கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம் - அதிகாரம் 12

சின்னப்பர் சர்வேசுரனிடத்தில் தாம் அடைந்துகொண்ட உன்னத வரங்களையும் காட்சிகளையும் வெளிப்படுத்துகிறார்.

1. மேன்மை பாராட்டுவது தகுதியல்ல என்றாலும், பாராட்டவேண்டுமானால், ஆண்டவர் அருளின தரிசனைகளையும் வெளிப்படுத்தல்களையும் இப்போது சொல்லிக்காட்டுவேன்.

2. கிறீஸ்துவினிடமான ஒரு மனுஷனை நான் அறிவேன். அவன் பதினாலு வருஷத்துக்குமுந்தி மூன்றாம் வான மண்டலமட்டும் உயர்த்தப்பட்டா னென்று அறிந்திருக்கிறேன். அது சரீ ரத்தோடேயோ சரீரத்தை விட்டோ எனக்குத் தெரியாது; சர்வேசுரனுக்குத் தெரியும். (அப். 9:3; 22:17.)

* 2. இந்த வசனத்திலே சொல்லப்பட்ட மனுஷன் அர்ச். சின்னப்பர்தான். ஆனால் தமக்கு மகிமையானதைத் தாமே சொல்லிக்காட்ட மனதில்லாததினாலும், இங்கே அது அவசரமில்லாததினாலும் அந்த மனுஷன் தான் தானென்று சொல்லாதிருக்கிறார்.

3-4. அப்படிப்பட்ட மனுஷன் பரகதிக்குக் கொண்டுபோகப்பட்டானென்றும், அங்கே அவன் மனுஷனாலே பேசக்கூடாததும், வாக்குக்கெட்டாததுமான இரகசிய வாக்குகளைக் கேட்டானென்றும் அறிவேன்.

* 3-4. இந்த வசனங்களில் சொல்லப்பட்ட பரலோகம் அல்லது வானமண்டலம் மூன்றுண்டு. 1-வது மேகங்களும் பறவைகளுஞ் சஞ்சரிக்கிறதும் பூமிக்குச் சமீபமானது மாகிய மண்டலமாம். 2-வது. சூரிய சந்திர நட்சத்திரங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற மேல்மண்டலமாம். 3-வது. சம்மனசுகளுக்கும் அர்ச்சியசிஷ்டவர்களுக்குஞ் சர்வேசுரன் தம்முடைய தரிசனையைக் கொடுக்கிற உந்நத மண்டலமாம். அந்த உந்நத பரலோகம் வரைக்கும் தாம் உயர்த்தப்பட்டதாக அர்ச். சின்னப்பர் சொல்லுகிறார்.

5. அப்படிப்பட்ட மனிதனைப்பற்றி நான் மேன்மை பாராட்டுவேன். என்னைப்பற்றியோ என் பலவீனங்களைப் பற்றியல்லாமல், மற்றொரு காரியத்தையும்பற்றி நான் மேன்மைபாராட்ட மாட்டேன்.

6. ஆகிலும் நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், உண்மையைச் சொல்லு வேனாகையால் புத்தியீனனாக மாட் டேன். ஆனாலும் ஒருவனும் என்னிடத் தில் காண்கிறதற்கும், என்வழியாய்க் கேட்கிறதற்கும் மேலாக என்னை எண் ணாதபடிக்கு இப்படிப்பட்ட பேச்சுகளை நிறுத்துகிறேன்.

7. இப்படிப்பட்ட காட்சிகளின் மகத்துவத்தால் என்னை நான் உயர்த் தாதபடிக்கு என்னைக் கொட்டும் பேய்த் தூதனாகிய ஒரு கொடுக்கு என் மாம்சத்துக்குக் கொடுக்கப்பட்டிருக் கிறது.

* 7. இதிலே சொல்லப்பட்ட கொடுக்கென்பது: பசாசின் சோதனையால் அவர் சரீரத்தி லுண்டான மீறுதலென்னப்படும். அதுவே அவருடைய முகத்தில் அறைகிறதுபோல் அவருக்கு வெட்கம் வருவிக்கிற சோதனையாயிருந்தது. அதை அவர் எத்தனை அருவருத் தாலும், தள்ளினாலும் நீங்காதிருக்கிறதைக்கண்டு, அதை நீக்கித்தள்ள ஆண்டவரைப்பார்த்து மிகுந்த அழுகையோடே மூன்றுவிசை பிரார்த்தித்துக்கொண்டார். ஆகிலும் அதனாலே அவருடைய புண்ணிய பேறுபலன் அதிகரிக்க வழியானதினாலே, சர்வேசுரன் அந்தக் சோதனையை நீக்காமல் அந்தப் போராட்டத்தில் அவர் எப்போதும் ஜெயங்கொள்ளும்படி தமது வரப்பிரசாதத்தை அவருக்கு அதிகமாய்க கொடுத்துவந்தார் என்க.

8. ஆகையால் இது என்னைவிட்டு அகலும்படிக்கு மும்முறை ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்.

