செபமாலையின் வரலாறு.
12 ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே ஜெபமாலை சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருந்தது .ஆனால் இந்நாளில் ஜெபிக்கும் முறையே அந்த நாட்களிலும் வழங்கியது என்று எண்ணலாகாது . ஜெபமாலை என்றும் அதற்குப் பெயரில்லை . மரியின் சங்கீத மாலை என்று வழங்கப்பட்டது . குருக்கள் பாடும் 150 சங்கீதங்களைச் சங்கீத மாலை என்று பாடினர். அதைப் பின்பற்றித்தான் மரியின் சங்கீத மாலை வந்தது . 150 முறை அருள் நிறைந்த ஜெபத்தைச் சொல்லி வந்தனர் . மேலும் ஒவ்வொரு சங்கீதத்திலும் உள்ள இரண்டொரு வார்த்தைகளையோ, எண்ணங்களையோ புகுத்தி செய்யுள் அமைத்து தாயைப் புகழ்ந்தனர் .ஓர் உதாரணம்
கன்னியரின் கன்னியும் நிகரற்ற தாயுமானவளே!
ஆண்மகன் உதவியின்றி அருங்கரித்தவளே!
தேவனின் சட்டத்தை தினம்தினம் தியானிக்கச் செய்யும்!
தேவனின் அரசின் மகிமையில் ஆனந்திக்கச் செய்யும்!
இதில் மூன்றாம் அடி சங்கீதத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது . இதே போல் தேவ தாய்க்கு 150 கண்ணி கொண்ட மாலை தொகுத்தனர்.
ஆனால் பொதுவில் வழங்கியது 'அருள் நிறைந்த மரியே ' என்னும் ஜெபத்தை , ஐம்பது ஐம்பதாக மும்முறை சொல்வதாம். .அருள் நிறைந்த மரியே என்ற ஜெபம் இன்றையைப் போல் அன்று அவ்வளவு பூர்த்தியானதல்ல. சங்கீதங்கள் இறைவனுக்கு தோத்திரப்பாக்கள், அது போல் இச்செபம் மாமரிக்குத் தோத்திரப்பாக்கள் .
13ஆம் நூற்றாண்டிலிருந்த ஒரு துறவி சொல்லுவார் " நாம் மரியன்னைக்கு வந்தனை செலுத்துவோமேயாகில் , அவர் பதில் வந்தனை செலுத்தத் தெரியாத கிராமத்தாள் அல்ல . மரியின் வந்தனையைக் கேட்டவுடன் எலிசபெத் இஸ்பிரீத்து சாந்துவினால் நிரப்பப்பட்டாள். மாமரி சொல்லும் வந்தனையால் நாமும் வரப்பிரசாதத்தால் பூரிக்கும்படி மாமரிக்கு அடிக்கடி வந்தனை செய்வோமாக"
."மாமரி சொல்லும் வந்தனைக்கு என்ன வல்லமை ! அது நமக்கு ஆனந்தத்தை அளிக்கும். பரிசுத்த ஆவியைக் கொடுக்கும். இறைவனுடைய இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்தும். தீர்க்கதரிசன வரத்தை நமக்குக் கொண்டு வரும்" என்றார் வேறொரு துறவி
"அருள் நிறைந்த " ஜெபம் தேவதாய்க்கு தோத்திரம் என்பதோடு கூட ,அதனால் வரும் நன்மைகளைக் காண்பித்து அடிக்கடி இந்தத் தோத்திர கீதத்தைப் பாடும்படி மக்களை அத்துறவிகள் தூண்டிப்போயிருக்கின்றனர்.
பலமுறை ஒன்றைச் செய்வோமேயாகில் ,சொல்வோமேயாகில் அதைக் கணக்கில் வைக்க வேண்டாமா ? அதற்காக முதன்முதல் சிறு சிறு கூழாங்கற்களை உபயோகித்தனர் . பின்னர் சில உதிரிக் கொட்டைகளை உதவிக் கொண்டனர். அதன்பின் அக்கொட்டைகளை சிறு கயிறுகளாலோ கம்பிகளாலோ கோர்த்தனர் . முதலில் ஐம்பது ஐம்பதாகக் கோர்த்துக் கொண்டனர் . இப்பூவுலகில் தேவதாய் 63 வருடங்கள் இருந்ததாக ஒரு ஐதீகம் இருந்து வருவதால் 63 மணிகள் கோர்த்த சரடுகள் பல இடங்களில் இருந்து வந்தன
ஒவ்வொரு பத்துக்கும் இடையில் 'கர்த்தர் கற்பித்த ஜெபம் ' சொல்லும் வழக்கம் கிடையாது . 17ஆம் நூற்றாண்டின் முடிவில் முதலாய்ச் சிலர் அச்செபத்தைச் சொன்னாலும் அதைச் சொல்லும் சம்பிரதாயம் வழக்கில் இல்லை . பத்துப் பத்தாய்ப் பிரித்துக் காட்ட என்ன செய்தனர் ? ஆதியில் ஒவ்வொரு சங்கீத முடிவில் என்ன செய்தனரோ அதைச் செய்தனர் . அதாவது தலை குனிந்தனர் ; மார்பைத் தட்டினர் . ஒற்றை முழந்தாளில் நின்று எழுந்தனர் . அல்லது இரட்டை முழந்தாளிட்டனர் . சிலர் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து எழுந்தனர் . திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே மூவின ஜெபம் வழக்கத்தில் இருந்து வந்தது . மெய் , மொழி, மனம் . கரங்களைக் குவித்தல் , குவித்துத் தூக்குதல் , சிலுவையைப் போல் கரத்தை விரித்தல் , முழந்தாளில் இருத்தல் , நெடுஞ்சாண்கிடையாய்க் கிடத்தல் ஆகியனவாம் . இவை பல மதங்களிலும் வழக்கத்தில் உள்ளன
சரிதை.
