அர்ச். அருளப்பர் எழுதிய முதல் நிருபம் - அதிகாரம் 04

சர்வேசுரனிடத்திலிருந்து உண்டாகிற ஏவுதல் எதுவென்றும், சர்வேசுரனிடத்திலிருந்து வராதது எதுவென்றும் காண்பிக்கிறார்.

1. எனக்கு மிகவும் அன்பரே, நீங்கள் எல்லா ஞானிகளையும் நம்பாமல், அவர்கள் சர்வேசுரனிடத்திலிருந்து வந்தவர்களோ என்று சோதித்து அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில், உலகத்தில் அநேகம் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள். (யூதா. 4.)

2. சர்வேசுரனுடைய ஞானியாரெனில்: சேசுக்கிறீஸ்துநாதர் மாம்ச ஐக்கி யத்தோடு வந்தாரென்று ஏற்றுக்கொள் ளுகிற எவனும் சர்வேசுரனிடத்தி லிருந்து வருகிற ஞானி என்றறிக.

3. ஆனால் சேசுநாதரைப் பிரித்தழிக்கிற எந்த ஞானியும் சர்வேசுரனிடத்திலிருந்து வருகிறவனல்ல; அவனே அந்திக்கிறீஸ்து. அவன் வருகிறதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களே. இதோ இப்பொழுதே உலகத்தில் இருக்கிறான்.

4. பிள்ளைகளே, நீங்கள் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறீர்கள். உங்களுக் குள் இருக்கிறவர் உலகத்திலிருக்கிறவ னைவிடப் பெரியவராய் இருக்கிறபடி யால், நீங்கள் அவனை ஜெயித்தீர்கள்.

5. அவர்கள் உலகத்தார்கள். ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசு கிறார்கள். உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கிறது. (அரு. 8:47.)

6. நாங்கள் சர்வேசுரனால் உண்டானவர்கள். சர்வேசுரனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான். சர்வேசுரனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை. இதனாலே சத்திய ஞானம் இன்னதென்றும், தப்பறை ஞானம் இன்னதென்றும் உணர்ந்துகொள்ளுகிறோம்.

7. எனக்கு மிகவும் பிரியமானவர்களே, நாம் ஒருவரொருவரைச் சிநேகிப்போமாக. ஏனெனில் சிநேகம் சர்வேசுரனால் உண்டாயிருக்கிறது. ஆகையால் சிநேகமுள்ளவனெவனும் சர்வேசுரனால் பிறந்து, சர்வேசுரனை அறிந்திருக்கிறான்.

8. சிநேகமில்லாதவன் சர்வேசுரனை அறியான். ஏனெனில் சர்வேசுரன் சிநேகமாகவே இருக்கிறார்.

9. தம்முடைய ஏக குமாரனால் நாம் ஜீவிக்கும்படிக்குச் சர்வேசுரன் அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினாலே, சர்வேசுரன் நமதுபேரில் வைத்த சிநேகம் வெளிப்பட்டது. (அரு. 3:16.)

10. நாம் சர்வேசுரனைச் சிநேகித்ததினால் அல்லவே, அவரே நம்மை முந்திச் சிநேகித்து, நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரப்பலியாகத் தமது குமாரனை அனுப்பினதிலே அவருடைய அன்பு இன்னதென்று விளங்குகின்றது.

11. மிகவும் பிரியமானவர்களே, சர்வேசுரன் நம்மை இத்தன்மையாய்ச் சிநேகித்திருக்கையில், நாமும் ஒருவரொருவரைச் சிநேகிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

12. சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரொருவரைச் சிநேகித்தால், சர்வேசுரன் நம்முள் நிலைத்திருக்கிறார். அவருடைய பரம அன்பும் நம்மில் உத்தமமாயிருக்கின்றது. (அரு. 1:18; 1 தீமோ. 6:16.)

* 12. சர்வேசுரனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. இவ்வுலகத்தில் அநேகர் சர்வேசுரனைக் கண்டதாக வேதத்தில் எழுதப்பட்டிருப்பது மெய்யே. ஆனாலும் அர்ச். சின்னப்பர் 1 கொரி. 13-ம் அதி. 12-ம் வசனத்தில் சொல்லியிருக்கிறபடியே: கண்ணாடியில் கண்டதுபோல அவரைத் தரிசித்தார்களேயன்றி, அவருடைய சுபாவ சொரூபத்தில் ஒருவரும் கண்டதில்லை.

13. அவர் தம்முடைய இஸ்பிரீத்துவிலிருந்து நமக்குத் தந்தருளினதினால், நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதாக அறிந்திருக்கிறோம். (அரு. 14:17.)

