தேவத்திரவிய அனுமானங்களின் பேரில்.

218. தேவத்திரவிய அனுமானம் ஆவதென்ன?

நம்முடைய ஆத்துமங்களை அர்ச்சிப்பதற்கு தேவவரப்பிரசாதத்தைக் கொடுக்கும்படியாக யேசுகிறிஸ்து நாதரால் ஏற்படுத்தப்பட்ட வெளியரங்கமான அடையாளமே தேவத்திரவிய அனுமானம், 


219. தேவத்திரவிய அனுமானங்கள் எத்தனை ?

ஏழு. 


220. ஏழும் சொல்லு

1-வது - ஞானஸ்நானம். 
2-வது - உறுதிப்பூசுதல், 
3-வது - நற்கருணை . 
4-வது - பச்சாதாபம். 
5-வது - அவஸ்தைப்பூசுதல். 
6-வது - குருத்துவம்,
7-வது - மெய்விவாகம். 


221. ஒரே ஒருவிசை மாத்திரம் பெறகூடுமான தேவத்திரவிய அனுமானங்கள் எவை? 

ஞானஸ்நானம், உறுதிப்பூசுதல், குருத்துவம் என்னும் மூன்றுமேயாம். 


222. இம்மூன்றையுமே ஒரே விசைக்குமேல் ஏன் பெறக்கூடாது? 

ஏனென்றால் அவைகளால் நமது ஆத்துமத்தில் அழியாத ஓர் தெய்வீக முத்திரை பதிப்பிக்கப்படுகிறதினால்தான். 


223. தேவத்திரவிய அனுமானங்கள் நிறைவேறும் படி எத்தனை காரியங்கள் வேண்டியது? 

அதற்கான பொருளும், மந்திரமும், அவைகளைச் சரியாய் உபயோகித்து நிறைவேற்றும் பரிசாரகனும் ஆகிய இம்மூன்றும் வேண்டியது. 


224. தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுகிறவர்கள் எல்லாம் அவைகளால் வரவேண்டிய வரப்பிரசாதங்களை பெறுகிறார்களா? 

தகுந்த ஆயத்தத்தோடு பெறுகிறவர்கள் தேவவரப்பிரசாதத்தை அடைவார்கள். தகுதியற்ற விதமாய்ப் பெறுகிறவர்களோ வரப்பிரசாதத்தை அடையாமற் போவதுமின்றி. தேவதுரோக மென்னும் சாவான பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்,