1. மூன்றாம் கற்பனையைச் சொல்லு.
“சர்வேசுரனுடைய திருநாட்களைப் பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.”
2. மூன்றாம் கற்பனைக்கும் முதல் கற்பனைக்குமுள்ள சம்பந்த மென்ன?
முதல் கற்பனை சர்வேசுரனை ஆராதிக்க வேண்டும் என்று கற்பிக்கிறது; மூன்றாம் கற்பனையோ அந்த ஆராதனையை எந்த நாட்களில் விசேஷித்த விதமாய்ச் செலுத்த வேண்டுமென்று குறிக்கிறது.
132. மூன்றாம் கற்பனையால் சர்வேசுரன் நமக்குக் கற்பிக்கிற தென்ன?
தேவ ஆராதனை செய்வதற்குக் குறிக்கப்பட்ட நாட்களைப் பரிசுத்தப் படுத்தவும், அந்த நாட்களில் வேலை செய்யாமல் இருக்கவும் வேண்டு மெனக் கற்பிக்கிறார்.
133. சர்வேசுரனுடைய திருநாட்கள் எவை?
ஞாயிற்றுக்கிழமைகளும், கடன் திருநாட்களுமாம்.
1. சேசுநாதருடைய வருகைக்கு முன் யூதர்கள் எந்த நாளை சர்வேசுர னுடைய நாளாக அநுசரித்து வந்தார்கள்?
பழைய ஏற்பாட்டின் காலத்தில் அநேக திருநாட்களிருந்தன. ஆனாலும் யூதர்கள் சர்வேசுரன் கற்பித்தபடி, அவர் உலகத்தை ஆறு நாளில் சிருஷ்டித்தபின், ஏழாம் நாள் இளைப்பாறினதன் ஞாபகமாக, அவருக்கு ஆராதனை செய்யும்படி சனிக்கிழமையையே ஓய்வு நாளாக அனுசரிக்க வந்தார்கள். “ஏழாம் நாளிலோ உன் தேவனாகிய கர்த்தருடைய “சாபாத்” நாளாகயிருப்பதால், அன்று நீயாவது, உன் குமாரன் குமாரத்தியையாவது, உன் வேலைக் காரன் வேலைக்காரியாகிலும், உன் மிருகசீவன் அல்லது உன் வாசல்களில் இருக்கிற அந்நியனென்கிலும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனென்றால், கர்த்தர் ஆறு நாளுக்குள் வானத்தையும், பூமியையும், கடலையும், இவைகளிலுள்ள சகலத்தையும் படைத்து ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டருளினமையால், கர்த்தர் சபாட் நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்” என்று வேதாகமத்தில் எழுதியிருக்கிறது (யாத். 20:10-11).
2. சாபாத் என்னும் பதத்திற்கு அர்த்தமென்ன?
எபிரேய பாஷையில் இளைப்பாற்றி, ஓய்ந்திருத்தல் என்று அர்த்தமாம்.
3. அந்தக் கட்டளை கண்டிப்பான கற்பனையாயிருந்ததா?
பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவன் ஓய்வுநாளிலே அடிமை வேலை செய்தால், அவனுக்கு மரண ஆக்கினை விதிப்பது வழக்கம். இப்படியே சாபாத் நாளில் விறகு பொறுக்கின ஒருவனைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்று மோயீசன் சர்வேசுரனுடைய நாமத்தினாலே கட்டளையிட்டார் (எண். 15:25).
4. புதிய ஏற்பாட்டின் காலத்தில் சனிக்கிழமையை ஏன் ஓய்வு நாளாக அநுசரிக்கிறதில்லை?
ஏனெனில், சேசுநாதர்சுவாமி உயிர்த்தெழுந்ததும், இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரன் இறங்கினதும் ஞாயிற்றுக்கிழமையாதலால், ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாக அனுசரிக்க வேண்டுமென்று திருச்சபை கற்பித்திருக்கின்றது. இதுவுமன்றி, திருச்சபை இன்னும் வேறு நாட்களையும் கொண்டாடுகிறது.
5. திருநாட்கள் என்று மட்டும் சொல்லாமல், கடன் திருநாட்கள் என்று சொல்வானேன்?
