அக்டோபர் 4

செபமாலை சொல்லும் விதம்.

பரிசுத்த ஆவியின் உதவியை நாடியபின் செபமாலை சொல்லத் துவங்குவது நல்லது. முதன் முதல் விசுவாச மந்திரம் ; கிறிஸ்தவ வாழ்க்கைக்கு விசுவாசந்தானே அஸ்திவாரம் ; கர்த்தர் கற்பித்த ஜெபம் , மூன்று முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , பின் பத்து பத்தாய் ஐந்து முறை அருள் நிறைந்த மரியே என்னும் ஜெபம் , ஒவ்வொரு பத்துக்குப் பின் 'பிதாவுக்கும் சுதனுக்கும் ' என்ற திரித்துவ ஸ்தோத்திரம் சொல்லுகிறோம் . ஒவ்வொரு பத்துக்கு முன்னரும் ஒரு தேவ இரகசியத்தைச் சொல்லி அதைப் பற்றிச் சிறிது நேரம் , இரண்டொரு வினாடியாவது யோசிக்க வேண்டும்.

சில நாடுகளில் 53 மணிக்குப் பின் கிருபை தாயாபத்து செபத்தை சொல்லுகிறார்கள். எண்ணுவதற்கு மணிகள் உதவுகின்றன என்று பார்த்தோம். அதோடு அவை நம் கவனத்தையும் கவர்கின்றன . நாம் சுத்த அரூபிகளான சம்மனசுகள் அல்லோம் . நாம் ஆத்துமமும் சரீரமும் சேர்ந்தவர்கள், அவை இரண்டும் ஒத்துழைக்கின்றன . இரண்டொரு சிறு வெளிச் செயல்கள் புத்திக்கு வேகத்தைக் கொடுக்கின்றன . ஒரு பெரியவர் , பெரிய சிந்தனையாளர் , பெரிய அறிஞர் . அவரைப் போய்ப் பார்க்கும்போதெல்லாம் எதைக் கவனிக்கலாம் ? மேசையின் மேல் புத்தகம் ஒன்றும் இராது . எழுதத் தாள் ஒன்று , வலது கரத்தில் எழுதுகோல் , இடது கரத்தில் சுருட்டொன்று . நாலைந்து மணி நேரமாக ஒரே சுருட்டு தான் . ஏன்? அச்சுருட்டு சிந்தனா சக்தியைப் பெருக்குகிறது என்பார் . இத்தகைய வழிகளைப் பின்பற்றும் பலரைப் பார்த்திருக்கலாம் . பெண்களில் சிலர் சிந்திப்பதற்கு உதவியாகப் பின்னுகிறார்கள் . எவ்வளவு வேகமாய்ப் பின்னுகிறார்களோ, அவ்வளவு வேகமாய் அவர்களது சிந்தனையும் ஓடுகிறது .சிந்தனைக்கு உதவியாக சிலர் வேகமாய் நடப்பதைக் கண்டிருக்கலாம் . அதே போல மணிகளும், அவைகளை உருட்டுவதும் செபிப்போரின் கவனத்தை எழுப்புகின்றன. உலக சிந்தனைகள் பல படையெடுத்து பாய்கின்றன அல்லவா , அந்தப் பராக்கை எல்லாம் சிறிதளவாவது தள்ளி விட மணிகள் உருட்டுதல் உதவுகிறது . அதே போல் வாய்ச் செபமும் மனோ செபத்திற்கு உதவியாக இருக்கிறது.

மானிட சுபாவத்தை அறியாதவர்கள் தான் ஒரே செபத்தை திரும்பத் திரும்பச் சொல்லுவதில் பயன் இல்லை என்பர் . மன மகிழ்ச்சியோ அன்போ பொங்கி பொங்கி எழும்போது, அபூர்வங்களைக் கண்டு அதிசயம் பூத்து நிற்கும்போதும் பெரும் சோகத்தால் உள்ளம் கரையும்போதும் , ஒரே மொழியை, ஒரே பொருளைத் திரும்பத் திரும்ப சொல்லுவார்கள் . அன்பின் பெருக்கால் தாயண்டை வந்த பிள்ளை " அம்மா , நான் உன்னை நேசிக்கிறேன் , அம்மா உன்னை நேசிக்கிறேன் , நேசிக்கிறேன் அம்மா " என்று சொல்லுவதைக் கேட்கும் தாயின் மனம் பூரிக்குமா ? புழுங்குமா?

