தேவமாதாவின் வணக்கமாதம் - மே 04

தேவமாதாவின் திருநாமத்தின் பேரில்!

1. தேவமாதாவின் நாமம் சுகிர்த நாமம்

தேவமாதா கொண்டிருக்கிற மரியாள் என்ற நாமத்தைவிட அன்னையுடைய மேன்மையையும் மகிமையையும் அறிகிறதற்குத் தகுதியான வேறோர் நாமமே இல்லை. இந்தத் திருநாமத்துக்கு சமுத்திரத்தின் நட்சத்திரம் என்பது பொருள். ஆகையால் பெருங்காற்று அடிக்கிற சமுத்திரமாகிய இந்த "உலகில் வாழுகிறவர்களுக்கு ஒளிவீசுகிற நட்சத்திரம் போலவும் சுடரான தீபம் போலவும் கன்னிமரியாள் எல்லோருக்கும் மோட்ச வழியைக் காட்டி அவர்கள் யாவருக்கும் துணையாக விளங்குகிறார்கள். புனித பெர்நர்து என்பவர் எழுதியதாவது: புயலுள்ள கடலாகிய இந்த உலகத்தில் சஞ்சரிக்கிற நிர்ப்பாக்கியமான மனிதனே, நீ வழிதப்பி அமிழ்ந்திப் போகாமல் கரையேற நட்சத்திரமாகிய கன்னிமாமரியாயைப் பார்த்து வேண்டிக்கொள்ளுவாயாக. தந்திரமுள்ள, மோகமுள்ள வேளைகளிலேயும் தேவன்னையைப் பார்த்து வேண்டிக் கொள்ளுவாயாக. ஆங்காரம், கோபம், மோகம், காய்மகாரம் முதலான துர்க்குணங்கள் உன் ஆத்துமத்தில் கிளம்பி நீ பாவத்தில் விழப்போகிற வேளையில் நட்சத்திரமாகிய அன்னையைப் பார்த்து வேண்டிக் கொள்ளுவாயாக. ஆபத்துக்களிலும் நிர்ப்பாக்கியங்களிலும் நிர்ப்பந்தங்களிலும் எவ்வித துன்ப துரிதங்களிலும் மரியாயை நினைத்து வேண்டிக்கொள்ளுவாயாக. அந்தத் திருநாமமானது உன் நெஞ்சிலும் உன் வாயிலும் என்றும் இருக்கக்கடவதாக. அன்னையைப் பின் சென்றால் வழி தப்பிப்போகாமலும், வேண்டிக்கொண்டால் நம்பிக்கையைக் கைவிடாமலும், தாங்கப்பட்டால் விழாமலும் கரையேறி மோட்ச வீடு சேருவாய்.

2. தேவமாதாவின் நாமம் மகிமையுள்ள நாமம்.

அன்னை மரியாள் என்ற திருநாமத்து நாயகி, ஆண்டவள், இராக்கினி என மற்றொரு பொருளும் உண்டு. பரிசுத்த கன்னிகை தனக்குண்டான மேன்மையாலும், தான் உரிமையாய்ப் பெற்ற சுதந்திரத்தாலும் உலகத்துக்கெல்லாம் இராக்கினியாகவும் சம்மனசுக்களுக்கெல்லாம் ஆண்டவளாகவும் மனிதர்களுக்கெல்லாம் தாயாராகவும் நியமிக்கப்பட்டார்கள். இதுபற்றியே ஜனங்களெல்லாரும் மகிமைப் பிரதாபமுள்ள இப்பெயரால் அன்னையைக் கூப்பிடுகிறார்கள். "திவ்விய கன்னிமரியாயே! உமது திருநாமத்தில் அடங்கி இருக்கிற பொருளின்படியே பரலோகத்தில் நீர் மகிமையுடன் வீற்றிருந்து பசாசுகளுக்குப் பயமுண்டாக்கி பூலோகத்திலே வணங்கப் பெறுவீராக. சர்வேசுரனல்லாத எல்லாவற்றையும் விசேஷமாய் எங்கள் மனதுகளையும் நீர் இராக்கினியாக இருந்து நடத்தி, நாங்கள் படுகிற துன்பங்களில் ஆதரவுமாய் பலவீனத்திலே வல்லமையுமாய், அந்தகாரத்திலே ஞான ஒளியுமாய், மரண நேரத்தில் ஞான நம்பிக்கையுமாய் இருப்பீராக!"

3. தேவமாதாவின் நாமம் வணக்கத்துக்குரிய நாமம்.

