55. அவர் மெய்யான மனுஷனோ?
ஆம். அவர் நம்மைப் போல் ஆத்துமத்தையும், சரீரத்தையும் உடையவராய் இருப்பதால் அவர் மெய்யான மனுஷன்தான்.
1. சேசுநாதர் மெய்யான மனுஷன் என்று எப்படி எண்பிக்கலாம்?
சேசுகிறீஸ்துநாதர் மெய்யான சர்வேசுரனாயிருப்பதும் தவிர மெய்யான மனிதனுமாயிருக்கிறார் என்பது விசுவாச சத்தியம்.
பின்வரும் நியாய ஆதாரங்கள் சேசுநாதர் மெய்யான மனிதர் என்னும் சத்தியத்தை எண்பிக்கப் போதுமானவை:
(1) திருச்சபையின் மாறாத போதகம்,
(2) பழைய ஏற்பாட்டின் அறிவிப்பு,
(3) தீர்க்கதரிசனங்கள்,
(4) புதிய ஏற்பாட்டின் வாக்கியங்கள்,
(5) நம் பகுத்தறிவின் அத்தாட்சி.
2. திருச்சபையின் போதகம் என்ன?
சேசுநாதருக்கு ஒரே ஒரு சுபாவந்தான் உண்டென்று சொன்னவர்ளைத் திருச்சபை சபித்திருக்கிறது.
3. பழைய ஏற்பாட்டின் அறிவிப்பு என்ன?
உலக இரட்சகர் மனித சந்ததியினின்று பிறப்பாரென்று பழைய ஏற்பாட்டில் பற்பல விசை சொல்லியிருக்கின்றது. “பூமியிலுள்ள சகல பிரசைகளும் உன் சந்ததிக்குள்ளே ஆசீர்வதிக்கப் படும்” என்று ஆபிரகாமுக்குச் சர்வேசுரன் திருவுளம் பற்றினார் (ஆதி. 22:18; 26:4; 12:3).
4. தீர்க்கதரிசனங்களின் அத்தாட்சி என்ன?
தீர்க்கதரிசிகள் இரட்சகர் சீவியத்தைப் பற்றி அற்ப விசேஷங்களை முதலாய் அறிவித்தார்கள். அவைகள் சேசுநாத ருடைய மனுUகத்தைச் சார்ந்தவர்கள். “என் ஆகாரத்திற்குப் பித்தைக் கொடுத்தார்கள்; என் தாகத்திற்குக் காடியைக் கொடுத்தார்கள்” (சங்.68:22). “என்னைப் பாடுபடுத்துபவர்களுக்கு என் தேகத்தைக் கையளித்தேன், என் தாடியைப் பிய்ப்பவர்களுக்கு என் தாடியைக் கட்டினேன்; நிந்தை கூறுவோருக்கும், காறி உமிழ்வோருக்கும் என் முகத்தைத் திருப்பினேனில்லை” (இரா. 1:6).
5. புதிய ஏற்பாட்டின் போதகம் எது?
சேசுநாதர் மெய்யான மனுஷன் என்பதை புதிய ஏற்பாடு துலக்கிக் காட்டுகிறது. “வார்த்தையானவர் மாம்சமுமானார்; நம்முடனே வாசமாயிருந்தார்” (அரு.1:4). “என் கரங்களையும், பாதங்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள். ஏனெனில் மாமிசமும், எலும்புகளும் எனக்கு இருக் கிறதாக நீங்கள் காண்கிறதுபோல் ஓர் பூதத்துக்குக் கிடையாது” (லூக். 24:39). “இவர் மாம்சமானமட்டில் தாவீதின் சந்ததியில் அவருக்கு உண்டானவர்” (உரோ. 1:3). “சேசுகிறீஸ்து நாதர் மாம்ச ஐக்கியத்தோடு வந்தார்” (1 அரு. 4:2). “நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களால் நாங்கள் கண்டதும், தரிசித்ததும், எங்கள் கைகளால் ஸ்பரிசித்ததுமான ஜீவ வார்த்தையைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 அரு. 1:1).
6. நமது புத்தியின் ஆலோசனை தீர்மானிக்கிறதென்ன?
சேசுநாதருடைய சரீரம் உண்மையான சரீரமாயிராமல், வெறும் வெளித்தோற்றமாய் மாத்திரம் இருந்திருந்தால், அவர் செய்த சகல வெளிக்காரியங்களும், பட்ட பாடுகளும், அடைந்த மரணமும், வீணான மாயமே அன்றி வேறல்லவென்று சொல்ல வேண்டியிருக்கும். சேசுகிறீஸ்துநாதருக்குச் சரீரம் உண்டென்பதை மறுதலிப்பது மனுஷாவதாரத்தையும், மனுஷ இரட்சணியத்தையுமே பொய்யயன்று உரைப்பதற்கொப்பாகும். ஏனெனில், சேசுகிறீஸ்து நாதருக்கு மெய்யான சரீரமில்லாவிட்டால், அவர் மெய்யான மனுஷனுமல்ல, நம்மை இரட்சிக்கவுமில்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியதாயிருக்கும்.
7. சேசுநாதர்சுவாமி மெய்யான மனிதனென்று சொல்லும்போது நாம் என்ன கண்டுபிடிக்க வேண்டும்?
அவர் நம்மைப் போல ஆத்துமத்தையும், சரீரத்தையும் உடையவராயிருக்கிறதாகக் கண்டுபிடிக்க வேண்டும்.