துயரம், பஞ்சம் ஆகிய வாதைகளெல்லாம் ஒரே நாளில் அவள்மீது வந்து விழும்; நெருப்பு அவளை எரித்துவிடும்: ஏனெனில் அவளுக்குத் தீர்ப்பிடும் ஆண்டவராகிய கடவுள் வல்லமை மிக்கவர்.'

9 அவளோடு விபசாரம் செய்து செல்வச் செருக்கோடு வாழ்ந்த மண்ணக அரசர்கள் அவள் எரியும்போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து

10 அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று, 'ஐயோ! ஐயோ! வல்லமை மிக்க நகரே! பாபிலோன் மாநகரே ஒரு மணி நேரத்தில் உனக்குத் தீர்ப்பு வந்து விட்டதே" என்று அழுது புலம்புவார்கள்.

11 மண்ணக வணிகர்களும் அவளுக்காக அழுது புலம்புவார்கள். ஏனெனில் அவர்களுடைய சரக்குகளை வாங்குவோர் யாரும் இல்லை.

12 பொன், வெள்ளி, இரத்தினங்கள், முத்துக்கள், மெல்லிய துணி, இரத்தாம்பரம், பட்டாடை, செந்நிற ஆடை, வாசனைக் கட்டைகள், தந்தப் பொருட்கள், விலையுயர்ந்த மரம், வெண்கலம், இரும்பு, சலவைக் கல் இவற்றாலான பொருட்கள்,

13 இலவங்கம், ஓமம், தூபவர்க்கம், பரிமளத்தைலம், சாம்பிராணி, திராட்சை இரசம், எண்ணெய், மெதுமாவு, கோதுமை, ஆடுகள், மாடுகள், குதிரைகள், தேர்கள், அடிமைகள், மனித உயிர்கள் இவையெல்லாம் வாங்க யாருமில்லை.

14 "நீ இச்சித்த கனிகள் எட்டாமல் போயின. உன் பகட்டும் மினுக்கும் எல்லாம் ஒழிந்தன. இனி யாரும் அவற்றைக் காணப்போவதில்லை" என்பார்கள்.

15 இச்சரக்குகளைக்கொண்டு, அவளோடு வாணிபம்செய்து, செல்வம் திரட்டியவர்கள் அவளுடைய வேதனைகளுக்கு அஞ்சி, தொலைவிலே நின்று:

16 "ஐயோ, ஐயோ, மாநகரே! மெல்லிய துணியும் இரத்தாம்பரமும் செந்நிற ஆடையும் அணிந்து, பொன் இரத்தினம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவளே,

17 ஒரு மணி நேரத்தில் உன் செல்வமெல்லாம் அழிந்து போய்விட்டதே" என்று அழுது புலம்புவார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணஞ் செய்வோர், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் அனைவருமே தொலைவில் நின்று,

18 அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து, "இம் மாநகர்க்கு நிகரான ஒரு நகருண்டோ?" என்று கத்தினார்கள்.

19 புழுதியை வாரித் தலைமேல் போட்டுக்கொண்டு, "ஐயோ, ஐயோ, கடலின் கப்பல் செலுத்திய அனைவரையும் தன் செல்வ வளத்தால் செல்வமிக்கவராக்கிய இம் மாநகர் ஒரு மணி நேரத்தில் பாழாகிவிட்டதே" என்று அழுது புலம்பினர்.

20 'வானகமே, இறைமக்களே, அப்போஸ்தலர்களே, இறைவாக்கினரே, அவளைப் பார்த்து அகமகிழுங்கள்; உங்கள் சார்பாகக் கடவுள் அவளைப் பழிவாங்கிவிட்டார்."

21 வலிமை மிக்க வானதூதர் ஒருவர் எந்திரக் கல்போன்றதொரு பெரிய கல்லை எடுத்து, கடலில் எறிந்து சொன்னதவாது: "பாபிலோன் மாநகர் இவ்வாறே வீசி எறியப்படும்; இருந்த இடம் தெரியாமல் அது மறைந்து விடும்.

22 யாழ் மீட்டுபவர், பாடகர், குழல் வாசிப்பவர், எக்காளம் ஊதுவோர் இவர்களின் ஓசை இனி உன்னிடம் ஒருபோதும் எழாது. எத்தொழில் துறையிலும் உள்ள தொழிலாளிகள் இனியொருபோதும் உன்னகத்தே காணப்படமாட்டார்கள் எந்திரக் கல் அரைக்கும் ஓசை இனி ஒருபோதும் உன்னகத்தே கேட்காது.

23 விளக்கொளி உன்னிடம் இனி ஒருபோதும் ஒளிராது; மணவிழாவின் மங்கல ஒலி இனி ஒருபோதும் உன்னிடம் எழாது. உன் வணிகர்கள் மண்ணகத்தில் தனிச்சிறப்புற்று விளங்கினர். உன் மந்திர மாயத்தால் எல்லா நாடுகளும் ஏமாந்தன.

24 இறைவாக்கினரின் இரத்தமும், இறைமக்களின் இரத்தமும், மண்ணுலகில் கொல்லப்பட்ட அனைவரின் இரத்தமுமே அவளிடம் காணப்பட்டது."

அதிகாரம் 19

1 இதற்குப்பின் விண்ணில் பெரியதொரு கூட்டத்தின் முழக்கம் போன்ற பேரொலியைக் கேட்டேன். அக்கூட்டம், "அல்லேலூயா, மீட்பும் மகிமையும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.

2 ஏனெனில், அவரிடும் தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை. தன் விபசாரத்தால் மண்ணகத்தைச் சீரழித்த, பேர்போன வேசிக்கு அவர் தீர்ப்பிட்டார்;

3 தம் ஊழியர்களின் இரத்தத்திற்காக அவளைப் பழிவாங்கினார்" என்று ஆர்ப்பரித்தது மேலும் அக்கூட்டம், "அல்லேலூயா, அவளை எரிக்கும் புகை என்றென்றும் மேலே எழுகிறது" என்றது.

4 இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருக்கும் கடவுள்முன் அடிபணிந்து, "ஆமென், அல்லேலூயா" என்று தொழுதனர்.

5 அரியணையிலிருந்து வெளிவந்த குரல்; "கடவுளுடைய ஊழியர்களே, அவருக்கு அஞ்சுபவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்" என்றது.

6 மேலும் பெரியதொரு கூட்டத்தின் ஆர்ப்பரிப்புப் போலும், பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும், இடி முழக்கம்போலும் தொனித்த பேரொலி ஒன்று கேட்டேன். அது சொன்னதாவது: "அல்லேலூயா, எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்தலானார்.

7 நாம் அகமகிழ்ந்து களிகூர்ந்து அவருக்கு மகிமை அளிப்போமாக. ஏனெனில், செம்மறியின் மணவிழா வந்து விட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.

8 அணிவதற்குப் பகட்டானதும் தூயதுமான விலைமிக்க ஆடை அவளுக்கு அளிக்கப்பட்டது. அவ்விலைமிக்க ஆடையோ இறைமக்களின் நீதிச் செயல்களே."

9 பின்பு வானதூதர் என்னிடம் சொன்னதாவது: "செம்மறியின் மணவிருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் என்று எழுது." மேலும், "இவை கடவுளின் உண்மை வார்த்தைகள்" என்று சொன்னார்.

10 பின்னர் நான் அவரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன். அவரோ, "வேண்டாம், வேண்டாம், இயேசு சொன்ன சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட உன் சகோதரர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல்வேண்டும்" என்றார். இயேசு தந்த அந்தச் சாட்சியமே இறைவாக்குகளுக்கு உயிர்.

11 பின் நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெண்குதிரை! அதன் மேல் ஒருவர் ஏறியிருந்தார். அவர் பெயர் 'நம்பிக்கைக்குரியவர்; உண்மையுள்ளவர். அவர் நீதியோடு தீர்ப்பிட்டுப் போர் தொடுக்கிறார்.

12 அவருடைய கண்கள் எரிதழல்போல் இருந்தன; தலையில் மகுடங்கள் பல சூடியிருந்தார். அவரைத் தவிர மற்றெவர்க்கும் தெரியாததொரு பெயர் அவர்மேல் பொறிக்கப்பட்டிருந்தது.

13 இரத்தத்தில் தோய்ந்த ஆடை ஒன்றை அவர் அணிந்திருந்தார். "கடவுளுடைய வார்த்தை" என்பது அவருடைய பெயர்.

14 விலைமிக்க, தூய வெண்ணாடை அணிந்த விண்ணகப் படைகள் வெண்குதிரைகள் மேலேறி அவரைப் பின்தொடர்ந்தன.

15 நாடுகளைத் தாக்குவதற்கு அவருடைய வாயினின்று கூரிய வாளொன்று வெளிப்பட்டது. அவர் இருப்புக்கோல்கொண்டு அவர்களை நடத்துவார். எல்லாம் வல்ல கடவுளின் கடுஞ்சினம் என்னும் ஆலையை அவர் மிதிப்பார்.

16 "அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்" என்ற பெயர் அவரது ஆடையிலும் தொடையிலும் எழுதியிருந்தது.

17 பின்பு வானதூதர் ஒருவர் கதிரவனில் நிற்கக் கண்டேன். வானத்தில் உயரப்பறக்கும் பறவைகள் அனைத்தையும் நோக்கி:

18 அவர் உரத்த குரலில், "வாருங்கள், அரசர், படைத்தலைவர், வலியோர் இவர்களின் தசையும், குதிரைகள், அவற்றின்மீது ஏறியிருப்போரின் தசையும், குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரின் தசையும் தின்னும்படி, கடவுள் செய்யும் பெரு விருந்துக்கு வந்து கூடுங்கள்" என்றார்.

19 குதிரைமீது ஏறியிருந்தவருக்கும் அவரது படைக்கும் எதிராகப் போர் தொடுக்க அக்கொடிய விலங்கும் மண்ணகத்து அரசர்களும், அவர்களுடைய படைகளும் கூடியிருப்பதைக் கண்டேன்.

20 அவ்விலங்கு பிடிபட்டது. அதனோடு அவ்விலங்கின் முன்னிலையில் அருங்குறிகள் செய்த போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இந்த அருங்குறிகளால் தான் அவன் விலங்கின் அடையாளத்தால் குறிக்கப்பட்டவர்களையும், அதனுடைய சிலையைத் தொழுதவர்களையும் ஏமாற்றியிருந்தான். இவர்கள் இருவரும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு எறியப்பட்டார்கள்.

21 குதிரைமீது ஏறியிருந்தவரின் வாயினின்று வெளிப்பட்டவாளால் எஞ்சியிருந்தோர் கொல்லப்பட்டனர். அந்தப் பிணங்களைப் பறவைகள் எல்லாம் வயிறாரத் தின்றன.

அதிகாரம் 20

1 பின் வானதூதர் ஒருவர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். பாதாளத்தின் திறவு கோலும் பெரியதொரு சங்கிலியும் அவர் கையில் இருந்தன.

2 ஆதியில் தோன்றிய பாம்பாகிய பறவைநாகத்தை அவர் பிடித்தார். அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அப்பாம்பைப் பிடித்து, ஆயிரம் ஆண்டளவு கட்டிவைத்தார்.

3 பின் அதைப் பாதாளத்தில் எறிந்து, குழியை அடைத்து, அதற்கு முத்திரையிட்டு, ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை அது நாடுகளை வஞ்சிக்காமல் தடுத்தார். அதன்பின் சற்று நேரம் அது அவிழ்த்து விடப்படும்

4 பின்பு, நான் அரியணைகளைக் கண்டேன். அவற்றின்மீது சிலர் வீற்றிருந்தனர். தீர்ப்பிடும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இயேசுவுக்குச் சான்று பகர்ந்து கடவுளது வார்த்தையை அறிவித்ததற்காகத் தலை வெட்டுண்டவர்களின் ஆண்மாக்களையும் கண்டேன். அவர்கள் அவ்விலங்கையோ அதன் சிலையையோ தொழவில்லை. அதனுடைய அடையாளத்தை நெற்றியிலோ கையிலோ பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்பெற்று, கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டு ஆட்சிபுரிந்தார்கள்.

5 இதுவே முதல் உயிர்த்தெழுதல். அவ்வாயிரம் ஆண்டுகள் முடியும்வரை எஞ்சியோர் உயிர்பெற்று வரவில்லை.

6 இந்த முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவோன் பேறுபெற்றவன். பரிசுத்தன்! இரண்டாவது சாவு அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தாது. அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிசெய்யும் குருக்களாக இருப்பார்கள்; அவரோடு ஆயிரம் ஆண்டுகள் அரசு புரிவார்கள்.

