நவம்பர் 14

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுவது தேவமாதாவுக்கும் மற்ற மோட்சவாசிகளுக்கும் பிரியமுள்ள புண்ணியமாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.

தியானம்.

நமது ஆண்டவரான சேசுக் கிறிஸ்துநாதர் சுவாமி நமக்காகப் பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு சாகிற தருணத்தில் தம்முடைய திவ்விய மாதாவை மனுஷருக்குத் தாயாராகக் கொடுத்தாரென்றும், மனுஷரை அவளுக்குப் பிள்ளைகளாகக் கட்டளையிட்டாரென்றும், யாவரும் அறிந்த பரம சத்தியமாமல்லவோ? அப்போது மரிக்கப்போகிற சர்வவல்லபமுள்ள சுவாமி தமது திவ்விய மாதாவின் இருதயத்தில் மனுஷர்பேரில் மட்டற்ற அன்பையும்  பட்சத்தையும் வைத்தாரென்கிறதற்குச் சந்தேகமில்லை.

ஆனதினாலே எக்காலமும் எந்நாடும் எச்சாதியும் வயதுமுள்ள கிறிஸ்துவர்கள் எல்லோரும் ஏகோபித்து ஒரே மனப்பட்டு , தேவ மாதா தங்களுக்குத் தாயார் என்று அவளைக் கொண்டாடிப் புகழ்ந்து வணங்கி நேசித்துக் கொண்டு வருகிறார்கள். அவளோவெனில், மனுஷரெல்லோரும் தமக்குப் பிள்ளைகள் என்று அவர்களை நேசித்து , பேணித் தாபரித்து அவர்களுக்கு எவ்வித உபகார சகாயங்களையும் பண்ணிக் கொண்டு வருகிறாள் என்பது உச்சிப் பகலிலும் தெளிந்த சத்தியமாம் . தாயானவள் தாம் பெற்ற குழந்தையை மறப்பாளோ என்ன ? இவ்வுலகத் தாய் தன் குழந்தையை மறந்து போனாலும் தேவமாதாவானவள் தமது பிள்ளைகளாகிய மனுஷரை ஒரு போதும் மறக்கவுமாட்டாள். அவர்களுக்கு நன்மை செய்யாதிருக்கவுமாட்டாள்.

எல்லா மனுஷருக்கும் தேவமாதா தாயாரென்றால் உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு விசேஷமாய் அவளே தாயாரென்று எண்ணவும் வேனும், சொல்லவும் வேணும். அதெப்படியென்றால், அந்த ஆத்துமாக்கள் சர்வேசுரனுக்கும் சேசுகிறீஸ்துநாதருக்கும் மிகவும் பிரியப்பட்டு இஷ்டப்பட்டு இஷ்டப்பிரசாதத்தால் நிறையவும்பட்ட ஆத்துமாக்களாகையால், அவர்களைத் தேவமாதாவானவள் மிகவும் நேசிப்பாளென்கிறது தப்பாது. மேலும், தாயானவள் வருத்தப்பட்டு நோகிற தன் குழந்தைக்கு அதிக பட்சம் காண்பிப்பாளல்லவோ? அதிப்படியிருக்கையில் எவ்வித வேதனைகளையும் அனுபவிக்கிற உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு தேவமாதாவானவள் அதிக தயவையும் பட்சத்தையும் காட்டுவாளென்று சொல்ல வேண்டும் அல்லவோ ?

அந்த ஆத்துமாக்களோவென்றால் தாங்கள் படுகிற கடின வாதைகளிலிருந்து தங்களுடைய தாயாரான தேவமாதாவினிடத்தில் அபய சத்தமிட்டு மகா பக்தி நம்பிக்கையோடு தங்களுக்கு உதவியாயிருக்கிவேணுமென்று கெஞ்சிக் கொண்டு வருவார்களாம். அவர்கள் தேவமாதா வினுடைய பிரதாபமுள்ள நாமதேயத்தைச் சொல்லும் போது அவர் களுடைய வருத்தங்கள் அமரும், வேதனைகள் குறையும், ஆக்கினைகள் தணியும், மோட்ச பேரின்பம் துவக்கும்.

