"மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா'' (பழ.23:26)

நாம் ஏற்கெனவே சொன்னபடி, சுவிசேஷம் முழுவதும் சிநேகமே; கன்னிமாமரியின் திருக்கரங்களிலும், சிலுவையிலும், திருச்சபையிலும் தம்மை ஒப்புக்கொடுக்கிற சேசுநாதரே அது; அதுவே கிறீஸ்தவ வேதச்சட்டத்தின் முழுமை.

கிறீஸ்துநாதரின் முதல்தரமான கைவேலையாகிய திருச்சபை அவரது சிநேகத்தின் உத்தம உருவம். குருத்துவமும் அவரது சிநேகத் தின் அழியாத அற்புதம். அதன் ஏக நோக்கம் ஆத்துமத்தை இரட் சித்து, அதைச் சிநேக பாதை வழியாய்க் கிறீஸ்துநாதரிடம் கொண்டு போவதுதான். வரப்பிரசாதத்தின் பிரமிப்புக்குரிய வாய்க் கால்களான தேவத்திரவிய அநுமானங்களில் குருவானவர் சிநேகத் தைப் பகிர்ந்து கொடுக்க உரிமை பூண்டவர். பிரசங்கத் தொட்டி யிலிருந்து அவரது குரலொலி, ""வருந்தி சுமை சுமக்கிறவர்களே, என்னிடம் வாருங்கள்... நான்தான், பயப்படாதீர்கள்'' என்று உரைத் ததன் மெய்யான எதிரொலி.

சிநேகத்தின் வழியாய் ஆத்துமம் சர்வேசுரனோடு ஒன்றிப் பதே ஜெபம் அல்லாது வேறென்ன? வரப்பிரசாதமும் அதனால் விளையும் கணக்கற்ற நன்மைகளும், ஆத்துமங்களை வளைத்துப் பிடிப்பதற்காகத் தேவனாகிய இரட்சகர் உபயோகிக்கிற தயாள சிநேகத்தின் வலையேயன்றி வேறல்ல. இந்தப் பரதேசத்தின் மாயங் களும், துன்பமும், மற்ற மனிதரோடு புழங்குவதில் உண்டாகும் ஏமாற்றங்களும், சகலமும் கடந்துபோகும்; சேசுநாதரின் சிநேகம் ஒன்றே மனித இருதயத்துக்கு ஏற்பட்ட ஏக நிஜப்பொருள். அவருக்குப் புறம்பே, ""சகலமும் விழலும், மனச் சஞ்சலமுமே'' (சங்கப். 1:14).

நமது ஆண்டவர் நாசரேத்திலும், ஜெனசரேத் கடற்கரை யிலும், மலையின்மேலும், பார-லே-மோனியாவிலும் பேசிய மொழி அவரது இருதயத்தின், அவரது நேசத்தின் மொழியே. சேசு நாதர் அர்ச். மார்கரீத் மரியம்மாளை நோக்கி, ""என் இருதயமானது மனிதர் மட்டிலும் விசேஷமாய் உன்மட்டிலும் சிநேகத்தால் பற்றி எரிகிறது'' என்றுரைத்தார். சகல காலத்துக்கும் உண்மைப் பொருள் இந்த நேசமே. அது அவரது அரசாட்சியிலும் கட்டளையிலும் வெற்றியிலும் அவரது மெய்ப்பொருள். ஏனெனில் அவர் அரசர். ""தேவன் சிநேகமாயிருக்கிறார்.'' ""சிநேகிப்பாயாக'' என்ற வார்த்தை யில் அவரது கட்டளைகள் முழுவதும் அடங்கிக் கிடக்கிறது. இவ்வுல கத்தில் உத்தமம் எனப்படுவதெல்லாமும் மறு உலகத்தில் சன்மானம் என்பதெல்லாமும் சிநேகமே.

மட்டற்ற சிநேகத்தின் ஆழமறியாப் பரம இரகசியமே! தேவன் தேவனான மட்டும் அவருக்கு எந்தப் பொருளும், ஆளும் தேவையில்லாதிருக்க, நான் அவரை என் முழு இருதயத்தோடும், ஆத்துமத்தோடும், சத்துவத்தோடும் நேசிக்க வேண்டுமென்ற சட்டத்தை அவரே ஏற்படுத்தியிருக்கிறார் என்றால், என்ன விந்தை இது! எனது சிநேகம் இல்லாவிடில், மட்டற்ற பூரண வஸ்து ஆனவருக்கு ஏதோ குறைவுபடும் என்பது போலவும், அது இன்றி நமது ஆண்டவருக்கு ஏதோ இல்லாமல் போனது போலவும், இதன் காரணமாக அந்தக் காலி இடத்தை என் இருதய அணுவால் நிரப்பக் கருதுவது போலவும் அல்லவோ இது இருக்கிறது!

