சின்னப்பருடைய போதகம் மற்ற அப்போஸ்தலர்களால் அங்கீகரிக்கப்பட்டதும், புறஜாதியார் யூதர்களுக்குரிய பழைய முறைமைகளை அநுசரிக்கக் கடமைப்பட்டவர்களல்ல என்பதும்.
1. பதினாலு வருஷம் சென்றபின்பு நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் ஜெருசலேமுக்குப் போனேன்.
* 1. இந்தப் பிரயாணம் அவர் மனந்திரும்பின 14 வருஷத்துக்குப்பின் சம்பவித்தது. (அப். நடபடி. 11:30; 12:25 காண்க.)
2. தேவ அறிவிப்பின்படி நான் அங்கே போய், புறஜாதியாருக்கு நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன். ஆயினும் நான் ஓடுகிறதும் ஓடினதும் ஒருவேளை வீணாகாதபடிக்கு அங்கே பெரியவர்களாய் எண்ணப்பட்டிருந்தவர்களுக்கும் தனிப்பட விவரித்துக் காண்பித்தேன்.
* 2. இதிலே அர்ச். சின்னப்பர் தாம் போதிக்கிற போதகம் ஒருவேளை தப்பிதமாயிருக்குமோவென்று ஒருபோதும் நினைத்தவரல்ல. ஆயினும் தாம் போதிப்பது சத்தியமான போதனையென்பதற்கு மற்ற அப்போஸ்தலருடைய அத்தாட்சியில்லாதிருந்தால், முன் கலாத்தியருக்குள்ளே சில கள்ளப்போதகருடைய துர்ப்போதனையால் சம்பவித்தது போல, மற்றச் சபையாருக்குள்ளும் தமது போதகத்தின்மேல் சந்தேகமுண்டானால், தாம் பட்ட பிரயாசம் வீணாய்ப்போகுமென்று யோசித்து, மற்ற அப்போஸ்தலர் தம்முடைய போதகத்தை ஏற்றுக்கொள்ளும்படிக்கு அதை அவர்களுக்கு விவரித்தார். அன்றியும் ஒருவன் சர்வேசுரனிடத்திலிருந்து என்ன ஞான போதகத்தைப் பெற் றிருந்தாலும், திருச்சபையின் தலைவரிடம் அனுமதி பெறாமல் போதிக்கப்படாதென்று காட்டும்படியாகவும் இப்படிச் செய்தார்.
3. ஆகிலும் என்னுடனே கூட இருந்த தீத்து புறஜாதியானாயிருந்தபோதிலும், விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும் படிக்குக் கட்டாயம் பண்ணப்படவில்லை.
* 3. மனந்திரும்பின அஞ்ஞானிகள் முதலாய் பழைய ஏற்பாட்டில் கற்பிக்கப் பட்ட விருத்தசேதனத்தைப் பெறவேண்டுமென்று கள்ளப் போதகர்கள் சொல்லி, கலாத்தியரைக் கட்டாயம்பண்ணினதினிமித்தம், அவர்களுக்குள்ளே பெருங் கலகமுண்டாக்கியிருந்தார்கள். இதை அவர் மறுக்கும்படி தம்மோடேகூட ஜெருசலேமுக்குக் கூட்டிக்கொண்டுபோன தம்முடைய சீஷனாகிய தீத்து என்பவர் அஞ்ஞானத்தில் பிறந்து மனந்திரும்பினவராயிருந்தாலும், அவருக்குமுதலாய் விருத்தசேதனஞ்செய்ய வேண்டுமென்று அப்போஸ்தலர்கள் கற்பிக்கவில்லையென்று காண்பிக்கிறார்.
4. ஆகிலும் இது சேசுக்கிறீஸ்துநா தரில் நமக்குள்ள சுயாதீனத்தை வேவு பார்த்து நம்மை அடிமைத்தனத்துக் குள்ளாக்கும்பொருட்டு தந்திரமாய் நமக் குள் நுழைந்துவந்த கள்ளச்சகோதரர் நிமித்தம் இப்படியானது. (அப். 15:24.)
