இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 13-ம் தேதி.

இயேசுவின் திருஇருதயம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் ஆறுதல்

இயேசுவின் திரு இருதயமானது உத்தரிப்புக் கடனாக வேதனைப்படுகிற திருச்சபைக்கு ஆறுதலும், உலகத்தில் போராடுகிற திருச்சபைக்கு அரசனும், அகில திருச்சபைக்கு மகிமையும் பாக்கியமுமாயிருக்கிறது. விண்ணரசானது மாசில்லாத இயேசுகிறிஸ்துவின் புகலிடமும், தெய்வீக பரிசுத்தத்தின் ஆலயமுமாக இருப்பதால், பாவதோஷத்தினின்று சுத்தப்படாத எந்த ஆத்துமமும் அங்கே பிரவேசிக்க முடியாது. தினமும் உலகத்தில் சாகிற இலட்சக்கணக்கான மக்களுள் பலர் அற்பப் பாவங்களோடும், அல்லது பொறுக்கப்பட்ட சாவான பாவங்களுக்குப் பரிகாரம் பண்ணாத நிலைமையோடும், தேவ சந்நிதானத்திற்கு முன் நிற்கிறார்கள். இந்த ஆத்துமங்களை ஆண்டவர் நரகத்துக்குத் தீர்வையிட மாட்டார். என்றாலும் அவர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்யாமலும் மோட்சத்துக்குப் போகவும் முடியாது. இயேசுவின் திரு இருதய அன்பானது ஒரு பக்கத்தில் அந்த ஆத்துமங்கள் மட்டில் குறைவான இரக்கமாயிருக்கத் தூண்டினாலும், மறுபக்கத்தில் தேவ நீதியானது முழுப் பரிகாரம் செய்ய கேட்கிறது. உத்தரிக்கிற ஸ்தல நெருப்பிலேதான் அந்த பரிதாபத்துக்குரிய ஆத்துமங்கள் தங்கள் பாவங்களுக்கும், அசட்டைத்தனத்துக்கும் பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் விசுவாசமும் பக்தியும் படிப்பிக்கிற படிப்பினை.

இயேசுவின் திரு இருதய அன்பர்கள் இரண்டு தீர்மானம் செய்யவேண்டும். முதலாவது, சாவுக்குப் பிறகு இவ்வளவு துன்பங்களை வருவிக்கிற பாவங்களை இப்போதே வெறுத்துத்தள்ளி, அதிக பிரமாணிக்கமாகவும் உத்தமமாகவும் ஆண்டவருக்கு ஊழியம் செய்யவும், பிறரன்புக்கு விரோதமான வார்த்தைகளை விலக்கி, நமது வீண் மகிமை சுகபோகங்களை ஒறுத்து, ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், நாள்தோறும் மிக எளிதாய் நாம் கட்டிக்கொள்ளுகிற எல்லா அற்பப் பாவங்களையும் விட்டு விலக முயற்சிச் செய்ய வேண்டும். தவத்தாலும், நற்செயல்களாலும் நமது பாவங்களுக்கு இவ்வுலகத்திலேயே உத்தரிப்பது மிக எளிதாயிருக்கும். உத்தரிப்பு ஸ்தலத்தின் பயங்கரமான துன்பத்தில் அவைகளைப் பரிகரிக்கக் காத்திருப்பது அறியாமையாம். இரண்டாவது, உத்தரிக்கிற ஸ்தல நெருப்பில் வேதனைப்படுகிற நமது சகோதரர்களுடைய ஆத்துமங்களுக்கு ஆறுதலளித்து அவைகளை அந்த இடத்திலிருந்து விடுவிக்க நம்மாலான முயற்சி செய்ய வேண்டும். "என் மேல் இரங்குங்கள். என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள். ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது" (யோபு 19: 21 என்று அந்த ஆத்துமாக்களிடத்திலிருந்து எழும்புகிற இந்த பரிதாபத்துக்குரிய வார்த்தைகள் நமது காதில் விழுகிறதில்லையா?. ஒரு சிநேகிதன் அல்லது ஓர் அயலான், எரிகிற காளவாயில் விழுந்ததை நீ கண்டால், நீ உடனே ஓடி சென்று அவனை அந்த நெருப்பிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பாயல்லவா? இதேவிதமாய் அந்த ஆத்துமாக்கள் விஷயத்திலும் நடந்துகொள். தங்களுக்குத் தாங்களே செய்யக்கூடாத உதவியை நீ அவர்களுக்குச் செய்ய வேண்டும்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவிபுரிய நமது கையில் திருச்சபையானது கொடுத்திருக்கிற பிரதான கருவி செபமும் நற்செயல்களுமாகும். புனித பிரான்சிஸ் சவேரியாருடைய சரித்திரத்தில் நாம் வாசிப்பதென்னவென்றால், இந்தப் புனிதர் நாள்தோறும் மாலையில் சில சிறுவர்கள் கையில் மணியைக் கொடுத்து தெருக்கள் வழியே அடித்துக் கொண்டுபோய் பாவிகளுக்காகவும், உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காகவும் வேண்டிக்கொள்ள வாருங்கள் என்று சொல்லச் செய்வார். இந்த உத்தம் பக்திமுயற்சியை நாமும் நாள்தோறும் செய்வது நல்லது. ஏனென்றால் சில வேளை அந்த ஆத்துமாக்களில் சிலர் நமக்குத் தெரிந்தவர்களாயிருக்கலாம். வேறு சிலர் நமது நிமித்தம் அங்கே வேதனைப்படுகிறவர்களாயிருக்கலாம்.

