நவம்பர் 2

உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று சகலமான ஜனங்களும் ஒத்துக் கொண்ட சத்திய விசேஷமாம்!

தியானம்.

திருந்தாத பெரும் பாவிகளுக்கு நித்திய நரகமும் முற்றும் பரிசுத்தவான்களுக்கு முடிவில்லாத மோட்சமுமல்லாமல் உத்தரிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்கு ஓர் நடுஸ்தலமும் இருக்கிறதென்று எக்காலத்தும் எத்தேசத்தும் ஜனங்களெல்லாம் விசுவசித்து நம்பி ஒத்துக் கொண்டார்கள் என்கிறதற்குச்  சந்தேகமில்லை . இந்த ஸ்தலத்திலே உத்தரிப்பு நிமித்தமாக நிற்கும் ஆத்துமாக்கள் மிகுந்த வேதனையை அனுபவிக்கிறதொழிய மனுஷர் அவர்களுக்காக வேண்டிச் செய்த செப தப தான தருமங்களினாலும் செலுத்தின பலிகளினாலும் இந்த வேதனைகள் அமர்ந்து குறையும் என்று அறிந்து இதெல்லாவற்றையும் மகா ஆசையோடு நிறைவேற்றிக் கொண்டு வருவார்களாமே. சேசுநாதர் சுவாமி இவ்வுலகத்தை மீட்டு இரட்சிக்க வரும் முன் இருந்த பேர் பெற்ற அசீரியரும் , பெர்சியரும் , எஜிப்தரும் , கிரேசியரும், ரோமானியரும் மரித்தவர்களைக் குறித்து அநேக சடங்குகளையும் வேண்டுதல்களையும் பலிகளையும் செலுத்திக் கொண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய சரித்திரங்களிலே துலக்கமாகக் காணப்படுகிறது . மேலும் பூர்வீக காலத்தில் இருந்து இந்நாள் மட்டும் அஞ்ஞானிகளாய் இருக்கிற சீன தேசத்தார் மரணத்தை அடைந்த தங்களுடைய முன்னோர்களைக் குறித்து விசேச பயப்பற்றுதலோடு சில திருவிழாக்களைக் கொண்டாடி பற்பல பலி சடங்குகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்துள்ள உண்மையாகும் . இந்த இந்து இராச்சியங்களிலே முதலாய் கிறிஸ்தவரல்லாத பல மதஸ்தரான ஜனங்கள் செத்தவர்களுடைய ஆத்துமாக்களைக் குறித்து மோட்ச விளக்கென்ற சடங்கையும் , அமாவாசை ஒருசந்தியையும் இன்னும் சில ஆசாரங்களையும் நிறைவேற்றுகிறார்கள் என்று உங்களுக்கு நன்றாய்த் தெரியுமே . இறந்து போனவர்களுக்காக இந்த திருநாட்களையும் பூசை பலிகளையும் செப தர்மங்களையும் நானாவித சடங்கு ஆச்சாரங்களையும் மேற்சொன்ன ஜாதி ஜனமெல்லாம் எதற்க்காக அனுசரித்து வருகிறார்கள் என்றால் "கட்டிக் கொண்ட குற்றங்களுக்கு ஆக்கினையாக வேதனைப்படும் ஆன்மாக்களுடைய குற்றங்கள் நீங்கி , இந்த ஆத்துமாக்கள் மோட்சகரை ஏற்கும் பொருட்டு இந்த முறைமைகளுக்கு இது முகாந்தரமல்லாமல் வேறெந்த முகாந்தரமும் இல்லை