"மணியாம், செபமாம் , இரகசியமாம் , என்ன இடைஞ்சல்கள் " என்று செபமாலை செய்யாதவர்கள் சொல்லலாம் . தமிழ்நாட்டு கிராமவாசி ஒருவன், மேல் நாட்டான் உணவருந்த உட்காருகையில்  உண்கலத்தையும், லோட்டாவையும் , கத்தியையும் , கரண்டியையும் , முள்ளையும், மடித்துவாலையையும் கண்டு இதென்னடா சங்கடம் என்று நினைக்கலாம் . உணவருந்த உட்கார்ந்த மகராசனுக்கு சங்கடம் தெரியவில்லை . பத்து நிமிடத்திற்குள் கை அசுத்தப்படாமல் விலாப்புடைக்கத் தின்று எழும்புகிறான் . கத்தி ,முள் , கரண்டி அவனுக்கு சங்கடமல்ல . அவை அவனுக்கு உதவி.

எவ்விதம் சிந்திப்பது ? தியானம் செய்து பழகியவர்களுக்கு அது அவ்வளவு கஷ்டம் அல்ல . ஆனால் சாதாரண மக்களுக்கு அதற்க்குச் சுலபமான வழிகள் உள. ஒவ்வொரு தேவ இரகசியத்தைச் சொல்லும்போதும் , அதை விவரிக்கும் நற்செய்தி வாசகத்தை வாசிப்பது நல்லது . அவ்வாறு வாசித்தால் பத்துமணியைச் சொல்லும்போது அந்த இரகசியத்தில் உள்ள பற்பல எண்ணங்கள் , புத்தியில் மின்னி மின்னி மறையும் . ஒவ்வொரு இரகசியத்தையும் படம் போல் சித்தரித்து , அவைகளைப் பார்த்துக் கொண்டே சிலர் சுலபமாய்ப் பத்து மணியைத் தியானத்தோடு சொல்லி முடிக்கிறார்கள் . இது சரியான தியானம் , அல்லது ஒவ்வொரு பத்திலும் அந்த இரகசியத்துக்கு அடுத்த ஓர் எண்ணம் , ஒரு புண்ணியம் புத்தியில் ஊன்றி நிற்கும்  அல்லது உலாவி வரும் . இதுவும் நல்ல தியானம் . சிறிதளவேனும் தியானிப்பதால் தான் செபமாலை சொல்லுவதால் பெரும் பலனை அடையலாம்.

சரிதை 

1. அவித்த செபமாலை : அவள் ஒரு கிழவி . அமெரிக்காவில் ஒரு சிற்றூரில் எல்லைப்புறத்தில் வசித்து வந்தாள். ஒரு நாள் அவளுக்கு அவஸ்தை கொடுக்க ஒரு குருவானவரை அழைத்தார்கள் . அவர் சென்று குடிசைக் கதவைத் தட்டினார் . உள்ளே நுழைந்தார் . குடிசையில் தட்டு முட்டு சாமான்கள் அதிகம் இல்லை. ஒரு கட்டில் . அதனருகே ஆவியால் எரியும் சிறு அடுப்பில் ஒரு பாத்திரம் . அவளைத் தயார் செய்து திவ்விய நன்மை அவஸ்தை கொடுத்தபின் பாத்திரத்தில் இருந்த கொத்தி தண்ணீரை உற்று நோக்கினார் . இரு செபமாலைகள் பாத்திரத்தின் அடியில் கிடந்தன . அவைகளைக் கட்டிய சரடு கட்டிலோடும் கட்டப்பட்டிருந்தது . ஒரு நிமிஷம் யோசித்தபின் குருவானவர் அவளை நோக்கி , " பாட்டி செபமாலையை எதற்காக அவிக்கிறாய் ?" என்றார் . " சுவாமி , என் விரல்களில் உணர்ச்சியே இல்லை ; மரத்துப் போயின . செபமாலையின் மணிகள் நல்ல சூடாய் இருந்தால் தான் நான் உணர்கிறேன் . இவ்விதம் நாள் முழுதும் எனக்கு செபமாலை செய்வதற்கு எனக்கு ஏதுவாய் இருக்கிறது" என்றாள். அம்மூதாட்டிக்கு செபமாலை மேல் என்னே பற்று !

