ஏகத்துவம்

90. மெய்யான திருச்சபை ஏகமாயிருக்கிறதெப்படி?

திருச்சபைக்குட்பட்ட கிறீஸ்துவர்கள் எல்லோரும் வித்தியாச மின்றி ஒரே விதமான சத்தியங்களை விசுவசித்து, ஒரே விதமான கற்பனை களை அநுசரித்து, ஒரே விதமான தேவத் திரவிய அநுமானங்களைப் பெற்றுக்கொண்டு, ஒரே ஒரு தலைவராகிய பாப்பாண்டவருக்குக் கீழ்ப்படிந்து வருகிறதினாலேதான்.


1. ஏகம் என்னும் பதத்துக்கு அர்த்தமென்ன? 

இவ்விடத்தில் அந்த மொழிக்கு ஒற்றுமையென்று அர்த்தம்.


2. சேசுநாதர் தமது திருச்சபை ஏகமாயிருக்க வேண்டும் என்று விரும்பினாரா? 

(1) “இந்த ஆட்டுக் கிடையைச் சேராத ஆடுகளும்... நான் கொண்டுவர வேண்டும்... அப்போது ஒரே ஆட்டுக் கிடையும், ஒரே மேய்ப்பனும் ஆகும்” என்று சேசுநாதர் திருவுளம்பற்றினார் (அரு.10:16).

(2) சேசுநாதர் தாம் பாடுபடுவதற்கு முந்தின நாள், பிதாவாகிய சர்வேசுரனைப் பார்த்து, “பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தருளினவர்கள் நம்மைப்போல் ஒன்றாயிருக்கும்படிக்கு உம்முடைய நாமத்தினாலே அவர்களைக் காத்தருளும்... மேலும் நான் இவர்களுக்காக மாத்திரமல்ல, இவர்களுடைய வாக்கியத்தின் வழியாக என்னை விசுவசிப்பவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளு கிறேன்... நீர் என்னிலும், நான் உம்மிலும் இருக்கிறதுபோல் அவர்களும் நம்மிடத்தில் ஒன்றாயிருக்கும்படிக்கு வேண்டிக் கொள்ளுகிறேன்” என்று மன்றாடினார் (அரு. 17:11,20,21).


3. எந்தெந்த விஷயத்தில் மெய்யான திருச்சபை ஏகமாயிருக்க வேண்டும்? 

திருச்சபையில் சேர்ந்த சகலரும்: (1) வேத சத்தியங்களை விசுவசிப்பதிலும், (2) கற்பனைகளை அனுசரிப்பதிலும்,       (3) தேவத்திரவிய அநுமானங்களை அங்கீகரிப்பதிலும், (4) ஒரு தலைவருக்குக் கீழ்ப்படிவதிலும் ஒற்றுமையாயிருக்க வேண்டும்.


4. ஏன் விசுவாசத்தில் ஒற்றுமையாயிருக்க வேண்டும்?

சேசுநாதர் ஒரே வேதத்தைப் போதித்தார்.  அதே சத்தியங்களைப் போதிக்கத் தமது சீஷர்களை அனுப்பினார்.


5. விசுவாசத்தில் ஒற்றுமையாயிருக்கும்படி வேண்டியதென்ன? 

எக்காலத்திலும், எல்லாவிடங்களிலும், திருச்சபை ஒரே விதமான சத்தியத்தைப் போதித்து வர வேண்டியதுமல்லாமல், அந்தச் சபையில் இருக்கப்பட்டவர்கள், அது போதிக்கிற சத்தியங் களையெல்லாம், தத்தளிக்காமலும், யாதொன்றையும் தள்ளிவிடாமலும் உறுதியாய் விசுவசிக்க வேண்டும்.  அது புறக்கணித்துத் தள்ளுகிறதையெல்லாம் வெறுத்துத் தள்ள வேண்டும்.  இந்த மன ஒற்றுமையானது சேசுகிறீஸ்துநாதர் வெளிப்படுத்தினவைகளிலும், அப்போஸ்தலர்கள் போதித்திருக்கும் விஷயங்களிலும் கட்டாய மிருக்க வேண்டும்.


6. கற்பனைகளை அநுசரிப்பதில் ஒற்றுமையாயிருக்கும்படி என்ன அவசியம்?

திருச்சபையில் இருக்கப்பட்வர்கள் எல்லோரும், அது இடும் சட்டங்களுக்கும் கற்பனைகளுக்கும் உட்பட்டு, அவைகளை ஒத்துக் கொண்டு அநுசரிக்க வேண்டும்.


7. தேவத்திரவிய அநுமானங்களை அங்கீகரிப்பதில் ஒற்றுமையாயிருக்க என்ன அவசியம்?

மெய்யான திருச்சபை சேசுநாதரால் ஏற்படுத்தப்பட்ட தேவதிரவிய அநுமானங்களையெல்லாம் அங்கீகரித்து வர வேண் டியதுமல்லாமல், அதில் இருப்பவர்களும் அவைகளில் சிலரை மாத்திரம் ஏற்றுக் கொண்டு தங்களுக்கு மற்றவைகளை உதவா தென்று நீக்கிவிடவும் கூடாது.


8. ஆளுகையில் ஒற்றுமையாயிருப்பதற்கு வேண்டியதென்ன?