தேவமாதாவானவள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் பேரில் வைத்த பட்சம் வீணான பட்சமல்ல. இந்த பட்சத்தினிமித்தம் தமது வல்லபமுள்ள மன்றாட்டால், சர்வேசுரன் அறிந்தபிரகாரமாய்க் கணக்கில்லாத ஆத்துமாக்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து அவள் புறப்படப்பண்ணு வாளென்று வேத சாஸ்திரிகள் நிச்சயித்துச் சொல்லு கிறார்கள். ஆயினும் மற்ற எண்ணிறந்த ஆத்துமாக்கள் தேவ நீதிக்கு விசேஷபரிகாரக் கடனைச் செலுத்த வேணுமென் கிறதினாலே இந்த பரிகாரக் கடன் தீர்ந்த பிற்பாடு மாத்திரமே உத்தரிக்கிற ஸ்தலத்தைவிட்டு ஈடேறுவார்கள்.

மனுஷர் இந்தக் கடனுக்கு உத்தரவாதம் பண்ணக் கூடுமாகையால் அதுக்குத்தக்க தங்களுடைய ஜெபதய தானதர்மங்களை ஒப்புக்கொடுப்பார்களேயாகில், அது தேவமாதாவுக்கு எவ்வளவு பிரியமாயிருக்கும். அது எவ்வளவென்றால், வியாதியாய்க்கிடந்து வருத்தப்படுகிற குழந்தைக்கு எவராவது மருந்து கொடுத்து அக்குழந்தையைச் குணமாக்கினால், அதனுடைய தாய்க்கு எவ்வளவு பிரியமிருக்குமோ அவ்வளவு ஆத்துமாக்களுடைய பரிகாரக் கடனைத் தீர்க்கவேண்டியவைகளைச் செய்வோமாகில் தேவமாதாவுக்கு சந்தோஷம் உண்டாகும் ஆனதால் உத்தரிக்கிற ஆத்துமாக்கள்பேரில் எவ்வளவு அதிகமாய்ப் பக்தி வைப்போமோ அவ்வளவு அதிகமாய்த் தேவ மாதாவானவள் நமது பேரில் தயவாய் இருப்பாளென் கிறதுக்குச் சந்தேகமில்லை.

பரலோகத்துக்கும், பூலோகத்துக்கும் ஆண்டவளாயிருக்கிற தேவமாதாவானவள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கும் இராக்கினியாய் இருக்கிறாளென்று சொல்ல வேண்டிய தாகும். ஆனால் அவள் அந்த வேதனை நிறைந்த இராச்சியத்தில் செலுத்திக் கொண்டிருக்கிற செங்கோன்மை தண்டனை இடுவதற்கல்ல. கிருபை பொழியும் செங் கோன்மைதான். கொடும் காய்ச்சலோடு வருத்தப்படுகிறவர் களுக்குக் குளுமையான தண்ணிர் எவ்வளவு ஆறுதல் கொடுக்குமோ, வருத்தப்படுகிற அந்த ஆத்துமாக் களுக்குத் தேவமாதாவினுடைய தயவு அவ்வளவு ஆறுதல் தரும்.

தம்முடைய பிரதாபமான திருநாட்களில் அவளே உத்தரிக்கிற ஸ்தலத்தில் இறங்கி அநேக ஆத்துமாக்களைத் தம்முடைய மன்றாட்டினாலும் பேறுபலன்களினாலும் சுகிர்த உதவியினாலும் மீட்டு மோட்சத்துக்குக் கூட்டிக் கொண்டு போவாளென்று பேர்பெற்ற சாஸ்திரியான ஜேர்சோனியூ சென்பவர் சொல்லியிருக்கிறார். தமது பேரில் அதிக பக்தியும் நம்பிக்கையும் வைத்துத் தமது உத்தரீயத்தைத் தரித்து அதோடு செத்தவர்களுடைய ஆத்துமாக்களை விசேஷமாய்த் தாமதமின்றி உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்படப்பண்ணுவாளென்று மூன்றாம் இன்னோசென்சியூ சென்ற அர்ச் பாப்பானவர் எழுதிவைத்தார்.