மேலும் சேசுக்கிறிஸ்து நாதருக்கு முன்னமே மெய்க்கடவுளான சர்வேசுரனை அறிந்து வணங்கி வந்த யூதர்கள் மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் தங்களுடைய குற்றங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு , மோட்ச பேரின்பத்தை அடையும் பொருட்டு செப, தர்ம ,பூசை பலிகளினாலே பிரயாசைப்படுவார்கள் என்று சத்திய வேத புத்தகன்களினாலே அறிந்து கொள்ளலாம் ​அதை நிரூபிக்கும் சரித்திரமாவது : மகா வீரசூரரான யூதாஸ் மக்கபெயருடைய நாட்களிலே சில போர்ச் சேவகர்கள் சத்திய வேதத்தை பற்றி செய்யும் போர் சண்டைகளிலே விழுந்து செத்தார்கள் . அவர்களுடைய பிரேதங்களை மகா மகிமையோடு அடக்கம் பண்ணி அவர்களுடைய ஆத்துமாக்களுக்காக எல்லோரும் வேண்டிக் கொண்டதுமன்றியே படைத்தலைவரான யூதாஸ் மக்கபெயர் ஜனங்களிடமிருந்து மிகுந்த பணம் சேகரித்து பன்னிரெண்டாயிரம் வெள்ளிப் பணங்களை ஜெருசலேம் நகரத்தில் இருக்கும் சர்வேசுரனுடைய கோவிலுக்கு அனுப்பி செத்தவர்களுடைய பாவங்களுக்காக பூசை நைவேத்தியம் ஒப்புக் கொடுக்கப் பண்ணினார் . ஆகையால் செத்தவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிக்கப்படும் பொருட்டு அவர்களுக்காக வேண்டிக் கொள்வது நன்மையையும் பிரயோசனமும் உள்ள காரியமென்று மக்கபெயர் இரண்டாம் ஆகமத்தில் சத்தியமாக எழுதி இருக்கிறது . இக்காலம் வரை சேசுக்கிறிஸ்து நாதரை அறிய மாட்டோமென்று யூதர்கள் சாதித்தாலும் உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்று விசுவசித்து செத்தவர்களுடைய ஆத்துமாக்களுக்காக சில சடங்குகளை நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்

அதல்லாமலும் பூர்வீக திருச்சபை முதற்கொண்டு இந்நாள் மட்டும் சகலமான கிறிஸ்தவர்கள் , மரித்தவர்களுடைய ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் படும் ஆக்கினைகள் குறையும்படிக்கு செப , தப , தான தருமங்களையும் , திவ்விய பூசைகளையும் ஒப்புக் கொடுத்துக் கொண்டு வருகிறது நிச்சயமாம் . அந்தந்த காலங்களிலே பசாசினுடைய சோதனையால் அநேகர் சத்திய திருச்சபையை விட்டுப் பிரிந்து , அரியானிகள் என்றும் , நேஸ்தோரியானிகள்  என்றும் , கிரேசியர் என்றும் மோஸ்கோபித்தார் என்றும் பல பதிதரகப் போயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் மரித்தவர்களுக்காக வேண்டி நம்மைப் போல ஜெபங்களைப் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் . இந்து தேசத்தில் உள்ள மலையாள சீர்மையில் அநேகமாயிரம் பேர் நேஸ்தோரியானிகள்  என்ற பதிதர்களாய் இருந்தாலும் அவர்களுக்குள்ளே அப்படித்தான் நடந்து வருகிறதென்று எவரும் கண்டறியலாம்

இப்போது சொன்னதைக் கேட்ட கிறிஸ்தவர்களே ! செய்ய வேண்டிய யோசனை ஏதென்றால் , சகலமான ஜனங்கள் எக்காலத்திலும் எத்தேசத்திலும் விசுவசித்து அனுசரித்த சாத்தியமானது தப்பாத சத்தியமாகையால் , நரகமும் மோட்சமும் இன்றி நடுஸ்தலமாகிய உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்றும் , இதில் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நம்முடைய நற்கிரியையினால் ஆறுதல் வருவிக்கக் கூடுமென்றும் ஒத்துக் கொள்ளவேண்டுமே அல்லாமல் மற்றபடியல்ல . அப்படி இருக்க , சேசுநாதர் ஸ்தாபித்த சத்திய வேதத்தைக் கெடுக்க  நானூறு வருசத்துக்கு முன் முளைத்த புரோட்டஸ்டாண்டு என்ற பதிதர் மாத்திரமே எந்த முகாந்தரத்தினாலேயோ மேற்சொன்ன சத்தியத்தை மறுத்து விரோதித்து தங்களுடைய புத்தியீனத்தையும் ஆங்காரத்தையும் காண்பிக்கிறதும் தவிர  உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் இரக்கம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள் அல்லவோ ? கிறிஸ்தவர்களே ! இவர்கள் சொல்லும் தப்பரைகளுக்குச் செவி கொடாமல் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உங்களாலான மட்டும் உதவியாய் இருக்க வேண்டுமென்று அறியக் கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம்.

