69. யேசுநாதர் சுவாமி கல்லறையை விட்டு உயிர்த்தெழுந்தருளினாரோ?
ஆம். மரித்த மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தளினார்.
70. எந்தக்கிழமையில் உயிர்த்தார்?
பாஸ்கு ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையில் உயிர்த்தார்.
71. உயிர்த்த பிற்பாடு பூலோகத்திலே எத்தனை நாள் தங்கியிருந்தார்?
நாற்பது நாள் தங்கியிருந்தார்
72. அந்த நாற்பது நாளும் என்ன செய்து கொண்டு வந்தார்?
அநேகவிசை தம்முடைய சீஷர்களுக்குத் தரிசனையாகத் தம்மைக் காண்பித்து அவர்களை வேதசத்தியங்களில் உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்.
73. அவர்களுக்கு என்ன அதிகாரம் கொடுத்தார்?
சகல மனுஷர்களுக்கும் சத்திய வேதத்தைப் போதிக்கவும் தேவதிரவிய அநுமானங்களை நிறைவேற்றவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
74. நாற்பதாம் நாள் எங்கே எழுந்தருளிப் போனார்?
பரலோகத்திலே எழுந்தருளி சர்வத்துக்கும் வல்லபிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பாரிசத்திலே வீற்றிருக்கிறார்.
75. இப்பொழுது யேசுநாதர் சுவாமி எங்கே இருக்கிறார்?
சர்வேசுரனாகிய மட்டும் எங்கும் இருக்கிறார். சர்வேசுரனும் மனுஷனுமாகிய மட்டும் பரலோகத்திலும் திவ்ய நற்கருணையிலும் இருக்கிறார்.
76. யேசுநாதர்சுவாமி பரலோகத்திற்கு எழுந்தருளின பத்தாம்நாள் என்ன செய்தார்?
தம்முடைய அப்போஸ்தலர்களுக்குத் திடனாக பரிசுத்த ஆவியை அனுப்பினார்.
77. பரிசுத்த ஆவி என்பவர் யார்?
அர்ச். திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய சர்வேசுரன். இவர் பிதாவுக்கும் சுதனுக்குமுள்ள அந்நியோன்னிய சிநேகமானவர்,
78. அவர் பிதாவுக்கும் சுதனுக்கும் சரியொத்தவரோ?
ஆம். அவர் பிதாவோடும் சுதனோடும் ஒரே தேவசுபாவம் உடையவராய் இருப்பதால், எல்லாத்திலும் அவர்களுக்குச் சரியொத்தவர்தான்.
79. பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் பேரில் எந்த உருவத்தில் இறங்கிவந்தார்?
அக்கினிநாக்கு உருவத்தில் இறங்கிவந்தார்.
80. பரிசுத்த ஆவியை அடைந்தபின் அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்?
உலகத்தின் எத்திசையிலும் பிரசங்கித்துத் திருச்சபையைப் பரம்பச் செய்தார்கள்.