பழைய வேதத்திலே ராணியான எஸ்தேர் என்கிறவள் கொடிய தீர்வைக்குட்பட்டிருந்த தம்முடைய ஜனங்களுக்கு மீட்பை அடையத்தக்கதாக பெரிய இராஜாவாயிருந்த அசுவெருஸ் என்பவரிடத்தில் மனுப் பேச வந்தாளாம். அவளைக்கண்டு இராஜாவானவர் சந்தோஷப்பட்டு சொன்னதாவது ராணியான எஸ்தேரே! உமக்கு என்ன வேண்டியது? நீ கேட்கிறது ஏதென்று சொல்லு. என்னத்தைக் கேட்பாயோ உனக்கு அளிக்கப்படும் என்றார். அப்போது ராணியான எஸ்தேரென்பவள் தன்னுடைய ஜனங்களுக்கு விதித்த ஆக்கினையிலிருந்து அவர்களைத் தாபரித்து இரட்சிக்கவேணுமென்று மன்றாடினாளாம். அவளுடைய மன்றாட்டுக்கு இராஜா இரங்கி அந்த ஜனங்களை மீட்டுக்காப்பாற்றினாரென்று வேத புத்தகங் களிலே எழுதியிருக்கின்றது. இந்தப் பிரகாரமாய் இராக்கினியான தேவமாதாவானவள் இராஜாதி இராஜனாகிய தம்முடைய திவ்விய குமாரனை மன்றாடி தமது பிரஜையான உத்தரிக்கிற ஆத்துமாக்களை அவர்களுக்கு விதித்த ஆக்கினையிலிருந்து மீட்டு இரட்சிக்கிறாளென்று சொல்ல வேண்டியதாகும்.

மேலும் தேவமாதாவை துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே! என்று தினந்தினம் பிரார்த்தனையிலே எல்லோரும் வாழ்த்திக்கொண்டு வருகிறார்களே. அப்படியிருக்க உத்தரிக்கிற ஆத்துமாக்கள் துன்பப்படுகிறதைப் போல இவ்வுலகத்தில் துன்பப்படுவாருண்டோ? இல்லை யென்றால் தேவமாதாவானவள் அந்த ஆத்துமாக்களுக்கு விசேஷ தேற்றரவாயிருந்து ஆறுதல் வருவிப்பாளென்று கூறக்கடவோமல்லவோ ?ஆனதால் அவளை நோக்கி:

"ஆண்டவளே இராக்கினியே தாயாரே! நாங்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் கிடக்கும் போது எங்களுக்குத் தேற்றரவராயிருப்பீரென்று நம்பிக்கையாயிருக்கிறோம்" என்பீர்களாக.

கடைசியிலே மோட்சவாசிகளும் காவலான சிம்மனசுகளும் மற்ற சமஸ்த சம்மனசுகளும் உத்தரிக்கிற ஆத்துமாக்களை மிகவும் நேசிக்கிறார்களென்பதும் அவர்களுடைய வேதனைகள் முடிய வெகுவாய் விரும்பு கிறார்களென்பதும் நிச்சயமாகையால், தங்களாலே ஆனமட்டும் அந்த ஆத்துமாக்களுக்கு உதவி பண்ணுவார்கள். அதனால் இன்னும் இவ்வுலகத்திலே சஞ்சரிக்கிற நாம் அந்த ஆத்துமாக்களின் பரிகாரக்கடனை நம்முடைய பிரயாசத்தால் தீர்த்து அவர்களை மோட்சத்துக்கு சேர்ப்பிக்க விரும்புவோமாகில், அந்த மோட்சவாசிகளெல்லோரும் எவ்வளவு சந்தோஷப்படுவார்களென்றும், நமது பேரிலே எவ்வளவு பட்சமாயிருப்பார்களென்றும், அதனாலே நமக்கு எவ்வளவு சகாயம் பண்ணுவார்களென்றும் சொல்லக்கூடும் தன்மை அல்லவே . ஆனதால் அந்த ஆத்துமாக்களுக்காக நாம் செய்கிறதெல்லாம் தேவமாதாவுக்கும் அர்சிஷ்டவர்களுக்கும் பிரியப்படுவதுமல்லாமல் அவர்களுடைய விசேச ஆதரவை நமக்கு பெறுவிக்கும் என்றும் அறியக் கடவீர்களாக.

