கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 15

நமது ஆண்டவராகிய கிறீஸ்துநாதருடைய உத்தானத்தின் பேரிலும், நம்முடைய உத்தானத்தின் பேரிலும்.

1. அன்றியும் சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு அதிலே நிலைத்திருக்கிறீர்கள். (கலாத். 1:11.)

2. நான் உங்களுக்குப் பிரசங்கித்த பிரகாரம் நீங்கள் அதைக் கைக் கொண்டு நடந்தால், அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள். இல்லாதிருந்தால், நீங்கள் விசுவசித்தது வீணாயிருக்கும்.

3. நான் அறியப்பெற்றதும் உங்களுக்கு விசேஷமாய்ப் போதித்ததும் ஏதென்றால், கிறீஸ்துநாதர் வேதவாக்கி யத்தின்படி நம்முடைய பாவங்களுக் காக மரித்து, (இசை. 53:5.)

4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருளி, (யோனா. 2:1)

5. முந்த இராயப்பருக்கும் பின்பு பதினொருபேருக்கும் தரிசனையானார். (அரு. 20:19; மாற். 16:14; லூக். 24:34-43.)

6. அதற்குப்பின் அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரர்களுக்கு ஒரே வேளையில் தரிசனையானார். அவர்களில் அநேகர் இந்நாள் வரையில் உயிரோடிருக்கிறார்கள். சிலரோ சயனித்திருக்கிறார்கள்.

7. பின்பு யாகப்பருக்கும், அதன் பிறகு அப்போஸ்தலரெல்லோருக்கும் தரிசனையானார். (லூக். 24:50.)

8. மேலும் எல்லோருக்கும் கடைசியிலே அகாலப்பிறவியான எனக்கும் தரிசனையானார். (1 கொரி. 9:1.)

9. நான் அப்போஸ்தலர்களெல்லோ ரிலும் மிகவுஞ் சிறியவன். அப்போஸ்த லன் என்று அழைக்கப்படுகிறதற்கு நான் பாத்திரவானல்ல. ஏனெனில் சர்வேசுர னுடைய திருச்சபையை நான் துன்பப் படுத்தினவன். (அப். 9:3; எபே. 3:8.)

10. ஆகிலும் நானிருக்கும் இந்த இருப்பில் தேவ வரப்பிரசாதத்தால் இருக்கிறேன். அவருடைய வரப்பிரசா தமும் என்னிடத்தில் வீணாயிருந்த தில்லை. அவர்கள் எல்லோரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசைப்பட்டிருக்கி றேன். ஆனாலும் நானல்ல; என்னோடு சர்வேசுரனுடைய வரப்பிரசாதமே அப்படிச் செய்தது. (2 கொரி. 6:1; 11:5.)

11. ஆகையால் நானாகிலும் சரி, அவர்களாகிலும் சரி, இப்படியே பிரசங் கித்து வருகிறோம்; நீங்களும் அப்படி யே விசுவசித்திருக்கிறீர்கள்.

12. கிறீஸ்துநாதர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தருளினார் என்று பிரசங் கிக்கப்பட்டால், மரித்தோருடைய உத்தானம் இல்லையென்று உங்களில் சிலர் சொல்லுகிறதெப்படி?

13. மரித்தோருடைய உத்தானமில்லையென்றால், கிறீஸ்துநாதரும் உயிர்த் தெழுந்திருக்கவில்லையே.

14. கிறீஸ்துநாதர் உயிர்த்தெழுந்திருக்கவில்லை என்றால், எங்கள் போதகமும் வீண், உங்கள் விசுவாசமும் வீண்.

15. அன்றியும் மரித்தோருக்கு உத்தானமில்லாவிட்டால், சர்வேசுரன் உயிரோடே எழுப்பாத கிறீஸ்துநாதரை அவர் எழுப்பினாரென்று நாங்கள் சர்வேசுரனுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறபடியால், அவருடைய பொய்ச்சாட்சிகளாகக் காணப்படு வோமே. (அப். 1:22; 5:32.)

16. ஏனெனில் மரித்தோர் உயிர்க்கிறதில்லையென்றால், கிறிஸ்துநாதரும் உயிர்த்தெழுந்திருக்கவில்லை.

17. கிறீஸ்துநாதர் எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கின்றது. அப்படியானால் நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் கிடக்கிறீர்கள். (1 கொரி. 15:14.) 

18. கிறீஸ்துநாதரிடமாய்ச் சயனித்தவர்களும் சிதைந்துபோனார்கள்.

