பாடுகளின் பாதையிலே சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்

சிலுவைப் பாதையின் ஐந்தாம் தலத்தில் புதிய மனிதர் ஒருவரைச் சந்திக்கிறோம். பிலாத்துவிலிருந்து முற்றிலும் மாறு பட்டவர், வேறுபட்டவர்! பெரும் பாரச் சிலுவையைத் தனதிரு கரங்களால் தழுவித் தோளில் தூக்கி வரும் இயேசு பெருமான் மிகவும் களைத்துப் போகிறார்!

”அப்போது அலெக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்’;. (மாற்கு 15 : 21). இச்செய்தியை மத்தேயுவும் (மத் 27:32) லூக்காவும் (23:26) குறிப்பிடுகின்றனர். உதவி செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டவரின் ஊரையும் பேரையும் மூவருமே குறிப்பிடுகிறார்கள்.

சிரேன் என்ற ஊர், வட ஆப்பிரிக்கக் கண்டத்தில், தற்பொழுதைய லிபியாவில் இருந்தது. திருத்தூதர் பணிகள் 13 -ஆம் அதிகாரத்தின் முதல் திருவசனத்தில் நீகர் எனப்படும் சிமியோனைப் பற்றிப் புனித லூக்கா குறிப்பிடுகிறார். நீகர் என்றால் கறுப்பு இனத்தவர் என்பது பொருள். லிபியா வெப்பம் மிகுந்த நாடு. அங்கே தோன்றிய சீமோன் கறுப்பினத்தவர் என்பது பொருத்தமாகத்தான் உள்ளது. இவர் யூதராகவே இருக்க வேண்டும். முதலாம் தாலமி காலத்திலிருந்தே (கி.மு 367 – 283), சிரேன் ஊரில் யூதர்களின் குடிஇருப்பு இருந்திருக்கிறது. எனவே அந்த ஊரில் பிறந்த சீமோன் எருசலேமில் குடி ஏறி இருக்கக் கூடும்.

இவரைப் பற்றிக் குறிப்பிடும் புனித மாற்கு இவரை அலெக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தை என்ற குறிப்பையும் தருகிறார். தெரிந்ததைச் சொல்லித் தெரியாததை விளக்க வேண்டும். சீமோன் யார் என்பதைக் குறிப்பிட விரும்பும் புனித மாற்கு, சீமோனின் பிள்ளைகளைக் குறிப்பிடுகிறார் என்றால் அனைவருக்கும் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும். உரோமையர்களுக்காகவே தம் நற்செய்தியை எழுதினார், மாற்கு. ஆகவே, அவர் குறிப்பிடும் அப்பிள்ளைகள் இருவரும் உரோமையர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். இதில் ரூபு என்ற பெயர் புதிய ஏற்பாட்டில் ஒரே ஒரு முறை மட்டுமே இடம் பெறுகிறது. உரோமையர்களுக்கு எழுதிய திருமுகத்தின் 16 -ஆம் அதிகாரம் 13 -ஆம் திருவசனத்தில்,

“ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்து கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.” எனப் புனித பவுலடிகள் எழுதுகிறார். ஆனால் அலெக்சாந்தர் என்ற பெயர் பல இடங்களில் வருவதால் எந்த அலெக்சாந்தர், சீமோனின் மகன் எனச் சரியாக அறிய முடியவில்லை! சீமோன் என்பது கிரேக்கப் பெயர். சிமியோன் என்ற யூதப் பெயரின் கிரேக்க வடிவம். அலெக்சாந்தர் என்பது முழுக்க முழுக்கக் கிரேக்க பெயரே! ரூபு எனபதோ உரோமப் பெயர்.

இவற்றை எல்லாம் அலசிப் பார்க்கும் போது, சீமோன் யார் என்பதை நாம் அறியலாம். சுருங்கச் சொன்னால், அவர் சிரேன் ஊரைச் சேர்ந்த யூதர், இயேசு பாடுபட்ட காலத்தில், எருசலேமில் இருந்தவர், உரோமைக் குடி உரிமை பெற்றவர். உரோமில் புகழ் பெற்று விளங்கிய கிறித்துவர்கள் நடுவில் பெரும் பணியாற்றிப் புகழ் பெற்ற இருவரின் தந்தை.

இறைவன் மானிட வர்க்கத்துக்கு அளித்த மாண்பு மிகு பெருமைகள் இரண்டு.

முதலாவது, கன்னி மரியிடம் உடல் எடுத்து மானிட மகனாகப் பிறந்தது.

அடுத்த பெருமை, இறைமகன் சுமக்க வேண்டிய, சுமந்த சிலுவையைத் தூக்கிச் சுமக்கும் பெரும் பேற்றை மானிடர் ஒருவருக்கு அளித்தது.

 இந்தப் பெரும் பேறு சீமோனுக்குக் கிடைக்கிறது. அதுவும் அவர் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில்!

மரியாள் எப்படி மானிட இனத்தின் பிரதிநிதியாக இறைமகனைத் தம் மணிவயிற்றில் சுமந்தார்களோ அவர் போல, மனித இனத்தின் பிரதிநிதியாகச் சீமோன் சிலுவை சுமக்கிறார். அதன் வாயிலாக இயேசுவின் மீட்புப் பணியில் பங்கேற்கிறார். அவரைப் போலவே நாமும் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சென்றால் (லூக. 23:26) இயேசுவின் பாடுகளில் பங்கு கொள்வோம், மீட்புப் பணியில் இயேசுவுக்கு உதவியவர்கள் ஆவோம்.

இளைத்துக் களைத்துக் கீழே விழுந்து தள்ளாடிய இயேசு, சீமோனின் உதவிக்குப் பின் ஓரளவு களைப்பு நீங்கித் தெம்பு பெறுகிறார். பின் அழுது புலம்பி வந்த எருசலேம் நகரப் பெண்களுக்கு ஆறுதலும் அறிவுரையும் கூறுகிறார். நாம் அவருக்குச் செய்யும் இந்தச் சிறு உதவியால் அவர் களைப்பும் இளைப்பும் நீங்குமே!

அவருக்கு உதவ வேண்டிய உதவக் கூடிய அதிகாரம் படைத்த பிலாத்து, அதனைப் புறக்கணித்துக் கைகளைக் கழுவி நல்ல வாய்ப்பை நழுவ விடுகிறான். அதற்கு நேர்மாறாக, சீமோன் செயல் படுகிறார். படைவீரர்கள்தாம் சீமோன் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள். ஆனாலும் அவர் அதனை ஏற்றுச் சுமக்கிறார். இறைவன் நம் மீது சுமத்தும் சிலுவையைச் சீமோன் போலவே நாமும் சுமக்க வேண்டும். சுமந்தால் பெரும் பேறு பெறுவோம்.