சர்வேசுரன்.

10. சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறவர் யார்?

சர்வேசுரன்.


1. சர்வேசுரன் என்கிற வார்த்தை எந்த வார்த்தைகளிலிருந்து வருகிறது?

சர்வம் + ஈசுரன் ஆகிய இரண்டு வார்த்தைகளிலிருந்து வருகிறது.


2. சர்வம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

எல்லாம், சகலமும் என்று அர்த்தமாகும்.


3. சர்வம் என்னும் வார்த்தையால் குறிக்கப்பட்ட வஸ்துக்கள்
யாவை?

வானமண்டலத்திலும், பூமண்டலத்திலுமுள்ள சகல வஸ்துக்களுமாம்.


4. ஈசுரன் என்பதற்கு அர்த்தம் என்ன?

கர்த்தர் அதாவது சர்வ அதிகாரம் உடையவர் என்று அர்த்தமாம்.


5. ஆகையினாலே சர்வேசுரன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன ?

சகலத்துக்கும் கர்த்தர் என்று அர்த்தமாம்.


6. ''சர்வேசுரன் சர்வத்துக்கும் கர்த்தாவாயிருக்கிறார்” என்பதின் அர்த்தம் என்ன?

அவர் சகலத்தையும் படைத்து, அவைகளின் மேல் சர்வ அதிகாரம் உடையவராயிருக்கிறார்.


7. ஓர் உவமையால் அதை விளக்கிக் காட்டு.

ஒருவன் தான் கட்டின வீட்டின் மேல் எப்படி முழு அதிகாரம் உடையவனாயிருக்கிறானோ, அப்படியே தம்மால் உண்டாக்கப்பட்ட சகல வஸ்துக்களின் மேல் சர்வேசுரன் சர்வ அதிகாரம் உடையவராயிருக்கிறார்.


சர்வேசுரன் என்பவர் யார்?

எல்லாவற்றையும் படைத்துக் காப்பாற்றும் சர்வ இலட்சணம் சம்பூரணராகிய சுத்த அரூபியே சர்வேசுரனாம்.


1. படைக்கிறது என்னும் வார்த்தைக்கு அர்த்தம் என்ன?

ஒன்றுமில்லாதிருக்கையிலே யாதொரு பொருளும், உதவியுமின்றி தமது சித்தத்தினாலே மாத்திரம் உண்டுபண்ணுகிறது என்று அர்த்தமாம்.


2. இவ்வித உண்டுபண்ணுதலை எப்படி அழைக்கிறோம்?

சிருஷ்டிப்பு அல்லது படைப்பு என்று சொல்லு கிறோம்.


3. கொற்றனைத் தான் கட்டிய கட்டிடத்தைப் படைத்தவன் என்று சொல்லலாமா?

நிச்சயமாக இல்லை. ஏனென்றால் அவன் சர்வேசுரனால் உண்டாக்கப்பட்ட மண், சுண்ணாம்பு, மரம் முதலியவற்றைக் கொண்டு, கஷ்டப்பட்டு அதைக் கட்டினானேயொழிய, ஒன்றுமில்லா திருக்கையில், தன் சித்தத்தினாலே மாத்திரம் கட்டவேயில்லை.


4. காப்பாற்றுகிறது என்பதற்கு அர்த்தமென்ன? 

யாதொரு வஸ்துவையும் அதன் சுபாவத்தின்படி நடத்தி, விசாரித்து, பராமரித்துக் கொள்ளுதலே காப்பாற்றுகிறது என்னப்படும்.


5. இலட்சணம் என்பதற்கு அர்த்தமென்ன?

நற்குணம் என்று அர்த்தமாம். உதாரணமாக, அழகு, ஞானம், தயவு, வல்லமை, நீதி, பரிசுத்தம் முதலியவை சற்குணங்களாம்.


6. சம்பூரணர் என்பதற்கு அர்த்தமென்ன?

முழுதும் உடையவர் என்று அர்த்தமாம்.