அவரது உரிமைகளில் முதன்மையானதும், மிகுந்த ஆராதனைக் குரியதும், அவர் சிநேகிக்கப்பட வேண்டும் என்பதே. இதைப் பற்றிச் சந்தேகமில்லை. நமது சிநேகத்தை வெகு ஆவலுடன் தேடுகிறார்; நாம் அதை மறுக்கும்போது, அவர் கண்ணீர் சொரிந்து அதைக் கேட்கிறார்.

ஆதலால் உணர்ச்சிக்குரிய பக்தியை அகற்ற வேண்டும் என்ற சாக்குச் சொல்லி, நோயுற்ற உணர்ச்சி மிகுந்திருப்பதே சிநேகம் என்று ஏளனம் செய்து, இருதய வாழ்வை விலக்கிப் போடுவதில் பெருமை கொள்பவர்களுக்கு ஐயோ கேடு! இத்தகைய அபாண்டத்தை ஆக்ரோஷத்துடன் எதிர்த்துச் சொல்வது என் கடமை. அதில் முகத் தாட்சணியமும், அகந்தையும் மிகுந்து கிடப்பதுமன்றி, நமது ஆண்ட வரின் ஊழியத்தில் தாராளமின்மையையும் எடுத்துக் காட்டுகிறது.

சிநேகிப்பது பலவீனமா? ஆம், பரிசுத்த பலவீனம் அது: அர்ச். பிரான்சிஸ் அசிசியார், அர்ச். தெரேசம்மாள், அர்ச். சின்னப்பர், சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பைத்தியம் அது; ஓ! சேசுவே, உம்முடை யதும் அதுவே. மெய்யான சிநேகம் ஒருக்காலும் வெறும் உணர்ச்சியாகாது. அதற்கு முற்றும் மாறாக, அந்தரங்க வாழ்வின் மகத்தான போராட் டங்களுக்கும் வெற்றிகளுக்கும் அதுவே உயிராக இருந்திருக்கிறது; வீரியச் செயல்களுக்கெல்லாம் ஆணிவேராயிருந்த அந்தரங்க வல்லமை அதுதான். பயமானது எளிதில் பெண்களுக்குரிய உணர்ச்சி யாக மாறி விடலாம்; ஆனால் சிநேகத்தைப் போல் திடமான, ஆண்மை பொருந்திய புண்ணியம் வேறில்லை.

வேதசாஸ்திரத்தில் ஆழ்ந்த அறிவும், சிநேக தேவனாகிய நமது ஆண்டவரோடு தெய்வீக பந்தனத்தால் ஒன்றித்த இருதயமும், அன்பினால் பற்றியெரியும் ஆத்துமமும் உள்ளவர்களே மிகத் தேர்ந்த வேதபாரகர் என்று சொல்லலாம். அர்ச். அகுஸ்தீன், அர்ச். தாமஸ் அக்குயினாஸ், இவர்கள் இயற்றின புத்தகங்களைப் படித்ததால் அறிஞர்கள் என்று பெற்றிருந்தாலும், அந்தப் பரிசுத்த வேதபாரகர் களைப் போல் நேசியாதவர்கள் இருக்கிறார்கள், எப்போதும் இருப்பார்கள் என்று வருத்தத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக் கிறது. அவர்களது உயிரற்ற அறிவு எனக்கு வேண்டாம். அர்ச். அகுஸ்தீனாரும், அர்ச். தாமஸ் அக்குயினாஸும் படிப்பித்திருப் பதையே நான் உறுதியாய் ஒப்புக்கொள்வேன். அவர்கள் திருச்சபை யின் உண்மையான வேதபாரகர்கள். சிநேகம் ஒன்றே மெய்யான வேதசாஸ்திரம். அது நமக்கு அவசியமானதெல்லாம் தருகிறது. இதர சாஸ்திரம், கல்வி அறிவெல்லாம் தற்பெருமையைத்தான் தரக்கூடும்.