* 13. இஸ்பிரீத்துவிலிருந்து: - அதாவது, சேசுநாதர்சுவாமி இஸ்பிரீத்துசாந்துவின் வரங்களில் நமக்கு வேண்டியதை அளிக்கிறாரென்று அர்த்தமாம்.

14. பிதாவானவர் தமது குமாரனை உலக இரட்சகராக அனுப்பினாரென்று நாங்களே கண்டு, சாட்சி சொல்லுகிறோம். (அரு. 4:42.)

15. சேசுநாதர் தேவசுதனென்று எவனெவன் அறிக்கையிடுகிறானோ, அவனிடத்தில் சர்வேசுரன் நிலைத்திருக்கிறார். அவனும் சர்வேசுரனிடத்தில் நிலைத்திருக்கிறான்.

16. சர்வேசுரன் நமதுமேல் வைத்திருக்கிற நேசத்தை நாம் அறிந்து, விசுவசித்திருக்கிறோம். சர்வேசுரன் சிநேகமாகவே இருக்கிறார். சிநேகத்தில் நிலைத்திருக்கிறவன் சர்வேசுரனிடத் தில் நிலைத்திருக்கிறான்; சர்வேசுரனும் அவனிடத்தில் நிலைத்திருக்கிறார்.

17. நடுத்தீர்வைநாளில் நாம் நம்பிக் கையாயிருக்கச் செய்வதே நம்மிடத் திலுள்ள உத்தம தேவசிநேகமாம். ஏனெனில் அவர் எப்படியிருக்கிறாரோ நாமும் இவ்வுலகத்தில் அப்படியே யிருக்கிறோம்.

* 17. அவர் நம்மைப் பூரணமாய்ச் சிநேகிக்கிறதுபோல் நாமும் பிறரைத் தேவ சிநேகத்தினால் பூரணமாய்ச் சிநேகித்து வருவோம்.

18. சிநேகத்தில் பயமில்லை. உத்தம சிநேகம் பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் சிநேகத்தில் உத்தமனல்ல.

* 18. உத்தம சிநேகமானது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது என்கிறார். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் 2-ம் அதி. 12-ம் வசனத்தில்: பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சணியத்தை நிறைவேற்றப் பிரயாசைப்படுங்கள் என்கிறார். தாவீது இராஜா 18-ம் சங்கீதம் 9-ம் வசனத்தில்: தேவபயமானது பரிசுத்தமுள்ளது. அது என்றென்றைக்கும் நிலைநிற்கிறது என்று சொல்லியிருக்கிறார். இப்படியே வேதாகமங்களில் இன்னும் அநேக இடங்களில் தேவ பயமானது நல்லதென்று சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளெல்லாம் அருளப்பருடைய இந்த வசனத்துக்கு விரோதமென்று நினைக்கத்தக்கதல்ல. அருளப்பர் பாவிகளுடைய தீர்வைக்கும் தண்டனைக்கும் பயப்படுகிற அடிமைப் பயத்தைப்பற்றிப் பேசுகிறார். தாவீது இராஜா, அர்ச்.சின்னப்பர் முதலானவர்களோ புத்திர பயத்தைப்பற்றிப் பேசுகிறார்கள். அதேதென்றால் குற்றஞ்செய்த அடிமைகள் தண்டனைக்குப் பயந்து தங்கள் குற்றத்தை எஜமான்கள் கண்டுகொள்வார்களென்று பயப்படுவார்கள். நல்ல குணமுள்ள பிள்ளைகள் தங்கள் குற்றத்தால் தங்கள் தகப்பனுக்கு மனவருத்தம் வருவிப்போமே, என்று பயப்படுவார்கள். இதுவே தாவீது இராஜாவும், அர்ச். சின்னப்பர் முதலானவர்களும் சொல்லுகிற புத்திர பயமென்று சொல்லப்படும். இப்படிப்பட்ட பயம் தேவ சிநேகத்துக்கு விரோதமாயிராததுமன்றி, அதைக் காப்பாற்றுவதற்கு மகா உதவியாயிருக்கிறது.

19. ஆகையால் சர்வேசுரன் நம்மை முந்திச் சிநேகித்தபடியினாலே நாமும் அவரைச் சிநேகிப்போமாக.

20. சர்வேசுரனைச் சிநேகிக்கிறேன் என்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். ஏனெனில், தான் கண்ணால் காண்கிற சகோதரனைச் சிநேகியாதவன், தான் காணாத சர்வேசுரனை எப்படிச் சிநேகிக்கக்கூடும்?

21. சர்வேசுரனைச் சிநேகிக்கிறவன் தன் சகோதரனையும் சிநேகிக்கக்கடவான் என்கிற இந்தக் கற்பனையைச் சர்வேசுரனிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். (அரு. 13:34; 15:12; எபே. 5:2.)