7. சர்வ இலட்சண சம்பூரணர் என்றால் என்ன?

குறையில்லாமல் சகல சற்குணங்களை முழுதும் உடை யவர்.


8. அரூபி என்பது என்ன?

கண்டிப்பில்லாத (சரீரம் அல்லது உருவமில்லாத) வஸ்து என்று அர்த்தமாம். உதாரணமாக: ஆத்துமம்.


9. கண்டிப்புள்ள (சரீரம் அல்லது உருவமுள்ள) வஸ்து என்றால் என்ன ?

மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐம்புலன்களால் நாம் உணர்ந்தறியக் கூடியவைகளெல்லாம் கண்டிப்புள்ள வஸ்துக்கள் என்னப்படும். அப்படியே இவ்வுலக பொருட்களெல்லாம் கண்டிப்புள்ள (சரீரம் அல்லது உருவமுள்ள) வஸ்துக்களாம்.


10. சுத்த அரூபி என்றால் என்ன?

ஒரு சரீரத்தோடு ஒன்றிக்கக் கூடாமல் இருக்கும் முழுதும் கண்டிப்பற்ற (உருவமற்ற) வஸ்துதான். நம் ஆத்துமம் சரீரத்தோடு ஒன்றித்திருக்கும்படி சிருஷ்டிக்கப் பட்டிருக்கிற படியால் அது சுத்த அரூபியல்ல.


11. நாம் சர்வேசுரனைக் கண்ணாலே பார்க்கவும், கையினாலே தொடவும் கூடாதிருக்க அவர் மெய்யாகவே இருக்கிறாரென்று அறிந்து கொள்ளலாமா?

நாம் சர்வேசுரனை ஐம்புலன்களால் அறியக் கூடாத போதிலும், தேவ வெளிப்படுத்தலையும், நமது சுபாவப் புத்தியின் பிரகாசத்தையும், மனச்சாட்சியையும் கொண்டு இவர் இருக்கிறார் என்னும் சத்தியத்தை நிச்சயமாய் அறியவும் ஒப்பிக்கவும் கூடும்.


12. தேவவெளிப்படுத்தல் (தேவ அறிக்கை என்றால் என்ன?

நமது இரட்சணியத்துக்கடுத்த சத்தியங்களை நாம் அறிந்து கொள்ளும் பொருட்டு, சர்வேசுரன் தாமே மனிதரோடு பேசி, அவர்களுக்குச் செய்த அறிவிப்புகளாகும்.


13. சர்வேசுரன் மனிதரோடு பேசக் கூடுமா?

மனிதருக்குப் பேசும் வரத்தைக் கொடுத்த சர்வேசுரன் அவர்களோடு பேசக் கூடும் என்பது சத்தியம்.


14. சர்வேசுரன் மனிதரோடு பேசித் தம்மை இவ்வுலகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறாரா?

மெய்யாகவே சர்வேசுரன் மனிதரோடு பேசியிருக்கிறார். ஆதிகாலத்தில் அவர் ஆதாம், நோவா முதலிய பிதாப்பிதாக்களுடன் பேசி தம்மைத்தாமே அறியப்பண்ணினார். பிற்பாடு மோயீசனுக்குத் தரிசனையாகி நாமே இருக்கிறவர் என்று கூறினார். கடைசியாய் அப்போஸ்தலர்களுக்கும் யூதர்களுக்கும் தம்முடைய திருக்குமாரன் சேசுகிறீஸ்துநாதர் மூலமாய்த் தம்மை வெளிப் படுத்தினார்.


15. நமது சுபாவ புத்தியின் பிரகாசத்தைக் கொண்டு சர்வேசுரன் உண்டென்று எப்படி அறியவும் ஸ்தாபிக்கவும் கூடும்?

சர்வேசுரன் உண்டென்று பல வழியாக அறிந்து ஒப்பிக்கலாம். அவைகளில்:

(1) உண்டாக்கப்பட்ட உலகமும் அதில் அடங்கிய உயிருள்ள பொருட்களும் சர்வேசுரன் உண்டென்று நமது புத்திக்கு அறிவிக்கின்றன.