சிநேகம் பெண்தன்மையான உணர்ச்சியல்ல என்று ஆயிரம் தடவை அழுத்திச் சொல்வேன். அது சகல புண்ணியங்களிலும் மேலானது. சிநேகிப்பது, வீரியமாய், தெய்வீகமாய் வாழ்வதாகும். சிநேகத்தைப் பிரித்து வைத்து, விசுவாசத்தை அதிக முக்கியமாய் எண்ணுவது பெருந்தவறு. விசுவசிப்பது வேறு, சிநேகிப்பது வேறு. ""மலைகளைப் பெயர்க்கத்தக்க எவ்வித விசுவாசமிருந்தாலும், என்னிடத்தில் தேவசிநேகம் இல்லாவிடில், நான் ஒன்றுமில்லை'' (1கொரி. 13:2). இது மாத்திரமா, அப்போது நான் எனக்கும் என்னைச் சுற்றிலுமுள்ள ஆத்துமங்களுக்கும் ஆபத்தாயிருப்பேன்.

சிநேகிக்காமல் விசுவசிக்கக் கூடும். கோடிக்கணக்கான பேர் சுவிசேஷப் பிரமாணத்தை உண்மையென்று அங்கீகரிக்கிறார்கள். ஆனால் அதை அநுசரிக்கிறதில்லை. அதன்படி நடப்பதில்லை. ஏனெனில் அவர்கள் சிநேகிப்பதில்லை. விசுவாசமின்றி சிநேகிக்க முடியாது. ஆனால், சிநேகம் விசுவாசத்தை ஊக்கப்படுத்துகிறது. நமது விசுவாசத்தின் போதக அஸ்திரவாரத்தைக் கனமாய் எண்ண வேண்டும். நமது சிநேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். சிநேகத்தின் வழியாய் விசுவசிப்பதும், விசுவசிப்பதைச் சிநேகிப் பதுமே நமது போதகமாயிருக்க வேண்டும். அநேகர் சிநேகிக்கக் கற்றுக்கொள்ளாததன் நிமித்தமே விசுவாசத்தை இழந்துபோகி றார்கள். வறட்சியுற்ற இருதயத்தின் விசுவாசம், நாம் சர்வேசுரனிடம் பறந்து போக ஒருக்காலும் உதவாது. அது வெறுப்புக்குரிய பந்தனத்தால் நம்மைக் கட்டிக் கீழே போட்டு விடும்.

கிறீஸ்தவக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு, தேவ சிநேகத் துக்குப் பதில் சிநேகம் காட்டி, நமது இருதயத்தைக் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பது அவசியம். ""மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா.'' சிநேகம் வெளிப்பட வேண்டியது உணர்ச்சியில் அல்ல. பனிக் கட்டியைப் போல் குளிர்ந்து உறைந்து போய், ஞானக்காரியங்களின் மட்டில் வெறுப்பும், சலிப்பும் இருந்தாலும் கூட, மெய்யான தேவ சிநேகம் நம்மிடம் பற்றி எரியக்கூடும். ஆதலால் சிநேகத்தைப் பற்றிப் பேசும்போது, சிநேகிக்க வேண்டுமென்ற பெரும் ஆவலோடு சேர்ந்த, அந்தரங்க, உறுதியான, வீரிய, தீர்மானமுள்ள மனதுதான் நாம் குறிப்பிடுவது. இதுதான் தேவசமூகத்தில் சிநேகிப்பது எனப்படுவது. ஆதலால் நமது தேவசிநேகத்தின் முதன்மையான அம்சம், சிநேகிப் பதற்கு மெய்யான ஆவல் இருப்பதுதான். பெரும் ஆவல் பெரும் சிநேகம் எனப்படும். திவ்விய இஸ்பிரீத்துவானவரின் கொடை களான மேன்மையான ஆசை, நோக்கம், எண்ணமே சிநேகத்திற்கு உணவும், உயிருமாகும். இந்த ஆசை, பக்தியுள்ள ஆத்துமங்களில், பரிசுத்ததனத்திற்குப் பெருந்தடைகளாயிருக்கிற "வழக்கம், மிதம்' என்னும் இரு குறைகளை அழித்து விடும்.

