தேவதூஷணம்

1. தேவதூஷணம் ஆவதென்ன?

சர்வேசுரன் பேரிலாவது, அர்ச்சியசிஷ்டவர்கள் பேரிலாவது பரிசுத்தமான பொருட்கள் பேரிலாவது நிந்தையாய்ப் பேசுவது தேவதூஷணமாம்.


2. பரிசுத்தமான பொருட்கள் என்றால்  என்ன?

தேவத்திரவிய அனுமானங்கள், வேதப் புஸ்தகங்கள், சர்வேசுர னுக்கு வசீகரம் பண்ணப்பட்ட ஆட்கள், திருச்சபை முதலியவை களாம்.


3. தேவதூஷணம் என்கிற பாவம் பேச்சினால் மாத்திரமா கட்டிக் கொள்ளப் படும்?

பேச்சினால் மாத்திரமல்ல, எழுத்தினாலும், சைக்கினையினாலும், மனதினாலும் முதலாய்த் தேவதூஷணமாகிற பாவங் கட்டிக் கொள்ளப்படும்.


4. எத்தனை வகைத் தேவதூஷணமுண்டு?

சாதாரண தேவதூஷணம், பதித தேவதூஷணம் என இரு வகையுண்டு.


5. சாதாரண தேவதூஷணம் ஆவதென்ன?

விசுவாச சத்தியம் ஒன்றையும் மறுதலிக்காமல், சர்வேசுரன் பேரிலாகவும், அர்ச்சியசிஷ்டவர்கள் பேரிலாகிலும், பரிசுத்தமான பொருட்கள் பேரிலாகிலும், நிந்தையான வார்த்தையைச் சொல்லுகிறது.


6. இவ்வகைத் தேவதூஷணத்தை விளக்கிக்காட்ட  ஒரு சில உதாரணங் களைச் சொல்லு.

(1) சர்வேசுரனுடைய திருநாமத்தைப் பழிப்பது;

(2) தேவமாதா முதலிய அர்ச்சியசிஷ்டவர்களைக் குறித்து அவமரியாதையாய்ப் பேசி கேலி செய்வது;

(3) அர்ச். பாப்பானவர், மேற்றிராணிமார், குருக்களையும் இன்னும் சர்வேசுரனுக்கு வசீகரம் பண்ணப்பட்ட மற்ற ஆட்களையும் நிந்திக்கும்படி தேவதூஷணமான வார்த்தைகளைச் சொல்லுவது, எழுதுவது;

(4) சர்வேசுரனுடைய வாக்கியம் அடங்கிய சுவிசேஷம், திவ்விய பூசை, தேவத்திரவிய அனுமானங்கள், திருச்சபையின் சடங்குகள், சுரூபங்கள் முதலியவைகளைப் பற்றி அவசங்கையாய்ப் பேசுவது இவை போன்றவையாம்.


7. பதித தேவதூஷணம் ஆவதென்ன?

சர்வேசுரனுக்கு நிந்தை வருவிக்கிறதுமல்லாமல், வேத சத்தியங்களில் ஒன்றை மறுதலிக்கிறதாம்.


8. இவ்வகைத் தேவதூஷணத்தை விளக்கிக்காட்ட  ஒரு சில உதாரணங்களைச் சொல்லு.

சர்வேசுரனுக்குக் கண்ணில்லை, காதில்லை, நீதியில்லை, தயையில்லை;  அவர் அநியாயம் செய்கிறார்; உலகத்தில் நடக்கிறதைப் பற்றி அவர் கவனிக்கிறதில்லை என்று சொல்வதும்; என்னை ஏன் படைத்தாரென்று கேட்பதும்; மனிதர்கள் புண்ணியம் செய்தாலும் சரி, பாவஞ் செய்தாலும் சரி, அவருக்கு அக்கறையில்லை என்று கோபத்துடன் சர்வேசுரனை நோக்கி முறுமுறுத்து நிந்தித்துச் சொல்வதும், மனதுபொருந்தி நினைக்கிறதும், எழுதுகிறதும் பதித தேவ தூஷணமாகும்.


9. தேவதூஷணத்துக்கு வேண்டிய காரியங்கள் எத்தனை?

இரண்டு. அவைகளாவன:  

(1) சர்வேசுரன் பேரிலாகிலும், அர்ச்சியசிஷ்டவர்கள் பேரிலாகிலும், பரிசுத்தமான பொருட்கள் பேரிலாகிலும், நிந்தையாகப் பேசுங் கருத்து இருக்க வேண்டும்.

(2) சொல்லும் நிந்தையான வார்த்தை நமது நாட்டில் தேவதூஷணமாக வழங்கி வர வேண்டும்.


10. தேவதூஷணம் சொல்லுகிறது பெரிய அக்கிரமமா?

பெரிய அக்கிரமம்தான். “கர்த்தருடைய நாமத்தை நிந்தித்தவன் கொலைசெய்யப்படுவான்” என்று வேதாகமத்தில் கற்பித்திருக்கிறது (லேவி. 24:16).  அதற்குத் தண்டனையாக முக்கியமாய்க் கொள்ளைநோய், பேதி, பஞ்சம், இவ்வித தீமைகள் வருகின்றன என்று அர்ச்சியசிஷ்டவர்கள் சொல்லுகிறார்கள்.  ஒரு நாள் ராபர்ட் என்னும் பிரான்ஸ் தேசத்தின் இராஜா, தன் குடிகளுக்காக வேண்டிக் கொள்ளுகையில், சேசுநாதர் அவருக்குத் தரிசனமாகி, “உன் இராச்சியத்தில் தேவதூஷணத்தை நிவிர்த்தி செய்தாலொழிய, அதற்குச் சுகமும், சமாதானமும் இருக்க மாட்டாது” என்று திருவுளம்பற்றினார்.


11. தேவதூஷணம் சொல்லுகிறது எப்பேர்ப்பட்ட பாவம்?

தேவதூஷணமாகச் சொன்ன காரியம் சிறியதாயிருந்தாலும் சரி, கனமானதாயிருந்தாலும் சரி, எப்போதும் சாவான பாவம். ஆயினும் கவனக்குறைவினாலாகிலும், முழுமனதில்லாமலாகிலும், சொல்லப்படும் சில சமயங்களில் அற்பப் பாவமாயிருக்கலாம். உதாரணமாக: சர்வேசுரனை நிந்திக்க மனதில்லாமல், தான் படும் கஸ்தியின் அல்லது அருவருப்பின் அகோரத்தை மாத்திரம் காண்பிக்க பெரும்பாலும் சாவான பாவம் கட்டிக் கொள்ள மாட்டான்.


12. ஒருவன் தேவதூஷணம் சொல்வதை நாம் கேட்கும்போது என்ன செய்ய வேண்டும்?

உடனே அதற்குப் பரிகாரமாக: “சேசுவின் திரு இருதயமே! வாழ்க,” “சர்வேசுரனுக்கு ஸ்தோத்திரம்” என்னும் இவை போன்ற மனவல்லயச் செபங்களைச் சொல்லுவது நல்ல வழக்கமாகும்.