* 4. கள்ளச் சகோதரர் என்பது அந்தியோக்கியாபுரியிலிருந்து வந்து, யூத ஆசாரங்களை அகத்தியம் அநுசரிக்கவேண்டுமென்று பிதற்றின யூத கிறீஸ்தவர்களாம்.
5. ஆனாலும் சுவிசேஷத்தின் உண் மை உங்களிடத்திலே நிலைநிற்கும்படி அவர்களுக்கு நாங்கள் ஒரு நிமிஷ முத லாய்க் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
6. பெரியவர்களாய் எண்ணப்பட்டவர்களைக் குறித்தோவென்றால், முன் னே அவர்கள் எப்படிப்பட்டவர்க ளாய் இருந்தார்கள் என்பதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. சர்வேசுரன் முகத்தாக்ஷணியம் பார்க்கிறவரல்ல; அப்படிப் பெரியவர்களாய் எண்ணப் பட்டவர்களும் எனக்கு ஒன்றும் படிப் பித்ததில்லை. ( உபாக.10:17; அப். 10:34; உரோ. 2:11; 1 இரா. 1:17.)
* 6. இங்கே அர்ச். சின்னப்பர் அப்போஸ்தலர்களைக்குறித்துப் பேசுகிறாரென்று தெளிவாயிருக்கிறதுமல்லாமல், 9-ம் வசனத்திலே அவர்களில் மூன்றுபேர்களைக் குறித்துக்காட்டுகிறார். அவர்கள் சேசுநாதராலே அப்போஸ்தலராகத் தெரிந்துகொள்ளப்படுவதற்குமுன் படிப்பறியாதவர்களும், மீன் பிடிக்கிறவர்களும், ஏழைகளுமாயிருந்தார்களென்பதைத் தாம் கவனியாமல், இப்போது அவர்கள் திருச்சபையிலே தூண்களாகவும் தலைவர்களாகவும் சுவிசேஷப் போதகர்களாகவும் இருக்கிறதை மாத்திரம் கவனித்துத் தாம் சுவிசேஷத்தைப் போதிக்கும் வகையை அவர்களுக்கு வெளிப்படுத்தி, அவர்கள் அதன் பேரில் செய்யும் தீர்ப்புக்குள்ளாயிருக்கச் சம்மதிக்கிறார். ஆகிலும் அவர்கள் அவருக்கு யாதொன்றையும் போதித்ததுமில்லை, யாதொன்றையும் திருத்தினதுமில்லை என்றர்த்தமாம்.
7. இதுவுமன்றி இராயப்பரை விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாகச் செய்தவர் புறஜாதிகளுக்கு என்னை அப்போஸ்தலனாகச் செய்தபடியால்,
8. விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி இராயப்பருக்குச் சுவி சேஷம் ஒப்பிக்கப்பட்டதெப்படியோ, அப்படியே விருத்தசேதனமில்லாதவர் களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கு ஒப்பிக்கப்பட்டதென்று அவர்கள் கண்ட போது,
* 7-8. இந்த வசனங்களில் விருத்தசேதனமுள்ளவர்களென்பது யூத ஜனங்களையும், விருத்தசேதனமில்லாதவர்களென்பது யூதரல்லாத புறஜாதி ஜனங்களையுங் குறிக்கிறது. அர்ச். இராயப்பர் யூதருக்குச் சுவிசேஷத்தைப் போதிக்கும்படி தெரிந்துகொள்ளப் பட்டதெப்படியோ, அப்படியே அர்ச். சின்னப்பரும் புறஜாதியாருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாரென்பதினாலே, அலுவல் பிரித்துக்கொடுக்கப் பட்டதொழிய, அர்ச். இராயப்பருக்குச் சர்வ திருச்சபையின்மேலும் கொடுக்கப்பட்ட அதிகாரத்துக்குக் குறைவல்ல என்றறிக.