இன்று தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய மனவல்லய செபம் 

சேசுவின் திரு இருதயமே , எங்கள் பேரில் இரக்கமாயிரும்

செபம் 

எங்கள் சர்வேசுரனான ஏசுவே ! நித்திய சீவியத்தைத் தரும் திருச்சிலுவையின் வல்லமையினாலும் மோட்ச இராக்கினியான தேவமாதாவின் மன்றாட்டாலும் சகலமான மோட்சவாசிகளுடைய வேண்டுதலாலும் எங்கள் பேரில் இரக்கமாயிரும் .எங்களை தாபரித்துக் கொள்ளும் சுவாமி . நித்திய ஜீவியத்தின் நம்பிக்கையோடு செத்தவர்களின் ஆத்துமங்களை கிருபையாய் நினைத்துக் கொண்டு அவர்களை உம்மிடத்திலே சேர்த்தருள வேண்டுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி ஆமென்

பதினான்காம் தேதியில் செய்ய வேண்டிய நற்கிரியை 

உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து கிருபை தாபத்து மந்திரம் சொல்லுகிறது

புதுமை 

உரோமை என்னும் மாநகரில் பத்திரிச்சி அருளப்பர் எனப்பட்ட ஒரு பிரபு இருந்தார். அவர் வெகு தர்மவானாயிருந்தபடியால் பிச்சைக்காரர்களுக்கு ஏராள மான பிச்சைக்களைக் கொடுத்துக்கொண்டு வந்தார். பிற்பாடு நல்ல வயதிலே பாக்கியமான மரணத்தை அடைந்தார். ஆயினும் அவரிடத்திலே சில சொற்பக் குற்றங்கள் இருந்ததினாலே அவருடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு அனுப்பப்பட்டது.

அப்போது குருசுவாமியார் ஒருவர் அர்ச் செசீலியம்மாள் கோயிலிலே ஒரு தரிசனத்தைக் கண்டார். மோட்ச இராக்கினியான தேவமாதாவானவள் எண்ணிக்கையில்லாத சம்மனசுகளால் சூழப்பட்டு வாக்குக்கெட்டாத பிரதாபத் தோடு ஒர் உயர்ந்த சிம்மாசனத்திலே உட்கார்ந்திருந்தாள். பரம நாயகியினுடைய மகிமையைக்கண்டு எல்லோரும் வணங்கி மெளனமாயிருக்கையில், ஒரு பிச்சைக்காரி வந்து தேவமாதாவுக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்தாள். அவளுடைய வஸ்திரமெல்லாம் பீற்றலாய் இருந்தாலும், அவளுடைய தோளின்மேல் ஒரு விலையுயர்ந்த நேர்த்தியான போர்வை இருந்தது.

அந்தப் பிச்சைக்காரி மோட்ச இராக்கினியை நோக்கித் திரளான கண்ணீர்  சொரிந்து செய்துகொண்ட விண்ணப்பமாவது ஆண்டவளே இராக்கினியே தாயாரே இப்போது இறந்துபோன பத்திரிச்சி அருளப்பரைக் கிருபாகடாட்சமாய்ப் பார்த்தருளும் அவர் உத்தரிக்கிற ஸ்தலத்திலே அநுபவிக்கிற வேதனைகளிலிருந்து அவரை மீட்டுக் கொள்ளும். நான் வைத்திருக்கிற இந்த நேர்த்தியான போர்வையை உம்மைக் குறித்து ஆண்டவளே அவரே எனக்குக் கொடுத்தார். நான் அப்போது குளிரினாலே வெகு வருத்தப்பட்டிருந்ததினால் அந்தப் போர்வை எனக்குப் பெரிய சகாயமானது. உம்மைக் குறித்துச் செய்யப்பட்ட சகாயத்தால் அவருக்குப் பிரயோசன மில்லாமல் போகுமோ? ஆதலால் கிருபை நிறைந்த மாதாவே அவர் இப்போது உத்தரிக்கிற ஸ்தலத்திலே வெகு வேதனைப்படுகிறார் என்கிறதினாலே அவருக்கு ஒத்தாசை யாயிரும். அவர் எனக்கு உம்முடைய பேரைச் சொல்லி இந்த நேர்த்தியான போர்வையைக் கொடுத்தாற்போலே அவருக்கு நித்திய மகிமையைக் கட்டளையிடவேணுமென்று மன்றாடு கின்றேன் என்றாள்.