2. அர்ச் சாமிநாதர் காலத்திற்கு முன்னரே செபமாலை சொல்லும் வழக்கம் இருந்தது . அவர் அவ்வழக்கத்தைச் சில இடங்களில் பரப்ப பிரயாசைப்பட்டார் . ஆயினும் வெகு சீக்கிரம் மக்கள் அவ்வழக்கத்தை விட்டு விட்டனர் . 1349 ஆம் ஆண்டு அதுவரைக் கேட்டறியாத கொள்ளை நோயால் ஆண்டவர் ஐரோப்பா முழுவதையும் வாட்டினார் . கொள்ளை நோயைப் பின்தொடர்ந்து இரண்டு அசாத்தியங்கள் வேகமாய்ப் பரவின. அச்சமயம் முத் ஆலன் ரோச்சுக்கு ஆண்டவர் பூசை நேரத்தில் காட்சியளித்து ஒஸ்தியில் இருந்து சொன்னது : " இவ்வளவு சீக்கிரம் மறுமுறையும், நீ என்னைச் சிலுவையில் அறையலாமா? முன் உன் பாவங்களால் என்னைச் சிலுவையில் அறைந்தாய் . உன் பாவங்களால் என் பிதாவுக்கு வந்த துரோகத்தை நிறுத்த இன்னும் ஒரு முறை சிலுவையில் அறையப்படவும் நான் தயார் . இப்பொழுது என்னைச் சிலுவையில் அறைகிறாய் . எப்படியென்று கேள் . திருச்செபமாலைப் பக்தியைப் பரப்ப உனக்கு எவ்வளவோ புத்தியும் சாமர்த்தியமும் இருந்தும் நீ வாளா இருக்கிறாய் . நீ அப்பக்தியைப் பரப்பினால் அநேகரைப் பாவ வழியில் இருந்து நல் வழிக்குக் கொண்டு வரலாம் . நீ இவ்விதம் செய்யாததினால் , நீயும் அம்மக்கள் பாவங்களுக்கு உடந்தையாயிருக்கிறாய்" என்று கடிந்து கொண்டார் . தேவதாயும் அவருக்கு காட்சியளித்து " நீ வாலிபத்தில் பெரும் பாவியாய் இருந்தாய் . நீ மனந்திரும்பும் வரத்தை என் மகனிடமிருந்து உனக்கு பெற்றுத் தந்தேன். உன்னைத் திருப்ப எத்தனையோ இன்னல்களிலிருந்து காப்பாற்ற நான் தயாராயிருந்தேன் . மனந்திரும்பிய பாவிகள் எனக்கு மகிமை . உன்னை மனந்திரும்பச் செய்ததற்கு வேறொரு காரணம் என் செபமாலைப் பக்தியை நீ வெகுதூரத்துக்கு பரப்புவாய் என்ற எண்ணம் " என்று சொல்லி மறைந்தார் . அர்ச் சாமிநாதரும் செபமாலைப் பக்தியைப் பரப்பும்படி காட்சியில் ரோச்சுக்குச் சொன்னார் . 1460 ஆம் ஆண்டிலிருந்து ஆலன் இப்பக்தியைப் பற்றிப் போதித்து பலரை நல்வழிக்குக் கொண்டு வந்தார்.

செபம்.

மகாப் பரிசுத்த செபமாலை இராக்கினியே , மனுக்குலத்தின் அடைக்கலமே , சர்வேசுரனுக்காகப் புரியும் போர்களிலெல்லாம் ஜெயசீலியே, நம்பிக்கையோடு தாழ்மையாய் உம் பீடம் முன்பு சாஷ்டாங்கமாய் விழுகிறோம் . தற்சமயம் எங்களைச் சூழ்ந்திருக்கும் அபாயமான நிலையில்  எங்களுடைய பேறுபலன்களின்   நிமித்தம் அல்ல உம் தாய்க்குரிய இதயத்தின் பெரும் தயாளத்தினிமித்தம் இரக்கமும், வரப்பிரசாதமும் , தயாள உதவியும் பெறுவோம் என்று நம்பியிருக்கிறோம் . மாசில்லாத இருதய மரியே ! உலகின் பயங்கரமான இந்நாளில் திருச்சபையின் தந்தையாகிய பரிசுத்த பாப்பரசரோடு சேர்ந்து முதல் முதல் சத்தியத் திருச்சபையை உம்மிடத்தில் ஒப்படைத்து நேர்ந்து கொள்ளுகிறோம் . திருச்சபை சேசுவின் ஞானச் சரீரம் அல்லவா ? அதன்மேல் இந்நாள் எத்தனை இடங்களில் துன்பமும் துயரமும் படைஎடுத்திருக்கின்றன! . இரண்டாவதாக உலகையே உமக்கு நேர்ந்து கொள்ளுகிறோம் . உலக ஆன்ம காரியங்களில் எத்தனை நாசம் . தாய் தந்தையர்களும், கணவன் மனைவியும் , சகோதரர் சகோதரிகளும் , மாசற்ற குழந்தைகளும் அநியாயமாய் , அக்கிரமமாய் , ஆயிரம் ஆயிரமாய்க் கொல்லப்படுவதை , செபமாலை இராக்கினியே , நீர் பார்ப்பதில்லையா ? இந்தக் கொடுமையைக் கண்டு எங்கள் மேலும் திருச்சபையின் மேலும் இவ்வுலகத்தின் மேலும் இரங்கி எல்லோரையும் உமது மாசற்ற இருதயத்தில் வைத்தருளும் செபமாலைத் தாயே!

ஆமென்.