ஒர் கோவேறு கழுதை தேவநற்கருணையை வணங்கியதால் பதிதன் மனந்திரும்பின அற்புதம்!

இத்தாலியா தேசத்திலுள்ள ரிமினி என்னும் பட்டணத்தில் இருந்த ஒரு பதிதன் தேவநற்கருணையைப்பற்றி மக்களுக்கு தவறான தகவல் சொன்னதால் அநேகம் பேர்கள் இயேசுநாதர் தேவநற்கருணையில் இருக்கிறாரோ என சந்தேகம் கொண்டனர் . பதுவா என்னும் ஊரிலிருந்த புனித அந்தோணியார் அந்த பதிதனோடு இதுபற்றி தர்க்கம் செய்தபோது தேவநற்கருணையில் இயேசுநாதரே இருக்கிறாரென்று வேதத்தின் நியாயத்தைக் கொண்டு எண்பித்தார் . பதிதன் அதற்கு மதிப்பு கொடுக்க முடியாமல் புனித அந்தோணியாரைப் பார்த்து நீர் வாய்ச்சாலமாக பேசக் கற்றிருப்பதால் உம்முடைய நியாயத்துக்கு எனக்கு மறுப்புச் சொல்ல தெரியாது . அப்படியிருந்தாலும் தேவநற்கருணையில்இயேசுநாதர் இருக்கிறாரென்றுநான் விசுவசிப்பதில்லை . ஏதாவது ஒரு செயல்மூலம் நிருபித்தால் அப்போது நான் விசுவசிப்பேன் என்றான் .

   இதற்கு புனித அந்தோணியார் " எந்த செயல் மூலம் நிருபிக்க வேண்டும் என்று நீயே சொல் " என்றார் . அதற்கு அவன் " என் வீட்டில் இருக்கிற கோவேறு கழுதைக்கு மூன்று நாள் இரைபோடாமல் வைத்திருந்து கோவில் வாசலில் கொண்டு வந்தவுடன் நீர் தேவநற்கருணையை அந்த கழுதைக்கு காண்பியும் . நான் அது தின்னும் இரையைக் காண்பிக்கிறேன் . அப்போது அந்த கழுதை இரையைத் தின்னாமல் தேவநற்கருணையை வணங்கினால் இயேசுநாதர் அதில் இருக்கிறார் என்று விசுவசிப்பேன் " என்றான் . புனித அந்தோணியார் சர்வேசுரன் பேரில் நம்பிக்கை வைத்து அதற்கு சம்மதித்தார். மூன்றாம் நாள் பதிதன்அந்தக் கழுதையைக் கோவில் வாசலில் கூட்டிக்கொண்டு போகும் போது என்ன நிகழுமென்று பார்க்க நிறைய பேர்கள் அங்கே கூடினர் . புனித அந்தோணியார் பூசை செய்து தாம் அதில் தேவநற்கருணையை உட்கொள்ளுவதற்குமுன் தாம் அதைப் பாத்திரத்தில் ஏந்திக்கொண்டு , கூடி நின்றவர்கள் மெழுகுத் திரியைப் பிடிக்கக் கோவில் வாசலுக்குக் கொண்டு வந்தார் .

   அங்கே வந்தவுடன் புனித அந்தோணியார் கோவேறு கழுதைக்கு சொன்னதாவது " மிருகமே ! தேவநற்கருணையில்இருக்கிற உன்னைப் படைத்த இந்த ஆண்டவரை வணங்க வா " என்றார் . புனித அந்தோணியார் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது , பதிதன் அந்த மிருகம் தின்னத்தக்கதாக நல்ல இரையை அதன் முன் போட்டான் மூன்று நாள் பட்டினியாய் இருந்த அந்த கோவேறு கழுதை தன்முன் கிடக்கிற இரையின்பேரில் மிகுந்த ஆசையிருந்தாலும் அதைத் தொடராமல் தலையைக் குனிந்து கொண்டு தேவநற்கருணையின்அருகில் வந்து முன்னங்கால் இரண்டையும் மடித்து முழங்கால்படியிட்டு வணங்கியது . தர்க்கம் செய்த பதிதன் இந்த அதிசயத்தைக் கண்டு தேவநற்கருணையில் இயேசுநாதர் இருக்கிறாரென்றுவிசுவசித்துத் பதிதத்தை விட்டுவிட்டான் .

   கிறிஸ்தவர்களே ! உங்கள் இருதயத்தில் தீய ஆசை உண்டானால் நல்ல ஆயத்தத்தோடு நீங்கள் தேவநற்கருணையை வாங்கினால் அதன் வழியாக உங்கள் உள்ளத்தில் வரும் இயேசுநாதருடைய உதவியினால் அந்த ஆசைகள் நீங்கிப் போகும் . இந்த உதவி உங்கள் ஆயத்தத்துடன் நன்மை வாங்கினால் மிகுந்த உதவி உங்களுக்கு வரும் . ஒரு சிறு பானையிலும் ஒரு பெரிய பானையிலும் இருவர் தண்ணீர் கொண்டு வந்திருக்கையில் இரண்டு பானை நிறைந்திருந்தாலும் பெரிய பானையில் தண்ணீர் அதிகம் இருப்பதற்குச் சந்தேகமில்லை இப்படியே அருள் உயிரோடு இருக்கும் இரண்டு பேர்களுக்குள்ளே ஒருவன் மிகுந்த பக்தியோடும் , மற்றொருவன் அத்தனைப் பக்தியில்லாமலும் நன்மை வாங்குகிறபோது இந்த இருவர்களின் இதயத்திலும் இயேசுநாதர் தாமே வந்தாலும் மகா பக்தியோடு நன்மை வாங்கியவனுக்குத் தேவநற்கருணை வழியாக அதிக உதவி வரும் என்பதற்குச் சந்தேகமில்லை .