நவம்பர் 24

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்.

தியானம்.

சர்வவல்லபமுள்ள சர்வேசுரனுடைய நீதியின்படியே எந்தப்பாவமும் பரிகாரமாக வேணும் . பாவத்துக்குச் செய்யத்தகும் பரிகாரம் இருவகை உண்டு. அதாவது: தவத்தினால் செய்யப்பட்ட பரிகாரமும், ஆக்கினையால் செய்யப்பட்ட பரிகாரமும் ஆகிய இவ்விருவகையாம். அதெப்படியெனில், மனுஷனானவன் மனந்திரும்பிதான் செய்த பாவத்துக்குத் தவத்தைப் பண்ணினால், அந்தத் தவமே அவனுடைய பாவத்துக்குப் பரிகாரமாகும். தன்னுடைய பாவத்துக்குத் தவம் பண்ணாத பாவியானவன் நரகத்திலேயாவது, உத்தரிக்கிற ஸ்தலத்திலேயாவது ஆக்கினைப்பட தீர்வையிடப்படுவான்.

இந்த ஆக்கினையே அவன் செய்த பாவத்துக்குப் பரிகாரமாகும். தவமும் ஆக்கினையும் இணையாயிருக்கிறதென்று எண்ணத்தகும். அதெப்படியென்றால் ஆக்கினையாவும் வருத்தமுள்ளதாம் இருக்கிறது போலவே, தவக்கிரியையும் வருத்தமாயிருக்கும். இந்த வருத்தத்தினாலேதான் பாவத்துக்குப்  பரிகாரம் உண்டாகிறதென்று சாஸ்திரிகள் சொல்லுகிறார்கள். அதனால் பாவியானவன் தனக்கு வரப்போகும் ஆக்கினையைத் தவத்தினால் விலக்குவானென்று அநேகமுறை வேத புஸ்தகங்களிலே எழுதியிருக்கிறது.

அப்படியே முற்காலத்தில் மகாப்பாவிகளாயிருந்த நினிவென்ற பட்டணத்தார் தங்களுடைய பட்டணத்துக்கு வரவிருந்த சர்வ சங்காரத்தைத் தாங்கள் செய்த தவத்தினால் விலக்கினார்கள். அதனால் தான் நமது ஆண்டவரான சேசுக்கிறிஸ்து நாதர் கூடியிருந்த ஜனங்களை நோக்கி நீங்கள் செய்த பாவங்களுக்கு தபசு செய்யாவிட்டால் எல்லோரும் கெட்டுப்போவீர்கள் என்பார். உயிரோடிருக்கும்போதே தவம் செய்யவேணுமே தவிர செத்தபிற்பாடு தவத்துக்குக் காலமில்லை. செத்தபிறகு ஆக்கினைமாத்திரமிருக்கும்.

தவத்தால் பாவத்துக்குப் பரிகாரம் பண்ணுவது எளிது, ஆக்கினையினால் செய்யும் பரிகாரம் மிகவும் வருத்தக் கூடியதாகும். இதிப்படியிருக்கிறபடியினாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் ஆக்கினைப்பட்டுத்தான் தங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணுவர். ஆயினும் உயிரோடிருக்கிற மனுஷர் தவக்கிரியைகளைச் செய்து, அத்தவத்தால் உண்டாகும் பரிகாரத்தை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு மனம் பொருந்தி ஒப்புக்கொடுத்தால், அந்த பரிகாரம் அந்த ஆத்துமாக்களுக்கு உதவுமென்கிறதற்குச் சந்தேகமில்லை. அதனாலே உத்தரிக்கிற ஆத்துமாக்கள் படுகிற தண்டனைகளை நம்முடைய தவத்தால் குறைக்கலாம். முடியப்பண்ணலாம். ஆகையினாலே உத்தரிக்கற

ஆத்துமாக்களின்பேரில் பக்தியுள்ளவர்கள் அந்த ஆத்துமாக்களுக்காக நானாவித தவக்கிரியைகளைப் பண்ணுவார்கள். கிறிஸ்துவர்களே! உங்களுடையவர்களின்ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து சீக்கிரமாய் மீட்டிரட்சிக்கப்பட்டு மோட்சத்துக்குப் போகவேணுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்காகத் தவம் பண்ணுங்கள். தவமென்கிற பேரைக் கேட்டவுடனே அநேகம்பேர்கள் அது பெரிய வருத்தமென்றும், பெரிய ரிஷிகளுக்கும் சந்நியாசிமார்களுக்கும் மாத்திரமே செல்லுங்காரியமென்றும் பயந்து பின்வாங்குகிறார்கள். தவத்தைப்பற்றி உண்டாகும் இந்த அச்சமானது பசாசினாலே வருகிறதொழிய மற்றப்படியல்ல.