மேலான ஆசைகள் என்னும் இறக்கைகளைக் கொண்டு உயரப் பறக்கிற ஆத்தும விஷயத்தில் சாதாரணமானது என்று சொல்லக்கூடியது ஒன்றும் இராது. அதன் வாசஸ்தலம் உன்னதங் களில் இருக்கிறது; ஆத்துமமாகிய அந்தக் கழுகு, தெய்வீகமானவரை எப்போதும் தொடர்ந்து பறந்து கொண்டிருக்கும், எப்போதும் உயர உயர ஏறிச் செல்லும்படி ஆவலாயிருக்கும்.

சீட்டுகளால் கட்டின வீட்டைப் போல் நிலையற்ற பரிசுத்த தனம் விளங்கும் ஆத்துமங்களைப் பற்றி நாம் இங்கு பேசுவதில்லை. அவர்கள் கனவு கண்டது போல் நிலையற்றுத் திரிகிறவர்கள்.

நம் ஆசை உறுதியும், தாராளமும் உள்ளதாயிருக்க வேண்டும். எப்போதும் மாறுபட்டுக் கொண்டிருக்கிற மன அலைச்சலாயிருக்கக் கூடாது. சிறிய சங்கடத்தால் சிதைந்து போகக் கூடியதாயிருக்கக் கூடாது. நம்மை முழுவதும் பரித்தியாகம் பண்ணி, அவமானமும், அவமதிப்பும் ஏற்றுக்கொள்ளத் தக்க மனதாயிருக்க வேண்டும்.

அர்ச். பாஸ்ஸி மரிய மதலேனம்மாள் அர்ச். ஞானப் பிரகாசியாரைக் குறித்து, ""அவர் அத்தகைய ஞான மலைக்கு ஏறிச் சென்றது எப்படி, எவ்வளவு காலத்தில், என்ன முயற்சிகளால்?'' என்று ஆண்டவரைக் கேட்டாள். அப்போது சேசுநாதர், ""மேலான ஆசைகள் என்னும் இறக்கைகளால் ஏறிச் சென்றார்'' என்று பதிலுரைத்தார்.

அர்ச். குழந்தை தெரேசம்மாளின் வாழ்வின் இரகசியமும் இதுவே. சிநேகிக்க வேண்டுமென்று அவளுக்கு இருந்த ஆசை வெகு மகத்தானது. மோட்சத்தில் அவள் மோட்சவாசிகள் அநேகரை விட அதிக உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும். ஏனெனில் அவள் அதிக மாக நேசித்தாள். சேசுநாதரை மற்றவர்கள் நேசித்ததை விட அதிக மாக நேசிக்க ஆசித்தாள். சர்வேசுரன் மனித இருதயத்தை அறிபவர். ஆதலால், அப்படித்தான் கண்டிப்பாக இருக்க வேண்டும். நமது சக்திக்கு மேற்பட்ட காரியங்கள் அநேகமுண்டு. ஆனால் உள்ளரங்க வேலை, அதாவது, சிநேகிக்க வேண்டுமென்ற ஆசை எப்போதும் எல்லாருக்கும் சாத்தியப்படும். சிநேகிக்க வேண்டுமென்ற ஆவல் பெரிய காரியம். அதுவே அநேக சமயங்களில் சகலமுமாக இருக் கிறது என்று சொல்லலாம்.

சகலத்திற்கும் மேலாக சேசுநாதர் கேட்பது, சிநேகிக்க வேண்டுமென்ற மனது. ஆனால் அது உறுதியும், தாராளமும் உள்ளதா யிருக்க வேண்டும். அவருக்கு உன் இருதயம் முழுவதையும் கொடு. அநேகர் செய்வதுபோல், கழிவுகளைக் கொடுக்காதே. அர்ச். இராயப்பர் துவக்கத்தில் எல்லாவற்றையும் கொடுக்கவில்லை. ""நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோம்'' (லூக்.18:28) என்று அவர் சொன்னார். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. ஏனெனில், அதிகச் சிறந்த பாகத்தைத் தமக்கென்று வைத்துக் கொண்டு, மீன் பிடிக்கிற படகையும், வலைகளையும்தான் கொடுத் தார். சேசுநாதர் சில ஆத்துமங்களைப் பார்த்து, ""இது அது எனக்கு வேண்டாம். இத்தகைய கொடைகளால் உங்களையே ஏமாற்றிக் கொண்டு, கூடுமானால் என்னையும் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். அவைகளை வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் அவற்றிற்குப் பதிலாக உங்கள் இருதயங்களை எனக்குக் கொடுங்கள். இதற்காகவே என் இருதயத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். நான் உங்களை நேசித்ததுபோல் என்னை நேசியுங்கள். நான் என்னை உங்களுக்குக் கொடுப்பதுபோல், உங்களை எனக்குக் கொடுங்கள். சிநேகிப்பது என்றால் தன்னைக் கொடுப்பது மாத்திரமல்ல, தனக்கென்று அற்பமும் வைத்துக்கொள்ளாமல் முழுவதும் கொடுப்பதாகும்'' என்று சொல்லக்கூடும்.