அந்தப் பிச்சைக்காரி மூன்று முறை இந்த விண்ணப்பத்தைச் சொல்லவே, கூட நின்ற சம்மனசுகளும் அர்ச்சியசிஷ்டவர்களும் மோட்சராக்கினியைப் பார்த்து ஆண்டவளே இந்த விண்ணப்பத்தை அங்கீகரித்து அவள் கேட்டாற்போலே உத்தரவாகவேனும் என்று மன்றாடினார்கள். அப்போது தேவ மாதாவானவள் பத்திரிச்சி அருளப்பரைக் கூட்டிக் கொண்டு வரக் கற்பித்தாள். அவர் கனமுள்ள சங்கிலியினால் கட்டுண்டு அதிக வேதனைப் பட்ட பிரகாரமாய்த் தேவமாதாவினுடைய சிம்மாசனத் தண்டையில் கூட்டிக்கொண்டு வரப்பட்டு அங்கலாய்த்து நின்றார். தாமதமின்றித் தேவமாதாவானவள் பிச்சைக்காரி கேட்டாற்போல் ஆகட்டுமென்று கையினால் சைகை காட்டினவுடனே அருளப்பருடைய கைகளிலே பூட்டப்பட்டிருந்த சங்கிலிகள் விழுந்து அவருடைய துக்கம் மகிமையாக மாறி மோட்சவாசிகளுடைய பிரதாபத்தோடு காணப்பட்டார்.

அவரை மோட்ச இராக்கினி மகனைப் போலே அணைத்து அர்ச்சியசிஷ்டவர்கள் அவரைத் தங்களுக்குத் துணையாகவும் சகோதரராகவும் கொண்டாடி எல்லாரும் மகிமையோடு மோட்ச பேரின்ப இராச்சியத்துக்கு எழுந்தருளிப்போனார்கள். இவையெல்லாம் மேற்சொன்ன குருசுவாமியார் கண்டபிற்பாடு காட்சி மறைந்துபோனதாம்.

கிறிஸ்துவர்களே , தேவமாதாவைக் குறித்துச் செய்த தர்மம் அவ்வளவு பலனுள்ளதென்று கண்டு உத்தரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்து பரிசுத்த கன்னிகையின் பேரைச் சொல்லி அடிக்கடி பிச்சைக் கொடுங்கள். உங்களை நித்திய கூடாரங்களிலே ஏற்றுக்கொள்ளும்படியாய் இவ்வுலக திரவியங்களைக் கொண்டு உங்களுக்குச் சிநேகிதரைத் தேடுங்கள் என்று சுவாமி தாமே சொல்லியிருக்கிறாரே. மோட்ச பேரின்பத்தை விரும்புகிற நீங்கள் தர்மங்களை ஏராளமாய்ச் செய்வீர்களாக .தேவ மாதாவானவள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு இராக்கினி யாகையால், உத்திரிக்கிற ஆத்துமாக்களைக் குறித்துப் பிரயாசைப்படுவதே அவளுக்கு மிகவும் பிரியமாயிருக்கிறதென்று அறிந்து முன்னே செய்ததைவிட அதிகமாய்ச் செய்யவேணுமென்று அறியக்கடவீர்களாக

​மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்களுக்காக சேசுக்கிறிஸ்து நாதருடைய ஐந்து காயங்களைக் குறித்து 5 பர 5 பிரி 5 திரி . " விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது " என்று சொல்லவும் . பின்பு பிதாவாகிய சர்வேசுரன் தமது திவ்விய குமாரனுடைய திரு இரத்தத்தைப் பார்த்து இந்த ஆத்துமாக்களின் பேரில் இரக்கமாயிருக்கும்படிக்கு 5 முறை சொல்லப்படும் மனவல்லிய செபமாவது

நித்திய பிதாவே ! சேசுக் கிறிஸ்து நாதருடைய விலைமதிப்பற்ற திரு இரத்தத்தைப் பார்த்து கிருபையாயிரும்.