அதெப்படியென்றால், நல்ல மனதும் நல்ல கருத்தும் இருக்குமேயாகில் வெகு எளிதாய் தவம் பண்ணலாம் . அதாவது:

தவக்கிரியை பலவுண்டு. இவைகளெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயாக ஒப்புக்கொடுக்கலாமென்பது நிச்சயம் .

முதலாவது பசாசினுடைய சோதனைகளை விலக்கி, பாவம் செய்யாதபடிக்கு படுகிற பிரயாசமும், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்கத்தக்கதாகப் படுகிற வருத்தமும் நல்ல தவக் கிரியைக்கு இணையாயிருக்கிறபடியினாலே இவையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக் கொடுக்கலாம்.

இரண்டாவது திருச்சபை கற்பிக்கிற கடன் சுத்தபோசனமும் கடனொருசந்தியும் இவை முதலான கடமையான காரியங்கள் மெய்யான தவக்கிரியைகளாயிருப்பதால், இவை யாவற்றையும் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அவர்களுக்கு உதவுமென்பதற்குச் சந்தேகமில்லை.

மூன்றாவது இவ்வுலகத்தில் சஞ்சரிக்கிற மனுஷனுக்கு இடைவிடாமல் பல துன்பங்களும் கஷ்டங்களும் வருகிறதென்பது எல்லோருக்குந் தெரிந்த காரியமல்லவா ?சரீரத்தை உபாதிக்கும் வியாதிகளுக்கும் நோக்காடுகளுக்கும் கணக்கில்லாததினாலே இந்தச் சரீரம் எப்போதும் நொந்து வருத்தப்படுமென்பதற்குச் சந்தேகமில்லை. மனசிலே வருகிற அச்சம் பயமும் கஷ்ட துயரமும் கிலேசு கவலையும் மனுஷனை இடைவிடாமல் வருத்தப்படுத்தும் புத்தியிலே உண்டாகும் இருளந்தகாரமும், அறியாமை சந்தேகமும் தங்களுக்குள்ளே ஒவ்வாத யோசனைகளும் எத்தனையென்று சொல்லுவாரில்லை.

ஆத்துமத்தில் கிளம்பும் பற்பல தந்திரங்களையும், தகாத விசாரங்களையும், ஏற்காத சோதனைகளையும் அறியாதவருண்டோ ? புறத்தி மனுவரால் வருகிற விரோதங்களும் விக்கினங்களும் பிராது வியாச்சியங்களும் போர்ச்சண்டைகளும் அவதூறுகளும் ஆவலாதிகளும் துரோகங்களும் மனுஷனை மிகவும் காற்று பனி குளிர் மழையினாலும், பஞ்சம் முதலான பொல்லாப்புகளினாலும் யாவருக்கும் வருகிற துன்பம் எத்தனையென்று சொல்லி முடியாது. இவை யெல்லாம் மகா வருத்தமுள்ளதாகையால் இவைகளைப் பொறுமையோடு சகித்தால், உத்தம தவக்கிரியைகளைப்போலே மனுஷனுடைய பாவப் பரிகாரத்துக்கு உதவும். இவைகளையெல்லாம் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் செய்யவேண்டிய பரிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்தால், அதனாலே அவர்களுடைய உத்தரிப்பு குறைவதுமன்றியே வெகு சீக்கிரமாய் முடியுமென்பது பெரிய நம்பிக்கைதான்.

ஆயினும் எத்தனையோ பேர் இவை எல்லாவற்றையும் பொறுமையின்றி, நல்ல கருத்தின்றி, முறையிட்டு, முறுமுறுத்து  அநுபவித்துக்கொண்டு வருவதால் , யாதொரு பிரயோசனமும் பலனும் அடையாமல் போகிறார்கள் . உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதய் சகாயம் பண்ணுவதற்கு ஏற்ற அவ்வளவு நல்ல உபாயத்தை இத்தகையோர் விட்டு விடுகிறபடியினாலே  ,அந்த ஆத்துமாக்களுக்கு யாதொரு ஆறுதலும் வருகிறதில்லை.தம்பிமார்களே ! நீங்கள் அப்படி அசட்டையாய் இருக்க வேண்டாம் . உங்களுக்கும்  ஆத்துமாக்களுக்கும் பலனை அடைய இதுவே வருத்தமில்லாத வழியென்றறிந்து பொறுமையோடும் தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிதலோடும் இவையெல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து வருவீர்களாக.

