இரண்டாம் வேத கலாபனை. காலம் : கி.பி. 89 - 96.

நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி டோமீஷியன். 
காலம் : கி.பி. 89 - 96.

முதல் வேத கலாபனையை நடத்திய உரோமைச் சக்கரவர்த்தி நீரோ தன் தண்டனையை இவ்வுல கிலேயே பெற்றுக்கொள்ளத் தொடங்கினான். உரோமாபுரியை விட்டு அவன் தப்பி ஓடும்போது ஒரு அடிமையால் குத்தப்பட்டு செத்தான்.

நீரோவுக்குப் பின் சில ஆண்டுகளாக கிறீஸ்த வர்கள் சற்று அமைதியில் விடப்பட்டனர். ஆனால் அவனது பரம்பரையில் வந்த டோமீஷியன் அவனைப் போலவே பல தீய குணங்களோடும், விசேஷமாக கிறீஸ்தவர்கள் மீது தீராப்பகையோடும் காணப்பட்டான்.

தன் நாட்டின் உயர்குல கிறீஸ்தவர்களை இவன் அதிகமாகத் தாக்கினான். சக்கரவர்த்தி அரண்மனை யில் கூட அப்படிச் செய்தான். ஃபிளாவியுஸ் கிளமென்ஸ் என்ற தன் உறவின்னைக் கிறீஸ்தவன் என்பதற்காக அநீதக் கொலை செய்து அவன் மனைவியை நாடு கடத்தினான்.

நெரயுஸ், அக்கில்லேயுஸ் என்ற தன் இரு அடிமைகளையும் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றவர்கள் என்பதற்காக குரூரமாய் வதைத்து பின் சிரச்சேதம் செய்தான். இவர்களது திருநாள் மே 12 - ல் திருச்சபையால் கொண்டாடப்படுகிறது.

டோமீஷியன்சக்கரவர்த்தி இரண்டு ஆண்டிற்குள் பல ஆயிரம் கிறிஸ்தவ மேன்குலத்தோரை வாதைப் படுத்தினான். சொத்துப் பறிமுதல் செய்தான். நாடு கடத்தி அனாதைகளாக்கினான். கொடூரமாய்க் கொலை செய்தான்.

அப்பொழுது அப்போஸ்தலரும் சுவிசேஷகரு மான அர்ச். அருளப்பர் வாழ்ந்திருந்தார். அவர் ஆண்டவருடைய சீடன் என்று குற்றஞ்சாட்டப் பட்டு உரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைக் கொல்வதில் டோமீஷியன் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். மிகமிகக் கொடிய வேதனையில் அவர் சாக வேண்டுமென்று விரும்பினான்.

அவனது உள்ளத்தில் எரிந்த கோப அக்கினி கொப்பரையில் கொதிக்கும் எண்ணெயாக உருவெடுத்தது. பெரிய அண்டாவில் எண்ணெய் நிரப்பப்பட்டு அது கொதித்துக் கொப்பளித்தது. அர்ச். அருளப்பர் அதனுள் மூழ்கிச் சாக தீர்ப்பிடப்பட்டார். தன் ஆண்டவரும், தாம் மார்பில் சாய்ந்திருந்த அன்புக் கடவுளுமான சேசுவுக்காக அதை அன்புடன் ஏற்றார் அருளப்பர்.

கொதிக்கும் எண்ணெயின் உக்கிரத்தைத் தாங்க வேண்டும் என்ற ஆவலை அவரது இருத யத்தில் சேசு மீது பற்றி எரிந்த சிநேக அக்கினி அவருக்குள் மூட்டியது.

முரடர்கள் அர்ச். அருளப்பரை வலுவாய்ப் பிடித்து, கொதித்த எண்ணெய்க்குள் மெல்ல இறக் கினார்கள். அர்ச் அருளப்பரோ தாம் சிலுவையடியில் நின்று கண்ட சேசுவின் நிஷ்டூர கொடிய மரணத் தையும், தாம் இராப்போஜன சாலையில் அனுபவித்த அவருடைய அன்பையும் சிந்தித்தவராய் அக்கொடு மைக்குத் தம்மைக் கையளித்தார்.

ஆனால் ஆச்சரியம்! அவருடைய தேவ சிநேக அக்கினி எண்ணெயின் அக்கினியை வென்றது ! கொதித்த எண்ணெய் அவருக்கு குளிர்ந்த நீராகியது! அவர் உடல் எண்ணெயால் தாக்கப்படவில்லை. இப்பெரும் அதிசயம் லத்தீன் வாசல் என்ற முகப்பின் அருகே நிகழ்ந்தது. இதன் ஞாபகமாக அவ்விடத்தில் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு இன்றும் உள்ளது!

வெறுப்பும், சிறுமையும் அடைந்த டோமீஷியன் அர்ச். அருளப்பரைப் பாத்மோஸ் என்ற தீவுக்கு நாடு கடத்தி தன் ஆத்திரத்தைச் சற்று தணித்துக் கொண்டடான். பாத்மோஸ் தீவில் இருக்கும் போதுதான் அர்ச். அருளப்பர் தேவ ஏவுதலினால் காட்சியாகமத்தை எழுதினார்!

டோமீஷியன் இறந்தபின் அர்ச். அருளப்பர் எபேசுஸ் பட்டணத்துக்குத் திரும்பி வந்து அங்கே 101ம் ஆண்டில் பாக்கியமான மரணமடைந்தார்.