19. இம்மைக்காக மாத்திரம் நாம் கிறீஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர் களாயிருந்தால், எல்லா மனிதர்களி லும் நாம் அதிகப் பரிதாபத்துக்குரிய வர்களாயிருப்போம்.

20. இப்பொழுதோ, மரண நித்திரை யடைந்தவர்களுக்குள்ளே கிறீஸ்துநா தர் முந்தின பலனாக மரித்தோரிடத் திலிருந்து உயிர்த்தெழுந்தருளியிருக் கிறார். (கொலோ. 1:18.)

21. ஏனெனில் மனிதனாலே மரணமுண்டானபடியால், மனிதனாலேயே மரித்தோருடைய உத்தானமும் உண்டாயிருக்கிறது. (ஆதி. 3:17; உரோ. 5:12-18 காட்சி. 1:5.)

22. அன்றியும் ஆதாமில் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறீஸ்துநாதரில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

23. ஆகிலும் அவனவன் தன் தன் வரிசைப்படிக்கு உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறீஸ்துநாதர். பின்பு அவருடையவர்களாய் அவருடைய வருகையை விசுவசித்தவர்கள் (உயிர்ப் பிக்கப்படுவார்கள்). (1 தெச. 4:15; காட்சி 20:5.)

* 23. தமது ஞான சரீரமாகிய திருச்சபைக்குத் தலைவராகிய கிறீஸ்துநாதர் முந்தினவராய் மரணத்தை ஜெயித்துக் கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளித் தம்முடைய உயிர்த்தலி னால் தம்முடைய ஞான அவயவங்களாகிற சகல கிறீஸ்தவர்களுக்கும் ஜீவிய உத்தானத்தைப் பெறுவித்தார். அவர் உயிர்த்தெழுந்தருளின அன்றைக்கே அர்ச்சியசிஷ்டவர்களுடைய உத்தானமும் துவக்கினதாக மத். 27-ம் அதி. 53-ம் வசனத்தில் வாசித்துவருகிறோம். இதிலே அவருடையவர்களாய் அவருடைய வருகையை விசுவசித்தவர்கள் என்று சொல்லும்போது, அவருடைய வருகைக்கு முந்தி அவர் வருவாரென்று விசுவசித்தவர்களும், அவர் வருகைக் குப்பின் அவர் வந்தாரென்று விசுவசித்தவர்களுமாகிய இருதிறத்தாரும் அடங்கியிருக் கிறார்கள். ஆதலால் அவருடைய வருகையை விசுவசியாதவர்களும், அவர்களுக்குச் சொந்த மற்றவர்களுமாகிய அஞ்ஞானிகள் உயிர்க்கமாட்டார்கள் என்பதோ? அல்லவே. எல்லோரும் உயிர்ப்பார்களென்று இந்த அதிகாரத்தின் 51-ம் வசனத்தில் அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார். ஆனால் சேசுநாதருக்கு சொந்தமில்லாதவர்கள் நித்திய ஜீவியத்துக்கு உயிர்க்காமல் நித்திய நரகாக்கினைக்கு உயிர்ப்பார்கள் என்கிறதினாலே அது மெய்யான உத்தான மல்லவென்று அறியவும்.

24. அதன்பின், அவர் எல்லாத் துரைத்தனத்தையும், அதிகாரத்தையும், வல்லமையையும் ஒழித்து, தமது இராச்சியத்தைப் பிதாவாகிய சர்வேசுரன் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, முடிவுண்டாகும்.

* 24. உலக முடிவிலே மரித்தோருடைய உத்தானமும் நடுத்தீர்வையும் நடந்த பிறகு சேசுநாதர் தமது எல்லாச் சத்துருக்கள்மீதும் வெற்றியடைந்த ஜெயசீலராய்த் தம்முடைய திருச்சபையோடே ஒட்டோலகமாய்ப் பரலோகத்துக்கு ஆரோகணமாகித் தம்முடைய திருச்சபையைத் தம்முடைய பிதாவின் திருப்பாதத்திலே ஒப்புவிக்கும்போது, அவர் பூவுலகத்திலே தம்முடைய திருச்சபையின்மேல் செய்துவந்த இராச்சியபாரம் முடிவு அடைந்து லூக். 1-ம் அதி. 33-ம் வசனத்தில் சொல்லியபடி மோட்சத்தில் என்றென்றைக்கும் முடியாத அரசாட்சிசெய்யத் துவக்குவார்.

25. ஆயினும் அவர் எல்லாச் சத்துருக் களையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தும்வரையில் அவர் இராச் சியபாரம் பண்ணவேண்டியது. (சங். 109:1, 2; எபி. 1:13; 10:13.)