திருச்சபையானது வேதத்தின் பரம இரகசியங்களை நமக்கு ஞாபகப்படுத்தி அவைகளுக்காக நன்றியறிந்திருக்கும் படியாகவும், தேவமாதா, அர்ச்சியசிஷ்டவர்கள் முதலியவர்களின் புண்ணியங்களையும், சம்பாவனையையும் நினைப்பூட்டி அவர்களைக் கண்டுபாவிக்கும்படியாகவும் அநேக திருநாட்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்தத் திருநாட்களையெல்லாம் அனுசரிக்க வேண்டுமென்று திருச்சபை கற்பிக்காமல், சில திருநாட்களை மட்டும் கடன் திருநாளாக ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிக் கடன் திருநாளாக ஏற்படுத்தப்பட்ட திருநாட்களை அனுசரிக்கா விட்டால் பாவமாகும்.
6. ஞாயிற்றுக்கிழமையையும், கடன் திருநாட்களையும் பரிசுத்தமாய் அனுசரிப்பதற்கு வேண்டிய காரியங்கள் எவை?
1-வது. கஷ்டமான வேலை செய்யலாகாது.
2-வது. அன்று திவ்வியபூசை காண வேண்டியது.
7. எத்தனை வகை வேலையுண்டு?
அடிமை வேலை, சுயாதீன வேலை, சாதாரண அல்லது பொது வேலை ஆகிய இம்மூன்று வகையுண்டு.
8. அடிமை வேலை என்பதென்ன?
எந்த வேலைகளில் புத்தியைப் பயன்படுத்துவதை விட அதிகமாக சரீரப் பிரயாசத்தைக் கொண்டு உழைத்து, முக்கியமாய்ச் சரீர நன்மைக்காகச் செய்கிறோமோ, அவைதான் அடிமை வேலைகள். சாதாரணமாய் இப்பேர்ப்பட்ட வேலைகள் கூலியாட்களாலும், ஊழியராலும், தொழிலாளிகளாலும், குடியானவர்களாலும் செய்யப்படும்.
9. ஒரு சில உதாரணங்களைச் சொல்லு.
உழுவதும், விதைப்பதும், அறுப்பதும், போர் அடிப்பதும், மரங்கள் வெட்டுவதும், நெசவு வேலை, தச்சு வேலை, கொத்து வேலை, கொல்லன் வேலை, தையல் வேலை செய்வதும், செப மாலை, உத்தரியம், விசித்திரப் பூ வேலை பண்ணுவதும், இன்னும் இவை போன்றவை சரீரப் பிரயாசையான வேலைகள்.
10. சுயாதீன வேலைகள் ஆவதென்ன?
சரீரப் பிரயாசை அதிகமில்லாமல் புத்தியின் தேர்ச்சிக்காக அல்லது அறிவு வளர்ச்சிக்காக விசேஷமாய் புத்தியைக் கொண்டு செய்யப்படும் வேலைகளாம். உதாரணமாக: எழுதுகிறது, வாசிக்கிறது, படிக்கிறது, படிப்பிக்கிறது, சித்திரம் வரைகிறது, சங்கீதம் பழகுகிறது.
11. சாதாரணமான அல்லது பொது வேலைகளாவதென்ன?
யாதொரு விசேஷ தொழிலாளிக்குரிய வேலையாயிராமல், சகல மனிதராலும் செய்யப்படக் கூடிய வேலைகளாம். உதாரணமாக: ஆடுமாடுகளை மேய்க்கிறது, அன்று மாடுகளுக்கு வேண்டிய புல் அறுக்கிறது, சமைக்கிறது, தண்ணீர் கொண்டுபோகிறது முதலிய வழக்கமான வீட்டு வேலைகள்.
12. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் எந்த வேலைகளைச் செய்யக் கூடாது?
அடிமை வேலைகள் செய்யவே கூடாது.
13. ஏன் சர்வேசுரன் அடிமை வேலைகளை விலக்கியிருக்கிறார்?
(1) மனிதன் அவருடைய சர்வ அதிகாரத்தை அங்கீகரிக்கும் படியாகவும்,
(2) அடிமை வேலைகளால் இடைஞ்சல்படாமல் ஞாயிறு நாளைப் பரிசுத்த விதமாய்ச் செலவழிக்கும்படியாகவும்.
14. ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் அடிமை வேலை செய்தால், எப்பேர்ப்பட்ட பாவமாகும்?
(1) தொடர்ச்சியாய் உழைக்காமல், விட்டு விட்டு வேலை செய்பவன் முதலாய், இரண்டரை மணி நேரத்துக்குக் கஷ்டமான வேலை செய்தால், சாவான பாவம் கட்டிக்கொள்கிறான். ஆகையால் யாதொருவன் ஞாயிற்றுக்கிழமையில் பல தடவைகளில் வேலை செய்தால், சாவான பாவத்துக்கு வேண்டிய நேரம் ஆனவுடனே அவன் சாவான பாவம் கட்டிக் கொள்கிறான்.