சேசுவே ! எங்கள் பேரில் தயவாயிரும்

செபம்.

சகல விசுவாசிகளுடைய சிருஷ்டிகரும் இரட்சகருமாகிய சர்வேசுரா ! மரித்த உமது அடியார்களுக்காக செய்யப்படுகிற பக்தியுள்ள மன்றாட்டுக்களை அங்கீகரித்து ,அவர்கள் மிகுந்த ஆவலோடு விரும்புகிற பாவ மன்னிப்பை கிருபை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம் . சதாகாலமும் சீவியரான சர்வேசுரா ! இந்த மன்றாட்டை தயவோடு கேட்டருளும் சுவாமி ஆமென்

இந்த தினத்தில் செய்ய வேண்டிய நற்கிரியை.

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு பூசையை செய்விக்கிறது அல்லது காண்கிறது

புதுமை.

உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுகிற ஆத்துமாக்கள் சில சமயங்களிலே காணப்பட்டதென்றும் , தாங்கள் அனுபவிக்கும் வேதனையின் அகோரங்களைக் காண்பித்ததென்றும் தங்களுக்கு ஆறுதலாக செபங்களையும் தர்மங்களையும் பூசைகளையும் செய்யக் கேட்டதென்றும் அநேக பெரிய சாஸ்திரிகள் நிச்சயமாய் எழுதினார்களாமே . அப்படியே பூர்வீகத் திருச்சபையில் வேதசாட்சியான அர்ச்சிஷ்ட பெர்பேத்துவம்மாள் தன்னுடைய தம்பியான தினோக்கிராத் என்பவருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வருத்தப்படுகிறதையும் பின்பு அதில் இருந்து மீட்டு இரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகிறதையும் கண்டாள் என்று மகா சாஸ்திரியான அர்ச் அகுஸ்தீனுஸ் எழுதி வைத்தார்

சேசுக்கிறிஸ்து நாதர் சுவாமி பிறந்து ஐந்நூறு வருசத்துக்குப் பிறகு அயர்லாந்து தேசத்திலே உயர்ந்த கோத்திரத்திலே பிறந்த அர்ச் ஈதவம்மாள் வாழ்ந்து வந்தாள். அவள் சிறு வயது முதலாய் நானாவித புண்ணியங்களை அனுசரித்து வந்ததினாலே சர்வேசுரன் அவளுக்கு அநேக சுகிர்த வரங்களை அளிக்க சித்தமானார் . தம்முடைய காவலான சம்மனசுவை அடிக்கடி தரிசித்து அவரோடு சம்பாஷிப்பாள். திரளான அற்புதங்களைப் பண்ணி அதிசயமான காட்சிகளைக் காண்பாள் . அவள் ஒரு நாள் தியானத்தில் இருக்கும் போது அதற்கு சற்று முன் மரணத்தை அடைந்த தமது பெரிய தகப்பனாருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அகோரமாய் வாதைப்படுகிறதை தரிசித்தாள். தாமதமில்லாமல் அவரது எட்டு மக்களையும் வரவழைத்து தாம் கண்டதை அவர்களுக்கு வெளிப்படுத்தி :"அய்யய்யோ ! உங்களுடைய தகப்பனார் இந்நேரத்தில் அவ்வளவு வேதனைப்படுகிறாரே, அவருக்கு ஆறுதல் வருவிக்க நாமெல்லோரும் பிரயாசப்படக்கடவோமல்லவா ? நான் இடைவிடாமல் இரவும் பகலும் அவருக்காய் பிரார்த்தித்து, தபசு பண்ணுவேன் .நீங்களும் அவரைக்  குறித்து நிறைய பிச்சை கொடுத்து பசித்திருக்கிரவர்களுக்கு போஜனம் தந்து கோவிலிலே மெழுகுதிரிகளை எரியப் பண்ணி , ஒரு வருஷமளவும் தினந்தோறும் திவ்விய பூசையை ஒப்புக் கொடுக்கச் செய்வீர்களாக என்றாள்

