2 இராயப்பர்

அதிகாரம் 01

1 நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் நீதிக்கேற்ப, நாங்கள் பெற்ற விசுவாசத்தைப் போலவே மதிப்புள்ள விசுவாசத்தைப் பெற்றுள்ளவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியனும் அப்போஸ்தலனுமான சீமோன் இராயப்பன் எழுதுவது:

2 கடவுளையும் நம் ஆண்டவராகிய இயேசுவையும் அறியச் செய்யும் அறிவினால், உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக!

3 தமக்கேயுரிய மாட்சிமையாலும், ஆற்றலாலும் நம்மை அழைத்த இறைவனை அறியச் செய்யும் அறிவின் வாயிலாக, இறைப்பற்றுடன் கூடிய வாழ்வை வளர்க்கும் அனைத்தையும் அவரது தெய்வீக வல்லமை நமக்கு வழங்கியுள்ளது.

4 இறைவன் வாக்களித்த கொடைகள் அந்த மாட்சிமையாலும் ஆற்றலாலும் நமக்கு வழங்கப்பட்டன. மதிப்பும் மாண்பும் மிக்க இக்கொடைகளால் நீங்கள், இச்சையின் விளைவாக இவ்வுலகிலுள்ள அழிவுக்குத் தப்பி, இறை இயல்பில் பங்குபெறக்கூடும்.

5 இதை மனத்தில் வைத்து, முழு ஊக்கங்காட்டி, உங்களிடம் விசுவாசத்தோடு நற்பண்பும்,

6 நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மனவுறுதியும்,

7 மனவுறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேசமும், சகோதர நேசத்தோடு அன்பும் இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

8 இப்பண்புகள் உங்களிடம் நிறைந்து செழிக்குமானால், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவைப் பொறுத்தமட்டில், இவை உங்களைச் சோம்பேறிகளாயும் பயணற்றவர்களாயும் இருக்கவிடா.

9 இவை யாரிடம் இல்லையோ அவன் குருடன், மங்கிய பார்வையுடையவன்: முன் செய்த பாவங்களினின்று தூயவனாக்கப்பட்டதை அவன் மறந்து விட்டான்.

10 சகோதரர்களே, நீங்களோ அழைக்கப்பட்டீர்கள், தேர்ந்து கொள்ளப்பட்டீர்கள்; அவ்வரத்தில் உறுதியாய் நிற்க ஊக்கங்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு பொழுதும் தடுமாறமாட்டீர்கள்.

11 இங்ஙனம் நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்வின் முடிவில்லாத அரசில் நுழையும் பேறும் உங்களுக்குத் தாராளமாக அருளப்படும்.

12 இக்கருத்துக்களையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; ஏற்றுக்கொண்ட உண்மையில் நிலைபெற்று இருக்கிறீர்கள்; எனினும், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்ட விழைகிறேன்.

13 என் உடலாகிய இக்கூடாரத்தில் தங்கி இருக்கும் வரையில், இப்படி நினைவுறுத்தி, உங்களுக்கு விழிப்பூட்டுவது என் கடமை எனக் கருதுகிறேன்.

14 இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் அடுத்துள்ளது என அறிவேன்; நம் அண்டவராகிய இயேசு கிறிஸ்து அதை எனக்குத் தெரிவித்துள்ளார்.

15 இக்கூடாரத்தைவிட்டு நான் வெளியேறிய பின்னும், நீங்கள் இவற்றை எப்பொழுதும் நினைவிற் கொள்ள வாய்ப்பு உண்டாகும்படி, என்னால் இயன்றதெல்லாம் இப்போது செய்யப்போகிறேன்.

16 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் நாங்கள் உங்களுக்கு எடுத்துரைத்தபோது, சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளைப் பின்பற்றிப் பேசவில்லை; அவரது மாண்பை நாங்களே கண்ணால் கண்டோம்.

17 "இவரே என் அன்பார்ந்த மகன்; இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று அவரை நோக்கி உன்னத மாட்சிமையினின்று குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சிமையும் அவர் பெற்றபோது,

18 நாங்கள் அவரோடு பரிசுத்த மலையில் இருந்தோம்; விண்ணினின்று எழுந்த இக் குரலொலியை நாங்களே கேட்டோம்.