* 25. இங்கே சொல்லப்பட்ட இராச்சியபாரம் இவ்வுலகத்திலே சேசுநாதர் தம்முடைய திருச்சபையை ஆண்டுவருகிற இராச்சியபாரமாம். சேசுநாதர் தம்முடைய சிலுவையினாலேயும் மரணத்தினாலேயும் பாவம், பசாசு, உலகம், மரணமென்கிற தம்முடைய சத்துருக்களையெல்லாம் வென்று அவைகளிடத்தினின்று ஜெயசீலராய்க் கல்லறையைவிட்டு உயிர்த்தெழுந்தருளினாரென்று கொலோசியர் 2-ம் அதி. 14, 15-ம் வசனங்களில் அர்ச். சின்னப்பர் சொல்லியிருக்கையிலே, அவர் அந்தச் சத்துருக்களைத் தம்முடைய காலின்கீழே போடும்வரைக்கும் இவ்வுலகத்திலே இராச்சியபாரம் பண்ணவேண்டுமென்று சொல்லுவானேன்? ஏனெனில் அந்தச் சத்துருக்கள் இனித் தம்மைத் துன்பப்படுத்தாதபடிக்கு அவர்களைத் தம்முடைய மரணத்தினால் மெய்யாகவே ஜெயித்து அடக்கினார். ஆனால் தமது ஞான சரீரமாகிய திருச்சபையை உலகம் முடியும் வரைக்கும் துன்பப்படுத்த இன்னமும் அவைகளுக்குத் திறமையிருக்கிறது. தம்முடைய திருச்சபையை முழுவதும் இவ்வுலகத்திலேநின்று பரலோகத்துக்கு அழைத்துக் கொள்ளும்போதுதான் அதைத் துன்பப்படுத்தின சத்துருக்களின்பேரில் முழுவதும் வெற்றியடைவாரென்றறிக.

26. நிர்மூலமாக்கப்படும் கடைசிச்சத்துரு மரணமாம். ஏனெனில் (சர்வேசுரன்) சகலத்தையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார். (சங். 8:7, 8; எபி. 2:8; 2 தீமோ. 1:10.)

27. ஆகிலும் அவருக்குச் சகலமுங் கீழ்ப்படுத்தப்பட்டதென்று (வேத வாக்கியம்) சொல்லும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் நீங்கலாக, என்பதற்குச் சந்தேகமில்லை.

28. சகலமும் அவருக்குக் கீழ்ப் பட்டிருக்கும்போது, சர்வேசுரனே சகலத்திலும் சகலமுமாயிருக்கும்படிக்குச் சுதனும் தமக்கு எல்லாவற்றையுங் கீழ்ப்படுத்தினவராகிய அவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

29. அன்றியும் மரித்தோர் எவ்விதத்திலும் உயிர்ப்பதில்லையென்றால், மரித்தோருக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்?

30. நாங்களும் ஏன் எந்த வேளை யிலும் ஆபத்திலகப்படத் திரிகிறோம்?

31. சகோதரரே, நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரிடத்தில் உங்களால் எனக்கு உண்டாகிற மகிமையை முன்னிட்டு நான் தினமும் உயிரை விடுகிறேன்.

32. மரித்தோர் உயிர்க்காவிட்டால் எபேசு நகரத்திலே நான் (மனுஷ நோக் கப்படி) மிருகங்களோடே போராடின தற்குப் பிரயோசனமென்ன? நாளைக் குச் சாவோமென்கிறதால், இன்றைக்குச் சாப்பிடுவோம், குடிப்போமே. (ஞானா. 2:6 ; இசை. 22:13; 46:12; 2 கொரி. 1:8.)

* 32. இசையாஸ் 22-ம் அதி. 13-ம் வசனத்தில்: நாளைக்குச் சாவோம். ஆகையால் இன்று புசிப்போம், குடிப்போம் என்று மறுவுலக ஜீவியத்தை விசுவசியாத பாவிகள் சொல்லும் வார்த்தைகளை அர்ச்.சின்னப்பர் இங்கே வைத்ததின் கருத்தேதெனில்: மரித்தோ ருடைய உத்தானமில்லாதேபோனால் மறு உயிருமில்லை. மனுஷன் சாகிறபோது எல்லாம் முடிந்துபோகிறது. ஆகையால் மறுலோகத்தைப்பற்றி ஏன் கலைப்படவேண்டும்! சாவு வரும்போது வரும். அதுவரையிலும் உண்டு குடித்துச் சந்தோஷமாயிருப்போமாக என்று அவிசுவாசிகள் சொல்லுவதுபோல நாமுஞ் சொல்லலாமே. ஆனால் இது ஒவ்வாதென்று காண்பிக்கிறார்.