(2) உலக வஸ்துக்களில் இருக்கும் திட்டமான ஒழுங்குக் கிரமம் சர்வேசுரன் உண்டென்று காட்டுகின்றது.

(3) சகல ஜாதி சனங்களிடத்திலும், சர்வேசுரன் உண்டென்கிற எண்ணத்தைப் பற்றி ஒற்றுமையிருப்பதால், அவர் உண்டென்று ஒத்துக் கொள்ள வேண்டியது.


16. உலகம் இருக்கிறபடியால் சர்வேசுரன் உண்டென்று எப்படி அறிந்து ஸ்தாபிக்கலாம்?

நாம் நமது ஆத்துமத்தைக் காணாவிடினும், அதின் கிரியைகளைக் கொண்டு அது உண்டென்று அறிகிறோம். ஒரு வீட்டிலுள்ள நெருப்பை நாம் பார்க்காத போதிலும், அந்த வீட்டிலிருந்து எழும்புகிற புகையினால் புகைக்குக் காரணமான பொருளாகிய நெருப்பு உள்ளே உண்டென்று தீர்மானிக்கிறோம். அது போலவே நாம் கண்டு அறியும் உலகத்தின் மூலமாய் அதற்குக் காரணமான சர்வேசுரன் உண்டென்னும் சத்தியம் துலங்குகிறது. மேலும் உலகம் எப்பொழுதும் இருந்ததில்லை. அது தானாய் உண்டாகக் கூடியதுமில்லை. சர்வேசுரன் இல்லாதிருந்தால் இவ்வுலகம் உண்டாயிருக்க முடியாது. ஒரு வீடாவது அல்லது கடிகார மாவது தன்னிலே தானே உண்டாகாது. அது போலவே இவ்வுலகம் தன்னால் உண்டாக முடியாதென்பது குன்றாத சத்தியமாம்.


சரித்திரம்

இந்த விஷயம் தெளிவாகும்படி ஒரு அராபியனின் மறுமொழியை இங்கு குறிப்பிடலாம். ஒருநாள் ஒருவன் ஒரு அராபியனோடு நடந்துகொண்டு போகும்போது, ''சர்வேசுரன் உண்டென்று உனக்கு எப்படித் தெரியும்?" என்று அராபியனைக் கேட்டான். ''இது கஷ்டமான கேள்வியல்ல; இதற்கு மறுமொழி சொல்ல படிப்பும், சாஸ்திரமும் தேவையில்லை. தலைகுனிந்து கீழே பார். அது யாருடைய காலடி?'' என்றான். "அது ஒட்டகத்தின் காலடி" என்று மற்றவன் சொல்லக் கேட்ட அராபியன்: ''ஒட்டகம் இந்த வழியில் நடந்து போனதைப் பார்த்தாயோ?” என்றான். இதற்கு மற்றவன்: "ஒட்டகம் இந்த வழியில் போனதை நான் பார்க்காவிடினும், அதன் தடத்தைப் பார்த்து, ஒட்டகம் இவ்வழியே நடந்து சென்றது என்று சொன்னேன்” என்றான். "அப்படித்தான், நானும் கடவுளைப் பார்க்காவிடினும், அவருடைய வேலையைப் பார்த்து, சர்வேசுரன் உண்டென்று நம்புகிறேன்" என்றான் அராபியன். (M.J.M.I. No.10).


17. உலகத்தில் அடங்கிய உயிருள்ள வஸ்துக்கள் சர்வேசுரன் உண்டென்று எப்படி ஒப்பிக்கின்றன?