உங்கள் இருதயங்களைப் பங்கிட்டுக்கொண்டிருக்கிற பின்னல் வலைபோன்ற சின்னஞ்சிறிய பற்றுதல்கள், விருப்பங்களை அறவே அகற்றிவிடுங்கள். அவை வெகு வெகு குறைவு என்றாலும், சேசுநாதர் அபிமானமுள்ள தேவன். கணவன் ஒருவன் இவ்வுரிமை பாராட்டக்கூடுமாயிருக்கையில், நமது ஆண்டவருக்கு இந்த உரிமை இல்லை என்று சொல்ல முடியுமா?

அவர் நம்மை அளவின்றி நேசித்தார் என்று சிலுவையும், நற்கருணைப் பேழையும் தெளிவாய் எண்பிக்கின்றன.

சிநேகப் பைத்தியம் என்று சொல்லக் கூடிய பரம நற்கருணை யில் அவர் எவ்வாறு தம்மையே கையளித்திருக்கிறார் என்று யோசித் துப் பார். அதில் அவர் எக்காலத்துக்கும் தமது பொக்கிஷங்கள் யாவற்றோடும் நமக்கு முழுவதும் சொந்தமாயிருக்கிறார். நமது ஆண்டவர் நம்மைப் போலக் கணக்குப் பார்த்து அளந்து கொண் டிருந்திருப்பாராகில், அவர் அவ்வளவு சிநேகித்திருக்க மாட்டார். ஆனால் சேசுநாதர் தமக்கு நேரிடும் நன்றிகெட்டதனத்தால் காயப் பட்டிருக்கையில், தன்னை முழுவதும் பரித்தியாகம் பண்ணிச் சிநேகிக்கிற ஒரேயொரு ஆத்துமத்தைக் காண்பாரானால், பல நூற்றாண்டுகளாகத் தமக்கு நேர்ந்த சதிமானம் பகையையெல்லாம் அக்கணமே மறந்துவிடுகிறார் என்று சொல்லலாம். அவர் அர்ச். ஜெர்த்ரூத்தம்மாளை நோக்கி, ""நீ என்னை உட்கொள்ளும்போது, மெய்யாகவே நீ எனது மோட்சமாயிருக்கிறாய்'' என்று சொன்னது போல் நம்மைப் பார்த்தும், நாம் நற்கருணை வாங்கும்போதெல்லாம் சொல்லக்கூடுமாயிருந்தால், எத்தகைய பாக்கியம் இது!

யார் அதிகமாய்க் கொடுப்பார்கள் என்று பார்ப்போம் என்ற விதத்தில் சேசுநாதருக்கும், உனக்கும் போட்டி போட்டுப் பார்! அவரே எளிதில் வெற்றி பெறுவார் என்பதில் என்ன சந்தேகம்! மட்டற்ற திரவியங்கள் அவரிடம் இருப்பதால், மட்டற்றதை அவர் கொடுக்கக்கூடும். ஆனால் தனக்குள்ளது எல்லாம், அது ஒரே ஒரு காசாயிருந்தாலும் கொடுத்து விடுபவன் முழுமையும் கொடுக்கிறான் என்று நினைத்துக்கொள். மட்டற்றதைக் கொடுக்க உன்னால் இயலாது. ஆனால் உனக்கென்று சிறிதும் வைத்துக் கொள்ளாமல், உனக் குள்ளதையெல்லாம் கொடுத்து விடும்போது, சிறிய புஷ்பத்தைப் போல் நீயும் சேசுநாரைப் பார்த்து, ""ஆண்டவரே, நாம் இருவரும் சரிக்குச் சரி! நீர் மட்டற்றதைக் கொடுத்தீர், நான் என்னை முழுவதும் கொடுத்து விட்டேன். இதற்கு அதிகமாய் நினைக்கவும், ஆசிக்கவும், கையளிக்கவும் என்னால் இயலாது'' என்று சொல்லக் கூடும்.