(2) எளிதான வேலை மூன்று மணி நேரத்துக்குச் செய்தால், சாவான பாவமாகும்.
(3) உழைத்த நேரம் இதற்குக் குறைவாயிருந்தால், அற்பப் பாவமாகும்.
15. ஞாயிறு கடன் திருநாள் கடமைகளை நிறைவேற்றுவதற்கான நேரம் என்ன?
முந்தின நடுச்சாமத்திலிருந்து, பிந்தின நடுச்சாமம் வரையிலும் வேலை செய்யக்கூடாது.
16. பூசை கண்டபின் வேலை செய்யக்கூடாதா?
விசேஷ உத்தரவில்லாமல் செய்யக்கூடாது.
17. பணம் சம்பாதிக்க வேண்டுமென்கிற நோக்கமில்லாமல் நேரப் போக்குக்காக அடிமை வேலைகள் செய்யலாமா?
அடிமை வேலை செய்வதால், பணம் சம்பாதிக்காத போதும், இவைகளை ஞாயிற்றுக்கிழமையில் செய்யக்கூடாது. ஏனெனில், வேலைகளைச் செய்பவனுடைய நோக்கத்தினிமித்தம் இவைகளின் தன்மை ஒருபோதும் மாறிப் போகிறதில்லை.
18. அடிமை வேலை செய்யக் கற்பிக்கிறவர்கள் பாவம் கட்டிக் கொள்கிறார்களா?
அவ்வேலைகளைச் செய்யும்படி கற்பிக்கும் எஜமான்களும் முதலாளிமார்களும், மூன்றாம் கற்பனைக்கு விரோதமான பாவம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.
19. ஞாயிறு, கடன் திருநாட்களில் அடிமை வேலைகளை மாத்திரமா விலக்க வேண்டும்?
அடிமை வேலைகளை மாத்திரமல்ல; இன்னும் நியாயமான வழக்கம் அல்லது விசேஷ உத்தரவு இருந்தால் தவிர வியாபாரம், சந்தை கூடுதல், பிரசித்தமாய் விற்பனை, கொள் முதல் செய்தல் முதலியவைகளையும் விலக்க வேண்டும்.
20. ஞாயிறு கடன்திருநாட்களில் அடிமை வேலைகளை ஒருக்காலும் செய்யக்கூடாதா?
சரியான காரணமிருந்தால், அல்லது விசேஷ உத்தரவு பெற்றிருந்தால், வேலை செய்வது பாவமல்ல.
21. எந்த முகாந்தரத்தை முன்னிட்டு பாவமில்லாமல் அடிமை வேலைகளைச் செய்யக்கூடும்?
(1) தேவ ஊழியத்துக்கடுத்த வேலைகள்: உதாரணமாக: கோவிலைப் பெருக்குகிறது, பீடத்தை அலங்கரிக்கிறது, ஓஸ்தி செய்கிறது, தேர் அலங்கரிக்கிறது, சுற்றுப்பிரகாரத்துக்கு (பவனிக்கு) அவசியமான வேலை செய்கிறது.
(2) பொது மக்களின் நன்மைக்கு அவசியமான வேலைகள்; உதாரணமாக: மோட்டார் பஸ் அல்லது வண்டி ஓட்டுகிறது, ரிக்ஷா இழுக்கிறது.
(3) பிறர்சிநேகத்தினிமித்தம் செய்ய வேண்டிய வேலைகள்: உதாரணமாக: ஏழைக்கு அவசரமான வேலையை இலவசமாகச் செய்கிறது.
(4) கனத்த சங்கடமின்றி நிறுத்த முடியாத வேலைகள்: உதாரணமாக: சாமான்கள் செய்யப்படும் தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டால் பெரிய நஷ்டமுண்டாகக் கூடும்.
(5) தனக்கு அல்லது பிறருக்கு வரும் பெரிய நஷ்டத்தை அல்லது ஆபத்தைத் தவிர்ப்பதற்கு அவசரமான வேலைகள்: உதாரணமாக: விளைச்சல் மழையால் கெட்டுப் போகாதபடி அல்லது எந்தப் பொருளாவது நஷ்டப்படாதபடி செய்ய வேண்டிய வேலைகள்.
(6) நியாயமான வழக்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேலைகள்: உதாரணமாக: கடைக்காரன் சரக்குகளை விற்கிறது ஆகிய இவைகளைச் செய்ய உத்தரவு உண்டு.
22. ஞாயிறு, கடன் திருநாட்களில் அடிமை வேலை செய்ய உத்தரவு கொடுக்கக்கூடியவர் யார்?
