இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

திருப்பாடுகளின் பேரில் வைக்க வேண்டிய பக்தி

1. சேசுநாதர் கட்டாயமின்றி, மனச்சுயாதீனத்தோடு நிஷ்டூரப் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, தமது மரணத்தின் வழியாக நம்மை இரட்சித்திருக்கிறபடியால் அவருடைய பாடுகளைப் பற்றி உருக்கத்துடன் தியானிக்க வேண்டுமா?

அவரது திருப்பாடுகளின் மட்டில் பக்திவைத்து அதைப் பற்றி அடிக்கடி தியானிப்பது சேசுநாதருக்குப் பிரியமாயிருப்பதால் இப்பேர்ப்பட்ட தியானத்தை அடிக்கடி செய்ய வேண்டும்.


2. அந்தத் தியானத்தை எப்படி எளிதாய்ச் செய்யலாம்?

சிலுவைப்பாதை என்னும் பக்தி முயற்சியால்தான்.


3. அதைச் செய்கிற விதம் எப்படி?

நமதாண்டவர் மரணத் தீர்வை இடப்பட்டது முதல், கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது வரை அவர் பட்ட முக்கியமான பாடுகளெல்லாம் கோவிலிலுள்ள 14 படங்களில் குறிக்கப் பட்டிருக்கின்றன. ஆகையால் அந்த ஒவ்வொரு படத்துக்கு முன்னும் போய் நின்று சேசுவின் திருப்பாடுகளை நினைத்துத் தியானிக்க வேண்டும்.


4. சிலுவைப்பாதை என்னும் பக்தி முயற்சியால் நமக்கு உண்டாகும் பலன் என்ன?

சிலுவைப்பாதை செய்கிறவர்களுக்குத் திருச்சபையானது ஏராளமான ஞானப் பலன்களைக் கட்டளையிட்டிருப்பதால், சிலுவைப்பாதை செய்கிறவர்கள் கணக்கற்ற வரப்பிரசாதங்களை அடைகிறார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை.