அம்மா இதோ உம்முடைய மகன் - இதோ உன் தாய்

உம்முடைய திவ்விய மாதாவைப் பார்த்து "அம்மா இதோ உம்முடைய மகன்" என்று சொல்லி உமக்குப் பிரியமான சீடனாகிய அருளப்பரை அவளுக்கு மகனாக ஒப்புக்கொடுத்து, பிரிய சீடனை நோக்கி "இதோ உன் தாய்" என்று சொல்லி உம்முடைய நேச மாதாவை அவருக்கு மாதாவாகக் கட்டளையிட்டீரே!

தயை நேசம் நிறைந்த இத்திவ்விய வார்த்தைகளைத் திருவுளம் பற்றின போது உமக்குப் பிரிய சீடர்களாகிய கிறிஸ்துவர்கள் எல்லோரையும் உம்முடைய பரிசுத்த மாதாவுக்குப் பிள்ளைகளாகவும், இத்திரு மாதாவை அவர்களுக்குத் தாயாகவும் கட்டளையிட்டருளினீர் என்று மகா பேர்போன சாஸ்திரிகளும், அநேகம் அர்ச்சியசிஷ்டவர்களும், ஞான அர்த்தத்தைச் செய்து நிச்சயிக்கிறார்களே.

இப்படி என் பேரிலே அளவற்ற நேசமுடைத் தான தகப்பனே! திவ்விய கர்த்தாவே, உம்முடைய அர்ச்சியசிஷ்ட மாதா எனக்குத் தாயாராகயிருக்கத் தக்கதாக தேவரீர் சித்தமாயிருக்கச் செய்தே அவளுடைய திருமுகத்தைப் பார்த்து அவளுடைய மன்றாட்டையும் கேட்டு நான் செய்த குற்றங்களையெல்லாம் தேவரீர் எனக்குப் பொறுத்துத் தேவரீர் என்னை அழைக்கச் சித்தமாகிறபோது தயாபரராய் எனக்கு நல்ல மரணத்தைத் தந்தருளும் சுவாமி.

அதன்பின் பாடுபட்ட சுருபத்தை வலது கையிலே வைத்துக் கொண்டு, இடது கையிலே தேவமாதாவின் சுரூபத்தையாவது படத்தையாவது பிடித்துக்கொண்டு அர்ச்சியசிஷ்ட மாதாவைப் பார்த்து சொல்லத்தக்கதாவது:

கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க, எங்கள் சீவியமே வாழ்க, எங்கள் மதுரமே வாழ்க, எங்கள் தஞ்சமே வாழ்க, உம்முடைய திவ்விய குமாரனாகிய சேசுநாதர் உம்மை அடியேனுக்குத் தாயாராயிருக்கக் கட்டளையிட்டாரே, ஆகவே பிள்ளையாயிருக்கிற என்னை இந்த நேரத்திலும் என் மரண நேரத்திலும் ஆதரிக்க உம்மை மன்றாடுகிறேன்.

அன்புள்ள தாயே! என்னைக் கைவிடாமல் என் இரட்சணியத்துக்கு வேண்டிய உதவி செய்தருளுவீர் என்று முழு நம்பிக்கையாயிருக்கிறேன். ஆக்கினைக்குப் பாத்திரமாயிருக்கிற அடியேனுடைய பாவக்கட்டுகளை அவிழும். என் குருட்டாட்டத்தை நீக்கி எனக்கு ஞானப்பிரகாசத்தைத் தெளிவியும்.

பசாசின் சோதனைகளும் மற்றப் பொல்லாப்புகளும் எனக்கு வராதபடிக்கு என்னைக் காத்தருளும். சகல நன்மையும் எனக்கு வர மன்றாடும். தயாபரராயிருக்கிறீர் என்று காண்பியும். அடியோர்களுக்காகப் பிறந்த உமக்கு திவ்விய குமாரனாகிய சேசுநாதர் உமது மூலமாக எங்கள் வேண்டுதலைக் கேட்டருளக்கடவார்.

சேசுமரியே, சூசையே , எனக்கு அடைக்கலமாயிருங்கள். உம்மை நம்பினேன். தேவமாதாவே, என்னைக் கைவிடாதேயும்.

ஆமென்.

அதன்பின்பு அர்ச் சிலுவையையும் பரிசுத்த தேவமாதவின் சுரூபத்தையும் மிகுந்த பக்தியோடே முத்தி செய்ய வேண்டும்.