பாத்திமா காட்சிகள் - உலகம் பத்திரிகையின் உடைந்த சதித் திட்டம்!

“உலகம்” என்ற நாளேட்டின் ஆசிரியர் ஜோஸே தம் பத்திரிகையிலும் துண்டுப் பிரசுரங்களிலும் திருச்சபையைத் தாக்கியதோடு நிற்கவில்லை. அவருடைய கருத்தை ஆதரித்த இடதுசாரிகள் எல்லோரையும் அவர் ஒன்றுதிரட்டினார். 

“விடுதலை முன்னணி வீரர்கள்,” “முற்போக்கு நண்பர்கள்” என்று இவர்கள் மாபெரும் கூட்டம் ஒன்று நடத்தி, பாத்திமா காட்சிகளை மூடத்தனம் என்று மக்களுக்கு “நிரூபித்துக் காட்டத்” திட்டமிட்டார்கள்.  ஞாயிறு பூசை பாத்திமா ஆலயத்தில் முடிந்தவுடனே கூட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதிலே இக்காட்சிகளின் போலித்தனத்தை அப்படியே உரித்துப் படம் பிடித்து மக்கள் முன் வைக்க வேண்டும். இக்காட்சிகளுக்குக் காரணமாயிருந் தவர்களைத் தக்க முறையில் தண்டிக்க வேண்டும் என்பது இவர்கள் நோக்கம்.

பாத்திமா பங்குக் குருவுக்கு இச்செய்தி எட்டியது.  இவர் களுடைய சதித்திட்டத்திற்கு உட்படாமல் தப்பிக்க அவர் ஒரு வழி செய்தார். அந்த ஞாயிறு பூசையை பாத்திமா அர்ச். அந்தோனியார் ஆலயத்தில் வைக்காமல், இரண்டு மைல் தொலைவிலுள்ள ஓர்டிகா என்ற இடத்தில் உள்ள தேவ அன்னையின் சிற்றாலயம் ஒன்றில் வைக்கத் தீர்மானித்தார். இதை இரகசியமாக பங்கு மக்களுக்கு வாய் மொழியாகச் சொல்லியனுப்பினார்.

குறிப்பிட்ட ஞாயிறு வந்தது. காலையில் யாரும் பாத்திமாவில் பூசைக்கு வரக் காணோம்!  அவ்ரம் ஆட்சித் தலைவர் ஆர்ட்டுரோ, ஜோஸே, இன்னும் அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்த சிலரே வந்து குழுமினர்.  தாங்கள் ஏமாற்றப்பட்டு, தங்கள் சதித்திட்டம் உடைந்தது பற்றி அவர்கள் உள்ளுக்குள் வருந்தினாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஏமாற்றமடைந்த அவர்கள் கோவா தா ஈரியா நோக்கிப் புறப்பட்டார்கள்!

இப்படி ஏதாவது நடக்கும், கோவா தா ஈரியாவுக்கு இந்த எதிரிகள் வரவே செய்வார்கள் என்று எதிர்பார்த்த விவசாயிகள் வேறு உபாயம் ஒன்று செய்தார்கள்.  கோவா தா ஈரியாவில் சிதறி நின்ற அஸின்ஹேரா மரங்களில் பர்ரோ என்றழைக்கப்படும் ஒரு வகை குட்டையான கழுதைகள் பலவற்றைக் கட்டிப் போட்டிருந்தார்கள்.  

மேற்கூறிய எதிர்ப்பாளர்கள் அங்கு வரவும், இவர்கள் அம்மிருகங்களின் நாசிகளில் ஒரு வகைத் தைலத்தைத் தடவி விட்டார்கள். குட்டைக் கழுதைகள் உடனே உச்சக் குரலில் கத்த ஆரம்பித்தன!  அந்தத் தைலம் பட்டால் பர்ரோ கழுதைகள் விடாமல் கத்தும்.  அந்த சத்தம் சாதாரணமாயிராது. மிகவும் கோரமாகவும், பயங்கரமாகவும் அழுகிற குரல் போலும் ஓலமிடுவது போலும் பல வகையில் பீதியுண்டாக்கும். 

இந்தக் கழுதைச் சத்தத்தை வாழ்த்தொலி போலக் கிளப்பி விட்டது மட்டுமல்ல, காட்சிகள் நடந்த இடத்தினருகே பல கழுதைகளுக்குத் தேவையான புல் முதலிய உணவையும் குவித்து வைத்திருந்தார்கள் இந்த விவசாயிகள்.  பாத்திமா காட்சிகளை எதிர்த்துக் கிளர்ச்சி நடத்த அங்கு வந்தவர்களுக்கு இவ்வளவுதான் மரியாதை என்பது போல் இவற்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவற்றில் ஈடுபட்டது முவாய்ட்டா, டியூகா என்ற கிராமங்களிலுள்ள விவசாய மக்கள்.

எதிர்ப்பாளர் கூட்டம் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தது.  இவர்களோ கூச்சலிட்டனர்.  எதிர்ப்பாளர்கள் வேதத்தையும், சர்வேசுரனையும் பழித்து எதிர்க் கூச்சலிட்டனர்.  அதற்குப் பதில், “சேசு மாமரி வாழ்க! வாழ்க!” என்று மறுப்புக் கொடுத்தனர். இரு தரப்பாருக்குமிடையே வசை மாரி பெய்தது!  தக்க தருணத்தில் போலீஸார் வந்து நிலைமையை முற்ற விடாமல் தடுத்து விட்டனர்.

இச்சம்பவம் எதைக் காட்டியதென்றால், பாத்திமாவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் செப்டம்பர் 13ம் நாளை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர், அந்நாளில் குழந்தைகள் தடையின்றி அங்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்று எவ்வளவு விரும்பினர் என்பதைத்தான்.

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.