எல்லாம் நிறைவேறிற்று

"எல்லாம் நிறைவேறிற்று" என்று சிலுவையில் திருவுளம் பற்றின சேசுவே என் நமஸ்காரத்துக்குரிய ஆண்டவரே, உமது பிதாவாகிய சர்வேசுரன் கற்பித்தருளின காரியங்களை எல்லாம் ஒழுங்கு முறையாக முடித்து நிறைவேற்றினீர் என்று இந்த வாக்கியத்தினாலே அடியோர்களுக்கு அறிவித்தருளினீரே.

பாவியாயிருக்கிற நானோவென்றால் உம்முடைய திவ்விய கற்பனைகளை அநேகம் முறை மீறி நடந்ததற்குப் பிற்பாடு உம்முடைய திருச் சமூகத்திலே வெட்கமும் பயமுமில்லாமல் எப்படி நிற்பேன்?

பாவிகள் சாகும் போது அவர்களுடைய பெருமை, வெகுமான மகிமை, சுக செல்வம் முதலான வாழ்வுகளுடைய காலம் முடிந்து, மட்டில்லாத நிர்ப்பந்தங்களுடைய காலம் துவக்குகின்றமையால் சொல்லிலடங்காத கஸ்தி துயர நிர்ப்பாக்கியத்துக்கு உள்ளாகிறார்கள்.

வேதசாட்சிகளும் மற்ற அர்ச்சியசிஷ்டவர்களும் மரணத்தை அடையக் கடினமான தபசு, வாதைகள் முதலான நிர்ப்பந்தங்கள் முடிந்துபோகிறதல்லாமல், அளவறுக்கப்படாத பேரின்ப மகிமையோடு நித்திய மோக்ஷ பாக்கியத்தை அனுபவிக்கத் துவங்கினார்கள்.

நானோவென்றால் இந்த இக்கட்டான சமயத்தில், உமக்கு என்னத்தைச் சொல்லுவேன்? என்னுடைய சீவிய காலம் முடிவாகிறது போலக் காணுதே. அத்தோடு என் பாவங்களின் கால் முடிந்து இனிமேல் உமக்குப் பொருந்தாத குற்றங்களை ஒருபோதும் செய்யப்போகிறதில்லையென்று பார்க்கும் போது மரணம் எனக்குக் கடினமாயிராமல், அதன் பேரிலே பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.

ஆனால் இதுவரைக்கும் அடியேன் தக்க தபசு செய்யாததினால் தபசு செய்த காலம் முடிந்ததென்று எப்படி சொல்லக்கூடும்? தபசும் புண்ணியமும் செய்யத்தக்க காலம் முடிகிறதைப் பற்றி மாத்திரம் சஞ்சலத்துடனே பயப்படுகிறேன்.

ஏனென்றால் எனக்கு இவ்வுலகத்து நோவு கஸ்தி துன்பம் முடிந்தாலும், மறு லோகத்தில் என் பாவத்துக்கு என்ன ஆக்கினை வருமோவென்று அஞ்சுகிறேன். ஆயினும் எனக்காகத் திறந்திருக்கிற உம்முடைய ஐந்து திருக்காயங்களிலே அடைக்கலம் கேட்கிறேன். அவைகள் மூலமாகப் பிதாவாகிய சர்வேசுரன் பாதத்திலே மன்னிப்புக் கேட்கிறேன்.

என் ஆண்டவரே, அநேக பாவங்களைச் செய்தேனேயல்லாமல், உமக்குப் பொருந்தின புண்ணியங்களை ஒழுங்கு முறையாக செய்யவில்லையென்பது மெய்தான். ஆனால் உம்முடைய திருவிரக்கத்தின் அளவில்லாத பலனை நம்பிக்கொண்டு எனக்குக் கிருபை கிடைக்குமென்று நம்புகிறேன்.

எனக்காக தேவரீர் அனுபவித்த எண்ணிக்கைக் குள்ளடங்காத கஸ்தி நோவுகளையும் கடின் மரணத்தையும் உம்முடைய பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

தேவரீர் எனக்காக மனுப்பேசி எனக்கு உம்முடைய திரு இரத்தத்தினாலும், அத்தியந்த தேவ சிநேகத்தினாலும், தேவத்திரவிய அநுமானங்களினாலும் என் பாவங்களையெல்லாம் முழுதும் பரிகாரமாக்கி, என் சீவிய காலம் முடிகிறபோது என் கஸ்தி ஆக்கினையெல்லாம் முடிந்து எனக்கு நித்திய பேரின்ப பாக்கியம் துவக்கும்படி எனக்குத் தயை செய்தருளும் சுவாமி.

ஆமென்.