முதல் வெள்ளி, முதல் சனி பக்தி

திருப்பலிக்குப் பிறகு பாத்திமா செய்திகளே ஈடேற வழி என்றார் பாப்பரசர் 12 ஆம் பத்திநாதர்.

ஆண்டவரும், அன்னையும் ஏக்கத்தோடு நம்மிடம் எதிர்பார்ப்பது முதல் வெள்ளி, முதல் சனி பக்தி. இயேசுவின் திரு இருதயத்திற்கு ஏற்படும் நிந்தை களுக்குப் பரிகாரமாக 1675ல் முதல் வெள்ளி பக்தியும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகார மாக 1917இல் முதல் சனி பக்தியும் கடவுளால் கேட்கப் பட்டது.

நன்றாகக் கவனியுங்கள். ஒரு மாதத்தின் இரண்டு நாட்களைத் தங்களுக்கு ஆறுதல் தரும்படி ஒதுக்கித் தரக் கேட்கிறார்கள் மாதாவும் ஆண்டவரும். அந்த இரண்டு நாட்களிலும் கூட இயேசுநாதரிடம் இருந்தும், மாதாவிடம் இருந்தும் எதையாவது சுயநலத்தோடு பெறமுடியுமா என்று பக்தி அனுசரிப்பது வெட்கத்துக்கு உரியது.

அந்த இரு நாட்களும் கடவுளும், கடவுளின் தாயும் நம்மிடம் ஆறுதல் எதிர்பார்க்கின்ற நாட்கள். மாதத்தின் 28 நாட்கள் அவர்களிடம் பெறுகின்ற நாம், அந்த இரு நாட்களும் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கிற நாட்கள்!

நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, ஆண்டவர் இயேசுவின் திரு இருதயத்திற்கு எதிரான நிந்தைகளுக்குப் பரிகார மாக நற்கருணை உட்கொள்வது முதல் வெள்ளி பக்தி. நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தைப் பரிகாரமாக நற்கருணை உட்கொள்வதும், ஜெபமாலை ஜெபிப்பதும், மாதாவோடு ஒரு கால் மணி நேரம் தேவ இரகசியங்களைச் சிந்தித்தபடி செலவிடுவதும் முதல் சனி பக்தி.

இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒரு பாவசங்கீர்த்தனம் போதும். முதல் வெள்ளி, முதல் சனி பக்திகள் கடவுளின் அருளையும், இரக்கத்தையும், மன்னிப்பையும் உலகிற்குப் பெற்றுத் தர கத்தோலிக்கர்களுக்குக் கடவுள் தரும் அரிய வாய்ப்பு. இயேசுவுக்கும் மாதாவுக்கும் ஆறுதல் தரும் நாட்களாக இந்த இரு நாட்களையும் பயன் படுத்த முயற்சிப்போம்.

இந்த இரு நாட்களிலும் வேறு காரியங்களில் கவனம் செலுத்தாமல் இருப்போம்.