233. நற்கருணை ஆவதென்ன?
அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும், திராட்சைப்பழ இரசத்தின் குணங்களுக்குள்ளேயும் யேசுநாதர் சுவாமியுடைய திருச்சரீரமும் திரு இரத்தமும். திரு ஆத்துமமும், தேவசுபாவமும் அடங்கியிருக்கிற தேவதிரவிய அனுமானம்.
234. தேவ நற்கருணையிலே எழுந்தருளியிருக்கிறவர் யார்?
யேசுநாதர் சுவாமி.
235. அதில் எப்படி எழுந்தருளியிருக்கிறார்?
தம்முடைய சரீரத்தோடேயும், இரத்தத்தோடேயும். ஆத்துமத்தோடேயும், தேவ சுபாவத்தோடேயும், மெய்யாகவே எழுந்தருளியிருக்கிறார்.
236. ஆகையால் தேவநற்கருணை வாங்குகிறபோது என்ன வாங்குகிறோம்?
நம்முடைய திவ்விய கர்த்தராகிய யேசுநாதருடைய திருச்சரீரத்தையும், இரத்தத்தையும், ஆத்துமத்தையும், தேவசுபாவத்தையும் தானே வாங்குகிறோம்.
237. தேவநற்கருணையில் யேசுநாதர் நமது கண்களுக்குக் காணப்படுகிறாரா?
இல்லை. ஏனெனில் அப்பத்தின் குணங்களிலும். இரசத்தின் குணங்களிலும் மறைந்திருக்கிறார்.
238. அப்பத்தின் குணங்கள் என்பதும், இரசத்தின் குணங்கள் என்பதும் என்ன?
ஐம்புலன்களுக்குத் தோன்றுகிற நிறம், ருசி, ரூபம் - இவை முதலியவைகளே குணங்களாம்.
239, தேவ நற்கருணையில் அப்பமும் இரசமும் கொஞ்சமாகிலும் உண்டோ?
அவைகளின் நிறம், ரூபம், ருசிமுதலான குணங்கள் இருந்தாலும் அப்பமும் இல்லை, இரசமும் இல்லை .
240. அப்பமும், இரசமும் என்னமாய் மாறிப்போயின?
அப்பமும், இரசமும் யேசுநாதருடைய திருச்சரீரமாகவும், திருஇரத்தமாகவும் மாறிப்போயின.
241. அவை எப்போது மாறிப்போயின?
நடுப்பூசையில் குருவானவர் யேசுநாதருடைய அதிக வல்லபமுள்ள வசனங்களை உச்சரிக்கும் போதுதான்.
242. அப்பத்தின் குணங்களிலேயும் இரசத்தின் குணங்களிலேயும் யேசுநாதருடைய சரீரமும், இரத்தமும் வெவ்வேறாகப் பிரிந்திருக்கிறதா?
இல்லை. ஒவ்வொரு வகைக் குணங்களில் யேசுநாதர் சுவாமி முழுதும் இருக்கிறார். அந்தந்த வகை குணத்தைப் பாகம் பாகமாய்ப் பிரித்தாலும் யேசுநாதர் பிரிக்கப்படாதவராய் ஒவ்வொரு பாகத்திலும் முழுவதும் இருக்கிறார்.
243, யேசுநாதர் தேவநற்கருணையை எப்போது ஏற்படுத்தினார்?
தாம் பாடுபடுவதற்கு முந்தின நாளாகிய பெரிய வியாழக்கிழமையில் ஏற்படுத்தினார்.
244, யேசுநாதர் சுவாமி என்னத்திற்காக தேவநற்கருணையை உண்டாக்கினார்?
நமது ஆத்துமத்திற்கு ஞானப்போசனமும், துணையுமாகவும். தாம் ஏற்படுத்திய வேதத்தின் பலியாகவும் உண்டாக்கினார்.