மற்ற காலங்களை விட இந்த தியானக் காலத்தில் அவர் அதிக மாய் அடிக்கடி உன் கதவைத் தட்டுகிறார் என்பது நிச்சயம். அவர் அதிகம் எதிர்பார்க்கிறார்; குறைந்தபட்சம் உன் தாராள குணத்தை எப்படியாவது காட்டுவாய் என்று எதிர்பார்க்கிறார். அவரது அப்போஸ் தலரான நீங்கள் அவரை ஏமாற வைக்காதீர்கள். உங்களைப் பூரண மாய்க் கைக்கொள்வதற்காக, அவசியமானால் இன்னும் பல வருடங்கள் காத்திருப்பார்; நீங்கள், மற்றவர்களை வசப்படுத்த வேண்டியவர்கள். பதினோராவது மணி வேளையில் (அதாவது, உங்கள் வாழ்வின் இறுதி வேளையில்) மாத்திரம் நீங்கள் அவருக்குக் கதவைத் திறந்தாலும் கூட, அவர் தமது பரலோக அரண்மனை யிலுள்ளவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து, அவர் உங்கள் ஆத்துமத் துக்குள் வெற்றிவீரராய்ப் பிரவேசித்ததைப் பற்றி சந்தோஷங் கொண்டாடுவார். அவர் இரண்டு தடவை உங்களை அழைக்க மாட்டார் என்பது நிச்சயம்தான். அவருடைய இருதயம் உங்களைப் புயல்போலத் தாக்குகிறது. நீங்கள் சிநேகத்தால் அர்ச்சியசிஷ்டவர் களாக வேண்டியது உங்கள் கடமையென்று உணர்கிறீர்கள்.

"அர்ச்சியசிஷ்டதனம் சிறந்த அறிவிலல்ல, ஆழ்ந்த தியானத்தில் அல்ல, உன்னத சிந்தைகளிலல்ல, அதிகமாய் நேசிப்பது எப்படி என்று கண்டுணர்வதில் அடங்கியிருக்கிறது'' என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் சொல்கிறார். ஆதலால் சிநேகம் பொங்கி வழியும் பாத்திரமே அர்ச்சியசிஷ்டவன். இரட்சணியம் அடைவதிலும் சிறிது அதிகம் விரும்புகிற பக்தியுள்ள கிறீஸ்தவர்களைக் குறித்து இவ்விதம் சொல் வது உண்மையானால், சுயநேசம் என்னும் பனிக்கட்டியை உடைத்து உருக்கி, உலகத்தைச் சிநேக அக்கினியால் கொளுத்தி விட வேண்டிய அப்போஸ்தலர்களான உங்களைப் பற்றி என்ன சொல்வோம்? சிநேகிப் பவர்கள் மிகக் குறைவாயிருப்பதால்தான் அப்போஸ்தலர்களின் தொகை குறைவாயிருக்கிறது. நற்செயல்கள் செய்பவர்கள் அநேகர் உண்டு, நல்ல மனதுடன் உழைப்பவர்கள் அநேகர், கத்தோலிக்க ஊழியம் என்ற இயந்திரத்தில் பல சக்கரங்கள் உண்டு. ஆனால் அப்போஸ்தலர்கள் மிகக் குறைவு. அதாவது சிநேகத்தால் பற்றியெரியும் இருதயங்கள் மிகக் குறைவு. பேசுவதும், சுறுசுறுப்பாய் வேலை செய்வதும் நல்லதுதான்; ஆனால் அது வேறு, பிரான்சிஸ் சவேரியாரைப் போலவும், மார்கரீத் மரியம்மாளைப் போலவும், சிறியபுஷ்பத்தைப் போலவும் பரிசுத்த பற்றுதல் நிறைந்த ஆத்துமம் உள்ளவர்களாயிருப்பது வேறு.

சேசுவின் திரு இருதய அரசாட்சியின் யுகமான இந்தக் காலத்தில், நீங்களும் நானும், நமது அழைத்தலின் காரணமாக, ஒரு கோடி முனையிலிருந்து மறு கோடி முனை மட்டும் சிநேக அரசரை வெற்றிக் கொடியுடன் தூக்கிச் செல்லும் அக்கினி இரதங்களா யிருக்க வேண்டும்.