7 அவ்வாயிரம் ஆண்டுகள் முடிந்தபின், சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவான்.

8 அவன் மண்ணகத்தின் நான்கு திசைகளிலும் உள்ள கோகு, மாகோகு என்னும் நாடுகளை வஞ்சித்து, போருக்கென அவர்களை ஒன்றுசோர்க்கச் செல்வான். அவர்களது எண்ணிக்கை கடல் மணல்போல் இருக்கும்.

9 மண்ணுலகெங்கும் அவர்கள் பரவிச்சென்றர்கள். இறைமக்களின் பாசறையையும் இறைவனின் அன்புக்குகந்த நகரத்தையும் வளைத்துக் கொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு விழுந்து அவர்களை விழுங்கிவிட்டது.

10 பின் அவர்களை வஞ்சித்த அலகை கந்தக நெருப்புக் கடலில் எறியப்பட்டது. அக்கடலில்தான் விலங்கும், போலித் தீர்க்கதரிசியும் உள்ளனர். அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் வேதனைக்குள்ளாவார்கள்.

11 பின் வெண்மையான பெரியதோர் அரியணையையும் அதில் வீற்றிருப்பவரையும் கண்டேன். அவருடைய முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின.

12 இறந்திருந்த சிறியோர், பெரியோர் அனைவரும் அரியணை முன் நிற்கக் கண்டேன். அப்போது ஏட்டுச் சுருள்கள் பிரிக்கப்பட்டன. வேறொரு சுருளும் பிரிக்கப்பட்டது. அது வாழ்வு நூல் இறந்தவர்களின் செயல்கள் அச்சுருள்களில் குறித்திருந்தன. அச்செயல்களுக்கேற்ப அவர்களுக்குத் தீர்ப்புக் கூறப்பட்டது.

13 கடல் தன்னகத்திருந்த இறந்தோரை வெளியேற்றியது. சாவும் பாதாளமும் தம்முள் அடைத்திருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் அனைவரும் செயல்களுக்கேற்ற தீர்ப்பைப் பெற்றனர்.

14 சாவும் பாதாளமும் நெருப்புக் கடலில் எறியப்பட்டன. இந்நெருப்புக் கடலே இரண்டாவது சாவு

15 வாழ்வு நூலில் பெயர் எழுதப்பட்டிராத எவனும் இந்நெருப்புக் கடலில் எறியப்பட்டான்.

அதிகாரம் 21

1 பின்பு நான் புதிய வானகமும் புதிய வையகமும் கண்டேன். முதலிலிருந்த வானகமும் வையகமும் மறைந்துபோயின.

2 கடலும் இல்லாமல் போயிற்று. அப்போது புதிய யெருசலேம் ஆகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மணமகனுக்கென அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல் அது மலர்ந்தது.

3 பின் அரியணையிலிருந்து ஒரு பெருங் குரலைக் கேட்டேன். அக்குரல், "இதோ, கடவுளின் இல்லம் மனிதரிடையே உள்ளது; அவர்களோடு அவர் குடிகொள்வார். அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர்; கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்.

4 அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது.

5 அரியணை மீது வீற்றிருந்தவர், "இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்" என்றார். மேலும், "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை என்று எழுது" என்றார்.

6 பின், என்னைப் பார்த்துச் சொன்னதாவது: "எல்லாம் முடிந்துவிட்டது. அகரமும் னகரமும் நானே- தொடக்கமும் முடிவும் நானே. தாகமாயிருக்கிறவனுக்கு வாழ்வின் ஊற்றிலிருந்து இலவசமாய் நீர் கொடுப்பேன்.

7 வெற்றிகொள்பவன் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வான். நான் அவனுக்குக் கடவுளாய் இருப்பேன். அவன் எனக்கு மகனாய் இருப்பான்.

8 கோழைகள், விசுவாசமற்றவர்கள், அருவருப்புக்குரியவர்கள், கொலைகாரர்கள், காமுகர், சூனியம் வைப்பவர்கள், சிலை வழிபாட்டினர் முதலிய பொய்யர்கள் அனைவருக்கும் கந்தக நெருப்பு எரியும் கடலே உரிய பங்காகும். இதுவே இரண்டாவது சாவு.

