கொலோசியருக்கு எழுதிய நிருபம் - அதிகாரம் 03

பழைய மனிதனை உரிந்துபோட்டுப் புது மனிதனை அணிந்துகொள்ளப் புத்திசொல்லி, புருஷன் பெண்சாதிகளுடைய கடமைகளைக் கற்பிக்கிறார். 

1. ஆகையால் நீங்கள் கிறீஸ்துநாதரோடு உயிர்த்தெழுந்திருக்கிறீர்களாகில், கிறீஸ்துநாதர் சர்வேசுரனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிற ஸ்தலமாகிய உன்னதத்தில் உள்ளவைகளைத் தேடுங்கள்.

2. பூமியில் உள்ளவைகளையல்ல, மேலாவில் உள்ளவைகளையே நாடுங்கள்.

3. ஏனெனில் மரித்தவர்களாயிருக்கிறீர்கள், உங்கள் ஜீவியம் கிறீஸ்துநாதரோடு சர்வேசுரனுக்குள் மறைந்திருக்கின்றது. 

4. உங்கள் ஜீவனாகிய கிறீஸ்துநாதர் தோன்றும்போது, நீங்களும் அவருடனேகூட மகிமையிலே தோன்றுவீர்கள்.

* 3-4. நீங்கள் ஞானஸ்நானத்தினாலே கிறீஸ்துநாதரோடு இவ்வுலகத்துக்கு மரித்தவர்களாகி, அவரோடு ஞான ஜீவியத்துக்கு உயிர்த்தவர்களாயிருக்கிறீர்கள். சர்வேசுரனுக்குப் பிள்ளைகளும், மோட்ச இராச்சியத்துக்குச் சுதந்திரவாளிகளுமானீர்கள். இஷ்டப்பிரசாதத்தின் ஞான உயிரை அடைந்திருக்கிறீர்கள். மோட்சத்திலே மகிமையான உயிரை அடையப்போகிறீர்கள். அந்த ஞான உயிரும் ஞான நன்மைகளும் இம்மையில் உலகத்தாருடைய, கண்ணுக்கு வெளிப்படாமல் மறைவாயிருக்கிறது. வெளிப்பார்வைக்கு மற்ற மனிதர்களைப்போலிருக்கிறீர்கள். இன்னமும் ஒருவேளை உலகமானது உங்களை நிந்தித்துப் புறக்கணித்துத் துன்பப்படுத்துமாக்கும். ஆனால் கிறீஸ்துநாதர் உலகத்தை நடுத்தீர்க்கவரும்போது நீங்களும் அவரோடேகூட அவருடைய மகிமைக்குப் பங்காளிகளாய், உங்களைப் புறக்கணித்துத் துன்பப்படுத்தின உலகத்தை நடுத்தீர்க்கவருவீர்கள். ஆகையால் இவ்வுலகத்தின் காரியங்களைச் சட்டை பண்ணாமல் பரலோகத்துக்குரியவைகளை இடைவிடாமல் நாடித்தேடுங்கள் என்று அர்த்தமாம்.

5. ஆகையால் உங்களுடைய இலெளகீக அவயவங்களைச் சாகடியுங்கள். அவையாவன: விபசாரம், அசுத்தம், காமம், துர் இச்சை, விக்கிரக ஆராதனையாகிய பொருளாசை.

* 5. விக்கிரகங்களுக்கு அடிமைத்தனமாகிற பொருளாசை என்பதற்கு எபேசியர் 5-ம் அதிகாரம் 5-ம் வசனம் காண்க.

6. இவைகளின் நிமித்தமே அவிசுவாச புத்திரர்மேல் தேவகோபம் வருகின்றது.

7. நீங்களும் முன் ஒருகாலத்திலே அவர்களோடே சஞ்சரிக்கும்போது இவைகளின்படி நடந்தீர்கள்.

8. இப்போதோவெனில் கோபம், எரிச்சல், வஞ்சகம், உங்கள் வாயில் வருந் தூஷணம், வெட்கத்துக்குரிய பேச்சுகள் ஆகிய சகலத்தையும் விட்டுவிடுங்கள்.

9. ஒருவருக்கொருவர் பொய்சொல்லாதிருங்கள். இப்படிப் பழைய மனிதனையும், அவன் கிரியைகளையும் உங்களிடத்தினின்று உரிந்துபோட்டு,

10. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய், அவரை அறியும் அறிவினால் புதுப்பிக்கப்படுகிற புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள். 

11. இதிலே புறஜாதியானென்றும் யூதனென்றுமில்லை; விருத்தசேதன முள்ளவனென்றும், விருத்தசேதனமில் லாதவயன்றுமில்லை; நாகரீகமற்றவ னென்றும், சீத்தியனென்றுமில்லை; அடிமையென்றும், சுயாதீனனென்று மில்லை; கிறீஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.

* 11. சீத்திய தேசத்தார் அக்காலத்திலே மற்ற தேசத்தாரெல்லோரையும்விட நாகரீகமற்றவர்களாக எண்ணப்பட்டிருந்தார்கள்.

