அர்ச்.சூசையப்பர் வணக்கமாதம் - மார்ச் 01

அர்ச்சியசிஷ்ட சூசையப்பர் உயர்ந்த நிலைக்கு தெரிந்து கொள்ளப்பட்டதை தியானிப்போம்

தியானம்

வல்லமை படைத்த இறைவன், பாவ இருளில் மூழ்கி கிடக்கம் மனித குலத்திற்கு மீட்பளிக்க விரும்பியதால் இயேசுக் கிறிஸ்துவை பூவுலகிற்கு அனுப்பி பாடுபட்டு மரித்து அதன்மூலம் நமக்கு முடிவில்லா வாழ்வை தரவிரும்பி பெண்களின் தூயவளான மரியன்னையை அவருக்கு தாயாராகத் தெரிந்து கொண்டார். இறைவன் தன்னருளால், வானதூதர்களையும், புனிதர்களையும் மரியன்னை காண்பதற்கு ஆசிவழங்கினார். அன்னையை ஜென்ம பாவமில்லாமல் பூமியில் பிறக்கச் செய்து, தூய ஆவியால் நிரப்பி வானுலகிலும் பூவுலகிலும் உயர்வடையச் செய்தார். தூய ஆவியால் மரியன்னை கருவுற்று இயேசுகிறிஸ்துவைப் பெற்றெடுப்பதற்கு ஒர் துணையும், இயேசுகிறிஸ்துவுக்கு பூவுலகில் ஒரு தந்தையும், வானுலகில் நீதிமானும் தேவைப்பட்டதால், சூசையப்பரை இறைவன் தேர்ந்தெடுத்து மரியன்னைக்கு கணவராகவும் குழந்தை இயேசுவுக்கு தந்தையுமாக்கினார். தக்க வயதை அடையும்வரை பேணிகாக்கும் நல்லதொரு தந்தையாக இவரை இறைவன் நியமித்தார்.

இறைவன், தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும், அருளையும், ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார். தூய மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு, வானுலகிலும் பூவுலகிலும், யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும், தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இறைவன் யாரை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறாரோ அவர்களுக்கு அளப்பரிய ஆசியையும், அருளையும் நல்குவதோடு நற்குணததையும கொடையாக அளிக்கிறார். அரசனாக முடிசூட்டிகொள்கிறவர்கள் நல்லாட்சி செய்யவும், அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் இறைப்பணியை செவ்வனே செயலாற்றவும், வேறு பணிகளில் ஈடுபடுவோர் தத்தம் பணிகளை திறம்பட ஆற்றவும் இறைவன் விரும்புகிறார். எல்லா பணிகளுக்கும் மேலான பணிக்கு தெரிவு செய்யப்பட்ட புனித சூசையப்பருக்கு இறைவன் அவருடைய பெயர் என்றும் நிலைக்க மேலான அருளையும் ஆற்றலையும் அவருக்களித்தார்.

புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து, தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார். அவர் பொறுமை, நம்பிக்கை, விசுவாசம், இறைஅன்பு, பணிவு ஆகிய நற்குணங்களைக்கொண்டு வாழ்ந்தார். அதனால் அவரை இறைவன் தூயவர்களை விடவும் மேலாக உயர்த்தினார். இதன்மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நம்மை இறைவன் என்றென்றும் அன்புசெய்து வான்வீட்டைத் தருவதற்காக படைத்தார் என்பதுதான். அவர் கிறிஸ்தவர்களல்லாதோரையும் தம் அருளால் கிறிஸ்தவர்களாக்கினார். இறைவன் சகல வரங்களையும் அளித்து திருச்சபையை நிலைநிறுத்தி அருட்சாதனங்கள் வழியாக தம் அருங்கொடைகளை அளித்து வருகிறார்.

புனித ஞானப்பிரகாசியார், தமது இதயத்தைவிடவும் தான் கிறிஸ்தவனாய் இருப்பதே பெரிது என்று கூறியதுபோல் நாமும் எல்லா நலன்களைவிடவும் கிறிஸ்தவனாயிருப்பதே பெரிது என்பதை உணர்ந்து அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு வேதனை கொடுப்பதை நாம் அறிந்து, தவறு நடவாமல் இருப்போம். அவரவர்க்கு இறைவன் அளித்துள்ள பணிகளில் பிரமாணிக்கமாய் இருந்து அவரவர் கடமைகளில் புனித சூசையப்பரைப்போல் சரிவர செய்தால் அனைவரும் புனிதராவோம்; எப்பொழுதும் வான்விட்டில் எல்லையில்லா ஆனந்தமடைவோம். தன்னுடைய பணியை சரிவர செய்யாமல், வேறுபணியில், நிலையில் நன்றாக இருப்பேன் என எண்ணும் கிறிஸ்தவர்கள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். துறவறத்தார் தமக்குரிய ஒழுங்குகளை கடைப்பிடித்தால் மட்டுமே அவரின் வீட்டை அடைவார்கள். அதனால் கிறிஸ்தவர்கள் எல்லோரும் புனித சூசையப்பரை கண்டுணர்ந்து அவரவர் கடமைகளை சரிவர செய்வோம் என உறுதி கொள்வோம்.