9 அதன்பின் இறுதி ஏழு வாதைகளால் நிரம்பிய கலசங்களை ஏந்திய ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்தார். அவர் என்னைப் பார்த்து: "வா, செம்மறியானவர் மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டப் போகிறேன்" என்றார்.

10 தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர், உயர்ந்ததொரு பெரிய மலைக்கு என்னைக் கொண்டு சென்றார். கடவுளிடமிருந்து விண்ணினின்று யெருசலெம் நகர் இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.

11 கடவுளுடைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்தது. அது விலைமிக்க இரத்தினக்கல் போலும், பளிங்கென ஒளிவீசும் மணிக்கல் போலும் சுடர்விட்டது.

12 உயர்ந்ததொரு பெரிய மதில் அதைச் சூழ்ந்திருந்தது. அதற்குப் பன்னிரு வாயில்கள் காணப்பட்டன. அவ்வாயில்களில் பன்னிரு தூதர்கள் நின்றர்கள். இஸ்ராயேலின் பன்னிரு குலத்தாரின் பெயர்கள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.

13 கிழக்கே மூன்று, வடக்கே மூன்று, தெற்கே மூன்று, மேற்கே மூன்று வாயில்கள் இருந்தன.

14 நகரின் மதில் பன்னிரு அடிக்கற்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. அவற்றின் மேல் செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களின் பன்னிரு பெயர்களும் இருந்தன.

15 என்னோடு பேசியவர் நகரையும் அதன் வாயில்களையும் மதிலையும் அளக்கும்பொருட்டு ஒரு பொன் அளவுகோலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.

16 அந்நகரம் சதுரமாக இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவு. அவர் கோலைக்கொண்டு நகரத்தை அளந்தார். நூற்றைம்பது காதம் இருந்தது. அதன் நீளமும் அகலமும் உயரமும் ஒரே அளவாக இருந்தன. அவர் தம் மதிலையும் அளந்தார்.

17 அதன் உயரம் நூற்றுநாற்பத்து நான்கு முழும். வானதூதர் பயன்படுத்திய அளவு மனிதரிடையே வழங்கும் அளவுகளே.

18 மதில் மணிக்கல்லால் கட்டப்பட்டிருந்தது. அந்நகரமோ பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும் பொன்னாலானது.

19 நகர மதில்களின் அடிக்கற்கள் எல்லாவித இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதல் அடிக்கல் மணிக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கம், நான்காவது மரகதம்,

20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம், பதினொன்றாவது இந்திரநீலம். பன்னிரண்டாவது சுகந்தி.

21 பன்னிரு வாயில்களும் பன்னிரு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒரு முத்தாலானது. நகரின் வீதி பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும்பொன்னாலானது.

22 அதனுள் நான் ஆலயத்தைக் காணவில்லை. கடவுளாகிய ஆண்டவரும் செம்மறியுமே அதன் ஆலயம்.

23 அந்நகருக்கு ஒளிகொடுக்க கதிரவனோ நிலவோ தேவையில்லை. கடவுளுடைய மாட்சிமை அதற்கு ஒளி வீசியது; செம்மறியே அதன் விளக்கு;

24 அதன் ஒளியில் எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்; மண்ணக அரசர் தங்களிடம் மகிமையாய் உள்ளதெல்லாம் அதனுள் கொண்டுவருவர்.

25 அதன் வாயில்கள் நாளெல்லாம் திறந்திருக்கும்.

26 அங்கு இரவே இராது. நாடுகளில் உள்ள மகிமை பெருமையானதெல்லாம் அதனுள் கொண்டு வரப்படும்.

27 ஆனால் மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையாது. அருவருப்பானதும் பொய்யானதும் செய்பவர்கள் அங்கு நுழைவதில்லை. செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் எழுதப்பட்டிருப்பவர் மட்டுமே அங்குச் செல்வர்.

அதிகாரம் 22

1 பின்னர் வாழ்வுநீர் ஓடும் ஆற்றை வானதூதர் காண்பித்தார். அது பளிங்குபோல் மின்னிற்று. அது கடவுளும் செம்மறியான வரும் வீற்றிருக்கும் அரியணையினின்று நகர வீதியின் நடுவிலே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு பக்கங்களிலும் வாழ்வின் மரமிருந்தது.

2 மாதத்திற்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்கள் இனங்களைக் குணப்படுத்தக் கூடியவை.