12. ஆதலால், சர்வேசுரனால் தெரிந் துகொள்ளப்பட்ட நீங்கள் பரிசுத்தரும், பிரியமுள்ளவர்களுமாய்த் தயாளமான உள்ளத்தையும், சாந்தத்தையும், தாழ்ச்சி யையும், அடக்கவொடுக்கத்தையும், பொறுமையையுந் தரித்துக்கொண்டு, 

13. ஒருவரொருவரைத் தாங்கி, எவ னுக்காவது மற்றொருவன்மேல் முறைப் பாடிருந்தால், அதைப் பொறுத்துக் கொண்டு, ஆண்டவர் உங்களை மன்னித் ததுபோல் நீங்களும் உங்களுக்குள் ஒருவ ரொருவரை மன்னித்துக்கொள்ளுங்கள்.

14. ஆனால் இவையெல்லாவற்றிற்கும் மேலாக உத்தமதனத்தின் பந்தன மாகிய பரம அன்பைக் கொண்டிருங்கள்.

15. கிறீஸ்துநாதருடைய சமாதானம் உங்கள் இருதயங்களில் சந்தோஷ அக்களிப்புக்கொள்ளட்டும். இதற்கா கவே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். இதற்காக நன்றியறிந் திருங்கள்.

16. கிறீஸ்துநாதருடைய வாக்கியம் உங்களிடத்தில் சம்பூரணமாய்ச் சகல ஞானத்தோடுங் குடிகொண்டிருக்கக்கடவது. அப்படியே நீங்கள் ஒருவரொருவருக்குப் போதித்து, புத்தி சொல்லி, சங்கீதங்களிலும், கீர்த்தனைகளிலும், ஞானப்பாட்டுகளிலும் சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரங் களை உங்கள் இருதயங்களில் பாடிக் கொண்டுவாருங்கள்.

17. வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதெதைச் செய்தாலும், அவையெல்லாம் ஆண்டவரா கிய சேசுக்கிறீஸ்துவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாய்ப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு நன்றியறிந்த ஸ்தோத் திரம் பண்ணுங்கள். (1 கொரி. 10:31.)

18. மனைவிகளே, கடமைப்படி உங்கள் புருஷர்களுக்கு ஆண்டவருக்குள் கீழ்ப்படிந்திருங்கள். (எபே. 5:22; 1 இரா. 3:1.)

19. பூமான்களே, உங்கள் மனைவிகளைச் சிநேகியுங்கள். அவர்களுக்குக் கசப்பாயிராதேயுங்கள்.

* 19. உங்கள் மனைவிகளுக்குக் கசப்பாயிராமல் என்பதற்கு உங்கள் பேச்சுவார்த்தை நடபடிக்கைகளிலும், கண்டித்துப் புத்திசொல்லவேண்டிய விஷயங்களிலும் மனவருத்தத்தை உண்டுபண்ணாமல், பிரியத்தோடும் தயாளத்தோடும் நடத்தி வரவேண்டுமென்பது கருத்தாகும்.

20. பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலும் கீழ்ப்படியுங்கள். இது ஆண்டவருக்குப் பிரியமானது. (எபே. 6:1.)

21. தகப்பன்மார்களே, உங்கள் பிள்ளைகள் மனத்தைரியமற்றுப் போகாதபடிக்கு, அவர்களுக்கு எரிச்சலை யுண்டாக்காதேயுங்கள். (எபே. 6:4.)

22. ஊழியர்களே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலும் கீழ்ப்படிந்து, மனிதர்களுக்குப் பிரியப்படுகிறவர்களைப்போல் பார்வைக்கு மாத்திரம் ஊழியஞ்செய்யாமல், சர்வேசுரனுக்குப் பயந்தவர்களாய் நேர்மையான இருதயத்தோடு அவர்களுக்கு ஊழியஞ்செய்யுங்கள். (தீத்து. 2:9.) 

23. நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று செய்யாமல், ஆண்டவருக்கென்று மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

24. ஆண்டவரிடத்தில் சுதந்திரத்தின் சம்பாவனையைப் பெற்றுக்கொள்வீர்களென்று அறிந்து, கிறீஸ்துநாதருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

* 23,24. உரோமையர்களுக்குள் அடிமைகள் என்ன வேலை செய்தாலும் அவர்களுக்குச் சுதந் திரமென்று ஒன்றுமில்லை. சர்வேசுரனுடைய ஊழியர்களாகிற கிறீஸ்தவர்கள் எவ்விதத் தாராயிருந்தாலும் ஆண்டவருடைய இராச்சியத்துக்குச் சுதந்திரக்காரராயிருக்கிறார்கள்.

25. ஏனெனில் அநியாயஞ் செய்கிற எவனும் தான் செய்த அக்கிரமத்துக்குத் தக்க பலனைப் பெற்றுக் கொள்ளுவான். சர்வேசுரனிடத்திலே பாரபட்சமில்லை. (உரோ. 2:6.)