சேசுநாதருடைய திருப்பாடுகளும், மரணமும்

65. (33) என்ன பாடுபட்டார்?

போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் மிகுந்த பாடுபட்டுச் சிலுவையிலே அறையுண்டு கடினமான மரணத்தையடைந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.


66. சேசுநாதர்சுவாமி எந்தக் கிழமையில் மரணம் அடைந்தார்?

அர்ச்சியசிஷ்ட வாரம் பெரிய வெள்ளிக்கிழமை மத்தியானத்திற்கு மேல் மூன்று மணி வேளையில் மரணம் அடைந்தார்.


1. எவ்விடங்களில் சேசுகிறீஸ்துநாதர் உபாதிக்கப்பட்டார்?

சேசுநாதர்: (1) ஜெத்சமெனி எனப்பட்ட பூங்காவனத்திலும்; (2) கைப்பாஸ் அரண்மனையிலும்;  (3) ஏரோதின் அரண் மனையிலும்; (4) பிலாத்து நீதி ஆசன ஸ்தலங்களிலும்; (5) கல்வாரி மலையிலும் வேதனைப்பட்டார்.


2. பூங்காவனத்தில் சேசுநாதர் அனுபவித்த வேதனை என்ன?

(1) உலக ஆரம்ப முதற்கொண்டு சகல மனிதரும் கட்டிக் கொண்ட பாவங்களைத் தெளிவாய்க் கண்டு, சேசுநாதர் சொல்ல முடியாத துக்கப்பட்டு மனக்கிலேசத்தினால் இரத்த வியர்வை வியர்த்து மரண அவஸ்தைப்பட்டார்.

(2) இந்தத் தோட்டத்தில்தான் அவருடைய அப்போஸ் தலர்களில் ஒருவனாகிய யூதாஸ் என்னும் சதிமானத் துரோகி, முத்தங்கொடுத்து அவரை யூதர்களுக்குக் காட்டிக் கொடுத்தான்.

(3) யூதர்கள் சேசுநாதரைப் பிடித்து, கயிறு சங்கிலி களால் அவரைக் கட்டி, அன்னாஸ் கைபாஸாகிய யூத குரு தலைமை யானவர்களிடம் இழுத்துக் கொண்டு போனார்கள்.


3. யூதாஸ் சேசுநாதரைக் காட்டிக் கொடுத்த பிறகு யூதர்கள் அவரை என்ன செய்தார்கள்?

யூதர்கள் சேசுநாதரைப் பிடித்து, கயிறு சங்கிலிகளால் அவரைக் கட்டி, அன்னாஸ் கைப்பாஸாகிய யூத தலைமைக் குருக்களிடம் இழுத்துக் கொண்டு போனார்கள்.


4. அவர்கள் எப்பேர்ப்பட்டவர்கள்?

அவர்கள் சேசுநாதருடைய ஜென்ம எதிரிகள்.  பல தடவை அவரைக் கொல்லும்படி கடும் முயற்சி செய்தவர்கள் (அரு. 10:31).


5. கைப்பாஸ் அரண்மனையில் சம்பவித்ததென்ன?

(1) அர்ச். இராயப்பர் சேசுநாதரை மும்முறை மறுதலித்தார்.

(2) பற்பல பொய்சாட்சிகள் அவருக்கு விரோதமாய் அநியாயமாய்க் குற்றம் சாட்டினார்கள்.

(3) தாம் தேவகுமாரனென்று சொன்னதினால் யூதர்கள் எல்லாரும் இவர் சாவுக்குப் பாத்திரவானாயிருக்கிறா ரென்று தீர்மானித்தார்கள்.

(4) அதற்குப் பிறகு சிலர் அவரைக் கன்னத்தில் அடித்தார்கள்.  வேறு சிலர் அவருடைய திருமுகத்தில் துப்பி னார்கள் (மத். 26).


6. அதற்குப் பிறகு சேசுநாதர்சுவாமியை யாரிடத்தில் கூட்டிக் கொண்டு போனார்கள்?

போஞ்சு பிலாத்துவிடம் (லூக். 23:1).


7. போஞ்சுபிலாத்து என்பவன் யார்?

ரோமைப் பேரரசனின் பேரால் யூதரை ஆண்டுவந்த ஆளுனன்.


8. ஏன் யூதர்கள் பிலாத்திடம் சேசுநாதரைக் கூட்டிக் கொண்டு போனார்கள்?

ஏனெனில், சிலுவை மரணத் தீர்வையிடத் தங்களுக்கு அதிகாரம் இல்லாததால், சேசுநாதரைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படியாக உத்தரவு வாங்க அவனிடம் போனார்கள்.


9. அப்போது போஞ்சு பிலாத்து என்ன செய்தான்?

சேசுநாதரை விசாரணை செய்து, அவர் மேல் குற்ற மில்லாததைக் கண்டு, அவர் கலிலேயரென்று அறிந்து, சங்கடத்துக்குத் தப்பித்துக் கொள்ளும்படி, கலிலேயா என்னும் நாட்டுக்கு அதிபதியான ஏரோதிடம் அவரை அனுப்பி வைத்தான் (லூக். 23).


10. ஏரோது என்பவன் யார்?

அவன் கலிலேயா நாட்டுக்கு அதிபதியாவான்; இவனும் யூதனே. ஆனால் இவன் அந்த வேதத்தை மறுத்துவிட்டு, துர்மார்க்கனாய் நடந்துவந்தான்.


11. ஏரோது என்ன செய்தான்?

ஏரோது சேசுநாதரை விசாரித்தான். ஆனால் அவர் அவனுடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாததால், அவரை ஓர் பைத்தியக்காரனைப்போல் பாவித்து, அவருக்கு ஒரு வெள்ளை வஸ்திரத்தை உடுத்தி, பரிகாசம் பண்ணி, மறுபடியும் அவரைப் பிலாத்திடம் அனுப்பி வைத்தான் (லூக். 23:11).


12. பிலாத்து அரண்மனையில் பிற்பாடு நடந்ததென்ன?

(1) பிலாத்து சேசுநாதருடைய மாசற்றதனத்தை அறிந்திருந்தபோதிலும், அவரைக் கசையால் அடிக்கக் கட்டளை யிட்டான் (மத். 27:26).

(2) சேவகர்கள் அவரைக் கொடூரமாய் அடித்தபிறகு, அவருடைய தலையின்மேல் ஒரு முண்முடி வைத்துத் தடியால் அடித்து அழுத்தி, தூமிர வஸ்திரத்தால் அவரைப் போர்த்தி, அவர் கையில் செங்கோலாகத் தடி ஒன்றை நிறுத்தி “யூதர்களின் இராஜாவே! வாழ்க” என்று சொல்லி அவரைப் பரிகாசம் பண்ணினார்கள் (மத். 27:27-30).

(3) கடைசியாய் சேசுநாதரைச் சிலுவையில் அறைய வேணுமென்று கோபவெறியோடு கூக்குரலிட்ட யூதர்களுக்குப் பயந்து, பிலாத்து தன் கையைத் தண்ணீரில் கழுவி: “என் மேல் இந்த மனிதனுடைய இரத்தப் பழியில்லை” என்று சொல்லி, சேசுநாதரைச் சிலுவையில் அறையத் தீர்ப்புச் செய்து யூதர் கையில் அவரை ஒப்படைத்தான் (மத்.27:24).


13. அதற்கு யூதர்கள் என்ன சொன்னார்கள்?

“அவனுடைய இரத்தப்பழி எங்கள் பேரிலும், எங்கள் மக்கள் பேரிலும் வரட்டும்” என்று சொல்லி தங்களைச் சபித்துக் கொண்டார்கள் (மத். 27:25).


14. அதற்குப் பிறகு சேவகர்கள் என்ன செய்தார்கள்?

சேசுநாதர் தோளின்பேரில் ஒரு பாரமான சிலுவை யைச் சுமத்தி கபாலமலைக்கு அவரைக் கூட்டிக் கொண்டு போனார்கள்.


15. சேசுநாதர் கபாலமலைக்குச் சிலுவையைச் சுமந்து கொண்டு போகும்போது சம்பவித்ததென்ன?

(1) சேசுநாதர் சிலுவையின் பாரத்தைத் தாங்க மாட்டாமல் மூன்று விசை கீழே விழுந்தார்.

(2) தமது தாயாரைச் சந்தித்தார்.

(3) சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒரு குடியானவன் அவருக்கு உதவி செய்தான்.