3 சாபத்துக்குள்ளானதெதுவும் அங்கு இல்லை. கடவுளும் செம்மறியானவரும் வீற்றிருக்கும் அரியணை அங்கே இருக்கும். அவருடைய ஊழியர்கள் அவரைத் தொழுவார்கள்.

4 அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்கள் நெற்றியில் எழுதியிருக்கும்.

5 அங்கு இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஆண்டவராகிய கடவுளே அவர்கள் மீது ஒளி வீசுவார். அவர்களோ என்றென்றும் அரசாள்வார்கள்.

6 அதன்பின் அவர் எனக்குச் சொன்னது: "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை. இறைவாக்கினருக்கு ஆவியைத் தரும் கடவுளாகிய ஆண்டவர் விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் ஊழியர்களுக்கு வெளிப்படுத்தத் தம் தூதரை அனுப்பினார்.

7 இதோ, நான் விரைவாகவே வருகிறேன்." இந்நூலிலுள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்பவர் பேறு பெற்றவர்.

8 அருளப்பனாகிய நானே இவற்றைக் கண்டேன், இவற்றைக் கேட்டேன். இவற்றைக் கண்டு கேட்டு முடித்தபின் எனக்கு இவற்றைக் காட்டிய வானதூதரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன்.

9 அவரோ, "வேண்டாம், வேண்டாம்; இறைவாக்கினரான உன் சகோதரர்களுக்கும், இந்நூலிலுள்ள வார்த்தைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல் வேண்டும்" என்றார்.

10 பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது: "இந்நூலிலுள்ள இறைவாக்குகளை மறைந்து வைக்காதே. இதோ, குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.

11 இதற்கிடையில், அநீதி செய்பவன் செய்துகொண்டே போகட்டும்; சேற்றில் உழல்பவன் உழன்றுகொண்டே இருக்கட்டும்; நல்லவனோ நன்மை செய்து கொண்டே இருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவனோ பரிசுத்தத்திலேயே நிலைத்திருக்கட்டும்.

12 இதோ, விரைவாகவே வருகிறேன். அவனவன் செயலுக்கேற்ப அவனவனுக்கு அளிக்கும் கைம்மாறு என் கையிலிருக்கிறது.

13 அகரமும் னகரமும்-முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.

14 தங்கள் ஆடைகளைத் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். வாழ்வின் மரத்தின் மீது அவர்களுக்கு உரிமையிருக்கும். வாயில்கள் வழியாக அந்நகரத்தில் நுழையவும் முடியும்.

15 கேடுகெட்ட நாய்கள், சூனியம் வைப்பவர்கள், காமுகர், கொலைகாரர், சிலை வழிபாட்டினர், பொய்யை விரும்பி அதன்படி நடப்போர் அனைவரும் வெளியே நிற்பர்."

16 இயேசுவாகிய நான் சபைகளைப் பற்றிய இச்சாட்சியங்களை உங்களுக்கு அறிவிக்க என்தூதரை அனுப்பினேன். தாவீதின் வேரும் வழித்தோன்றலும் நானே. ஒளிமிகு விடிவெள்ளியும் நானே.

17 ஆவியானவரும் மணமகளும் "வாரும் என்கின்றனர். இதைக் கேட்பவனும் "வாரும்" என்று சொல்லட்டும். தாகமாயிருப்பவன் வரட்டும். விருப்பமுள்ளவன் வாழ்வின் நீரை இலவசமாக ஏற்றுக்கொள்ளட்டும்.

18 இந்நூலிலுள்ள இறை வாக்குகளைக் கேட்டுகிற ஒவ்வொருவனையும் நான் எச்சரிக்கிறேன்: இவ்வாக்குகளில் ஒருவன் எதையாவது சேர்த்தால், இந்நூலில் விளக்கியுள்ள வாதைகளை எல்லாம் கடவுள் அவனுக்கு அவன் தலையில் சேர்த்துவிடுவார்.

19 இந்நூலுள்ள இறைவாக்குகளில் எதையாவது ஒருவன் எடுத்துவிட்டால், இந்நூலில் குறிப்பிட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரிலும் அவனுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.

20 இவற்றிற்குச் சான்று பகர்கிறவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமேன். ஆண்டவராகிய இயேசுவே வாரும்.

21 ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக.