பூசையைத் தவற விடாதீர்கள்!

ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணும் கடமை மிகக் கண்டிப்பான ஒன்று. இந்நாட்களில் போதிய காரணமின்றி, இந்தக் கடமையை நிறை வேற்றத் தவறுவது சாவான பாவம். இதன் மூலம் பாவியானவன் அநேக வரப்பிரசாதங்களை இழந்து போகிறான். இவற்றை இனி அவன் தன் வாழ்நாளில் ஒருவேளை பெற முடியாமலே போகலாம். அது மட்டுமல்ல, இந்தப் பாவத்திற்காகக் கடவுள் அவனைக் கடுமையாகத் தண்டிக்கவும் நேரலாம். அதுவும் மிக அடிக்கடி நிகழ்ந்துள்ளது.

இத்தகைய பல நிகழ்ச்சிகளில் ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிடுவோம்:

பின்வரும் நிகழ்ச்சி உரோமைக்கு அருகில் நடந்தது. மூன்று வியாபாரிகள் சிஸ்டெர்னோவிலுள்ள சந்தைக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்கள் வியாபாரத்தைத் திருப்தியாக முடித்துக்கொண்டபின், அவர்களில் இருவர் ஞாயிற்றுக்கிழமை காலையில், பூசைக்குப் போகாமல் வீடு திரும்பப் புறப்பட்டார்கள். இதனால் அவர்கள் பூசைக்குப் போக முடியாமல் போகும் என்று மூன்றாவது வணிகன் சுட்டிக் காட்டினான். அவர்களோ அவனுடைய வார்த்தை களைக் கேட்டு நகைத்ததோடு, வேறு ஏதாவது ஒரு நாளில் தாங்கள் பூசைக்குப் போய்க் கொள்வதாக பதிலும் சொன் னார்கள். அதன்பின் தங்கள் குதிரைகளில் ஏறி, தங்கள் ஊரை நோக்கிப் புறப்பட்டார்கள்.

அவர்களுடைய நண்பன் ஞாயிறு கடன்பூசை கண்ட பிறகு, தானும் ஊருக்குப் புறப்பட்டான். அப்போது வழியில், தன் நண்பர்கள் இருவரும் ஒரு பயங்கரமான விபத்துக்கு உள்ளாகி இறந்த செய்தியைக் கேள்வியுற்று, மிகுந்த வேதனை அடைந்தான். ஆயினும் அவர்களோடு போகாமலிருக்கக் காரணமாயிருந்த பூசைக்காக அவன் கடவுளுக்கு நன்றி செலுத்தினான்.

இந்த வரிகளை எழுதியவர் அதே உரோமையைச் சேர்ந்த மற்றொரு பரிதாபத்திற்குரிய மனிதனுக்கு சர்வ வல்லபக் கடவுளால் தரப்பட்ட பயங்கரத்துக்குரிய தண்டனையை நினைவுகூர்கிறார். அந்த மனிதன் ஒரு கல் ஆசாரியாக இருந்தான். அவன் ஞாயிற்றுக்கிழமைகளில் பூசைக்குப் போவதற்குப் பதிலாக, வெளிப்படையாகவே தன் வேலையைச் செய்து வந்தான். அதன் மூலம் பிறருக்கு அவன் மிகுந்த துர்மாதிரிகையை விளைவித்து வந்தான்.

பெந்தேகோஸ்தே திருநாளன்று, வழக்கம் போல பூசைக்குச் செல்லாமல் ஓர் உயரமான சாரத்தில் நின்று அவன் தன் பாவகரமான வேலையை வழக்கம்போல் செய்து கொண்டிருந்தபோது, கால் தவறி, அவ்வளவு உயரத்திலிருந்து தலைகீழாக விழுந்து, அந்த இடத்திலேயே இறந்து போனான்!

ஃப்ளோரென்ஸைச் சேர்ந்த அர்ச். அந்தோனினுஸ் பூசை காணாமலிருந்ததற்குத் தண்டனையாக நிகழ்ந்த அகால மரணத்தைப் பற்றிய மற்றொரு நிகழ்ச்சியை விவரிக்கிறார்:

இரண்டு இளைஞர்கள் ஒன்றாக வேட்டைக்குப் போனார்கள். ஒருவன் பூசை கண்டிருந்தான். மற்றவன் கண்டிருக்கவில்லை . திடீரென கடும் புயல் வீசத் தொடங் கியது. இடி, மின்னல் பயங்கரமாக இருந்தது. அன்று பூசை கண்டிராதவன் திடீரென மின்னலால் தாக்கப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து விழுந்தான்; ஆனால் அவனது நண்பனோ எந்த ஆபத்துமின்றி உயிர் தப்பினான்.

கிறீஸ்தவனுடைய முதன்மையான கடமைகளில் ஒன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பூசை காண்பது ஆகும். இந்த நாள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்தக் கடமையை அலட்சியம் செய்வது மிகவும் தகாத்துணிவுள்ள காரியமாக இருக்கிறது.