அர்ச். சாமிநாதர் பிரான்ஸ் தேசத்தில் போதித்துக் கொண்டிருந்தார் . ஆல்பிஜென்சியர் என்று சில வேத விரோதிகள் சத்திய திருச்சபைக்கு இக்கட்டாக இருந்தனர். இதற்குக் காரணம் மனிதர்களுடைய பாவாக்கிரமங்கள் என்று உணர்ந்தார் . தூலூஸ் பட்டணத்துக்கு அருகில் உள்ள காட்டில் சென்று மூன்று பகலும் மூன்று இரவும் செபத்தில் ஆழ்ந்தார் . கண்ணீர் சிந்தி அழுதார் . இறைவனுடைய கோபத்தை அமர்த்தக் கடுந்தவங்களைப் புரிந்தார் . ஓயாமல் தன்னை அடித்துக் கொண்டமையால் உடல் எல்லாம் புண்ணாகி மயங்கி விழுந்தார்
அந்நேரம் மூன்று சம்மனசுக்களோடு தேவதாய் அவருக்கு தரிசனையாகி "பிரிய தோமினிக், உலகத்தை மணந்திருப்ப பரம திரித்துவம் , நீ எச்சாதனத்தைக் கையாள வேண்டும் என்று ஆசிக்கிறார் என்பதை நீ அறிவாயா ? இப்போரில் எல்லா விக்கினங்களையும் தகர்த்தெறியும் இயந்திரம் மரியாயின் சங்கீத மாலை , ஆதலால் இக்கல்நெஞ்சரைக் கரை சேர்க்க வேண்டுமேயாகில் என் ஜெபமாலையைப் பற்றிப் போதித்து வா " என்றார்
சாமிநாதர் எழுந்தார் . மக்களைத் திருப்ப மனம் வெந்தார், நேரே மேற்றிராசனக் கோயிலுக்குச் சென்றார் . கண்ணுக்குத் தோன்றாத வானதூதர் மணிகளை அடித்தனர் . அனல் கக்கும் ஆவலோடு பிரசங்கத்தைத் துவங்கினார் .பிரசங்கத் துவக்கத்தில் சண்டமாருதம் ; தரை நடுங்கியது ; சூரியன் தெரியவில்லை ; கட கடவென இடி ; பளீர் பளீரென மின்னல் , யாவருக்கும் பயம் . அச்சமயம் படத்தில் உள்ள தேவதாய் மோட்சத்தின் ஆக்கினையை அழைத்தது போல தம் கரங்களை மேலே உயர்த்தினார் .யாவருக்கும் நடுக்கம் . செபமாலைப் பக்தியை யாவருக்கும் விளக்கவே இந்த அடையாளங்கள் போலும். சாமிநாதர் வேண்டுதலின் மேல் பேய்ப்புயல் அமர்ந்தது . உற்சாகமாய்ப் பிரசங்கத்தைத் தொடர்ந்து நடத்தினார் . வெகு சொற்ப நாளில் தூலூஸ் நகர மக்கள் தங்கள் பாவ வழியை விட்டு அக்கிரம அசத்தியங்களை அகற்றித் தள்ளி மெய்யான பாதை சேர்ந்தனர் . புண்ணிய சீவியம் மறுபடி தழைத்தோங்கியது
செபம்.
செபமாலை மாதாவே , கல்வாரியில் என்னை உம் பிள்ளையாக ஏற்று எனக்காக நீர் கண்ணீர் சிந்தினதை நினைத்தருளும். தேவ நீதியிலிருந்து என்னைக் காப்பாற்ற இதுவரை நீர் எடுத்துக் கொண்ட கவலைகளையும் நினைவு கூரும். உமது பிள்ளைக்கு இவ்வளவு செய்தபின் அவனைக் கைவிட்டு விடமாட்டீர் . இவ்வெண்ணத்தால் நம்பிக்கை கொண்டு எனது குற்றங்களையும், நன்றி கெட்டத் தனத்தையும் கண்டு அஞ்சாமல் உம் பாதத்தண்டை சாஷ்டாங்கமாய் விழுகிறேன் . என் விண்ணப்பத்தைத் தள்ளிவிடாதேயும் . செபமாலையை நான் பக்தியாய்ச் சொல்லவும் , சேசுவை எல்லாவற்றையும்விட அதிகமாய் நேசிக்கவும் , பரிசுத்த வாழ்க்கையால் உம்மை மகிழ்விக்கவும் ஒரு நாள் நான் உம்மை மோட்சத்தில் காணவும் கிருபை செய்யும் செபமாலை இராக்கினியே!
ஆமென்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