இந்த எட்டு பிள்ளைகளும் அர்ச் ஈதவம்மாள் கற்பித்த எல்லாவற்றையும் சரிவர நிறைவேற்றினார்கள் . மறு வருஷம் திரும்பவே அவள் தன பெரிய தகப்பனாருடைய ஆத்துமத்தைக் கண்டு அவர்களுக்குச் சொன்னதாவது:"நீங்கள் செய்த தருமங்களினாலும் நான் செய்த ஜெபங்களினாலும் உங்கள் தகப்பனாருக்கு நியமித்த வேதனையில் பாதி குறைந்து போனது .ஆனால் இன்னமும் ஒரு வருஷத்துக்கு இவருடைய ஆத்துமத்துக்காக பிரயாசைப்படக் கடவோம் என்றாள்

இப்படி அவள் ஜெபங்களையும் தவக்கிரியைகளையும் பிள்ளைகள் பிச்சை தருமங்களையும் மகாப் பிரயாசையோடு பண்ணினார்கள் . அந்த இரண்டாம் வருஷக் கடைசியில் அவள் சொன்னதாவது :"உங்கள் தகப்பனாருடைய வேதனைகள் முடிந்தது மெய்தான் . ஆயினும் அவர் உயிரோடு இருக்கிறபோது இவ்வுலக நன்மைகளை அதிக ஆசையோடு தேடியிருந்ததையும் , பிச்சைக்காரருக்கு வஸ்திரம் கொடாமல் இருந்ததையும் பற்றி அவர் இன்னும் மோட்ச பேரின்ப மகிமையை அடையவில்லை .ஆனதால் அவரைக் குறித்து இன்னும் ஒரு வருஷமட்டும் பிரயாசைப்படவேண்டியதுமல்லாமல் வஸ்திரமில்லாதவருக்கு வஸ்திரம் கொடுத்து வாருங்கள் என்றாள் . இந்தப் பிள்ளைகள் இதையும் குறைவின்றி நிறைவேற்றினார்கள் . இதன் பிற்பாடு இவர்களுடைய தகப்பனார் செத்த மூன்றாம் வருஷக் கடைசி நாளிலே இவருடைய ஆத்துமம் மகா பிரதாபத்தோடு மோட்ச பேரின்ப வீட்டிலே பிரவேசித்ததை அர்ச் ஈத்தம்மாள் நினைத்து ,அவர் இவ்வுலகத்தின் நிலையாத நன்மைகளை அதிக பற்றுதலோடு தேடினதைப் போல நீங்கள் தேட வேண்டாமென்று வசனித்தாள்

கிறிஸ்தவர்களே , இப்போது சொன்ன புதுமையிலே மூன்று விசேசங்களை நன்றாய் அறிய வேண்டும் .

முதலாவது : ஆயிரத்து நானூறு வருசத்துக்கு முன் உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து செபங்களையும் தவக்கிரியைகளையும் பிச்சை தர்மங்களைச் செய்யவும் , கோயில்களிலே விளக்கு மெழுகுதிரிகளை எரிய வைக்கவும், திவ்விய பூசைகளைச் செய்விக்கவும் , திருச்சபையில் வழக்கம் இருந்திருக்கும்போது ,இந்த ஆத்துமாக்களைக் குறித்து வேண்டிக் கொள்ளுகிறது புதிய முறை என்று பிரிவினை சபையினர் என்னும் பதிதர் சொல்லுமிடத்தில் ,இது அவர்கள் கக்கும் பதினாயிரம் பொய்களுக்குள்ளே ஒரு பெரிய பொய்யும் தப்பறையுமாகும்

இரண்டாவது : மேற்சொன்ன மனுஷனுடைய ஆத்துமம் பட்ட வேதனைகளை முடித்து அது மோட்சத்திற்கு சேர மூன்று வருஷமளவும் அவ்வளவு செபங்களையும் தாபங்களையும் பண்ணிப் பூசைகளையும் செய்வித்தார்கள் என்று அறிந்து , உங்களைச் சேர்ந்த ஆத்துமாக்களை குறித்து கொஞ்சம் செபம் , தர்மம் செய்து ஒன்றிரண்டு பூசை செய்விக்கிறது போதும் என்று நினைக்க வேண்டாம்

மூன்றாவது : இவ்வுலகத்தின் செல்வ நன்மையெல்லாம் நில்லாது என்கிறதினாலே இவைகளை அதிக ஆசையோடு தேடுகிறதே பெரும் பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறதல்லாமல் அதனால் உத்தரிக்கிற ஸ்தலத்திலே வேதனைப்படுவதற்கு இடமிருக்கிறது என்று அறியக்கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.