அவர் உங்களைச் சிநேகத்தால் அர்ச்சிக்கும்படியாகக் கெஞ்சி மன்றாடுங்கள். சர்வேசுரன் மட்டிலுள்ள உருக்க நேசம், உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பை விட இவ்வுலகத்திலேயே ஆத்துமத்தை நன்றாய்ப் பரிசுத்தப்படுத்தும் என்று சிறியபுஷ்பம் சொல்லி வந்தாள். நமது குற்றங்குறைகள் எத்தனை தடவை மீண்டும் மீண்டும் நேர்ந் தாலும், அவற்றின்மட்டில் மிதமிஞ்சி யோசனை செய்யவும், அதைரியப் படவும், சஞ்சலப்படவும் கூடாது. ஒரு நாளில், அல்லது ஒரு வருடத் தில் அர்ச்சியசிஷ்டவர்களாகி விடலாம் என்று எண்ணலாகாது. சிநேகத்தில் ஊன்றிய பரிசுத்ததனம் சிறிது சிறிதாய் உன்னை முழுவதும் ஊடுருவிச் சென்று, உன்னிடம் வளர்ந்து விருத்தியடையும் என்பது நிச்சயம். வரப்பிரசாதம் சுபாவத்தைப் போன்றதன்று. அது திடீரெனத் தாவிக் குதித்துச் செல்லாது, படிப்படியாய் வெளிக்குத் தோன்றாத விதமாக மேல்நோக்கிப் போகும். வரப்பிரசாதமும் உள்ளடக்கமும் பொருந்திய இக்காலத்தைச் சரிவர உபயோகப் படுத்திக்கொள்ளுங்கள். பிரமாணிக்கமாயிருங்கள், தாராளமா யிருங்கள். நமது ஆண்டவரின் நேசம் உங்கள் ஆத்துமத்தில் வெள்ளமாய்ப் பாய்ந்து, உங்கள் பலவீனமுள்ள சுபாவத்தைத் தெய்வீக உறுதியுள்ள ஒரு புதிய வாழ்வின் அலைகளுக்குள் அமிழ்த்தி விடும். சேசுவின் திரு இருதயம் எனும் கரையற்ற சிநேகக் கடலில் மூழ்கிப் போங்கள். உங்கள் அறிவின் கண்களை மற்றதெல்லாவற் றிற்கும் மறைத்து விட்டு, அவருக்கு மாத்திரம் திறந்து வைத்து, ""ஆண்டவரே, உம்மை மாத்திரம்... உமது இருதயமும் உமது மகிமையும்... உமக்குக் கிரீடமாகும் ஆத்துமங்களின்மட்டில் எனக்கு ஆவலை எழுப்பியருளும். உம்மை மாத்திரம் நேசிக்கவும், நேசிக்கச் செய்யவும் வேண்டும். இவ்வுலகத்தில் இதற்கு வேறொரு சன்மான மும் வேண்டாம். உம்மை அதிகமாய் நேசிக்கவும், உம்மை மற்ற வர்கள் நேசிக்கும்படி செய்ய எனக்கு அதிக சத்துவம் உண்டாகவும், உதவி புரிந்தால் போதும். ஓ! என் சேசுவே, உமது இருதயத்தைச் சுதந்தரித்து, அருளப்பர், மார்கரீத் மரியம்மாள், சிறிய புஷ்பம் இவர் களுக்கு அடுத்து என் பெயர் எழுதப் பெற்று, உம்மை மோட்சத்தில் நேசித்து, அங்கிருந்து உமது நேசத்தின் அக்கினியைப் பரப்புவதே என் நித்திய சன்மானமாகக் கடவது!'' என்று சொல்லுங்கள்.

பிரியமான அப்போஸ்தலர்களே, சிநேக அம்பு உண்டு பண்ணியிருக்கிற காயத்தின் துவாரத்திற்குள் நுழைந்து உருக்கப் பற்றுதலுடன் சேசுவின் திரு இருதய வெற்றியைப் பாடுங்கள்.

சிநேகத்துக்குச் சிநேகம்!
பைத்தியத்துக்குப் பைத்தியம்!
இருதயத்துக்கு இருதயம்!