பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 04

எல்லா நன்மைகளிலும் நிலைநிற்கும்படி சகலருக்கும் பொதுவாகவும், சிலருக்கு விசேஷமாகவும் சில புத்திமதிகளைச் சொல்லி, காவலிலிருந்த தமக்கு அவர்கள் செய்த உதவிக்காக அவர்களை வாழ்த்தி, அவர்களுக்காகச் சர்வேசுரனை மன்றாடி, நிருபத்தை முடிக்கிறார்.

1. ஆகையால் எனக்கு மகா பிரியமும் வாஞ்சையுமுள்ள சகோதரர்களே என் சந்தோஷமே, என் கிரீடமே, மிகவும் பிரியமானவர்களே, இப்படியே ஆண்டவரிடத்தில் நிலைத்திருங்கள்.

2. எவோதியாளும். சிந்திக்கையாளும் ஆண்டவருக்குள் ஒரேமனதாயிருக்க மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

* 2. இங்கே சொல்லப்பட்ட இரண்டு ஸ்திரீகளும் பிலிப்பி நகரத்துச் சபையாருக்குள் தங்கள் பக்தியினாலும், தர்மத்தினாலும், விசுவாசம் பரம்பும்படிக்குப் பட்ட பிரயாசையினாலும் பேர்போனவர்களாம். ஆனால் அர்ச். சின்னப்பர் இந்த நிருபத்தை எழுதின காலத்தில் அவர்களுக்குள்ளே ஒற்றுமைப்பேதகம் இருந்ததாகத் தோன்றுகிறது.

3. எனது உண்மையான கூட்டாளியே, நீரும் அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உம்மை மன்றாடுகிறேன். அவர்கள் கிளேமெந்தென்பவரோடும், எனக்கு உதவி செய்த மற்றவர்களோ டும் சுவிசேஷத்தைப்பற்றி என்னோடே கூட உழைத்தவர்கள். அவர்களெல்லா ருடைய நாமங்களும் ஜீவிய புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. (காட்சி. 3:5.)

* 3. இங்கே சொல்லப்பட்ட கிளெமெந்தென்பவர் அர்ச். இராயப்பருக்குப் பிறகு நாலாவதாக பாப்புப்பட்டத்தில் உயர்த்தப்பட்டவரென்று அநேக சாஸ்திரிகள் எண்ணுகிறார்கள். இங்கே அர்ச். சின்னப்பர் குறிக்கிற உண்மையுள்ள துணைவர் அவருடனேகூட அந்தச் சபையில் உழைத்த பிரதான விசுவாசியாம். ஆனால் அவர் இன்னாரென்று சரியாய்த் தெரியவில்லை. இந்தத் துணைவர் சின்னப்பருடைய மனைவியென்று சில பதிதர் சொல்லத் துணிந்தார்கள். ஆனால் ஆதியில் எழுதப்பட்ட சகல கையெழுத்துப் பிரதிகளிலும், பூர்வ பாஷையில் துணையென்னும் வார்த்தை ஆண்பாலைக் குறிக்கிறது. ஆகையால் இந்தத் துணைவர் பிலிப்பிப் பட்டணத்து மேற்றிராணியாரென்று சில வேதசாஸ்திரிகள் சொல்லுகிறார்கள்.

4. ஆண்டவரிடத்தில் எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; மறுபடியுஞ் சொல்லுகிறேன்: சந்தோஷமாயிருங்கள்.

5. உங்கள் அடக்கவொடுக்கம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக; கர்த்தர் அருகில் இருக்கிறார்.

* 5. கர்த்தர் அருகில் இருக்கிறார்:- அதாவது உதவிசெய்யக் காத்திருக்கிறார்.

6. எதன்பேரிலும் கவலைப்படாதிருங்கள். ஆனால் எல்லா ஜெபத்திலும், வேண்டுதலிலும், நன்றியறிந்த ஸ்தோத் திரத்தோடுகூடிய உங்கள் மன்றாட்டுகள் தேவசமுகத்தில் தெரியவரக்கடவது.

7. அப்படியே எல்லா அறிவை யுங் கடந்த சர்வேசுரனுடைய சமா தானமானது உங்கள் இருதயங்களை யும் உங்கள் சிந்தைகளையும் சேசுக் கிறீஸ்துவுக்குள் காப்பாற்றுவதாக.

8. கடைசியாய்ச் சகோதரரே, எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நீதியோ, எதெது பரிசுத்தமோ, எதெது அன்புக்குரியதோ, எதெது நற்கீர்த்திக்குரியதோ, எதெது புண்ணிய மோ, எதெது நல்லொழுக்கப் புகழ்ச்சி யோ, அவைகளைச் சிந்தித்துக்கொண் டிருங்கள்.

9. நீங்கள் என்னிடத்தில் எவைகளைக் கற்றும், பெற்றும், கேட்டும், கண்டுமிருக்கிறீர்களோ, அவைகளை யே செய்யுங்கள். அப்போது சமாதா னக் கடவுள் உங்களோடிருப்பார்.