இயேசுவின் திருஇருதயப் பக்தர்கள் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் வேதனை குறைந்து மோட்சபாக்கியம் சேர இத்தனை எளிதான பல வழிகளை உபயோகிக்க நல்ல தீர்மானம் செய்யக்கடவார்களாக.

அந்த ஆத்துமங்களுக்கு உதவியான வழிகளிலெல்லாம் மேலான வழி ஏதென்றால், அவர்களுக்காக திருப்பலி நிறைவேற்றி இயேசுகிறிஸ்துவின் திரு இரத்தப் பலன்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதாகும். பல கிறிஸ்தவர்கள் உன்னதமான இந்த வழக்கத்தை முன்னிட்டு அந்த ஆத்துமங்களின் பாவ மன்னிப்புக்காக பல திருப்பலி நிறைவேற்றி வருகிறார்கள். இச் செயல்பாடுகள் இயேசுவின் திரு இருதயத்துக்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதுமல்லாமல், ஆத்துமாக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன.

சில கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து அடக்கச் சடங்கில் பங்கு கொள்ளச் செய்து திருப்பலி நிறைவேற்றி ஆடம்பரமாய் சிமித்தேரியில் நல்லடக்கம் செய்வார்கள். இதோடு நின்று விடுவார்கள். பிறகு அவர்களைப்பற்றி நினைப்பதே இல்லை; இது சரியல்ல. இவ்விதம் அவர்களை மறந்துவிடாமல், அவர்கள் இறந்த ஆண்டு, நினைவுநாள், நவம்பரில் ஆத்துமாக்கள் திருநாள் போன்ற நாட்களில் அவர்களுக்காக திருப்பலி நிறைவேற்றுவதோடு, கல்லறையை அலங்கரித்து குருவானவரை அழைத்துச் சென்று செபிக்கவும் வேண்டும். மேலும் தொடர்ந்து அந்த ஆத்துமத்தின் இளைப்பாற்றிக்காகவும், அக்குடும்ப நலனுக்காகவும் இடையிடையே திருப்பலி நிறைவேற்றுவதும் தான் தர்மம் செய்வதும் சிறந்த வழக்கமாகும். நம்மை விட்டுப் பிரிந்த நமது உறவினர்களை நாம் மறவாமல் நன்றியுடன் அன்பு செய்து வருகிறோம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கும் சிறந்த நன்மாதிரிகையாய் இருக்கும்.

