அந்தரங்க ஜீவியம்

1. சுவாமி பிறந்த நாற்பதாம் நாள் என்ன நடந்தது?

ஒவ்வொரு தலைச்சன் பிள்ளையும் தமக்குக் காணிக் கையாக ஒப்புக்கொடுக்க வேணுமென்று சர்வேசுரன் யூதர்களுக்குக் கற்பித்திருந்தபடியால், கர்த்தர் பிறந்த நாற்பதாம் நாள் தேவமாதா சூசையப்பரோடு தேவாலயத்துக்குப் போய், அவரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தார்கள்.


2. சேசுநாதர் பெத்லகேம் ஊரில் பிறந்தபின் அநேக வருஷ காலமாய் அந்த ஊரில் இருந்தாரா?

அவர் பெத்லேம் ஊரில் பிறந்த சில காலத்துக்குள் அதை விட்டுத் தூர தேசமாகிய எஜிப்து தேசத்துக்கு ஓடிப் போகும்படி நேரிட்டது.


3. ஏன் எஜிப்து தேசத்துக்கு ஓடிப்போனார்?

மூன்று இராசாக்கள் பெத்லகேம் ஊரிலிருந்து புறப்பட்டுப் போன இராத்திரியே, ஒரு சம்மனசானவர் அர்ச். சூசையப்பருக்குத் தரிசனையாகி, ஏரோது அரசன் குழந்தையான சேசுநாதரைக் கொல்லுவதற்குத் தேட இருப்பதால் குழந்தையை எடுத்துக் கொண்டு அதன் தாயுடன் எஜிப்து தேசத்துக்கு ஓடிப் போகும்படி கற்பித்தார் (மத்.2:14).


4. அப்போது ஏரோது என்ன கொடூரமான காரியம் செய்தான்?

ஏரோது தன்னுடைய கெட்ட கருத்தை நிறைவேற்றும் பொருட்டு, ஆட்களை அனுப்பி பெத்லகேமிலும், அதன் சுற்றுப் புறங்களிலெங்குமுள்ள இரண்டு வயது முதல் அதற்குட்பட்ட சகல ஆண்குழந்தைகளையும் கொன்று போட்டான் (மத்.2:16).  கொலையுண்ட இந்தப் பிள்ளைகள்தான் மாசில்லாக் குழந்தை களாகிய அர்ச்சியசிஷ்டவர்கள்.


5. எஜிப்து தேசத்தில் திருக்குடும்பம் எவ்வளவு காலம் இருந்தது?

ஏரோது சாகுமட்டும், அதாவது சில மாதம் மாத்திரம் அங்கே இருந்தது.


6. அதன்பிறகு சம்பவித்ததென்ன?

ஏரோது இறந்தபின்பு, ஆண்டவருடைய தூதன் சூசையப்பருக்குத் தோன்றி, குழந்தையைக் கொல்ல நினைத்தவர்கள் இறந்து போனபடியால் மறுபடியும் அவர் யூதேயா தேசத்துக்குத் திரும்பிப் போக அவருக்குக் கற்பித்தார்.  அப்படியே அவர் குழந்தை யையும், அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எஜிப்தை விட்டுப் புறப்பட்டு நாசரேத் என்னும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார் (மத். 2:19-23).


7. சேசுநாதருக்கு 12-ம் வயது நடக்கும்போது என்ன சம்பவித்தது?

சேசுநாதருக்கு 12-வது வயது நடக்கையில் அவரது தாய் தந்தை வழக்கப்படி பாஸ்காப் பண்டிகை கொண்டாட ஜெருசலேம் பட்டணத்திலிருந்த தேவாலயத்துக்குப் போகையில் அவரையும் கூட அழைத்துக் கொண்டு போனார்கள்.  பணடிகை நாட்கள் முடியவே தேவமாதாவும் சூசையப்பரும் வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் பாலனாகிய சேசுநாதர் காணாமற் போனதை அறிந்தார்கள்.  ஆகையால் அவர்கள் அவரைத் தேடிக் கொண்டு, ஜெருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.  மூன்று நாளாய் அவரைத் தேடினபிறகு தேவாலயத்தில் அவர் சாஸ்திரிகள் மத்தியில் உட்கார்ந்து, அவர்கள் சொல்லுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.  தேவமாதா அவரைப் பார்த்து: “நீர் ஏன் இப்படிச் செய்தீர்?” என்று கேட்க, சேசுநாதர்: “நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதோ?” என்றார் (லூக். 2).


8. தேவாலயத்தில் இருந்து சேசுநாதர் எங்கே போனார்?

அவர் அவர்களோடுகூடப் புறப்பட்டு நசரேத்துக்கு வந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார் (லூக். 2:51).


9. சேசுநாதர் எந்த வயதாகுமட்டும் நாசரேத்தூரில் தங்கினார்?

அவருக்கு முப்பது வயது ஆகுமட்டும் அங்கே தங்கினார்.


10. சேசுநாதர் ஏன் இவ்வளவு வருஷம் மறைந்த சீவியம் சீவிக்கச் சித்தமானார்?

நாம் எப்படிப் புண்ணியத்தை அநுசரிக்க வேண்டு மென்றும், எப்படி நமது வழக்கமான கிரியைகளை அர்ச்சிக்க வேண்டுமென்றும் தமது மாதிரிகையால் நமக்குக் கற்றுக் கொடுக் கிறதற்காகத்தான்.


11. அங்கே என்னமாய்ச் சீவித்து வந்தார்?

எங்கும் போகாமலும், தமது ஞானத்தையும், சர்வ வல்லமையையும் வெளிக்குக் காட்டாமலும், உயர்ந்ததும், மேலானதுமான உத்தியோகம் செய்யாமலும், தமது தாயாருக்கும், தம்மால் கூடிய உதவிகளைச் செய்து அர்ச். சூசையப்பருடன் தச்சுவேலை செய்து, கடின வேலையிலும், தரித்திரத்திலும், செபத்திலும், மறைவிலும் கஷ்டப்பட்டு சீவித்து வந்தார்.


12. அவரைப் பற்றிச் சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறதென்ன?

“சேசுநாதர் சர்வேசுரனுக்கும், மனிதருக்கும் முன்பாக ஞானத்திலும், பிராயத்திலும், வரப்பிரசாதத்திலும் வளர்ந்து கொண்டு வந்தார்” என்று சொல்லியிருக்கிறது (லூக்.2:52).


13. அர்ச். சூசையப்பர் எப்போது இறந்து போனார்?

அது நமக்கு நிச்சயமாய்த் தெரியாது.  அவர் சேசுநாதர் தமது வெளியரங்க சீவியத்தைத் தொடங்குகிறதற்கு முன் இறந்ததாக வேதசாஸ்திரிகள் உத்தேசிக்கிறார்கள்.  அவர் நல்ல மரணத்துக்கு விசேஷ பாதுகாவலராயிருக்கிறார்.