நாலாவது ஒவ்வொருவன் மனம்பொருந்திச் செய்யும் நற்கிரியையுமுண்டு. அதாவது ஒருசந்தி சுத்தபோதனமும் முள்ளொட்டியாணம் கசையும், விழித்து ஜெபித்தலும் இதுமுதலான வருத்தமுள்ள முயற்சிகளுமே. இப்பேர்ப்பட்ட தவக்கிரியைகளைத் தபோதனரும், குருக்களும் சந்நியாசிகள்,கன்னியாஸ்திரிகளும் மாத்திரமே அநுசரித்துக்கொண்டு வருகிறார்களென்று நினைக்கவேண்டாம். இவ்வுலகத்துப் பல தொழிலைச் செய்கிறவர்களும், பல உத்தியோகங்களைச் செய்கிறவர்களும், உயர்ந்த கோத்திரத்திலே பிறந்தவர்களும் சேவகர் படைத்தலைவர்களும், பிரபுக்கள் இராஜாக்களும் மெல்லிய பெண்பிள்ளைகள் அநேகரும் மேற்சொன்ன தவக்கிரியைகளை அநுசரித்துக் கொண்டு வருகிறார்களென்பது நிச்சயம்.

இந்த தவக்கிரியைகளினால் அநேக ஞானப்பிரயோசனம் வருகிறதென்பதற்குச் சந்தேகமில்லை. இவைகளால் பசாசினுடைய சோதனைகளை எளிதாய் ஜெயிக்கலாம், தன் துர்க்குணங்களை அடக்கிக் கொள்ளலாம், தேவ வரங்களை அடையலாம், தன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யலாம். மோட்சத்திலே அதிக பரிசு பெறலாம் .

மீண்டும் இத்தகைய தவக்கிரியைகளை உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு ஒப்புக்கொடுத்தால் அந்த ஆத்துமா களுக்கு எவ்வளவு உதவி சகாயம் உண்டாகுமென்று சொல்லத்தகும் தன்மையல்ல.

கிறிஸ்துவர்களே!  இவ்வளவு தவக்கிரியை எல்லாம் அநுசரிக்கிறது உங்களால் கூடாத காரியமென்பது மெய்தான். ஆனாலும் இவைகளில் சிலதுகளையாவது தெரிந்து செய்தால் அதனாலே சாவீர்களென்று நினைக்காதேயுங்கள். எத்தனையோ பெரிய தபோதனர் கடினமான தவமெல்லாம் செய்து, எண்பதாம், தொண்ணுறாம் நூறாம் நூற்றிருபதாம் வயதிலே தான் செத்தார்கள். சிறு பிள்ளைகளும் மெல்லிய பெண்பிள்ளைகளும் அநுசரித்துக் கொண்டுவருகிறதைப் பெரிய ஆண் பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் அநுசரியாதிருப்போமோ என்று அர்ச் அகுஸ்தீன் சொல்லியிருக்கிறார். ஆகையால் தம்பிமார்களே பிரயாசமின்றி வருத்தமின்றி, ஒறுத்தலின்றி. மோட்சத்துக்குப் போவாரில்லையென்று அறிந்து எப்படியாகிலும் தபசு செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக

இன்று தினத்தில் அடிக்கடி சொல்லவேண்டிய மனவல்லய செபம் 

அர்ச் மரியாயின் மதுரமான இருதயமே! எனக்காதரவாயிரும்.

செபம் 

சர்வ கிருபையுடைத்தான சர்வேசுரா! தேவரீருடைய பிரதாபமுள்ள சமுகத்திலே நாங்கள் பொழியும் தாழ்மையுள்ள ஜெபங்களைக் கிருபாகடாக்ஷமாய்ப் பார்த்து அழுகிறவர்களுக்குத் தேற்றத்தையும் வருத்தப்படுகிறவர்களுக்கு ஆறுதலையும், கஸ்திப்படுகிறவர்களுக்கு  சந்தோஷத்தையும், சாகிறவர்களுக்கு நன் மரணத்தையும் ,உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு நித்திய இளைப்பாற்றியையும் கட்டளையிட வேணுமென்று தேவரீரைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்.