9. அதற்கு அவர் மறுமொழியாக: என் வரப்பிரசாதமே உனக்குப் போதும். ஏனெனில் பலவீனத்திலே என் வல்லமை பூரணமாய் விளங்குகின்றது என்றார். ஆகையால் கிறீஸ்துவின் வல்லமை என் னிடத்திலே வாசம்பண்ணும்படிக்கு என் பலவீனங்களிலே சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.

10. இதனிமித்தம் எனக்கு உண்டா கும் பலவீனங்களிலும், அவமானங்க ளிலும், இக்கட்டுகளிலும், கலாபங்களி லும், நெருக்கிடைகளிலும், கிறீஸ்துவைப்பற்றி நான் பிரியப்படுகிறேன். ஏனெனில் எப்போது பலவீனப்படுகிறே னோ, அப்போது வல்லவனாயிருக்கி றேன்.

11. புத்தியீனனானேன். நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். எல்லாத்துக்கும் மேலாக அப்போஸ்தலர்களாயிருக்கப்பட்டவர்களுக்கு நான் எவ்வளவும் தாழ்ந்தவனல்ல என்பதினால் உங்களால் நான் புகழப்படவேண்டியிருந்ததே.

* 11. கிரேக்கப் பிரதியில் மேன்மை பாராட்டிப் புத்தியீனன் ஆனேன் என்று சொல்லியிருக்கிறது.

12. என் அப்போஸ்தலத்துவத்தின் அடையாளங்கள் எவ்வித பொறுமை யிலும் அதிசய அற்புதங்களிலும், வல்ல மைகளிலும், உங்களுக்குள்ளே காணப் பட்டதே. (உரோ. 15:18.)

13. மற்றச் சபைகளைவிட உங்களுக்குண்டாயிருந்த குறை என்ன? நான் உங் களை வருத்தப்படுத்தாதிருந்ததே குறை யன்றி வேறில்லையே. இந்த அநியாயத் தை எனக்கு மன்னித்துக்கொள்ளுங்கள்.

14. இதோ, மூன்றாந்தரம் உங்களி டத்திற்கு வர ஆயத்தமாயிருக்கிறேன். உங்களுக்குப் பாரமாய் இருக்கமாட் டேன். உங்கள் பொருட்களையல்ல, உங்களைத்தானே தேடுகிறேன். ஏனெ னில் பிள்ளைகள் பெற்றோருக்கல்ல, பெற்றோரே பிள்ளைகளுக்குப் பொக்கி ஷம் சேர்த்துவைக்கவேண்டும்.

15. நான் உங்களை அதிகமாய் நேசித்துவர, நீங்கள் என்னைக் குறைவாய் நேசித்தாலும், உங்கள் ஆத்துமங்களுக்காக மிகவுஞ் சந்தோஷமாய் நான் என்னைச் செலவழிப்பேன்: நானே செலவழிக்கவும்படுவேன்.

16. அப்படியே ஆகட்டும். நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை. ஆனால் நான் வஞ்சகமுள்ளவனாயிருந்து, உங்களை உபாயமாய்ப் பிடித்தேன் (என்கிறார்களே).

17. நான் உங்களிடம் அனுப்பினவர்களில் யாரைக்கொண்டாவது உங்களிடம் ஏதேனும் வஞ்சித்து வாங்கினதுண்டோ?

18. தீத்துவை உங்களிடத்தில் வரும் படி மன்றாடி, அவருடனேகூட வேறொரு சகோதரனையும் அனுப்பி னேன். தீத்து என்பவர் உங்களிடத்தில் ஏதேனும் வஞ்சித்து வாங்கினாரோ? அவரும் நானும் ஒரே மனதாயிருந்து, ஒரே தடத்தில் நடக்கிறதில்லையா?

19. இன்னமும் உங்களிடத்தில் போக் குச் சொல்லுகிறோமென்று நினைக் கிறீர்களோ? மிகவும் பிரியமானவர் களே, உங்கள் நல்விர்த்திக்காக இவை யெல்லாம் கிறீஸ்துநாதரில் சர்வேசுர னுடைய சமூகத்திலே சொல்லுகிறோம்.

20. ஏனெனில், நான் வரும்போது ஒருவேளை நான் விரும்புகிற தன்மையாய் நீங்களிருக்கிறதில்லையென்று காண்பேனோவென்றும் நானும் நீங்கள் விரும்பாத விதமாய் உங்களுக்குக் காணப்படுவேனோவென்றும், ஒருவேளை வாக்குவாதம், போராட்டம் விரோதம், பிரிவினை, புறணிகள், புறங்கூறல், ஆங்காரம், கலகம் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும் பயப்படுகிறேன்.

21. இன்னமும் நான் வரும்போது உங்கள் நடுவில் சர்வேசுரன் என்னைத் தாழ்த்துவாரோவென்றும், முன் பாவிகளாயிருந்தவர்களுக்குள்ளே அநேகர் தாங்கள் கட்டிக்கொண்ட அசுத்தத்துக்கும், வேசித்தனத்துக்கும், காம விகாரத்துக்கும் விலகி, மனந்திரும்பா மலிருப்பதைப்பற்றி நான் துக்கித்து அழவேண்டி யிருக்குமோவென்றும் பயப்படுகிறேன்.