9. தூண்களாக எண்ணப்பட்ட இயாகப்பரும், கேபாவும், அருளப்பரும் எனக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதத் தை அறிந்து, நாங்கள் புறஜாதியார் களுக்குள்ளும், தாங்கள் விருத்தசேதன முள்ளவர்களுக்குள்ளும் சுவிசேஷத் தைப் போதிக்கும்படி எங்களுக்குள் ளிருக்கவேண்டிய அன்னியோன்னிய ஒற்றுமையின் அடையாளமாக, எனக் கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
10. தரித்திரர்மேல் நினைவுண்டாயிருக்கும்படிக்கு மாத்திரம் கேட்டுக்கொண்டார்கள்; நானும் அப்படியே செய்யக் கருத்துள்ளவனாயிருந்தேன்.
11. ஆனால் கேபா அந்தியோக்கியாவுக்கு வந்தபோது, அவர் தண்டனைக்கு ஏதுவானதால், நான் அவர் முகதாவிலே எதிர்த்தேன்.
12. அதெப்படியென்றால், இயாகப்பராலே அனுப்பப்பட்ட சிலர் வருமுன்னே அவர் புறஜாதியாரோடே போஜனம் பண்ணிக்கொண்டிருந்தார். அவர்கள் வந்தபிறகோவெனில் விருத்த சேதனமுள்ளவர்களுக்குப் பயந்து புற ஜாதியாரைவிட்டு விலகியிருந்தார்.
13. அப்படியே மற்ற யூதர்களும் அவருடைய பாசாங்குக்கு ஒத்திருந்ததினால் பர்னபாவும் அந்தப் பாசாங்குக்குள் அவர்களால் இழுக்கப்படும் படியாயிற்று.
14. ஆகையால் அவர்கள் சுவிசேஷ சத்தியத்தின்படி சரியாய் நடக்கிறதில்லையென்று கண்டு, எல்லாருக்கு முன்பாக நான் கேபாவை நோக்கி: யூதனாகிய நீர் யூதர் முறைமைப்படி நடவாமல், புறஜாதியாரின் முறைமைப்படி நடக்கும் போது, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் கட்டாயம் பண்ணுகிறதெப்படி என்றேன்.
* 14. அர்ச். இராயப்பரிடத்திலே அர்ச். சின்னப்பர் கண்டித்த குற்றம் அவருடைய போதகத்தைப்பற்றியல்ல. ஆனால் அவர் யூதர்களுக்கு இளக்காரம் காட்டினதைப் பற்றித்தான். அதேதென்றால், விருத்தசேதனமுள்ள யூதர்கள் முன்பாக விருத்தசேதனமில்லாமல் அஞ்ஞானத்திலிருந்து மனந்திரும்பினவர்களோடு போஜனபானம் பண்ண விலகிக்கொண்டிருந்தார். அப்படிச் செய்வதினால் விருத்தசேதன முள்ளவர்கள் விருத்தசேதன மில்லாதவர்களைவிட மேன்மைப் பட்டவர்களென்று மற்றவர்கள் எண்ணுவதற்குக் காரணமாயிருந்ததினாலே அது ஒருவித துர்மாதிரிகையாயிருந்தது. ஆகையால் கண்டித்தார். இப்படிக் கண்டிப்பது அர்ச். இராயப்பருடைய தலைமை அதிகாரத்துக்கு விரோதமானதல்ல. ஏனெனில் கீழ்ப்பட்டவர்களும் மேற்பட்டவர்களை மரியாதையோடு அநேக விஷயங்களில் கண்டிப்பது வழக்கமே. ஆனாலும் அர்ச். இராயப்பர் இப்படிச் செய்தாலும் அப்.நடபடி. 16:3; 18:18; 21:23-ல் கண்டிருக்கிறபடி அர்ச். சின்னப்பரும் யூதர்களுக்கு இடறலாயிருந்தவரல்ல. கால விஷயங்களைக் குறித்து அவர்களுக்கு இளக்காரத்தைக் காட்டியிருக்கிறாரொழிய மற்றப்படியல்ல.
15. நாமோ புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிறோம்.
16. ஏனெனில் சேசுக்கிறீஸ்துநாதரைப் பற்றும் விசுவாசத்தினாலேயன்றிப் பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுகிறதில்லையென்று அறிந்து, நாம் பிரமாணத்தின் கிரியைகளினாலேயல்ல, கிறீஸ்துநாத ரைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான் களாகும்படிக்குக் கிறீஸ்து சேசுநாத ரிடத்தில் விசுவாசிகளானோம். ஆகை யால் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளி னாலே எந்த மனிதனும் நீதிமானாவ தில்லை. (உரோ. 3:20.)