இப்படி உன்னுடைய உறவினர் அன்பர்களுடைய ஆத்துமங்களை மோட்சம் சேர்க்க முயற்சிக்கும் போதுதானே அந்த உத்தரிப்பு ஸ்தலத்தில் யாவராலும் மறந்து கைவிடப்பட்ட பல எழைகளுடைய ஆத்துமங்களை மறந்துவிடக்கூடாது. இவ்வுலகத்திலுள்ள தங்கள் அன்பர்களால் கைவிடப்பட்டு வேதனை அநுபவிக்கிற அந்த ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள், பலன்களை அடைந்து ஒப்புக்கொடு, திருப்பலி நிறைவேற்றப் பார். உன்னால் மோட்ச இராச்சியம் சேர்ந்த அந்த ஆத்துமங்கள் உனக்கு மிகவும் நன்றியறிந்திருப்பார்கள். தங்களுக்குத் தாங்களே உத்தரிக்கிற ஸ்தலத்தில் செய்துகொள்ளக் கூடாத உதவியை அவர்கள் உனக்குப் பிற்பாடு செய்வார்கள். இயேசுவின் திருஇருதயத்திலிருந்து ஏராளமான அருட்கொடைகளையும் ஆசீர்வாதங்களையும் உனக்குப் பெற்றுக்கொடுப்பார்கள். கடைசியாய் அவர்கள் மோட்சத்திலிருக்கும் போது தங்களை உத்தரிக்கிற ஸ்தல வேதனையிலிருந்து காப்பாற்றின் தங்கள் உபகாரிகளுக்காக இறைவனிடம் வெகுவாய் பரிந்துரைப்பார்கள்.

வரலாறு

தேவ நீதிக்குப் பரிகாரம் பண்ணி உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி செய்யும் இயேசுவின் திரு இருதயமானது எனக்கு அடிக்கடி கொடுப்பதாக புனித மார்கரீத்மரியம்மாள் சொல்லுகிறார். இதைப்பற்றி அவர் எழுதியிருப்பதாவது: பெரிய வியாழக்கிழமை இரவில் நான் தேவநற்கருணைக்கு முன்பாக செபித்துக் கொண்டிருந்த வேளையில் உத்தரிக்கிற ஆத்துமாக்கள் என்னைச் சற்று நேரம் சூழ்ந்துகொண்டு என்னோடு ஒரு அன்பு ஒப்பந்தம் செய்தார்கள். என்னால் கூடுமான எல்லா நன்மைகளையும் அந்த ஆத்துமங்களுக்காகச் செய்து ஒப்புக்கொடுக்கும்படியாக ஆண்டவர் திருவுளம்பற்றினார். அந்நாள் முதல் அந்த ஆத்துமாக்கள் என்னோடுகூட அடிக்கடி வருகிறார்கள். வேதனைப்படுகிற என் நண்பர்கள் என்று நான் அவர்களை அழைக்கிறேன். இந்தப் புனிதை வேறோர் அருட்சகோதரிக்குப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: சிறைப்பட்டிருக்கிற இந்தப் பரிதாபத்துக்குரிய ஆத்துமங்களில் சிலரை நீ விடுவிப்பாயேயாகில் உனக்காக பரிந்து பேசுகிறவர்கள் மோட்சத்தில் இருக்கிறார் களென்பதைப் பற்றி மிக்க மகிழ்ச்சியடைவாய். உன் மீட்புக்காக அவர்கள் தேவ உதவியை இரந்து கேட்பார்கள்.

ஆதலால் இயேசுவின் திருஇருதய அன்பர்கள் புனித மார்கரீத் மரியம்மாளின் மாதிரிகையையும் புத்திமதியையும் பின்பற்றி, தங்கள் செபத்தினாலும், திருப்பலியினாலும் தாங்கள் அடைகிற பலன்களாலும் எத்தனை ஆத்துமங்களை உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து விடுவிக்கக் கூடுமோ அத்தனை ஆத்துமங்களை விடுவிப்பார்கள்.

