ஞான உபதேசம் - மெய்யான கிறிஸ்தவன்.

மெய்யான கிறிஸ்தவன் யார்?

ஞானஸ்நானம் பெற்று, சேசுகிறீஸ்துநாதருடைய போதனையை விசுவசித்து, அதன்படி நடக்கிறவனே மெய்யான கிறீஸ்தவன்.


1. மெய்யான கிறிஸ்தவனாயிருக்க எத்தனை காரியங்கள் வேண்டும்?

1-வது. ஞானஸ்நானம் பெற வேண்டும்;

2-வது. சேசுநாதர் உண்டுபண்ணின் மற்றத் தேவதிரவிய அனுமானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

3-வது. அவர் போதித்த சத்தியங்கள் எல்லாவற்றையும் விசுவசிக்க வேண்டும்.

4-வது. அவர் கொடுத்த நல்லொழுக்கச் சட்டங்களை அனுசரிக்க வேண்டும்.

5-வது. அவருக்குப் பதிலாளியாக இருக்கும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவருடைய அதிகாரத்திற்கு உட்பட வேண்டும்.


2. பதிதர்களும், பிரிவினைக்காரரும் மெய்யான கிறிஸ்தவர்கள் என்று எண்ணலாமா?

எண்ணக் கூடாது. ஏனெனில் பதிதர்கள் ஏழு தேவத் திரவிய அனுமானங்களை ஏற்றுக் கொள்ளாமலும், சேசுநாதர் போதித்த சத்தியங்கள் எல்லாவற்றையும் விசுவசிக்காமலும், அர்ச். பாப்பானவரைப் புறக்கணித்து வருகிறார்கள். பிரிவினைக்காரரோ அர்ச். பாப்பானவருடைய அதிகாரத்திற்கு உடன்பட மறுக்கிறார்கள். ''உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான். உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்'' (லூக். 10:16) என்று சேசுநாதர் சுவாமியே திருவுளம் பற்றியிருக்கிறார்.


3. மெய்யான கிறீஸ்தவனின் பெயர் என்ன?

கத்தோலிக்கன் என்பதுதான்.