33. மோசம்போகாதேயுங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கின்றன.

34. நீதிமான்களே, பாவஞ்செய்யாமல் விழிப்புள்ளவர்களாயிருங்கள். சிலர் சர்வேசுரனைப்பற்றிய அறிவில்லாதிருக்கிறார்களே, இதை உங்களுக்கு வெட்கமுண்டாகச் சொல்லுகிறேன்.

* 34. உங்களில் சிலர் சர்வேசுரனை அறியாதிருக்கிறார்கள் என்பதற்கு அர்த்தமேதெனில், மண்ணாய்ப்போன சரீரம் மறுபடி எப்படி உயிர்க்கக்கூடுமென்று அந்த விசுவாசிகளுக்குள்ளே சிலர் சந்தேகப்பட்டுக்கொண்டிருந்தபடியால் அவர்கள் சர்வேசுரனுடைய அளவில்லாத வல்லமையைச் சரியாய் அறியாதிருந்தார்கள். சர்வேசுரனுடைய சர்வ வல்லமையைச் சரியாய் அறியாதிருக்கிறது சர்வேசுரனையே அறியாதிருக்கிறதற்கு ஒத்ததாகும்.

35. ஆகிலும் மரித்தோர் எப்படி உயிர்ப்பார்கள்? எவ்வித சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்லு வானாக்கும்;

36. மதியீனனே, நீ விதைக்கிற விதை முந்திச் செத்தாலொழிய உயிர் அடையமாட்டாதே. (அரு. 12:24.)

37. நீ விதையை விதைக்கிறபோது அதனின்று உண்டாகும் மேனியை விதைக்கிறதில்லையே. அப்படியே கோதுமை அல்லது மற்றெந்தத் தானியத்தின் வெறும் வித்தையல்லோ விதைக்கிறாய்.

38. சர்வேசுரன் தமது இஷ்டப்படிக்கு அதுக்கு ஒரு மேனியைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வித்துக்கும் அதற்குரிய மேனி யைக் கொடுக்கிறார். (ஆதி. 1:11.)

39. மாம்சமெல்லாம் ஒரே மாம்சமல்லவே. மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களின் மாம்சம் வேறே; பறவைகளின் மாம்சம் வேறே; மச்சங்களின் மாம்சம் வேறே.

40. அப்படியே வானத்துக்குரிய சடலங்களுமுண்டு, பூமிக்குரிய சடலங்களுமுண்டு. ஆகிலும் வானத்துக் குரியவைகளின் மகிமை வேறே, பூமியைச் சேர்ந்தவர்களின் மகிமை வேறே.

41. சூரியனுடைய பிரகாசம் வேறே, சந்திரனுடைய பிரகாசம் வேறே, நட்சத்திரங்களினுடைய பிரகாசம் வேறே. பிரகாச விஷயத்தில் நட்சத் திரத்துக்கு நட்சத்திரம் வித்தியாசமா யிருக்கின்றது.

42. மரித்தோருடைய உத்தானமும் அத்தன்மையாகவேயிருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படுகிறது அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.

43. ஈனமுள்ளதாய் விதைக்கப்படுகிறது மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பெலனற்றதாய் விதைக்கப்படுகிறது பெலனுள்ளதாய் எழுந்திருக்கும். (பிலிப். 3:20.)

44. ஸ்தூல சரீரமாய் விதைக்கப்படுகிறது. சூட்சம சரீரமாய் எழுந்திருக்கும். ஸ்தூல சரீரம் உண்டானால், சூட்சம சரீரமும் உண்டு.

45. ஏனெனில் எழுதப்பட்டபடியே முந்தின மனிதனான ஆதாம் ஜீவாத்தும மாக உண்டாக்கப்பட்டான். பிந்தின ஆதாமோ உயிர்ப்பிக்கிற ஞான ஆத்தும மாக உண்டாக்கப்பட்டார். (ஆதி. 2:7; 2 கொரி. 3:6; அரு. 5:21; 6:39, 54, 57, 63.)

46. ஆனாலும் ஞான ஆத்துமத்துக்குரிய (சரீரம் முந்தினதல்ல. ஜீவ ஆத்துமத்துக்குரியதே முந்தினது. ஞான ஆத்துமத்துக்குரியது பிந்தினது.

47. முந்தின மனிதன் மண்ணினின்று உண்டாக்கப்பட்டதால், அவன் மண்ணுக்குரியவன். இரண்டாம் மனிதன் மோட்சத்தினின்று வந்தவ ராகையால் அவர் மோட்சத்துக் குரியவர். (ஆதி. 2:7.)