(1) அர்ச். பாப்பானவர் திருச்சபை முழுவதுக்கும் முதலாய்ப் பொதுவான உத்தரவு அளிக்கக் கூடும்.
(2) மேற்றிராணிமார்களும், குருக்களும் நல்ல காரணங்களினிமித்தம் சில விசேஷ சமயங்களில் உத்தரவு கொடுக்கலாம்.
23. ஞாயிறு, கடன் திருநாட்களில் சுயாதீன வேலைகளையும், பொது வேலைகளையும் செய்யலாமா?
அவைகளைச் செய்யத் தடையில்லை.
24. ஞாயிறு, கடன் திருநாட்களில் பணம் சம்பாதிக்கிறதற்காக சுயாதீன வேலைகளைச் செய்யலாமா?
செய்யலாம். ஏனென்றால், அவைகளைச் செய்கிறவனுடைய நோக்கத்தினிமித்தம் அவைகளின் இயல்பு மாறிப் போகிறதில்லை. இப்படியே ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பணத்துக்காகப் படிப்பிக்கலாம்.
குறிப்பு: ஞாயிறு, கடன் திருநாட்களில் பூசைகாணுதல் என்னும் கட்டளையின்பேரில் விளக்கம், திருச்சபை முதற் கட்டளையின் விளக்கத்தில் விவரித்துக் காட்டியிருக்கின்றது.
134. மேற்படி திருநாட்களை அனுசரியாத கிறீஸ்தவர்களுக்குச் சாதாரணமாய் வரும் கேடென்ன?
அவர்கள் ஆத்துமத்திற்குப் பாவதோஷம் உண்டாவதும் அல்லாமல், அவர்கள் குடும்பங்களில் நிர்ப்பாக்கியமும் வறுமையும் உண்டாவது வழக்கம்.
ஞாயிறு கடனை அனுசரியாததால் விளையும் கெடுதிகள் எவை?
(1) ஓயாமல் வேலை செய்வதால் சரீரத்துக்குச் சுகவீனம் ஏற்படும். மேலும் அவன் ஆஸ்திக்கும் பங்கம் ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து ஆஸ்திக்காரரானதை நாம் பார்த்ததில்லை. அதற்கு விரோதமாய் சுவாமி ஆசீர்வாதம் இல்லாததால் அவன் ஏழையாய்ப் போவான்.
(2) குடும்பத்தில் பிரிவினை ஏற்படுகிறது. தகப்பன், மனைவி, மக்களைக் காண நேரமில்லாததால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அறிய போதிய அவகாசம் அவனுக்கு இல்லை. மேலும் தகப்பன் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படியாதிருக்கும் பொழுது, பிள்ளைகள் எப்படித் தகப்பனுக்குக் கீழ்ப்படிவார்கள்?
சரித்திரம்
அர்ச். கிரகோரியார் எழுதின சரித்திரமாவது: கல்லிய தேசத்தில் ஒரு குடியானவன் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஏர் பூட்டி உழ ஆரம்பித்தான். எருதுகளைக் குத்தி அடித்தபோதிலும், ஒரு அடியாகிலும் அப்பால் எடுத்து வைக்கவில்லை. இதனால் அவனுக்கு உக்கிரம கோபம் உண்டாகி, எருதுகளை அடித்து ஓட்டும்போது கலப்பை இரண்டாக முறிந்து போனது. பின் ஒரு கத்தியைக் கொண்டுவந்து அந்தக் கலப்பையைப் பழுதுபார்க்கத் தொடங்கினான். அப்போது கத்தியைப் பிடித்த அவனுடைய கை மரம்போல் மரத்துப் போக, எவ்வளவு பலமாய்க் கத்திப் பிடியை கையிலிருந்து பிடுங்க முயன்றும் யாராலும் முடியாமல் போய் விட்டது. இவ்வாறு இரண்டு வருஷ காலமாய் அந்தக் கத்திப்பிடி அந்த நிர்ப்பாக்கியனுடைய கையிலேயே இருந்து விட்டது. இது தேவ தண்டனை தானென்று கண்டுகொண்டு அவன் மனஸ்தாபப்பட்டுத் தவம் புரிந்துவந்தான். ஒருநாள் அர்ச். ஜூலியனுடைய கல்லறைக்குத் திருயாத்திரையாகப் போய், கோவிலில் வேண்டிக்கொள்ளும்போது, அவனுடைய கை சடுதியில் தளர்ச்சியடைந்து கத்திப்பிடி கீழே விழுந்தது. (னி.மூ.னி. V. ஹிலி. 319.)