இவ்வுலகிலுள்ள சகல உயிரினங்களும் மற்றொரு உயிரினத்திலிருந்து உயிரைப் பெறுகிறதாகப் பார்க்கிறோம். அப்படியே கோழியானது எங்கேயிருந்து வருகிறதென்று கேட்டால், அது ஒரு முட்டையினின்று வருகிறதென்று சொல்ல வேண்டும். அந்த முட்டை எங்கேயிருந்து வருகிறதென்று கேட்டால் ஒரு கோழியினின்று வருகிறதாகச் சொல்ல வேண்டியிருக்கும். இப்படி ஓயாமல் தொடர்ந்து கேட்டுக் கொண்டு போவோமானால், கடைசியாய் முதல் கோழி எங்கேயிருந்து வந்ததென்று கேட்க வேண்டியிருக்கும். முதல் கோழி தன்னாலே உண்டானதென்று ஒருக்காலும் சொல்லக் கூடாத காரியம். ஏனென்றால் இல்லாத வஸ்து தனக்குத்தானே துவக்கமும் உயிரும் கொடுக்க முடியாது. இது இப்படியானால் முதல் கோழியை உலகில் இருக்கச் செய்யும்படி வல்லமையுள்ளவரும் புத்தியுள்ளவருமான ஒரு காரணகர்த்தர் முழுதும் அவசியம். இப்பேர்ப்பட்ட வாக்குக் கெட்டாத வல்லமையுள்ளவரும், புத்திக் கூர்மையுள்ளவருமான காரணகர்த்தர் சர்வேசுரன் என்று சொல்ல வேண்டியது. இப்போது நாம் கோழியைப் பற்றி சொன்னதையே உலகத்தில் அடங்கிய மற்ற சகல உயிருள்ள சிருஷ்டிகளைப் பற்றி சொல்லக்கூடும்.


18. உலக பொருட்களிலிருக்கும் திட்டமான ஒழுங்குகள் சர்வேசுரன் உண்டென்று எப்படிக் காட்டுகின்றன?

வானத்திலிருக்கும் சூரியனும், சந்திரனும், கோடானு கோடி நட்சத்திரங்களும் பலவிதமான சுபாவ சட்டங்களின்படி சுழன்று வருகின்றன. உதாரணமாக சூரியன் ஒரு நொடியிலே 190 மைல் வேகமாகச் சுழலுகிறது. அதைவிட சில நட்சத்திரங்கள் அதிக சீக்கிரமாய்ப் போகின்றன. இந்த நட்சத்திரங்களைச் சுற்றி சூரியன் ஒரு நொடியில் 121/2 மைல் வேகமாய்ப் போகிறது. இந்த சட்டங்கள் ஒருபோதும் மாறிப் போகிறதில்லை. இதினிமித்தம் அவைகள் ஒன்றோடொன்று மோதாமல் கணக்கற்ற மண்டலங்களைச் சுற்றி, எப்போதும் ஒரே சீராய் ஓடி வருகின்றன. இதினிமித்தம் அநேக வருஷங்களுக்குப் பிற்பாடு முதலாய்ச் சூரிய கிரகணம் எங்கே, எப்போது, எந்த நாளில் வரும் என்பதைப் பற்றி இப்போதே கணிக்கக் கூடுமாயிருக்கிறது. இப்பேர்ப்பட்ட திட்ட மான ஒழுங்குகள் தற்செயலாயுண்டானதென்று சொல்வது கூடாத காரியம். தற்செயலாய் அலங்கோலமும் குழப்பமும், ஆபத்தும் உண்டாகுமொழிய, திட்டமான ஒழுங்கு ஒருக்காலும் உண்டாகாது. ஆகையால் இந்தத் திட்டமான ஒழுங்குகளைக் கொடுத்து, அவைகள் மாறாதிருக்கும்படி புத்தியுள்ள ஒருவர் நடத்திவர வேண்டியது. அவர் யார் என்றால் அவர்தான் சர்வேசுரன்.


19. சகல சாதி சனங்களிடத்திலும் சர்வேசுரன் உண்டு என்கிற விசுவாசத்தின் ஒற்றுமையே அவர் உண்டென்று எப்படி ஒப்பிக்கிறது?