19 ஆகவே, இறைவாக்கினர் கூறியது இன்னும் உறுதியாயிற்று. இந்த இறைவாக்கை நீங்கள் இருண்ட இடத்தில் ஒளிரும் விளக்கென மதித்து கவனித்தல் நலம். பொழுது புலர்ந்து விடிவெள்ளி உங்கள் இதயங்களில் தோன்றும்வரை, அவ்விளக்கு ஒளிர்கிறது.

20 ஆனால் மறைநூலில் உள்ள இறைவாக்கு எதுவும் அவனவன் தரும் விளக்கத்திற்கு உட்படக்கூடியதன்று என்பதை நீங்கள் முதன் முதல் மனத்தில் வைக்க வேண்டும்.

21 ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால் உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டு கடவுளின் ஏவுதலால் பேசினர்.

அதிகாரம் 02

1 இஸ்ராயேல் மக்களிடையே போலித் தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள். அதுபோலவே உங்களிடையேயும் பொய்ப் போதகர்கள் தோன்றுவார்கள். அழிவை விளைவிக்கும் தவறான கொள்கைகளைப் புகுத்தி, தங்களை மீட்ட ஆண்டவரையும் மறுத்து, அழிவைத் தம்மீதே விரைவாக வருவித்துக்கொள்வார்கள்.

2 அவர்களுடைய காமவெறியைப் பலர் பின்பற்றுவர். அவர்களால் உண்மை நெறி பலருடைய பழிப்புக்குள்ளாகும்.

3 பேராசையால் ஏவப்பட்டு, பசப்பு மொழி பேசி, உங்களிடம் பணம் சுரண்டுவர். பழங்காலத்திலிருந்து அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பிட்டவர் இன்று அயரவில்லை; அவர்களை அழிவுக்குள்ளாக்குபவர் உறங்கவில்லை.

4 பாவம் புரிந்த வானதூதர்களைக் கடவுள் தண்டிக்காமல் விடவில்லை; இருள் நரகின் படுகுழிகளில் தள்ளி, அவர்களை அங்கே தீர்ப்புக்காக அடைத்து வைத்திருக்கிறார்.

5 பண்டைய உலகையும் அவர் தண்டிக்காமல் விடவில்லை. நீதியைப் போதித்த நோவாவை வேறு ஏழு பேருடன் காப்பாற்றி, இறைப்பற்றில்லாத மக்கள் நிறைந்த உலகின் மீது வெள்ளப் பெருக்கை வருவித்தார்.

6 சோதோம் கொமோரா நகரங்களையும் தண்டித்தார். இறைப்பற்றில்லாதவர் கதி என்ன வாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்நகரங்களைச் சாம்பலாக்கிவிட்டார்.

7 காமவெறியில் உழன்ற தீயவர்களின் நடத்தையைக் கண்டு மனவேதனை கொண்ட நீதிமானாகிய லோத்தை விடுவித்தார்.

8 இந்நீதிமான் அவர்களிடையே வாழ்ந்தபோது அவர் கண்ட நிகழ்ச்சிகளும் கேட்ட பேச்சுகளும் தீயனவாகவே இருந்தன. இந்தத் தீய நடத்தை அவருடைய நேர்மையான மனத்தை நாள்தோளும் வாட்டி வதைத்தது.

9 இறைப் பற்றுள்ளவர்களைத் துன்பச் சோதனையிலிருந்து விடுவிக்கவும், அநீதர்களைத் தண்டனைக்குட்பட்டவர்களாய்த் தீர்ப்பு நாளுக்கென்று வைத்திருக்கவும் ஆண்டவருக்குத் தெரியும்.

10 குறிப்பாக, அசுத்த இச்சைகள் கொண்ட ஊனியல்பின்படி நடப்பவர்களையும் ஆண்டவரது மாட்சியைப் புறக்கணிப்பவர்களையும் அவர் தண்டிப்பார். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், அகந்தையுள்ளவர்கள்; வானவர்களைப் பழிக்க இவர்கள் அஞ்சுவதில்லை.

11 வானதூதர்களோ மிக்க ஆற்றலும் வலிமையும் பெற்றிருப்பினும், ஆண்டவர் முன் அவர்களைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்வதில்லை.

12 பிடிபடவும் சாகடிக்கப்படவுமே பிறந்த பகுத்தறிவற்ற விலங்குகளைப்போல் வெறும் இயல்புணர்ச்சிகளின்படி இவர்கள் வாழ்கிறார்கள்; தாங்கள் அறியாததையும் பழிக்கிறார்கள்; அவ்விலங்குகள் அழிவுறுவதுபோலவே இவர்களும் அழிவுறுவர்.