புனித பிரான்சீஸ்கு என்பவர் பரிசுத்த கன்னிமரியாயை நோக்கிச் சொன்னதாவது: உமது திருக்குமாரனுடைய ஆராதனைக்குரிய சேசுநாதர் என்ற நாமத்துக்குப் பிறகு, நீர் கொண்டிருக்கிற மரியாள் என்கிற நாமத்தை அல்லாமல், மனிதர்களுக்கு வரப்பிரசாதத்தையும் நம்பிக்கையையும் இன்பமான சந்தோஷத்தையும் அதிகமாக வருவிக்கிறதற்குத் தகுதியான நாமம் வேறொன்றும் இல்லை. புனித பொனவெந்தூர் என்பவர், திவ்விய கன்னிமரியாயே, உமது திருநாமத்தை வணங்கி சிநேகிக்கிறவன், பாக்கியமுள்ளவனாய் ஆறுதல் அடைந்து நற்கிரிகைகள் செய்து வருவான் என்றார். அந்த மேன்மையான நாமத்தை சொல்லுகிறவனுக்கு ஆறுதல் வராமல் இருக்காது. அந்தத் திருநாமத்தைக்கேட்டு பசாசு நடுநடுங்கி ஓடிப்போக, சோதனையெல்லாம் நம்மைவிட்டு அகன்று விடும். சோதனை வேளையில் பரிசுத்த கன்னிமரியாயை வேண்டிக் கொள்ளாததினால் பாவத்தில் விழுந்தீர்கள் என்பதை அறிந்து, அத்தகைய தினம் இனியும் உங்களுக்கு நேரா வண்ணம் சோதனை நேரத்தில் தேவமாதாவின் உதவியைக் கேளுங்கள். உங்கள் எதிரியைத் துரத்தி உங்களைக் காப்பாற்றுவார்களென நம்பிக்கையுடன் இருங்கள்.

செபம்.

மிகவும் நேசத்துக்குரிய பரிசுத்த கன்னிகையே! உம்முடைய திருநாமத்தை உச்சரிக்கும்பொழுதெல்லாம் நெஞ்சிலே யாவருக்கும் உமது பேரில் பக்தி உண்டாகிறதும் அல்லாமல் உம்மை நினைக்கிறவர்கள் எல்லோரும் அதிகமதிகமாய் உம்மைச் சிநேகிக்கத் துணிகிறார்கள். ஆண்டவளே, என் பலவீனத்தை நீக்கி எனக்குத் திடனளித்து, இந்தக் கண்ணீர்க் கணவாயில் எனக்கு வேண்டிய உதவிகளை நல்கியருளும். நீர் பிரத்தியட்சமாய்ச் சர்வேசுரனைத் தரிசித்து அவர் அருகில் நீர் இருப்பதனால், எங்களுக்காக வேண்டிக்கொள்ள உம்மைவிடத் தகுதியானவர்கள் இல்லை. எங்கள் இராக்கினியே நீர் உமது திருமைந்தனிடம் கேட்கும் எல்லாம் அவசியம் கொடுக்கப்படும். ஆகையினால் நீர் எமக்காக மனுப்பேசியருளும். நாங்கள் இவ்வுலகில் உமது திருமைந்தனாகிய சேசுநாதரை முழுமனதோடு நேசித்து மறுவுலகில் என்றும் அவரைச் சிநேகிக்க எங்களுக்கு விசேஷ உதவியை அடைந்து கொடுத்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : 

மரியாயே வாழ்க, ஆண்டவளே வாழ்க, சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க.

நான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

கல்லறை உள்ள இடத்தில் போய் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறது.

புதுமை!

ஓர் வற்றாத ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் திரளாய்ச் சொரிந்து வருகிறதுபோல, பரிசுத்த கன்னிகையின் பேரில் வைத்த உறுதியான பக்தி விசுவாசத்தில் நின்று ஞான நன்மைகள் எல்லாம் சம்பூரணமாய்ச் சொரிந்து வருகின்றது. இந்த சத்தியத்தை உணர்த்தும் எண்ணிக்கையில்லாத அற்புதங்களில் கொர்சீனு என்னும் புனித அந்திரேயாஸ் மனந்திரும்பின வரலாறை இங்கு குறிப்பாக எடுத்துக் காட்டுவோம்.

புனித அந்திரேயாஸ் பிறப்பதற்கு முன் அவருடைய பெற்றோர் தங்களுக்குப் பிறக்கப் போகிற முதல் பிள்ளையைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுப்போம் என நேர்ச்சை செய்திருந்தார்கள். ஆனால் முதல் பிள்ளையாய்ப் பிறந்த அந்திரேயாஸ் தம்முடைய தாய் தந்தையருடைய சுகிர்த கருத்துக்கு இசைந்து நடந்தவரல்ல, துஷ்டத் தோழரோடு சேர்ந்து பாவச் சேற்றில் அமிழ்ந்து அதிகப் பொல்லாதவரானார். சூதாடியும், உலக கேளிக்கைகளைத் தேடியும், சிற்றின்ப சுகங்களை நாடியும், அவர் நடந்ததுமின்றி, பொல்லாதவர்களுக்குள்ளே அதிக பொல்லாதவராய் இருந்தார். ஆகையால் தனது பக்தியுள்ள தாயார் தனக்கு எந்தச் சுகிர்த புத்திமதிகளைச் சொன்னாலும் அவைகள் அனைத்தையும் நிராகரித்து விடுவார். அந்த அம்மாள் கஷ்டப்பட்டு அவருக்கு நல்ல புத்தி வரும்படியாக இடைவிடாது தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடி மன்றாடி வந்தாள். அவ்வாறு வேண்டிக் கொண்டதன் பயனாக தான் கேட்ட மன்றாட்டை அடைந்தாள்.