திருச்சபை மேல் சிரேஷ்ட அதிகாரம் கொண்ட காணக் கூடிய ஒரு தலைவர் இருக்க வேண்டியதோடு, அந்தச் சபையில் இருக்கப்பட்டவர்கள் அவருக்குப் பிரமாணிக்கமாய்க் கீழ்ப்படிந்து வர வேண்டியது.


9. கிரேக்க சபை, கீழ்த்திசையிலிருக்கும் சபைகள் முதலிய பிரிவினையான மற்ற சபைகளுக்குள்ளே இப்பேர்ப்பட்ட ஒற்றுமை உண்டா? 

அவைகளுக்கு விசுவாசத்திலும், ஆளுகையிலும் ஒற்றுமையில்லை.


10. புரோட்டெஸ்டாண்டு என்னும் சபைகளுக்குள் இப்பேர்ப்பட்ட ஒற்றுமை உண்டா? 

300-க்கு அதிகமாய்ப் பிரிந்து இருக்கும் புரோட்டெஸ்டாண்டு மதங்களுக்குள் இப்பேர்ப்பட்ட ஒற்றுமை சிறிதுமில்லை.

(1) அவர்களுக்கு விசுவாசத்தில் ஒற்றுமையில்லை. அந்தச் சபைகளில் இருக்கிறவர்கள் தங்களுக்கு இஷ்டமானதையும், வேதப் புஸ்தகங்களில் தாங்கள் வாசிப்பதாக நினைத்துக் கொள்கிறவைகளையும் விசுவசித்து வருகிறார்கள். மேலும் இவ்வித மார்க்கங்கள் ஒவ்வொன்றும் மற்றொன்று விசுவசிப்பதற்கு நேர் விரோதமானவைகளையும் விசுவசித்து வருகின்றன.  அப்படியே சில சபைகள் அர்ச். திரித்துவம் என்கிற வேத சத்தியத்தைத் தள்ளிப் போட்டிருக்கின்றன.  வேறே சில சேசுநாதர் சர்வேசுரனுடைய குமாரனல்ல, அவர் வெறும் மனிதரென்று போதிக்கின்றன.

(2) தங்கள் சபையார்களைக் கட்டுப்படுத்தும் பொது சட்டங்கள் அவைகளுக்கு இல்லை. 

(3) சேசுநாதரால் உண்டுபண்ணப்பட்ட ஏழு தேவத்திரவிய அநுமானங்களை அவர்கள் அங்கீகரிப்பதில்லை.  ஒரு கூட்டத்தார் 2, 3, 4 தேவத்திரவிய அநுமானங்கள் உண்டு என்கிறார்கள். வேறு சபையார் 1, 2 தான் உண்டென்கிறார்கள்.  வேறு சிலர் ஒன்று மாத்திரம் போதுமென்று சாதிக்கிறார்கள்.  இன்னும் சில சபைகளில் ஞானஸ்நானம் கூட இல்லை.

(4) ஆளுகையில் அவைகளுக்கு ஒற்றுமையில்லை.  ஏனெனில் கற்பிக்கவும் செய்ய வேண்டியதென்னவென்று தீர்மானிக்கவும் அதிகாரமுள்ளவராக ஒருவரையும் இவைகள் ஒத்துக் கொள்வதேயில்லை.  பாதிரிமாரும், மேற்றிராணிமாரும் இருக்க வேண்டுமென்று சிலர் சொல்லும்போது, வேறே சிலர் அவசியம் இல்லையென்பார்கள்.

ஆகையால் எந்தப் புரோட்டெஸ்டாண்டு மதத்திலும் வேத விஷயத்தில் ஒற்றுமையில்லை என்று தீர்மானிக்க வேண்டியது.


11. கத்தோலிக்க திருச்சபையில் மெய்யான ஒற்றுமையுண்டா? 

கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் இருக்கும் எந்தத் தேசத்துக்குப் போனாலும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களுக்குப் போனாலும், 

(1) நாம் விசுவசிக்கிற சத்தியங்களையே அவர்களும் விசுவசிக்கிறார்களென்றும்,

(2) நாம் அநுசரிக்க வேண்டிய சட்டங்களை அநுசரித்து வருகிறார்களென்றும், 

(3) நம்மைப் போலவே ஏழு தேவத்திரவிய அநுமானங்களை அவர்கள் அங்கீகரிக்கிறார்களென்றும், 

(4) நம்மைப் போலவே அர்ச். பாப்பானவராகிய ஒரே தலைவருக்குக் கீழ்ப்படிந்து வருகிறார்களென்றும் கண்டுகொள்ளுவோம்.

ஆதலால் சேசுகிறீஸ்துநாதரின் மெய்யான சபையைக் காட்டும் பிரதானமும், அத்தியாவசியமுமான அடையாளமாகிய ஒற்றுமையானது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் மாத்திரம்  இருக்கிறதாகத் தீர்மானிக்க வேண்டும்.


12. ஏன் இதை ரோமன் திருச்சபையென்று சொல்லுவோம்? 

கத்தோலிக்கத் திருச்சபைக்குத் தலைவரும், அர்ச். இராயப்பருக்குப் பதிலாயிருக்கிறவருமான அர்ச். பாப்பானவர் எப்பொழுதும் ரோமாபுரி மேற்றிராணியாராயிருக்கிறபடியால்.