10. முன்னே என்பேரில் உங்களுக் கிருந்த பற்றுதலான மனம் கடைசியாய் இப்பொழுது மறுபடியும் மலர்ந்ததைப் பற்றி நான் ஆண்டவரிடத்தில் வெகு வாய்ச் சந்தோஷப்பட்டேன். முந்தியும் இந்தப் பற்றுதல் உங்களுக்கு இருந்தா லும், அதைக் காண்பிக்க உங்களுக்குச் சமயமில்லாதிருந்தது. 

* 10. பிலிப்பி நகரத்துச் சபையார் ஞானஸ்நானம் பெற்ற நாள்முதல் அர்ச்.சின்னப்பர்பேரில் அத்தியந்த பற்றுதலாயிருந்து, அவர் எந்தெந்தத் தேசங்களுக்குப் போயிருந்தாலும், அவருடைய சுபசெய்திகளை அறிவதற்கு அவரிடத்தில் ஆளனுப்பி, அவருடைய செலவுக்கும் உதவிசெய்துகொண்டு வருவார்கள். ஆனால் அப்போஸ்தலர் நடபடியில் சொல்லியபடி, அவர் யூதர்களாலே பிடிபட்டு இரண்டு மூன்று வருஷகாலம் சிறையிற் கிடந்து, உரோமாபுரிக்குக் கூட்டிக்கொண்டு போகப்பட்ட காலத்தில், அந்தச் சபையார் அவரை மறந்ததுபோலிருந்தாலும், பிற்பாடு அவர் உரோமாபுரியில் விலங்கில் கிடக்கிறாரென்று கேள்விப்பட்டு, முன்புபோல் மறுபடியும் அவரை விசாரிக்கவும், அவருக்குச் செலவுக்கு அனுப்பவும் முயற்சிபண்ணி, அதற்காக எப்பாப்புரோதீத்தென்பவரை வேண்டிய பண உதவியோடு அனுப்பினார்கள். அதைக் கண்டு அர்ச். சின்னப்பர் மிகுந்த சந்தோஷப்பட்டு, கொஞ்சகாலம் அவர்கள் தம்மை மறந்தாற்போலிருந்தாலும், அவர்கள் எப்போதும் பற்றுதலுள்ளவர்களென்றும், சமயமில்லாததினாலே தங்கள் பற்றுதலைக் காண்பிக்காதிருந்தார்களென்றும் அவர்களைப் புகழுகிறார்.

11. ஆகிலும் அவகாசக்குறைவைப் பற்றி நான் இப்படிச் சொல்லுகிற தில்லை. ஏனெனில், நான் எந்த ஸ்திதியிலிருந்தாலும், மனத்திருப்தியாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.

12. சிறுமைப்படவும், சம்பத்தோடிருக்கவும் எனக்குத் தெரியும். எங்கும், எல்லாக் காரியங்களிலும் நான் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், செல்வத்தோடிருக்கவும், வறுமைப்படவும் அப்பியாசப்பட்டிருக்கிறேன்.

13. என்னைப் பலப்படுத்துகிறவரைக்கொண்டு என்னால் எல்லாங்கூடும்.

14. ஆகிலும் நீங்கள் என் துன்பத்தில் உதவிசெய்தது நல்ல காரியந்தான்.

15. பிலிப்பியரே, சுவிசேஷ ஆரம்பத்தில் நான் மக்கேதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறே எந்தச் சபையும் கொடுக்கல் வாங்கலில் எனக்கு உதவிசெய்யவில்லையென்று நீங்கள் அறிவீர்களே. (அப். 16:10.)

16. நான் தெசலோனிக்கையிலிருந்த போதுமுதலாய் ஒருவிசை, இரண்டு விசை என் செலவுக்கு அனுப்பினீர்க ளென்று அறிந்திருக்கிறீர்கள். (அப். 17:1.)

17. ஆகிலும் நான் ஈகையைத் தேடாமல், உங்கள் கணக்கிலே பேறுபலன் பெருகும்படிக்கே விரும்புகிறேன்.

18. எனக்கு எல்லாமிருக்கிறது; சம்பன்னனாயிருக்கிறேன். உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையாகவும், சர்வேசுரனுக்கு உகந்த பிரியமான பலியாகவும் எப்பாப்புரோதீத்துவின் கையில் பெற்றுக்கொண்டு, திருப்தியாயிருக்கிறேன்.

19. ஆதலால் என் சர்வேசுரன் தம்முடைய ஐசுவரியத்தின்படியே உங்கள் விருப்பமெல்லாவற்றையும் கிறீஸ்து சேசுநாதருக்குள் மகிமையாக நிறைவேற்றுவாராக. 

20. நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

21. அர்ச்சிக்கப்பட்ட எல்லோருக்கும் கிறீஸ்து சேசுநாதரிடத்தில் மங்களஞ் சொல்லுங்கள்.

22. என்னோடுகூட இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள். அர்ச்சிக்கப்பட்ட அனைவரும், முக்கியமாய்ச் செசாருடைய அரண்மனையிலிருக்கிறவர்களும் உங்களுக்கு மங்களஞ் சொல்லுகிறார்கள்.

23. நமதாண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதருடைய இஷ்டப்பிரசாதம் உங்கள் ஆத்துமத்தோடுகூட இருப்பதாக. ஆமென்.


பிலிப்பியர் நிருபம் முற்றிற்று.