இருபத்து நான்காம் தேதியில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து ஒரு தவக்கிரியையைச் செய்கிறது.

புதுமை 

ஹங்கேரிய இராஜாவின் மகளான அர்ச் எலிசபெத்தம்மாள் உத்தரிக்கிற ஆத்துமாக்களின்பேரில் வெகு பக்தியாயிருந்ததுமல்லாமல் மரித்தவர்களுடைய பிரேதங்களை நல்லடக்கம் பண்ணுவிப்பாள் . இராஜாமகளாயிருந்தாலும் எளியவர்களுடைய பிரேதங்களுக்கு அவளே அநேகம் முறை செய்யவேண்டியவைகளைத் தம்முடைய கையினாலேயேச் செய்வாள்.

அவர்களுக்கு மரியாதை காண்பிக்கத்தக்கதாக தானும் கல்லறைக்குப் போவாள். அவர்களுடைய ஆத்துமத்துக்காக மகாப்பக்தியோடு வேண்டுவாள். ஹங்கேரிய ராணியான அவள் தாயானவள் இறந்தபிற்பாடு அர்ச் எலிசபெத்தம்மாள் அவளுடைய ஆத்துமத்தைக் குறித்து இரவும் பகலும் வேண்டிக்கொள்ளுவதுமல்லாமல் ஏராளமாய்ப் பிச்சை தர்மங் கொடுத்து, தினந்தோறும் கடின தவக்கிரியைகளை செய்து வந்தாள்.

அவள் இதெல்லாவற்றையும் செய்தாலும் வெகு நாளைக்குப் பிற்பாடு அவளுடைய தாயானவள் வெகு துயர முகத்தோடும் பொறுக்கப்படாத வேதனைப்படுகிற பிரகாரத்தோடும் அவளுக்குத் தரிசனையாகி, அவளண்டையில் முழந்தாளிட்டுப் பெருமூச்சுவிட்டுச் சொன்னதாவது " என் பிரியமுள்ள மகளே உன்னுடைய தாய் நான்தானே. நான் அநுபவிக்கிற வேதனை சகிக்கப்படாத வேதனையாகையால் என் பேரில் இரக்கமாயிரும். எனக்காக இடைவிடாமல் தேவ கிருபையை நீ மன்றாடவேணுமென்று  உன்னிடத்தில் கேட்கவந்தேன். உன்னைப் பெற்று வளர்க்க நான் பட்ட பிரயாசங்களை நினைத்து, அகோரமாய் என்னைச் சுட்டெரிக்கும் இந்த நெருப்பிலிருந்து என்னை மீட்கப் பிரயாசைப்படு என் மகளே உன்னண்டையில் சாஷ்டாங்கமாய் விழுந்திருக்கிற உன்னுடைய தாயாகிய என் பேரில் இரக்கமாயிரும் " என்று சொல்லி மறைந்து போனாள்.

அர்ச் எலிசபெத்தம்மாளோவென்றால் மனம் இளகி வெகுவாய்த் துக்கித்து முன்னிலும் அதிக ஜெபமும் அதிக தர்மமும் அதிக தவக்கிரியையும் செய்து கொண்டு வந்தாள். உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் அகோரமாய் வருத்தப்படுகிற தமது தாயாரின் சாயல் தன்னண்டையிலே எப்போதும் இருக்கிறாற்போல கண்டு, யாதொரு இளைப்பாற்றியுமின்றி நித்திரையுமின்றி இரவும் பகலும் செபங்களைப் பொழிந்து வெகு தவம் பண்ணிக் கொண்டிருந்தாள் . அப்படியே அநேக நாள் செய்த பிற்பாடு தாயானவள் அவளுக்குக் காணப்பட்டு , தன் வேதனை முடிந்து ,தான் மோட்சத்துக்குப் போகிறதாக அவளுக்கு நன்றியறிதலுடன் அறிவித்து மகா சந்தோஷப் பிரதாத்தோடு பேரின்ப விட்டுக்குப் போனாள்.

கிறிஸ்துவர்களே! இந்தப் புதுமையை நினைத்து நீங்களும் இறந்துபோன உங்களுடைய தாய் தகப்பனைக் குறித்து ஜெபதபம் தருமம் முதலான நற்கிரியைகளை இடைவிடாமல் ஒப்புக்கொடுக்கவேணுமென்று அறியக் கடவீர்களாக.

மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.