13 தாங்கள் இழைத்த தீமைக்குக் கைம்மாறாகத் தீமையே பெறுவர். பட்டப்பகலில் களியாட்டத்தில் ஈடுபடுவதையே இவர்கள் இன்பம் எனக் கருதுகின்றனர். சிற்றின்பத்தில் மூழ்கிக்கிடக்கும் இவர்கள், உங்கள் அன்பு விருந்தில் கலந்து கொள்வது உங்களையே மாசுபடுத்தும் மானக்கேடுதான்.

14 இவர்கள் கண்கள் ஒழுக்கம் கெட்ட பெண்களையே நாடுகின்றன; பாவத்தைவிட்டு ஓய்வதேயில்லை; இவர்கள் மனவுறுதியற்றவர்களைச் சூழ்ச்சியால் வசப்படுத்துகின்றனர்; பொருளாசையைப் பொறுத்த மட்டில் கைதேர்ந்தவர்கள்; இவர்கள் சாபத்துக்குள்ளானவர்கள்.

15 நேர்மையான வழியினின்று விலகித் தவறிப்போய், பொசொரின் மகனான பாலாம் சென்ற வழியை இவர்கள் பின்பற்றினர். இந்தப் பாலாம் தீமை செய்து ஆதாயம் பெற ஆசைப்பட்டான்.

16 ஆனால் தான் செய்த குற்றத்திற்காகக் கண்டிக்கப்பட்டான். பேச்சில்லாத கழுதை மனிதப் பேச்சுப் பேசி அந்தத் தீர்க்கதரிசியின் மதியீனத்தைத் தடுத்தது.

17 இவர்கள் நீரற்ற சுனைகள்; சுழற் காற்றால் அடித்துச் செல்லப்படும் மூடுபனி போன்றவர்கள். இருளுலகம் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

18 தவறான வழி நடப்போரிடமிருந்து இப்போதுதான் தப்பியவர்களை, இவர்கள் பகட்டான வீண் பேச்சுப் பேசி, ஊனியல்பின் இச்சைகளாலும் காமவெறியாலும் சூழ்ச்சியாய் வசப்படுத்துகின்றனர்.

19 விடுதலை அளிப்பதாக இவர்கள் வாக்களிக்கின்றனர்; ஆனால் தாங்களே அழிவுக்கு அடிமைகளாய் இருக்கின்றனர். ஒருவன் எதனால் வெல்லப்படுகிறானோ அதற்கே அவன் அடிமையாகிறான்.

20 ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யும் அறிவினால் உலகத் தீட்டிலிருந்து தப்பிய பின் இவர்கள் மீண்டும் அதிலே சிக்கி, அதனால் வெல்லப்பட்டால், இவர்களது பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமானதாகும்.

21 நீதி நெறியை அறிந்தபின், தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுத்த கட்டளையை விட்டு விலகுவதைவிட, அதை அறியாதிருப்பதே இவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும்.

22 "தான் கக்கினதைத் தின்ன நாய் திரும்பி வரும்" என்னும் பழமொழி இவர்களிடம் உண்மையாயிற்று. மேலும் "கழுவியபின், பன்றி மீண்டும் சேற்றிலே புரளும்."

அதிகாரம் 03

1 அன்புக்குரியவர்களே, நான் உங்களுக்குக் கடிதம் எழுதுவது இது இரண்டாம் முறை. உங்கள் உள்ளத்தில் புனித கருத்துகள் எழச்செய்யும்படி, இவ்விரு கடிதங்ளிலும் இவையெல்லாம் நினைவுறுத்துகிறேன்.

2 பரிசுத்த இறைவாக்கினர் முன்னறிவித்த சொற்களையும், ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் அப்போஸ்தலர் வழியாகத் தந்த கட்டளையையும், நீங்கள் நினைவிற்கொள்ளுங்கள்.

3 முதன்முதல் நீங்கள் மனத்தில் வைக்க வேண்டியது: இறுதி நாட்களில், ஏளனம் செய்பவர்கள் தோன்றுவார்கள்.

4 தங்கள் இச்சைகளின்படி நடக்கும் இவர்கள், "அவர் வருகையைப்பற்றிய வாக்குறுதி என்னவாயிற்று? நம் தந்தையர் இறந்துபோயினார்; ஆயினும் படைப்பின் தொடக்கத்திலிருந்தது போல எல்லாம் அப்படியே இருக்கின்றதே!" என ஏளனமாய்ப் பேசுவர்.