48. மண்ணுக்குரியவன் எப்படியோ, மண்ணுக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். மோட்சத்துக்குரியவர் எப்படியோ, மோட்சத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான்.

49. ஆகையால் நாம் மண்ணுக்குரியவனுடைய சாயலைத் தரித்துக் கொண்டதுபோல, மோட்சத்துக்குரியவருடைய சாயலையுந் தரித்துக் கொள்ளுவோமாக. (ஆதி. 5:3.)

50. சகோதரரே, நான் உங்களுக்குச் சொல்லுகிறதேதெனில்: மாம்ச மும், இரத்தமும் சர்வேசுரனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிக்கமாட் டாது. அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிக்கவுமாட்டாது. (அரு. 3:3-6.)

51. இதோ, உங்களுக்கு ஒரு இரக சியத்தை அறிவிக்கிறேன். எல்லோரும் உயிர்ப்போமென்பது உள்ளதுதான். ஆகிலும் எல்லோருக்குள்ளும் மாற்ற முண்டாகமாட்டாது. (1 தெச. 4:14-17.)

52. ஒரு க்ஷணப்பொழுதில், ஒரு கண்சிமிட்டில், கடைசி எக்காளந் தொனிக்கவே (ஆம், எக்காளந் தொனிக் கும்) மரித்தவர்கள் அட்சயமாய் உயிர்ப்பார்கள், நாமும் மறுரூபமாவோம். (சக். 9:14; மத். 24:31; 1 தெச. 4:16.)

53. அதெப்படியென்றால் அழிவுக்குரிய இது, அழியாமையைத் தரித்துக்கொள்ளவும் சாவுக்குரிய இது, சாகாமையைத் தரித்துக்கொள்ளவும் வேண்டியது. (2 கொரி. 5:4.)

* 52-53. உலகமுண்டான நாள்முதல் உலக முடிவுபரியந்தம் உலகத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் நடுத்தீர்க்கிற நாளிலே ஆத்தும சரீரத்தோடே எழுப்பப்படுவார்கள். ஆனால் எல்லோரும் அலங்காரமான மறுரூபத்தை அடைந்து கொள்ளமாட்டார்கள். சேசுநாதரை விசுவசித்து அவருடைய ஞான சரீரமாகிய திருச்சபையிற் சேர்ந்து, சாவான பாவமில்லாமல் இஷ்டப்பிரசாதத்தோடே மரித்து, மோட்சபாக்கியத்துக்குப் பாத்திரவான்களாயிருக்கிறவர்கள்மாத்திரம் மோட்சத்துக்குரிய மகிமையான சரீரத்தோடு உயிர்ப்பார்கள். அஞ்ஞானிகளும் சாவான பாவத்தோடே செத்த கிறீஸ்தவர்களும் பசாசுகளுக்குச் சொந்தமானபடியினாலே அவர்கள் பசாசுகளுக் கொப்பாய் அருவருப்பும் அவலட்சணமுமான சரீரத்தோடு உயிர்ப்பார்கள் என்றறிக.

54. சாவுக்குரிய இது, சாகாமையைத் தரித்துக்கொண்ட பின்போவெனில், சாவானது ஜெயத்தால் விழுங்கப்பட்டதென்று எழுதப்பட்ட வாக்கியம் நிறைவேறும். (ஓசே. 13:14; எபி. 2:14.)

55. மரணமே, உன் வெற்றி எங்கே? மரணமே, உன் கொடுக்கு எங்கே?

56. மரணத்தின் கொடுக்கு பாவந்தான், பாவத்தின் வீறோ நியாயப் பிரமாணமாம். (உரோ. 4:15; 7:13.)

* 56. பாவத்தின் வீறு நியாயப் பிரமாணம் என்பதற்கு அர்த்தமாவது: நியாயப்பிரமாணமானது பாவத்தை விலக்குகிறபடியினாலே அதற்கு விரோதமாய்ச் செய்யப்படுகிற குற்றமானது பாவத்தின் தோஷத்தைக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றித்தான் பிரமாணம் பாவத்தின் வீறென்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார்.

57. நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு நமக்கு ஜெயந்தந்தருளின சர்வேசுரனுக்குத் தோத்திரம். (1 அரு. 5:5.)

58. ஆகையால் நமக்குப் பிரியமான சகோதரரே, ஆண்டவரிடத்தில் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாய்ப் போகிறதில்லையென்று அறிந்து, நிலைமையுள்ளவர்களாயும், அசையாதவர்களாயும், இடைவிடாமல் ஆண்டவருக்குரிய கிரியைகளை மிகுதியாய்ச் செய்பவர்களாயும் இருப்பீர்களாக.