(4) ஒரு யூத ஸ்திரீ வஸ்திரத்தால் அவருடைய முகத்தைத் துடைக்க, அந்த வஸ்திரத்தில் அவருடைய முகச்சாயல் பதிந்து போயிற்று.

(5) துயரப்பட்டு அழுகிற ஸ்திரீகளுக்கு ஆறுதல் சொன்னார்.


16. கல்வாரி மலைமேல் நடந்த சம்பவங்கள் எவை?

(1) சேவகர்கள் சேசுநாதருடைய வஸ்திரங்களை அவரிடத்தினின்று எடுத்து விட்டு, பெரும் இருப்பாணிகளால் அவருடைய கை கால்களைச் சிலுவை மரத்தில் அறைந்தார்கள் (லூக். 23:33).

(2) இரு கள்ளர் நடுவே சிலுவையில் சேசுநாதர் அறையப்பட்டிருக்கும்போது அவருக்குப் பிச்சுக் கலந்த திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள் (மத். 27:34).

(3) சிலுவையிலிருந்து கொண்டே தம்மை வாதித் தவர்களுக்காக சேசுநாதர் பிதாவினிடத்தினின்று மன்னிப்பு கேட்டார் (லூக். 23:34).

(4) நல்ல கள்ளன் மோட்சத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுவானென்று வாக்குத்தத்தம் பண்ணினார் (லூக்.23:43).

(5) தமது தாயாரை அர்ச். அருளப்பரிடமும், அர்ச். அருளப்பரைத் தமக்குப் பதிலான பிள்ளையாகத் தாயாரிடமும் ஒப்படைத்தார் (அரு. 19:26).

(6) கடைசியாய் “எல்லாம் நிறைவேறிற்று” என்று சொல்லி தமது ஆத்துமத்தைப் பிதாவினுடைய கரங்களில் ஒப்புக் கொடுத்து தலைசாய்த்து மரணமானார் (அரு.19:30).


17. சேசுநாதர் மரணத்தை அடைந்தார் என்பதற்கு அர்த்தம் என்ன?

அவருடைய ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிந்தது என்று அர்த்தமாம்.


18. சேசுநாதர் எந்நாளில், எந்த நேரத்தில் மரணமானார்?

பெரிய வெள்ளிக்கிழமை மாலை சுமார் மூன்று மணி வேளையில் மரணமானார்.


19. சேசுநாதர் இறந்த அந்த வெள்ளிக்கிழமையைப்  பெரிய வெள்ளிக்கிழமை என்று சொல்வானேன்?

ஏனெனில் அன்றுதான் சேசுநாதர் மரணம் அடைந்து பாவப் பரிகாரப் பலியாகத் தம்மைச் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்து, மனுக்குலத்தை இரட்சித்தார்.  ஆதலால் அதைவிடப் பெரிய, மேலான, சிறந்த வெள்ளிக்கிழமை அதற்கு முன் இருந்தது மில்லை, இனி இருக்கப் போகிறதுமில்லை என்பதினால்தான்.


20. அவர் மரித்த சமயத்தில் சம்பவித்ததென்ன?

சூரியன் மங்கிப் போயிற்று; பூமி அதிர்ந்தது; கற்பாறைகள் பிளந்தன; தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாய்க் கிழிந்தது; கல்லறைகள் திறக்கப்பட்டு மரித்தவர்கள் எழுந்து காணப் பட்டார்கள் (லூக்.23:44; மத்.27:51‡53).


21. அவர் மரித்தபின் சேவகன் ஒருவன் என்ன செய்தான்?

ஈட்டியால் அவருடைய விலாவைக் குத்தி, அவரு டைய இருதயத்தை ஊடுருவினான். ஊடுருவின உடனே அதினின்று இரத்தமும், தண்ணீரும் புறப்பட்டது (அரு.19:34).


22. அவருடைய இருதயம் ஊடுருவப்பட்டதற்குக் காரணமென்ன?

(1) கடைசித் துளி பரியந்தம் தமது இரத்தமெல்லாம் சிந்தி, நம்மேல் தமக்குள்ள அளவில்லாத சிநேகத்தைக் காட்டும் படியாகவும், 

(2) நமது பேரில் ஏராளமாய் வரப்பிரசாதம் பொழியும் பொருட்டுத் தமது இருதயம் இடைவிடாமல் திறக்கப் பட்டிருக்கிறதென்று காட்டும்படியாகவும்தான்.