5 ஆனால் ஒன்றை இவர்கள் வேண்டுமென்றே மறந்து போகிறார்கள். அதாவது: கடவுளுடைய வார்த்தையால்தான் தொடக்கத்திலிருந்தே வானமும் நிலமும் உள்ளன; நிலம் நீரினின்றும் நீராலும் தோன்றி நிலைபெற்றுள்ளது.

6 அந்த நீராலே அன்றைய உலகம் வெள்ளப்பெருக்கில் அழிவுற்றது.

7 இதை அவர்கள் மறந்துபோகின்றனர். ஆனால் இப்போதுள்ள விண்ணும் மண்ணும் நெருப்பினால் அழிக்கப்பட அதே வார்த்தையால்தான் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன; இறைப்பற்றில்லாதவர்கள் அழிவுற வேண்டிய தீர்ப்பு நாளுக்கென்று அவை விட்டு வைக்கப்பட்டுள்ளன.

8 அன்பிற்குரியவர்களே, இன்னொன்றையும் மறக்கவேண்டாம்: ஆண்டவருக்கு ஒருநாள் ஆயிரம் ஆண்டுகள்போல்! ஆயிரம் ஆண்டுகள் ஒருநாள்போல்!

9 ஆண்டவர்தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலம் தாழ்த்துவதாகச் சிலருக்குத் தோன்றுகிறது; ஆனால் அவர் காலந்தாழ்த்துவதில்லை; உங்கள் பொருட்டுப் பொறுமையாயிருக்கிறார்; ஒருவரும் அழிவுறக் கூடாது, எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றிருக்கிறார்.

10 ஆனால் ஆண்டவரது நாள் வந்தே தீரும்: அது திருடனைப்போல் வரும்; வானம் பேரிடி முழகத்துடன் மறைந்தொழியும், ஐம்பெரும் பூதங்கள் நெருப்பால் வெத்துருகிப்போகும்; மண்ணுலகும், அதில் வாழ்த்தோரின் செயல்களும் வெளியாக்கப்படும்.

11 இவை அனைத்தும் இவ்வாறு மறைந்தொழிந்து போகுமாதலின் கடவுளுடைய நாளுக்காகக் காத்திருந்து, அது விரைவில் வர உழைக்கும் நீங்கள், பரிசுத்த நடத்தையிலும் இறைப்பற்றிலும் எவ்வளவோ சிறந்து விளங்கவேண்டும்.

12 அந்நாள் வரும்போது வானங்கள் நெருப்புக்கிரையாகி மறைந்தொழியும், ஐம்பெரும் பூதங்கள் வெந்துருகிப்போகும்.

13 நாமோ, நீதி குடிகொள்ளும் புதிய வானமும் புதிய வையமும் அவர் வாக்களித்தபடியே வருமென்று காத்திருக்கிறோம்.

14 ஆகவே, அன்புக்குரியவர்களே, இவற்றிற்காகக் காத்திருக்கும் உங்களை அவர் மாசு மறுவற்றவர்களாய், அமைதியான நிலையில் காணும்படி உழைத்து வாருங்கள்.

15 நம் ஆண்டவரின் பொறுமையே நமக்கு மீட்பு என எண்ணுங்கள். நமது அன்புக்குரிய சகோதரர் சின்னப்பரும் தமக்கு அளிக்கப்பட்ட ஞானத்தின்படி இவ்வாறே உங்களுக்கு எழுதியிருக்கிறார்.

16 தம் கடிதங்களில் இதைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அதையே அவர் சொல்லுகிறார். புரிந்துகொள்வதற்குக் கடினமானவை சில அவருடைய கடிதங்களில் உள்ளன. அறியாதவர்களும் உறுதியற்றவர்களும் மறைநூலின் மற்றப் பகுதிகளுக்குப் பொருள் திரித்துக் கூறுவதுபோல, இவற்றிற்கும் கூறுகின்றனர். இதனால் தங்கள் மீதே அழிவை வருவித்துக் கொள்கின்றனர்.

17 அன்புக்குரியவர்களே, நீங்களோ இவையெல்லாம் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். தீயவர்களின் தவறான கொள்கைகளால் இழுபட்டு, உங்கள் உறுதி நிலையினின்று விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

18 நம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அருளிலும், அவரை அறியச்செய்யும் அறிவிலும் வளர்ச்சியடையுங்கள். அவருக்கே இன்றும் என்றும் மகிமை உண்டாகுக, ஆமென்.