தம்மை மோட்சத்தில் தரிசித்து அன்பு செய்யும் பாக்கியத்தை இந்த ஆத்துமங்களுக்குக் கொடுக்க ஆவல் கொண்டிருக்கிற இயேசுவின் திருஇருதயமானது அவர்கள் மட்டில் நீ காண்பிக்கிற பிறரன்புக்காக உனக்குச் சம்பாவனை அளிக்கும். நாம் நம்முடைய சகோதரர்களுக்குச் செய்கிற எதையும் தமக்கே செய்கிறதாக திவ்விய இயேசு எண்ணிக்கொள்ளுகிறார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தன் வலது பக்கத்தில் நிற்கும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை நோக்கி, ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் என்பார் (மத்தேயு 25: 35, 36). இப்போது என் பிதாவினால் உங்களுக்காக பட்ட பலனை அநுபவிக்க வாருங்கள் என்று திருவுளம் பற்றுவதோடுகூட நான் உத்தரிக்கிற ஸ்தல நெருப்பில் வேதனைப்பட்டேன், நீங்கள் என்னை விடுவித்தீர்கள். தேவ நீதிக்கு உத்தரிப்புப் பலியாக சிறையில் இருந்தேன், நீங்கள் என்னைத் தேடிவந்து எனக்கு ஆறுதலளித்து அழியாத மோட்ச இராச்சியத்தைக் கைக்கொள்ளச் செய்தீர்கள். ஆதலால் நீங்கள் ஈடேற்றின் அந்த ஆத்துமாக்களோடு உங்கள் பிறரன்பு செயல்களால் நீங்கள் சம்பாதித்த மோட்ச சம்பாவனையை அனுபவிக்க இப்போது என்னோடு வாருங்கள் என்பார்.

உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு செபம்

அளவற்ற பேறுபலன்களையும், அன்பையும் கொண்டிருக்கிற திவ்விய இயேசுவே, உம்மை அன்பு செய்கிறதும் உம்மால் அன்புச் செய்யப்படுகிறதுமான ஆத்துமங்களுக்காக உம்மை மன்றாடுகிறோம். அந்த ஆத்துமங்கள் உம்மை அநுபவிக்க நீதிப்பிரகாரம் அவர்களை ஒரு பக்கத்தில் நீர் தண்டிக்கிறீரென்றாலும் வேறொரு பக்கத்தில் அவர்களுடைய தண்டனையின் காலத்தைக் குறைக்கும்படி உமது இரக்கத்தை நாங்கள் கெஞ்சி மன்றாட நீர் ஆசிக்கிறீர். அவர்களுக்காக நாங்கள் உம்மை நோக்கிக் கேட்கிற மன்றாட்டுக்குத் தயவுசெய்து செவிசாய்த்தருளும். உமது திருஇதயத்தின் பேரில் பற்றுதலாயிருந்து உமது புகழ்ச்சிக்காக ஞான ஆவல் கொண்டிருந்த அந்த ஆத்துமங்களை விசேஷ விதமாய் நினைத்துக்கொள்ளும். அன்புக்குரிய இயேசுவே! உமது சமூகத்துக்கு அவர்கள் வந்துசேர தாமதம் பண்ணாதேயும். அவர்கள் உம்முடைய திவ்விய இருதயத்துக்கு எவ்வளவோ அன்புள்ளவர்களாயிருக்கிறார்கள். அந்த ஆத்துமாக்கள் ஆசிக்கிறதும் உமது விலை மதியாத திரு இரத்தத்தால் அவர்களுக்காக நீர் தயாரித்ததுமான மோட்ச பேரின்பத்தை அவர்களுக்குக் கொடுக்க உமது திரு இருதயத்தின் வழியாய் உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
ஆமென்.

சிந்தனை

நீ இப்போது செய்கிற செயலானது நீ செய்யவேண்டிய ஒரே செயலென்றும், உன் வாழ்நாளின் கடைசி செயலென்றும் நினைத்து அதை நல்ல விதமாய்ச் செய்.

செபம்

இயேசுவின் திருஇருதயமே! உம்முடைய இராச்சியம் வருக.


சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.