17. கிறீஸ்துவுக்குள் நீதிமான்களாக் கப்படும்படி தேடுகிற நாமும் பாவிகளா கக் காணப்படுவோமாகில், கிறீஸ்து நாதர் பாவத்துக்குக் காரணமாவாரோ? அல்லவே.
* 17. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளன்னியில் கிறீஸ்துநாதரைப் பற்றும் விசுவாசத்தி னாலே, நீதிமான்களாகத்தேடின நாம் நீதிமான்களாகமாட்டாமல் இன்னும் பாவத்திலே கிடந்தால் அதாவது அந்தக் கள்ளப்போதகர் பிதற்றுகிறதுபோல, பழைய ஏற்பாட்டின் ஆசார முறைமைகளை அநுசரியாமல் கிறீஸ்துநாதர்மேலுள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாகக்கூடாதாகில், அந்த ஆசார முறைமைகளை ஒழித்து நீக்கின கிறீஸ்துநாதரே பாவத்துக்குக் காரணமென்று சொல்லவேண்டியிருக்கும். இது மகா தப்பறையானதினாலே அந்த முறைமைகளை அநுசரிக்கவேண்டுமென்பது பிசகென்று ஒப்பிக்கிறார்.
18. நான் இடித்துப்போட்டவைகளையே திரும்பக் கட்டுவேனாகில், அப்போது நானே மாறுபாடுள்ளவனாகிறேன்.
19. ஏனெனில் நான் சர்வேசுரனுக் காகப் பிழைக்கும்படி நியாயப்பிரமா ணத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவனாயிருக்கிறேன். கிறீஸ்துநாத ருடனேகூட சிலுவையிலே அறையப் பட்டவனாயிருக்கிறேன்.
* 19. அர்ச். சின்னப்பர் கலாத்தியரைப்பார்த்து: நான் அஞ்ஞானத்திலே பிறந்தவனல்ல. மோயீசனுடைய பிரமாணத்துக்கு உட்பட்டவனாகப் பிறந்தேன். அப்படியிருந்தும் சேசுக் கிறீஸ்துநாதரைப் பற்றும் விசுவாசத்தினாலே மோயீசனுடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டு சேசுநாதரைப் பற்றிக்கொண்டேன். அந்தப் பிரமாணமே என்னை சேசுநாதரிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தது. அந்தப் பிரமாணத்துக்கு சேசுநாதர்தான் முடிவு. ஆகையால் சர்வேசுரனுக்கென்று உயிர்வாழும்படிக்குக் கிறீஸ்துநாதருடைய பிரமாணத்தைக்கொண்டு பழைய பிரமாணத்துக்கு மரித்தவனாயிருக்கிறேன் என்கிறார்.
20. நான் ஜீவிக்கிறேன்; ஆனாலும் நானல்ல; கிறீஸ்துநாதர்தான் என்னில் ஜீவிக்கிறார். ஏனெனில் நான் இப்போது சரீரத்தில் ஜீவிக்கிறதோ, இது என்னைச் சிநேகித்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவசுதனைப் பற்றும் விசுவாசத்தினாலே ஜீவிக்கிறேன்.
* 20. மனுஷ உயிர் என்னிடமிருந்தபோதிலும், சேசுக்கிறீஸ்துநாதர் தம்முடைய இஷ்டப்பிரசாதத்தினாலே என்னிடம் வசித்து, என் நினைவு பற்றுதலெல்லாம் ஆண்டு நடத்திவருவதால், அவரே என்னிடத்தில் ஜீவிக்கிறார் என்று அர்ச். சின்னப்பர் சொல்லுகிறாரென்றறிக.
21. நான் சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தைப் புறக்கணித்துத் தள்ளமாட்டேன். நியாயப்பிரமாணத்தினால் நீதியுண்டாகுமாகில் கிறீஸ்து மரித்தது வீணாயிருக்குமே.