ஓர்நாள் அந்திரேயாஸ் ஓர் பிரபல்யமான விளையாட்டுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும்போது தனது தாயார் அழுது திரளான கண்ணீர் விடுகிறதைக் கண்டு, கலங்கிய அவர் தன் தாயை நோக்கி, அழுகிற காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு அவள் சற்று நேரம் தாமதித்து சொன்னதாவது : "என் மகனே நீ பிறக்கிறதற்கு முந்தின் இரவில் ஓர் கனவு கண்டேன். அது என்னவென்றால் நான் ஒரு சிறு ஓநாயைப் பெற்றதாகவும், அது கார்மேல் என்னும் சபைச் சுவாமிமார்களுடைய கோவிலில் நுழைந்தவுடன் அந்த ஓநாய் அற்புத மாற்றமடைந்து ஓர் ஆட்டுக்குட்டியாய் போனதாகவும் கண்டேன். இதன் காரணமாக உன் தந்தையும் நானும் உன்னைத் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுத்தோம். ஆனால் நான் கனவில் கண்டபடியே, துர்நடத்தையினாலும், கொடிய கொடூரத்தினாலும் ஓர் சொல் கேட்காத நாய்க்குச் சரிசமானமாய் இருக்கிற உன்னைப் பெற்றதற்கு தினமும் அழுகிறேன். ஆகிலும் உன் நல்ல நடத்தையினாலும் சுகிர்த பக்தியினாலும் நீ ஓர் ஆட்டுக்குட்டியைப் போல் மாறிப் போவதைக் காண்பேனாகில் சந்தோஷமாய் மரிப்பேன்.

இந்த வார்த்தைகளை அந்திரேயாஸ் கேட்டு அஞ்சிப் பயந்து சற்று நேரம் திகிலடைந்து தேவகிருபையினால் முழுவதும் மனந்திரும்பி, தன் தாயை நோக்கிச் சொன்னதாவது: என் தாயே! கொடிய ஓநாயைப் போல் நடந்த நான் சாதுவான ஆடுபோல் ஆகிறதற்கு முன் நீங்கள் சாகமாட்டீர்கள். வெகுநாள் அந்த துஷ்ட மிருகத்தைப்போல் இருந்தேன். ஆனால் இப்பொழுதே உங்கள் கனவு நனவாவதைக் காண்பீர்கள். தேவ மாதாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தீர்கள் என்றீர்களே, இந்தப் பரம நாயகிக்கு நான் என்னை ஒப்புக்கொடுப்பதே நியாயம். நீங்கள் எனக்காகச் செய்த வேண்டுதல் வீணாகிவிடவில்லை என்கிறதைப் பற்றி இப்போது சந்தோஷமாயிருங்கள். நான் உங்களுக்குச் செய்த துரோகத்தையும், வருவித்த கஸ்தியையும், என் துர்க்கிரிகைகளையும் பரிவுடன் பொறுத்துக்கொண்டு எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

அந்திரேயாஸ் இந்த வார்த்தைகளை சொல்லியதும் புறப்பட்டு கார்மேல் என்னும் சபைக் குருக்களின் கோவிலுக்குப் போய் பரிசுத்த கன்னிகையின் பீடத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து தன்னைச் சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார். அதே நொடியில், தேவ கிருபையால் இவர் வேறு மனிதனாகி அந்த சன்னியாசிகளுடைய சபையில் சேர வேண்டுமென்று உறுதியான மனதோடு பிரதிக்கினை செய்தார். அப்படியே அச்சபையில் பிரவேசித்து அதில் கடின தவம் செய்து குருவாகி கடைசியில் மிகவும் பெயர் பெற்ற மேற்றிராணியாரானார். அவர் தமது வாழ்நாளெல்லாம் தேவமாதாவை மிகுந்த பக்தியோடு வணங்கி தேவமாதாவின் ஊழியன் என பிறர் தம்மை அழைக்க வேண்டுமென்று ஆசித்தார்.

நாம் எல்லோரும் இந்தப் பெரிய புனிதரைப்போல் நம்மைத் தேவமாதாவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுக்கக்கடவோம்.