புதுமை

பிரான்சு நாட்டில் லியோன் என்ற மாநகரில் அருளம்மாள் என்ற பத்தியுள்ள கன்னிகை இருந்தார். இவர் புனித ஊர்சுலா சபையைச் சேர்ந்த ஒரு துறவற இல்லத்தின் தலைவியாக இருந்தபோது கொடிய நோயால் அவதியுற்றார். அவர் புனித சூசையப்பரிடம் அதிக பக்தி கொண்டிருந்தார். நோய்வாய்ப்பட்டபோதும் மிக அதிக பக்தியோடு செபிப்பார். நோயின் கொடுமையால் நோயில்பூசுதல் எனும் அருட்சாதனத்தினைப் பெற்று அசைவற்று இருந்தபோது, பிற கன்னியர்கள் அவர் சாகப் போகிறார் என காத்திருக்கும்போது, திடீரென ஒர் அதிசய காட்சியை அவர் படுத்திருந்த அறையில் கண்டனர்.

அதிக ஒளியும், நறுமணமும், இன்னிசையும் உண்டாகி வான்வீடு தெரிந்தது. அப்போது அங்கு தெரிந்த மெத கூட்டத்தினிடையே அவருடைய காவல்தூதர், மகிமைநிறைந்த ஒரு வாலிப தோற்றத்தொடும், தங்கம்பொல் ஒளிவீசும் தலை முடியோடும், கையிலே எரியும் மெழுகுதிரியை பிடித்துக்கொண்டு காட்சி அளித்தார். அவரருகில் சூரிய ஒளியை மங்கச செய்யும் ஒளியுள்ள முகத்தோடும், பூவுலக மன்னர்களைவிட மேலான அலங்காரத்துடனும் புனித சூசையப்பர் வந்தார்.

சூசையின் முகம் இளவயது மனிதனுடைய சாயலாகவும், தலைமயிர் பொன்னிறமாகவும், அணிந்திருந்த ஆடை வெண்மையாகவும், அரசத் தோற்றத்துடனும் தோன்றியது. புனித சூசையப்பர் இரக்கமாய் அக்கன்னிகையிடம், "உன்னை மோட்ச இன்பத்தில் திளைக்க செய்வேன்" என்று கூறி பரிமளத் தைலத்தால் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை தடவினார். அவர் தொட்ட உடனே அச்சகோதரி நோய் குணமடைந்து முன்பை விடவும் பலசாலியானார். புனித சூசையப்பர் அவர்களை தயவாய் ஆசிர்வதித்து மறைந்தார்.

உடனே அக்கன்னிகை முழந்தாள்படியிட்டு புனித சூசையப்பரை வணங்கினாள். பின்னர் பிற கன்னியர்களைப்போல் தனக்குரிய கடமைகளை நலமடைந்த சகோதரி தவறாது செய்து வந்தார். ஆனால் அவரை இதுவரை கவனித்து வந்த மருத்துவரோ இன்றோ நாளையோ இவர் இறக்கலாம் என தொடர்ந்து கூறியதால், இப்போது அச்சகோதரிக்கு நடந்துள்ளதை "இது அதிசயம்தான்" என்று எழுதி கொடுத்தார். மேலும் அச்சகோதரி பலவீனப்பட்ட இடத்தில் புனித சூசையப்பர் தடவிய நறுமண தைலத்தை துணியில் துடைத்து வைத்திருந்தார். அந்தத் துணியின் நறுமணம் வீசியதோடு பல நோயாளிகள் அதனைத் தொட்டதும் குணமடைநதனர. எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது துன்ப வேளைகளில் அவரைத் தேடி செல்வோம். (3பர, அரு, பிதா)

ஜெபம்

எல்லா தூயவர்களை விடவும் மேலான நிலைக்கு தெரிந்துகொள்ளப்பட்ட புனித சூசையப்பரே! உம்மை வணங்கி மகிமைப்படுத்துகிறோம். இறைவன் உமக்களித்த பணியை சரிவர செய்ததால் நீர் தூயவர்களுக்கும் மேலான தூயவரானிர் உமது மேலான உயர்வையும், புனிதத்துவத்தையும் பார்த்து உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் கிறிஸ்தவரென்ற பெயரை தூய்மையாய் காத்து அதற்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டிய உதவி புரிந்தருளும், எங்களைப்படைத்து காத்து சகல உதவிகளையும், அருளையும் தந்துகொண்டி ருக்கிற உமது மகனாகிய இயேசுகிறிஸ்துவிடம் எங்களுக்காக மன்றாடும்படி உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

இன்று சொல்ல வேண்டிய செபம்

தூய மரியன்னையின் கணவரான புனித சூசையப்பரே வாழ்க! இயேசுவின் அன்புத் தந்தையாகிய புனித சூசையப்பரே வாழ்க! இறைவனின் அதிகாரத்தை செயல்படுத்தத் தெரிந்துகொள்ளப்பட்ட புனித சூசையப்பரே வாழ்க!

செய்ய வேண்டிய நற்செயல்


புனித சூசையப்பர் பீடத்தினை மலர்களால் அலங்கரிப்பது.