ஒரு கடவுள் உண்டென்று எக்காலமும், எப்போதும் சகல சாதி சனங்களும் விசுவசித்து வந்திருக்கிறார்கள். சர்வேசுரன் இருக்கிறார் என்னும் அபிப்பிராயத்தைக் கொண்டிராத சாதி யினரை இதுவரைக்கும் காணாமலிருப்பது ஓர் உண்மையான செய்தியாகும். கடவுள் உண்டென்று சகல மனிதர் இருதயத்திலும் ஆழமாய் ஊன்றியிருக்கின்றது. அந்த விசுவாசம் ஆசாபாசத்தால் மனிதருக்கு வந்திருக்க முடியாது. அது மனித ஆசாபாசங்களுக்கு முழுதும் விரோதமாயிருக்கிறது. ஏனெனில் கடவுள் பரம் நியாயாதிபதி, அவர் பாவத்திற்குத் தண்டனையளிக்கிறவர். ஆகையால் மனித ஆசாபாசங்களுக்கு எதிரிடையாயிருக்க அந்த எண்ணத்தைக் கடவுள் மாத்திரம் நமது இருதயங்களில் பதித்திருக்கிறார் என்று தீர்மானிக்க வேண்டும்.


20. நமது மனச்சாட்சியே சர்வேசுரன் உண்டென்று எப்படிச் சாட்சி கூறுகிறது?

நம்முடைய மனச்சாட்சியில் ஒரு குரல் ஒலி, எது நல்லது, எது கெட்டது என்று ஒவ்வொருவருக்கும் சொல்லுகிறது. நல்லதைச் செய்யும்பொழுது நம்மைப் புகழ்ந்தும், கெட்டதைச் செய்யும்போது நம்மை இகழ்ந்து கண்டித்தும் வருகிறது. நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று உணருகிற இந்த "நல்லது கெட்டது" என்னும் சட்டம் எங்கிருந்து வருகிறது? எந்தச் சட்டத்துக்கும் சட்டத்தை இடுகிறவர் ஒருத்தர் இருப்பது அவசியம். அவர் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவனுக்கு மேலானவராயிருக்க வேண்டும். சகல மனிதரும் அச்சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவர்களாயிருக்கிற படியால், சட்டம் இடுகிறவர் மனிதனல்ல. ஆகவே அச்சட்டத்தை இடுகிறவர் சர்வேசுரன்தான்.


21. சர்வேசுரன் இல்லையென்று மறுப்பவர்களை எப்படி அழைக்கிறோம்?

அப்பேர்ப்பட்டவர்களை நாஸ்திகர் என்று அழைக்கிறோம்.


22. மெய்யான நாஸ்திகர் உண்டா?

வெளிக்குத் தங்கள் வாக்கினாலும், செய்கையினாலும் கடவுள் இல்லையென்று நடிக்கும் நாஸ்திகர் சிலர் உண்டென்று ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் தங்கள் உள்ளத்தில் சர்வேசுரன் இல்லையென்று ஸ்திரமாய் நினைப்பவர்கள் கிடையாது என்று சொல்லலாம். இவ்விஷயத்தில் மனச்சாட்சியின் வாயை அடைப்பது அவ்வளவு சுலபமல்ல. கடவுள் இருக்கிறார் என்னும் சத்தியம் நாம் காண்கிற பொருட்களினின்று மாத்திரம் புத்தி நியாயத்தினால் துலங்குகிறபடியால் மனச்சாட்சிக்கு விரோத மின்றிக் கடவுள் இல்லையென்று சாதிப்பது ஒருவராலும் கூடாத காரியம்.


23. இப்பொழுது காணக் கூடாத சர்வேசுரன் ஒருக்காலும் காணப்பட மாட்டாரா?

"இப்பொழுது (அதாவது இவ்வுலகத்தில்) நாம் (சர்வேசுரனை) கண்ணாடியில் மங்கலாய்க் காண்கிறோம். அப்பொழுது (அதாவது மோட்சத்தில்) முகமுகமாய்க் காண்போம்" என்று அர்ச். சின்னப்பர் எழுதியிருக்கிறார். (1 கொரி. 13:12).